Tuesday, October 05, 2010

லூசுப் பெண்ணே...லூசுப் பெண்ணே!

ஹாஸ்டல்லேருந்து ஊருக்கு கிளம்பறதுன்னா ஜாலி. ஏன்னா, அரைநாள் ஊர் சுத்த ப்ளான் பண்ணியிருப்போம். சாயங்காலத்துக்கு மேலேதான் பெரும்பாலும் எல்லாருக்கும் ரயில்.பெட்டியை எல்லாம் தூக்கிட்டு வந்து க்ளாக் ரூம்லே போட்டுட்டு, டவுன் ஹால் ரோடையோ, நேதாஜி ரோடையோ சுத்திட்டு ரயில் வர்றதுக்கு அரைமணி முன்னாடி ஸ்டேஷன் வர்றதுதான் குலதெய்வ வழக்கம். அப்படி ஒரு தடவை, சுத்திட்டு வெயிட்டிங் ரூம்லே வந்து உட்கார்ந்தோம். ஒவ்வொருத்தரா போய் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு இருந்தாங்க. எனக்கு வலப் பக்கத்திலே வேற ஒரு அக்கா. யாருன்னு தெரியாது. பார்த்ததும் சிரிச்சாங்க‌. நானும். பொருட்களை எல்லாம் வைச்சுட்டு யதேச்சையா நிமிர்ந்து பார்த்தா என்னை பார்த்து சிரிச்சுட்டு இருந்தாங்க‌.

"யூஎஸ் லேல்லாம், எதிரிலே யார் வந்தாலும் தெரியாதவங்களா இருந்தா கூட, பார்த்தா விஷ் பண்ணுவாங்க. சிரிப்பாங்க. நம்மை மாதிரி தயக்கம் எல்லாம் கிடையாது. " - முதல் முறை ‍யூ எஸ் போய்ட்டு வர்ற சீனியர்கள் சொன்னது ஞாபகத்தில் வர, 'ஓ, இவங்களும் யூ எஸ் போல இருக்கு, தெரியாதவங்களைப் பார்த்தாக்கூட சிரிக்கறாங்களே, நாமளும் இப்படிதான் இருக்கணும்' ந்னும் நினைச்சுக்கிட்டேன். சரி, ஏதாவது கேட்கலாம் என்று நினைச்சு மறுபடியும் அவங்க பக்கம் திரும்பிய போது , அவங்களுக்கு நேரா இருந்த ஜன்னலை பார்த்துக்கிட்டிருந்தாங்க‌. லேசான‌ புன்னகையோட இருந்த மாதிரி இருந்தது. எதிர்வரிசையிலே இருந்தவங்க, அறையில் இருந்தவங்க என்னையே பார்க்கற மாதிரி இருந்தது. அந்த அக்காவையும் ஒரு பார்வை பார்த்தாங்க. எனக்குதான் தன்னம்பிக்கை ஜாஸ்தி ஆச்சே! 'அட‌....இன்னைக்கு அளவுக்கு அதிகமா அழகா இருக்கோம் போல இருக்கு, செலிபிரிட்டிக்கு இதெல்லாம் சகஜமப்பா' ந்னு நினைக்கும்போதே அவர் என் பக்கம் திரும்பி சிரித்தார். இதற்காகவே காத்திருந்தது போல நானும்.

அவருக்கு பக்கத்திலிருந்தவங்க, அவங்க அம்மான்னு நினைக்கறேன்... க‌டினமான குரல்லே , யாருக்கும் கேட்காம ஏதோ சொன்னார். அதுவரைக்கும் புன்னகை பூத்த முகமா இருந்தவங்க, அவங்க‌ அம்மாவைப் பார்த்து, வாயைக் கோணலாக்கி பல்லெல்லாம் கடிச்சாங்க. ஒரு நிமிஷம் பயந்துட்டேன். அப்போதுதான் உறைச்சது....ஏதோ அப்நார்மல். ரூம்லே இருந்தவங்க‌ என்னை பார்த்த பார்வைக்கும், அடிக்கடி அந்த அக்காவை பார்த்த பார்வைக்கும் அர்த்தமும் அப்போதான் புரிஞ்சது. என்கூட இருந்த இந்த அராத்து கும்பல் கிட்டே சொன்னா ஓட்டித் தள்ளிடுவாங்கன்னு லதா கிட்டே மட்டும் சொல்ல, பேசாம‌ எல்லோருக்கும் நானே சொல்லியிருக்கலாம்னு ஆகிடுச்சு. 'நட்லூஸ் கேர்ல், நாங்க இவ்ளோ பேரு இருக்கோம், அந்த மெண்டலுக்கு உன்னை மட்டும் பார்த்து சிரிக்கணும்னு தோணியிருக்கு பாரு யா' etc etc.


"பொதுவாக எல்லாக் கலாச்சாரங்களிலுமே மனநலக்குறைவு கேலியுடனும், கிண்டலுடனும் அணுகப்படும் போது, கூடவே நமது கலாச்சாரத்தில் பிரத்யேக சமூக, மத, மாந்திரீக, மாற்று மருத்துவத் தாக்கங்களால் மனநோய்கள் வெகுவாக புறக்கணிக்கப்பட்டு, பாதிப்பு முற்றவிடப்படுகின்றன. பல வகையான மனநோய்கள் அடையாளப் படுத்தப்பட்டு அதற்கான தனிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படாமல் முற்றிலும் குணமாகக் கூடிய நோயாளிகள் 'பைத்தியம்', 'சைக்கோ', 'லூசு', 'மெண்டல்' என்று முத்திரை குத்தப்படுகின்றார்கள்."

என்று உமாவின் இந்த வரிகளை வாசித்ததும், இந்த சம்பவம் சட்டென்று மின்னல் வெட்டியது.

எனது நண்பர்கள், யாரையும் யாரையும் காயப்படுத்தணும்னு நினைக்கறவங்க இல்லே. ஒருத்தரையொருத்தர் கிண்டல‌டிச்சுக்கணும், ஓட்டிக்கணும் - இதுதான் முக்கியமே தவிர யாரையும் புண்படுத்தணும்னோ இல்லே வேணும்னே மனவருத்தமடையச் செய்யணும்னோ வார்த்தைகளை கொட்டறவங்க இல்ல. என்ன பண்றது, நாம் பாக்கற சினிமாலேருந்து வாசிக்கிற‌ ஜோக் வரைக்கும் மன இயல்பு பிறழ்ந்தவர்களை கேலி செஞ்சுதானே பழகியிருக்கோம். எதையாவது மாத்தி செஞ்சுட்டா இல்லே கோவம் வந்துட்டா , உடனே "லூசு" ந்னு சொல்றது ரொம்ப இயல்பா வருதுதானே. பப்பு கூட இதை சொல்ல ஆரம்பிச்சுட்டா.....:-(

இந்த வாரம் முழுக்க மனநல விழிப்புணர்வு வாரம்னு உமா இடுகையிலே சொல்லியிருக்காங்க.
"நான் வலையுலகிற்கு பழக்கமான இந்த வருடம் என்னால் செய்ய முடிந்த சிறிய அளவில் இந்த முயற்சி. மனநல/மனநோய் தொடர்பான உங்கள் கேள்விகளை எனக்கு அனுப்பினால் (umarudhran@gmail.com) அதன் விளக்கங்களை (எனக்குத் தெரியாதவற்றை ருத்ரன் மற்றும் நண்பர்களிடமிருந்து பெற்று) வலையில் பிரசுரிக்க முடியும்."

சோ, என்னோட பங்கா இந்த கேள்வி. நீங்களும் கேள்விகளை உமாவுக்கு அனுப்பி வைங்க.

ரொம்ப சின்னபுள்ளத்தனமா இருக்குன்னு யாரும் சொல்லக்கூடாது. இது மனநலம் சம்பந்தப்பட்டதா இல்லே ஆட்டிடியூட் பிரச்சினையான்னும் தெரியலை.1. சில விஷயங்கள்லே ரொம்ப பொஸசிவ் - என்னோட க்ளோஸ் சர்க்கிள்லே. முக்கியமா, என்னோட பெரிம்மா வேற யார்க்கிட்டேயாவது கொஞ்சம் அன்பா அதாவது என்னோட கசின்ஸ்கிட்டேயோ என்னோட வயசு இருக்கிறவங்க கிட்டேயோ க்ளோசா பேசினா எனக்கு ரொம்ப J ஆகிடும். கோவம் வந்து ஒரே சண்டைதான். இப்பவும் கூட இருக்கு. ஆனா, பப்புகிட்டே அவங்க க்ளோசா இருந்தா எனக்கு சந்தோஷமா இருக்கு, ரசிக்கிறேனே தவிர ஜே வந்தது இல்லே. இப்போ பப்புவும், அதே மாதிரி...பெரிம்மாகிட்டேன்னு மட்டும் இல்லே...அவளோட க்ளோஸ் சர்க்கிள், யாரா இருந்தாலும், அவங்க எப்பவோ ஏதோ ஒரு குட்டி குழந்தையை தூக்கி கொஞ்சினதை கூட‌ மறக்கவே மாட்டா. தூங்கும்போது கரெக்டா இது ஞாபகத்துக்கு வந்துடும்.

அம்மாக்கு தப்பாத பிள்ளைன்னு வீட்டுலே ஜாலியா எடுத்துக்கிட்டாலும் இது நார்மலானதுதானா? ஹெல்தியான ஆட்டிடியுடா? (பப்புவுக்காக இல்லே, எனக்காக கேட்கிறேன். இவ்ளோ வயசாகியும் நான் மாறாதப்போ பப்புவை எப்படி சொல்றது?)

2. அவங்க என்னோட ஃப்ரெண்ட்தான். ஏதாவது ஆர்க்யூமென்ட் போய்ட்டு இருந்தா, அதுக்கு எதிரா விவாதம் பண்ணுவாங்க. அதாவது, அதுதான் அவங்க கருத்துன்னு கிடையாது. ஆனா, விவாதத்துக்கு எதிரா சொல்லணும்னுதான் அவங்க நோக்கம். அதே சமயம், அவங்க சொல்றதுதான் சரின்னு ஏத்துக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. அவங்க சொல்றதுதான் அந்த விவாதத்துலே கடைசி பேச்சாவும் இருக்கணும்னு நினைப்பாங்க. அங்கீகாரத்துக்காக ஏங்கறாங்கன்னு நினைசுக்கிட்டாலும், சமயத்துலே ரொம்ப அப்சர்டா இருக்கும்...எரிச்சலாவும்! எப்படி கையாள்றது ? இதை எப்படி நாசூக்கா அவங்ககிட்டே சொல்லி புரிய வைக்கிறது?

4 comments:

Deepa said...

Nice post!

1st question enakkum porunthum. :)

கையேடு said...

thanks for sharing,
have posted my questions in her post.

santhanakrishnan said...

இரண்டாவது கேவிதான் எனக்கும்.

Uma said...

முல்லை, விளக்கங்கள் இங்கே http://umarudhran.blogspot.com/2010/10/blog-post_11.html நன்றி. உமா.