Friday, October 08, 2010

Size 0...Size -1...Size -2

பிரேக் நேரத்தில், காஃபேடெரியாவில் கதையடித்துக்கொண்டிருந்தோம். உள்ளே வந்த உருவத்தைக் கண்டபோது அது ரஞ்சனிதானாவென்று சந்தேகம்...அல்லது அவளது ஆவியா? என்னால் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. ஒரே அலுவலகமே என்றாலும் வேறு டீம். பிரேக்கு வரும் நேரங்களும் வேறு. கடைசியாக ரஞ்சனியை எப்போது சந்தித்தேன்?

"ஏய் ஆர்த்தி,அது ரஞ்சனியா...இல்ல அவளோட தங்கச்சியா?என்னயா ஆச்சு அவளுக்கு" என்றேன் ஆர்த்தியிடம்.

அவளுக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை. பின்னே? ரஞ்சனியும் ஆர்த்தியும் ஒரே டீம்.

"என்ன ஆச்சு. நான் 2 வாரம் முன்னாடி பார்த்தப்போ கூட நல்லாத்தானே இருந்தா"

"அய்யோ, அவ தொல்லை தாங்க முடியலை..அவளோட பொண்ணு ஒல்லியா இருந்தாதான் ஸ்கூலுக்கு வந்து பிக்கப் பண்ணனும்னு சொல்லிட்டாளாம். குண்டா இருந்தா என் கூட வெளிலே வராதேன்னு சொல்றாளாம். அதான், அவ ஒரே சின்சியரா வெயிட் ரிடக்ஷன்லே இறங்கிட்டா. டீம் லஞ்சுக்கு வந்தாக் கூட ஒரே சாலட் மயம்தான்"

அந்த சிறுமியை நாங்கள் சந்தித்திருக்கிறோம். சரியான சுட்டி. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். ரஞ்சனி தனது பெண்ணுக்காக, தினமும் ஐந்து கிலோ மீட்டர்கள் நடக்கிறாள். மதியம் கெலாக்ஸ் (சேலஞ்ச்) கார்ன் பிலேக்ஸ் மட்டுமே உண்கிறாள். க்ரீன் டீ மட்டுமே அருந்துகிறாள். எண்ணெயில்லாத சப்பாத்தி, வேக வைத்த காய்கறிகள். 15 கிலோ குறைத்திருக்கிறாள். குண்டு கன்னங்கள் கொண்ட ரஞ்சனியில்லை அவள் இப்போது.

"நல்லா ரெடியூஸ் ஆகிட்டே, இப்படியே போனா சைஸ் ஜீரோ ஆகிடுவே போலிருக்கே, பாவம் கரீனாவும் தீபிகாவும்..பொழைச்சு போகட்டும்..." என்றதும் ரஞ்சனிக்கு ’அலகண்டி..’ என்று வாய் கொள்ளாத சிரிப்பு.

ரஞ்சனியை மட்டுமில்லை. ஜிஎம் டயட் என்று கிட்டதட்ட பட்டினி கிடந்து இளைத்த சிலரையும் பார்த்திருக்கிறேன். 'ரொம்ப வில் பவர் வேணும்' என்ற பெயர் பெற்ற டயட் முறை அது. இணையத்தில் ரெஜிஸ்டர் செய்தால், தினமும் நீங்கள் சாப்பிடவேண்டியது என்ன என்று உங்கள் மின்மடலுக்கு வந்துவிடும். ஒரு நாள் முழுக்க காய்கறிகள், மற்றொரு நாள் முழுவதும் பழங்கள்...இன்னொரு நாள் முளைகட்டிய பயறு வகைகள்...அதில் ஒருநாள் மதியத்திற்கு இரண்டு திராட்சை பழங்கள் மட்டுமே உணவு.

சௌம்யா இந்த ஜிஎம் திட்டத்தில் இணைந்தபோது நாங்களிருவரும் ஒரே நிலையிலிருந்தோம். அதாவது, டெலிவரிக்குப் பிறகு வேலையில் சேர்ந்திருந்தோம். உலகின் மிக முக்கிய பிரச்சினையாக, உடனடியாக தீர்க்கப்பட வேணடியதொன்றாக எங்கள் முன் இருந்தது ‍ பிரக்னன்சியின் மூலம் வந்து சேர்ந்த அதிகப்படியான எடையை உதறித்தள்ளுவது எப்படி? என்பதுதான். எவ்வளவு வேகத்தில் முடியுமோ அவ்வளவு வேகமாக குறைய விரும்பினோம்.

உடனடியாக டைம் மெஷினில் ஏறி அந்த பதிமூன்று மாதங்களை பின்னோக்கி செலுத்திவிட எண்ணம் கொண்டோம். டெலிவரி என்ற ஒன்றே எங்களுக்கு ஏற்படவில்லை என்று எங்களை பார்க்கும் யாவரும் கூறும் நிலை வராதாவென்று ஏங்கினோம். என்றாவது ஒருநாள் பழைய 28வும் 30 இன்சுமான ஜீன்ஸுகளையும் பேண்ட்களையும் திரும்ப அணிய முடியுமென்று உறுதியாக நம்பினோம். அவற்றை பாதுகாத்தும் வைத்தோம். "டெலிவரிக்கு அப்புறம் செமையா குறைஞ்சுட்டேன்யா, ஆனா அதுக்கு அப்புறம் இருக்கே.....மூணு மாசம்..அப்போதான் முன்னாடிய விட அதிகமா ஏறிட்டேன்" என்று பேசி பேசி மாய்ந்து போனோம். (இதை சொல்லாத யாரேனும் உண்டா?!) ஒருவருடமாக ஏ(ற்)றிய எடையை மூன்று மாதங்களில், சொல்லப்போனால் ASAP குறைத்துவிட முடியுமென்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தோம். ஆனால், தூக்கமில்லாத இரவுகள், புதிய பொறுப்புகள், அலுவலக வேலையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டால் வீட்டுக்கு போய் குழந்தை கூட இருக்கலாமென்ற எண்ணங்கள்....

இவற்றின் நடுவே ஜிஎம் டயட்டின் முறையைப் பார்த்து மிரண்டு போனேன் என்றுதான் சொல்லவேண்டும். நான் பின் வாங்கிவிட சௌம்யா தொடர்ந்தாள். இரண்டு வாரங்கள் என்று நினைக்கிறேன். அதற்குப்பின், அவளாலும் முடியவில்லை.

(நான் குண்டாக இருப்பதால் இந்த இடுகையை எழுதவில்லை. ஆரோக்கியமான முறையில், சரியான உணவு திட்டத்தோடு முறையான பயிற்சியுடன் எடையை கட்டுக்குள் கொண்டுவந்த நண்பர்களும் இருக்கிறார்கள். I salute you, Ladies!)

ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதை விட, டெலிவரிக்கு முன்னால் இருந்த ஃபிரேமையாவது அடைய வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே பொது என்று நினைக்கிறேன். ஏனெனில், குழந்தை உருவாகி இருக்கும்போது எடை ஏறவில்லை என்றால் அதைப்போன்றதொரு கவலை எதுவும் இல்லை. குழந்தை பிறந்த பிறகு எடை மளமளவென்று குறையவில்லை என்றால் அதைப்போன்ற மகா கவலையும் ஏதுமில்லை. (டெலிவரியும் அதனோடு வரும் வைட் ஆங்கிள் மாற்றங்களைப் பற்றி பிறிதொரு இடுகையில் பார்ப்போம்.)

இப்போது , நாம் ரஞ்சனியிடம் இல்லை இல்லை ரஞ்சனியின் சின்னஞ்சிறுமியிடம்!

அம்மா ஒல்லியாக இருக்க வேண்டுமென்று விருப்பம் கொண்ட எட்டு வயது பெண்ணவள். சினிமா நடிகைகளையோ, விளம்பர மாடல்களையோ, பார்பி பொம்மைகளையோ பார்த்து ஒல்லியான body image/ மெலிய உடலமைப்பு கொண்டவராக தனது அம்மா இருக்க வேண்டும் என்ற பிம்பம் மனதில் பதிந்திருக்கலாம். அவளின் ஆசையில் தப்பொன்றும் இல்லைதான். ஒல்லியாக இருப்பதே இள்மையின் அடையாளம், ஒரு ஐடியல் பெண் இதுபோலத்தான் இருபபாரென்று அவள் பார்த்த ஒவ்வொரு விஷயமுமே - கார்ட்டூனிலிருந்து, விளையாடும் பொம்மைகளிலிருந்து, பார்க்கும் சினிமா காட்சிவரை சொல்லி கொடுத்திருக்கும். தனது அம்மாவும் அதுபோல இருக்க வேண்டுமென்ற அவளது மனோபாவத்தில் எனக்கொன்றும் தவறாக படவில்லை. அவளை முற்றிலும் புரிந்துக் கொள்ள முடிகிறது. அழகென்பது புறத்தோற்றத்திலிருக்கிறது என்றுதானே நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் சொல்லித் தருகிறது.

"Tall,Fair and Slim" என்று மணமகள் தேவை விளம்பரம் கொடுக்கும் சமூகத்தில் அச்சிறுமியை குற்றம் சொல்ல முடியாது. அழகென்பது ஒல்லியாக இருப்பது என்று பயிற்றுவிக்கப்படும் மனோபாவத்தைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். கல்யாணமாகி குழந்தைப் பெற்றுவிட்டால், நம்பர் ஒன் சிம்ரனையும் 'கோணாலா இருந்தாலும்' நம்முடையதாக்க மாட்டோம். சூர்யாவுக்கு அம்மாவாக மாற்றிவிடுவோம். கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால்..என்னுடைய பள்ளிக்காலத்து ஹீரோயின்கள் குஷ்பூ,ரோஜா, மீனா, சுவலஷ்மி, மாதுரி....திடீரென்று எல்லா இடங்களிலும் ஐஸ்வர்யாவின் படங்களும், சுஷ்மிதாவின் படங்கள் ஆக்கிரமித்தன. ”பொண்ணுங்களே பார்த்து பொறாமைப்படற அளவுக்கு இருக்கா” என்று ஐஸ்வர்யா பற்றி ஒரே பேச்சுதான். அப்போது பிறந்த குழந்தைகள் பலர் ’ஐஸ்வர்யா’க்களானார்கள். தொடர்ந்து லிசா ரே, சொனாலி பெந்த்ரே...பின்னர், கல்லூரி காலத்தில் சிம்ரன்,த்ரிஷா,ஷில்பா ஷெட்டி, விதிவிலக்காக ஜோதிகா..

பிபாஷா பாஸு, ஜெனிஃபர் லோபெஸ், செலீன் டயான்....ஷ்ரேயா....தமன்னா...பத்திரிக்கை அட்டை படங்களை ஆக்கிரமிக்கும் பெண்களிலிருந்து பிசினஸில் சாதித்த பெண்கள் என்று செய்தியாகும் பெண்கள் வரை - உடல் மெலிந்திருப்பதே ஃபேஷன்!

லாரெல்..பெனிட்டன்..வில்ஸ்...டவ்...லீ..கார்டன்.. முதல் டூத்பேஸ்ட் வரையிலான பன்னாட்டு நிறுவனத்தின் மாடல்கள் எல்லாம் ஒரே அச்சில் வார்த்தெடுத்த‌து போல ஒல்லியானவர்களே! ஒரு மைக்ரோக்ராம் கூட எடையில் மாற்றமிருக்காது.

தங்களது பொருட்களை சந்தைப்படுத்த மாடல்களை ஒரு மெஷினைப் போலவே பிழிந்தெடுக்கின்றன. மாடல்களாக இருக்க அவர்கள் கொடுக்க வேண்டிய விலை ஒரு சோகக்கதை. சில வருடங்களுக்கு முன் பன்னாட்டு விளம்பர கம்பெனியின் ஒப்பந்ததை முறித்துக்கொண்டு வந்து மாடலின் நெஞ்சை உலுக்கும் பேட்டி மறக்க முடியாதது. சத்துக்குறைபாடு முதல் ஒழுங்காக பீரியட்ஸ் வராத பிரச்சினைகள் வரை பல உடல்நலசீர்கேடுகளையும் சுமந்துக்கொண்டுதான் ராம்ப்களில் வலம் வருகின்றனர். கார் விளம்பரத்திலிருந்து தைல விளம்பரம் வரை முன்னிருத்தப்படும் மாடல்கள் எல்லாமே பார்பி பொம்மைகள்தானே!

மெலிந்த உடலமைப்பு கொண்டவர்களே உலகை ஆளப்பிறந்தவர்கள். அவர்களே அழகிகள். வசீகரமானவர்கள். கண்களுக்கினியவர்கள். தயாரிக்கப்படும் உடைகளனைத்தும் ஒல்லியானவர்களுக்கே...(எடை கூடக் கூட வண்ணங்கள் கூட மறுக்கப்பட்டுவிடும்.) ஒல்லியான பெண்களே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். ஒல்லியான பெண்களின் தலை ஒருபோதும் தாழ்ந்துபோவதில்லை. அவர்கள் மனவலிமை வாய்ந்தவர்கள். இந்த உலமே அவர்களுக்கானது.

மாறாக, ஒல்லியாக இல்லாமற்போனால் நீங்கள் குண்டுதான். நார்மல் என்ற ஒன்றே கிடையாது. குண்டு என்பது அழகில்லை. அழகில்லை என்பதைவிட ’க்ளம்சி லுக்’ என்றே மனதில் பதிந்து போயிருக்கிறது. lethargic.குண்டாயிருக்கும் பெண்களை நீங்கள் பெண்களாகவே ஏன் மனிதர்களாகக் கூட மதிக்கத் தேவையில்லை... குண்டான பெண்கள் தின்னிப் பண்டாரம். அவர்கள், கிண்டலுக்கும் கேலிக்கும் மட்டுமே உரியவர்கள். அரிசிமூட்டை, பம்ப்ளீமாஸ், பிந்துகோஷ்.....

பெங்களூரில் வேலை பார்த்தபோது ரஜினிகாந்தாவும் நானும் பிஜியில் ஒரே அறைவாசிகள். ஒவ்வொரு மாதமோ பதினைந்து நாட்களுக்கிடையிலோ வீட்டிற்கு வரும்படி அவளுக்குத் தொலைபேசி அழைப்பு வரும். எல்லாம் பெண் பார்க்கும் படலம்தான். அவளும், கடமையாக லக்மே பார்லருக்குச் சென்று ஊருக்கும் சென்று வருவாள். ஊரிலிருந்து திரும்பிய அன்று மிகுந்த வருத்ததுடனும் சோர்வாகவும் காணப்படுவாள். வழக்கமான கலகலப்பு இருக்காது.

"சந்தனா, எனக்கு என்ன யா குறை...எல்லாமே கொஞ்சம் பெரிசா இருக்கு, அதானே" என்று ஒருமுறை சொன்னபோது பதிலளிக்கவே தோன்றாமல் அவளைத் தாண்டி கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே இருந்த க்ரோட்டன்ஸை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஷகீலாவையும், நமீதாவையும் ரசிப்பவர்களில் எத்தனை பேர் குண்டான பெண்களை திருமணம் செய்துக் கொள்வார்கள்?

8 comments:

அம்பிகா said...

முல்லை,
நான் கூட ஒபிசிட்டி பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்திருத்திருந்தேன். இங்கே கிராமங்களில், ஒல்லி என்றால் சாப்பாட்டுக்கு வழியில்ல போல னு நினைத்துக் கொள்வார்கள்; நேர்லயே சொல்லியும் விடுவார்கள்.
இப்போதைய டீனேஜ் பெண்களும் இதே போல் பட்டினி கிடந்து ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர்.நல்ல பகிர்வு முல்லை.

Sriakila said...

குண்டாக இருப்பதால் பெண்களை வேண்டாம் என்று ஆண்கள் சொல்வது போல், ஒல்லியாக இருக்கும் பெண்களும் குண்டாக இருக்கும் ஆண்களை வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள்.

பெண் பார்க்கும் போதே இவள் நமக்கு பொருத்தமாக இருப்பாள், இவன் நமக்கு பொருத்தமாக இருப்பான் என்பதை முடிவு செய்து விடுவது நல்லது. ஏனென்றால் அதையே குடும்பத்தில் ஒரு பெரிய பிரச்சினையாக்கும் ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள். எல்லாம் தாழ்வு மனப்பான்மையால் வரும் பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் அவதிப்பட்ட குடும்பங்களை நானே பார்த்திருக்கிறேன்.

வெயிட்டைக் குறைக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாக குழந்தைப் பெற்றுக்கொண்ட பெண்களுக்கு. சத்தான உணவும், நேரம் தவறாமல் சாப்பிடும் பழ்க்கமும், தினமும் அரைமணி நேரம் உடற்பயிற்சியும் இருந்தால் போதும். உடற்பயிற்சி செய்தாலே உடம்பு பிட்டாக இருக்கத்தான் செய்கிறது. அதற்காக ஜிம்மே கதி என்று கிடப்பது தவறு.

நாம் செய்யும் வீட்டு வேலையே நல்ல உடற்பயிற்சிதான். நான் வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் போதே இடைஇடையில் ஒவ்வொரு உடற்பயிற்சியையும் செய்து கொள்வேன். உடற்பயிற்சிக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பவர்களுக்கு இது பொருந்தும்.


நல்லப் பதிவு சந்தன முல்லை!

இனியா said...

nalla pathiv mullai.

dondu(#11168674346665545885) said...

அம்பிகா அவர்கள் சொன்னது போலத்தான் வட இந்தியாவில் திடீரென ஒருவர் டயட்டெல்லாம் செய்து இளைத்தால், அவரை “ஆப் க்யோன் கம்ஜோர் ஹோ கயே ஹைன் (நீங்கள் ஏன் பலவீனமாகி விட்டீர்கள்) என்றுதான் கேட்பார்கள்.

சமீபத்தில் 1986-ல் எனது 40-ஆம் வயதில் ஐந்து மாதங்களுக்கு வேக நடைப் பயிற்சி மற்றும் உணவு குறைத்தல் இரண்டையும் சேர்த்து செய்து 90 கிலோகிராமிலிருந்து 65 கிலோகிராமுக்கு வந்தபோது அப்படித்தான் கேட்டார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Rathi said...

எப்பவுமே ஒளவையார் சொன்ன, "உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு" தான். ஒளவையார் சொன்னதில் பின்பற்றுவதில் இதுவும் ஒன்று. அவர் சொன்னது Calorie intake என இக்காலத்தில் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதிகமாக வேலைப்பளு, ஏதாவது மண்டையிடி, PMS போன்ற சமயங்களில் stress காரணமாக கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவதுண்டு. PMS சமயத்தில் கொழுப்பு சாப்பாட்டிற்கு "cravings" அதிகமாக இருக்கும். இதெல்லாம் என் அனுபவம். இவற்றை கவனிப்பேன்.

ஆனால், low calorie intake, exercise-not vigorous (consult your physician/doctor), அவரவர் உடற்கூறுக்கும், ஏதாவது மாத்திரைகள் எடுப்பவராயின் அதற்கேற்றாற்போல் அதிக பழங்கள், மரக்கறிவகைகள் சாப்பாட்டோடு சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைக்க உதவலாம் என்பது என் கருத்து.

மற்றப்படி வியாபார நோக்கில் நடத்தப்படும் உடல் எடையை குறைக்கும் வழிவகைகளில் எனக்கு நம்பிக்கையில்லை.

ஹுஸைனம்மா said...

எட்டு வயது சிறுமியிடம் காணப்படும் இத்தாக்கம் கவலையானதுதான். ஆராக்கியம் சம்பந்தமாகக் கூறுவது என்றால் ஓகே. ஆனால், ஒல்லிதான் அழகு என்றால்.. அதை அவரது அம்மாவும் சொல்லித் தெரியவைக்காமல், ஏற்றுச் செயல்படுத்துகிறார் என்றால்.. தாயைப் போலப் பிள்ளை...?? அல்லது இப்படியாவது எடையைக் குறைத்து ஆரோக்கியமாவோம் என்று நினைக்கிறாரோ?

ஜெயந்தி said...

சிலரது உடல் வாகு குண்டானதாக இருக்கும். சிலரது உடல்வாகு ஒல்லியாக இருக்கும். அவர் எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பார். குண்டாக இருப்பவர் எவ்வளவு குறைவாக சாப்பிட்டாலும் குண்டாகவே இருப்பார். இதையெல்லாம் தவறாக நினைக்கக்கூடாது. இயற்கையின் படைப்பு.

நான் ஒரு 35 வயது வரை ஒல்லியாகவே இருந்தேன். அதன் பிறகு மெல்ல உடல் குண்டாக மாறியது. அதை என்ன செய்ய முடியும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவின் கடைசி வரி, ரொம்பவே சிந்திக்க வைக்கிறது. கசப்பான உண்மை!