Showing posts with label தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம். Show all posts
Showing posts with label தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம். Show all posts

Sunday, November 13, 2011

வேளச்சேரி டைம்ஸ் : ராஜுவும், பில்லியனாவது குழந்தையும்

மழை தூறிக்கொண்டிருந்த காலை. வேளச்சேரி ஏரிக்கரை(!) சாதாரண நாளிலேயே குப்பை குவிக்கப்பட்டு நாறிக்கொண்டிருக்கும், மழைநாளில் கேக்கவே வேண்டாம். மழைநீர் கழிவுநீராக மாறிக்கொண்டிருந்தது. மழை வலுப்பதற்குள்ளாக அலுவலகம் சென்றுசேர்ந்துவிட அனைவருமே ஆசைப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், வாகனங்களோ இன்ச் இன்ச்-ஆக நகர்ந்துக்கொண்டிருந்தது. இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு ஜீவன் ஏரிக்கரையின் மேல் நடந்து வந்தது. கால் வைக்கக்கூசும் குப்பைமேட்டின் நடந்து வந்தது நிச்சயமாக மழையின் தூறலை அனுபவிக்க இல்லை. குப்பை மேட்டிலேயே சற்று மேடாக இருந்த பகுதியில் காலை வைத்தான்,அவன். ஒரு பார்வை. எப்படித்தான் அவன் கையில் அந்த கவண் வந்ததோ தெரியவில்லை.... ஏரியில் இருந்த தண்ணீர் திட்டுகளைத்தாண்டி செடியின் மீதமர்ந்திருந்த நாரையை நோக்கி எறிந்தான். படவில்லை போல. இன்னும் சற்றுத்தள்ளி போய் திரும்ப ஒரு கல்.

அதற்குள் மழை பெய்யத்துவங்கியது. ஹாரன்கள் வலுக்கத்தொடங்கின. தான் நனைவதைப்பற்றியோ அல்லது குப்பைகளில் கால் வைப்பதைப்பற்றியோ எந்த கவலையும் இல்லாமல், அவன் தொடர்ந்து குப்பைகளை சீண்டினான். அகப்பட்ட பாட்டில்களை சேர்த்து வைத்தான். சில பாட்டில்களில் இருந்த மழைநீரை கவிழ்த்துவிட்டு ஒன்றாக்கினான். அதற்குள் சிக்னல் விழ வாகனங்கள் நகரத்துவங்கின.

பெயர் ராஜூ. வயது 14 அல்லது 15. நினைவு தெரிந்த நாள் முதலே அவன் ரோடில்தான் வசிக்கிறான்.குப்பைகளை பொறுக்குவதுதான் அவனுக்குத்தெரிந்த தொழில்.பாட்டில்களோடு சமயங்களில் தூக்கியெறியப்பட்ட பொட்டலங்களில் மீந்துப்போன உணவு கிடைக்கும்.மழை பெய்தால் அதற்கும் வாய்ப்பில்லை. பள்ளிக்கூடத்துக்கெல்லாம் சென்றதில்லை.சென்று என்ன செய்யப்போகிறோம்? - திருப்பி என்னைக் கேட்டபோது என்னிடமும் பதிலில்லை. இந்தியாவில் பிறந்த அனைத்துக்குழந்தைகளுக்கும் படிப்பை அடிப்படை உரிமையாக்குவோம், கட்டாயக்கல்வி என்ற செய்திகள் மட்டும் நினைவுக்கு வந்தது. ராஜுவுக்கு ஊர் என்றெல்லாம் ஒன்று கிடையாது. சென்னையில்தான் இருக்கிறான். தாய் கிடையாது. எங்கேயென்றும் தெரியாது. தந்தை மட்டும்தான். அவரையும் எப்போதாவதுதான் பார்ப்பான். மற்றபடி, இப்படி தெருவில் பொறுக்குவது, கிடைப்பதை உண்பது, இதுபோல பாட்டில் பொறுக்கும் பசங்களோடு சுற்றுவது, பாலத்துக்கடியில் உறங்குவது இதுதான் ராஜுவின் வாழ்க்கை. ராஜூ குப்பை பொறுக்கிய இடத்திலிருந்து அரைகிலோ மீட்டர் சென்றால், கண்ணுக்கினிய வாய்க்கு ருசியான உணவைத்தரும் பல உணவகங்கள் உண்டு. ஆனால், அவற்றுள் ராஜூவால் நுழைய முடியாது.

ராஜு சொல்வது போல, ஒன்றிரண்டு பேர் மட்டும் இப்படியில்லை. சென்னையின் ஏதாவதொரு குப்பைமேட்டை பார்த்தீர்களானால் புரிந்துக்கொள்ளலாம். யாராவது அந்த குப்பையை கிளறிக்கொண்டிருப்பார்கள். மிச்சம் மீதி உணவுக்காக பைகளை திறந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். பள்ளிக்கரணையில் உள்ள டம்ப்யார்டிற்கு சென்றால் கண்கூடாக இந்த காட்சியைக் காணலாம். ஒரு பக்கம் குப்பைகள் எரிந்து புகை மண்டலமாக இருக்கும். அதன் ஒருபக்கத்தில் குப்பைகளை நோண்டியபடி சிறுவ சிறுமிகள் வெற்றுக்கால்களுடன் ஓடிக் கொண்டிருப்பார்கள். ஒரு சில முதியவர்களும் இருப்பார்கள். பக்கத்திலேயே, பன்றிகளும், நாய்களும் அதன் உணவை தேடியபடி இருக்கும்.

(படம் நன்றி: கூகுள்)
வெகு சாதாரணமாக எந்த நேரத்தில் சென்றாலும் இந்த காட்சியைக் காணலாம்.
நீங்கள் விரும்பினால் இந்த காட்சிகளையெல்லாம் பாராதது போல கடந்து செல்லலாம். இந்த முக்கியமான திறமையை - உபயோகமான இந்த திறமையைத்தானே நாம் ஒவ்வொருநாளும் நுட்பமாக கற்றுவருகிறோம்! ஆனால், எத்தனை பிரயத்தனப்பட்டாலும் நம்மால் இந்தக்காட்சிகளை காண்பதிலிருந்து தப்ப முடியாது. நம் தெருமுனையில் கூட யாராவது ஒரு கையில் சாக்கு மூட்டைகளோடு குப்பையை நோண்டிக்கொண்டிருக்க கூடும். அல்லது, சிக்னலில் கையில் குழந்தையுடன் இன்னொரு குழந்தை சில்லறைகளுக்காக நம் பின்னால் ஓடி வரக்கூடும். தி.நகரிலும், பாண்டி பஜாரிலும் நம் பர்சிலிருந்து வீசப்படும் ஓரிரு நாணயங்களுக்காக கடை வாசல்களில் ஏங்கி நிற்கும் இந்த முகங்களை நாம் காணவில்லையா என்ன?

‘இந்த காட்சிகள் மிகவும் சாதாரணமானவைதான். ஏழைகள் எல்லா இடங்களிலும்தான் இருக்கிறார்கள். பாசிடிவானவற்றை பார்த்து பழக வேண்டும். எதிலும் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்தால் இப்படித்தான். நல்லவற்றை பார்க்க வேண்டும். எத்தனை வாகனங்கள், எவ்வளவு டெவலப்மெண்டுகள், ஏழ்மை என்பது இப்போதெல்லாம் குறைந்துவிட்டது........ஏதாவது ஒரு குழந்தைக்கு படிப்பு செலவுக்கு காசு கொடுத்தால் போயிற்று......’

ஆம், நமது கல்விமுறை இதைத்தான் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அனைவருக்குமான உரிமைகளை பெற வழியை சொல்லிக்கொடுக்காமல்
ஏற்றத்தாழ்வுகளை வெட்கப்படாமல் சகித்துக்கொள்ளவே நம்மை பழக்கியிருக்கிறது. அதோடு பெருமைக்கொள்ளவும்! இந்தியாவில்தான் உலகில் முதல் பணக்காரர்கள் வாழ்கிறார்கள். சக்தி படைத்த மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால், ஆப்ரிக்காவை விட வறுமையான மனிதர்களும் இங்குதான் வசிக்கிறார்கள்.

5000 கோடிக்கு வீடு கட்டி வாழ்பவர்கள் வசிக்கும் நாட்டில்தான் பாலத்துக்கடியில் தூங்குபவர்களும் வசிக்கிறார்கள். சரியான சாப்பாடு கொடுக்க முடியாமல், 75000 குழந்தைகளை மாதந்தோறும் நாம் சாகடிக்கிறோம். நம் கண்முன்னே குழந்தைகள், பிச்சைக்காரர்களாக மாறுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறோம். அனைவருக்கும் கல்வி என்ற குரலை எழுப்பிக்கொண்டே குழந்தை தொழிலாளர்களை உருவாக்குகிறோம். வறியவர்களுக்குப் பிறந்த ஒரே காரணத்துக்காக பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவ வசதியை, வாழ்வுரிமையை மறுக்கிறோம். ராஜுவை மறுதலித்துக் கொண்டு ஐஸ்வரியாவின் குழந்தைக்காக காத்திருக்கிறோம்; பில்லியனாவது குழந்தை இந்தியாவில் பிறந்ததற்காக ஆர்ப்பரிக்கிறோம்!! இது எதற்காகவும் அருவெறுப்படைய தேவையில்லை என்பதுதான் நமது கல்விமுறை நமக்கு கற்றுக்கொடுத்த பாடம்.


நாளை குழந்தைகள் தினம். அப்துல் கலாமோ, பிரதீபா பாட்டீலோ - ஏதாவது பள்ளிக்குழந்தைக்கு இனிப்பூட்டும் படம் தினசரிகளில் வெளியாகும். தெருவில், குழந்தைகள் விதவிதமான உடைகளில் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருப்பார்கள். ராஜூவும், அவனது நண்பர்களும் குப்பைகளை கிளறிக்கொண்டிருப்பார்கள் - முந்தியநாள், யாரேனும் வீசிய உணவுப்பொட்டலங்களில் தங்கள் உணவைத்தேடி!

Wednesday, September 28, 2011

வேளச்சேரி டைம்ஸ் : பார்வதி அம்மாவின் காய்கறி கடை

அய்யாவானாலும் சரி, அம்மாவானாலும் சரி, வறுமையில் வாழும் குடும்பங்களுக்காக இலவசங்களை வழங்குகிறார்கள். 79 வயதானாலும் கடமை தவறாமல் நாட்டு மக்களையும் அவர்களின் நலனையும் பற்றி சிந்தித்து சிந்தித்து - வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கியாவது- அவர்களை முன்னேற்றிவிட துடித்துக்கொண்டிருக்கிறார் பிரதமர் அவர்கள். இப்படி, நாட்டை பூந்தோட்டமாக மாற்றி மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட வேண்டும் என்று முயன்று வருகிறார்கள் நம்மை ஆள்பவர்கள்...கோடி கோடியாய் செலவிட்டு எப்படியாவது வறுமையைதுரத்திவிட வேண்டுமென்று சபதமேற்கிறார்கள். அல்லும்பகலும் அதைப்பற்றியே சிந்திக்கிறார்கள். இதையெல்லாம் செய்த பின்னாலும் நாம் காணக்கிடைக்கும் முன்னேற்றம் மிகுந்த வியப்பையே தருகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி இருந்ததோ அப்படியே கூட இல்லாமல். அதைவிட மிகவும் இழிந்த நிலையையே அடைந்துள்ளது. ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகவும்மாறியிருக்கின்றனர். இருப்பதும் பறிக்கப்பட்டு விவசாயி கிராமத்தைவிட்டு துரத்தப்பட்டநிலையில் பண்ணையார்களும், பிரசிடெண்டுகளும் காண்டிராக்டர்களாக மாறி லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். 32ரூ கொண்டு ஒரு நாளை தாராளமாக ஓட்டமுடியும் என்றும் வறுமையின் கீழ் அவர்கள் வருவதில்லையென்று அறிக்கைகள் கூறினாலும் நாட்டில் பாதிப்பேர் அந்த ஏழ்மைவாழ்க்கையைதான் வாழ்கின்றனர். பார்வதி அம்மா அந்த பாதிப்பேர்களில் ஒருவர்.




இந்த நிலைக்கெல்லாம் மேலே சொல்லப்பட்ட ஆட்சியாளர்கள்தான் காரணமென்று சொன்னால் பார்வதி அம்மா கேட்க மாட்டார். தனது இந்த நிலைக்கும் வாழ்க்கைக்கும் காரணம் பகவானே என்றுதான் நம்புவாரே தவிர ஆட்சியாளர்கள் காரணம் என்று அவருக்கு தெரியாது. பாவம், எடுத்துச் சொன்னாலும் கேட்க மாட்டார். நம்பவும் மாட்டார். அந்த அளவுக்கு ஆட்சியாளர்கள் பார்வதி அம்மாவை வைத்துள்ளார்கள் என்ற விபரம் நம்மில் பலருக்கும் தெரியாது.


இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும், எழுதிக்கொண்டிருக்கும் எனக்கும் ஒரு கூரையின் கீழ் அமர்ந்து செய்யக்கூடிய வேலை இருக்கிறது.
சென்ற வருடத்தைவிட இந்த வருடம் சம்பளம் கூடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அமர்ந்திருக்கும் சேருக்குப் பக்கத்தில் சாக்கடை ஓடாது. ஆனால், பார்வதி அம்மாவின் வேலையிடம் அப்படி அல்ல. இருபத்து நான்கு வருடங்களாக வேலை செய்தாலும் வருமானம் வருடா வருடம் கூடுவதில்லை. ஆனால், செலவுகள் மட்டும் கூடிக்கொண்டேயிருக்கின்றன. இருபது வருடங்களாக தலையில் கூடை சுமந்து காய்கறிகள் விற்றிருக்கிறார். கடந்த நான்கு வருடங்களாகத்தான் நிலையாக ஒரு இடத்தில், சாக்கடை ஓடும் பிளாட்பாரத்திற்கு அருகில் அமர்ந்து பூ,படம், காய்கறிகள் விற்கிறார். பார்வதி அம்மாவுக்கு தற்போது 68 வயது. ஒரு ரூமில்தான் குடித்தனம் - மகள் மற்றும் பேத்தியுடன்.

“காய்கறிங்க அதிகம் போவாது, பூ,பழம், கீரைதான் ஓரளவுக்கு போவும்” என்கிறார். என்னா வித்தாலும் விக்காட்டியும் பைனான்ஸ்காரங்களுக்கு ஒரு நாளைக்கு 40ரூ குடுத்துடணும். இப்போகூட குடுத்தேனே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி - இன்னைக்கு. மூணு பைசா வட்டி. ஐயாயிரம் வாங்குனா, வட்டி மூணு மாசத்துக்கு என்னா ஆச்சு? 500ஐ புடிச்சுக்கிட்டு மீதி 4500 தருவாங்க. அதுல, தெனம் 40ரூ கட்டிக்கிட்டு வரணும். கரெக்டா கட்டிக்குட்டு வரணே...என்னா இப்போ பூஜை வருது,கொஞ்சம் வியாபாரம் ஆவும், ஒரு 2 ரூ இருந்தா நல்லாருக்கு, இதை கட்டாம மேல கேட்டா தரமாட்டாங்க” என்கிற பார்வதி அம்மாவின் முன் கத்தரிக்காய், வாழைக்காய், ஒருகூடை நிறைய எலுமிச்சைபழம், ஒரு சில கீரைக்கட்டுகள், ஜாதிமல்லி, உதிரி மல்லி, சாமந்தி பூக்கள்...சூடம், அகர்பத்தி, வாழைப்பழம்..


பார்வதி அம்மா ஆந்திராவிலிருந்து வந்தவர். அவரது கணவர் சிம்சனில் வாட்ச்மேனாக வேலை செய்துவந்தார். ஏதோ மனஸ்தாபத்தில் வேலை வேண்டாமென்று எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டார். அதன்பிறகு அவர் வேலைக்குச் செல்லவில்லை. அதிலிருந்து காய்கறி விற்க கூடை தூக்கியவர்தான். பார்வதி அம்மா, கணவர் இறக்கும் வரை அதை இறக்கவேயில்லை.

”என்னா பண்றது, கட்டுனவராச்சே, அப்படியே உட்டுட முடியுமா, இப்போ பொண்ணை காப்பத்தலியா..நம்ம வயித்துல பொறந்துடுச்சுன்னு,
அது மாதிரிதான்...இப்போ நாலு வருசமாதான் இங்க கடை போட்டிருக்கேன். முன்னமாதிரி நாப்பது அம்பது கிலோ சொமந்துக்கிட்டு நடக்கமுடியலை” என்றார் நீட்டிய கால்களை நீவிவிட்டுக்கொண்டு. "பூ கட்டறது, காய்கறி வாங்கியாறதுன்னு எல்லா வேலையும் நானே செஞ்சுடறதாலே அதுதான் லாபம்னு நினைச்சுக்கணும்..இல்லன்னா அதுக்கு ஆள் வைச்சா ஒரு நாளைக்கு ரூ100 கொடுக்கனும்..அதுக்கு எங்க போக..பகவான் கை கால் நல்லா வைச்சிருக்கானே நெனைச்சிக்கறேன்"

முதியோர் இல்லத்துக்கான ஒரு விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். மனதை உருக்கும் விளம்பரம் - அதில் சொல்லப்பட்டது போலவே. ஒரு இளம்பெண் புறாக்களுக்கு உணவிட்டுக்கொண்டிருப்பார். அவர் கையில் ஒரு பொட்டலம் இருக்கும். சற்று தூரத்தில் பெஞ்சில் ஒரு முதியவர் அமர்ந்திருப்பார். அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவராக இருந்திருக்கக் கூடும். அந்த இளம்பெண்ணின் அருகில் வருவார். முதியவரின் கையில் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு புறாக்களுக்கு உணவிட்டுக்கொண்டிருப்பார் அப்பெண். கைகளில் தீனி தீர்ந்ததும் திரும்பிப்பார்ப்பார் அந்த முதியவர் தொலைவில் மறைந்திருப்பார் - பொட்டலத்தை எடுத்துக்கொண்டு. அந்த பெண் அப்படியே உறைய, அடுத்த காட்சியில் ஒரு தூணுக்கு பின் மறைந்தபடி அம்முதியவர் அந்த உணவை எடுத்து உண்பார். முதியோர் இல்லத்துக்கான வாசகத்துடனோ அல்லது முதியவர்கள் பராமரிப்புக்கான வாசகத்துடனோ அவ்விளம்பரம் முடியும்.

”ஒருத்தங்க ஃபீரியா கொடுத்தா கூட நான் வாங்க மாட்டன். என்னை மாதிரிதான அவங்களும் கஷ்டத்துல சம்பாரிச்சுருப்பாங்க. இன்னைக்கு ஒருத்தரு ரூ100 குடுக்கறாருன்னா அடுத்த நாளும் யாருனா அதுமாதிரி குடுக்க மாட்டாங்களான்னு மனோபாவம் வந்துடும் பாரு, அப்புறம், உழைக்கவே வராம சோம்பேறியா பூடுவேன்...கைகால் நல்லாருக்க வரைக்கும் ஏதோ என் பொண்ண பாக்க போறேன்...அவ புருசன் சரியில்ல...விட்டுட்டு போய்ட்டான்...என் பேத்தி காலேஜ் படிக்கிறா...அதுக்கு வருசத்துக்கு 15000 கட்டணும்...அதுக்குதான் இப்டி லோல்பட்டுனு கெடக்கறேன்... எங்களுக்கே செலவு ஒரு நாளுக்கு 100 ரூபா ஆகிடுது...நாங்க என்னா, நெய்யும் பாலுமா சாப்பிடபோறோம், காலயில், கொஞ்சம் சோத்தை எடுத்து தண்ணிவுட்டு மோர் ஊத்தி கரைச்சு குடிச்சுட்டு கோயம்பேடு போனன்னா காய் எடுத்துகிட்டு வருவேன். பஸ், லெக்கேஜ் சார்சே 40ரூபா ஆகுது.. அப்புறம்,. ராத்திரி வீட்டுக்கு போனா ரெண்டு தோசை. மத்தியானம், ஒரு டீ குடிச்சாலே 5ரூபா ஆகிடுது. அதுல என் பேத்திக்கு ஒருநாளைக்கு 20ரூபா வேணும்...இது இல்லாம பைனான்ஸ் காரங்களுக்கு தெனம் குடுத்துடணும், அப்பதான் அடுத்தவாட்டி கேட்டா தருவாங்க. பகவான் மேல பாரத்த போட்டுட்டு ஒக்கார்ந்திருக்கேன். மனோதைரியம்தான் வேணும்..இப்படி வித்துதான் ரெண்டு பொண்ணை கட்டுக்குடுத்தேன்..ஒன்ன்னு நல்லாருக்கு, இன்னொன்னுக்காகத்தான் இந்த பாடு.... அரிசி ரேஷன்ல வாங்கிக்குவோம்..காய்கறி இதோ இதுலயே நாலை எடுத்துப்போட்டு சாம்பார் வைச்சுக்கவேண்டியது. நான் வெஜ்லாம் நாங்க அதிகம் சாப்பிடறதுல்ல... இதுல என்னாத்த சேத்து வைக்கிறது...நான் செத்தா கார்ப்பரேஷன்காரந்தான் தூக்கி போடணும்”

பேத்திக்கு காலேஜ் பீஸ் கட்டதான் அவர் அலையாக அலைந்திருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரை அவரது பேத்தி ஒருமுறை தேர்வில்
தோற்றதில்லையாம். நன்றாக படிப்பாராம். பணம் கட்டமுடியாதவர்களுக்கு உதவி செய்யும் சில அமைப்புகளைப் பார்த்து நடை விரயமானதுதான் மிச்சமாம். வெறுத்து போய் விட்டுவிட்டாராம். அதோடு இந்த தொழிலில் பல பிரச்சினைகள் வேறு. கடன் தொல்லைகள். பகவான் நேர்மையாக இருப்பவர்களைத்தான் குறி வைத்து சோதிப்பாராம்.

தொழில்னா லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். நஷ்டமாயிடுச்சுன்னு ஒக்காந்துடவா முடியும்...நாம நெனைக்கிறதெல்லாமா நடந்துடுது? நாம ஒண்ணு நெனைப்போம்.அது ஒண்ணு நடக்கும். நாம நெனைக்கிறது நடக்கவே நடக்காது. பகவான் மேல பாரத்தை போட்டுட்டு இருக்கேன். நேர்மையா இருக்கிற வங்களைதான் பகவான் சோதிப்பான். இதுல கொசுவுக்கு கைகால்ல மருந்து தடவுனா இங்க ஒக்காந்திருக்கவே முடியும். காய்கறி வாங்கியாந்துட்டன்னா, அது விக்கிறவரைக்கும் மனசு இருக்காது. வித்து அதை காசாக்கினாதான்.... அதுவரைக்கும் மனசு ஒரு நெலையில இருக்காது. இல்லன்னா அடுத்த நாளைக்கு என்னா பண்ரது? ”

கற்பனைக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்காது என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், வாங்கிய காய்கறி விற்கவில்லை யென்றால் அடுத்தநாள் தனக்கானதாக இருக்காது என்ற பார்வதி அம்மாவின் பயம் உண்மை.

அந்த பயம் - வாழ்வின் மீதான பயம்.


அவரது பயம் தெளிவது எப்போது?


அனைவரையும் போல பயமின்றி மனநிம்மதியோடு பார்வதி அம்மா வாழ்வது எப்போது?

Monday, February 21, 2011

மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான்; மரத்தை வெட்டியவன்...?

தூர்தர்ஷனில் மரத்தை காப்பாற்ற ஒரு விளம்பரம் வரும்.ஒரு சிறுமி மரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு வெட்ட விடவே மாட்டாள். நானும் அப்போது சிறுமியாக இருந்ததால், எங்காவது மரம் வெட்டினால் அச்சிறுமியைப் போல செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். பெரும்பாலும், மின்சார வாரியத்திலிருந்து வந்து எங்கள் தெருவிலிருக்கும் தூங்குமூஞ்சி மரங்களின் கிளைகளை சீவிவிட்டு செல்வார்கள். அப்படி உண்மையாகவே மரங்களைக் காப்பதற்கா நடந்த சிப்கோ இயக்கத்தை பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

தற்போது, ஐடியா மொபைலை உபயோகித்து மரங்களை காக்க விளம்பரங்கள் வருகின்றன. 'மரம் வளர்ப்போம்', 'ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினால் வீட்டுக்கே மரக்கன்று வரும்', 'மரம் வளர்ப்பதை ஊக்குவிப்போம்' என்று சமீப காலங்களில் அதிகமாக மரம் வளர்ப்பதைப் பற்றி விளம்பரங்களைக் காண முடிகிறது. சமூக ஆர்வலர்கள், இத்தனை மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன் என்றும் எத்தனை மரம் நடும் கேம்பெய்ன்களில் பங்கேற்றிருக்கிறேன் என்றும் புள்ளிவிவரப் பேட்டிகள் தருகிறார்கள். பார்ப்பவர்களை, ஏதோ அவர்கள்தான் காடுகளை அழித்து விட்டதைப் போல குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்கிறார்கள்.


சிலமாதங்கள், முன்பு ஏதோ ஒரு டிவியில் காலைமலர் பார்த்தேன். அதில் பேசிய ஒருவர், இந்தத் தலைமுறைதான் காடுகளை அழிக்கிறது என்பது போல பேசினார். நகரவாசிகளும், டவுன்வாசிகளும் மொட்டை மாடிகளிலும், பால்கனிகளிலும் தொட்டிகளில் செடிகொடிகளையும், கேக்டஸ்களையும் வளர்த்து குற்றவுணர்ச்சியை போக்கிக் கொள்ளுகிறார்கள். சமூகத்திற்கு நல்லது செய்த திருப்தியைத் தேடிக்கொள்கிறார்கள்.

இன்னும் பல கேம்பெய்ன்கள் இருக்கின்றன - எனர்ஜியை சேமிப்போம், தண்ணீரை சேமிப்போம், குளோபல் வார்மிங். குளோபல் வார்மிங்குக்காக ஒரு மணிநேரம் மின்சாரம் இல்லாமல் இருப்பது என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது. இதில் பங்கேற்ற‌ பலரும் தம் மனசறிய ஒரு செடியைக் கூட பிடுங்கி யெறிந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், இந்த குளோபல் வார்மிங்கிற்கும், காடுகளை அழித்ததற்கும் நாம்தான் முக்கிய காரணம் என்பது போல இந்தப் பிரச்சாரங்கள் நம்மை எண்ண வைக்கின்றன. அன்றாடம் மின்வெட்டோடும், வீட்டிற்கு இரண்டு குடம் என்று அளந்து வரும் மெட்ரோ தண்ணீரிலும் ஏற்கெனவே அவதியோடு வாழும் அப்பாவி பொதுமக்களிடம் எதற்கு இந்தப் பிரச்சாரம்? எதற்கு இந்த உறுதிமொழிகள்?

எண்ணெய் கம்பெனிகளும், காஸ் கம்பெனிகளும் இயற்கை வளங்களை அராஜகமாகக் கொள்ளையடிப்பதோடு, சுற்றுச்சூழலையும் மாசுப்படுத்துகின்றன. சென்னையின் ஹுண்டாய் நிறுவனம், ஒரு நிமிட‌த்திற்கு ஒரு கார் வீத‌ம் நாள் முழுக்க‌ இடையறாது உற்ப‌த்தி செய்கிற‌து.சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விவசாயநிலங்கள் ஏக்கர் ஏக்கராக அழிக்கப்படுகின்றன. டௌ கெமிக்கலின் கழிவுக‌ள் இன்னமும் அகற்றப் படாமல் இருக்கின்றன. மாசடைந்த அந்த நீரைத்தான் பொதுமக்கள் இன்னமும் உபயோகப் படுத்துகிறார்கள். எஃகு நிறுவனங்களும் ஆலைகளும் நிலத்தடி நீரை மாசுப்படுத்துகின்றன.

ஆனால், இந்நிறுவ‌ன‌ங்க‌ளுக்குத்தான் க‌ட‌ன்க‌ளோடு, ச‌லுகைக‌ளும் அரசால்வாரி வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. மின்சார‌ உப‌யோக‌ம் குறித்து எந்த‌க் க‌வ‌லையும் இவ‌ர்க‌ள் கொள்ள‌த் தேவையில்லை. அதோடு வரிவிலக்குகளும் உண்டு.நோக்கியாவுக்கு வ‌ழ‌ங்கியுள்ள‌ ச‌லுகைக‌ள் அந்தக் கம்பெனியின் முத‌லீட்டை விட‌ அதிக‌ம்.

இறுதியில், அந்த‌ கம்பெனிகள்தான் ந‌ம‌து எல்லா வ‌ள‌ங்க‌ளையும் கொள்ளைய‌டித்துவிட்டு ந‌ம‌க்கே உப‌தேச‌ம் செய்கின்ற‌ன‌. பொதும‌க்க‌ள்தான் இவ‌ற்றிற்கெல்லாம் பொறுப்பு என்ப‌தைப் போல பிரச்சாரம் செய்கின்றன. தங்களை மதிப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக‌ இந்த‌ பிர‌ச்சார‌ங்க‌ளுக்கு நிதி வ‌ழ‌ங்குகின்ற‌ன‌. ஒருகையால் சுற்றுச்சூழ‌லைப் பாதுகாப்போம் என்று சொல்லிக்கொண்டே ம‌றுபுற‌ம் வ‌ள‌ங்க‌ளைச் சுர‌ண்டுகின்ற்ன‌. ரெட்டி ச‌கோத‌ர்களுக்குத் தாரை வார்க்க‌ப்ப‌ட்ட‌ க‌னிம‌வ‌ள‌ங்க‌ளையும் அதற்காக‌ பாழாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌லைப்ப‌குதிக‌ளையும் பார்த்திருப்போம்.

நாமா காடுகளை வெட்டி அழிக்கிறோம்? மலைகளை, இயற்கை வளங்களை வீணாக்குகிறோம்?

ப‌ன்னாட்டுக்க‌ம்பெனிக‌ளும் த‌ர‌கு முத‌லாளிக‌ளும் த‌ங்க‌ள் லாப‌த்திற்காக‌ செய்யும் ஒவ்வொரு செய‌லுக்கும் நாம‌ல்ல‌வா த‌ண்ட‌னைக‌ளை அனுப‌விக்கிறோம்?அவ‌ர்க‌ள‌து அராஜ‌க‌த்திற்கு, நம்மோடு சேர்ந்து ந‌ம‌து வாரிசுக‌ளும் அல்ல‌வா ப‌லியாகிறார்க‌ள்? த‌னியார் ம‌யமென்றும் தாராள‌ ம‌ய‌மென்றும் ந‌ம‌து நாட்டை ம‌லிவுவிலைக்கு விற்றுவிட்டு நமக்கே நமது குடிநீருக்கு விலை வைத்து அல்ல‌வா விற்கிறார்கள்?

இயற்கையெழில் கெடுகிறதென்று மலைப்பிரதேசங்களில் குப்பைகளைக் கொட்ட வேண்டாமென்று பொதுமக்களை வலியுறுத்துகிற அரசும், என் ஜி ஒ க்களும் டாடாவின் ஆலைகள் மற்றும் சுர‌ங்க‌ங்க‌ளின் க‌ழிவு ம‌லைக‌ளை அக‌ற்ற‌ எந்த‌ நெருக்க‌டியையும் த‌ருவ‌தில்லை. இதுதான் நாட்டின் வளர்ச்சி என்று நம்மை ஏற்றுக்கொள்ள வைப்ப‌தோடு, வளர்ச்சி தேவையெனின் இவ்விளைவுகள் தவிர்க்க இயலாதது என்று நாமே இயல்பாக மனமுவந்து ஒப்புக்கொள்ள வைக்கும் நோக்கங்கள்தான் இவை.

உண்மையாக‌ப் பார்த்தால், இந்த‌ நிறுவன‌ங்க‌ளே குளோப‌ல் வார்மிங்குக்கு பொறுப்பு. ஆனால், என்ன‌ ந‌ட‌க்கிற‌து? ம‌ர‌ம் ந‌டுவோம் என்றும் சுற்றுச்சூழ‌லைப் பாதுகாப்போம் என்றும் பிர‌ச்சார‌ங்களை என் ஜி ஓ நிறுவனங்கள் மூலம் மேற்கொள்கின்ற‌ன. இந்தத் திசைத்திருப்பலால், அப்பாவி பொதும‌க்க‌ளும் இவ்வ‌ள‌ங்க‌ள் முழுவ‌தும் பாழான‌த‌ற்கும் குளோபல் வார்மிங்குக்கும் தாம்தான் கார‌ண‌ம் என்ப‌து போல‌ ம‌றுகுகின்ற‌ன‌ர். ஆனால், ந‌ட‌ப்ப‌து என்ன‌?

போபாலில் ம‌க்க‌ள் த‌ங்க‌ளது இழ‌ப்பீட்டுக்காகவும், நீதி கேட்டும் போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்திக்கொண்டிருக்கும்போது டௌ கெமிக்க‌ல் இஸ்கான் (ISKON Food Relief foundation) என்ற‌ என் ஜி ஓ வோடு ‌ இந்தியாவின் பட்டினியைப் போக்கவும் படிப்பறிவுக்குமான செயலில் இணைந்துள்ள‌து.

இந்த‌ என் ஜி ஓ நிறுவ‌ன‌ங்கள், ஏன் பன்னாட்டுக் க‌ம்பெனிக‌ளின் இரட்டை நிலையை அம்பலப்படுத்தாமல், அவர்களிடமிருந்தே நிதியை பெற்றுக்கொள்கின்றன‌?

நந்திகிராமிலும், குஜராத்திலும் விவசாயிகளிடமிருந்து ஏக்கர் கணக்கில் வேட்டையாடிய‌தோடு, அம்ம‌க்க‌ளின் வாழ்க்கையையும் குலைத்துவிட்டு வித‌ர்பா விவ‌சாயிக‌ளுக்கு உத‌வுவ‌தாக‌ ந‌டிக்கிற‌து டாடா குழும‌ம். (A sustainable ray of hope : The Tata trusts have been working to help improve the agricultural practices of farmers in India)

போபாலில், விஷ‌க்க‌ழிவுக‌ள் இன்றும் கூட முற்றிலும் அக‌ற்றப்ப‌டாத‌ நிலையில் குஜ‌ராத்தில் சுத்த‌மான‌ குடிநீருக்காக தனது நீர் சுத்த‌க‌ரிப்பு சாத‌ன‌த்தை நிறுவியுள்ளது. இவை எல்லாம் யாரை ஏமாற்ற‌?
Dow India Promotes Clean Drinking Water at Kadodara in Gujarat : Donates Fourth Water Purification Facility in Dahej

ப‌ர்மாவில், அண்மைக்காலமாக ப‌ல‌ வ‌ன‌ப்ப‌குதிக‌ள் ஆலைக‌ளுக்காக துரிதமாக அழிக்கப்படுவதாக ‌ ட்விட்ட‌ரில் செய்தியாள‌ர் ஒருவ‌ர் க‌வ‌லையுட‌ன் எழுதியிருந்தார். இப்ப‌டி மூன்றாம் உல‌க‌ நாடுக‌ளின் வ‌ள‌ங்க‌ளையும் இய‌ற்கையையும் வரைமுறையில்லாமல் தனியார்மயம் என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்கின்றன. அதை மறைக்க 'சுற்றுச்சூழ‌லைக் காப்போம்' என்றும் 'காடு வளர்ப்போம்' என்றும் பிர‌ச்சாரங்களுக்கு பிச்சையிடுகின்ற‌ன.

சுற்றுச்சூழ‌லைப் ப‌ற்றிய பொறுப்புணர்வு ந‌ம் ஒவ்வொருவ‌ருக்கும் இருக்க‌ வேண்டிய‌து.மாசற்ற உலகை நமக்கு பின்வரும் சந்ததியினருக்கும் விட்டுச் செல்வது நமது சமூகக் கடமை. அது ம‌ர‌க்க‌ன்றை வாங்கி ந‌டுவ‌து அல்ல‌து குளோப‌ல் வார்மிங்காக‌ ஒரு ம‌ணி நேர‌ம் மின்சார‌த்தை நிறுத்துவ‌து மட்டுமே முடிவும் அல்ல, தீர்வும் அல்ல. என் ஜி ஓ நிறுவ‌ன‌ங்க‌ளின் முக‌மூடியை கிழிப்ப‌துட‌ன், ப‌ன்னாட்டுக் க‌ம்பெனிக‌ள் தங்களது ப‌சிக்காக‌, ந‌ம‌து சொத்துகளை க‌ப‌ளீக‌ர‌ம் செய்வ‌த‌ற்கு எதிராக‌ அணி திர‌ள்வ‌தில்தான், அந்த பொறுப்புணர்வும் கடமையும் முழுமையடைய ‌ முடியும்.

Tuesday, February 15, 2011

"க‌ம்யூனிச‌மும் குடும்ப‌மும்"

பேஸ்புக்கில், எனது சீனியரின் சுவரில் எழுதப்பட்டிருந்தது ஒரு வாசகம்...
"ஒரு பெண்ணிடம் எதைக்கொடுக்கிறீர்களோ அதையே இருமடங்காக பெறுவீர்கள்" என்பது போல.அதாவது, '‌ஒரு பெண்ணிடம் வீட்டைக் கொடுத்தால் அதை இனிய இல்லமாக்கித் தருவாள், மளிகைச்சாமான்களைக் கொடுத்தால் உணவாக்கித் தருவாள், குப்பைக்கூளத்தைக் கொடுத்தால் அதையும் இருமடங்காக உங்களுக்கே தருவாள்' என்பதாக.

"பெண் என்ப‌வ‌ள்" என்று ஆர‌ம்பிக்கும் எந்த‌ விள‌க்க‌ங்க‌ளிலும் என‌க்குப் பெரிதாக் ஆர்வ‌ம் இல்லாவிட்டாலும், இதில் ஒரு விஷ‌ய‌ம் பெரிம்மாவை,அம்மாவை, ஆயாவை, அத்தைகளை அவ‌ர்க‌ள‌து வாழ்க்கைமுறையை நினைவூட்டிய‌து. ஆயா ஒரு நிமிட‌ம் கூட‌ சும்மா இருந்து பார்த்த‌தில்லை. அவ‌ர‌து கைக‌ளிலிருந்து யாருக்காவது ஏதாவ‌தொன்று பிற‌ந்துக்கொண்டே இருக்கும், எம்ப்ராய்ட‌ரி போட்ட‌ கைக்குட்டைக‌ள், ஹெம்மிங் செய்ய்த‌ ச‌ட்டைக‌ள், பித்தான்க‌ள் சீர் செய்ய‌ப்ப‌ட்ட‌ துணிக‌ள், டெலிஃபோன்களுக்கான வூலன்விரிப்புகள், வாயில்தொங்கல்கள் என்று இந்த லிஸ்ட் நீளும்.

அதே போல, பெரிம்மாவும் அம்மாவும்...விடுமுறை நாட்களெனில் எங்களுக்கான தின்பண்டங்கள் செய்து டப்பாக்களில் அடுக்கி வைப்பது,ஊறுகாய் செய்வது, வத்தல் செய்வது, அலமாரிகளை தூசு தட்டுவது, துணிகளுக்கு கஞ்சி போட்டு(ஹா...எவ்வளவு லாங் ப்ராசஸ் அது, அந்த புடவைகளுக்கிடையே ஒளிந்து விளையாடுவது ஜாலி !!) என‌து ச‌ட்டைத்துணிக‌ளில் ஓவியங்கள் வ‌ரைவ‌து என்று அன்றாட‌ப்ப‌ணிக‌ளுக்கிடையில்தான் இந்த‌ லிஸ்ட்.


என்றைக்காவ‌து சகுந்த‌லா அம்மா வ‌ராவிட்டால் பெரிம்மாவின் கைகளோ, அம்மாவின் கைக‌ளோ ஊரிலிருந்து நீண்டு வ‌ந்து சாப்பாட்டை செய்து வைத்தாலென்ன என்று நினைத்துக் கொள்வேன். நான் மட்டும் இருக்கும்போது, ஒன்றுமே இல்லாதது போல எனக்குத் தோன்றும் வீடு, அவர்கள் வந்துவிட்டாலோ அட்சயப்பாத்திரமாகி விடும். என‌க்கும், குட்டிக்கும் எந்த‌ நுண்க‌லைக‌ளையும் க‌ற்க‌ வேண்டிய‌ தேவையும் இருக்க‌வில்லை. ஆர்வ‌மும் இல்லை. முன்பெல்லாம் ஊரிலிருந்து வந்தால் ஊறுகாய் முக்கியமான இறக்குமதி. இப்போது இருக்க‌வே இருக்கிற‌து, ம‌த‌ர்ஸ் ரெசிப்பி ஊறுகாய் வ‌கைக‌ள். தின்பண்டங்கள், சிப்ஸ் வேண்டுமா, அருகிலிருக்கிறது அடையார் ஆனந்தபவன்.

"ஆனால், முத‌லாளித்துவ‌ம் இதையெல்லாம் மாற்றிவிட்ட‌து. முன்பு எவையெல்லாம் குடும்ப‌த்தின் ம‌டியில் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌வோ, இன்று அவையெல்லாம் பெரிய‌ அளவில் ப‌ட்ட‌றைக‌ளிலும், தொழிற்கூட‌ங்க‌ளிலும் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌. பெண், இய‌ந்திர‌த்தால் புறந்த‌ள்ள‌ப்ப‌ட்டுவிட்டார்." என்று க‌ம்யூனிச‌மும் குடும்ப‌மும் என்ற க‌ட்டுரையை, 1920 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை வாசித்த‌போது தோன்றிய‌ கொசுவ‌த்திதான் மேலே இருப்ப‌து.

இது உண்மைதான் என்றாலும், குடும்ப‌த்தில் ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்லும்போது யாருக்கு இத‌ற்கெல்லாம் நேரம் இருக்கிறது?

ஒருமுறை, நாங்க‌ள் இதுவ‌ரை வாழ்க்கையில் ச‌ந்தித்த‌ டேமேஜ‌ர்க‌ளைப் ப‌ற்றியும், அவ‌ர்க‌ளிட‌மிருந்து க‌ற்றுக்கொள்ள‌ வேண்டிய‌வ‌ற்றை/ க‌ற்றுக்கொள்ள ‌கூடாத‌வ்ற்றை ப‌ற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். இர‌ண்டு குழ‌ந்தைக‌ளையும் வைத்துக்கொண்டு, வெற்றிக‌ர‌மான‌ மேனேஜராக‌வும் இருந்த‌ ஒரு பெண்தான் ரோல்மாட‌ல் என்றாள் வ‌ந்திதா. அவ‌ர் குழ‌ந்தைக‌ளை எட்டு ம‌ணிக்கு ப‌ள்ளியில் விட்டுவிட்டு, அலுவ‌ல‌க‌ வேலைக‌ளை முடித்துவிட்டு மூன்று ம‌ணிக்கு திரும்ப‌ காரில் சென்று அவ‌ர்களை வீட்டில் விட்டுவிட்டு க‌வ‌னிப்பார். ஆனால், எதிலும் ஸ்லிப் ஆன‌தில்லை. இவை ந‌டுவில் குழ‌ந்தைக‌ளுக்கான‌ கோச்சிங் கிளாஸ்க‌ள். இதை கேட்கும்போதே உங்க‌ளுக்கு த‌லை கிறுகிறுக்கிற‌தா? என‌க்கும்.
எல்லாவ‌ற்றிலும் அவ‌ர் சூப்ப‌ர்வும‌னாக‌ திக‌ழ்ந்த‌தே அவ‌ரை என‌க்குப் பிடிக்க‌க் கார‌ண‌ம்,நானும் அப்ப‌டியே இருக்க‌ விரும்புகிறேன் என்றும் கூறினாள் வ‌ந்திதா.


வ‌ந்திதாவுக்கும் இர‌ண்டு குழ‌ந்தைக‌ள். அவ‌ளும் அவ‌ர்க‌ளுக்காக‌ ச‌மைக்கிறாள். குழந்தைக‌ளை டிராப் செய்து பிக்க‌ப் செய்கிறாள். அவ‌ர்கள் வீட்டிலிருக்கும் போது அவ‌ளும் வீட்டிலிருந்து க‌வ‌னித்துக் கொள்கிறாள். நடுஇரவில் வீட்டிலிந்தபடியே மீதி வேலையை முடிக்கிறாள். க‌ண‌வ‌ர் ச‌மைய‌லில் ஏதாவ‌து உத‌வி செய்ய‌ வ‌ந்தால் என‌க்குப் பிடிக்காது என்ப‌தும் அவ‌ள‌து கூற்று.மேலாக‌ப் பார்த்தால் இதில் த‌வ‌றொன்றும் இல்லை என்றே தோன்றினாலும், முத‌லாளித்துவ‌ம் வீட்டு வேலைக‌ளைக் குறைக்காம‌ல் மேலும் மேலும் பார‌த்தைய‌ல்லவா சும‌த்துகிற‌து?

இதைச் சொன்னால், ச‌ம்பாதிப்ப‌து ஆண்க‌ளில் வேலை, குடும்ப‌த்தைப் ப‌ராம‌ரிப்ப‌து பெண்க‌ளின் வேலைதானே, நாம்தானே அதில் புகுந்து நானும் ச‌ம்பாரிக்கிறேன் என்று வ‌ருகிறோம், இதில் அவ‌ர்க‌ள‌து உத‌வியை எப்ப‌டி எதிர்பார்ப்ப‌து என்றும் சொன்னாள்.




(image courtesy: குருத்து )

ஏதோ ஒரு கால‌க‌ட்ட‌த்தில் இந்த‌ அமைப்பு உத‌வியாக‌ இருந்தாலும் இன்றும் அதுவே சரியாகுமா? அப்ப‌டியே குழந்தைக‌ளை ப‌ராம‌ரிக்க‌ க்ரெச்சோ, ச‌மைய‌லுக்கு ரெஸ்டாரெண்டுக‌ளையோ அல்ல‌து ஆள் வைத்துக்கொள்வ‌தோ என்றாலும் அனைவ‌ருக்கும் அது ஒத்துவ‌ருவ‌தில்லை. காசு இருப்ப‌வ‌ர்க‌ளால் ம‌ட்டுமே இவ‌ற்றை அனுப‌விக்க‌ முடியும்.ச‌லிப்பூட்டும் அன்றாட‌ அலுவல்க‌ளிலிருந்து விடுத‌லையும் அடைய‌ முடியும். ஆனால், பெரும்பாலான‌ பெண்க‌ள் வீட்டிலும் வேலை செய்துக்கொண்டு, வெளியிலும் வேலை செய்துக்கொண்டுதான் என‌து ந‌ண்ப‌ர் ஒருவர் சொல்வ‌து போல‌ 'இர‌ட்டைச்ச‌வாரி' செய்கின்ற‌ன‌ர். அதோடு இவ்வேலைகளுக்கு பணிமதிப்போ சம்பளமோ இல்லை. இவை எல்லாவ‌ற்றிற்கும் மேல், கொஞ்ச‌மும் ம‌ரியாதையோ ம‌திப்போ இல்லாம‌ல் மிதிய‌டி போல‌த்தான் பெண்கள் குடும்ப அமைப்புக்குள் வாழ்கின்ற‌ன‌ர்.

க‌ம்யூனிச‌ ச‌மூக‌த்தில் இப்பிர‌ச்சினைக‌ளுக்கெல்லாம் தீர்வுக‌ள் இருக்கின்ற‌ன‌. இவ்வேலைக‌ள் அனைத்தும் ச‌மூகத்தால் ப‌கிர்ந்துக்கொள்ள‌ப்ப‌டுகின்றன‌. கூட்டுச‌மைய‌லில் யார் வேண்டுமானாலும் ப‌ங்கேற்று சாப்பிட‌ முடியும். பொது ச‌ல‌வை நிலைய‌த்தில் துணிக‌ள் துவைத்து ச‌ல‌வை செய்து த‌ர‌ப்ப‌டும். உழைக்கும் பெண்ணின் மீது இவ்வேலைக‌ள் க‌ட‌மைக‌ள் என்ற‌ பெய‌ரில் சும‌த்த‌ப்ப‌ட‌ மாட்டாது. வீட்டு வேலைக‌ள் க‌ம்யூனிச‌ச‌மூக‌த்தால் ப‌கிர்ந்துக் கொள்ள‌ப்ப‌டுவ‌தால் பெண்ணுக்கு ஓய்வுநேர‌த்தை ப‌ய‌னுள்ள‌ வ‌கையில் அவ‌ர் செல‌வ‌ழிக்க‌லாம்.

முக்கிய‌மாக,‌ குழ‌ந்தை வ‌ள‌ர்ப்புக்கு, அவ‌ர்க‌ள‌து அறிவு வ‌ள‌ர்ச்சிக்கு அரசே பொறுப்பேற்கும்.இதுவும் முத‌லாளித்துவ‌ ச‌மூக‌த்தில் ஒரு குறிப்பிட்டசாரார் ம‌ட்டுமே அனுப‌விக்க‌க்கூடிய‌தாக‌ இருந்து வ‌ருகிற‌து. உழைக்கும் ம‌க்க‌ளின் குழந்தைக‌ள் புழுதியிலும் ம‌ண்ணிலும் வ‌ள‌ர‌ வேண்டியிருக்கிற‌து. பொதுக்க‌ல்வி ம‌ற்றும் சமூக‌ந‌ல‌த்துறை குடும்ப‌த்திற்கு உத‌வி செய்யும். மொத்த‌த்தில் ச‌மூக‌மே குழ‌ந்தைக்கு உண‌வ‌ளித்து வ‌ள‌ர்த்து க‌ல்வியும் அளிக்கிற‌து. அதே ச‌ம‌ய‌ம், த‌ங்க‌ள் குழ‌ந்தைக்கு க‌ற்பிப்ப‌தில் ப‌ங்கெடுத்துக்கொள்ள‌ விரும்பும் பெற்றோரருக்கும் வ‌ச‌தியுண்டு. மொத்த‌த்தில், க‌ண‌வ‌ன் இல்லாவிட்டால் உல‌க‌மே இருண்டு விட்ட‌து என்ற‌ நிலையில்லாம‌ல், பெண் த‌ன‌து தேவைக‌ளுக்கு ச‌மூக‌த்தைச் சார்ந்து , த‌ன்னால் செய்ய‌ இய‌ன்ற‌ வேலையைச் செய்து வாழ்வார்.

இதை வாசிக்கும்போதே, இது போன்ற‌ அமைப்பு ந‌ம‌க்கும் இருந்தாலென்ன‌ என்று பெருமூச்சு. ச‌மைய‌லைக் குறித்து நானும் க‌வ‌லைக் கொள்ள‌த்தேவையில்லை. அபி, ஒவ்வொரு ம‌திய‌மும் த‌ன‌து பிள்ளைக்கு சோறூட்ட‌ வீட்டிற்குச் சென்று அவசரம் அவசரமாக அலுவலகம் திரும்ப‌வேண்டிய‌தில்லை. குழந்தைகளில் பள்ளி அட்மிசனுக்காக யாரும் அலைய வேண்டியதில்லை. சலிப்பூட்டும் வீட்டுவேலைகளை லிஸ்ட் போட்டு வேண்டா வெறுப்பாக யாரும் செய்ய‌ வேண்டிய‌தில்லை. ஹ்ம்ம்.....நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், கற்பனைக்கெட்டாத கனவு போலவும் ஏன் எனக்குத் தோன்றுகிறது?

என் வாழ்நாளில் கைகெட்டாத கனவு போல தோன்றினாலும் என் மகளின் காலத்திலாவது இந்த குடும்ப அமைப்புமும்,சமூகமும் சாத்தியப்படட்டும்!

இங்கு நான் பகிர்ந்திருப்பது பகுதிதான். அலெக்ஸான்ட்ரா கொலந்தாயின் முழுக் க‌ட்டுரையின் தமிழாக்கத்தை வாசிக்க‌ :


நூல்: க‌ம்யூனிச‌மும் குடும்ப‌மும்

விலை: ரூ 20
வெளியீடு: பெண்க‌ள் விடுத‌லை முன்ன‌ணி
41, பிள்ளையார் கோயில் தெரு, ம‌துர‌வாய‌ல், சென்னை ‍ 95
போன்: 98416 58457

Saturday, February 12, 2011

வேளச்சேரி டைம்ஸ்: ம‌ருந்துக‌ளும், ம‌ருத்துவ‌மும் யாருக்கான‌வை?

ஆயாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோது நடந்தது இது.சளியோடு, இன்னும் சில இன்ஃபெக்சன்களையும் அவர் கொண்டிருந்தார். பரிசோதித்த மருத்துவர், மருந்துகளை எழுதித் தந்தார். எப்போதும் அருகிலிருக்கும் மருந்துக்கடையில் வாங்குவதுதான் வழக்கம். மருந்துக்கடையில், அவர் எழுதித்தரும் அதே மருந்துகள் இல்லையெனில் அதே மருந்துக்கலவையில் மாற்று மருந்துகளைத் தருவார்கள். அது போன்ற சமயங்களில் டாக்டரிடமும் அந்த மருந்துகளை காண்பித்து உறுதிப்படுத்திக்கொள்வதும் வழக்கம். சமயங்களில், சரி என்பார். சில சமயங்களில் வேண்டாமென்றும், அவர் குறிப்பிட்ட‌ அதே மருந்தை வேறு இடங்களில்/கடைகளில் கிடைக்கிறதாவென பார்த்து வாங்கவும் சொல்வார்.இது வழக்கம்தான். (ஆயா, இதய நோயாளியாதலால் அவர் வாழ்வதே மருந்துகளின் உபயத்தில்தான். எனவே, எந்த ரிஸ்க்கும் எடுப்பதில்லை.)

இன்ஃபெக்சன் கல்லீரலில் இருப்பதாகவும், அது மைல்ட் டிபி என்றும் கணித்தார். அதற்காக இரண்டு மருந்துகளை எழுதித்தந்தார். அதோடு, ஒவ்வொரு நாளும் அழைத்து வந்து காண்பிக்கும்படியும்.மருந்துக்கடையில் அவர் எழுதித்தந்த மருந்துகள் சுத்தமாக இல்லை. அந்த மருந்துகள் வருவதில்லை என்றும் கூறிவிட்டார்கள். கண்ணுக்குத் தென்பட்ட மருந்துக்கடைகளில் விசாரித்தேன். அங்கும் இல்லை.சற்று நேரத்தில் அந்த வட்டாரத்தில் இருந்த அனைத்து கடைகளனைத்திலும் விசாரித்து முடித்திருந்தேன். எந்த மருந்து கடைகளில் இல்லை.

அப்படி கிடைக்காத பட்சத்தில், டாக்டரிடம் சொன்னால் அவர் மாற்றி எழுதித்தருவார். ஆனால்,இப்போதோ, அதே மருந்துதான் வேண்டும், அது சாதாரண மருந்துதான், எல்லா மருந்துக்கடைகளிலும் இருக்க வேண்டும் என்றும், பல பெரிய மருத்துவமனைகளில் இலவசமாகவே தரக் கூடியதுதான்,கண்டிப்பாக மருந்துக்கடைகளில் இருக்கும் என்றும் டாக்டர் உறுதியாகக் கூறினார்.. மருந்துக்கடைகளிலேயே, வேறு எங்கு கிடைக்குமென்று விசாரித்து அவர்கள் குறிப்பிட்ட பெரிய பெரிய மருந்துக்கடைகளிலும் விசாரித்தேன். டாக்டர் குறிப்பிட்ட ஒரு மருந்து(மாத்திரை) மட்டும்கிடைத்தது. விலை மிகவும் குறைவாக இருந்தது. பத்து மாத்திரைகள் முப்பது ரூபாய்க்குள்தான் என்று நினைவு. எங்கேயும் கிடைக்காததைப் பார்த்து, அது விலையுயர்ந்த மருந்துகள் போல என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

கிடைத்த மாத்திரையை எடுத்துக்கொண்டு திரும்பவும் டாக்டரிடம் சென்றால்,அந்த மருந்தை தனியாக உட்கொள்ளக் கூடாது என்றும், கண்டிப்பாக இன்னொரு மருந்துடன்தான் உட்கொள்ள வேண்டுமென்றும் வேறு ஏரியாக்களில் முயற்சி செய்யும்படியும் கூறினார். அப்படி என்ன மருந்து அது, ஏழு மலை ஏழு கடல் தாண்டியும் கிடைக்காத மருந்து என்று ஆச்சரியம் மேலிட விசாரித்தப்போது, அது மிகவும் சாதாரண மருந்து, அதாவது விலை மிகவும் குறைவு என்பதால் ஸ்டாக் வைத்துக் கொள்வதில்லை, அதிக விலையுள்ள மருந்துகளுக்கே முக்கியத்துவம் கொடுப்போம் என்ற மாதிரி ஒரு மருந்துக்கடையில் பதில் வந்தது.

அடுத்த ஏரியாவிலும் கிடைக்காமல் வெறுத்துப்போய் மறுபடியும் டாக்டரிடம் வந்து சேர்ந்தேன். மருந்துப் பெயர்களை அடித்துவிட்டு, 'இந்த காம்பினேஷன்லே எந்த மருந்து கிடைத்தாலும் வாங்கிக்கொண்டு வாருங்கள்' என்று எழுதிக்கொடுத்தார். அது ethambutal 800+ வேறு ஒரு மருந்து. நினைவில் இல்லை.கடைசியில் இது மட்டும் வேறு ஏரியாவில் கிடைத்தது. mycobutal 800 & isokin 300. mycobutal 800, ஏழு மாத்திரைகளின் விலை, மொத்தமே ரூபாய் 15க்குள். சாதாரண மருந்து என்று சொன்னதன் அர்த்தம் இப்போது புரிந்தது. வழக்கமாக மருந்து வாங்கும் கடையில் குறிப்பிட்ட மருந்துகளைச் (அவர்களிடம் இல்லையென்றால்) சொன்னால் வரவழைத்து வைத்திருப்பார்கள். அவர்கள் சொல்லும் நாள் சென்று வாங்கிக்கொள்ளலாம். இந்த மருந்துகளை வாங்கி வைக்கும்படி கூறிவிட்டு கடுப்புடன் வந்துவிட்டேன்.

டிபி இன்ஃபெக்சனுக்கான மருந்து ஒரு மருந்துக்கடையில் கிடைக்காவிடில் கூட பரவாயில்லை,எந்த மருந்துக்கடைகளிலுமே கிடைக்காதது...இதில் அப்போலோ போன்ற மருந்துக்கடைகளும் அடக்கம்!அதுவும் விலை குறைந்த மருந்துகளை ஸ்டாக் வைத்துக்கொள்வதில்லை என்ற காரணம் வேறு....எனில், இந்த மருந்துக்கடைகள்தான் யாருக்கு? ஒரு பிராண்ட் இல்லையெனில், இன்னொரு பிராண்ட் மருந்தை எடுத்து தருபவர்கள் சப்ளையே இல்லை என்றும் ஸ்டாக் இல்லையென்றும் கூறுகிறார்களெனில் இந்த மருந்து உற்பத்தி கம்பெனிகளும்தான் யாருக்கு? இதே டாக்டரை பல மெடிக்கல் ரெப்புகள் படையெடுத்து வந்து சந்திப்பதை பார்த்திருக்கிறேன். அவர்கள் இப்படி சாதாரண மருந்துகளை லாபி செய்ய மாட்டார்களா?அரசு மருத்துவமனைகளை விட இந்த தனியார் மருத்துவர்களிடம் செல்லும் சாதாரண மக்களே அதிகம்.அதோடு, மருந்துக்கடைகள் என்பவை விலையுயர்வான மருந்துகளையே வைத்திருப்போம் என்றால் அதற்கு அர்த்தம் என்ன?

இந்த ஆதங்கத்தைக் நண்பரிடம் கொட்டிக்கொண்டிருந்தேன்.அவரது தம்பி மெடிக்கல் ரெப். மருந்துக்கம்பெனிகள்-‍‍>டாக்டர்கள்-> மருந்துக்கடைகள் இவர்களுக்கிடையே நிலவும் உறவு குறித்துக் கூறினார்.மருந்துக்கம்பெனிகள் டாகட்ர்களின் மொத்த‌ டேட்டாபேசை வைத்திருக்கின்றன. மெடிக்கல் ரெப்புகள் டாக்டர்களை சந்தித்து மருந்துகளை பரிந்துரைக்கும்படி கூற வேண்டும். அதோடு, ஆர்டரும் பிடித்து வரவேண்டும். இம்மருந்துக்கம்பெனிகள் மருத்துவர்களோடு உடன்படிக்கை செய்துகொள்கின்றன. சும்மா இல்லை, இரண்டு வருடங்களுக்கு இவர்களின் மருந்துகளை பரிந்துரைத்தால் விலையுயர்ந்த கார், ஐந்து வருடங்களெனில் ஃப்ளாட் என்று பரிசுகள். வாஷிங் மெஷின்கள், ஹோம் தியேட்டர் என்று நீளும் பரிசுப் பட்டியல்கள், வெளிநாட்டுச் சுற்றுலா மற்றும் அவர்களது கிளினிக்குக்குத் தேவையான எக்யூப்மென்ட்கள் என்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நீளுகின்றன. இந்த மருந்துகளின் உண்மையான விலை கடையில் விற்கப்படும் விலையில் 30 சதவீதம்தான். மெடிக்கல் ரெப்புகளின் சம்பளமோ குறைவு. இப்படி ஆர்டர் பிடித்து வந்தால் அவர்களுக்கும் விதவிதமான பரிசுகள். கடைசியில், சுரண்டப்படுவதோ அப்பாவி நோயாளிகள்தான்.

இந்தியாவில் மருத்துவத் துறை வளர்ந்து வருகிறது என்று அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள்,அதற்கேற்றவாறு உலகின் பல மூலைகளிலிருந்தும் இங்கு வந்து சகல வித நோய்களுக்கும் சிகிச்சை பெற்று முகம் மலர சிரிக்கும் குழந்தைகள், ஆபரேஷன் செய்த தடமே இல்லாமல் மூட்டுவலி குணமாகும் மாயம், மெடிக்கல் டூரிசம்...... இப்பெருமைமிகு இந்தியாவில்தான் மலேரியா காய்ச்சலால் அதிகம் பேர் உயிரிழக்கிறார்கள்.( அதிகம் பேர் என்றால் தென்கிழக்கு ஆசியாவிலேயே 70 சதவீதம்.)போலியோவை இன்னும் முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. பெண்கள், குழந்தைப் பிறப்பின்போது எமர்ஜென்சி உதவி இல்லாமல், அவசியமின்றி உயிரிழக்கிறார்கள்.

எனில்,ரன்பாக்ஸிகளும் கேடிலாக்களும் கேஃபிலாக்களும் அப்பாவி நோயாளிகளின் பிணி தீர்க்கவா மருந்துகளைத் தயாரிக்கின்றன?சாதாரண மக்களுக்கா? சாதாரண மக்களுக்கு வரும் சாதாரண நோய்களுக்கா?

Sunday, January 16, 2011

பொங்கலோ பொங்கல்!

எப்போதிலிருந்து நாம் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றிக் கேள்விப்பட ஆரம்பித்தோம்? 97? அல்லது 98? விவசாயத்திற்கான உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கத் துவங்கியதும், அப்படி உற்பத்தியான பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்ததும் எப்போதிலிருந்து?

உலக வங்கியின் நிர்பந்தத்திற்காக தங்கள் கொள்கைகளை மாற்றி மான்சான்ட்டோவையும்,சின்ஜென்டாவும் இன்னும் சில விதை வங்கிகளும் இந்தியாவுக்குள் நுழைந்தன.இந்த கார்ப்பரேட் விதை வங்கிகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தன. கார்ப்பரேட் கம்பெனிகளின் விதைகள் மறுஉற்பத்திக்கு உதவாதவை. பிரத்யேக உரங்களை, பூச்சிகொல்லிகளை கோருபவை.அதுவரை, உற்பத்தியிலிருந்து விதைகளை சேமித்து வந்த நிலை மாறி விவசாயிகள் மொத்தமாக இந்த கார்ப்பரேட் விதைகளுக்கு அடிமையாக நேர்ந்தது. விதை சேமிப்பு என்பது விவ‌சாயிகள் கையிலிருந்து, கார்ப்பரேட் கம்பெனிகள் கைகளுக்கு தாராளமயமாக்கல் மூலமாகவும் உலகமயமாக்கல் மூலமாகவும் மாறியது.

இந்த விதைகளை உபயோகித்தால் அதற்கான உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் உபயோகப்படுத்த வேண்டும்.இத‌னால் சுற்றுபுற‌ சூழ‌ல் மாச‌டைந்ததோடு ஒரே மாதிரியான பயிர் விளைச்சலால் மற்ற பயிர்களை விளைவிக்க முடியாமல் போயிற்று. மேலும், பல விதைகள் இதற்கு முன் சோதனைக்குட்படுத்தப்படாதவை.முதன்முறையாக ப‌யிராக்க‌ப்ப‌ட்ட‌போது தோல்வியையே கொடுத்தன‌. மான்சான்ட்டோ விதைக‌ள் மூல‌ம் பிடி காட்ட‌ன் ப‌யிராக்க‌ப்ப‌ட்ட‌ போது,ஒர் ஏக்க‌ருக்கு 200 கிலோவுக்கும் குறைவான‌ அறுவடைதான் கிடைத்த‌து. மான்சான்ட்டோ க‌ம்பெனியால் சொல்ல‌ப்ப‌ட்டதோ ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ.இதே போல, மான்சான்டோவின் ஹைபிரிட் சோள‌த்தை ப‌யிரிட்ட‌ விவ‌சாயிக‌ள் எக்க‌ச‌க்க‌ ந‌ஷ்ட‌த்தை ச‌ந்திக்க‌ நேரிட்ட‌து. சோயாவை பயிரிட்டவர்களுக்கும் இதே நிலைதான்.

விதைகளுக்காக செலவு செய்ய வேண்டிய நிலையும், நஷ்டமும் விவசாயிகளை மீளமுடியாதக் கடனுள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளியது. புதுக்கடன்கள் பெறமுடியாதவர்கள் தனியார்களிடம் கடன் பெற்றனர். தங்கள் சிறுநீரகங்களை விற்றும் கடனடைக்க இயலாமல் விவசாயிகள் - உலகமயமாக்கப்பட்ட சூழலில் வாழ முடியாத விவசாயிகள் - தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். விதைக‌ளுக்காக‌ க‌ம்பெனிக‌ளிட‌ம் கையேந்திய‌ விவ‌சாயிகளின் வாழ்க்கையை கார்ப்ப‌ரேட் க‌ம்பெனிக‌ள் கொள்ளைய‌டித்த‌ன. பலியான விவசாயிகளில் பெரும்பான்மையினர் சிறு விவசாயிகள் மற்றும் பெரும் கடன்சுமை கொண்டவர்கள்.

இந்த‌ உலகமயமாக்கலுக்கும், விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலைக்கும் இடையிலிருக்கும் உற‌வை நம‌து அர‌சு புரிந்துக்கொள்ளாதது போல நடிக்கிறது. மின்சார‌த்தை இல‌வ‌ச‌மாக‌க்கொடுத்தும், க‌ட‌ன்க‌ளை த‌ள்ளுப‌டி செய்தும் கூட தொடரும் விவ‌சாயிகளின் த‌ற்கொலைக்கான‌‌ கார‌ண‌ங்க‌ளை தேடுகிற‌து.மாறிவரும் சுற்றுசூழலையும், காலநிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறது. மாறாக,விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலையை அறிவிய‌ல் பூர்வ‌மாக‌ ஆராய முற்ப‌டுகிற‌து. பொருளாதார‌ கார‌ண‌ங்களை புறம் தள்ளிவிட்டு விவசாயிகளின் குடிப்பழக்கமே காரணம் என்ற முடிவுக்கு வருகிறது. விவசாயக்கொள்கைகளை மாற்றுவதை விட்டுவிட்டு விவசாயிகளின் மனப்போக்கை மாற்ற பரிந்துரைக்கிறது!! அவ‌ர்க‌ளுக்கு த‌ன்ன‌ம்பிக்கையும் சுய‌ ம‌ரியாதையும் அதிக‌ரிக்க‌ வொர்க் ஷாப்க‌ள் கூட பல மாநில‌ங்க‌ளில் ந‌ட‌ந்ததாக செய்திகளைப் வாசித்திருப்போம்.

த‌னியார் ம‌ய‌த்தினாலும், உல‌க‌ம‌ய‌மாக்க‌லாலும் விவ‌சாயிக‌ள் த‌ங்க‌ள‌து அடையாள‌த்தை இழ‌ந்துவிட்ட‌ன‌ர். உல‌குக்கு உண‌வு வ‌ழ‌ங்கும் பெருமைக்குரிய‌ ப‌ணி என்று ந‌ம‌து அறுவடைத்திருநாள் வாழ்த்த‌ட்டைக‌ளில் வித‌வித‌மான‌ வார்த்தைக‌ளில் உழ‌வ‌னைப் போற்றி, வாழ்த்திய‌ நிலை போய், இன்று, அவ‌ர் பன்னாட்டு கம்பெனிகளிடம் விதைகளை வாங்கும் வாடிக்கையாளராக மாற்றப்பட்டுவிட்டார். ப‌சுமைப் புர‌ட்சியால் த‌ன்னிறைவு அடைந்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளும் அர‌சு விவ‌சாயிக‌ள் மீதுதான் போர் தொடுக்கிறது. ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாயிகளின் சதவீதம் வளர்ந்து வருகிறது. உதவியற்று நிற்கும் விவசாயிகளின் மீது ப‌ழியைப் போடுகிற‌து.

சில‌வார‌ங்க‌ளுக்கு முன் வெங்காய‌த்தின் விலை நினைத்துப்பார்க்க‌ முடியா வ‌ண்ண‌ம் விலையுய‌ர்ந்த‌து. ஏன்? சிலர் வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதால்தான் என்றும் மாறிவரும் காலநிலை அல்லது பெய்த மழைதான் உற்பத்தியைக் கெடுத்தது என்றும் பல காரணங்கள் கூறப்பட்டது. உச்ச‌ப‌ட்ச‌மாக‌, ஏற்றும‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌ வெங்காய‌த்தை பாகிஸ்தான் திருப்பித்த‌ர‌ ம‌றுத்துவிட்ட‌து என்றும் ஒரு ப‌க்க‌ம் செய்தி வந்தது.சாதார‌ண‌ ம‌னித‌ன் வெங்காய‌த்தை வாங்க‌ இய‌லாத அதே நாட்டில்தான் - சிலநாட்கள் முன்பு ராக்கெட்டும் விட‌ப்ப‌ட்ட‌து. விலையேறியது வெங்காயம் மட்டுமில்லை.... கத்தரிக்காய், வெண்டைக்காய்,பாகற்காய்,உருளை, தக்காளி ,கேரட், கொத்தமல்லிக்கூடத்தான். சாமானிய‌ ம‌னித‌னுக்கு உண‌வு என்ப‌து ஒரு ல‌க்ஸ‌ரி போலாகிவிட்ட‌து.

இதில்,விவசாயிகளை - விவசாயத்தை ஒழித்துவிட்டு பொங்க‌லும், சங்கராந்தியும், உழ‌வ‌ர் திருநாளும் யாருக்கு? உழ‌வ‌ர்க‌ளுக்கா?!

(செய்திகள் : இணையத்திலிருந்து)

Wednesday, January 12, 2011

உயிரைப் பணயம் கேட்கும் மெட்ரோக்கள்

அலுவ‌ல‌க‌ம் செல்லும் வ‌ழியில் மெட்ரோ ரயிலுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 'இங்கேதான் மெட்ரோ ரயில் ட்ராக் வரப்போகுது, இப்பவே வாங்கி போட்டீங்கன்னா நல்லா விலையேறிடும்‌' என்று ஐந்து வருடங்களுக்கு முன் தரகர் காட்டிய கல்லும் மண்ணுமான இடம், இன்று தார்சாலையும், தூண்களுமாக இருக்கிறது. சைன் போர்டுகள் அவ்வப்போது இடம் மாறும். டேக் டைவர்சன்கள் முளைக்கும். அங்குமிங்கும் ஓடியா‌டி சின்ன‌ஞ்சிறு ம‌னித‌ர்க‌ள் அந்த‌ பிர‌மாண்டமான‌ பால‌த்தை எழுப்பிக் கொண்டிருப்பார்க‌ள். புரியாத மொழியில் அவர்களுக்குள் க‌த்திக் கொள்வார்கள். ஒருசிலர் தலையில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் தொப்பி அணிந்திருப்பார்கள். சாயங்கால வேளைகளில் ஃப்லோரசன்ட் நிற கோட் அணிந்திருப்பார்கள். கண்முன்னால் அந்த பாலம் உயிர் பெற்று எழுவதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே கடந்து செல்வேன்.

ஒரு நாள் காலை, எட்டு மணி இருக்கும். பலநூறு அடிகள் மேலே, தூணின் ஓரத்தில் அமர்ந்தபடி வெல்டிங் வேலை செய்துக்கொண்டிருந்தார் ஒருவர். கண்களில் கருப்புக்கண்ணாடி. அதைத்தாண்டி வேறு எந்த பாதுகாப்பு கவசங்களோ உடைகளோ இல்லை. குறைந்தபட்சம் தலைக்குக் கூட ஹெல்மெட் போன்ற கவசங்களை அவர்கள் அணிந்திருக்கவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும்போதே இன்னொருவர் மிகவும் சாவதானமாக ஏதோ சொன்னபடி அவர‌ருகே உதவி செய்ய வந்தார். அவரும் எந்த விசேஷ பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்கவில்லை. பாதுகாப்பு குறித்த எந்த அச்சமும் இல்லாமல், ஒருவர் கம்பிகளை பிடித்துக்கொள்ள இன்னொருவர் வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். பார்க்கும் யாருக்கும் வயிற்றில் சொரேர் நிச்ச‌ய‌ம்!

ஒருநிமிடம், அவர்கள் நழுவினாலோ அல்லது சறுக்கினாலோ பிடித்துக் கொள்ளவோ, தடுக்கவோ ஏதுமில்லை. கீழே தார்சாலை. அவர்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற தொப்பி வெயில்/மழையைத்தவிர வேறு எதற்கும் உதவாது.கரணம் தப்பினால் மரணம் போல்தான்.

அடுத்த‌ சில‌ வார‌ங்க‌ளில், அவ‌ர்க‌ள் வெல்டிங் வேலையை இன்னும் சில‌ தூண்க‌ளுக்க‌ப்பால் ந‌க‌ர்த்திச் சென்றிருந்தார்க‌ள். என‌க்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் கீழே இருந்தவர்களிடம் உரையாடிய‌ போது, இந்த‌ வேலை அவ‌ர்க‌ளுக்கு ப‌ழ‌க்க‌மான‌து என்றும் அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்றும் அலட்சியமாக சிரித்துக்கொண்டே கூறினார். அந்த‌ பீகார்/ஒரிஸ்ஸா இளைஞ‌ர்க‌ளுக்கு க‌லைஞ‌ர் காப்பீட்டு திட்ட‌ம் இருக்குமா? அவர்களது அடிப்படை பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?


எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாம‌ல் ந‌ட‌க்கும் அச‌ம்பாவிதத்தை விப‌த்தென்று சொல்ல‌ முடியுமா? சிலியின் சுர‌ங்க‌த்தில் நிக‌ழ்ந்த‌தை, நோக்கியாவில் அம்பிகாவுக்கு நிக‌ழ்ந்த‌தை விப‌த்தென்றுதானே சொல்கிறார்கள்!

அந்த‌ ப‌ட்டிய‌லில் க‌ட‌ந்த‌ ஞாயிறன்று மும்பை- மாதுங்காவில் புதிதாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்டுக்கொண்டிருந்த க‌ட்டிட‌த்தில் நிக‌ழ்ந்த
லிஃப்ட் 'விபத்தையும்' சேர்த்துக்கொள்ளலாம். ஐந்து தொழிலாளிக‌ள் ப‌லியாகி இருக்கிறார்க‌ள். ஒருவ‌ர் காய‌ம‌டைந்துள்ளார். இந்த படுகொலைக்குப் பொறுப்பேற்க‌ வேண்டிய ந‌‌க‌ராட்சி த‌லைவ‌ரும், பொதுப்ப‌ணித்துறையின‌ரும், SRA அதிகாரியும் ஒருவ‌ரையொருவ‌ர் கைக்காட்டிய‌ப‌டி இருக்கிறார்க‌ள். இதில் கொடூரம் என்ன‌வென்றால், அது த‌ற்காலிக‌ லிஃப்ட் தொழிலாளிகள் உபயோகிக்க மட்டும். க‌ட்டிட‌த்திற்குச் சொந்த‌மான‌ லிஃப்டில், அங்கேயே வேலை செய்யும் தொழிலாளிக‌ள் செல்ல‌க்கூடாது போல!

பாதுகாப்பு ஏற்பாடுக‌ளைச் செய்யும் செல‌வுக‌ளில் மிச்ச‌ம் பிடிக்க‌லாம் என்ற‌ முத‌லாளிக‌ளின் லாபநோக்கும், மூன்றாம் உலக நாட்டு மக்களின் மீதான அலட்சியம்தானே போபால் ப‌டுகொலைக்கு மூல‌க்கார‌ண‌ம்? அதே லாப‌வெறியும், அல‌ட்சிய‌மும்தான் மாதுங்கா கொலைக்கும் கார‌ண‌ம்.

இது எங்கோ யாருக்கோ ந‌ட‌ந்த‌துதானே என்று எண்ண‌ வேண்டாம். இது போன்ற‌ செய்திக்கு வ‌ராத‌ 'விப‌த்துக‌ளும்' ம‌ர‌ண‌ங்க‌ளும் எண்ண‌ற்ற‌வை. புதிது புதிதாக கட்டிடங்கள் முளைக்கும் ந‌ம‌து ஊரில் கூட‌ க‌யிறால் க‌ட்டிய‌ ஏணிக‌ளில் அம‌ர்ந்துக்கொண்டு சுவ‌ர்க‌ளில் தொங்கிய‌ப‌டி வ‌ண்ண‌ம‌டிக்கும் இளைஞ‌ர்க‌ளை பார்த்திருக்க‌லாம். மேலே இருப்ப‌வ‌ர் அந்த‌ க‌யிற்றினாலான‌ ஏணியை பிடித்துக்கொள்ள‌ ந‌டுவில் இருக்கும் க‌ட்டையில் எந்த‌ பிடிமான‌மும் இல்லாமல் அம‌ர்ந்துக்கொண்டு வ‌ண்ண‌ம‌டிப்பார், இன்னொருவ‌ர். வ‌ண்ண‌மடிக்கும் பிர‌ஷ் கூட‌ தொழிலாளியே வாங்கிக்கொள்ள‌ வேண்டிய நிலைதான் பெரும்பாலும் - இதில் அவரது பாதுகாப்பு குறித்து என்ன யாருக்கு என்ன கவலை? முறையான‌ பாதுகாப்பு இல்லாமல்,அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொழிலாளிகளை பிழிந்தெடுக்கும் இத‌ற்குப் பெய‌ர் "சுர‌ண்ட‌ல்" என்றும் அழைக்கலாம் அல்லது "நகரமயமாக்கல்" என்றும் அழைக்கலாம்.

இப்ப‌டி உழைப்பை, உயிரை உறிஞ்சியெடுத்த‌ பால‌ங்க‌ள் மீதுதான் மெட்ரோக்க‌ள் ஓடுகின்ற‌ன‌. சாலைகள் இணைக்கப்படுகின்றன.க‌ட்டிட‌ங்க‌ள் வானளாவ உய‌ர்ந்து நிற்கின்ற‌ன. ந‌க‌ருக்குப் பெருமையைத் த‌ருகின்ற‌ன.
ம‌லிவாக‌க்கிடைக்கும் ம‌னித‌ வ‌ள‌த்தின் விய‌ர்வையில் ந‌க‌ர‌ங்க‌ள் ஜொலிக்கின்ற‌ன‌. வேலைவாய்ப்பென்று வருபவர்களை விட்டில்பூச்சிகளாய் கொல்கின்றன!