Monday, February 21, 2011

மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான்; மரத்தை வெட்டியவன்...?

தூர்தர்ஷனில் மரத்தை காப்பாற்ற ஒரு விளம்பரம் வரும்.ஒரு சிறுமி மரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு வெட்ட விடவே மாட்டாள். நானும் அப்போது சிறுமியாக இருந்ததால், எங்காவது மரம் வெட்டினால் அச்சிறுமியைப் போல செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். பெரும்பாலும், மின்சார வாரியத்திலிருந்து வந்து எங்கள் தெருவிலிருக்கும் தூங்குமூஞ்சி மரங்களின் கிளைகளை சீவிவிட்டு செல்வார்கள். அப்படி உண்மையாகவே மரங்களைக் காப்பதற்கா நடந்த சிப்கோ இயக்கத்தை பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

தற்போது, ஐடியா மொபைலை உபயோகித்து மரங்களை காக்க விளம்பரங்கள் வருகின்றன. 'மரம் வளர்ப்போம்', 'ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினால் வீட்டுக்கே மரக்கன்று வரும்', 'மரம் வளர்ப்பதை ஊக்குவிப்போம்' என்று சமீப காலங்களில் அதிகமாக மரம் வளர்ப்பதைப் பற்றி விளம்பரங்களைக் காண முடிகிறது. சமூக ஆர்வலர்கள், இத்தனை மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன் என்றும் எத்தனை மரம் நடும் கேம்பெய்ன்களில் பங்கேற்றிருக்கிறேன் என்றும் புள்ளிவிவரப் பேட்டிகள் தருகிறார்கள். பார்ப்பவர்களை, ஏதோ அவர்கள்தான் காடுகளை அழித்து விட்டதைப் போல குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்கிறார்கள்.


சிலமாதங்கள், முன்பு ஏதோ ஒரு டிவியில் காலைமலர் பார்த்தேன். அதில் பேசிய ஒருவர், இந்தத் தலைமுறைதான் காடுகளை அழிக்கிறது என்பது போல பேசினார். நகரவாசிகளும், டவுன்வாசிகளும் மொட்டை மாடிகளிலும், பால்கனிகளிலும் தொட்டிகளில் செடிகொடிகளையும், கேக்டஸ்களையும் வளர்த்து குற்றவுணர்ச்சியை போக்கிக் கொள்ளுகிறார்கள். சமூகத்திற்கு நல்லது செய்த திருப்தியைத் தேடிக்கொள்கிறார்கள்.

இன்னும் பல கேம்பெய்ன்கள் இருக்கின்றன - எனர்ஜியை சேமிப்போம், தண்ணீரை சேமிப்போம், குளோபல் வார்மிங். குளோபல் வார்மிங்குக்காக ஒரு மணிநேரம் மின்சாரம் இல்லாமல் இருப்பது என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது. இதில் பங்கேற்ற‌ பலரும் தம் மனசறிய ஒரு செடியைக் கூட பிடுங்கி யெறிந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், இந்த குளோபல் வார்மிங்கிற்கும், காடுகளை அழித்ததற்கும் நாம்தான் முக்கிய காரணம் என்பது போல இந்தப் பிரச்சாரங்கள் நம்மை எண்ண வைக்கின்றன. அன்றாடம் மின்வெட்டோடும், வீட்டிற்கு இரண்டு குடம் என்று அளந்து வரும் மெட்ரோ தண்ணீரிலும் ஏற்கெனவே அவதியோடு வாழும் அப்பாவி பொதுமக்களிடம் எதற்கு இந்தப் பிரச்சாரம்? எதற்கு இந்த உறுதிமொழிகள்?

எண்ணெய் கம்பெனிகளும், காஸ் கம்பெனிகளும் இயற்கை வளங்களை அராஜகமாகக் கொள்ளையடிப்பதோடு, சுற்றுச்சூழலையும் மாசுப்படுத்துகின்றன. சென்னையின் ஹுண்டாய் நிறுவனம், ஒரு நிமிட‌த்திற்கு ஒரு கார் வீத‌ம் நாள் முழுக்க‌ இடையறாது உற்ப‌த்தி செய்கிற‌து.சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விவசாயநிலங்கள் ஏக்கர் ஏக்கராக அழிக்கப்படுகின்றன. டௌ கெமிக்கலின் கழிவுக‌ள் இன்னமும் அகற்றப் படாமல் இருக்கின்றன. மாசடைந்த அந்த நீரைத்தான் பொதுமக்கள் இன்னமும் உபயோகப் படுத்துகிறார்கள். எஃகு நிறுவனங்களும் ஆலைகளும் நிலத்தடி நீரை மாசுப்படுத்துகின்றன.

ஆனால், இந்நிறுவ‌ன‌ங்க‌ளுக்குத்தான் க‌ட‌ன்க‌ளோடு, ச‌லுகைக‌ளும் அரசால்வாரி வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. மின்சார‌ உப‌யோக‌ம் குறித்து எந்த‌க் க‌வ‌லையும் இவ‌ர்க‌ள் கொள்ள‌த் தேவையில்லை. அதோடு வரிவிலக்குகளும் உண்டு.நோக்கியாவுக்கு வ‌ழ‌ங்கியுள்ள‌ ச‌லுகைக‌ள் அந்தக் கம்பெனியின் முத‌லீட்டை விட‌ அதிக‌ம்.

இறுதியில், அந்த‌ கம்பெனிகள்தான் ந‌ம‌து எல்லா வ‌ள‌ங்க‌ளையும் கொள்ளைய‌டித்துவிட்டு ந‌ம‌க்கே உப‌தேச‌ம் செய்கின்ற‌ன‌. பொதும‌க்க‌ள்தான் இவ‌ற்றிற்கெல்லாம் பொறுப்பு என்ப‌தைப் போல பிரச்சாரம் செய்கின்றன. தங்களை மதிப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக‌ இந்த‌ பிர‌ச்சார‌ங்க‌ளுக்கு நிதி வ‌ழ‌ங்குகின்ற‌ன‌. ஒருகையால் சுற்றுச்சூழ‌லைப் பாதுகாப்போம் என்று சொல்லிக்கொண்டே ம‌றுபுற‌ம் வ‌ள‌ங்க‌ளைச் சுர‌ண்டுகின்ற்ன‌. ரெட்டி ச‌கோத‌ர்களுக்குத் தாரை வார்க்க‌ப்ப‌ட்ட‌ க‌னிம‌வ‌ள‌ங்க‌ளையும் அதற்காக‌ பாழாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌லைப்ப‌குதிக‌ளையும் பார்த்திருப்போம்.

நாமா காடுகளை வெட்டி அழிக்கிறோம்? மலைகளை, இயற்கை வளங்களை வீணாக்குகிறோம்?

ப‌ன்னாட்டுக்க‌ம்பெனிக‌ளும் த‌ர‌கு முத‌லாளிக‌ளும் த‌ங்க‌ள் லாப‌த்திற்காக‌ செய்யும் ஒவ்வொரு செய‌லுக்கும் நாம‌ல்ல‌வா த‌ண்ட‌னைக‌ளை அனுப‌விக்கிறோம்?அவ‌ர்க‌ள‌து அராஜ‌க‌த்திற்கு, நம்மோடு சேர்ந்து ந‌ம‌து வாரிசுக‌ளும் அல்ல‌வா ப‌லியாகிறார்க‌ள்? த‌னியார் ம‌யமென்றும் தாராள‌ ம‌ய‌மென்றும் ந‌ம‌து நாட்டை ம‌லிவுவிலைக்கு விற்றுவிட்டு நமக்கே நமது குடிநீருக்கு விலை வைத்து அல்ல‌வா விற்கிறார்கள்?

இயற்கையெழில் கெடுகிறதென்று மலைப்பிரதேசங்களில் குப்பைகளைக் கொட்ட வேண்டாமென்று பொதுமக்களை வலியுறுத்துகிற அரசும், என் ஜி ஒ க்களும் டாடாவின் ஆலைகள் மற்றும் சுர‌ங்க‌ங்க‌ளின் க‌ழிவு ம‌லைக‌ளை அக‌ற்ற‌ எந்த‌ நெருக்க‌டியையும் த‌ருவ‌தில்லை. இதுதான் நாட்டின் வளர்ச்சி என்று நம்மை ஏற்றுக்கொள்ள வைப்ப‌தோடு, வளர்ச்சி தேவையெனின் இவ்விளைவுகள் தவிர்க்க இயலாதது என்று நாமே இயல்பாக மனமுவந்து ஒப்புக்கொள்ள வைக்கும் நோக்கங்கள்தான் இவை.

உண்மையாக‌ப் பார்த்தால், இந்த‌ நிறுவன‌ங்க‌ளே குளோப‌ல் வார்மிங்குக்கு பொறுப்பு. ஆனால், என்ன‌ ந‌ட‌க்கிற‌து? ம‌ர‌ம் ந‌டுவோம் என்றும் சுற்றுச்சூழ‌லைப் பாதுகாப்போம் என்றும் பிர‌ச்சார‌ங்களை என் ஜி ஓ நிறுவனங்கள் மூலம் மேற்கொள்கின்ற‌ன. இந்தத் திசைத்திருப்பலால், அப்பாவி பொதும‌க்க‌ளும் இவ்வ‌ள‌ங்க‌ள் முழுவ‌தும் பாழான‌த‌ற்கும் குளோபல் வார்மிங்குக்கும் தாம்தான் கார‌ண‌ம் என்ப‌து போல‌ ம‌றுகுகின்ற‌ன‌ர். ஆனால், ந‌ட‌ப்ப‌து என்ன‌?

போபாலில் ம‌க்க‌ள் த‌ங்க‌ளது இழ‌ப்பீட்டுக்காகவும், நீதி கேட்டும் போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்திக்கொண்டிருக்கும்போது டௌ கெமிக்க‌ல் இஸ்கான் (ISKON Food Relief foundation) என்ற‌ என் ஜி ஓ வோடு ‌ இந்தியாவின் பட்டினியைப் போக்கவும் படிப்பறிவுக்குமான செயலில் இணைந்துள்ள‌து.

இந்த‌ என் ஜி ஓ நிறுவ‌ன‌ங்கள், ஏன் பன்னாட்டுக் க‌ம்பெனிக‌ளின் இரட்டை நிலையை அம்பலப்படுத்தாமல், அவர்களிடமிருந்தே நிதியை பெற்றுக்கொள்கின்றன‌?

நந்திகிராமிலும், குஜராத்திலும் விவசாயிகளிடமிருந்து ஏக்கர் கணக்கில் வேட்டையாடிய‌தோடு, அம்ம‌க்க‌ளின் வாழ்க்கையையும் குலைத்துவிட்டு வித‌ர்பா விவ‌சாயிக‌ளுக்கு உத‌வுவ‌தாக‌ ந‌டிக்கிற‌து டாடா குழும‌ம். (A sustainable ray of hope : The Tata trusts have been working to help improve the agricultural practices of farmers in India)

போபாலில், விஷ‌க்க‌ழிவுக‌ள் இன்றும் கூட முற்றிலும் அக‌ற்றப்ப‌டாத‌ நிலையில் குஜ‌ராத்தில் சுத்த‌மான‌ குடிநீருக்காக தனது நீர் சுத்த‌க‌ரிப்பு சாத‌ன‌த்தை நிறுவியுள்ளது. இவை எல்லாம் யாரை ஏமாற்ற‌?
Dow India Promotes Clean Drinking Water at Kadodara in Gujarat : Donates Fourth Water Purification Facility in Dahej

ப‌ர்மாவில், அண்மைக்காலமாக ப‌ல‌ வ‌ன‌ப்ப‌குதிக‌ள் ஆலைக‌ளுக்காக துரிதமாக அழிக்கப்படுவதாக ‌ ட்விட்ட‌ரில் செய்தியாள‌ர் ஒருவ‌ர் க‌வ‌லையுட‌ன் எழுதியிருந்தார். இப்ப‌டி மூன்றாம் உல‌க‌ நாடுக‌ளின் வ‌ள‌ங்க‌ளையும் இய‌ற்கையையும் வரைமுறையில்லாமல் தனியார்மயம் என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்கின்றன. அதை மறைக்க 'சுற்றுச்சூழ‌லைக் காப்போம்' என்றும் 'காடு வளர்ப்போம்' என்றும் பிர‌ச்சாரங்களுக்கு பிச்சையிடுகின்ற‌ன.

சுற்றுச்சூழ‌லைப் ப‌ற்றிய பொறுப்புணர்வு ந‌ம் ஒவ்வொருவ‌ருக்கும் இருக்க‌ வேண்டிய‌து.மாசற்ற உலகை நமக்கு பின்வரும் சந்ததியினருக்கும் விட்டுச் செல்வது நமது சமூகக் கடமை. அது ம‌ர‌க்க‌ன்றை வாங்கி ந‌டுவ‌து அல்ல‌து குளோப‌ல் வார்மிங்காக‌ ஒரு ம‌ணி நேர‌ம் மின்சார‌த்தை நிறுத்துவ‌து மட்டுமே முடிவும் அல்ல, தீர்வும் அல்ல. என் ஜி ஓ நிறுவ‌ன‌ங்க‌ளின் முக‌மூடியை கிழிப்ப‌துட‌ன், ப‌ன்னாட்டுக் க‌ம்பெனிக‌ள் தங்களது ப‌சிக்காக‌, ந‌ம‌து சொத்துகளை க‌ப‌ளீக‌ர‌ம் செய்வ‌த‌ற்கு எதிராக‌ அணி திர‌ள்வ‌தில்தான், அந்த பொறுப்புணர்வும் கடமையும் முழுமையடைய ‌ முடியும்.

6 comments:

விஜய்கோபால்சாமி said...

ரொம்ப நாள் முன்னாடி நானும் ஒரு பதிவு எழுதுனேன். அதில் பத்திரிகை/செய்தியாளர் மு.வி. நந்தினி அவர்கள் எழுதிய பின்னூட்டம் இதற்கும் பொருந்தி வருவது போல இருக்கிறது.

நந்தினி அவர்களின் பின்னூட்டம்: வணக்கம் விஜய், நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மை. மேல்மட்டத்தில் இருக்கும் எவனோ ஒருவன் சூழலியல் பாதுகாப்பு, புவிவெப்பமயமாதலை தடுத்து நிறுத்தும் முயற்சி என்ற பெயரில் ஜிகினாத்தனமாக இப்படியான விஷயங்களை முன்மொழிகிறார். சூழலியல் பாதுகாப்பு குறித்து எந்த புரிதலுமே இல்லாத நம்மவர்கள் அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடிக்கிறார்கள். ஊடகத்துறையில் இருப்பதால் இதை அழுத்தமாகச் சொல்கிறேன்.
சமீபத்தில் என்டிடீவி “கிரீனதான்” என்ற பெயரில் ஒரு கேம்பைன் நடத்தியது.ப்ரீத்தி ஜிந்தா அதற்கு சிறப்புத்தூதர். பாடல் காம்போஸ் செய்து பெரிய அளவில் விளம்பரம். அந்த பாடல் காட்சியில் ஒரு சிறுமி மரம் நடுவதன் அவசியத்தைச் சொல்ல ரொம்ப பிரயத்தனப்பட்டு பிடுங்கி எறியப்படும் ஒரு செடியை நடுவதாக காட்டுவார்கள். அது அழகுக்குக்காக வளர்க்கப்படும் ஒரு குரோட்டன்ஸ் செடி. நம் மண்ணுக்கு தொடர்பே இல்லாத இறக்குமதியான இந்த செடிகளை நடுவதற்கு நிலத்தை அப்படியே தரிசாக வைத்திருக்கலாம் என்பதுதான் சூழலியல்வாதிகளின் கருத்து.இதை தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்கள். இதைக்கூட உணராமல் பொத்தாம் பொதுவாக ஸ்பான்சர் கிடைக்கிறது,செய்கிறோம் என்பவர்களை சூழலியல்வாதிகள் என்பதா? வியாபாரிகள் என்பதா?

பதிவு முகவரி: http://vijaygopalswami.wordpress.com/2009/03/29/earth_hour/

Shabeer said...

மரத்தை வெட்டியவன்?! ஐயா ?! ராமதாஸ் இல்லேங்கலே?

மதுரை சரவணன் said...

அருமையான பகிர்வு.. வாழ்த்துக்கள்

redwithanger said...

பன்னாட்டு கம்பெனிகள் எங்க வானத்துல இருந்தா குதிக்கின்றன? மதி மயங்கி அந்தப் பொருட்களை வாங்கிக் குவிக்கறதும் அப்பாவி பொது மக்கள் தான். அவர்கள் குற்றவாளிகள் தான்.

பன்னாட்டு கம்பனி வருவதற்கு முன் என்ன மாதம் மும்மாரி மழை பெய்து கொண்டிருந்ததா? அவங்க வந்து தான் எல்லாவற்றையும் அழித்தார்களா? சென்னையில் எத்தனை பன்னாட்டு கம்பனிகள் வந்து படையெடுத்து எத்தனை காடுகளை அழித்து தண்ணீர் வறட்சியை உண்டாக்கின?

தன்னுடைய உபயோகத்துக்கு கூட மழை நீர் சேமிப்பு ஒரு குழியை வெட்டி அப்பாவி பொது மக்களால செய்ய முடியாதா? அவ்வளவு அப்பாவியா நாம? இப்படியே விட்டா வறட்சி தான் மிஞ்சும்.

நாம் இருப்பது வறத் தமிழ்நாட்டில். கேரளாவில் அல்ல. நம்முடைய இடத்தை நம்மால் தான் வளப்படுத்த முடியும்.

//. அதில் பேசிய ஒருவர், இந்தத் தலைமுறைதான் காடுகளை அழிக்கிறது என்பது போல பேசினார்//

கண்டிப்பாக. விவசாய விளைநிலங்களை விற்று மாட மாளிகைகள் கட்டி உயிர் வாழ்வது இந்தத் தலைமுறை தான்.

redwithanger said...

//சுற்றுச்சூழ‌லைப் ப‌ற்றிய பொறுப்புணர்வு ந‌ம் ஒவ்வொருவ‌ருக்கும் இருக்க‌ வேண்டிய‌து.மாசற்ற உலகை நமக்கு பின்வரும் சந்ததியினருக்கும் விட்டுச் செல்வது நமது சமூகக் கடமை. அது ம‌ர‌க்க‌ன்றை வாங்கி ந‌டுவ‌து அல்ல‌து குளோப‌ல் வார்மிங்காக‌ ஒரு ம‌ணி நேர‌ம் மின்சார‌த்தை நிறுத்துவ‌து மட்டுமே முடிவும் அல்ல, தீர்வும் அல்ல.//

அந்த பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எல்லோரும் (பன்னாட்டு கம்பனிகளும் சேர்த்து தான்) தனது உபயோகத்தைக் குறைத்து ஒரு மணி நேரம் மின்சாரம் சேமித்தால் என்ன தவறு? கேம்பைன் செய்யாமல் எப்படி வரும் பொறுப்புணர்வு? இதை இன்று இருக்கும் தமிழ்நாட்டு மின்வெட்டுச் சூழலில் செய்ய முடியாது. மற்றவர்கள் செய்யட்டும். ஆடம்பரத்தைக் குறைக்கட்டும். ஒரு மரக்கன்றை ஒவ்வொருவரும் நட்டு வளர்த்தால் எவ்வளவு பசுமை ஆகும்? இதை நகரத்தில் பிளாட்டில் வசிக்கும் மக்களுக்குச் சொல்லவில்லை. வீட்டின் அருகே கொஞ்சமாவது மண் இருந்தால், அதில் செய்யலாம். குரோட்டன் செடிகளை அல்ல, வேப்ப அல்லது தென்னை மரம் போல.

ponraj said...

அருமையான பதிவு
வாழ்த்துக்கள்!!!