Sunday, February 13, 2011

நீண்ட பயணத்தில்....

பள்ளி முழுத்தேர்வுகள் வருகிறதென்றால் ரொம்பவும் ஜாலி. பரிட்சைக்குப் பிறகு பாடங்களை மறந்து விடலாம் என்ற நினைப்பே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள்தான் கொஞ்சம் கிலி. லீவும் கொஞ்சம், அதோடு படித்த பாடங்களை மறக்கவும் கூடாது. அதோடு மட்டுமா,அந்த கேள்வித்தாட்களுக்கு விடையும் எழுத வேண்டும்...அது ஒரு மகா கடியான வேலை. அதுவும், எழுத ஆரம்பிக்கும் போது கையெழுத்து மிகவும் சீராக, நிறுத்தி, நிதானமாக கோடெல்லாம் போட்டு ஆரம்பிக்கும்...முடிக்கும்போது பார்த்தால் நமக்கே,நமது கையெழுத்து புரியாது...இதில், மிகவும் பாவப்பட்டது சமூக அறிவியல்தான்.எப்போதும் கடைசிப்பரிட்சையாகத்தான் இது அமையும். லீஸ்ட் பாதர்ட் பரிட்சையாகவும். அதோடு, அப்பரிட்சைக்கு முன்பாக கண்டிப்பாக லீவு இருக்கும். அப்போது படித்துக்கொள்ளலாம், இதெல்லாமா நமக்கு உதவப் போகுது என்றுதான் அதை தள்ளிவைப்போம். ' வாழ்க்கைக்கு உதவப்போறது அறிவியல்தான், சமூக அறிவியல் என்றாலே கதைதான்' என்றும் எங்கள் மனதில் ஊறிப் போயிருந்தது. வகுப்புகளும் அதற்கேற்றாற்போல்தான் நடக்கும். வரலாறை யாராவது ஒருவர் எழுந்து சத்தமாக வாசிக்க வேண்டும், டீச்சர் அதை விளக்குவார். சிலசமயங்களில் விளக்கமும் தேவைப்படாது. அறிவியல், கணக்கு போல முன்னால் படித்த பாடங்களை நினைவுக்கு கொண்டு தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடியதாக இல்லாமல், எல்லாம் நிகழ்ச்சிப்போக்குகளாகவே எங்களுக்குத் தோன்றியதும் ஒரு காரணம்.
புவியியல் சுத்தம்...கொஞ்சம் கூட சுவாரசியமாக இருக்காது. அது போல, வகுப்பு நேரங்களும்..புவியியல் வகுப்பு நேரங்கள் வெள்ளி மாலை அல்லது புதன் கிழமை விளையாட்டு நேரம் முடிந்தபின் என்று கடைசியாகத்தான் இருக்கும்...அதோடு, அதில் என்ன எழுதினாலும் எப்படியாவதுமார்க் கிடைத்துவிடும். மேப் மட்டும் சிரத்தையாக பார்த்துக்கொண்டால் போதுமானது. அதேபோல வரலாறுக்கு வருடங்கள் மட்டும் முக்கியம் என்ற விதியின்படி முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் , ஒத்துழையாமை இயக்கம் எல்லாம் ஒரே கடம்தான். அதுவும் வருடங்கள் வந்தால் அதை ஸ்கிப் பண்ணிவிட்டு படிப்பது எனக்குள் ஒரு வழக்கமாகி இருந்தது. வாயில் நுழையாத பெயர்களாக இருந்தாலும்....எதற்கு இந்த கொசுவத்தியென்றால், சமீபத்தில் "நீண்ட பயணத்தில் தலைவர் மாவோவுடன்" என்ற புத்தகத்தை வாசித்தேன். (அப்போதும் வருடங்களை ஸ்கிப் பண்ணிவிட்டு வாசித்தேன்) சீனாவில் செம்படை நடத்திய நீண்ட பயணம். அதில் தலைவர் மாவோவுடன் உதவியாளராக பணியாற்றியவரின் பதிவே இந்நூல்.
மாவோவின் எளிய வாழ்க்கை முறையையும் அவருடனான அனுபவங்களையும் பதிவு செய்திருக்கிறார், சென் சேங் பெங். பனி மலைகளையும், பாலைவனங்களையும், சதுப்பு நிலங்களையும், காடுகளையும், காட்டாறுகளையும் கடந்து சுமார் 12500 கிலோ மீட்டர்கள் நடந்தே பயணம் செய்கிறார்கள். செல்வந்தர்களிடமிருந்தும், நிலப்பிரபுகள், வட்டிக் காரர்க‌ளிடமிருந்தும் நிலத்தையும், செல்வத்தையும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கிறார்கள். ஆட்சியாளர்களின் ஏகாதிபத்தியத்தைக் குறித்து வழியெங்கும் பிரச்சாரம் செய்கிறார்கள்.செம்படைக்கு வழியெங்கும் விவசாய மக்கள் ஆதரவு தருகிறார்கள். 1934 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த பயணம் எண்பதாயிரம் படை வீரர்களோடு11 மாநிலங்களைக் கடந்து 1936யில் வெற்றியடைந்தது. இயற்கையான தடைகள்,அதோடு எதிரிகளின் தாக்குதல்கள், உள்கட்சி போராட்டங்கள், தோழர்க‌ளின் இறப்புகளையும் சமாளித்து செம்ப‌டையின் புரட்சிகர‌ ப‌ய‌ண‌ம் விடுத‌லைக்கான‌ ப‌ய‌ண‌மாக அமைகிற‌து.பயணத்தில், யீ என்ற சிறுபான்மை இனத்தவரையும் பழங்குடியினரையும் சந்திக்க நேரிடுகிறது.அவர்கள சந்திக்கும் முன்னால் படையினர் மிகுந்த கலவரத்துக்குள்ளாகின்றனர். ஏனெனில், அம்மக்கள் மிகவும் ஆபத்தானவர்கள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லப்பட்டிருந்ததே காரணம். ஆனால், அவர்களை சந்திக்கும்போது அம்மக்கள் அன்பாக வரவேற்று இயல்பாக பழகுகின்றனர். காட்டுமிராண்டிகள் என்று சொல்லப்பட்ட , ஹான் இன மக்களுக்கு புரியாத மொழி அம்மக்கள் சகோதரர்களாகின்றனர். இரு இன மக்களுக்கும் வெறுப்பு ஏற்படும் ராணுவத்தால் வேண்டுமென்றே பரப்பட்ட அவதூறே அறிந்துக்கொள்கின்றனர். இது இன்றைக்கும் நமது நாட்டிலேயே கூட காணக்கூடியதாக உள்ளது, இல்லையா!

சுருக்கமான நூலாக இருந்தாலும், செம்படையின் நெடிய பயணத்தைப் பற்றியும், முன்னணி படைகளின் அயராத பணிகளையும்,அவர்களது தன்னம்பிக்கையையும் அறிய முடிகிறது. நீண்ட பயணத்தின் வழியை இங்கு காணலாம்.இன்று,ந‌ம‌து நாட்டிலும் ‌ நெடிய ப‌ல பிர‌ச்சார‌ ப‌ய‌ண‌ங்கள் மேற்கொள்ள‌ப்ப‌டுகின்ற‌ன. ஆனால்,அவை ம‌க்க‌ளின் விடுத‌லையை குறித்து பேசாமல், மத உணர்வுகளைத் தூண்டும் ர‌த‌ யாத்திரைக‌ளாக‌ அமைந்துவிடுகின்ற‌ன‌.

5 comments:

ராம்ஜி_யாஹூ said...

கட்டளையிடுங்கள், உடனே புரட்சி புயல் வைகோ வை ஒரு நடைப் பயணம் தொடங்க சொல்கிறோம்

குடுகுடுப்பை said...

http://www.scaruffi.com/politics/dictat.html

இதுவும் இணையத்தில் கிடைத்தது, கீழே உள்ள நோட்ஸையும் படிக்கவும். ஜனநாயகம் தேடி போராடிய 2000 மேற்பட்ட மாணவர்கள் இவரின் மாபெரும் புகைப்படத்தின் முன்னர் கொல்லப்பட்டதும் தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வருகிறது.

காமராஜ் said...

அன்பின் முல்லை. இந்த புத்த்கம் கேள்விப்படாதஒன்றாக இருக்கிறது. அறிஅயத்தந்தமைக்கு நன்றி.வழக்கம்போல விரிவாக எழுதுவீர்கள் என நினைத்தேன் சுருக்கமக முடிந்து போனது.எனினும் அருமை முல்லை.

☀நான் ஆதவன்☀ said...

நோட்டட். சென்னை வரும் போது வாங்கி படிக்கிறேன் பாஸ்

மாதேவி said...

நல்ல புத்தக அறிமுகம்.