Showing posts with label மாண்டிசோரி. Show all posts
Showing posts with label மாண்டிசோரி. Show all posts

Saturday, February 15, 2014

பப்பு டைம்ஸ்

"ஆச்சி, அக்பர்க்கு தலைல கட்டிட்டு போனேன் இல்ல.... அந்த ஷாலை கேட்டாருப்பா மாஸ்டர்" என்று கடந்த சில நாட்களாக ஒரே "ஆத்தா வையும்...." டயலாக்.

ஷாலை எல்லாம் எடுத்து வைத்தபின், 'ஆனுவல் டேவுக்கும் அந்த ஷாலுக்கு என்னப்பா சம்பந்தம்' என்று திடீரென்று மூளையில் பல்பு எரிந்ததும், 'ஓகே, இன்னைக்கு மாஸ்டர்கிட்டே  நானும் கேட்டுக்கறேன். நாளைக்கு எடுத்துக்கிட்டு போ" என்று சமாதானக்கொடியை காட்டினேன்.

மாஸ்டர்கிட்டே கேட்டா, "இல்லையே,அதெல்லாம் வேணாம். செப்பல்தான் கொஞ்சம் டிசைனா இருக்கிற மாதிரி கேட்டிருந்தேன். ஷால் எல்லாம் வேணாம். " என்றவர், சிரித்துக்கொண்டே தொடர்ந்தார் ,"ஒருவேளை அவங்களுக்கு தலையில அதை கட்டிக்கிட்டா அழகா இருக்கும்னு நினைச்சிருப்பாங்க. அவங்களுக்கு அப்படி ஆசையா இருந்திருக்கும்" என்று ஸ்டூடன்டுக்கு வக்காலத்து வேறு!! :-)

இதையே, எங்க ஸ்கூலில் நான் செய்திருந்தால்  ‍ டீச்சரிடமும்/வீட்டிலும் என்று இரண்டு பக்கமும் செமையா வாங்கி கட்டியிருந்திருப்பேன், "பொய் சொல்றியா?சொல்லாததை சொல்றியா" என்று!
ஹ்ம்ம்ம்!

"மாஸ்டர், அவ கொஞ்சம் பொறுமையா வரைஞ்சா நல்லாருக்கும்." என்று பப்புவின் 'பார்ட்ஸ் ஆஃப் த‌ ஹென்னை' குறிப்பிட்டு, சிலநாட்கள் முன்பு சொன்னபோது, "குழந்தைங்கதானே, இப்போதானே கத்துக்கறாங்க. பார்க்க ஹென் மாதிரி வரைஞ்சா போதும்" என்று சொல்லி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மாஸ்டர்தான் இவர்!  :-)  (அப்போது,  அவள் வரைந்திருந்த  ஹென் சிட்டுக்குருவி மாதிரியே இருந்தது.)

இந்த இடத்தில் மரியா மான்டிசோரிக்கு நன்றி சொல்லலைன்னா என் மனசாட்சி என்னையே மன்னிக்காது! #நல்ல_டீச்சர்_நல்ல_ஸ்டூடன்ட்  #ThanksToMariaMontessori

 

தூங்கும் நேரத்தில் ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தோம்.சாப்பிட்ட ஆம்பூர் பிரியாணி, பொங்கல்,சாய்பாய் இன்னபிற. சாய்பாய் என்றால் என்ன என்று  எனக்கு புரியாததால் கண்டுக்கொள்ளவில்லை.

திடீரென்று, "நான் ஏன் கேர்லா பொறந்தேன்னு இருக்கு.அதுவும், ஏன் இப்போ போய் பொறந்தேன்னு இருக்கு. நான் இப்போ கேர்லாவே பொறந்துருக்கவே கூடாது" என்று பப்பு சொன்னதும் பகீர்ன்னு ஆகிவிட்டது.சீரியாசாக வேறு சொன்னாள்.  சொல்லும்போது குரல் வேறு தழுதழுத்தது. அதோடு, லேசாக கண்ணீரும்! கேட்கும் போது எப்படி இருக்கும்??

'என்னடா நடந்தது, நல்லாதானே போய்க்கிட்டிருக்கு, இவ்ளோ கவலைபடற மாதிரி என்ன ஆகிடுச்சு ' என்றும் குழப்பம். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள எப்படி  நைச்சியமாக கேட்பது? மண்டையை உடைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.  கொஞ்சம் கேப் விட்டாலே அவளே தொடர்ந்து சொல்லுவாள்.

"நான் பாயா பொறந்து இருக்கலாம். அதுவும் ஔரங்க்சீப் சிவாஜி காலத்துலே நான் வீர சிவாஜியா பொறந்து இருக்கனும். எப்படி இருந்திருப்பேன் நான்?"

அவள் எப்படி இருந்திருப்பாள் என்பதை விடுங்கள்! நான் எப்படி இருந்திருப்பேன் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!!

(இப்போ பொறந்ததுதான் சூப்பர்ன்னு சமாதானப்படுத்த, கொஞ்சம் மார்ஸுக்கு போன மங்கள்யான்,  கொஞ்சம் கேன்டிக்ரஷ், கம்ப்யூட்டர் இன்டர்நெட், பஃப்ஸ் என்று பேல்பூரி கிண்டினேன். கூட சேர்ந்து, அவளும் சப்புவது போல பாவனை காட்டினாள். ஐஸ்க்ரீமாம்!ஸப்பாஆஆஆ!)

 "ஐஸ்க்ரீம் கிடைச்சிருக்காது இல்ல!" என்று குரல் தெளிவாக ஒலித்ததும் கேட்டேன், "சாய்பாய்னா என்ன? " வீர சிவாஜியோட வைஃப் ஆம்!

#வீர_சிவாஜி_நான்_ஆனேன்_பஜ்ஜி! ;‍)

மனம் ஒரு குரங்கு (அ) Parental anxiety

ஒரு பயிற்சி வகுப்பில் உங்கள் மகளை கொண்டு போய் விடுகிறீர்கள். ஆசிரியர் வந்து ஏதோ சொல்கிறார். உடனே எல்லா குழந்தைகளும் எழுந்து ஓடி வந்து வரிசையில் நிற்கிறார்கள். மற்றவர்களை முந்திக்கொண்டு வரிசையில் நிற்க முண்டியடிக்கின்றன, குழந்தைகள். ஆனால், உங்கள் குழந்தை மட்டும், 'எல்லாம் அடங்கி முடியட்டும்' என்பது போல இறுதியில் நின்று கொள்கிறாள்.  'ஏன் இவள் எல்லாரோடும் போட்டி போட்டு நிற்கவில்லை' என்று கவலை கொள்கிறீர்கள்.

உங்களுக்கு ஒன்றை கவனத்தில் கொண்டு வருகிறேன், குழந்தைகள் போட்டி மனப்பான்மையோடு அல்ல, குழு மனப்பான்மையோடு வளர வேண்டும் என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.

ஒரு கதை படிக்கும் (ஸ்டோரி ரீடிங்) நிகழ்ச்சியில் வாசிப்பாளர் புத்தகத்தில்  ஒரு படத்தை காட்டி அது என்ன என்று கேட்கிறார். யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும், உங்கள் குழந்தைக்கு அது தெரியும் என்று. ஏனெனில், அந்த பறவையை பார்க்க வட கர்நாடகம் வரை சென்றிருக்கிறீர்கள். அந்த பறவையை மிக நெருக்கத்தில் அவள் பார்த்திருக்கிறாள்.

விடை தெரிந்து,அவள் கையை உயர்த்துகிறாள். அதற்குள், பெற்றோர் பக்கத்திலிருந்து விடை வந்துவிடுகிறது. ஆனாலும், அவள் ஏன் டக்கென்று சொல்லவில்லை என்று மறுகுகிறீர்கள்.   வெளியில் வந்து 'கேட்டவுடனே ஏன் சொல்லல' என்று உங்கள் குழந்தையை விசாரிக்கிறீர்கள்.

'நம்ம டர்ன் வந்தாதான் சொல்லணும். பார்த்தவுடனே கத்தக்கூடாது.' என்கிறாள் மகள். எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறீர்கள்.  நீங்கள் அடிக்கடி வலியுறுத்தும் 'குட் மேனர்சின்' கீழ்  அல்லவா அது வருகிறது!

ஆட்டோவில் பையை தொலைத்துவிடுகிறாள், உங்கள் மகள். அப்படி என்ன கவனமின்மை என்று கடிந்துக்கொள்கிறீர்கள். உங்கள் முகம் கடுமையாக மாறுகிறது. அவளோ, அதைப் பற்றி கிஞ்சித்தும் பாதிப்படைய‌வில்லை.  'பையைத் தொலைத்த குற்றவுணர்ச்சி கூட இல்லையே, இது எப்படி எதிர்காலத்தில்...' என்று அதற்கும் சேர்த்து கவலை கொள்கிறீர்கள். எந்த பாதிப்பும் இல்லாமல், "ஆச்சி, கோவமா இருக்காதே,சிரி...சிரி" என்று உங்கள் தாடையை பிடித்து கன்னங்களை இழுத்து சிரிப்பது போல வைக்கிறாள், அவள்.

இந்த நேரத்தில் நினைவுப்படுத்துகிறேன், 'எந்த சூழலாக இருந்தாலும், அவள்  செய்த தவறைக் குறித்து பதற்றமடையாமல் தன்னியல்பு மாறாமல் கூலாக/நிதானமாக‌ இருக்க‌ வேண்டும்' என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.

வேறு ஊரில் இருக்கிறீர்கள். இரவுணவுக்காக, வெளியில் சாப்பிட செல்கிறீர்கள். உணவு விடுதியின் முன்னால், வண்டிகள் செல்வதற்காக கூம்பு வடிவ தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், ஒன்றை காற்று சாய்த்து விட்டிருக்கிறது. அங்கேயேதான் விடுதி காவலரும் இருக்கிறார். ஆனாலும், உங்கள் மகளால் விழுந்துவிட்ட தடுப்பை பார்த்துவிட்டு சும்மா இருக்கமுடியவில்லை. உங்கள் கையை உதறிவிட்டு ஓடுகிறாள். அந்த தடுப்பை நிமிர்த்து அதன் இடத்தில் வரிசையில் வைக்கிறாள். பின்னர், வரிசையை பார்த்து புன்னகையொன்று புரிந்துக்கொள்கிறாள், அதில்பாதியை உங்களை நோக்கி வீசுகிறாள். வேறு வழியின்றி, நீங்களும் புன்னகைக்கிறீர்கள்.

கார் ஒன்று வேகமாக அந்த பக்கம் செல்கிறது.  'கார்ல்லாம் வேகமா போகுது, அது கீழேயே இருந்தாதான் என்ன? எத்தனை பேரு போறாங்க வர்றாங்க...செக்யூரிட்டி வேற இருக்காருல்ல. இது ஏன் இப்படி இருக்கு' என்று, அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதுள் குமைகிறீர்கள்.  உடனே, இதுபோன்ற கடந்தகால சம்பவங்கள் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்தது, புத்தக சந்தையில் நடந்தது எல்லாம் உங்கள் நினைவுக்கு வருகின்றன. அவளது எதிர்காலம் குறித்து கவலையில் ஆழ்ந்து போகிறீர்கள்.

புத்தக சந்தையில், ஸ்டால் நுழைவாயில் நெரிசலாக இருக்கிறது என்று எக்சிட்டில் நுழைகிறீர்கள்.  'அது எக்சிட், இதான் ஆச்சி, என்ட்ரி.எக்சிட்லே போகக் கூடாது'  என்று உங்களை திருத்தி, செல்லவிடாமல் தடுக்கிறாள். இறுதியில், உங்கள் கையைப்   வலுக்கட்டாயமாக பிடித்துக்கொள்கிறாள், அப்படி செல்லக்கூடாது என்பதுபோல.பிறகென்ன, 'என்ட்ரி'யிலேயே நெரிசலாக இருந்தாலும் செல்ல நேர்கிறது.

'என்ன இது, இதெல்லாம் எப்படி பொழைக்க போகுது? எல்லா இடத்திலெயும் ரூல் ஃபாலோ பண்ண முடியுமா?' என்று எண்ணிக்கொள்கிறீர்கள். ஆனால், இதை சொல்லி அவளை கெடுத்துவிட வேண்டாம் என்று அவள் சொல்படியே நடக்கிறீர்கள்.

உங்கள் கவனத்துக்கு  கொண்டு வருகிறேன்,'பயம் காரணமாக  பள்ளியில் மட்டும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கூடாது, பள்ளிக்கு வெளியிலும்   ஒழுக்கத்தை தன்னுள் பேண வேண்டும். குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி யோடாவது அவள் வளர வேண்டும்.', என்று  நீங்கள்தான் விரும்பினீர்கள்.

வெளியிலாவது இப்படி இருக்கிறாளே என்று சந்தோசப்படும் அதே நேரம், வீட்டில் அவள் செய்யும் அட்டகாசங்களை எண்ணி  'வளர்ந்து விட்டாளே, இன்னுமா இப்படி இருப்பது' என்று புலம்புகிறீர்கள்.   பென்சீலை சீவித்தள்ளி, அதன் வண்ண வண்ண சீவல்களை, அலமாரி முழுதும் நிரப்பி வைத்திருப்பது, விளையாட்டு சாமான்களை கலைத்து போட்டு ஹாலை குப்பையாக்கி வைப்பது எல்லாம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

:-)

Tuesday, March 19, 2013

ஆத்தா நான் பாசாயிட்டேன்!

மார்ச் ஏப்ரல் வந்துவிட்டால் போதும். சின்ன வயதில்தான் அந்த கேள்விக்கு பதில் சொன்னேன் என்றால், இப்போதும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக நான் எதிர்கொள்ளும் "எக்ஸாம் எப்போ" அல்லது "எக்சாம் முடிஞ்சுடுச்சா" என்ற கேள்விதான். பப்புவின் பள்ளியில் தேர்வுகளே கிடையாது. பெரும்பாலான  பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்றுதான் சொல்கிறார்கள், ஆனால் அப்படி தெரியவில்லை. (போன‌ ஜெனரேஷனுக்குஎக்சாம் இல்லையென்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லையோ?!)

முதல்முறை, பப்பு "எக்சாம்னா என்ன ஆச்சி" என்றாள்.(ஆம்பூரில், ஒருமுறை  "மார்க்ன்னா என்ன" என்று கேள்விகேட்டவரை அதிர்ச்சிக்குள்ளா க்கியதெல்லாம் வரலாறு.)கேள்வி கேட்பவருக்கு பதில் சொல்வதா, பப்புவுக்கு பதில் சொல்வதா என்று முழித்து ஒருவழியாக சமாளித்தேன். எக்சாம் இல்லையென்றால் ஒரு சிறு அதிர்ச்சி/புருவ உயர்த்தல். இப்போதாவது பரவாயில்லை, பப்புவுக்கு தமிழ் டிக்டேஷன் கொடுத்து பழகுவதால் அவளுக்கு 'எக்சாம்' என்பது பற்றி ஒரு ஐடியா கிடைத்திருக்கிறது எழுதிக் கொண்டேயிருப்பது என்பது போல.  சென்ற வருடம் ரொம்ப கஷ்டம்.(அவ்வ்வ்வ்வ்)எக்சாமுக்கு மார்க்,அதற்கு ரேங்க், அதிலும் அதிக மார்க்....எனக்கும் அதையெல்லாம் சொல்லி ஆப்போசிட் ரியாக்சன் ஆகிவிடபோகிறது என்று பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 'இந்த பள்ளிக்கூடம் முடித்து வேறு பெரிய பள்ளிக்கூடம் போகவேண்டும் என்றால் ஒரு பரிட்சை வைப்பார்கள். அதில் கேள்விகள் இருக்கும். அதை படித்து ஒரு பேப்பரில் எழுத வேண்டும்' என்று மட்டும் அவ்வப்போது சொல்லி வைப்பேன்..  உடனே, "ஆச்சி, அது  டேபிள்/சேர் போட்ட ஸ்கூலா ஆச்சி, அது வேணாம்" என்றாள். (அவ்வ்வ்வ்)

இந்த வருடமும், வீட்டுக்கு வந்தவர்கள்,நாங்கள் சந்தித்தவர்களிடமிருந்து அதே கேள்வியை எதிர்கொண்டோம். சென்ற வருடம் போலில்லை, பழகிவிட்டது.(ஹிஹி!) நேற்று ஏதோ கேள்வி கேட்டு விளையாடிக் கொண்டிருந்தாள் பப்பு. அவள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்பாள்.சத்தியமாக,பெரும்பாலும் அதற்கான பதில்கள் தெரியாது. 'புக்ல பார்த்து படிச்சுட்டு சொல்றேன்,பப்பு' என்பேன். "இப்போ, நீ என்னை கேளு" என்பாள். அதே கேள்வியை அவளை கேட்பேன்.
அவள் பதில் சொல்லுவாள்.(ஜூபிடர் சுத்தி இருக்க ரிங்ஸ் ஐஸும், தூசியும்தானாமே!!)

அதில், திடீரென்று, 'எங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்ல?" என்றாள்.

'சரி, அவளுக்கு புரியற மாதிரி சொல்லணும்' என்று எண்ணியபடி ஆயத்தமானேன். 'ப்ளான் பண்ண்ண்ணி சொல்ல‌ ஆரம்பிக்கணும்' என்று தயார்ப்படுத்திக்கொள்ள.....


"நீ என்னை கேளு"


"உங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்ல?"


"இப்போ எக்சாம்ல மார்க் வரும் இல்ல, அப்போ என்னாகும்? நெறைய மார்க் வேணும்ம்னு க்ரீடியாகிடுவோம் இல்ல. அதுக்குதான். அதுக்குதான் எங்களுக்கு எக்சாம்ஸ் இல்ல!"


......


"பவன் ஆன்ட்டியை கேட்டான், எங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்லன்னு. ஆன்ட்டி சொன்னாங்க, இப்போ நீங்க எல்லாரும் இருக்கீங்க. ஒருத்தர் நெறைய மார்க் வாங்கறீங்க.அப்போ மத்தவங்களுக்கு எப்படி இருக்கும்? எல்லாரும் ஆக்ட்விட்டி நல்லாதானே பண்றீங்க. அப்போ, ஒருத்தவங்களுக்கு மட்டும் கைதட்டினா ஹவ் வில் யூ ஃபீல்? க்ரீடி ரைட்? அதுக்குதான் எக்சாம்ஸ் இல்ல. புரிஞ்சுதா?"


Monday, July 13, 2009

பப்பு பள்ளியில் பெற்றோர் பட்டறை!

பப்பு பள்ளியில் கடந்த சனிக்கிழமை பெற்றோர் பட்டறை (workshop) வைத்திருந்தார்கள். காலையில் 10 மணிக்கு தொடங்கிய பட்டறை மதியம் 1 மணிக்கு முடிவுற்றது. மாண்டிசோரி முறைக்கல்வியை பற்றியும், இவர்களின் பள்ளிச் சூழலைப் பற்றியும், அணுகுமுறையைப் பற்றியும் பேசப்பட்டது. 11.30 மணிக்குப் பிறகு ஒரு மணிநேரம் - நாம் குழந்தைகளாக மாறி வகுப்பறையில் இருக்கும் உபகரணங்களை கையாளலாம். மாண்டிசோரி வகுப்பறைச் சூழலில் குழந்தைகளும் ஆண்ட்டியும் எப்படி communicate செய்துக் கொள்கிறார்கள் என்பதே நோக்கம்!

என் நினைவிலிருந்து சில பாயிண்ட்கள் :

1. மாண்டிசோரி சூழல் ஒரு prepared environment. 5 senses-ஐ அடிப்படையாகக் கொண்டது (EPL,Geography & Culture,Senses,Math etc). ஒரு வகுப்பில் 20-25 மாணாக்கர்கள் இருப்பர்.

2. 2.5 லிருந்து 3 வயது வரை குழந்தைகள் மிகவும் துறுதுறுவென்று இருக்கும். ஏனெனில் அந்தநேரம் தான் குழந்தைகளின் அறிந்துக்கொள்ளும் திறனும், மூளையும் செயல்பாடும் உச்சத்தில் இருக்கும். அதனால்தான் அவர்கள் ஒரு இடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் எல்லாவற்றையும் அறிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன் இருப்பார்கள். அந்தநேரத்தில் அவர்களுக்கானச் சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது நமது கடமை!

3.வகுப்பறையில் உபகரணங்கள் அடுக்கப்பட்டு இருக்கும். பிள்ளைகள் எதை வேண்டுமானாலும் எடுத்து உபயோக்கிக்கலாம். அவர்கள் எடுப்பது புதிதாக இருக்கும் பட்சத்தில் ஆனட்டி சொல்லித்தருவார்கள். உதவி தேவைப்படுமாயின் பெரியவர்களைக் கேட்க வேண்டுமென்று அறிந்துக்கொள்வார்கள்.

4. உபகரணங்களைக் கையாள்வது precised movements-ஆக. அதில் கட்டைவிரல்,ஆள்காட்டிவிரல், மோதிரவிரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுச் செய்யப்படுகிறது. இது பின்னாளில் எழுதத் தொடங்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். சரியான பிடிப்பு, வேகத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றை அவர்களுக்குத் தெரியாமலேயேக் கற்றுக்கொள்கிறார்கள்.

5. மலை அல்லது சூரியன் என்றதும் நாம் அதன் வடிவங்களின் மூலமே கற்பனைக் கொள்கிறோம். அதையேத்தான் மாண்டிசோரிச் சூழல் கடைப்பிடிக்கிறது. எல்லாமே வடிவங்களின் வழியாகவே - child size - குழந்தைகளின் பார்வையில்!!

6. இங்கு ஒருவருக்கொருவர் ஒப்பீடு கிடையாது. எல்லா குழந்தைகளுமே தனித்தன்மையானவர்கள் என்று நம்புகிறோம். “அந்தக் குழந்தைச் செய்யும்போது உன்னால் ஏன் செய்ய முடியவில்லை” என்று கேள்வி இங்குக் கிடையாது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் எல்லாத் திறமைகளுமே ஒளிந்திருக்கிறது. அந்தத் திறமைகளை வெளிவர வெளிக்கொண்டு வர நேரம்தான் முக்கியம்.

7. ஆன்ட்டி என்று ஏன் அழைக்கச் சொல்கிறோமென்றால், ஒரு பழகிய உணர்வு வருவதற்காகவே! அணுகக்கூடாதவர்களல்லவென்றோ அல்லது ஒரு பயத்தையோ உண்டாக்காமல் இருப்பதற்காகவும். இங்கு யாரும் சத்தம் போட்டுக்கூட பேசுவது கிடையாது. புது ஆக்டிவிட்டி கற்றுக்கொடுக்கும்போது, செயல்முறை மட்டும்தான். பேசுவது கிடையாது. (”வொர்க் பண்ணும்போது பேசக் கூடாது” என்று நாங்கள் விளையாடும்போது பப்பு சொல்லியிருக்கிறாள்.)




சில அடிப்படியான மாண்டிசோரி ஆக்டிவிட்டீஸை செய்துக் காட்டினார்கள்.

காயின் பாக்ஸ் :

பாக்ஸிலிருக்கும் எல்லா பிளாஸ்டிக் நாணயங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து விட்டு, அதனுள் ஒவ்வொன்றாக போடுதல் - சத்தம் வராமல் - பின்னாளில் கணிதம் கற்க இந்தமுறை உபயோகப்படும்.

போரிங் :

கீழே தண்ணீர் ஊறாத ஒரு தடுப்பினை போட்டபின், ஒரு கிண்ணத்திலிருந்து இன்னொரு கிண்னத்திற்கு மாற்றுதல் - கடைசிச் சொட்டு அடுத்தப் பாத்தரத்தில் விழும்வரை காத்திருந்து பின் எல்லாவற்றையும் அதன் இடத்தில் வைத்தல். பொறுமை, வேகத்தை கட்டுப்படுத்துதல், மேலும் தவறு செய்தால் திருத்திக்கொள்வதை அறிந்துக் கொள்கிறார்கள்.

துணிக்கிளிப்-கள் - மூன்று விரல்களை ஒருங்கிணைக்கும் பயிற்சி.

இதையெல்லாம் எப்படிச் சொல்லித்தருவார்களென்றும் செய்துக் காட்டினார்கள். அதாவது one-to-one communication. மேலுன் இந்த உபகரணங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான உபகரணத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம். யாராவது உபயோகித்துக் கொண்டிருந்தால், அது வரும் வரை காத்திருந்து, விரும்பும் உபகரணம் வந்தபின் எடுத்துக்கொள்ள வேண்டும். உபயோகித்தபின் திரும்ப அதன் இடத்தில் கொண்டு வைக்க வேண்டும். freedom & discipline!

EPL : Exercises of Practical Life

இது வாழ்க்கையின் நாம் அன்றாடம் செய்யக் கூடிய வேலைகளுக்குத் தயார்படுத்துவது.
கோப்பைகளை அடுக்கி எடுத்து வருவது, பேனா, கத்தரிக்கோல் கேட்டால் கொடுக்கும் முறைகள் முதலியன. ஆண்ட்டி சொன்னது, “நீங்கள் சாப்பிடும்போது உங்கள் குழ்னதைகளையே பரிமாற்ச் சொல்லுங்கள். சாம்பார் கொட்டிடுவாங்க என்றோ ஊத்திடுவாங்க என்றோ பயப்படாதீர்கள். அவர்கள் கீழேச் சிந்தமாட்டார்கள். ஏனெனில் சிந்தினால் அவர்கள்தான் துடைக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும். இங்கேக் கூட தண்ணீர் வைத்துச் செய்யும் எந்த ஆக்டிவிட்டியிலும் கீழே சிந்த மாட்டார்கள். ஏனெனில் அந்த உபகரணத்தோடு துடைக்க ஒரு துணியும் இருக்கும். கற்றுக்கொள்ளும்போது ஓஇரு முறை சிந்தொவிடும். அந்தத் துணி ஈரமாகிவிட்டால் அதை வைத்துவிட்டு, வேறு துணி எடுத்து வைக்கவேண்டும். அதை மாற்றுவதற்குப் பதில் அவர்கள் கீழே சிந்தாமல் பொறுமையாகச் செய்வார்கள்.”

silent hour : தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி முதலில் கைகளை கீழே தரையில் ஊன்றிக்கொண்டு, கண்களை மூடுயபடி அமர்ந்திருக்க வேண்டும். அது பழக்கமானபின் கைகளை கட்டிக்கொண்டு கண்கள் மூடியபடி. இது பழகியபின் உலலையும் மனதையும் மெதுவாக ஒருங்கிணைக்கும் பயிற்சி. (பப்பு என்னை சில சமயங்களில், close your eyes என்று சொல்லியிருக்கிறாள். அவளுக்கு முன் கைகளை கட்டி ஒற்றைக்கண்ணால் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். அவளும் ஒற்றைக்கண்ணால் நான் கண்கள திறந்திருப்பதை கண்டுபிடித்துவிடுவாள்!!)


Sensory : சிலிண்டர் ப்ளாக்ஸ், பிங்க் டவர் முதலியன்

இவை எல்லாமே ஒரு செமீ-யிலிருந்து 10 செமீ பரிமாணத்தில் அமைந்தவை - 10 பொருட்கள். உபயோகிக்க வேண்டும் பட்சத்தில் அதன் இருப்பிடத்திலிருந்து ஒவ்வொன்றாக குழந்தைகளின் இடத்திற்கு எடுத்து வர வேண்டும். அதைச் செய்து முடித்தபின் ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று அதன் இடத்தில் வைக்க வேண்டும்.

டச் போர்ட் : இது சொரசொரப்பான பகுதியும் மெதுவாக பகுதியும் கொண்ட ஒரு போர்டு. அதனை கைகளால் தடவிப் பார்த்து உணர்ந்துக்கொள்வதற்காக - இதில் வெர்ஷன்களும் உண்டு. இரு விரல்கள் கொண்டு உபயோகிப்பது முதல் நான்கு விரல்களைக் கொண்டு உபயோகிப்பது வரை. அதன்பின் geometric tray, binomial cube முதலியன் பற்றி.


மொழி : முதலில் எல்லா எழுத்துகளும் சப்தங்களின் மூலமே கற்றுத் தரப்படும். சப்தங்களைக் கொண்டு வார்த்தைகளை அவர்கள் சொல்வது, எழுத்துகளை சாண்ட் பேப்பரில் தொட்டு உணரச் செய்வது முதலியன. உங்கள் குழந்தை வீட்டுப்பாடத்தில் முடிந்தவரை நேரடியாக உதவுவதைத் தவிருங்கள். (எ.கா-ஆக, e-இல் ஆரம்பிக்கும் 5 வார்த்தைகள் என்றால் உடனே சொல்லி விடாதீர்கள். அவர்களாகவே யோசித்து சொல்லட்டும்.)

எண்கள் : தீஷூ சொல்லியிருந்தது போல மணிகளைக் கொண்டுதான் எண்கள் பயிற்றுவிக்கபபடுகிறது. பத்து பத்தாக கோர்க்கப்பட்டவை, அவற்றைக் கொண்டு கோர்க்கப்பட்ட 100 மணிகள் கொண்டவை, பத்து நூறுகள் சேர்ந்த 1000 மணிகள் கொண்டவையென்று. எண்கள் அதன் அளவுகளை கொண்டு கற்றுக்கொடுக்கப்படுவதால் apacus க்கு அனுப்ப வேண்டாமென்று சொன்னார் ஆண்ட்டி.





பெற்றோர்களின் கேள்விகள் :

பெற்றோர் 1 : ரொம்ப கொஞ்சமா ஹோம்ஒர்க் கொடுக்கறீங்க. அதிகம் டீவி பாக்கறாங்க. நீங்க இன்னும் கொஞ்சம் அதிகமா ஹோம்-ஒர்க் கொடுத்தீங்கன்னா அவங்க அதிலியே நேரம் செலவழிப்பாங்க.

ஆன்ட்டி : பள்ளியில்தான் அவர்கள் நிறைய வொர்க் செய்ய வேண்டுமேத் தவிர ஹோம் ஒர்க் கொடுப்பதில் விருப்பம் இல்லை. நீங்கள் குழந்தையுடன் நேரம் செலவிடுங்கள். கார்ட்டூன்கள் அதிகம் பார்க்க விடாதீர்கள். (குறிப்பு : ஹோம்ஒர்க் 5 வயதுக்கு மேலிருந்துதான் ஆரம்பமாகிறது!)


பெற்றோர் 2 : ரொம்பச் சேட்டை பண்றான்.வீட்டுலே சமாளிக்க முடியலை. ஏதாவது க்ளாஸ்-க்கு அனுப்பலாமா?

உங்க பிள்ளைக்கு 2.5 தானே ஆகுது. அப்படித்தான் இருப்பாங்க. க்ளாஸ் எல்லாம் டூ யர்லி. வெளிலே எங்கேயாவது கூட்டிட்டு போங்க. பெயிண்டிங் க்ளாஸ் அனுப்பலாம்.

(இன்னும் நிறைய கேட்டாங்க, மனதில் நின்றது இந்தக் கேள்விகள்தான்!நான் என்னென்ன ஆக்டிவிட்டீஸ் செய்து பல்பு வாங்கினேன் என்பதை பிறிதொரு இடுகையில் எழுதுகிறேன்!)

Thursday, October 09, 2008

மாண்டிசோரி புத்தகங்கள்

பரிந்துரைத்த பூந்தளிர் - தீஷூ அம்மாவுக்கு நன்றி.

தேவைப்படுவோருக்கு பயன் தரவும் ,புத்தகங்களின் பெயர்களை சேமிக்கவும் இந்தப் பதிவு..

1. Teaching Montessori in the home : the pre-school years by Elizabeth Hainstock.
2. How to raise an amazing child the Montessori Way by Tim Seldin
3. Teach me to do it myself: Montessori activities for you and your child by Maja Pitamic
4. Montessori play and learn: a parent's guide to purposeful play from two to six by Lesley Britton
5. Montessori today : a comprehensive approach to education from birth to adulthood by Paula Polk Lillard
6. Montessori and your child : A primer for Parents by Terry Malloy