Showing posts with label தென்காசி. Show all posts
Showing posts with label தென்காசி. Show all posts

Monday, March 02, 2015

அத்திரி மலை ட்ரெக்கிங் ‍- ‍ தென்காசி பயணம்

வேனுள் அமர்ந்தபோது மணி ஆறேகால். 'ரிசர்வ் காடென்பதால் காமிராவுக்கு அனுமதியில்லை. மொபைல் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்' என்ற ரகு கொடுத்த எச்சரிக்கை மணியால் கேமிரா தூக்கும்வேலை மிச்சம். போகும் வழியிலேயே ஒரு அணை வரும், அணையை கடந்தால் ஒரு ஆறு, அந்த ஆற்றில் குளித்துவிட்டு மலையேற்றம் என்றெல்லாம் லேசுபாசாக பேசிக்கொண்டிருந்ததில் எல்லோரும்  ஆர்வக்குட்டிகளாக மாறியிருந்தோம். தன்னுடன் தொடர்பிலிருந்த இரண்டு உள்ளூர் மக்களை அழைந்திருந்தார், ரகு.

கடையம், ஆழ்வார்க்குறிச்சியெல்லாம் தாண்டி ஒரு இடத்தில் வண்டி நின்றது. அவ்வளவு காலையிலேயே, சில கடைகளில் பூரி சுட்டு வைத்திருந்தார்கள்.  சுட சுட ஆவி பறக்க தட்டில் வடை. 'காலையிலே ரொம்ப சாப்பிடகூடாது, அப்புறம் ஏற முடியாது' என்ற கட்டளை எங்கிருந்தோ வர‌, 'போற வரைக்கும் நாம என்ன சாப்பிடணும், என்ன குடிக்கணும்னு இந்த பாய்ஸ்தான் முடிவு பண்ணு வாங்கஜி...' என்ற கமெண்ட் சைடில் வந்தது. 

ரகு அன்ட் கோ காலை மற்றும் மதிய உணவு வாங்க சென்றதும், கும்பல் வடையை நோக்கி பாய, நாங்கள் 'சூப்பர் டீ ஸ்டாலில்'  டீ குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். சைடீல் வடை. உடனே, வடை மற்றும் டீயோடு செல்ஃபி.... குருப்பி... ஆளாளுக்கு அவரவர் மொபைலில் குருப் செல்ஃபிகளை எடுத்து சூப்பர் டீ ஸ்டால், ஆழ்வார்குறிச்சியை ஒரு பிரபல டீக்கடையாக்கினோம்.

இட்லி வந்துவிட, திரும்ப பயணம். ஆம்பூர், கீழஆம்பூர் என்று பலகைகளை பார்த்ததும், 'நாம் எங்கு இருக்கிறோம்' என்ற  தோற்றப்பிழை எனக்கு. 


சும்மா, சொல்லக் கூடாது...வழியெல்லாம் பசுமை... பசுமை... வாழை மரங்கள், அதைத்தாண்டி தென்னை மரங்கள், உயர்ந்த மலை முகடுகள்...அவற்றை தழுவிப்பரவும் மேகங்கள்... இடையில் பறக்கும் வெள்ளை இபிஸ்கள்...இறுதியாக, கடனாநதி அணைக்கட்டு வாயிலில் இறக்கி விடப் பட்டோம்.அணை..பின்னால் மலைகள்.. அணை வாயிலில் ஒரு ஆலமரம்... லேசான குளிர்காற்று...களக்காடு புலிகள் சரணாலயம் என்ற பலகை வேறு எங்களை பார்த்து லேசாக உறுமியது.

ஆளுக்கொரு இட்லி பார்சலை எடுத்துக்கொண்டு ஆலமரத்தடியில் குழுமினோம். பிரித்தால் இரண்டு இட்லிகள்...ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்...யானைப்பசிக்கு? 'வேற வழியேல்ல..நாம போறவரைக்கும் என்ன சாப்பிடணும்..' பொட்டலத்தை பிரித்துவிட்டு யதேச்சையாக திரும்பினால், ஆகா...முன்னோர்கள் தயாராக காத்திருக்கிறார்கள்.. எப்படியோ அவர்களிடமிருந்து இட்லியை காப்பாற்றினோம்.

உள்ளூர் மக்களில் ஒருவர் அத்திரி மலைமேலிருக்கும் கோயில் பூசாரி. கடனா அணையின் நீரற்ற பகுதி வழியே நடத்திச் சென்றார்.  தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த பகுதி. சேறாக குழம்பி கிடந்தது. தனது செருப்பில் சேறாகி விட்டது என்று புகார் சொன்ன பப்புவுக்கு, வழுக்கி விழுந்தவரை எடுத்துக்காட்டாக காட்டினார்கள். மலையடிவாரத்தை அடைந்தோம். குறுக்கிட்ட சிறு ஓடையை 'அத்திரிபாட்சா'வாக தாண்டினோம். சில தப்படிகளிலேயே, சலசலவென ஆறு ஓடும் சப்தம்.  கூடவே, சில குருவிகளின் சப்தம். ஆகா!

ஆற்றை வந்தடைந்தோம்.  "உசிரே போகுதே...உசிரே போகுதே" என்று பாடவில்லையே தவிர..

கோயிலுக்கும் சில குடும்பங்கள் ஆற்றின் குறுக்கே இருந்த கயிறை பிடித்து கடந்து சென்றனர். 'குளிச்சுட்டு வர்றவங்க மேற்கால போங்க. கோயிலுக்கு போறவங்க இந்த வழியாக வாங்க' என்றதும் நாங்கள் சிட்டாக பறந்தோம். சில்லென்ற தண்ணீர். இதுவரை நடந்த கால்களுக்கு இதமாக இருந்தது. 

'பாறை மேல கால் வைக்காதீங்க. வழுக்கும்..கீழே மணலை பார்த்து வைங்க' என்று ரகுவின் ஆலோசனை பின்னாலிருந்து வந்தது.  'சொன்னா அதுக்கு அப்படியே நேரெதிரா செஞ்சுதானே பழக்கம்'. பப்பு மிகச்சரியா பாறையை பார்த்துதான் காலை வைத்தாள். அவளது கையை பிடித்திருந்த நானும், பேலன்ஸூக்காக நடனமாட வேண்டியிருந்தது.

'இந்த சில் தண்ணீலியா குளிக்கப்போறோம்' என்று நினைக்கும்போதே, தேவி நீரை வாறி மேலே தெளிக்க அவ்வளவுதான்... யாருமற்ற அந்த வனாந்தர பின்னணியில், பாறைகள் வழியாக சலங்கை கட்டி வரும் தெளிந்த ஆற்றுத்தண்ணீரை சில்லிப்பை அனுபவித்து கிடந்தோம்.

'மெதுவாக' 'மெதுவாக' என்று நடந்து கிட்டதட்ட தண்ணீர் கொட்டும் பகுதிக்கு வந்துவிட்டிருந்தோம். நாங்கள் ஆற அமர கழுத்து வரையிலான நீரில் முங்கி  நீராடிக் கொண்டிருக்க, கோயில் பூசாரி, எங்களை எதிர்பார்க்காமல் தலையை முங்கிவிட்டு நடையை கட்டியிருந்தார். ஆற்றை கடந்து மலையில் ஏறினோம். அடர்ந்த காட்டு மரங்கள்... ஒற்றையடி பாதை. அவ்வப்போது மயிலொன்று அகவும் சப்தம். எங்களைத் தவிர வேறு நடமாட்டமில்லை. எங்களுக்கு முன்னால் வந்தவர்கள் போன வழி தெரியவில்லை.

சாரிசாரியாக கட்டெறும்புகள். 'மிறிச்சுடாதீங்க...தாண்டி வாங்க' என்ற குரலெல்லாம் இந்த கம்ப்யூட்டர் காட்டுமிராண்டி கூட்டத்தில் எடுபடுமா? கட்டெறும்பு கூட்டம் அல்லோலகல்லோலப்பட்டு  'விட்டால் போதுமென்று' எங்களை கடந்து ஓடியது. சேதம்,  ஆளுக்கு இரண்டு மூன்று கடிகள் மட்டுமே! எப்படியோ கட்டெறும்பு பிரதேசத்தை தாண்டினால், திரும்பவும் சலசல! நீரூற்றுதான்...நீருற்றோடு செஃல்பி.. நீரை பிடித்து குடிப்பது போல ஃபோட்டோ..



சுலபமான பாதைதான். ஆங்காங்கே மட்டும் செங்குத்தாக இருந்தது. ஆனால், வெயில் விழாத இடமென்பதால், வழுக்குப்பாதையாக இருந்தது. மண்ணும் நல்ல ஈரப்பதமாக இருக்கவே, பார்த்து அடியெடுத்து வைக்க வேண்டும். இறுதியாக, ஒரு குகை போன்ற அமைப்பை அடைந்தோம்.பச்சை வர்ணம் அடித்தது போல‌ அவ்வளவு பச்சையாக இருந்தது அந்த இடம். இந்த மலையே சித்தர்கள்,ரிஷிகள் வாழ்ந்த இடமாக சொல்லப்படுகிறது.

பழனி முருகன் சிலையை  செய்தபிறகு, மிஞ்சிய நவபாஷாணத்தை போகர் இங்கு பூசி விட்டதாக சொன்னார்கள். அதற்கு வலப்பக்கத்தில் பிரிந்த இன்னொரு வழியில், மசூதி இருந்தது. சித்தரை பின்பற்றிய ஒருவருக்கு உதவி செய்த முஸ்லீம் ஒருவரின் சமாதி என்றனர் சிலர். இந்த குகைக்கு பிறகு ஆரம்பிக்கும் பாதையே உண்மையான மலையேற்றம். செங்குத்தான பாதை. ஆங்காங்கே படிகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். கிட்டதட்ட முக்கால் மணிநேரம் நீடிக்கும் இந்த செங்குத்தான மலையேற்றம், ஒரு கோயிலின் முகப்பில் முடிவடைகிறது.

முகப்பிலேயே எதிர்கொள்கிறாள், 'வனதுர்க்கை'.

வனத்தின் அமைதி. இளங்குளிர். அருகில் ஓடி கொண்டிருக்கும் ஆகாயகங்கை. மயில் அகவும் சப்தம். வெயில்படாத லேசான வெளிச்சம். சிவப்பு புடவையில், மரத்தின்கீழ் வனதுர்க்கை. எங்கோ மாயக்கதைகளுக்குள் வழிமாறி நுழைந்துவிட்டது போலிருந்தது.

 'வனதுர்க்கைக்கு ஒரு வணக்கத்தை போடுங்க' 

வணக்கத்தை போட்டுவிட்டு, ஆகாய கங்கையில் கால்களை கழுவிக்கொண்டு மரத்தின் கீழ் அமர்ந்தோம். அத்திரி என்ற ரிஷியும் அனுசூயா என்ற ரிஷிபத்தினியும் வாழ்ந்த இடமாம்.அங்கிருந்த அத்தி மரத்தை காட்டி, அவர் அங்கு தவம் செய்ததாக சொன்னார்கள். விபூதியின் வாசனை சூழ, அந்த,  பெரும் அத்தி மரத்தின் கீழ் தீபங்கள் ஏற்றினார்கள்.

'தாமிரபரணி, பாணதீர்த்தம் கூட தண்ணியில்லாம போகும்...இந்த ஆகாய கங்கை ஒருநாளும் ஓடாம இருக்காது' என்று பூசாரி சொன்னபோது, நைல் நதியைத் தேடி போகும் பயணம் போல, இந்த ஓடையை பின்பற்றி அதன் ஆரம்பத்துக்கு போனாலென்ன என்று விபரீத ஆசை முளைத்தது. 

உத்தராகண்ட் பயணத்தில்  ஒரு புத்தகத்தை வாசித்திருந்தேன். "The Adventurer's Handbook: Life Lessons from History's Great Explorers." (Mick Conefrey) எப்போது நினைத்தாலும் ஆச்சர்யமேற்படவைக்கும் - மனிதர்களை/சாகசங்களை பற்றிய புத்தகம். பனிமலை உச்சிகளை, காட்டின் இதயத்தை, கடலின் ஆழத்தை, ஆறுகளின் ஆரம்பத்தை, பாலைவனங்களிடையே வழிகளைத் தேடி அலைந்த மனிதர்களின் நூற்றாண்டுகளுக்கு  முன்பான அசாத்தியமான‌ பயணங்கள் பற்றிய கதை. 

அதில், நைல் நதியின் ஆரம்பத்தை தேடிப்போகும் பயணம்  மறக்க இயலா பகுதி.( அதேபோல், பயணத்தின் இடையில்  கணவன் எதிர்பாராமல்  இறந்துவிட, அவன் தேடிச்சென்ற உலகின் மூலையை,  அவன் மறைந்தபின் வைராக்கியத்துடன் துணிவுடனும் தான் மேற்கொண்ட பெண்ணின் பயணமும் அசாத்தியமான  ஒன்று. )

எல்லோரும் பூஜையில் ஐக்கியமாகிவிட, நானும் பப்புவும் 'தங்கத் தாமரை மகள்களாக' ஆகாய கங்கையில் மாறி மாறி ஆசைதீர குளித்தோம். அடர்ந்த மரங்களின் கீழே திட்டு திட்டாக தெரிந்த வெயில் வட்டங்களில் நின்று குளிர் காய்ந்தோம். எதிரில் வனதுர்க்கை. துணைக்கு  அமர்ந்திருந்தது போல இருந்தது.

உற்று பார்த்ததில்,சட்டென ஒரு கோணத்தில் ரொம்ப பழகியவளாக தெரிந்தாள். இவளைத்தான் நாங்கள் கல்கத்தாவின் தெருக்களில்.... ஹுக்ளியின் படிக்கரையில்... ஹம்பியின் குகைகளில்... கண்ணூரின் தெய்யங்களில்..... துரத்துகிறோமா? :-)

Saturday, February 28, 2015

திகட்ட திகட்ட தண்ணீர் - தென்காசி பயணம்

இதே போன்ற, ஒரு சனிக்கிழமை காலையில்தான், பொதிகை விரைவு ரயிலில் சென்று இறங்கினோம், தென்காசிக்கு. அலுவலக நண்பரின் திருமணம். கிட்டதட்ட, இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடனே பார்த்திபன், டீமுக்கு சொல்லிவிட,  பேட்ச் பை பேட்சாக  முன்பதிவு செய்திருந்தார்கள்.  அதுவே, ஒரு தனி ப்ராஜக்ட் போன்றுதான் இருந்தது.

திருமணம் ஜனவரி 26. அதற்கு முன் இரண்டுதினங்கள்,  சரியாக வாரயிறுதி. குடும்பம்,குட்டி என்று  கிட்டதட்ட 35 பேர், எஸ் 6 பெட்டி வாசலில் குழுமியிருந்தோம். ஒருசிலருக்கு மட்டும் எஸ் 10. ஆரம்பத்தில், 'ஹாய் ஹலோ' என்று நலம் விசாரிப்புகள், பள்ளிக்கூட விபர பரிமாற்ற‌ங்கள்... 'என்ன சாப்பாடு', 'தண்ணி வாங்கணுமா' என்ற கவனிப்புகள்... ரயில் கிளம்ப, கொஞ்சம் கொஞ்சமாக பனிக்கட்டி விலக ஆரம்பித்தது. 

அடுத்தநாள் காலையில், மாப்பிள்ளையும் குடும்பமும் ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்க, தென்காசி எங்களை மொத்தமாக வாரி அள்ளிக்கொண்டது. அங்கு தங்கி யிருந்தது, மொத்தமே இரண்டு நாட்களே என்றாலும், ஏதோ பலகாலமாக அங்கேயே வாழ்ந்தது போன்ற உணர்வே ஏற்பட்டது. கல்லூரிகாலத்துக்கே சென்று மீண்டு வந்தது போல! நண்பர்களோடு செல்லும் பயணத்துக் கெல்லாம் இந்த உணர்வு வந்துவிடுவது,ஆச்சரியம்தான். இதே போன்று, இரண்டு வருடங்களுக்கு முன் சுபாஷின் திருமணத்துக்காக ராய்ச்சூர் மற்றும் ஹைதராபாத் சென்றது மனதிலேயே நிற்கிறது!

கைக்குழந்தை, குட்டிகளோடு இருந்தவர்கள், சற்று ஓய்வெடுக்க, தலை யணைக்கும், பாபநாசத்துக்கும் செல்ல ஒரு குழு கிளம்பியது. அந்த 'அடங்காத குழு'வில் நானும் பப்புவும் இருந்தோமென்று சொல்லவும் வேண்டுமா? 'சரி, எப்படின்னாலும் குளிக்கதானே போறோம், எதுக்கு ரூமிலே குளிச்சு, தண்ணியை வேற வீணாக்கிக்கிட்டு' என்று மாற்றுடையை கையில் சுருட்டிக்கொண்டோம்.

'குளிச்சுட்டு வந்தா பசிக்கும், அதனால, அதுக்கு முன்னாடி லைட்டா சாப்பிடலாம்'   என்று ஒருவருக்கு பல்பு எரிய, மொத்த குழுவுக்கும் அதே பல்பு எரிந்தது. ஓட்டுநரிடம் சொன்னதும், 'சூப்பர் ஓட்டல் ஒன்னு இருக்குங்க...போற வழியிலே, விட்டீங்கன்னு நாம போற வழியிலே வேற எங்கேயும் இல்லே' என்று ஒரு இடத்தில் நிறுத்தினார்.

பொட்டல்புதூர். வெஜ், நான் வெஜ் உணவகம். மட்டன்/சிக்கன் பிரியாணி, மட்டன் வறுவல், சுக்கா, மீன் வறுவல் ஆம்லேட், ஃபுல் மீல்ஸ், பரோட்டா,தயிர்,மோர்.....உணவு ஒரு பக்கம் என்றால், 'பரோட்டா வேணுமா, கொத்துபரோட்டா வேணுமா? இன்னொரு ஆம்லேட்? பாப்பாக்கு பிரியாணி?' என்று அவர்களது உபசரிப்பு மறுபக்கம்....ஆகா! என்ன ஒரு விருந்தோம்பல்! அங்கேயே சில ஆர்வக்கோளாறுகள் உணவை படமெடுக்க துவங்க, அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. மனமும், வயிறும் குளிர்ந்து, அவ்விடம் நீங்கி, சிலபல வாழைப்பழங்கள், புளிப்பு மிட்டாய்கள், லாலிபாப் சகிதம் வியாபாரத்தை முடித்துக்கொண்டு சென்ற இடம், தலையணை.


 
'இது அருவியல்ல, ஆறு மற்றும் அணை' என்பதை உணர்ந்துக்கொண்ட சில ஜீவன்கள், ' தண்ணின்னா கொட்டணும்...நேரா அருவிக்குத்தான்..எட்றா வண்டிய!' என்று அருவாள் பார்ட்டிகளாக மாறத்துவங்கினர். ஓட்டுநரது, 'இதுக்குமேலேல்லாம் இந்த வண்டி போகாதுங்க என்ற பருப்பெல்லாம் வேகவில்லை. அடுத்த ஸ்டாப் பாபநாசம்(அகஸ்தியர்?) அருவி. கொட்டும் தண்ணீரை பார்த்ததும், கர்ணனின் கவசகுண்டலம் போல கழுத்தில் மாட்டியிருந்த டிஎஸ்எல்ஆர் காமிராவை கழற்றி பெஞ்சின் மீது வைத்துவிட்டு, 'மச்சி டீ சொல்லேன்' ரேஞ்சின் 'மச்சி நீ பார்த்துக்கோ....தோ வந்துர்றேன்' என்று   உடமைகளை துறந்து அருவியை நோக்கி பாய்ந்தனர். நாங்கள், பெண்கள் பக்கம் ஒதுங்கினோம்.

 
 
அது எப்படிதான் அருவிகளுக்கென்று ஒரு தனி கடிகாரம்  இருக்கிறதோ தெரியவில்லை.இன்டர்ஸ்டெல்லரின் மில்லர் ப்ளானட் போல!  அருவிக்குள்  இருக்கும்போது என்னவோ, இப்போதுதான் வந்ததுபோல தோன்றுகிறது.   வெளியேறி சென்றபோதுதான், ஒன்றரைமணி நேரம் ஆடியிருக்கிறோம் என்பதே புரிகிறது.  'ஆத்திலேயும், தண்ணியிலேதானே ஆடப்போறோம்' என்று உடைமாற்ற சோம்பல்பட்டு, ஈரத்துணிகளோடு அடுத்த‌ ஸ்டாப்.... தலையணை! ஆகா...தண்ணீர்...தண்ணீர்...தண்ணீர்! திகட்ட திகட்ட தண்ணீர்!

கொட்டும் அருவியிலேயே மனமும் உடலும் குளிர்ந்து போனது.  தலையணையின் தளும்பிப்பாயும் தண்ணீரைப் பார்த்ததுமே, எல்லா கவலைகளும், பாரங்களும் கரைந்துபோயின. எருமை மாடுகள் போல, கிட்டதட்ட இரண்டரை அல்லது மூன்று மணிநேரம் ஊறிக்கிடந்தோம்.  நிமிர்ந்து பார்த்தால், பின்னால் பசுமையான மலைமுகடுகள். அதன் உச்சியில் சூரியன். மலையின் அடிவாரத்தில் அணைத்தண்ணீர்...நிரம்பிய நீர், சுவரைத்தாண்டி அருவியாக கொட்டும் நீரின் சத்தம்...கவலைகளை மறந்து சிரித்த கணங்கள்  அவை!

 

அணையின் தடுப்பை  மீறிப்பாயும் கட்டுக்கடங்காத நீரின் அழுத்தம் நம்மை அழுத்த, குதூகலத்துடன் கத்திக்கொண்டே, பிடிப்புக்காக  நீருக்குள்ளேயே  படிக்கட்டுகளை தேடிப் பிடித்துக்கொண்டு நின்றபோது....மனதின் எல்லா கசடுகளும், கவலைகளும், எதிர்கால குழப்பங்களும் காணாமலேபோனது!
அணையிலிருந்து நீர் தளும்பி வழியும் சுவரில் தலையை குப்புற வைத்து, தண்ணீர் நம் தலைவழியே கடந்து செல்லும்போது உண்டாகும் ஒலியில் மூச்சு முட்டிப்போனோம்.

தளும்பி வழியும் தண்ணீரை, எங்கள் மேலேயே அங்கியை போல் வழிய விட்டுக்கொண்டோம்.  சூரியன் மறையும் வரை அலுக்காமல் அங்கேயே ஆட்டம்.... செல்ஃபிகள்... ஃபோட்டோக்கள்...பப்புவுக்கு இனிய அனுபவம்.ஆரம்பத்தில் பயந்தாலும், பின்னர் தண்ணீரைவிட்டு வரவே இல்லை. ஜூரம் வந்து அடுத்தநாள், அத்திரி மலையேற்றம் தடைப்பட்டுவிடுமோ என்ற பயம் எனக்கு.

ஈர உடையுடன், நேராக பாபநாச சுவாமிகள் கோயில். முதன்முறையாக, கோயிலினுள் தமிழப்பாடல்கள் பாடி தீபாராதனை காட்ட, அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தோம். சாயங்காலம் ஆறு மணி பூஜையோ என்னவோ சொன்னார்கள்....ஒருவர் தலைமுதல் தோள்பட்டை வரை ஒரே ருத்ராட்சை மாலையாக போட்டுக்கொண்டு ஒவ்வொரு சன்னதியாக் அமர்ந்து தமிழில் பாடல்கள்(குனித்த புருவமும்?) பாட, தீபாராதனை நடக்கிறது.


 
இருட்டதுவங்க, மீண்டும் விடுதிக்கு பயணம். அங்கே ஒரு நொடியைக் கூட வீணாக்காமல், உடனே தயாராக, அடுத்து சென்றது, காசி விஸ்வநாதர் கோயில். கோபுரம் விண்ணை முட்டி நிற்க, உடனே செல்ஃபிக்கள்... செல்ஃபிக்கள் பின்னர் குருப்பிகளாக....

கோயிலில், பக்திமான்கள் பூஜைக்கு செல்ல, நானும் பப்புவும் சங்கீதத் தூண்களை ஆராயத்துவங்கினோம். எங்கள் ஆர்வத்தால் கவரப்பெற்ற தீபங்கள் விற்பவர், எங்களை விசாரித்தார்.  'இந்த ஊர்க்காரங்களுக்கே தெரியாது இதெல்லாம்' என்று சொன்னப்படி தூண்களிலிருந்து ஸ்வரங்களை வரவழைத்தார். இந்த கோயிலின் முகப்பிலிருக்கும், ஆளுயர சிலைகள் அற்புதம்.

புளியோதரையும், லட்டுவும், அதிரசமும் வாங்கி அங்கேயே குழுவாக அமர்ந்து சிற்றுண்டியை முடித்தோம். வெளியில் வந்து அடுத்தநாள் மலையேற்றத்துக்காக பழங்களை வாங்கினோம். ஒரு மூலையில் மறைந்திருந்த 'லாலா புராதான மிட்டாய்க்கடை'யில் அல்வாவை காக்கைகள் போல பகிர்ந்துண்டு ருசித்தோம்.  அருகிலிருந்த உணவகத்தில் நுழைந்து இட்லியும், பரோட்டாவும், பனங்கல்கண்டு போட்ட‌ மிளகுப்பாலும் அருந்தினோம்.

ஏற்கெனவே, அத்திரிக்கு இரண்டுமுறை சென்று வந்திருந்த ரகுவை இப்போது 'குரு'வாக்கியிருந்தோம். அவரும், குருவாகவே மாறி,  மலையேற வேண்டுமானால் ஆறு மணிக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கட்டளை யிட்டிருந்தார். 'தொல்லை விட்டுச்சுன்னு எங்களை விட்டுட்டு போய்டாதீங்கய்யா...அஞ்சு மணிக்கு எழுந்ததும், மிஸ்ட் கால் கொடுத்து எங்களையும் எழுப்பி விட்டுடுங்க' என்று பொறுப்பளித்துவிட்டு உறங்கினோம்.

கனவிலெல்லாம், தண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது.... மேலே மேலே வந்து அழுத்தியது! முதுகில், தோள்பட்டையிலெல்லாம் படபடவென்றும் தொப் தொப்பென்றும் விழுந்தது.உறக்கத்திலேயே அருவி மாற்றி அருவியாக காடுகளுக்குள் நாங்களும் பயணித்தோம். அணையின் கற்படிக்கட்டுகளில் , நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மூச்சடைத்துப்போய் 'ஹோ' வென கத்திக்கொண்டிருந்தோம். நீரைக் கிழித்து, மாலையாக இருதோள் களிலும் போட்டுக் கொண்டு மலையடிவாரத்தில் நின்றுக் கொண்டிருந்தோம்.

 
 
குறிப்பு: முதல்நாள் குற்றாலம், அடுத்தநாள் முஸ்தபா இல்லத்திருமணம் என்றுதான் திட்டம். பாதிவழியிலேயே,  மலையேறுவதற்கான திடீர் குழு உருவாகி, எங்களையும் இழுத்துப்போட்டுக்கொண்ட‌தில், தனியாக வர இயலவில்லை. தம்பி முஸ்தபா மன்னிக்கவும். ஆனாலும், உங்கள் பெருந்தன்மை ம்ஹூம்!! சான்சே இல்லை! வந்திருந்தால், ப்ளஸ் மக்களையும் சந்தித்திருக்கலாம்.

தங்கள் தம்பிக்கும், அவரது மனைவிக்கும் திருமண வாழ்த்துகள்! அம்பா சமுத்திரத்தின் தேவதையைக் காண இன்னொருமுறை வருகிறோம் :‍)