Monday, March 02, 2015

அத்திரி மலை ட்ரெக்கிங் ‍- ‍ தென்காசி பயணம்

வேனுள் அமர்ந்தபோது மணி ஆறேகால். 'ரிசர்வ் காடென்பதால் காமிராவுக்கு அனுமதியில்லை. மொபைல் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்' என்ற ரகு கொடுத்த எச்சரிக்கை மணியால் கேமிரா தூக்கும்வேலை மிச்சம். போகும் வழியிலேயே ஒரு அணை வரும், அணையை கடந்தால் ஒரு ஆறு, அந்த ஆற்றில் குளித்துவிட்டு மலையேற்றம் என்றெல்லாம் லேசுபாசாக பேசிக்கொண்டிருந்ததில் எல்லோரும்  ஆர்வக்குட்டிகளாக மாறியிருந்தோம். தன்னுடன் தொடர்பிலிருந்த இரண்டு உள்ளூர் மக்களை அழைந்திருந்தார், ரகு.

கடையம், ஆழ்வார்க்குறிச்சியெல்லாம் தாண்டி ஒரு இடத்தில் வண்டி நின்றது. அவ்வளவு காலையிலேயே, சில கடைகளில் பூரி சுட்டு வைத்திருந்தார்கள்.  சுட சுட ஆவி பறக்க தட்டில் வடை. 'காலையிலே ரொம்ப சாப்பிடகூடாது, அப்புறம் ஏற முடியாது' என்ற கட்டளை எங்கிருந்தோ வர‌, 'போற வரைக்கும் நாம என்ன சாப்பிடணும், என்ன குடிக்கணும்னு இந்த பாய்ஸ்தான் முடிவு பண்ணு வாங்கஜி...' என்ற கமெண்ட் சைடில் வந்தது. 

ரகு அன்ட் கோ காலை மற்றும் மதிய உணவு வாங்க சென்றதும், கும்பல் வடையை நோக்கி பாய, நாங்கள் 'சூப்பர் டீ ஸ்டாலில்'  டீ குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். சைடீல் வடை. உடனே, வடை மற்றும் டீயோடு செல்ஃபி.... குருப்பி... ஆளாளுக்கு அவரவர் மொபைலில் குருப் செல்ஃபிகளை எடுத்து சூப்பர் டீ ஸ்டால், ஆழ்வார்குறிச்சியை ஒரு பிரபல டீக்கடையாக்கினோம்.

இட்லி வந்துவிட, திரும்ப பயணம். ஆம்பூர், கீழஆம்பூர் என்று பலகைகளை பார்த்ததும், 'நாம் எங்கு இருக்கிறோம்' என்ற  தோற்றப்பிழை எனக்கு. 


சும்மா, சொல்லக் கூடாது...வழியெல்லாம் பசுமை... பசுமை... வாழை மரங்கள், அதைத்தாண்டி தென்னை மரங்கள், உயர்ந்த மலை முகடுகள்...அவற்றை தழுவிப்பரவும் மேகங்கள்... இடையில் பறக்கும் வெள்ளை இபிஸ்கள்...இறுதியாக, கடனாநதி அணைக்கட்டு வாயிலில் இறக்கி விடப் பட்டோம்.அணை..பின்னால் மலைகள்.. அணை வாயிலில் ஒரு ஆலமரம்... லேசான குளிர்காற்று...களக்காடு புலிகள் சரணாலயம் என்ற பலகை வேறு எங்களை பார்த்து லேசாக உறுமியது.

ஆளுக்கொரு இட்லி பார்சலை எடுத்துக்கொண்டு ஆலமரத்தடியில் குழுமினோம். பிரித்தால் இரண்டு இட்லிகள்...ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்...யானைப்பசிக்கு? 'வேற வழியேல்ல..நாம போறவரைக்கும் என்ன சாப்பிடணும்..' பொட்டலத்தை பிரித்துவிட்டு யதேச்சையாக திரும்பினால், ஆகா...முன்னோர்கள் தயாராக காத்திருக்கிறார்கள்.. எப்படியோ அவர்களிடமிருந்து இட்லியை காப்பாற்றினோம்.

உள்ளூர் மக்களில் ஒருவர் அத்திரி மலைமேலிருக்கும் கோயில் பூசாரி. கடனா அணையின் நீரற்ற பகுதி வழியே நடத்திச் சென்றார்.  தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த பகுதி. சேறாக குழம்பி கிடந்தது. தனது செருப்பில் சேறாகி விட்டது என்று புகார் சொன்ன பப்புவுக்கு, வழுக்கி விழுந்தவரை எடுத்துக்காட்டாக காட்டினார்கள். மலையடிவாரத்தை அடைந்தோம். குறுக்கிட்ட சிறு ஓடையை 'அத்திரிபாட்சா'வாக தாண்டினோம். சில தப்படிகளிலேயே, சலசலவென ஆறு ஓடும் சப்தம்.  கூடவே, சில குருவிகளின் சப்தம். ஆகா!

ஆற்றை வந்தடைந்தோம்.  "உசிரே போகுதே...உசிரே போகுதே" என்று பாடவில்லையே தவிர..

கோயிலுக்கும் சில குடும்பங்கள் ஆற்றின் குறுக்கே இருந்த கயிறை பிடித்து கடந்து சென்றனர். 'குளிச்சுட்டு வர்றவங்க மேற்கால போங்க. கோயிலுக்கு போறவங்க இந்த வழியாக வாங்க' என்றதும் நாங்கள் சிட்டாக பறந்தோம். சில்லென்ற தண்ணீர். இதுவரை நடந்த கால்களுக்கு இதமாக இருந்தது. 

'பாறை மேல கால் வைக்காதீங்க. வழுக்கும்..கீழே மணலை பார்த்து வைங்க' என்று ரகுவின் ஆலோசனை பின்னாலிருந்து வந்தது.  'சொன்னா அதுக்கு அப்படியே நேரெதிரா செஞ்சுதானே பழக்கம்'. பப்பு மிகச்சரியா பாறையை பார்த்துதான் காலை வைத்தாள். அவளது கையை பிடித்திருந்த நானும், பேலன்ஸூக்காக நடனமாட வேண்டியிருந்தது.

'இந்த சில் தண்ணீலியா குளிக்கப்போறோம்' என்று நினைக்கும்போதே, தேவி நீரை வாறி மேலே தெளிக்க அவ்வளவுதான்... யாருமற்ற அந்த வனாந்தர பின்னணியில், பாறைகள் வழியாக சலங்கை கட்டி வரும் தெளிந்த ஆற்றுத்தண்ணீரை சில்லிப்பை அனுபவித்து கிடந்தோம்.

'மெதுவாக' 'மெதுவாக' என்று நடந்து கிட்டதட்ட தண்ணீர் கொட்டும் பகுதிக்கு வந்துவிட்டிருந்தோம். நாங்கள் ஆற அமர கழுத்து வரையிலான நீரில் முங்கி  நீராடிக் கொண்டிருக்க, கோயில் பூசாரி, எங்களை எதிர்பார்க்காமல் தலையை முங்கிவிட்டு நடையை கட்டியிருந்தார். ஆற்றை கடந்து மலையில் ஏறினோம். அடர்ந்த காட்டு மரங்கள்... ஒற்றையடி பாதை. அவ்வப்போது மயிலொன்று அகவும் சப்தம். எங்களைத் தவிர வேறு நடமாட்டமில்லை. எங்களுக்கு முன்னால் வந்தவர்கள் போன வழி தெரியவில்லை.

சாரிசாரியாக கட்டெறும்புகள். 'மிறிச்சுடாதீங்க...தாண்டி வாங்க' என்ற குரலெல்லாம் இந்த கம்ப்யூட்டர் காட்டுமிராண்டி கூட்டத்தில் எடுபடுமா? கட்டெறும்பு கூட்டம் அல்லோலகல்லோலப்பட்டு  'விட்டால் போதுமென்று' எங்களை கடந்து ஓடியது. சேதம்,  ஆளுக்கு இரண்டு மூன்று கடிகள் மட்டுமே! எப்படியோ கட்டெறும்பு பிரதேசத்தை தாண்டினால், திரும்பவும் சலசல! நீரூற்றுதான்...நீருற்றோடு செஃல்பி.. நீரை பிடித்து குடிப்பது போல ஃபோட்டோ..சுலபமான பாதைதான். ஆங்காங்கே மட்டும் செங்குத்தாக இருந்தது. ஆனால், வெயில் விழாத இடமென்பதால், வழுக்குப்பாதையாக இருந்தது. மண்ணும் நல்ல ஈரப்பதமாக இருக்கவே, பார்த்து அடியெடுத்து வைக்க வேண்டும். இறுதியாக, ஒரு குகை போன்ற அமைப்பை அடைந்தோம்.பச்சை வர்ணம் அடித்தது போல‌ அவ்வளவு பச்சையாக இருந்தது அந்த இடம். இந்த மலையே சித்தர்கள்,ரிஷிகள் வாழ்ந்த இடமாக சொல்லப்படுகிறது.

பழனி முருகன் சிலையை  செய்தபிறகு, மிஞ்சிய நவபாஷாணத்தை போகர் இங்கு பூசி விட்டதாக சொன்னார்கள். அதற்கு வலப்பக்கத்தில் பிரிந்த இன்னொரு வழியில், மசூதி இருந்தது. சித்தரை பின்பற்றிய ஒருவருக்கு உதவி செய்த முஸ்லீம் ஒருவரின் சமாதி என்றனர் சிலர். இந்த குகைக்கு பிறகு ஆரம்பிக்கும் பாதையே உண்மையான மலையேற்றம். செங்குத்தான பாதை. ஆங்காங்கே படிகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். கிட்டதட்ட முக்கால் மணிநேரம் நீடிக்கும் இந்த செங்குத்தான மலையேற்றம், ஒரு கோயிலின் முகப்பில் முடிவடைகிறது.

முகப்பிலேயே எதிர்கொள்கிறாள், 'வனதுர்க்கை'.

வனத்தின் அமைதி. இளங்குளிர். அருகில் ஓடி கொண்டிருக்கும் ஆகாயகங்கை. மயில் அகவும் சப்தம். வெயில்படாத லேசான வெளிச்சம். சிவப்பு புடவையில், மரத்தின்கீழ் வனதுர்க்கை. எங்கோ மாயக்கதைகளுக்குள் வழிமாறி நுழைந்துவிட்டது போலிருந்தது.

 'வனதுர்க்கைக்கு ஒரு வணக்கத்தை போடுங்க' 

வணக்கத்தை போட்டுவிட்டு, ஆகாய கங்கையில் கால்களை கழுவிக்கொண்டு மரத்தின் கீழ் அமர்ந்தோம். அத்திரி என்ற ரிஷியும் அனுசூயா என்ற ரிஷிபத்தினியும் வாழ்ந்த இடமாம்.அங்கிருந்த அத்தி மரத்தை காட்டி, அவர் அங்கு தவம் செய்ததாக சொன்னார்கள். விபூதியின் வாசனை சூழ, அந்த,  பெரும் அத்தி மரத்தின் கீழ் தீபங்கள் ஏற்றினார்கள்.

'தாமிரபரணி, பாணதீர்த்தம் கூட தண்ணியில்லாம போகும்...இந்த ஆகாய கங்கை ஒருநாளும் ஓடாம இருக்காது' என்று பூசாரி சொன்னபோது, நைல் நதியைத் தேடி போகும் பயணம் போல, இந்த ஓடையை பின்பற்றி அதன் ஆரம்பத்துக்கு போனாலென்ன என்று விபரீத ஆசை முளைத்தது. 

உத்தராகண்ட் பயணத்தில்  ஒரு புத்தகத்தை வாசித்திருந்தேன். "The Adventurer's Handbook: Life Lessons from History's Great Explorers." (Mick Conefrey) எப்போது நினைத்தாலும் ஆச்சர்யமேற்படவைக்கும் - மனிதர்களை/சாகசங்களை பற்றிய புத்தகம். பனிமலை உச்சிகளை, காட்டின் இதயத்தை, கடலின் ஆழத்தை, ஆறுகளின் ஆரம்பத்தை, பாலைவனங்களிடையே வழிகளைத் தேடி அலைந்த மனிதர்களின் நூற்றாண்டுகளுக்கு  முன்பான அசாத்தியமான‌ பயணங்கள் பற்றிய கதை. 

அதில், நைல் நதியின் ஆரம்பத்தை தேடிப்போகும் பயணம்  மறக்க இயலா பகுதி.( அதேபோல், பயணத்தின் இடையில்  கணவன் எதிர்பாராமல்  இறந்துவிட, அவன் தேடிச்சென்ற உலகின் மூலையை,  அவன் மறைந்தபின் வைராக்கியத்துடன் துணிவுடனும் தான் மேற்கொண்ட பெண்ணின் பயணமும் அசாத்தியமான  ஒன்று. )

எல்லோரும் பூஜையில் ஐக்கியமாகிவிட, நானும் பப்புவும் 'தங்கத் தாமரை மகள்களாக' ஆகாய கங்கையில் மாறி மாறி ஆசைதீர குளித்தோம். அடர்ந்த மரங்களின் கீழே திட்டு திட்டாக தெரிந்த வெயில் வட்டங்களில் நின்று குளிர் காய்ந்தோம். எதிரில் வனதுர்க்கை. துணைக்கு  அமர்ந்திருந்தது போல இருந்தது.

உற்று பார்த்ததில்,சட்டென ஒரு கோணத்தில் ரொம்ப பழகியவளாக தெரிந்தாள். இவளைத்தான் நாங்கள் கல்கத்தாவின் தெருக்களில்.... ஹுக்ளியின் படிக்கரையில்... ஹம்பியின் குகைகளில்... கண்ணூரின் தெய்யங்களில்..... துரத்துகிறோமா? :-)

4 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

தொடர்ந்து கொண்டிருக்கிறேன்..

VIJAY BALA said...

இந்த இடத்திற்கு சென்று தெய்வங்களை வணங்கி வந்தவர்களில் நானும் ஒருவன். உங்களின் எழுத்துநடையை படிக்க படிக்க அத்ரி மலைக்கே சென்று வந்தது போல் ஓர் உணர்ச்சி. வாழ்த்துக்கள்.. தொடரட்டும் இந்த உரைநடை..

VIJAY BALA said...

அருமையான உரைநடை. வாழ்த்துக்கள்

VIJAY BALA said...

உங்கள் உரைநடையினை படிக்க படிக்க அத்ரிமலைக்கே சென்று வந்தது போல் ஒரு உணர்ச்சி. வாழ்த்துக்கள்.