Sunday, March 15, 2015

"மண் பொம்மை" - காளீந்திசரண் பாணிக்ராஹி

"மண் பொம்மை" என்ற ஒரிய நாவலை வாசித்த போது எனக்கு வடலூரும்,  பழைய வீடும், பாகம் பிரிக்கப்பட்டிராத -அந்த வீட்டில் - இப்போது பழையதாகிப் போன அந்த  நாட்களில் நாங்கள் ஓடியாடி விளையாடிய மகிழ்ச்சியான குரல்களும், எங்களை விளித்துக் கொண்டிருக்கும் பெரியவர்களின் குரல்களுமாக சித்திரங்கள் விரிந்தன.

எல்லா வீட்டிற்கும் இப்படி  ஒரு கதை இருக்கும்தானே. - பாகப்பிரிவினைக்கு முன்; பாகப்பிரிவினைக்கு முன் என்று! ரொம்ப ஆடம்பரமில்லாவிட்டாலும் ஓரளவுக்கு வசதி படைத்த குடும்பம், அன்பையே வாரி இறைக்கும் சில பல‌ மாமா அத்தைகள் அல்லது சித்தப்பா சித்திகள், கள்ளம் கபடமில்லாத குழந்தைகள்...பாகம் பிரிக்கப்படாத ஒன்றான குடும்பம்...குதூகலமான விடுமுறை நாட்கள்,மாடுகள்  - கன்றுகள், கனவு போல் தோன்றும் பண்டிகை நாட்கள்.... அப்படியான ஒரு கதை எங்கள் வடலூர் வீட்டிற்கும் இருந்தது. 

அன்பான இரண்டு மாமா பெரிய மாமா சின்ன மாமா, பெரிய அத்தை, சின்ன அத்தை,  பின்னாலிருக்கும் கொல்லையும், பழமையான இரண்டடுக்கு கிணறும், கொல்லையை சுற்றி வேலியாக நின்றிருந்த பனைமரங்களும், மரங்களினடியில் காலங்காலமாக குடியிருக்கும் புற்றுகளும்.....

 சாயங்காலம் விளக்கேற்றியதும் 'பின்கதவை சாத்தணும்' என்று ஏதோ கட்டளைபோல் ஓடி போய் போட்டியிட்டு சாத்திய கொல்லைகதவுகள், எங்கள் அடி உதைகளை தாங்கிய நெல்லிக்காய் மரம், ஒளிந்து விளையாட தோதான நாவல் மரம்,  தெனாலி ராமன் கதையை கேட்டு, அதே போல் திருடன் ஒளிந்தி ருப்பானோவென்று  இரவில் கைக்கழுவிய சொம்பு நீரை தூக்கி ஊற்றிப்பார்த்து  எழும் சலசலப்பை கேட்டு கற்பனைக்கு பயந்து வெறித்து வெறித்து பார்த்த மருதாணி மற்றும் குண்டுமல்லி புதர் என்று எங்கள் குழந்தைப்பருவத்தை தாங்கி நின்ற வீடு அது.

ஒவ்வொரு விடுமுறைக்கும் தவறாது சென்றாலும், வீட்டில் ஒரு சுவர் கண்ணுக்கு தெரியாம எழும்பி வருவது குழந்தைகளான எங்கள் கண்களுக்கு தெரியவில்லை. ஏதோ ஒரு விடுமுறையில் , அந்த சுவர் பெரிய ஆனால் தனி வீடாகவே மாறி இருந்தது. மற்றொரு மாமாவுக்கு எஞ்சியதோ, பழைய வீட்டின் பூச்சுகள் பெயர்ந்த ஒரு அறையும் முன்னாலிருந்த அவசரக் கொட்டகையும்.

இறுதியில், எல்லோரும் அவர்வர்க்கான கூடுகளை கட்டிக்கொண்டாலும், எங்களுக்கான‌ அன்பான நினைவுகளை நவநாகரிகமான‌ அந்த வீடுகளால் தர இயலவில்லை.

என்னதான், காந்திய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர்களால் மண்ணையும், ஆயாவின் மனதையும் கீறி இரணமாக்குவதை தவிர்க்க முடியவில்லை.   

ஒரிசாவின், பதான்படா என்ற பழஞ்சிறு கிராமத்தில் வசிக்கும் சாம்பதானுக்கும் இரண்டு மகன்கள் இருந்தனர். பர்ஜூ மற்றும் சக்டி. ஒன்றான கூட்டுக்குடும்பம், மூத்த மருமகள், இளைய மருமகள் மற்றும் அவர்களின் குழந்தைகள். சாம்பதான் இருந்தவரை ஒன்றாக மகிழ்ச்சியாக இருந்த குடும்பம், பதான் இறந்ததும் விரிசல் விடத் துவங்குகிறது.

மூத்த மருமகளுக்கும், இளைய மருமகளுக்கும் இடையிலான புகைமூட்டங்கள் நாசியை அடைக்கத் துவங்குகின்றன. அண்ணனின் குழந்தைகளை தன் குழந்தைகளாகவே பாவிக்கும் சக்டியும், மனைவி நேத்ரமணிக்காக மாறத் துவங்குகிறான். யார் சமைப்பது, பாத்திரம் கழுவுவது என்பதிலிருந்து ஆரம்பிக்கும் ஓரகத்திகளின்  பனிப்போர், உச்சத்தை அடைந்து அவ்வப்போது அண்ணன் தம்பிகளையும் அடையத் துவங்குகிறது.

நில புலன்,சொத்துகள் எல்லா உரிமைகளும் கிராமத்து வழக்கப்படி, மூத்தவன் பர்ஜூவிடமே இருக்கிறது. தம்பியின் மேலிட்ட பாசத்தால் அவனுக்கு எந்த தொல்லைகளும் தரவிரும்பாமல் வயல்  வேலைகள் அனைத்தையும் அண்ணனே  பார்த்துக் கொள்கிறான்.
ஒரே குடும்பமாக எண்ணி குடும்பச் செலவுகளையும் அவனே செய்கிறான்.

தத்தம், மனைவிகளுக்கிடையிலே நடக்கும் பூசல்களை அறிந்தாலும் அண்ணனும் தம்பியும் இதனை சட்டை செய்ததில்லை. இப்படியிருக்க குடும்பத்தில் ஒரு கொண்டாட்டம் வருகிறது. பர்ஜூவின் மூத்த மகளின் திருமணம்.

அதற்கு, ஆன செலவைப் பற்றி கேள்விகளும், பயங்களும் இளைய மகன் மனதில் வித்தாக விழ பாகப்பிரிவினை வேர் விடத் தொடங்கிறது. ஆனாலும் எதையும் அண்ணனிடம் நேரடியாகக் கேட்க சக்டிக்கு பயம்.

அந்த பயத்தைப் போக்க சக்டிக்கு தூபம் போடுகிறான், மிச்ரஜி. வட்டிக்கு கொடுத்து ஏழைகளிடம் அபகரிக்கும் பிராமணன். அவனது வழிகாட்டுதலில், தனியாக கடையும் வைக்கிறான். அண்ணியிடம் சண்டையிட்டு தன் பங்கு விளைச்சலையும் தனியாக கேட்டு வாங்கி வைத்துக் கொள்கிறான்.

இவையெல்லாம் தெரிந்தும் பதான் அமைதியாகவே இருக்கிறான். எது கேட்டாலும் கொடுத்துவிடுமாறும், இளையவளிடம் வம்பு சண்டைக்கு போக வேண்டாமென்றும் வலியுறுத்துகிறான்.

பாகப் பிரிவினையை, இந்த வீட்டுக்குள் சுவர் எழும்புவதை தான் உயிரோடு இருக்கும்வரை அனுமதிக்க மாட்டென்று தனக்குள் சொல்லிகொள்கிறான். இறக்கும் தறுவாயில் தந்தைக்கு தான் செய்துக்கொடுத்த வாக்கை நினைவு கொள்கிறான்.

பாகப்பிரிவினையை பற்றி தம்பி, அண்ணன் முன் வெளிப்படையாகவே பேசத்துவங்க, அண்ணனும் தம்பியிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறான். பிறகு,  தனது மனைவியிடமும்,மகளிடமும் சொல்லிவிட்டு வெளியில் செல்கிறான்.

மாலையில், அண்ணனின் குடும்பம் தங்களுக்குத் தேவையான பழைய உடைகளை மாத்திரம் மூட்டைக் கட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறது. அதாவது,  தம்பி கேட்டது போல் பிரிந்து போகிறார்கள்.   ஆனால், சொத்து சுதந்திரத்தில் பிரிவினையே கிடையாது. வரப்பும் உயராது. வீட்டுக்குள் சுவர் எழும்பாது.

'ஒன்றும் பாதிப்பாதியாக பங்கிடப்படக்கூடாது. எது எப்படியிருக்கிறதோ அது அப்படியே இருக்க வேண்டும்' என்ற தந்தையின் வாக்குக்காக, தோட்டம் - துரவு, நிலம் -நெல், பசு - எருமை, பானைகள் என்று எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு தனியாக பிரிந்து போகிறார்கள். சண்டையையும்,  தன் பங்கையும் மட்டுமே எதிர்பார்த்த சக்டி, விக்கித்து நிற்கிறான். பர்ஜூ பேசியதை,அவனால் புரிந்துக் கொள்ளவே இயலவில்லை.

 அண்ணியிடமிருந்து சாவிக்கொத்தை கொடுத்தபின் அண்ணன் பிரிந்து சென்றுவிட, சக்டி கலக்கமுறுகிறான். தான் செய்த காரியத்தின் வீரியம் விளங்க, நிம்மதியை இழக்கிறான்.  கல்கத்தா சென்று பிழைத்துக்கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் அண்ணனை எந்த வழியில்  சென்று தேடுவது என்று தவிக்கிறான்.

 அண்ணன் இராத்தங்கியிருக்கும் இடம் தெரிய, விடியும் வரை அந்த வீட்டின் முன் காத்திருக்கிறான்.

காலையில் வீட்டுவாசலில் சக்டியை கண்டதும், 'எங்கே வந்தாயென்று' பதான் வினவ, 'நானும் உன்னுடனே வருகிறேன்' என்கிறான் சக்டி. மெல்லிய குரலில், அவனை செல்லமாக‌ கடிந்துக் கொள்வதோடு முடிகிறது நாவல்.

நாவல் முழுவதும்,  பெருந்தன்மையும், அன்பும், கருணையும் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான் பதான். மாறாக, சக்டி,  தான் செய்வதன்,பேசுவதன் விளைவுகளை யோசித்துப்பார்க்காத  விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறான். மூத்தவன் பொறுப்பும், பொறுமையும், தந்தையின் பெயரை காப்பாற்றுவது போல நேர்மையும் கொண்டவனாக இருக்கிறான்.

சக்டியோ, தன் மனைவி நேத்ரமணியின் பேச்சைக் கேட்டு சொந்த அண்ணனையும், அவனது குழந்தைகளையும் வேறு படுத்திக்கொள்கிறான்.

'பாகப்பிரிவினை ' பற்றி கிராமத்தார்கள் அரசல் புரசலாக மூத்தவனிடம் பேசினாலும் சக்டியாக வாயைத் திறக்கும்வரை எந்த புறணிக்கும் பதான் காது கொடுப்பதில்லை.  பாகப்பிரிவினை என்ற பேச்செடுத்ததும், 'எல்லாம் உன்னுடையது' என்று தம்பியிடம் கொடுத்துவிட்டு சத்யாகிரகம் செய்கிறான்.

பாகப்பிரிவினை இல்லாத வீடுகள் இந்தியாவில் ஏது? அம்பானி வீடானாலும், மாறன் பிரதர்ஸ் ஆனாலும் சொத்து பிரிவினை எல்லா இடத்திலும்தான் இருக்கிறது.

ஆனாலும், எந்த அண்ணனும், தன் தம்பிகளுக்கு அல்லது தமக்கைகளுக்கு முழுமையாக விட்டுக் கொடுத்து விடுவதில்லை. பதானைப் போல் முழுமையாக வெளியேறி விடுவதுமில்லை.ஏன், ஒருவரும் மற்றொருவருக்கான பங்கை கொடுப்பதற்கே சிலபல பஞ்சாயத்துகள் வேண்டியிருக்கிறது. சிவில் கேஸ்கள், தலைமுறைகளாக இழுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், காந்தியைப் போல், விட்டு கொடுத்துவிட்டு செல்வது நாவலுக்குதான் சரி. இயல்பாக ஏற்கமுடியவில்லை.

இந்த நாவலின் நன்றியுரையில் ஆசிரியர், தான் கேள்விப்பட்ட ஒரு அண்ணன் தம்பி கதையை விரித்து எழுதிப் பார்த்ததாக சொல்லியிருக்கிறார்.

காந்திய கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, அந்த காலகட்டத்தில் உண்மையாக‌ நிகழ்ந்ததாக கூட இருக்கலாம்.  நிலபுலன்களை விற்றும், தங்க அணிகலன்களையும் காந்தியின் கொள்கைகளுக்காக தியாகம் செய்த வரலாறு கண்முன்னே இருக்கும்போது, ஒரியாவிலும் நிகழக் கூடாதா என்ன?.

வாசிக்கும்போது,பிரச்சார நாவலாக தென்படவில்லை. ஆனால் பதான் என்ற மனிதன் பிம்பத்தில் நாம்  காந்தி  உறைந்து நிற்பதை உணரலாம்.

ஆங்காங்கே நிறைந்திருக்கும் நாட்டுப்புற பாடல்களும், பழமொழிகளும், ஒரிய கிராமத்து வழக்கங்களும், சமையலும், ஒரிய பண்பாட்டு விழுமியங்களும் சாதிய மனப்போக்குமாக‌ ஒரு துண்டு ஒரிசாவின் கிராமத்தை விண்டு காட்டுகிறது நாவல்.  பெயர்களை மட்டும் மாற்றிவிட்டால், மொழிபெயர்ப்பு நாவலென்று சொல்லமுடியாது. அவ்வளவு நேர்த்தி!

வாசிக்க சுவையான, அவ்வப்போது நம் வீட்டுக் கதைகளையும் நினைவுபடுத்துகிற கிராமத்து அண்ணன் தம்பி கதை.

ஒருவேளை, 'உங்கள் தாத்தாவும் காந்தியவாதியாக இருந்தார்', 'இராட்டையில் அவரே நூல் நூற்று கதரை த்தான் உடுத்தினார்', 'சொன்ன சொல் மாறாமல் வாழ்ந்தார்', 'நெளிவு சுளிவாக கணக்கு எழுததால் பிறரால் வஞ்சிக்கப்பட்டு வேலையை இழந்தார்' அல்லது 'அதிகாரிகள் நேர்மையாக இல்லாத இடத்தில் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் வேலையை உதறிவிட்டு வந்தார்'  என்று பிள்ளை பிராயத்தில் உங்களுக்குச் சொல்லப் பட்டிருந்தால், அந்த தாத்தாவை நீங்கள் 'மண் பொம்மை'யில் தரிசிக்கலாம்.


நாவல்: மண் பொம்மை
காளீந்திசரண் பாணிக்ராஹி (தமிழாக்கம் : ரா வீழிநாதன்)
வெளியீடு: சாகித்ய அகாதமி
விலை: ரூ 60
பக்கங்கள்: 153

1 comment:

காமராஜ் said...

ஆம் இது மிகச்சிறந்த நாவல்.