Showing posts with label பப்புவுக்கு கடிதங்கள். Show all posts
Showing posts with label பப்புவுக்கு கடிதங்கள். Show all posts

Wednesday, September 08, 2010

v4.0- v4.10

எனதன்பு பப்பு,

இதை எழுதத் தொடங்குமுன்பு பலவித எண்ணவோட்டங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஆளாகியிருக்கிறேன். வெகுவிரைவில் நீ ஒரு ஐந்து வயது சிறுமி! ஒவ்வொரு வருடமும் சொல்வது போலத்தான் ‍- இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறேனென்று தெரியவில்லை...இப்போதுதான் நீயும் நானும் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்தது போலிருக்கிறது...ஆயா தனது சுருக்கங்கள் விழுந்த கையை நீட்டி வாஞ்சையுடன் உன்னை வாங்கி முத்தமிட்டது கண்முன் நிற்கிறது... வீட்டுக்கு வரும் போது நீ அணிந்திருந்த‌ அந்த ஊதா வண்ண உடையையும், நான் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நைட்டியையும் இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.. .எதற்கென்றே தெரியாமல். நமது உடைகளின் வாசமும் இன்னமும் என் நினைவில்!
ஹாஸ்பிடல் அறை எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் 96 என்று மட்டும் ஞாபகம் இருக்கிறது. (296 ஆ அல்லது 396 ஆ என்று மறந்து போய் விட்டது.) நீ வளர வளர இப்படி ஒவ்வொன்றாக நினைவிலிருந்து உதிரத் தொடங்கும் போல! தொட்டிலில் உன்னை பார்க்கும் போதெல்லாம்-‍ உடனேயே நீ வளர்ந்து பள்ளிக்கோ-கல்லூரிக்கோ சென்று விட்டாலென்ன என்றே தோன்றியது நினைவுக்கு வருகிறது. ‍ எப்படி பொறுப்பாக, பொறுமையாக‌ நான் இருக்கப் போகிறேன்? உனக்குத் தெரியுமா பப்பு, ஒரு குழந்தையை அதன் அறியாமையோடு ,உள்ளார்ந்து நேசித்து, வளர்க்குமளவிற்கு பொறுமையும் பக்குவமும் தனக்கிருக்கிறதா என்று கவலைப்பட்ட முட்டாளை? அந்த முட்டாளை நீ உனது லெவலுக்கு உயர்த்தினாய்...!

இந்த ஒரு வருடத்தில் உனக்குச் சொல்லத்தான் எவ்வளவு இருக்கிறது, பப்பு, ‍ உன்னைப் பற்றியும், என்னைப் பற்றியும், மேலாக நம்மைப் பற்றியும்! நீ கடந்து வந்த ஒவ்வொரு மாற்றங்களையும் உணர்ந்திருந்தாலும்-சென்ற நான்கு வருடங்களில் நிகழ்ந்த மாற்றங்களைவிட இந்த ஒரு வருடத்தில் நீ கடந்தவையும், அடைந்தவையும் அதிகம்! எத்தனை மாற்றங்கள்; எத்தனை வளர்ச்சிகள்! உனக்கேயுரிய தனித்துவமான பாதையில், தனித்துவமான ஸ்டைலில் அவற்றையெல்லாம் எவ்வளவு நேர்த்தியாக ஏற்றுக் கொண்டு வளர்ந்திருக்கிறாய் பப்பு!


போராட்டங்கள் உனக்கு புதிதல்லதான், சுவாசிப்பதற்கான போராட்டத்துடன்தானே பிறந்தாய்? உனது போராட்டத்தின் உறுதியை, உனது ஆளுமையின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் காண்கிறேன், பப்பு!ஆனால், நாங்கள்தான் சமயங்களில் குழம்பி போயிருக்கிறோம்.உன்னை குழப்பியும் இருக்கிறோம். எங்களது தேவைக்கேற்றபடி நீ சில விஷயங்களை சட்டென்று பெரிய பிள்ளையின் தோரணையுடன் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றும்; எங்களுக்கு வேண்டியபோது குழந்தையாகவே இருக்கவேண்டுமென்றும் படுத்தியிருக்கிறோம். எல்லாவிதத்தில் எங்களுக்கு வேண்டியபடி நீ நல்லவளாகவே இருக்க வேண்டுமென்று ‍; அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டுமென்றும், ஆனால், நீ உனக்கு வேண்டிய அளவில் உறுதியுடன்தான் இருக்கிறாய். தெளிவாகவும் இருக்கிறாய்.



நாங்கள் சொல்வதை எங்களுக்கே திருப்பிச் சொல்லி, நாங்கள் செய்வதையே திருப்பி செய்து, வடிவேலுவின் ஜோக்கை பார்க்காமலே எங்களை வெறுப்பேற்ற ஆரம்பித்தாய். நான்கு வயதுக்கான மைல்கல் போல என்றெண்ணிகொண்டேன். நேற்றிரவு, 'சாப்பிடு இல்லேன்னா தூங்கு' என்ற போது 'சாப்பிடு' ன்னு சொன்னா தூங்குவேன்; தூங்குன்னு சொன்ன சாப்பிடுவேன் என்று புது அர்த்தம் சொன்னாய். சாப்பிடுவாய் என்று நினைத்து 'தூங்கு' என்று சொன்னதும் 'நீ சொல்றதைதான் கேப்பேன், ஆச்சி' என்கிறாய். ஐந்து வயதுக்கான இப்படியொரு மைல்கல்லை நான் எதிர்பார்க்கவில்லை.

கடந்த வருடத்தில்தான் எண்களை அறிந்துக்கொண்டாய். நீ விரல்விட்டு எண்ண எண்ண, நாங்கள் "சாரி" சொல்லியிருக்கிறோம். விரல்விட்டு எண்ணியபடி, நீயும் "ஐ லவ் யூ" சொல்லியிருக்கிறாய். மணி பார்க்க கண்டுக்கொண்டாய் மூன்றெழுத்து வார்த்தைகளை வாசிக்கவும். ஒவ்வொரு ஃபொனடிக்சாக சேர்த்து படிப்பதை அறிந்திருந்தாலும் சென்ற வாரத்தில் திடீரென்று நீயாகவே ஒரு வார்த்தையை வாசித்தபோது நானடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட ஏதாவது வார்த்தை இருக்கிறதா தெரியவில்லை ... And that word is "STIK". (ஒரு ஆக்டிவிட்டி செய்துக் கொண்டிருந்தோம். கோந்தின் மீது எழுதப்பட்டிருந்தன அவ்வெழுத்துகள்.)

மாதத்தின் பெயர்களையும் நீ அறிந்தது இந்த வருடத்தில்தான். அதற்காக சந்தோஷப்பட்ட என்னை நானே நொந்துக் கொள்கிறேன். ' எப்போது பிறந்தநாள் வரும்' என்று கடந்த மூன்று மாதங்களாகவே-தினந்தோறும் வாரங்களை அல்லவா எண்ணிக் கொண்டிருக்கிறாய். "வாடா மாப்பிள்ளை", "புலி புலிக்குது" "டாடி மம்மி வீட்டில் இல்ல" என்றும் இன்னும் பல பாடல்களை நீ பாடும்போது பிறவிப்பயனை அடைகிறேன். "டாடி; மம்மி பேபியை தனியா வீட்டுலே விட்டுட்டு எங்கியாவது போவாங்களா" என்ற சந்தேகங்களையும் தீர்க்க வேண்டிய நிலைக்கும் ஆளாகிறேன்.


இந்த வருடத்தில் உனது சாகச‌ குணமும் வளர்ந்திருக்கிறது, தயக்கங்களும், பயங்களும் நீங்கி இருக்கிறது. உட்கார்ந்து செய்யும் ஆக்டிவிட்டிகளைவிட ஸ்கூட்டியில் பறப்பதும், காலாற நடப்பதும், மேலிருந்து குதிப்பதும், ஓடுவதுமே உனது பிடித்தமாக இருக்கிறது. மாலை வேளைகளைவிட‌ விட காலை நேர கடற்கரையே உனக்கு விருப்பம்.பும்பாவும், டானி- டாடியும், டோராவும் பார்த்துக்கொண்டிருந்த எனது சின்னஞ்சிறு பெண், சூப்பர் சுஜியும், சிந்துபாத் அற்புத தீவு இன்னும் பல முழுநீள கார்ட்டூன்களையும் பார்த்து புரிந்துக் கொள்கிறாள். 'பேய், பூதம்லாம் இருக்காப்பா' என்று சந்தேகம் கொள்கிறாள். அறையில் எதையாவது தேடி எடுத்து வரச் சொன்னால், "ஜீபூம்பா, என் கையிலே வந்துடு" என்று கண்களை மூடிக்கொண்டு கையை நீட்டிக்கொண்டு நிற்கிறாள்!

பப்பு, நீ என்னைப்போல பத்துமடங்கு பொறாமைபிடித்தவளாக இருக்கிறாய். என்றோ ஒருநாள் ஆதியை நான் தூக்கியதற்காக இன்றும் கிள்ளுகளையும் அடிகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.

உன் முன் விவாதங்களை சண்டைகளை தவிர்த்து வந்திருக்கிறோம். என்றாலும் அம்மாவும்‍-அப்பாவும் ஃப்ரெண்ட்ஸாக இருக்கிறார்களா என்று முகங்களை நோக்கியே அறிந்துக் கொள்கிறாய். இப்போதெல்லாம் பாசாங்குகள் வேலைக்காவதில்லை. ஆனாலும், உனக்காக ஃப்ரெண்ட்ஸாக இருக்கிறோம்.

எனது மெத்தனத்தாலேயும், எதிர்நோக்காத தன்மையாலுமே உன்னை பலநேரங்களில் அவஸ்தைக்கு உள்ளாக்கியிருக்கிறேன், பப்பு. அது முற்றிலும் எனது கவனமின்மையே. மன்னிப்பு கேட்பது ஒருநாளும் சரியான தீர்வல்ல என்று அறிந்திருந்தாலும் என்னை நீ மன்னிப்பாயாக! ஒருவேளை இந்த வருடத்தில் திரும்ப அத்தவறுகளை செய்யாமல் இருக்க அவை எனக்கு வாய்ப்பளிக்கக் கூடும்.சும்மா சொல்வது, பொய், நிஜம் ‍ இவைதான் உனது சமீபத்திய கண்டுபிடிப்புகள். உன்னை ஆள்பவை. " சும்மா சொல்லலாம், ஆனா பொய் சொல்லக்கூடாது" உன்னுடைய அகராதியில் சும்மா சொல்வது என்பது ஏமாற்றுவது. பொய் சொல்வதென்பது மகா பெரிய பாவம். எனக்குத்தான் இவற்றுக்கு வித்தியாசம் தெரியவில்லை, இன்னமும்! உன்னிடம் தெரிந்தே ஏமாறுவது ஒன்றுதான் எங்களனைவருக்கும் பிடித்த விளையாட்டாக இருக்கிறது.

இதுவரை, நீ ஒவ்வொன்றை புதிதாகக் கற்றுக்கொண்டபோதெல்லாம், உன்னுடன் அந்த குதூகலத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். அந்த நொடியை நானும் அனுபவித்திருக்கிறேன், நீ புதிய மைல்கல்லை எட்டும் போதெல்லாம் உற்சாகமடைந்திருக்கிறேன். அந்த நொடியை நிறுத்தி வைத்துக்கொள்ள ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போதோ பப்பு, நீ வளர்ந்த குழந்தையாகிவிட்டாய். நீயே உனக்கு வேண்டியவற்றை செய்துக் கொள்கிறாய். பெரியவர்களை போல பேசுகிறாய், பெரிய விஷயங்களை பேசுகிறாய். நான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த குழந்தை அல்ல நீ இப்போது; கைப்பிடிக்காமல் கூடவே நடக்க அல்லது ‍ தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தால் போதுமென்கிற அடல்ட் !


You’re all grown up to me,now.


நான் செய்யாத ஒன்றுண்டென்றால், உன்னை தனியாக உறங்க வைக்க பழக்கப்படுத்தாத‌து. ஏனெனில், எனக்கே அதில் விருப்பமில்லை. I hug you tighter as you go to sleep each night. And, I know, to love is to let go. எல்லாவற்றையும் போல தனியாக உறங்கவும் நீயாகவே கற்றுக்கொள்வாய். அதுவரை.....

விரைவில் பப்பு, நாம் ஒரு சமநிலைக்கு வந்துவிடுவோம்; ஒருசில போர்க்களங்களுக்குப் பிறகோ அல்லது ஒருசில‌ கண்ணீர்த்துளிகளுக்குப் பிறகோ! நாம் கடைசியாக பார்த்தாமே, Alice in Wonderland-'கேட்டர்பில்லர் என்ன சொல்லுது, cocoon -குள்ளே போய்க்கிட்டு' என்று கேட்டாயே... அப்போது சொன்னதுதான் பப்பு, எதுவும் முடிவு கிடையாது, ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றமடைவது... Transformation...கடந்த வருடங்களில் எழுதியதை வாசித்த போதுதான் தோன்றியது ...

0..1..2..முத்தான மூன்றை நெருங்குகையில்!!
v3.0 - 3.10

ஒருவேளை, நீயும் நானும் கூட்டுப்புழுவிலிருந்து சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்துதான் கேட்டாய் போல!

மாற்றங்களை கையாள்வதற்கும், உனது சின்னஞ்சிறு சிறகுகள் வளர்வதற்கும், விரித்து பறப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க உறுதி கொள்கிறேன், பப்பு....


உன்னோட
ஆச்சிக்குட்டிபாப்பா (இப்படித்தான் என்னை கொஞ்ச ஆரம்பித்திருக்கிறாய் நீ ‍‍)

Wednesday, April 21, 2010

ஜூன் '09 - ஏப்ரல் '10

பப்பு,

பள்ளிக்கூடத்தின் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை - முக்கியமான எல்லா தினங்கள்,நிகழ்ச்சிகள் - சாதனைகள் - இன்னபிற - என் நினைவிலிருந்து!

1. பள்ளியின் முதல் நாள் - ஜூன் 09
2. ரெட் டே - ஜூன் 09
3. ஃபேமிலி டே - ஜூலை 09
4. மாதாந்திர பிறந்தநாள் - ஜூலை 09

5. யெல்லோ டே - ஆகஸ்ட் 09
6. ஆஃப்டர் ஹேர் கட் & மாதாந்திர பிறந்தநாள் - செப்டம்பர் 09
7. பிரவுன் டே - செப்டம்பர் 09
8. நான்காம் பிறந்தநாள்- அக்டோபர் 09
9. குழந்தைகள் தின ஃபேன்சி ட்ரெஸ் பரேட் - நவம்பர் 09
10. பிங்க் டே - டிசம்பர் 09
11. பள்ளி ஆண்டு விழா - பிப்ரவரி 10
12. 'ஆங் சான் சூ கி மாதிரி இருக்கே'ன்னு ஆயா சொன்னதும் அதே ஆங்கிளில் எடுக்க முயன்றபோது - மார்ச் 10

13. ப்ளூ டே - ஜூலை 09
14. கராத்தே நிகழ்ச்சி - டிசம்பர் 09
15. இக்கல்வியாண்டின் இறுதிநாள் - ஏப்ரல் 10

பிலாக் & வொயிட் டே, கோல்ட் & சில்வர் டே போன்ற சிலவற்றை எடுக்காமல் விட்டுவிட்டேன்,பப்பு! ( நீ, கேமிராவை பார்த்தாலே தன்னிச்சையாக செயற்கையான புன்னகை செய்வதாக, நீண்ட நாள் புகாரொன்று என் மேல் உள்ளது! )

Wednesday, October 28, 2009

From Troublesome Threes to Fearless Fours!!



பப்பு,

இந்த ஒரு கடிதம் உன்னைப் பற்றிய எல்லாவற்றையும் சொல்லிவிடுமாவென்றுத் தெரியவில்லை. ஆனால், கடந்த வருடங்களில் நான் எழுதியிருக்கும் இடுகைகள் உன்னைப்பற்றியும், உனது குழந்தைப்பருவத்தையும், ஒரு பெண்ணை தாயாக..மகிழ்ச்சியான தாயாக நீ உருமாற்றியதையும் கூறும்!

மேலிருக்கும் படம், நீ இப்போது கடந்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தை உணர்த்துவதற்காக - ஓடுவதற்கு ஆயத்தமாக - நம்பிக்கையுடன், துடிப்புடன் - அறிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் - எளிதில் மன்னித்து, மறந்தும் விடக்கூடிய இதயத்துடன்! பப்பு, நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற வேண்டுமாய் வாழ்த்துகிறேன்..அதைவிட பெரிதாக வாழ்த்த வேண்டுமானால், பப்பு, நீ இப்படியே இருக்க வேண்டுமாய் வாழ்த்துவேன்! மாறாமல் இதே துடிப்புடன் - இதே நேசத்துடன் - இதே உன்னத்ததுடன் - உள்ளத்தூய்மையுடன்!!

அதற்காக, நீ ஒரு தேவதை என்று படம் காட்டவில்லை. உனது மறுபக்கத்தையும் எங்களுக்கு காட்டாமலில்லை! சமயங்களில் எங்களை நோக்கி பற்கடிக்கிறாய். எதையாவது மறுத்தால் எங்களுக்கு அடிகளைத் தருகிறாய்.உனது உணர்ச்சிகளும் எண்ணவோட்டங்களும் மிக ஆழமானவை - அதற்கேற்றவாறு நடந்துக்கொள்ள நானும் உந்தப்படுகிறேன்! எதை மறுக்கிறேனோ அதைச் செய்யவே நீயும் உந்தப்படுகிறாய்! நீயும் நானும் இப்படியே சுற்றி வருகிறோம்!!


குறும்பும், குழந்தையின் அறியாமையும், உனக்கேயுரித்தான ஞானத்துடனும் நிறைந்திருக்கிறாய் நீ! கடந்த நான்கு வருடங்களும், மிகவும் இனிமையானதாக, நல்லதொரு அனுபவமாகவே இருந்து வந்திருக்கிறது, பப்பு! நீ மிக அருமையானவள் பப்பு! நான் பொதுவாக உன்னெதிரில் அழுவதில்லை. ஓரிரு முறைகள் அப்படி நேர்ந்திருக்கிறது. அந்த இருமுறைகளும் நீ என்ன செய்தாய் தெரியுமா பப்பு, ஆச்சி, ஏன் உன் கண்லே தண்ணி வருது என்று கேட்கும்போதே உன்னையறியாமலேயே உனது கண்களும் குளமாகின! அதைவிட,உன் சின்னஞ்சிறு கரங்களால், என் கண்களை துடைக்க முற்பட்டாய். நான் இதை உனக்குச் செய்ததில்லை, பப்பு! நிறைய நேரங்களில் உன் அழுகைக்குக் காரணம் நாந்தான் என்றாலும் நீ அழும்போது என் கண்கள் கலங்கியதில்லை! என்னை மன்னித்துவிடு! நீ உன்னதமானவள், பரிவு மிக்கவள், பப்பு!

புதியவர்களைக் கண்டால் எங்கள் பின்னால் ஒளிந்துக்கொள்ளும் நீ, உறவினர்களை, தூரத்து உறவினர்களை அதுவும் முதல்முறைதான் பார்க்கிறாய் என்றாலும் எப்படிக் கண்டுக்கொள்கிறாய் என்பது எனக்கு இன்னமும் விளங்காத ஆச்சரியம். குடும்பத்தின் தலைமுறைகளை நன்றாக அறிந்து வைத்திருக்கிறாய். பக்கத்துவீட்டுச் சிறுவன் தீபாவளியன்று பொம்மைத் துப்பாக்கியில் உன்னை நோக்கிச் சுட்டான். நீயும் சுடு என்று உன் அப்பா கூற, ‘சுட்டா அவன் செத்துடுவான், பாவம்' என்று சொல்லி எங்களை ஆச்சர்யத்திலாழ்த்தினாய்!

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம், பப்பு! வாழ்க்கை உனக்கு முன் விரிந்துக்கிடக்கிறது, நீ அதை இன்னும் சுவாரசியமாக்குவாய் என்பதையும் அறிந்திருக்கிறேன் பப்பு!
கடந்த வருடம் உனக்கு நிறைய நண்பர்களும்,ஆரோக்கியமும், எல்லாச் செல்வங்களும் கிடைக்க வாழ்த்தினேன்..இந்த வருடமும் உனக்கு இவையெல்லாவற்றோடும் மிகுந்த தைரியத்தையும் வாழ்த்துகிறேன்!! இந்த வருடத்தையும் ஒன்றாகவே கடப்போம், கற்றுக்கொள்வோம், உன்னை நானும் என்னை நீயும் உற்றுக்கேட்டுக்கொள்வோம்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பப்பு!!

ஆச்சி!

பி.கு :பப்பு, இதை நேற்று இரவு எழுதி முடிக்கும்போது கடந்த வருடம் எழுதிய பப்பு 0..1..2.. நினைவுக்கு வந்தது. உன் மழைத்தோழி இந்த வருடம் வரவே இல்லையே என்ற நினைப்பும் எட்டிப் பார்த்தது. இன்று காலையில் தூறலிட்டு வாழ்த்த வந்துவிட்டாள் உன் தோழி!! :-)

Tuesday, September 01, 2009

v3.0 - 3.10



பப்பு,

ஞாபகமிருக்கிறதா, சென்ற வாரத்தில் ஓர் நாள்,

”என்னைத் திட்டுறீங்க இல்ல,உங்க அம்மாக்கிட்டே சொல்றேன்” - பப்பு

“நானும் உங்க அம்மாக்கிட்டே சொல்றேன்” - முகில்

“இது எங்க அம்மாவோட வீடு” - பப்பு

இந்த உரையாடல்(விவாதம்) இதோடு முற்றுப்பெறுகிறது.

'ஏன் வீட்டைக் குப்பையாக்குகிறாய்' என்று முகில் கேட்டதற்குதான் இத்தனையும்! இதுநாள் வரை, நாங்கள் இது உன்வீடு, என்வீடு என்று பேசியதில்லை. ஆம்பூர் வீடு, வடலூர் வீடு அல்லது விழுப்புரம் வீடு என்றுதான் பேசியிருக்கிறோம். அல்லது நம்ம வீடு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம்! With that,பப்பு, நீயாகவே உரையாடலை எங்கே முடிக்கவேண்டும்ன்று அறிந்திருக்கிறாய். ;-).

நிறைய பேசுகிறாய். தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுகிறாய், நீ சொல்வது எல்லாமே ஆச்சரியமாகவும் மகி்ழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது!

நீயாகவே வரிகளமைத்துப் ஏதாவதொரு மெட்டில் பாடுகிறாய்.

இட்லி
சூடான இட்லி
அட்லி
அட்லியே!!

அர்த்தம்தான் புரியவில்லை!

திரும்ப திரும்ப கடைக்கு
இல்லன்னா கடைக்கு
பத்து வாங்க போலாம்
இந்தச் செடி நல்லாருக்காது!!

நாங்கள் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டுமென்றுச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்! சில நேரங்களில், நீ தனியாக இருக்கவிரும்புகிறாய். யாராவது கூட இருந்தால், கண்காணிக்கத்தான் என்று எண்ணிக்கொள்கிறாய்!

இந்த காலகட்டத்தில்தான், நீ, மிக முக்கியமானதொரு மைல்கல்லை கற்றுக்கொண்டாய்...பழி (complaint)சொல்வதற்கும், 'நானில்லை, அதுவே உழுந்துடுச்சு, அதுவே கிழிஞ்சுக்கிச்சு' யென்று தப்பித்துக்கொள்வதற்கும்!

அலுவலகத்திலிருந்து நான் வந்ததும், ஆயாவை பற்றி கம்ப்ளெய்ன் செய்வது உனது வழக்கம். 'எனக்கு பேரிச்சம் பழம் கொடுக்கல' அல்லது 'வாழைப்பழம் கொடுக்கலை'யென்று. (இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டுவிட்டு, முடி வளர்ந்துவிட்டதாவென்று தலையை சாய்த்துப் பார்க்கிறாய்.) நான் கேட்கிறேனென்று சொன்னதும், “ஆயாவை அடி, அடி” என்றாய். ”பப்பு, யாரையும் அடிக்கக்கூடாது” என்றதற்கு, 'என்னை காலையிலே அடிச்சே, ஏன் என்னை மட்டும் அடிச்சே' என்றாய்! குற்றம் சாட்டும் நோக்கத்தை விட, ஏன் என்று மட்டும் அறிந்துக்கொள்ளும் ஆர்வமே உன் முகத்தில் இருந்தது! ஹ்ம்ம்..இப்படிதான் நாம் வாழ்கிறோம் பப்பு, செய்யக்கூடாது செய்யக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு, கடைசியில் அதைத்தான் செய்யும்படி நேர்ந்துவிடுகிறது!

உன் கேள்விகள் மகிழ்ச்சியைத்தான் தருகின்றன, 'மரம் ஏன் காத்துலே விழாம நிக்குது' என்றும், கம்மல் கழட்டிய நாளொன்றில் 'நீ boyயாயிட்டியா' என்றும் கேட்கிறாய். பால் குடித்தபின் உதட்டின்மேலிருந்த நுரையைக் காட்டி 'நான் boyயியிட்டேன்' என்கிறாய். Well, pappu, இன்னும் பல வித்தியாசங்களை வாழ்க்கை வைத்திருக்கிறது, இது மட்டுமில்லை என்பதை நீ உணரும் காலமும் வரும்!

நட்பை உலகமாகக் கொண்டிருக்கிறாய், நண்பர்களுக்காகத்தான் நீ பள்ளிக்கு போகிறாய். இப்பொதெல்லாம், குள்ளநரி தேவைப்படுவதில்லை உன்னை எழுப்ப, 'வர்ஷினி, வெண்மதி எல்லோரும் உனக்காக வேன்லே வந்துக்கிட்டுருக்காங்க' என்பதே போதுமானதாக இருக்கிறது உன்னைக் கிளப்ப! 'நான் வர்ஷினி ஃப்ரெண்ட், உன் ஃப்ரெண்ட் இல்ல' என்கிறாய்! யாருடனாவது ஃப்ரெண்டாக இருக்க வேண்டுமானால், கண்டிப்பாக யாருடனாவது கா விடத்தான் வேண்டுமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்!! ‘வர்ஷினி வீட்டுக்கு என்னை விடறியா' என்கிறாய். Don't you think its too early pappu?!!

'கா கா' என்று என்னிடம் கா விடுகிறாய். பதிலுக்கு நானும் 'கா' விட்டால் கவலை கொள்கிறாய். நான் 'கா' விடக் கூடாதென்று கத்துகிறாய். நீ கா விட்டாலும், நான் சேலஞ்ச்தான் விடனும் என்று சொல்கிறாய். Ah,பப்பு, இதுதான் முதல் படி, to take your mom for granted!! இது எங்கே முடியுமென்று நானறிந்திருக்கிறேன்...தெரிந்தும் நீ கா விடும்போதெல்லாம் உனக்கு சேலஞ்ச் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்!!

பப்பு, இரவு நேரங்களில் என்னைவிட்டு தனியே தூங்கி பழக்கமில்லை உனக்கு. ஆயா ஊரிலிருந்து வந்ததும், ஆயாவோடு படுத்துக்கொள்ளப்போவதாகச் சொன்னாய். வழக்கம்போல, சொல்லிவிட்டு தூங்கும் நேரத்தில் வந்துவிடுவாயென்றெண்ணிக் கொண்டிருந்தேன். நீ அருகிலில்லாததை தூக்கத்தில் உணர்ந்து, நடுஇரவினில் ஆயாவினருகில் உறங்கிக்கொண்டிருந்த உன்னைத் தூக்கிக் கொண்டு வந்தேன்!பப்பு, நீ வளர்ந்துவிட்டாய், தனியாக உறங்க...பார், நான் இன்னும் வளரவில்லை!! To let go - இன்னமும் கற்றுக்கொள்கிறேன்!

கோபத்தில் உன்னை அடிக்க முற்படும்போது, “நாந்தான் அம்மா” என்று சொல்லிக்கொண்டு திரும்பி அடிக்க்க வந்தாய். பப்பு, அம்மாவாக இருந்தால் மட்டுமே அடிக்க வேண்ண்டுமென்று நீ நினைப்பது எனக்கு பிடித்திருக்கிறது! :-) (இது நானும் பப்புவும் விளையாடும் விளையாட்டு, நான் பப்புவாகி விடுவேன். பப்பு அம்மாவாகி விடுவாள். ஆபீஸ் செல்வாள், நான் வீட்டிலிருப்பதற்கு அழ வேண்டும்..etc!!)

'சேம் சேம்' அல்லது 'சேம் கலர்' அல்லது 'சேம் ஸ்விட்' என்று சொல்லக் கற்றுக்கொண்டாய்! வெளியில் போனாலோ, வீட்டிலிருந்தாலோ நீயும் நானும் ஒரே வண்ணத்தில் உடுத்த விரும்புகிறாய்! அப்படி இல்லையென்றாலும், உனது உடையிலிருக்கும் வண்ணத்தை, எனது உடையில் ஏதோ ஒரு மூலையிலாவது கண்டு நீயாகவே சமாதானமாகிறாய்!

என்றேனும் நான் மாற்றும் கம்மல் உன் கண்களுக்கு மட்டுமே சட்டென தெரிகிறது. 'அழகா இருக்கே' என்றும் 'இந்த ட்ரெஸ் நல்லா இல்லே' என்றும் சொல்கிறாய், ‘குண்டுக் குட்டி' என்றுக் கொஞ்சுகிறாய்! Phase D ஐ அழகாக கடந்து வந்தோம்...ஆனாலும் நீ சமயங்களில் கோபமாகிவிட்டால் டி சொல்வதும் நீடிக்கிறது! இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்த டோரா க்ரேஸ் இப்போது இல்லை. அல்லது நான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேனோ!!

உனது, மூன்று வயது மூன்று மாதங்களில் ஜிக்சா புதிர்களை அடுக்கக் கற்றுக்கொண்டாய். ஏனோ உனக்கு மெழுகுவண்ணங்களை தீட்டுவதில் அவ்வளவு ஆர்வமில்லை அப்போது. சரியாக உனது மூன்று வயது ஆறு மாதங்களில் அதில் ஆர்வம் காட்டத்தொடங்கினாய். அதிலும் சிவப்பு மாடுகள், கறுப்பு மாம்பழம் என்று கற்பனை செய்துபார்க்க இயலாதவைகளை தீட்டியதை எப்படி நான் மறக்க முடியும்!! பல்டி அடிக்கக் கற்றுக்கொண்டாய். பதற்றமும், மகிழ்ச்சியும் சேர்ந்த நிலையை நான் அறிந்துக்கொண்டேன்!

சிறிது கணினியும் இயக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாய். கீபோர்டில் சில எழுத்துகள், வலது அம்பு சரியாக இயங்க மறுக்கின்றன!! 'சொன்னபேச்சை கேட்பது' என்பதை நீ என்றேனும் கற்றுக்கொள்வாயா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது! என் பெரிம்மாவுக்கும், ஆயாவுக்கும், ரத்த அழுத்தம் கூடியதன் காரணம் இப்போது புரிகிறதெனக்கு!

'அப்பாக்கு கா கா விட்டுடு...otherwise நோ சேலஞ்ச்'!- என்று பிலாக்மெயில் செய்கிறாய்! எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதமாகத் தான் செய்கிறாய். சரிதானென்று நாங்களும் எதிர்ப்பதமாகச் சொன்னால், அன்றுதான் கடமையாகச் சொல்பேச்சை உடனே கேட்கிறாய்!

சொல்வதற்கு இன்னும் நிறைய இருப்பதுபோல தோன்றுகிறது, பப்பு! ஃப்ரெண்ட்லியான, உற்சாகமான, பயமறியாத சின்னஞ்சிறுமியாக நீ வளர்வதைப் பார்க்க நிறைவாக இருக்கிறது!
உனது மூன்று வயதைத் தாண்டி பத்து மாதங்களைக் கடந்து வந்திருக்கிறோம் and We have grown together!

இருந்தாலும், காலத்தை இப்படியே உறையச் செய்துவிட விரும்புகிறேன்.அதே சமயம் நீ வளரவும் விரும்புகிறேனே!! oh my!


வாழ்த்துகளுடன்,
ஆச்சி!

Tuesday, July 07, 2009

உனக்குப் பிடித்த சாக்லேட் கூட....

பப்பு,

இந்த கடிதத்தை நீ பலதடவைகள், உன் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் வாசித்து பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன் பப்பு. குறிப்பாக உனது டீனேஜில்!

நாம் ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டு இருந்தோம் பப்பு, அதில் நிறைய சிறுவர்கள் இருந்தார்கள்....வெவ்வேறான கலரிலே, ஃப்ரௌன், டார்க் ஃப்ரௌன், வெளுப்பு என்று. ”ஏன் அவங்க வேறவேற கலரிலே இருக்காங்க” என்றுக் கேட்டாய்! 'ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கலரிலே இருப்பாங்க, அவங்கவங்க இடத்துக்கு தகுந்தமாதிரி, அப்பா அம்மா மாதிரி' என்றேன். சிறிதுநேரம் கழித்து, என் கைக்கருகில் உனது கையை வைத்துப் பார்த்துக்கொண்டாய். 'ஏன் என் கை கருப்பா இருக்கு' - என்று கேட்டாய்!

”ஏன்னா பப்பு, உன்னோட அம்மாவும் கருப்பு. அப்பாவும் கருப்பு” என்றேன். நீயும் அமைதியாகிவிட்டாய். ஆனால், உன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்று நானறிந்திருக்க வில்லை. முன்பு நானும் உன்னைப் போல இருந்திருக்கிறேன்! நான் சொல்ல வருவதெல்லாம் ஒன்றுதான் பப்பு, ”கருப்பா இருக்கிறது ஒன்னும் தப்பு இல்ல". அது உனது கம்பீரம். உனது வசீகரம். நமது ஊரின், பரம்பரையின் அடையாளம். Above all, we should love our body! உடலின் சருமம் கருப்பாயிருந்தாலும் உன் மனம் எப்படியிருக்கிறது என்பதுதான் முக்கியம் என்று நான் பயிற்றுவிக்கப்பட்டேன்! நீயும் கற்றுக்கொள்வாய்! ஆனால் பப்பு, அதற்கு முன்னால் கொஞ்சம் அனுபவப்படவேண்டியிருக்கும்!

என்னுடைய சொந்தக்கார பசங்க (மாமா பசங்க, அத்தை பசங்க) எல்லாரையும் விட நான் கரு்ப்பு. விடுமுறையில் நாங்களனைவரும் ஒன்றாக வடலூரிலேதான் இருப்போம், மே மாதம் முழுவதும்! நிறைய விளையாடுவோம், சண்டையும் போட்டுக்கொள்வோம்! அப்போது அவர்கள் என்னுடைய நிறத்தை வைத்து கிண்டல் செய்வார்கள்! பெரியவர்கள் யாராவது கூடவே இருந்தா அப்படியெல்லாம் சொல்ல மாட்டார்கள்...ஆனால் எல்லா நேரங்களிலும் பெரியவர்களால் கூடவே இருக்க முடியாதே! உனக்கும் கூட இதேமாதிரி நிலைமை வரலாம், உன்னைக் காப்பாற்ற நான் கூட இருக்க வேண்டுமென்று நினைப்பதை விட நீயே அதை கையாளவேண்டுமென்று நினைக்கிறேன் பப்பு!

அவர்கள் அப்படி கிண்டல் செய்யும்போது நான் அதை என் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை! நான் அவர்களை முழுவதுமாக இக்னோர் பண்ணிவிட்டேன் பப்பு! ஏனெனில், தோலின் நிறத்தைவிட பப்பு, மூளையின் திறமைதான் வலிமையானதென்று நம்பினேன்! அடுத்ததடவை லீவுக்குப் போகும்போதும் இதே மாதிரி நிகழ்ந்ததது பப்பு! நான் அவர்களை பார்த்து கேட்டது இதுதான், உங்கள் முடியின் நிறம் என்ன? உங்கள் பாதத்தின் நிறம் என்ன? எந்த நிறத்தைத் தலையிலும் எந்த நிறத்தை காலின்கீழும் வைத்துக்கொண்டு நடக்கிறீர்களென்று! (Thanks to my zoology teacher!) அதன்பின் அதைப்பற்றிய கிண்டல்கள் எதையும் காணோம்!

நீயும் இதையேத்தான் கையாளவேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை!உன் டீனேஜில் அழகு க்ரீம்களை நீ என்னிடம் கேட்கலாம், பப்பு. நான் மறுக்கப்போவதில்லை.ஆனால் தோலின் நிறத்தை எதுவும் நிரந்தரமாக மாற்றிவிட முடியாதென்ற தெளிவும் உனக்கு அவசியம் என்று ஆசைப்படுகிறேன்! ஆனால், தோலின் நிறம் குறித்த சர்ச்சைகள், விளம்பரங்கள் உன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள் என்றுதான் சொல்ல வருகிறேன்!

ஏனெனில், பப்பு கருப்பு நிறம் உண்மையில் நல்லது. அதனுள் நீ மிகவும் பாதுகாப்பாக உணர்வாய்! வெண்சருமம் கொண்டவர் கடக்க முடியாத இடங்களை, மேற்கொள்ள முடியாத பயணங்களை நீ எளிதாக கடக்கலாம்!அவர்களின் எல்லைகளைவிட உன் எல்லைகள் இன்னும் விரிந்தது. உன்னை கட்டுபடுத்தாதது! எல்லாவற்றுக்கும் மேல், பியிங் டார்க் இஸ் ஃபன்!


இந்தப் பாதையை உனக்கு முன் கடந்துசென்ற
தன் தோலின் நிறத்தை நேசிக்கிற
உன் அம்மா!

Thursday, January 29, 2009

பப்புவுக்கு ஒரு குறிப்பு..

டியர் பப்பு,

நீ சிடி பார்க்கும் நேரத்தில் நான் வீட்டின் ஏதாவதொரு மூலையில்தான் இருப்பேன். என் துணிகளை மூட்டைக் கட்டிக் கொண்டு, வீட்டை விட்டு ஓடி விட மாட்டேன், சர்வநிச்சயமாக! (I wish I could do that..**siiighhh**..My wishlist is big you knw!!) வேலை முடிந்ததும் உன்னோடு வந்து அந்த சிடி நிமிடங்களைப் பகிர்ந்துக் கொள்வேன். பார்ப்பதை விட்டுவிட்டு நீ என்னை வந்து கூப்பிட்டுக்கொண்டு இருப்பது, மகிழ்ச்சியாக, பெருமிதமாகத்தான் இருக்கிறதெனக்கு எனினும்... வரையும்போதும், பொம்மைகளுடன் விளையாடும்போதும், மற்ற நேரங்களில் இண்டிபெண்டண்ட்-ஆக இருப்பது போல, சிடியும் பார்த்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்குமெனக்கு! நீ என்ன நினைக்கிறாய்??

அன்புடன்
அம்மா!!

Friday, December 12, 2008

பப்புக் குறிப்புகளும், பப்புவுக்குக் குறிப்புகளும்!!



(படத்தில் தெரியும் அந்தச் சின்னஞ்சிறு கைகள் செயதன, இந்த வட்டத்தை!)

பப்புவுக்கு இப்போது எல்லாமே ஷேப்ஸ்தான்! வட்டங்கள், முக்கோணங்கள் மற்றும் சதுரங்கள் ஆளுகின்றன அவளது கற்பனையை! முக்கோணம் செய்து எங்களைக் கூப்பிட்டு காட்டியவள், காமெரா எடுத்து வருவதற்குள் கலைத்து வட்டமாக்கி விட்டாள்! எழுதும் போதும் எழுத்துக்களால் ஒரு கட்டத்தை அமைக்கிறாள்.

இப்போது உணவில் விளையாடுவது மகிழ்ச்சி தருகிறது அவளுக்கு. சாதத்தை தண்ணீரில் போட்டு, காயையும் சேர்த்து...பின் தம்ளருக்கு மாற்றியென. நானும் எந்த கட்டுபாடுகளை வீச வில்லை, இந்த முறை! அவளுக்கு மகிழ்ச்சி தருகிறது எனில், அதில் ஒரு புதிய முறையை கற்கிறாள் எனில், செய்வதில், செய்யும் முறையில் ஆழ்ந்து போகும் விஷயமெனில் அதைக் கலைப்பானேன்?!

ஜனகன மன பாடக் கற்றுக் கொண்டுள்ளாள். “பாக்ய விதாதா” வும், பஞ்ஞ்ஞாஆஆப சிந்துவும்” அடிக்கடி வரும், எந்த சீக்வென்ஸாயிருந்தாலும்! இப்போதுதான் ஜீரத்திலிருந்து மீண்டிருக்கிறாள், ஆனால் சளி இருப்பதால் குரல் பதிவு லேட்டர்!!

உண்மையில் இந்தப் பதிவை போட இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணவில்லை, ஆனால் அப்படி ஆகிவிட்டது. பப்புவின் பள்ளியில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் அவளது முன்னேற்ற மறுபார்வைகள் (progress review - தமிழ்ல என்னப்பா??) நடந்தேறியது. இதோ பப்புவுக்கான ஒரு சின்னக் குறிப்பு:

பப்பு,

உனது பள்ளியின் ரெவ்யூ எனக்கு ஆச்சர்யங்களெதையும் தரவில்லை. நீயாகவே என்ன வொர்க் செய்ய வேண்டுமென்றும், அதை ”well co-ordinated hand movements"களிலும் செய்து விடுகிறாய். வேலை செய்யும்போது எதுவும் உன் கவனத்தை திசைத் திருப்புவதில்லை போலும்! நிறைய நேரங்களில் நானும் அதை உணர்ந்திருக்கிறேன், எப்போதும் இப்படி இருக்கவேண்டுமெனவும் ஆசைப்பட்டிருக்கிறேன்!

சப்தங்களை அறிந்துணர்வதிலும், பொருட்களை கண்டறிவதிலும் உனக்கு அதிக ஆர்வமே. பாடுவதிலும், பாடல்கள் கற்பதிலும் மகிழ்ச்சியாய் உணர்கிறாய், எப்போதும் போல்!! ஆனால் பப்பு, ஆங்கிலத்தில் பேச இன்னமும் நன்றாய் பழக வேண்டும். இனிமேல், முயற்சிக்கலாம் என்ன?!

முக்கியமாக, பள்ளியின் உனது சூழ்நிலையில் நீ பொருந்திவிட்டாய் என்றும் சொல்லப்படாத விதிகளை புரிந்துக் கொண்டாயெனவும் அறியும்போது கவலைகள் நீங்கியது. நீ கற்பது என்பது அடுத்த விஷயம், ஆனால் உனக்கான ஒரு இடத்தை, அந்த இடத்தில் நீயாக accomadate ஆவது..சுழல ஒரு மையத்தை உராய்வுகளின்றி நீயாகவே அமைத்துக் கொள்வதே என் விருப்பம்! I always want you to be independent, to be on your own!

100 நாட்கள் நடைப்பெற்ற பள்ளிக்கு, 60 நாட்கள் சென்றிருக்கிறாய். ஜூலையில் சேர்ந்ததால் ஒரு மாத வருகை தடைப்பட்டிருக்கிறது.

பொதுவாக உன்னைப் பற்றி, “a well-mannered kid with smiling face". அந்த புன்னகை என்றும் உன் முகத்தில் நீடிக்க எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டிக்கொள்வோம்!

பல நேரங்களில் நாமிருவருமே பெருமை கொண்டவர்களாகி விடுகிறோம், சில நேரங்களில் உன்னாலும், சில நேரங்களில் என்னாலும். இந்ததடவை உன்னால்!! நன்றி, மகளே!

உன் அம்மா!

Monday, July 14, 2008

பப்புவுக்கு ஒரு கடிதம்

பப்புக்குட்டி,

இன்றுமுதல் உனது மாண்டிஸோரி பள்ளிக்கு போகத் தொடங்கியிருக்கிறாய்.
ஓராயிரம் எண்ணங்களோடும், பல்வேறு உணர்ச்சிகளும் என்னுள்!!
படுக்கையிலிருந்து எழுமுன்னே "போ மாட்டேன்" என அழத் தொடங்கியிருந்தாய்.அதை பார்த்ததும். "நான் ரொம்ப கொடுமைக்காரியோ?" என்று தோன்றியது!!
ஆனால், பப்பு... வெளியில் ஒரு பெரிய உலகம் காத்திருக்கிறது, for you to conquer!! பப்பு..எனக்குத் தெரியும், பள்ளிக்கூடத்திற்கு செல்ல நீ அழவில்லை..
வீட்டை/எங்களை விட்டு செல்வதற்குதான் அழுகிறாயென!!
பள்ளிக்கூடம் உனக்கு ரொம்பப் பிடிக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது..
நீ வகுப்பிற்கு சென்றவுடன் accommodate-ஆகி விட்டாயென்று கேட்டதும்!!
இனி உனக்கு அம்மா,அப்பா, வீடு மட்டுமே உலகம் இல்லை!!
உலகம் சுவாரசியங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்ததுவென விரைவில் கண்டுக்கொள்வாய்!

ஆனால், என்னை ஆச்சரியப்படுத்துவது எதுவெனில்...பப்பு..
நீ வளர்ந்துவிட்டாய்..பள்ளி செல்வதற்கு...தனியாக வேனில் செல்வதற்கு!!
எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது....உன்னோடு மருத்துவமனையிலிருந்து
முதன்முதலாய் வீட்டிற்கு வந்தது..என் கைகளுக்குள் இருந்த நீ இறங்கி தவழ
ஆரம்பித்தாய்..பின் என் விரல்கள் பிடித்து நடக்க ஆரம்பித்தாய்..இன்று என் சொற்களில்
எல்லைகளில் இருக்கிறாய்!! சில காலங்கள் என் மேலும், உன் அப்பாவின் மேலும் படுத்துறங்கினாய்..பின் எங்கள் கைகளில்..இப்போது தலையணையில்!!
இங்கு நீ என் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை பற்றி சொல்லவில்லை...
நீ சுதந்திரமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி..!! நான் சொல்ல வருவது,
உனக்கும் எனக்குமான இடைவெளி ஒவ்வொரு கட்டத்திலும் அதிகரித்துக் கொண்டிருப்பதைப் பற்றி!! இது இன்னமும் அதிகரிக்கும் என அறிந்திருகிறேன்..எனக்கு விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும்!!

மேலும் நேற்று நடந்ததைப் பற்றி.....
கிளினிக்-கில் இருந்த சறுக்குமரத்தில் விளையாடிகொண்டிருந்தாய்.
உன்னைவிட சிறுகுழந்தைகள் வரும்போது பொறுமைக் காத்தாய்!! (பெருமையாய் இர்ந்தது!!)
உன் வயதைவிட பல வருடங்கள் பெரிய ஒரு பெண்ணும், அவளது சகோதரனும்
அந்த இடத்தையே இரண்டு படித்திகொண்டிருந்தார்கள்..அங்குமிங்கும் ஓடிக்கொண்டு, சாயும் நாறகாலிகளை இழுத்துக்கொண்டு! பின் சறுக்கு மரத்தில் அவர்கள் இருவரும் வேறு யாருக்கும் வாய்ப்புக் கொடுக்காமல் வேகமாகவும் விளையாடினார்கள்..உன்னையும் சேர்த்து!! ஆனால், நீ அவர்களுக்கு முன் சென்று சறுக்கு மரத்தின் படிகளில் ஏற முயற்சித்தாய்!! அவர்கள் வேகத்திற்குமுன், உன் வேகம் எடுபடவில்லை!! ஆனால், அவர்கள் செய்வது உனக்கு பிடிக்கவில்லை! முகம் சுளித்தாய்!! அவர்களோடு போட்டியிட்டாய்!
உனக்குத் தெரியுமா பப்பு, உலகம் இப்படிப்பட்டவர்களாலும் நிறைந்ததுதான்!!
நான் வந்து உனக்கு சறுக்க வழி செய்திருக்கமுடியும்....எப்போதும் நீ என்னை எதிர்ப்பார்க்க தொடங்கிவிட்டால்..அதேபோல் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் என்னால் வர முடியாதே....!! அந்த இடத்தில் உன்னருகில் வந்து சமாதானப்படுத்தி, divert-செய்து வேறு விளையாட்டிற்கும் அழைத்து சென்றிருக்கலாம்தான்!!! அந்த சிச்சுவேஷனை நீயாகவே கையாளவேண்டுமென நினைத்தேன்..பப்பு, உன்னுடைய அந்த instinct, அந்த இயல்பான போட்டி மனப்பான்மை நான் பார்த்திராத ஒன்று!


பள்ளிக்கூடம் உனக்கு நிறைய கற்றுக்கொடுக்கக் கூடும்...வாழ்க்கையையும்!!!

வாழ்த்துக்களுடன்..
அம்மா!!