Wednesday, September 08, 2010

v4.0- v4.10

எனதன்பு பப்பு,

இதை எழுதத் தொடங்குமுன்பு பலவித எண்ணவோட்டங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஆளாகியிருக்கிறேன். வெகுவிரைவில் நீ ஒரு ஐந்து வயது சிறுமி! ஒவ்வொரு வருடமும் சொல்வது போலத்தான் ‍- இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறேனென்று தெரியவில்லை...இப்போதுதான் நீயும் நானும் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்தது போலிருக்கிறது...ஆயா தனது சுருக்கங்கள் விழுந்த கையை நீட்டி வாஞ்சையுடன் உன்னை வாங்கி முத்தமிட்டது கண்முன் நிற்கிறது... வீட்டுக்கு வரும் போது நீ அணிந்திருந்த‌ அந்த ஊதா வண்ண உடையையும், நான் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நைட்டியையும் இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.. .எதற்கென்றே தெரியாமல். நமது உடைகளின் வாசமும் இன்னமும் என் நினைவில்!
ஹாஸ்பிடல் அறை எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் 96 என்று மட்டும் ஞாபகம் இருக்கிறது. (296 ஆ அல்லது 396 ஆ என்று மறந்து போய் விட்டது.) நீ வளர வளர இப்படி ஒவ்வொன்றாக நினைவிலிருந்து உதிரத் தொடங்கும் போல! தொட்டிலில் உன்னை பார்க்கும் போதெல்லாம்-‍ உடனேயே நீ வளர்ந்து பள்ளிக்கோ-கல்லூரிக்கோ சென்று விட்டாலென்ன என்றே தோன்றியது நினைவுக்கு வருகிறது. ‍ எப்படி பொறுப்பாக, பொறுமையாக‌ நான் இருக்கப் போகிறேன்? உனக்குத் தெரியுமா பப்பு, ஒரு குழந்தையை அதன் அறியாமையோடு ,உள்ளார்ந்து நேசித்து, வளர்க்குமளவிற்கு பொறுமையும் பக்குவமும் தனக்கிருக்கிறதா என்று கவலைப்பட்ட முட்டாளை? அந்த முட்டாளை நீ உனது லெவலுக்கு உயர்த்தினாய்...!

இந்த ஒரு வருடத்தில் உனக்குச் சொல்லத்தான் எவ்வளவு இருக்கிறது, பப்பு, ‍ உன்னைப் பற்றியும், என்னைப் பற்றியும், மேலாக நம்மைப் பற்றியும்! நீ கடந்து வந்த ஒவ்வொரு மாற்றங்களையும் உணர்ந்திருந்தாலும்-சென்ற நான்கு வருடங்களில் நிகழ்ந்த மாற்றங்களைவிட இந்த ஒரு வருடத்தில் நீ கடந்தவையும், அடைந்தவையும் அதிகம்! எத்தனை மாற்றங்கள்; எத்தனை வளர்ச்சிகள்! உனக்கேயுரிய தனித்துவமான பாதையில், தனித்துவமான ஸ்டைலில் அவற்றையெல்லாம் எவ்வளவு நேர்த்தியாக ஏற்றுக் கொண்டு வளர்ந்திருக்கிறாய் பப்பு!


போராட்டங்கள் உனக்கு புதிதல்லதான், சுவாசிப்பதற்கான போராட்டத்துடன்தானே பிறந்தாய்? உனது போராட்டத்தின் உறுதியை, உனது ஆளுமையின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் காண்கிறேன், பப்பு!ஆனால், நாங்கள்தான் சமயங்களில் குழம்பி போயிருக்கிறோம்.உன்னை குழப்பியும் இருக்கிறோம். எங்களது தேவைக்கேற்றபடி நீ சில விஷயங்களை சட்டென்று பெரிய பிள்ளையின் தோரணையுடன் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றும்; எங்களுக்கு வேண்டியபோது குழந்தையாகவே இருக்கவேண்டுமென்றும் படுத்தியிருக்கிறோம். எல்லாவிதத்தில் எங்களுக்கு வேண்டியபடி நீ நல்லவளாகவே இருக்க வேண்டுமென்று ‍; அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டுமென்றும், ஆனால், நீ உனக்கு வேண்டிய அளவில் உறுதியுடன்தான் இருக்கிறாய். தெளிவாகவும் இருக்கிறாய்.நாங்கள் சொல்வதை எங்களுக்கே திருப்பிச் சொல்லி, நாங்கள் செய்வதையே திருப்பி செய்து, வடிவேலுவின் ஜோக்கை பார்க்காமலே எங்களை வெறுப்பேற்ற ஆரம்பித்தாய். நான்கு வயதுக்கான மைல்கல் போல என்றெண்ணிகொண்டேன். நேற்றிரவு, 'சாப்பிடு இல்லேன்னா தூங்கு' என்ற போது 'சாப்பிடு' ன்னு சொன்னா தூங்குவேன்; தூங்குன்னு சொன்ன சாப்பிடுவேன் என்று புது அர்த்தம் சொன்னாய். சாப்பிடுவாய் என்று நினைத்து 'தூங்கு' என்று சொன்னதும் 'நீ சொல்றதைதான் கேப்பேன், ஆச்சி' என்கிறாய். ஐந்து வயதுக்கான இப்படியொரு மைல்கல்லை நான் எதிர்பார்க்கவில்லை.

கடந்த வருடத்தில்தான் எண்களை அறிந்துக்கொண்டாய். நீ விரல்விட்டு எண்ண எண்ண, நாங்கள் "சாரி" சொல்லியிருக்கிறோம். விரல்விட்டு எண்ணியபடி, நீயும் "ஐ லவ் யூ" சொல்லியிருக்கிறாய். மணி பார்க்க கண்டுக்கொண்டாய் மூன்றெழுத்து வார்த்தைகளை வாசிக்கவும். ஒவ்வொரு ஃபொனடிக்சாக சேர்த்து படிப்பதை அறிந்திருந்தாலும் சென்ற வாரத்தில் திடீரென்று நீயாகவே ஒரு வார்த்தையை வாசித்தபோது நானடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட ஏதாவது வார்த்தை இருக்கிறதா தெரியவில்லை ... And that word is "STIK". (ஒரு ஆக்டிவிட்டி செய்துக் கொண்டிருந்தோம். கோந்தின் மீது எழுதப்பட்டிருந்தன அவ்வெழுத்துகள்.)

மாதத்தின் பெயர்களையும் நீ அறிந்தது இந்த வருடத்தில்தான். அதற்காக சந்தோஷப்பட்ட என்னை நானே நொந்துக் கொள்கிறேன். ' எப்போது பிறந்தநாள் வரும்' என்று கடந்த மூன்று மாதங்களாகவே-தினந்தோறும் வாரங்களை அல்லவா எண்ணிக் கொண்டிருக்கிறாய். "வாடா மாப்பிள்ளை", "புலி புலிக்குது" "டாடி மம்மி வீட்டில் இல்ல" என்றும் இன்னும் பல பாடல்களை நீ பாடும்போது பிறவிப்பயனை அடைகிறேன். "டாடி; மம்மி பேபியை தனியா வீட்டுலே விட்டுட்டு எங்கியாவது போவாங்களா" என்ற சந்தேகங்களையும் தீர்க்க வேண்டிய நிலைக்கும் ஆளாகிறேன்.


இந்த வருடத்தில் உனது சாகச‌ குணமும் வளர்ந்திருக்கிறது, தயக்கங்களும், பயங்களும் நீங்கி இருக்கிறது. உட்கார்ந்து செய்யும் ஆக்டிவிட்டிகளைவிட ஸ்கூட்டியில் பறப்பதும், காலாற நடப்பதும், மேலிருந்து குதிப்பதும், ஓடுவதுமே உனது பிடித்தமாக இருக்கிறது. மாலை வேளைகளைவிட‌ விட காலை நேர கடற்கரையே உனக்கு விருப்பம்.பும்பாவும், டானி- டாடியும், டோராவும் பார்த்துக்கொண்டிருந்த எனது சின்னஞ்சிறு பெண், சூப்பர் சுஜியும், சிந்துபாத் அற்புத தீவு இன்னும் பல முழுநீள கார்ட்டூன்களையும் பார்த்து புரிந்துக் கொள்கிறாள். 'பேய், பூதம்லாம் இருக்காப்பா' என்று சந்தேகம் கொள்கிறாள். அறையில் எதையாவது தேடி எடுத்து வரச் சொன்னால், "ஜீபூம்பா, என் கையிலே வந்துடு" என்று கண்களை மூடிக்கொண்டு கையை நீட்டிக்கொண்டு நிற்கிறாள்!

பப்பு, நீ என்னைப்போல பத்துமடங்கு பொறாமைபிடித்தவளாக இருக்கிறாய். என்றோ ஒருநாள் ஆதியை நான் தூக்கியதற்காக இன்றும் கிள்ளுகளையும் அடிகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.

உன் முன் விவாதங்களை சண்டைகளை தவிர்த்து வந்திருக்கிறோம். என்றாலும் அம்மாவும்‍-அப்பாவும் ஃப்ரெண்ட்ஸாக இருக்கிறார்களா என்று முகங்களை நோக்கியே அறிந்துக் கொள்கிறாய். இப்போதெல்லாம் பாசாங்குகள் வேலைக்காவதில்லை. ஆனாலும், உனக்காக ஃப்ரெண்ட்ஸாக இருக்கிறோம்.

எனது மெத்தனத்தாலேயும், எதிர்நோக்காத தன்மையாலுமே உன்னை பலநேரங்களில் அவஸ்தைக்கு உள்ளாக்கியிருக்கிறேன், பப்பு. அது முற்றிலும் எனது கவனமின்மையே. மன்னிப்பு கேட்பது ஒருநாளும் சரியான தீர்வல்ல என்று அறிந்திருந்தாலும் என்னை நீ மன்னிப்பாயாக! ஒருவேளை இந்த வருடத்தில் திரும்ப அத்தவறுகளை செய்யாமல் இருக்க அவை எனக்கு வாய்ப்பளிக்கக் கூடும்.சும்மா சொல்வது, பொய், நிஜம் ‍ இவைதான் உனது சமீபத்திய கண்டுபிடிப்புகள். உன்னை ஆள்பவை. " சும்மா சொல்லலாம், ஆனா பொய் சொல்லக்கூடாது" உன்னுடைய அகராதியில் சும்மா சொல்வது என்பது ஏமாற்றுவது. பொய் சொல்வதென்பது மகா பெரிய பாவம். எனக்குத்தான் இவற்றுக்கு வித்தியாசம் தெரியவில்லை, இன்னமும்! உன்னிடம் தெரிந்தே ஏமாறுவது ஒன்றுதான் எங்களனைவருக்கும் பிடித்த விளையாட்டாக இருக்கிறது.

இதுவரை, நீ ஒவ்வொன்றை புதிதாகக் கற்றுக்கொண்டபோதெல்லாம், உன்னுடன் அந்த குதூகலத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். அந்த நொடியை நானும் அனுபவித்திருக்கிறேன், நீ புதிய மைல்கல்லை எட்டும் போதெல்லாம் உற்சாகமடைந்திருக்கிறேன். அந்த நொடியை நிறுத்தி வைத்துக்கொள்ள ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போதோ பப்பு, நீ வளர்ந்த குழந்தையாகிவிட்டாய். நீயே உனக்கு வேண்டியவற்றை செய்துக் கொள்கிறாய். பெரியவர்களை போல பேசுகிறாய், பெரிய விஷயங்களை பேசுகிறாய். நான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த குழந்தை அல்ல நீ இப்போது; கைப்பிடிக்காமல் கூடவே நடக்க அல்லது ‍ தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தால் போதுமென்கிற அடல்ட் !


You’re all grown up to me,now.


நான் செய்யாத ஒன்றுண்டென்றால், உன்னை தனியாக உறங்க வைக்க பழக்கப்படுத்தாத‌து. ஏனெனில், எனக்கே அதில் விருப்பமில்லை. I hug you tighter as you go to sleep each night. And, I know, to love is to let go. எல்லாவற்றையும் போல தனியாக உறங்கவும் நீயாகவே கற்றுக்கொள்வாய். அதுவரை.....

விரைவில் பப்பு, நாம் ஒரு சமநிலைக்கு வந்துவிடுவோம்; ஒருசில போர்க்களங்களுக்குப் பிறகோ அல்லது ஒருசில‌ கண்ணீர்த்துளிகளுக்குப் பிறகோ! நாம் கடைசியாக பார்த்தாமே, Alice in Wonderland-'கேட்டர்பில்லர் என்ன சொல்லுது, cocoon -குள்ளே போய்க்கிட்டு' என்று கேட்டாயே... அப்போது சொன்னதுதான் பப்பு, எதுவும் முடிவு கிடையாது, ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றமடைவது... Transformation...கடந்த வருடங்களில் எழுதியதை வாசித்த போதுதான் தோன்றியது ...

0..1..2..முத்தான மூன்றை நெருங்குகையில்!!
v3.0 - 3.10

ஒருவேளை, நீயும் நானும் கூட்டுப்புழுவிலிருந்து சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்துதான் கேட்டாய் போல!

மாற்றங்களை கையாள்வதற்கும், உனது சின்னஞ்சிறு சிறகுகள் வளர்வதற்கும், விரித்து பறப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க உறுதி கொள்கிறேன், பப்பு....


உன்னோட
ஆச்சிக்குட்டிபாப்பா (இப்படித்தான் என்னை கொஞ்ச ஆரம்பித்திருக்கிறாய் நீ ‍‍)

17 comments:

ஆயில்யன் said...

பப்புவுக்கு வாழ்த்துகள் :)

Deepa said...

சொல்ல எதுவுமில்லை. கண்ணீர் ம‌றைக்கிறது கண்களை.
ப‌ட‌ங்க‌ள் பார்க்க‌ப் பார்க்க‌ அலுக்க‌வில்லை. ஒவ்வொன்றாக‌ச் சேமித்து வைத்தேன்.

பப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு தாயும் மகளும் படிக்க வேண்டிய கடிதம்.

தீஷு said...

உருக்கமான‌ க‌டித‌ம்.. ப‌ப்புவுக்கு வாழ்த்துக‌ள்

Dr.Rudhran said...

beautiful, touching.

நட்புடன் ஜமால் said...

இதுவரை நேரில் காணாவிடினும் நீயும் எங்களோடு நாங்களும் உன்னோடு வளர்ந்து கொண்டிருக்கிறோம் பப்பு

வாழ்த்துகள் அன்பு பப்புவுக்கு

செல்வநாயகி said...

Wonderful.

அமைதிச்சாரல் said...

உங்க ரெண்டு பேரில் யாரு கொடுத்து வெச்சவங்கன்னு தெரியலைப்பா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கும்:-)

பின்னோக்கி said...

அழகான டைரியின் பக்கங்கள். 5 வருடம் கழித்து இவை அனைத்தும் அவளுக்கு மறக்க இயலா சம்பவங்களாக மாறிப்போகும்.

---

v4.0 - v4.11 தானே சரி ??

---

கொஞ்சம் அவளுக்கும் சாப்பிடக்குடுங்க. ரொம்ப ஒல்லியா இருக்கா :)

அம்பிகா said...

படிக்க படிக்க சந்தோஷமாக இருக்கிறது முல்லை. விரைவில் பப்புவும் இதை படிப்பாள். அப்போது அவளது மனநிலையையும் அறிய தாருங்கள். வாழ்த்துக்கள், பப்புவுக்கும், முல்லைக்கும்.

santhanakrishnan said...

எல்லாப் பெற்றோரின்
மனசுக்குள்ளுமிருக்கும்
விஷயத்தை நீங்கள்
கடிதமாக
எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி.

மாதவராஜ் said...

வாழ்க்கையை எவ்வளவு அர்த்தப்படுத்திக்கொண்டும், பத்திரப்படுத்திக்கொண்டும் இருக்கிறீர்கள். நெகிழ்வாய் இருக்கிறது. சந்தோஷமாகவும் இருக்கிறது.
வணக்கம் முல்லை.
வாழ்த்துக்கள் பப்பு.

காலம் said...

முல்லை ஒரு அட்டகாசமான பதிவு இது

ஒரு கவிதையைப்போல் தொடங்கி கவிதையாகவே நகர்ந்து சட்டென மனதில் ஆழமான கவிதையாகவே உட்கார்ந்துவிட்டது

இந்த பப்புதான் எவ்வளவு கொடுத்துவைத்தவள் அதைவிடவும் இந்த முல்லையும் அவர் வாழ்க்கை துனைவரும்

இது ஒரு புதுவகையான வரலாறாய் தெரிகிறது

இந்த மூன்றுவருட நிகழ்வையும் பதிவையும் ஒரு சேர கோர்த்து படிக்கும் ஆர்வம் தலையெடுக்கிறது

நீங்கள் ஏன் இந்த முயற்சியில் ஈடுபடக்கூடாது

நீண்ட நாட்களாக உங்களிடம் வைத்துக்கொண்டிருக்கும் கோரிக்கை ஒரு கவிதையை முயலுங்கள் என்று

இனி நான் அவ்வாறு உங்களை கோரப்போவதில்லை

உங்கள் கட்டுரைகளே அந்த தரத்தை நோக்கியவைகளாக நகர்ந்துகொண்டிருக்கிறது

பப்புவுக்கு வாழ்துக்கள்

பப்புவோடு இருக்கும் நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பை கொடுத்தால் நீங்கள் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்

அமுதா said...

அழகான கடிதங்கள்; பொக்கிஷங்கள்;

சின்ன அம்மிணி said...

ரொம்ப அழகான கடிதம்

மாதேவி said...

பப்புவுக்கு வாழ்த்துகள்.

இங்கும் "Ilove u mum " என விடுமுறையில் கட்டிக் கொண்டிருந்த மகளுடன் ஒன்றிப்போயிருந்தேன்.

அதனால் சிறிய மகள் பப்புவை எட்டிப் பார்க முடியவில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள்.

சிங்கக்குட்டி said...

ம்ம்ம்ம்ம்ம்...அருமையான நினைவுகள், பல வருடம் சென்றாலும் உங்கள் மகளுக்கு இது பயன் படும் :-)

கையேடு said...

என்ன சொல்றதுன்னு தெரியலை. இந்த நாலு நாளில் அடிக்கடி வந்து வாசித்துப் பார்த்தேன்.. இப்பவும் என்ன சொல்லிட்டுப் போறதுன்னு தெரியலை..

இப்போதான் உங்களது வலைப்பக்கத்தை வாசிக்கத் துவங்கின மாதிரி இருக்கு. இருவரின் வளர்ச்சியும் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு.