Friday, September 17, 2010

naam ke vaaste or A is A or Jasmine by any other name...

சிறுவயதிலிருந்தே வீட்டில் மற்றும் தெரிந்தவர்கள் அனைவரும் ஆச்சி யென்றே அழைத்துப் பழக்கமானதாலேயோ என்னவோ, சந்தனமுல்லை என்ற பெயரைவிட ஆச்சியே மனதிற்கு நெருக்கமாக இருந்தது. சின்னமாமா மட்டும் முழுப்பெயரில் அழைப்பார். மற்றபடி, உறவினர் பசங்களிடையே எனக்குப் பல பட்டபெயர்கள் இருந்தன. பெரிம்மா வைத்த பெயர் சங்கமித்ரா. ஏனோ இந்தப்பெயர் சிறுவயது கதைப்புத்தகளைத் தாண்டியதில்லை. யாரும் அப்படி அழைத்ததுமில்லை.

உடன் படித்தவர்கள் பெரும்பாலானவர்களின், மிகவும் மாடர்னான பெயர்களைப் பார்த்து பொறாமையாக இருக்கும். அவை, பெரும்பாலும் இரண்டெழுத்துகளில் - அதிகபட்சம் மூன்றெழுத்துகளில் முடிந்துவிடும். ஷோபா, ப்ரியங்கா, ஷ்வேதா, சுனிதா, வினிதா, ரேஷ்மா, ரீனா, ப்ரீனா, ப்ரவீனா , ஷைலஜா,லேகா, ஸ்ரீஜா என்பன அதில் சில. என் பெயரை விட, நண்பர்களது இந்தப் பெயர்கள் படு ஸ்டைலிஷாகவும் ரொம்ப ஃபேஷனாக இருப்பதாகவும் தோன்றும். எனக்கும் ஏன் இப்படி ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக பெயர் வைக்கவில்லையென்று மனதிற்குள் மறுகும் அளவுக்கு. இதில் ஏதாவது ஒரு பெயரை நாமே வைத்துக்கொள்ளலாமா என்று கூட ஆசைப்பட்டிருக்கிறேன். அவை பெரும்பாலும் சுனிதா அல்லது ஷ்வேதா‍வாக இருக்கும்.

ஏனெனில், எஸ்- இல் ஆரம்பிக்கும் பெயர் மிகவும் பிடித்திருந்தது. எஸ் என்ற எழுத்தே அழகாக இருப்பது போல சின்ன வயதில் தோன்றியிருக்கிறது. இப்போதும்தான். மிகவும் நாகரிகமாகவும் ஏதோ ஒரு தனித்தன்மை இருப்பது போலவும். மேலும், பெயரிலேயே ஒருவரது பர்சனாலிட்டி தெரியும் அல்லது பெயரே ஒருவரது பர்சனாலிட்டியை தீர்மானிக்கிறது என்பதும் நீண்ட நாட்களுக்கு நான் கொண்டிருந்த மாயை.

எஸ் எழுதி அதற்கு மூக்கு வைத்து, அந்த மூக்கில் ஒற்றை பூவை வரைவது என்று பெயரெழுதுவதில் சில கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியிருந்தேன். அதோடு, எஸ் இல் ஆரம்பிக்கும் பெயர்கள் பேரேடுகளில் அல்லது பரிட்சை பேப்பர் கொடுக்கும் போது மிகவும் பாதுகாப்பானவை. அனு, அவிஷ்னா போல ஆரம்பத்திலும் இல்லாமல், வினிதா அல்லது ஸீனியா போல கடைசி பெயராகவும் இருக்காது. அதுவும் பரிட்சை பேப்பர்கள் திருத்துவது பற்றியும் பெரிய வகுப்புகளில் பல கதைகள் சொல்லி பயமுறுத்துவார்கள். "ஃபர்ஸ்ட்லே இருக்கும் பேப்பர்லேல்லாம் கண்லே எண்ணெய் விட்டுகிட்டு திருத்துவாங்க, கடைசிலே வர வர முடிக்கற அவசரத்திலே இருப்பாங்க" என்பது போல. எது எப்படியோ, எஸ் இல் ஆரம்பிக்கும் டீசண்ட்டான காதுக்கு இனிமையான நவீன, நவநாகரீக பெயருக்கு மிகவும் ஏக்கமாக இருந்தது.

ஆனால், வீட்டில் எல்லோருக்கும் முற்றும் முழுக்க தமிழ்பெயர்களே. சொல்லப்போனால் எனக்கு எவ்வளவோ பரவாயில்லை . மாமா பெண்கள், 'கார்க்குழலி'க்கும் 'அமுதமொழி'க்கும் துக்கம் தொண்டையை அடைக்கும் ‍ பெயரைப் பற்றிப் பேச்சு வந்தாலே. அதைவிட பாவம் குட்டியின் நிலைமை. யாழினியன். ஒவ்வொரு முறை பரிட்சை எழுதப் போகும் போதும், பேப்பர் வாங்கிய பின்னும் வீட்டுக்கு வந்து ரகளைதான். மூலையில், கடைசியாக, ஏதாவது ஒரு கௌடவுன் போன்ற ரூமில்தான் இவனது பரிட்சை எண் வாய்க்கும். அதைவிட, பலரும் அவனை 'யாலினியன்' என்றே அழைப்பதும் அவனது சொந்த சோகக்கதை. குட்டியை மிஞ்சியது பெரிய மாமா பையனுடைய சோகம். பெயர் - மாறவர்மன். மூன்றாவது படிக்கும்போது, சண்டையிட்டு, அழுது அமர்க்களம் செய்து இளஞ்செழியனாக மாறினான். இதில் கொஞ்சம் தப்பித்தது விஜயபாரதியும், புகழேந்தியும்தான். (ஆனாலும், அவர்களை பஜ்ஜி என்றும் புழு என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தது வேறு கதை.)

ஐந்தாவது தாண்டியபின் , நண்பர்கள் வீட்டுக்குச் செல்லும் போது அல்லது புதியவர்கள் பெயர் கேட்டு கொஞ்சம் ஆச்சர்யமும், வியப்பும் காண்பித்து சிலாகித்து பாராட்டவும் எனது பெயர் மீது லேசாக பிடிப்பு வந்தது. புதிதாக கேட்ப‌வர்கள் கண்டிப்பாக இரண்டாவது முறை கேட்பார்கள். அதுவும் ஒரு கர்வத்தை தந்தது. 'இந்த பெயரிலேயே தமிழ்நாட்டுலேயே நீ மட்டும்தான்' என்றும் யாரோ ஒருவர் சொல்லிவிட தலைகால் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எனது பெயரை நேசிக்கத் தொடங்கினேன். வேற்று மாநிலத்தவர்களிடம் பிரச்சினை. அர்த்தத்தைக் கேட்டுக் கொண்டாலும் பெயரோடு கொஞ்சம் விளையாடத்தான் செய்தார்கள். கல்லூரியில் 'சேண்டி' என்றும் 'சந்தனா' என்றும் ; ஒரு சிலருக்கு 'முல்லை' அல்லது 'முல்ஸ்'.

எப்படியோ,பெயருடனான‌ எனது பிணைப்பும் நான் வளர வளர என்னோடு வளர்ந்தது. பெயரும் நானும் பிரித்துப்பார்க்க முடியாததாக மாறினோம். இதன்முக்கிய அனுகூலம் என்னவெனில், எந்த டொமைனிலும் /மெயில் சர்வரிலும் இந்தப் பெயர் எளிதாக கிடைக்கும். நான் பதியும் வரை பதியப்பட்டிருக்காது. எல்லோரும் பிறந்தநாளை அல்லது பிறந்த வருடத்தை அல்லது பாஸ் அவுட் ஆன வருடத்தை உடன் சேர்த்து ஐடி உருவாக்கினால் எனக்கு சொந்த பெயரிலேயே சுலபமாக கிடைத்தது.

சரி, இந்த சுயபுராணத்துக்கு இப்போது அப்படியென்ன அவசியம் என்றால்.....

ஆம்பூரில், எங்கள் வீட்டிற்கு எதிர் பிளாக்கில் குடியிருந்த‌ அண்ணா ஒருவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிம்மாவை யதேச்சையாக‌ ரயிலில் சந்தித்தபோது, எனது பெயரால் ஈர்க்கப்பட்டு த‌னது மகளுக்கும் சந்தனமுல்லையென்றே பெயரிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதுதான்....

திருப்பத்தூரிலோ அல்லது சேலத்திலோ எனது பெய்ரைக் கொண்ட ஒரு சிறுமி வளர்ந்து வருகிறாள் - ‍ பெருமைக்குரியதொரு பெயரைக் கொண்ட பெருமிதத்தோடு....;‍-)

21 comments:

துளசி கோபால் said...

ஆஹா..... பெயரில் இம்பூட்டு இருக்கா!!!!!!

இனிய பாராட்டுகள் உங்கள் பெற்றோருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இதன்முக்கிய அனுகூலம் என்னவெனில், எந்த டொமைனிலும் /மெயில் சர்வரிலும் இந்தப் பெயர் எளிதாக கிடைக்கும். நான் பதியும் வரை பதியப்பட்டிருக்காது.//

இந்த டிஜிட்டல் உலகத்துல இது தான் ரொம்ப முக்கியம்.. இதுக்காகவே மகிழலாம்..:)

Deepa said...

உன் பெயர் மிகவும் அழகாக இருக்கிறது என்பதற்காக எழுதப்பட்ட சுயதம்பட்ட இடுகையாகவே இதைப் பார்க்கிறேன். >:-(

தீபலக்ஷ்மி என்ற என் பெயரை தீபா லக்ஷ்மி, தீப லெச்சுமி, என்றெல்லாம் குதறுவது மட்டுமல்ல, Deepu என்று இல்லாமல் சிலர் (முக்கியமாக என் அத்தை, பாட்டிகள்) dheebuuu என்று அழைப்பதையெல்லாம் நினைவு படுத்தி விட்டாய்.
:(((((

அன்புடன் அருணா said...

நான் கூட பெயர் வைத்து ஒரு புராணம் ட்ராஃப்டில் வைத்திருக்கிறேன்.பூங்கொத்துப் பதிவு முல்லை!

சின்ன அம்மிணி said...

சுவையான பகிர்வு ஆச்சி. உங்க வீட்டில் இப்படின்னா எங்க வீட்டில் எல்லாம் சாமிப்பெயர்களா இருக்கும். வேற மாதிரி பெயர்கள் கேட்டா உதைதான் :)

அமைதிச்சாரல் said...

தனித்துவமான பெயர் உங்களது :-))))

ஆயில்யன் said...

//உன் பெயர் மிகவும் அழகாக இருக்கிறது என்பதற்காக எழுதப்பட்ட சுயதம்பட்ட இடுகையாகவே இதைப் பார்க்கிறேன். >:-(///

ஆமாம் ஆச்சி நானும் அப்படியே பார்கிறேன்! :))

ஆனாலும் பெயர்ல பூ வரைய தொடங்கியது முதல் பர்ஸ்ட் வந்தா பக்காவா திருத்துவாங்க பேப்பர் லாஸ்ட் வந்தா “போய் தொலையட்டும் டைப்புல திருத்துவாங்க வரைக்கும் ஒரே டெரர் திங்கி’ங்தான் போல ரைட்டு!

தனியா ஒரு லிஸ்ட் போட்டிருக்கலாம் உங்க குடும்பத்து தமிழ் பெயர்களினை யாழினியன் & மாறவர்மன் ரொம்பவே ரசித்தேன் !

ஆயில்யன் said...

//. வேற மாதிரி பெயர்கள் கேட்டா உதைதான் :)///

அட கேட்டு எல்லாம் வாங்குவீங்களா?

ennarr said...

Your name was the reason first time I visited your blog. Another interesting name was வகுளம், Doordharshan News reader of the 80s. I assume it a name of a flower.

Ravi

கையேடு said...

தலைப்பு புரியலங்க..

ராமலக்ஷ்மி said...

// புதியவர்கள் பெயர் கேட்டு கொஞ்சம் ஆச்சர்யமும், வியப்பும் காண்பித்து சிலாகித்து பாராட்டவும் //

புதிதாய் அறிமுகமானபோது நான் கூட உங்கள் பெயரை சிலாகித்திருக்கிறேன். நினைவிருக்கிறதா:)?

//'கார்க்குழலி'க்கும் 'அமுதமொழி'க்கும் துக்கம் தொண்டையை அடைக்கும் ‍ பெயரைப் பற்றிப் பேச்சு வந்தாலே.//

இப்போது எப்படியாம்:)?

அப்புறம் பாவம் அந்தப் புகழேந்திதான்!

நசரேயன் said...

//naam ke vaaste//

அது என்ன வாஸ்து ?

அம்பிகா said...

முல்லை,
நானும் உங்கள் அழகான பெயரை வியந்திருக்கிறேன்.
இனிய பாராட்டுகள் உங்கள் பெற்றோருக்கு

Vivek Baktha said...

Your name is very peculiar and special one which is creating some majestic image on you, even with others we have not met with you... It is always reminding my school day friend whose name is Mullai. If I had daughter i might have used your name....

ஜெயந்தி said...

நான்கூட உங்கள் பெயரைப் பார்த்துத்தான் பெயரால் ஈர்க்கப்பட்டு உங்கள் ப்ளாக்கிற்கு வந்தேன்.

ஹுஸைனம்மா said...

ஸேம் பிஞ்ச்!! எனக்கும் ஒரு ஸ்பெஷல் பெயர்தான் - என் பெயரில் ஒரு பெண்ணை இதுவரை அறிந்ததே இல்லை!! புதிதாக அறிமுகம் ஆகிற வேற்று நாட்டவர்களிடம் இதைத்தான் ஆர்வமாக முதலில் கேட்பேன்!!

அப்புறம் எனக்கு ஒரு வருத்தம் உண்டு - உங்க பொண்ணுக்கும் இதேபோல ஒரு அழகான பெயரைத்தான் வச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஆனா, அதைச் சொல்லாம ஏன் “பப்பு”ன்னு கூப்பிடுறீங்க? அதைவிட இது அழகா இருக்கா என்ன?

Sorry, if you think I am invading into your personal matters.

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் பாஸேன்னே கூப்பிடுறேனே பாஸ். இதெல்லாம் உங்க கணக்குல வராதா பாஸ்? :))

செம கேட்சிங்கான பெயர் பாஸ் உங்களுக்கு. ஆரம்புத்துல இது சும்மா நீங்களே பதிவுக்காக வச்ச பெயரோன்னு நினைச்சேன்.:)

தீஷு said...

முத‌ல்ல‌ நீங்க‌ blogக்காக‌ வைத்த‌ பெய‌ர் என்று நினைத்தேன் முல்லை..அழ‌கான‌ பெய‌ர்

சிங்கக்குட்டி said...

"சங்கமித்ரா" வாவ் சூப்பர் பெயர்...!

நாங்களும் இனி இப்படியே ஆச்சியை அழைக்கலாம் இல்லையா!.

முகுந்த் அம்மா said...

உங்கள் பெயர் அருமையான தமிழ் பெயர். உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல தமிழ் பெயர் வச்சு இருக்காங்க:))

Sriakila said...

செம இன்ட்ரஸ்டிங்கான போஸ்ட் முல்லை. ரொம்ப லேட்டா வந்திட்டேன்..