Tuesday, September 07, 2010

இல்லத்தரசிகளா, ஆயுள் தண்டனைக் கைதிகளா?

கீதாவும் பிரபுவும் எங்கள் வீட்டுக்கு அடுத்த பிளாக்கில்தான் குடியிருந்தார்கள். அண்ணன்‍‍‍ தங்கை இருவருக்கும் வயது வித்தியாசம் மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். எப்போதாவது அவர்களது அம்மாவுடன் வீட்டிற்கு வருவார்கள். பெரிம்மாவிடம் வொர்க்புக் வாங்கிச் செல்வார். அந்த ஆண்ட்டியின் பெயரை மறந்துவிட்டேன். இங்கு அவரது பெயர் முக்கியம் இல்லை. முக்கியமானது என்னவெனில் அந்த ஆண்ட்டியோ அல்லது அந்த பிள்ளைகள் இருவரும் சிரித்தோ அல்லது கலகலப்பாக பேசியோ நாங்கள் யாருமே பார்த்தது இல்லை. ஏன், எங்களோடு தெருவில் விளையாட ஒருமுறைக் கூட அவர்கள் வந்தது இல்லை. முகத்தில் எப்போதும் ஒருவித சோகம் இருக்கும். கீதா கிட்டத்தட்ட சோமாலியாவிலிருந்து வந்ததைப் போல்தான் இருப்பாள். பிரபுவும்தான். ஆன்ட்டி ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருந்தார்.

"அவங்க வீட்டிலே சமையல் ஒருவேளைதான், ராத்திரிலே வடையோ இல்ல பஜ்ஜியோ வாங்கி சாப்பிட்டுட்டு தண்ணீய குடிச்சுட்டு படுத்துடுவாங்க" ‍ என்று ஒருமுறை சாந்தா அத்தை ஆயாவிடம் சொல்லியிருக்கிறார். சனி,ஞாயிறுகளின் மாலைவேளைகளில் அங்கிள்கள் எல்லாம் சேர்ந்து பேசிக்கொண்டோ அல்லது இறகுபந்து விளையாடிக்கொண்டோ இருப்பார்கள் அல்லது குடும்பத்துடனோ பைக்கில் கடைத்தெருவிற்குச் செல்வார்கள். ஒருநாளும் கீதாவின் தந்தையையோ அல்லது குடும்பத்துடன் வெளியே சென்றோ நாங்கள் யாரும் பார்த்தது இல்லை. சொல்லப்போனால், அவர்களது தந்தை இவர்தான் என்பதே நீண்ட நாட்களுக்குப் பிறகே எங்களுக்குத்(தெருவில் விளையாடும் கோஷ்டி) தெரியும். அவர் ரத்தம் பரிசோதிக்கும்,ஈசிஜி எடுக்கும் லேபாரட்டரி வைத்திருந்தார். கூடவே சின்னவீடும்.

ஆன்ட்டியையோ, குழந்தைகளையோ கவனித்துக் கொள்வதில்லை. ஆன்ட்டியின் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. என்றாவது வீட்டுக்கு அவர் வருவதோடு சரி. வந்தாலும் இருவருக்குள்ளும் சண்டை, வாக்குவாதங்கள்தான். இதனாலேயே ஆன்ட்டியும் எதையோ பறிக்கொடுத்தது போல இருக்கிறார் என்றும் குழந்தைகளும் மனதளவில் பாதிக்கப் பட்டிருக்கிறார்களென்றும் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். ஆன்ட்டி தனியாகத்தான் இருவரையும் வளர்த்து படிக்க வைத்தார். ஒரு ஆக்ஸிடென்ட்டில் பிரபு இறந்துவிட, கீதா தற்போது ஒரு ஃபேஷன் டிசைனராக இருக்கிறார்.

குடும்ப வன்முறை சட்டங்களெதுவும் அப்போது இல்லை. அடி,உதை விழுந்தால் அல்லது மண்டை உடைந்தால், எட்டி உதைத்து இடுப்பு உடைந்தால் மட்டுமே அது பிரச்சினை. தற்கொலை செய்து கொண்டால்தான் உண்மையாகவே பிரச்சினை போல என்று நம்பிக்கையே வரும் பலருக்கு. இல்லையென்றால் எல்லா குடும்பத்திலும் இருப்பதுதானே என்ற எண்ணம்தான். மென்டல் டார்ச்சரும் ஒரு வன்முறையே என்பதை இன்று கூட யாரும் உணர்ந்துக்கொண்டது போல தெரியவில்லை. ஏன், கீதா ஆண்ட்டியே கூட உணர்ந்திருப்பாரா என்பது சந்தேகமே!

கீதா ஆன்ட்டி மட்டுமல்ல, கணவருக்கு இன்னொரு தொடர்பு இருக்கிறது என்று தெரிந்தும் குடும்ப கௌரவத்திற்காக வாழ்ந்துக் கொண்டிருக்கும் மாதவி ஆண்ட்டியும், தனது பெண்களின் கல்யாணத்திற்கு அப்பா என்று காட்ட வேண்டுமே என்ற காரணத்திற்காக தன்மீதே அவதூறுகளை பரப்பும் கணவனை பொறுத்துக் கொண்டு வாழும் லீலா ஆண்ட்டியும் கண் முன் வருகின்றனர்.

"ஆம்பளைன்னா அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்க, நாமதான் விட்டுக்கொடுக்கனும்", " கொஞ்சம் பொறுத்து போ" என்றும் "அன்பால திருத்துறதுதான் பொண்டாட்டியோட கடமை, எல்லார் வீட்டுலேயும் இருக்கிறதுதானே, கொஞ்சம் அனுசரிச்சு போ" என்றுமே ஆன்ட்டிக்கு சொல்லப்பட்டிருக்கலாம். திருமணப் பேச்சு ஆரம்பிக்கும்போதே "அனுசரிச்சு போகணும்" என்றுதானே பெண்களுக்கு அறிவுரையும் ஆரம்பிக்கிறது. அம்மாவிலிருந்து ஆரம்பித்து பக்கத்து வீட்டு ஆன்ட்டி முதல், தூரத்து சொந்தம் வரை திருமணமாகும் பெண்களுக்கு வழங்கும் அறிவுரை "கொஞ்சம் விட்டு கொடுத்து" "அட்ஜஸ்ட் பண்ணிதான் போகணும்" என்றுதானே ஆரம்பிக்கிறது. அதற்காக விட்டு கொடுப்பது தவறென்று சொல்லவில்லை. ஆனால், எதை விட்டுக்கொடுப்பது என்பதுதான் கேள்வி.

இதில், நமக்கென்று எடுத்துக்காட்டாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு சித்தியோ அல்லது அத்தையோ வாழ்ந்து செத்திருப்பார்கள். "எங்க விருந்தாச்சலம் அத்தை....அவ்ளோ நல்லா சமைப்பாங்க. அந்த காலத்துலே ஏது இந்த மாதிரி மெஷிங்கல்லாம், பம்பரமா வேலை செய்வாங்க. அந்த அத்தை, அவங்க வீட்டுக்காரர்கிட்டே இருவது வருஷமா பேசலை. ஏதோ மனஸ்தாபம். கோவம். ஒரு சண்டை, அடி உதை கிடையாது. ஆனா ஒரே வீட்டுலேதான் இருந்தாங்க. எந்த கஷ்டம்னாலும் பிரிஞ்சுடக் கூடாது."

பிடிக்காதவருடன் ஒரே வீட்டில் இருபது வருடங்களாக எந்த பேச்சு வார்த்தையுமில்லாமல் வாழ்ந்து தீர்த்த ஒரு மனுஷி.....என்ன இருந்திருக்கும் அவரது மனதில்?அவரது மனதுக்குள்தான் எத்தனை போராட்டங்கள் இருந்திருக்க வேண்டும்? தனியே வாழ நெஞ்சுறுதி வேண்டுமென்றால் உள்ளேயே இருந்து போராடவும் நெஞ்சுறுதி வேண்டும்..ஒப்புக் கொள்கிறேன். அவ்வளவு வைராக்கியம் கொண்டிருந்த அவர் எதற்கு சகித்துக் கொண்டிருக்க வேண்டும்? அந்த அத்தை படித்திருந்தால்? வேலைக்குப் போயிருந்தால்? குறைந்த பட்சம், "உனக்கு என்ன குறையிருந்தாலும் இங்கே வந்துடு " என்று சொல்லக் கூடிய பெற்றோர்/ உறவுகள் இருந்திருந்தால்?அந்த அத்தை, எத்தனையை மென்று விழுங்கிக் கொண்டு நாட்களைக் கடத்தியிருக்க வேண்டும்? எத்தனை சமரசங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும்? 20 வருடங்கள்....புழல் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் வாழ்க்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

‍ ஓ காட்! விருத்தாசலம் அத்தையை நினைத்தால் பரிதாபமும் ஆயாசமுமே மிஞ்சியது! என்றைக்கோ செத்துப் போன அவருக்காக ஓ வென்று கதறியழ வேண்டும் போல இருந்தது. "எதுவாக இருந்தாலும் எந்த காரணத்தைக் கொண்டும் பிரிந்துவிடாதே...குறைந்தபட்சம் அந்த அத்தையை நினைத்துக்கொண்டாவது வாழ்ந்து தீர்" என்று முடிவில் தொக்கி நிற்கும் அறிவுரைதான் அழுகையை கொண்டு வந்ததோ?!

அடி உதை மட்டும்தான் வன்முறை என்று ஏன் மனதில் பதிந்து போயிருக்கிறது?

"அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்று சொல்லி சொல்லி மருமகளாகவே வளர்க்கப்படுபவர் கடைசி வரை எந்த சூழ்நிலைக்கும் பொருந்திப் போகிறவராகவே மாறிவிடுகிறார். அவமானப்படுத்தப்பட்டாலோ அல்லது உதாசீனப்படுத்தப்பட்டாலோ, சுயமரியாதையை அழித்து அடிமையாக நடத்தப்பட்டாலோ யாரும் அவற்றை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. மாறாக, வாழ்வின் ஒரு பகுதியாக, தான் அனுபவித்து தீர்க்க வேண்டிய ஒன்றாக பார்க்கிறார். மேலும், அடித்தால்- உதைத்தால் ஒரு சில ஆண்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படலாம், ஆனால், மனதில், தான் உண்டாக்கிய ரணத்திற்கு குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் ஆண்கள் மிக சொற்பமே!

சொல்லப்போனால், உடல் ரீதியான் வன்முறையை விட மனரீதியான வன்முறைகளுக்கே பாதிப்புகள் அதிகம். எனது தோழி ஒருவருக்கு சைனஸ் வந்ததற்கு குடும்பத்தில் ஏற்பட்ட மனரீதியான அழுத்தங்களே காரணமென்று அறிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. சைனஸ் மட்டுமல்ல ஒற்றை தலைவலியிலிருந்து இதயநோய் வரை ‍ எல்லாவற்றையும் மனதில் அழுத்தி புழுங்கிச் செத்தாவது குடும்ப அமைப்பை/திருமணத்தை காப்பாற்ற வேண்டுமா என்ன? குழந்தைக்காக என்பது அடுத்த செக் பாயிண்ட். சொல்லப்போனால், இப்படி அடக்குமுறையான குடும்பத்தில் வாழும் குழந்தைகளைவிட சிங்கிள் பேரண்ட்ஸ்களிடம் வளரும் குழந்தை தன்னம்பிக்கையோடு, தைரியமான மனோபாவத்துடன் வளரும்.

ஆணுக்கும் குடும்ப வன்முறைகள் இருக்கலாம், பெண்ணுக்கு இருப்பதை போலவே. நமது சமூகத்தில் அது மிக மிக குறைவே. ஆண் அனுபவிப்பது போல கிட்டதட்ட பல மடங்கு பெண் அனுபவிக்கிறாள். உடல்ரீதியாக‌ அனுபவித்தால்தான் கொடுமை என்றில்லை; மனரீதியாக, பாலியல் ரீதியாக ஏன் வார்த்தைகள் வழியாக அனுபவித்தாலும் அது கொடுமைதான். எதற்கும் எதுவும் குறைந்தது இல்லை. சொல்லப்போனால், உடல்ரீதியான காயங்கள் ஆறினாலும் மனரீதியான பாதிப்புகள் மறைய ஆயுட்காலம் போதாது.

இதைப் பற்றிய விழிப்புணர்வைதான் நமது மக்களிடம் எழுப்ப வேண்டுமே தவிர பழைய நம்பிக்கைகளையும் ,கருத்துகளையும் கட்டிக்காப்பாற்ற வேண்டியது அல்ல. துரதிஷ்டவசமாக, பக்கபலமாக இருக்க வேண்டிய பெற்றோரே கூட இதை உணராமல் பெண்ணையே குற்றவாளியாக்கும் போக்கு தொடரும் போது மற்ற உறவுகளை பற்றி என்ன சொல்ல?

இந்தியாவில் தான் பெண்களுக்கெதிரான‌ குடும்ப வன்முறைகள் அதிகம். இதில், பாதிக்கும் மேற்பட்டோர், கணவன் தனது மனைவியை அடிப்பது சகஜமே என்ற மனோபாவம் உடையவர்கள். வெளியுலகில் பெண் அவமானப் படுத்தப்படுவதைவிட வன்முறைக்குள்ளாவதைவிட வீட்டிற்குள்/ வீட்டினராலேயே அதிகமாக பாதிக்கப்படுகிறாள்.

எப்படியும், கஷ்டப்பட்டாவது ஒன்றாக வாழ வேண்டும் அல்லது "தெரியாத பிசாசுக்கு தெரிஞ்ச பேயே மேல்" என்று எண்ணிக்கொண்டாவது வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே தவிர அதிலிருந்து விடிவை தேடுவது நல்லதல்ல என்றுதான் பெண்களின் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. அன்பாக இருவரும் ஒருவரையொருவர் மதித்து மரியாதையுடன் வாழ முடியும் என்பதே சிந்திக்கக் கூட கூடாததாக அல்லவா இருக்கிறது! எப்படியிருந்தாலும், கணவனோடு வாழ்வதே வாழ்க்கை இல்லையேல் அது ’வெட்டியான வாழ்க்கை’ என்ற மனோபாவம் ஏன்?

முந்தைய தலைமுறைகள் அவ்வாறு இருப்பதில் அர்த்தமிருக்கலாம்; ஆனால் மென்டல் ஹாராஸ்மென்ட்டை தாங்கிக் கொண்டு வாழ்ந்து தீர்க்க வேண்டிய கட்டாயம் இந்த தலைமுறைக்கும் இருக்கிறதா என்ன? பெண் என்றால் பெற்றோருக்கும் பின் கணவனுக்கும் இறுதிக் காலத்தில் மகனுக்கும் கட்டுப்ப்ட்டு வாழவேண்டிய அடிமை ஜீவன் என்று மனு தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் 'நீதி' நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்னும் செல்வாக்கோடு வாழ்கிறது. எந்தப் பெண்ணுக்கும் சுயேச்சையான வாழ்வும், மரியாதையும், அடிமைத்தனத்தின் மூலம் கிடைக்குமெனில் அதன் பொருளென்ன? இந்தியாவில் இப்படித்தான் பெண் வாழ்க்கை இருக்குமெனில் நம் சமூக, அரசியல் தரம் மட்டும் எப்படி இருக்கும்? சமூகத்தின் ஆரோக்கியம்தான் எப்ப்டி இருக்கும்?

மாதவராஜ் அவர்களின் இந்த இடுகையையும், பின்னூட்டங்களையும் வாசிக்க நேர்ந்தது. ஏன், அந்த பெண் தானாக ஒரு வண்டியை ஓட்டிச் செல்லக்கூடாதா என்ன? சமரசம் செய்துக் கொண்டாவது பற்றிக் கொள்ள ஒரு தோளை தேட வேண்டுமா என்று எழுந்த எண்ணங்களை பின் தொடர்ந்து சென்றபோது எழுந்ததே இவ்விடுகை.

(வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள ஒரு சக ஜீவன் வேண்டும், இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது இருவழிப் பாதையாக இல்லாதபோது சுயமரியாதை இழந்து சகித்துக் கொள்ள வேண்டும் என்பதைதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை)

23 comments:

துளசி கோபால் said...

ஃபிசிகல், மெண்டல், இமோஷனல், செக்ஸுவல் இப்படி பலதரப்பட்ட அப்யூஸ்கள் இருக்கு. இதுலே எதுவுமே சாதாரணமானது இல்லை.

புரிதல் இருக்கும் குடும்பத்தில் கணவன் மனைவி ரெண்டு பேருமே கொஞ்சம் விட்டுக்கொடுத்து வாழறாங்கன்னு நினைக்கிறேன்.

இடுகை அருமை.

ஆனா ஒன்னு......... பெண்களுக்கு சுயசம்பாத்தியம் இருக்கணும். இல்லைன்னா... ரொம்பக் கஷ்டம்:(

புன்னகை தேசம். said...

ஏன், அந்த பெண் தானாக ஒரு வண்டியை ஓட்டிச் செல்லக்கூடாதா என்ன? சமரசம் செய்துக் கொண்டாவது பற்றிக் கொள்ள ஒரு தோளை தேட வேண்டுமா

---------------------------

என் கருத்தும் இதுவே,.,,நல்ல அலசல்..

சில இடங்களில் ஆணும் பாதிக்கப்படுவதுண்டு.. வெளியில் சொல்ல முடியாமல்...எனக்கு தெரிந்துமேலும் இங்கு சில காரணங்கள் அழகாக சொல்லப்பட்டிருக்கு,.


கொடுமைக்கார கணவனை பிரியாத மனைவிகள்; ஏன்? விடை சொல்கிறது ஆய்வு!!

http://padmahari.wordpress.com/2010/09/06/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/

Sriakila said...

//வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள ஒரு சக ஜீவன் வேண்டும், இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது இருவழிப் பாதையாக இல்லாதபோது சுயமரியாதை இழந்து சகித்துக் கொள்ள வேண்டும் என்பதைதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை//

சாட்டையால் அடிப்பது போன்ற வார்த்தைகள்!

ஆனால் அத்தனை விதமான சகிப்புத்தன்மையையும் ஒரு பெண்ணுக்கு பெண்ணேப் புகட்டுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

லெமூரியன்... said...

நல்ல பதிவு.
நீங்கள் சொன்ன அத்தனை சித்தியும் அத்தைகளும் தாங்கிக் கொண்டு வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் சார்ந்திருத்தல் முறையை பழக்கிவிடபட்டது, மேலும் சமுதாயத்தின் பால் உள்ள பயம்...
இந்த தலைமுறையில் பெரும்பாலும் பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க பழகியிருக்கிறார்கள் அல்லது தைரியத்தோடு வாழ்வை எதிர்கொள்ளும் திடம் கொண்டுள்ளனர்..!

ஆனால் சமுதாயம் என்று நான் இங்கே குறிப்பிட்டது பெரும்பாலும் பெண்களைத்தான்..ஒரு பெண்ணை பற்றி ஆணை விட பெண்கள் அடிக்கும் கமேன்ட்டுகள்தான் மோசமானவையாக இருக்கிறது...

மேலும் ஏற்றதாழ்வுகள் இப்பொழுது அதிகமாகிக் கொண்டே போகிறது சமூதயத்தினுள்....ஐ.டி துறையை சேர்ந்த பெண்கள் எளிதில் பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து விட முடிகிறது....காரணம் சொந்த கால்களில் சுயமாக நிற்கும் சக்திதான்......
ஆனால் இதை மற்ற துறையில் உள்ள அல்லது இல்லத்தரசியாக வீட்டை கவனிக்கும் பெண்களை சேர்க்க முடியாது....
மேலும் சம காலத்தில் பெண்ணை பற்றிய பிம்பம் மோசமாக கையாளப்படுகிறது ஊடகங்கள் வாயிலாக.....திரும்ப ஒரு பெரியாரை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கமுடியாது....ஆனால் மாற்றங்கள் தென்படும் சாத்தியகூருகளின் அளவுகள் குறைந்து கொண்டே போகிறது அல்லது ஏற்ற தால்வுகளுக்கேர்ப்ப விகிதாசார நிலை வேறுபடுகிறது......

\\ அது இருவழிப் பாதையாக இல்லாதபோது சுயமரியாதை இழந்து சகித்துக் கொள்ள வேண்டும் என்பதைதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை....//

கணினி முன்னால் உட்கார்ந்து உங்களால் இப்படி சிந்திக்கமுடிகிறது..!
அடித்தட்டு மக்களின் வாழ்வியலோடு சேர்ந்த பார்வையாக இருப்பின் உங்கள் கருத்துக்களும் கூட மாற்றத்தினுடேதான் வெளிப்பட்டிருக்கும்.

மாதவராஜ் said...

முல்லை!

//மாதவராஜ் அவர்களின் இந்த இடுகையையும், பின்னூட்டங்களையும் வாசிக்க நேர்ந்தது. ஏன், அந்த பெண் தானாக ஒரு வண்டியை ஓட்டிச் செல்லக்கூடாதா என்ன? சமரசம் செய்துக் கொண்டாவது பற்றிக் கொள்ள ஒரு தோளை தேட வேண்டுமா என்று எழுந்த எண்ணங்களை பின் தொடர்ந்து சென்றபோது எழுந்ததே இவ்விடுகை.//

என் இடுகையையும், அதன் அர்த்தங்களையும் தாங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

எழுதுகிற நான் பேசாமல், அந்தந்த பாத்திரங்களே அவைகளின் நியாயங்களை பேசட்டும் என்பதே என் நோக்கமாயிருந்தது. அதில் ஏதேனும் குழப்பமாயிருந்ததா, தெரியவில்லை.

இடுகையில் அந்தப் பெண் சொல்கிற//“என்னால் முட்டாளாகவோ, அடிமையாகவோ பாவனையெல்லாம் செய்ய முடியாது”// என்னும் வார்த்தைகளும்,
பின்னூட்டத்தில் நான் சொன்ன //பரஸ்பரம் என்பது அனுசரித்துப் போவதும் அல்ல, சகித்துப் போவதும் அல்ல. // என்கிற வார்த்தைகளும் முக்கியமானவை என படுகிறது.

//ஏன், அந்த பெண் தானாக ஒரு வண்டியை ஓட்டிச் செல்லக்கூடாதா என்ன? // இதைத்தான் அந்தப் பெண் இப்போது எஸ்.ராவின் கதைகளைப் படித்துக்கொண்டு இருப்பாளா எனச் சொல்லியிருந்தேன். அவள், அவளாகத்தான் இருக்கிறாள் என்பதுதானே அதன் பொருள்?

கலகலப்ரியா said...

மிக நல்ல பதிவு... அத்தியாவசியமான இடுகை... வரிக்கு வரி வழி மொழிகிறேன்.. (சோமாலியாவிலிருந்து வந்தது என்கிற வர்ணனை தவிர்த்து..)

மாதவராஜ் அவர்களின் பதிவைத் தற்செயலாகப் பார்த்தபோது, இது பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது (எதிராக எதுவுமல்ல... அது சம்மந்தமாக), நேரப் பற்றாக்குறை..

மணிகண்டன் said...

//
ஆணுக்கும் குடும்ப வன்முறைகள் இருக்கலாம், பெண்ணுக்கு இருப்பதை போலவே. நமது சமூகத்தில் அது மிக மிக குறைவே
//

:)- ஒருவேளை மிக மிக குறைவாக சொல்லப்படுகிறதோ !

Deiva said...

This looks like a one sided view from woman's angle. Also as Manikandan has said, men's side issues are not discussed at all. Men also has equally issues

வினவு said...

"ஆயுள் தண்டனை கைதிகளின்" வலியை, இயலாமையை, படிப்பவருக்கு கோபமூட்டும் வகையிலும், நிதானமாக யோசிக்கும் போது அதை உரைக்கும் வகையில் உணர்ந்து கொள்ளும் வகையிலும் எழுதியிருக்கிறீர்கள் முல்லை! நன்றியும் வாழ்த்துக்களும்!!

மணிகண்டன் said...

ஏன் ஒருவர் எஸ்ரா புக் படிப்பது / பைக் ஓட்டுவதை விட எவ்விதத்தில் குறைந்தது ? இது என்ன லூசு பெண்ணியமாக இருக்கிறது ?

காலம் காலமாக சிந்திப்பதை மறுத்து மாற்றாக வைப்பது மட்டுமே பெண்ணியம் இல்லை. வறட்டு வாதம் மட்டும் தான்.

ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றும் சுதந்திரம் (அப்படி ஒன்று ) இருந்தால் / அல்லது அதனருகில் செல்லும் முயற்சியாக தான் எந்த இயமும் இருக்கவேண்டும்.

//முல்லை கடுப்பாகமாட்டார் என்ற நம்பிக்கையில் பஸ்ஸில்
பகிரப்பட்டது./

நசரேயன் said...

ம்ம்ம்

அரவிந்தன் said...

அந்த சரியில்லாத கணவனோடு வாழ வேண்டாம் என்று சொன்னாலும் அந்த காலத்து மனைவிகள் தனியே வாழ விரும்புவதில்லை.

வாழா வெட்டியாக இருப்பதைவிட வெட்டியான வாழ்க்கை வாழ்வதே மேல் என்று நினைத்திருக்கலாம்.

நீங்கள் சொல்லும் சம்பவமெல்லாம் 25 வருடங்களுக்கு முன்பு நடந்தவைகள்.தற்போதைய காலத்தில் பிடிக்கலைன்னா விட்டு விட்டு வந்துவிடு என்று சொல்லும் பெற்றோரே அதிகம்.

கணவனுக்கு தன்னை அடிப்பதற்கு உரிமை உண்டு என்றல்லவா பெரும்பான்மையான பெண்கள் இன்றளவும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

பூங்குழலி said...

ஆனால், அது இருவழிப் பாதையாக இல்லாதபோது சுயமரியாதை இழந்து சகித்துக் கொள்ள வேண்டும் என்பதைதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை)


அருமையான ஆழமான பதிவு சந்தனமுல்லை .விவாகங்களை கட்டிக் காப்பாற்றியே சிலர் மனநோயாளிகளாக மட்டுமல்ல ,உடல் அளவிலும் பாதிக்கப்படுகிறார்கள் .ஒருவர் மட்டுமே விட்டுக்கொடுத்து இன்னொருவர் தன்னுடைய இடத்திலிருந்து இம்மி அளவு கூட இறங்கி வராமல் மட்டுமல்ல,அதை அங்கீகாரம் கூட செய்யாமல் உடன் வாழ்வது பெரிய கொடுமை.


என்னுடைய மகனின் பள்ளியில் nuclear family ,joint family ,small family என்பதோடு single parent family என்பதையும் சொல்லிக் கொடுக்கிறார்கள் .ஆச்சரியமாக இருந்தது . உடன் படிக்கும் குழந்தைகள் எவரேனும் இவ்வாறு இருந்தால் குழந்தைகள் அதை பற்றி ஆச்சரியப்படாமல் ,"நாம small family அவங்க வீட்டில் single parent family" என்ற ஒரு அறிதலோடு இருந்து கொள்கிறார்கள் .

Deepa said...

ப‌ல‌கால‌ங்க‌ளாக‌க் குடும்பாவாழ்வு என்னும் வில‌ங்கில் அக‌ப்ப‌ட்டுத் த‌விக்கும் பெண்களின் வாழ்வைக் கண்ணாடி போல் காட்டி இருக்கிறீர்க‌ள். படிக்கும் போது எத்த‌னை பெண்க‌ள் க‌ண் முன் வ‌ந்து போகிறார்க‌ள்? :(
கொடுமை என்ன‌வென்றால் அவ‌ர்க‌ளையெல்லாம் ந‌ம‌க்கு எடுத்துக்காட்டாகவும் காட்டி வ‌ந்திருக்கிறார்க‌ள்?

இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அந்த அலுவலகத்தில் பல இளம்பெண்கள் வாரத்தில் ஏதாவது ஓரிரு நாட்கள் விரதம் இருப்பார்கள். சந்தோஷி மாதா, சோமவாரம், என்று ஏதேதோ பேரில். எதற்கு இப்படி விரதம் இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு "விரைவில் திருமணம் நடக்க வேண்டும், அதை விட நல்ல கணவன் அமைய வேண்டும் " என்று பதிலளித்தார்கள்.

ஆண்கள் யாரும் நல்ல மனைவி கிடைக்க வேண்டும் என்று ஏன் விரதம் இருப்பதில்லை என்று கேட்டதற்கு ஒரு பெண் சொன்னார், "பெண்கள் எல்லாரும் பெரும்பாலும் நல்லவர்கள் தான். கணவர்கள் நல்லவர்களாக அமைவது தான் கஷ்டம்" என்று. சிரிப்புடனும் பெண்களைப் பெருமைப்படுத்தி விட்டதாகவும் அந்தப் பேச்சு முடிந்து போனது.

ஆனால் அதில் எவ்வளவு கொடுமையான ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது. பெண்களின் எதிர்காலம், அல்லது திருமண வாழ்க்கை உண்மையில் சூதாட்டம் போலாகி விட்டது.

ஆண்களின் "நல்லியல்பை", "பெருந்தன்மையை" நம்பியே அது பணயம் வைக்கப் படுகிறது. புருஷன் நல்லவனா இருந்தா, நல்லபடியா "வெச்சிக்கிட்டா" (கருமம், என்ன வார்த்தை இது!) அவ அதிர்ஷ்டக்காரி. இல்லன்னாலும் விதியை நொந்துகிட்டு வாழத்தான் வேண்டும் என்பது தான் பல பெண்களின் நிலை.
படித்திருந்தாலும், சுயமாகச் சம்பாதித்தாலும் தைரியம் கொடுக்காமல் ஏன் இப்படியொரு பொய்யான சார்புத்தன்மை திணிக்கப்படுகிறது பெண்களின் மீது?

பின்னூட்டம் நீளமாகி விட்டது; மன்னிகவும்.

கண்ணகி said...

ஆழமான அலசல்..தம்பதிகளுக்குள் ஒத்துவராத்போது குழந்தைகள் பொருட்டே பொறுத்துப்போக வேண்டியிருக்கிறது..ரொம்பவும் முடியாத கட்டத்தில்தான் அவள் பிரிந்து வாழ முடிவெடுக்கிறாள்...அப்போது அவள் பெற்றோர் துணை இருந்தால் அவள் மீண்டுவிடுவாள்..அப்படி இல்லாதபோதுதான் அவள் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள்...

எது எப்படி ஆயினும்இன்றைய பெண்குழந்தைகளுக்கு கட்டாயம் அவர்கள் சொந்தக்காலில் நிற்கும் தகுதியை பெற்றோர் வகுத்துக்கொடுக்கவேண்டும்.அது பலவித்ததில் அவ்ர்களுக்கு வாழ்ககையை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்...

நல்லவன் கருப்பு... said...

ஆ வூ ன்ன பெண்ணியம் பெண்ணியம்ன்னு கொடிய தூககிடுறீங்க...

இந்த இடுகையோட மொத்த சாராம்சமும் ஒரு வரில அடகிடுது .."ஆண் எப்போதும் துன்புறுத்துபவன்.... அன்றைய பெண்கள் பொறுத்து கொண்டார்கள்.. ஆனால் இன்றைய பெண்கள் எதிர்த்து நிற்கிறார்கள்..."

எனக்கு தெரிந்த நிறைய மக்கள்,கணவன் இல்லாமல் மனைவி மட்டும் குடும்பத்தை வெற்றி கரமாக நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்....இத்தனைக்கும் அவர்கள் மெத்த படித்த மேதாவிகள் அல்லர்..

இன்றைய பெண்கள் அடிமை வாழ்வு தேவை இல்லை என்று எடுக்கும் முடிவுகள் மிகவும் மட்டமானவை..... கேட்டா நான் சம்பாரிக்கிறேன்...என்னால சுயமா இருக்க முடியம்....இது வரவேற்க வேண்டியதுதான்.. அதோட விடாம கணவன் மற்றும் கணவன் சார்ந்தவர்கள் மீது வழக்கு போட்டு அவர்களை சாவடிப்பது..... மற்றும் இன்ன பிற... :)

இன்றைய பெண்கள் விட்டுகொடுத்து போறதுக்கும் அடிமை வாழ்வுக்கும் உள்ள நூலிழை இடைவெளியை சரியாக புரிந்து கொள்ள கூடியவர்களாக இல்லாமல் இருப்பது தான் இன்றைய விவாகரத்து அதிகமாவதற்கு காரணம்..

இன்றைய பெண்களால் எத்தனை ஆண்கள் வாழ்வு நாசமாகிருக்கு ?? (பெண்ணாதிக்கவாதிகள்ன்னு சொல்லிக்கிட்டு யாரும் செம்பு தூக்கிகிட்டு வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்)

அப்புறம் உங்க இடுக்கையோட ஒவ்வொரு வரிக்கும் நான் பதில் சொல்லன்னும்ம்னு நினைக்கிறேன்..ஆனா :(

தமிழ் பிரியன் said...

///வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள ஒரு சக ஜீவன் வேண்டும், இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது இருவழிப் பாதையாக இல்லாதபோது சுயமரியாதை இழந்து சகித்துக் கொள்ள வேண்டும் என்பதைதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை/////

இப்படி நினைத்தால் உலகில் எங்குமே கணவன் மனைவி இணைந்து வாழ முடியாது. திருமண வாழ்வு என்பதே இல்லாமல் போய் விடும்.

சின்ன அம்மிணி said...

//"அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்று சொல்லி சொல்லி மருமகளாகவே வளர்க்கப்படுபவர் கடைசி வரை எந்த சூழ்நிலைக்கும் பொருந்திப் போகிறவராகவே மாறிவிடுகிறார். அவமானப்படுத்தப்பட்டாலோ அல்லது உதாசீனப்படுத்தப்பட்டாலோ, சுயமரியாதையை அழித்து அடிமையாக நடத்தப்பட்டாலோ யாரும் அவற்றை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. //

அருமையான பதிவு முல்லை. எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கறதுதான் பலரோட அட்வைஸ். குடும்பம் அப்படிங்கற அமைப்புக்காக இந்த மாதிரி பெண்கள் எவ்வளவு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியிருக்கு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிக நல்ல பதிவுங்க.

நாம் செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் 'சமுதாயம் என்ன நினைக்குமோ' என்ற பார்வையிலேயே இன்னும் செய்திகொண்டிருக்கிறோம்.

அதன் காரணமே இல்லத்தரசிகள், எத்தனையோ மன உளைச்சலிற்கு ஆளானாலும் அவர்களட்ஹு கணவருடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பதிவில் ஒரு சாராரை மட்டுமே அனுகியுள்ளீர்கள். இன்னும் பல நிலைகளில் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

நன்றி!!

தமிழ் அமுதன் said...

(வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள ஒரு சக ஜீவன் வேண்டும், இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது இருவழிப் பாதையாக இல்லாதபோது சுயமரியாதை இழந்து சகித்துக் கொள்ள வேண்டும் என்பதைதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை)

ஒரு கணவன் மனைவியிடம் சுய மரியாதையை இழப்பதும்,ஒரு மனைவி கணவனிடம் சுயமரியாதையை இழப்பதும் தம்பதிகளுக்குள் சகஜம்..! அதன் பெயர் அன்யோன்யம்..!

குடுகுடுப்பை said...

manam oppatha nilaiyil pirithal iruvarukkum nallathu.

I support your views but for both genders.

கெக்கே பிக்குணி said...

முல்லை, காலத்துக்கேற்ற பதிவு.

நாம வளர்ந்த தலைமுறை, அதுக்கு முந்தைய தலைமுறைகளில் துன்பப்படும் பெண்களுக்கு தம்மை வெளிப்படுத்திக் கொள்ள வழிகள் இல்லை. நீங்க சொன்ன ஆன்ட்டி / அத்தை மாதிரி நாம எத்தனை பேரப் பார்த்திருக்கோம்?

நான் இப்ப ரொம்பவே அவதானிக்கிறது: தம் சுயம் அறியாமல், வெளிப்பட வழியும் செய்து கொள்ளாமல், சமுதாய விதிகளில் காணாமல் போகும் இந்திய ஆணீயம்.... இப்படித்தான் இருக்கணும்னு நினைச்சிட்டு (நம்ம தலைமுறை மாதிரி, நம்ம பெற்றோர் தம் மகன்களுக்கு அட்ஜஸ்ட் சொல்லிக்கொடுக்கவில்லியே!) ரொம்ப வலியை முழுங்கிட்டுப் போறாங்க. இந்த ஆம்பிளைங்க கஷ்டங்களைச் சொல்லிக்கிறதும் இல்லை. பொம்பளங்க ஓரளவுக்கு வெளிப்படையாப் பேசிக்கிறோம்.... என்னவோ இதைச் சொல்லணும்னு தோணியது, சொல்லிட்டேன்.

தெய்வசுகந்தி said...

//(வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள ஒரு சக ஜீவன் வேண்டும், இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது இருவழிப் பாதையாக இல்லாதபோது சுயமரியாதை இழந்து சகித்துக் கொள்ள வேண்டும் என்பதைதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை) //

நல்லா சொல்லியிருக்கீங்க முல்லை!