Monday, September 27, 2010

கல்லா? மண்ணா?? (And, this is not a game!)

அநேகமாக, பள்ளியிறுதி என்று நினைக்கிறேன்.
வீணா ஆன்ட்டியின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். வீணா ஆன்ட்டிக்கு ராமநாதபுரம். "எங்க அம்மா வழியிலே எனக்கு வந்ததுங்க டீச்சர்" என்று ஒரு குட்டி பையிலிருந்து கற்களை காண்பித்தார். அவை வைரக்கற்களும் நவரத்தின கற்களும். அவர்கள் குடும்பத்தில் இது ஒரு வழக்கமாம். அம்மாவின் நகைகள் பெண்களுக்கு பாகமாக வருவதுடன், வைரங்களும் நவரத்தின கற்களும் தலைமுறையாக தலைமுறையாக பெண்களுக்கு பாகம் பிரிப்பதும். மேலும் சொன்னார், " எனக்குதான் பொண்ணு இல்லையே, மருமகளுக்குத்தான் கொடுக்கணும்" .

வீட்டுக்கு வந்த பிறகு பெரிம்மா குணா அத்தையிடம் சொல்லிக்கொண்டிருந்தார் - "எங்கிட்டே ஆச்சிக்கும், குட்டிக்கும் கொடுக்கிறதுக்கு இந்த கல்லுங்களும் புக்ஸும்தான் இருக்கு" என்று. எந்த ஊருக்கு நாங்கள் சுற்றுலா சென்றாலும் அங்கிருந்து நினைவுச்சின்னமாக ஒரு கல்லை எடுத்து வருவோம் நானும் குட்டியும். பெரிம்மா சொல்லிக்கொடுத்த பழக்கம்தான். செல்லுமிடங்களில் எல்லாம் அதற்காகவே வித்தியாசமான வடிவங்களில் கற்களை தேடி அலைந்திருக்கிறோம் ‍- ஏற்காடு பார்க்கிலிருந்து மவுண்ட் அபு ஏரி வரை. அந்தக்கல்லில் தேதியை, இடத்தைக் குறித்து எங்கள் சேகரிப்பு இருந்த கடைசி ஷெல்ஃபில் கொண்டு வந்து சேர்த்தால் ஒரு நிம்மதி...சந்தோஷம்...சிறுவயது சந்தோஷங்கள் அவை. இப்போது எந்தக்கல் யாருடையது என்று எங்களுக்குத் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை அவை வைரக்கற்களுக்கு ஈடானவையே. ஆனால், எதை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறோம் என்பதுதான் இங்கே தெரிந்துக் கொள்ள வேண்டியதாக கருதுகிறேன்.

இதே போலத்தான், தனது பெண்ணிற்கும் கொடுப்பதற்கு விலையுயர்ந்த சொத்தொன்றை வைத்திருந்தார் அஜிதாவின் தந்தை. அவரது சித்தப்பா கம்யூனிஸ்ட்டாக இருந்தவர். அஜிதாவின் தந்தையும் அவர்மூலமாக கம்யூனிசக் கோட்பாடுகளும் சித்தாந்தங்களும் பரிச்சயம். இளமைக்காலத்தில் சித்தப்பாவுடன் சேர்ந்து போராட்டங்களிலும் கலந்துக் கொண்டிருக்கிறார். அவர் இறக்கும் தறுவாயில், 'எனக்கு அடுத்த தலைமுறையாக‌ இயக்கத்தில் செயல்பட யாரும் இல்லையே' என்று அஜிதாவின் தந்தையிடம் வருத்தப்பட்டிருக்கிறார். தானும் ஒரு கம்யூனிஸ்டாக இயங்குவதுடன் தனது மகளையும் இயக்கத்தில் சிறுவயதிலிருந்தே செயல்பட வைத்திருக்கிறார் அவர். "உன்னாலே வளர்க்க முடியலைன்னா எங்ககிட்டே கொடுத்துடு" என்று அஜிதாவின் பெரியப்பாக்களும் சித்தப்பாக்களும் கடிந்துக்கொண்டபோது "உங்களை நம்பி விடுவதைவிட எங்கள் தோழர்களையே நம்பி என் மகளை வளர்க்கிறேன்" என்றும், பதிமூன்று வயதான அஜிதாவிடம் "உனக்கு எது சரி, தவறு என்று தீர்மானிக்கும் வயது வரும் வரை நாங்கள்தான் உனக்கான முடிவுகளை எடுக்க வேண்டும், உனக்குத் தீர்மானிக்கும் வயது வந்தபின்னர் இதில் நீடிப்பதும் இல்லாததும் உனது விருப்பம்" என்றும் சொல்லி அஜிதாவை இயக்கத்தில் சேர்த்திருக்கிறார். இவை அனைத்துமே அன்றைய புரட்சித்திருமணத்தில் அஜிதாவின் தந்தையும், அஜிதாவும் மேடையில் பகிர்ந்துக் கொண்டவை.

Its all about the choices we make.

நாமெல்லாருமே, நமக்குக் கிடைக்காதது நமது பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்தான். எல்லா போராட்டங்களும் அதனை அடிப்படையாக கொண்டவைதான். நமது சந்ததி இல்லாவிடினும் நமக்கு அடுத்த தலைமுறையாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தானே விடுதலைப் போராட்டங்களிலிருந்து மருத்துவ கண்டுபிடிப்புகள் வரை விளைகின்றன. "நீயாவது நல்லா படிச்சு நல்லா இரு, எங்களை மாதிரி கஷ்டப்பட வேண்டாம்" என்று கேட்டு வளராதவர்கள் எத்தனை பேர்? "எந்த வம்பு தும்புலேயும் மாட்டிக்காதே, போனோமா வந்தோமான்னு இரு" என்று தானே அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். சொந்த சுகத்தைத்தாண்டி நாம் எப்போதாவது யோசிக்க பழக்கப் பட்டிருக்கிறோமா?

இவர்கள் நடுவில் அஜிதாவின் தந்தை செய்திருப்பது புரட்சி இல்லையா?

"கடனை உடனை வாங்கி பொண்ணை நல்லபடியா கல்யாணம் செஞ்சுகொடுக்கணும்" என்ற அம்மா‍-அப்பாக்கள் மத்தியில், எந்த ப்ரொஃபஷனல் கல்லூரியாலும் தர முடியாத சமூக அறிவை/கல்வியை அஜிதா பெற வாய்ப்பளித்தது அக்குடும்பம் செய்த புரட்சிதானே?

ஏன், ஐடி கலாச்சாரம் ஐடி கலாச்சாரம் என்று திட்டுகிறார்களே, அப்படித் திட்டுபவர்கள் தங்களது பிள்ளைகளை எந்த நம்பிக்கையில் இன்ஜினியரிங் படிக்க வைக்கிறார்கள்? படித்து முடித்ததும் ஏதாவதொரு பன்னாட்டு கம்பெனியில் வேலை நிச்சயம் என்ற நம்பிக்கையில்தானே! மழை பெய்தால் ஏரியா மூழ்கி விடுகிறது அல்லது அடுத்த மாநிலங்களில் தமிழனுக்கு வீடு கிடைப்பதில்லை அல்லது ஊழலுக்கெதிராக சீர்கேடுகளுக்கெதிராக - தனது மகளோடு/மகனோடு போராட்டத்தில் இறங்க வேண்டாம், குறைந்த பட்சம் அவர்கள் மகள்கள்/ மகன்கள் அச்சமூக சீர்கேடுகளுக்காக போராட ஊக்கமளிப்பார்களா? இல்லை, அதைப்பற்றித்தான் பேசுவார்களா? பாஸ்போர்ட்டை ரெடியாக்கி, 'போன கையோட முடிந்தால் பிஆர் வாங்கிடு' என்று சொல்வார்களா?

தான் நம்பும் அரசியல் விழுமியங்களுக்காக, தன் காலத்திற்குள் கண்ணால் பார்ப்போமா என்ற முழு உத்திரவாதம் இல்லாவிட்டாலும் என்றாவது நடந்தே தீரும் என்று தான் நம்பும் அரசியல் புரட்சிக்காக, கண்ணெதிரே நடக்கும் ஏகாதிபத்திய சுரண்டல்களையும், முதலாளித்துவ அடக்குமுறையையும் எதிர்த்து, வர்க்க நலன்களையும் தாண்டி போராடும் அவரது வாழ்க்கையே புரட்சிகரமானதில்லையா?

ஒரு ட்யூஷன் சென்டரை மிகுந்த ஈடுபாட்டுடன் நடத்தி வந்தார் எனது தோழி ஒருவர். பணத்தைவிட தனக்குப் பிடித்ததை செய்யும் மகிழ்ச்சியும் பிறருக்கு உதவி செய்யும் ஆத்ம திருப்தியும் கிடைப்பதாகச் சொல்லுவார். திருமணமானதும் அவர் செய்தது ‍ அந்த ட்யூஷன் சென்டரை இழுத்து மூடியதுதான். குடும்பமா, தனது விருப்பமா என்ற கேள்வி வந்ததும் அவர் விட்டுக்கொடுத்தது தனது மகிழ்ச்சியையும் ஆத்ம திருப்தியையும்தான். இந்த ரேணுகாவை மட்டுமல்ல, திருமணத்திற்காக/குழந்தைக்காக என்று தனது கேரியரை பலியாக்கிய எண்ணற்ற தோழிகள் எனக்குண்டு. அயல்நாட்டு வாழ்க்கைக்காக பல சமரசங்களை செய்துக்கொண்டவர்களை நாம் கண்டுமிருப்போம்.

இவர்கள் நடுவில், தனது சிறுபருவத்திலிருந்தே மக்கள் நலனுக்காக ம.க.இ.க கலைக் குழுவோடு தமிழகம் முழுவதையும் சுற்றுபிரயாணம் செய்தும், கருணாநிதி ஆட்சிகாலத்தில் கருணாநிதியையும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவையும் மக்களிடையே அம்பலப்படுத்தி பிரச்சாரங்கள் செய்தும் ஒரு கம்பீரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். எப்படியோ பள்ளி வகுப்பில் தேறி ஒரு கல்லூரிப் பட்டம் பெற்று வேலைக்கு அமர்ந்து திருமண்ம் செய்துக் கொண்டு செட்டில் ஆனாலே சாதனைதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண்கள் மத்தியில் அஜிதா செய்தது புரட்சி இல்லையா?


இதில் எதையும் அவர் இழந்துவிட வில்லை, மாறாக பெற்றதே அதிகம். தனது விருப்பத்தில் அல்லது பாக்கெட் மணியில் சிறிது குறைந்தாலே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் இளைஞர் மத்தியில், ‍இத்தகைய முடிவுக்கு தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர்களைக் குறித்து பெருமைப்படுவதாக அஜிதா சொன்னார்.

நமது சொந்த வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் வராமல் சமூக அவலங்களை கண்டிக்கத்தானே நம்மில் பலரும் பழக்கப்பட்டு போயிருக்கிறோம். சமூக சீர்கேடுகளுக்காக பொங்கி போஸ்ட் போடுவதைத்தாண்டி நம்மில் எத்தனை பேர் என்ன செய்திருக்கிறோம்?

குறைந்தபட்சம், சாதியத்தை கடைப்பிடிக்கும் பார்ப்பனிய சடங்குகளையாவது அன்றாட வாழ்வில் நிராகரித்திருக்கிறோமா? கோக்/பெப்சி கம்பெனிகளின் சுரண்டலையாவது புரிந்துக்கொண்டிருக்கிறோமா? அவ்வளவு ஏன், போபாலைக் குறித்து நாம் கவலைப்பட்டதை விட எந்திரனைக் குறித்து நாம் பேசியதே அதிகம்.

முத்துகுமாரின் ஊர்வலத்திற்குச் சென்றதற்கே, அதை வருடா வருடம் நினைத்தே - ஈழப்போராட்டத்தில் கலந்துக்கொண்டதைப் போல திருப்தியடையும் நாம், சுயநலம் தாண்டி, எந்த கொள்கைகளுக்கு வாழ்வில் மதிப்பளிக்கிறோம்? நமது எதிர்ப்பை எவ்விதத்தில் காட்டியிருக்கிறோம்?

எதைவிட்டுக் கொடுப்பது என்பது தெரியாமல் அல்லது புரியாமல் சுயத்தை இழந்து வாழும் குடும்பக் குத்துவிளக்குகளுக்கு மத்தியில் அஜிதாவின் குடும்பமும் - பாண்டியனின் குடும்பமும் செய்திருப்பது புரட்சிதான்.

நம்முன் கிடக்கும் கற்களில் எதனை நாம் பொறுக்கியெடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். அவை வைரக்கற்களா அல்லது வெற்று மண்ணாங்கட்டிகளா?

14 comments:

Deepa said...

Awe-inspiring post.
Hats off to Ajitha!

மருது said...

என்ன செய்வது? .. இது சில மண்ணாங்கட்டிகளுக்கு புரிய மாட்டேன் என்கிறது ...

☀நான் ஆதவன்☀ said...

மணமக்களுக்கு வாழ்த்துகள் பாஸ் :)

செந்தழல் ரவி said...

பதிமூன்று வயதான ஒருவரிடம் கம்யூனிசத்தை ஒரே ஆப்ஷனாக கொடுப்பதுக்கும், அதே வயதுள்ள குழந்தையிடம் நீ டாக்டர்தான் என்று சொல்லி வளர்ப்பதுக்கும் என்ன வேறுபாடு ?

என்ன பதில் ?

? said...

OPTION is the difference

அம்பிகா said...

அஜிதாவுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வு முல்லை.

நசரேயன் said...

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை

காலம் said...

வழக்கமான எழுத்துநடை தடுமாறுகிறது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்

வால்பையன் said...

// செந்தழல் ரவி said...
பதிமூன்று வயதான ஒருவரிடம் கம்யூனிசத்தை ஒரே ஆப்ஷனாக கொடுப்பதுக்கும், அதே வயதுள்ள குழந்தையிடம் நீ டாக்டர்தான் என்று சொல்லி வளர்ப்பதுக்கும் என்ன வேறுபாடு ?

என்ன பதில் ? //


டாக்டர் மட்டுமா?

பார்பனீயமும், கடவுள் நம்பிக்கையும் கூட குழந்தையிலிருந்தே தான் வளர்க்கப்படுகிறது!

தான் என்னவாக வேண்டும் குழந்தை தீர்மானிக்க வேண்டுமா, பெற்றோர்களா!?

வால்பையன் said...

எனக்கு தி.மு.க பிடிக்கும் அதனால் என் மகனும் அதில் தான் இருப்பான் என்று கழக களவாணிகள் ஸாரி... கண்மணிகள் சொல்வது போல் தான் தனது விருப்பத்தை குழந்தைகள் மேல் திணிப்பதும்!


பப்பு பாவம்!

எனக்கும் பப்புவுக்கும் சம்பந்தமில்லை, ஆனால் உங்களுக்கு எப்படி சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறதோ அதே அளவு எனக்கும் இருக்கலாம், அதை ஏன்னு கேட்க யாருக்கும் உரிமையில்லை!

காமராஜ் said...

முல்லை.
ஒரு தீர்க்கமான இன்னொரு தளம்
தெரிகிறது எழுத்தில்.

Deepa said...

வால் பையன்!

எதுக்கு இடுகைக்குச் சம்பந்தமில்லாம "பப்பு பாவம்" நு சொல்றீங்க?
தன் மகளைப் பற்றி இங்கு முல்லை எதுவுமே சொல்லவில்லை.
அஜிதா வளர்க்கப்பட்ட விதத்தை விவரித்துச் சிலாகித்திருக்கிறார்.

அதிலும் பாருங்கள்:
// பதிமூன்று வயதான அஜிதாவிடம் "உனக்கு எது சரி, தவறு என்று தீர்மானிக்கும் வயது வரும் வரை நாங்கள்தான் உனக்கான முடிவுகளை எடுக்க வேண்டும், உனக்குத் தீர்மானிக்கும் வயது வந்தபின்னர் இதில் நீடிப்பதும் இல்லாததும் உனது விருப்பம்" என்றும் சொல்லி அஜிதாவை இயக்கத்தில் சேர்த்திருக்கிறார். // இப்படித் தானே அஜிதாவின் தந்தையும் சொல்லி இருக்கிறார்?

வால்பையன் said...

நிறைய பேருக்கு தன் சுயபுத்தியே இல்ல, இதுல குழந்தைக்கு வேற சொல்லி தரப்போறாங்களாக்கும்!

நான் பொதுவா தான் சொன்னேன்!

நானானி said...

என்ன சொல்றதுன்ன்னே தெரியலை.