Wednesday, September 15, 2010

அவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப்பைகளும்

கடந்த வாரத்தின் ஒரு மதிய வேளையை வீட்டில் செலவழிக்க நேர்ந்தது, அப்படியே ஆயா பார்க்கும் சீரியலையும். ஒரு பெண்ணை காணோமென்று அவளது அப்பாவும், கணவரும் பதைபதைத்ததோடு , அப்பெண்ணை நீதான் துரத்தி விட்டாயென்று இன்னொரு பெண்ணையும் தூற்றிக்கொண்டிருந்தனர். முன்கதை சுருக்கம் கேட்டதில், வாடகைத்தாய் அந்த வீட்டிற்கு வந்துவிட சொந்தத்தாய்(?) வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். (அல்லது சிச்சுவேஷன் மாறியிருக்கலாம்.) வாடகைத்தாய்க்கும் சொந்தத்தாய்(?)க்கும் நடக்கும் பிரச்சினைதான் கதை போலிருக்கிறது. சீரியலின் பெயர் அத்திப்பூக்கள்.


வாடகைத்தாய் என்பவர் ‍ கருவை வாடகைக்குச் சுமந்து பெற்றெடுத்தவர். சொந்தத்தாய் என்பவர் கருவிற்கான முட்டையை ஈந்தவர். எனில், சொந்தத்தாய் என்று எவரை சொல்லமுடியும்?


வாடகைத்தாய் என்பது புதிதான ஒன்றில்லை.


மருத்துவ துறையின் அற்புதமான கண்டுபிடிப்பு; குழந்தை பெற இயலாதவர்கள் சொந்த குழந்தையை பெற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு எனபதெல்லாம் உண்மையே. ஆனால், இந்த முறை குழந்தையைப் பெற்றுத் தரும் வாடகைத்தாய்க்கு என்ன மாதிரியான விளைவுகளைப் பெற்றுத் தருகிறது?


சிறுவயதில் இது பற்றி நான் கேள்விப்பட்டிருந்த/வாசித்த‌ விவாதங்க‌ளிலெல்லாம் பெரும்பாலும், தாய்மையை விற்கலாமா; உணர்வுகளோடு விளையாடக்கூடாது மற்றும் சென்டிமென்டலான விஷயம் என்ற தொனியிலும் கருத்துகள் வெளிப்பட்டிருக்கும். சென்டிமென்டலாக உருக அதில் என்ன இருக்கிறது, குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு குழந்தை பெற்றுத் தரப்போகிறார்கள், அதற்கு தக்க பணமும் பெற்றுத் தரப் படுகிறது. எனில், இதை ஒரு தொழிலாகவே பார்க்க வேண்டும், பணத்துக்காக செய்யும்போது அதில் எதற்கு தேவையில்லாத சென்டிமென்ட்கள் என்பதே எனது எண்ணமாக இருந்தது. பனிரெண்டு-பதிமூன்று வயதில் தாய்மை உணர்வுகள் புரிந்திருக்க நியாயமில்லையே! (இப்போதும் எனது நிலைப்பாடு அதுதான் என்றாலும் சுரண்டலில்லாமல் ஒடுக்கப்படாமல் விருப்பமிருக்கும் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுத் தர வழிவகைகள் வேண்டும். வாடகைத் தாயென்றாலும் அவர்களது தாய்மை உணர்வுகளை தெளிவாக புரிந்துக்கொள்ள முடிவதே வாழ்க்கைக் கற்றுத் தந்த பாடம்.)


இது ஒருபுறமிருக்க, சில நாட்களுக்கு முன்பு கேள்விப்பட்ட செய்தியும் நினைவுக்கு வந்தது. ஒரு ஆஸ்திரேலிய தம்பதிகளுக்காக ‍இரட்டைக் குழந்தைகளை சுமக்கும் தமிழகப் பெண்ணை பற்றிய செய்திதான் அது.


சென்னையில் வசிக்கும் 28 வயதான கனகவள்ளி, தான் செய்துக் கொண்டிருந்த வீட்டுவேலையை துறந்து வாடகைத்தாயாக மாறியிருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது முறை.ஐந்து வருடங்களுக்கு முதல் முறையாக வாடகைக் கருவை சுமந்தபோது, அவருக்கு இதன்மூலம் கிடைத்த வருமானம் ரூ 50000. இப்போது ஒரு லட்சம். "எனது இரு மகன்களின் படிப்புச் செலவிற்கு இந்த வருமானம் உதவும்" என்றும் "இது உயர்ந்த நோக்கமென்றும் குழந்தையற்ற தம்பதிகளுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி என்றும் கூறி டாக்டர்கள் என்னை சம்மதிக்க வைத்தன்ர் என்றும் கூறியிருந்தார்.


மும்பை, அனந்த், லக்னௌவைத் தொடர்ந்து சென்னையும் வாடகைத் தாய்களுக்கான சிறந்த இடமாக சமீபக் காலங்களில் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி கருப்பையை வாடகைக்கு விட முன்வரும் பெண்கள் அனைவரும் அடித்தட்டு மக்களே. மொத்தமாக கிடைக்கும் பணத்திற்காகவும், அதைக்கொண்டு தங்கள் அத்தியாவசிய குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவுமே இவ்வழியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
சென்னையின் பெரும்பாலான ஃபெர்ட்டிலிட்டி மருத்துவமனைகளில் வாடகைத்தாயாக மாற விருப்பம் கொண்டவர்கள், குறைந்தபட்சம் 10 அல்லது 15 பேராவது காத்திருக்கிறார்கள். சென்னையின், பிரசாந்த் ஹாஸ்பிடலில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற 7 முதல் 8 லட்சங்கள் வரை வசூலிக்கிறது. இதில், 1.5 முதல் 1.7 லட்சங்கள் வரை மருத்துவமனைக்கும், மீதி வாடகைத்தாய் மற்றும் அவர்களது தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளுக்கும் செலவாவதாக கூறுகிறது.


வடஇந்தியாவில் பெயர் பெற்ற மருத்துவமனைகளில் 15000 டாலர்கள் முதல் 20000 டாலர்கள் வரை வசூலிக்கிறார்கள். இதில், வாடகைத்தாய்களுக்கு 5000 டாலர்கள் அல்லது 6000 டாலர்கள் வரை கிடைக்கிறது. இது இந்திய மதிப்பில் கிட்டதட்ட இரண்டரை லட்சம் ரூபாய். மாதாமாதம் 50 டாலர்களும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்குப் பின்னர் 500 டாலர்களும் மீதத்தொகை பிரசவத்திற்குப் பின்னும் வழங்கப்படுகிறது. இது பெரும்பாலான பெண்களுக்கு பத்தாண்டுகளில் சம்பாதிக்கக்கூடிய தொகையைவிட அதிகம்.


அனைவரும் மணமான பெண்கள் - ஒரு குழந்தையோ அல்லது இரு குழந்தைகளையோ பெற்றவர்கள். இந்தியாவின் மெடிக்கல் டூரிசத்தை உயர்த்துவதற்காக தங்கள் வீட்டைவிட்டு பத்துமாதங்களுக்கு கைதிகளாக வந்தவர்கள். அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ வாழும் குழந்தை பேறற்ற தம்பதியினருக்கு வாழ்வளிக்கும் உன்னத நோக்கத்திற்காக தங்களது உடலை/ஆரோக்கியத்தை பணயம் வைக்க முன்வந்திருப்பவர்கள். அதற்கு ஈடாக பணத்தைப் பெற்றாலும் அந்த பணம் தாங்கள் கொடுக்கும் விலைக்கு ஈடானதா என்று அறியாதவர்கள்.


ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டு பேறுகாலம் வரை சமச்சீரான உணவும், சகல‌ மருத்துவ வசதிகளும் 'குழந்தைத் தொழிற்சாலை'யால் கொடுக்கப்பட்டு கவனித்துக் கொள்ளப்படுபவர்கள். பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவர்கள். ஒரு மின்விசிறி மற்றும் அனைவருக்கும் பொதுவான தொலைக்காட்சி பெட்டி ‍- மீதி நேரம் ஓய்வு இவையே பிரசவம் வரை இவர்களது வாழ்க்கை. வெளியில் செல்லவோ அல்லது கட்டிடத்தை சுற்றி காலாற நடக்கவோ கூட சில மருத்துவமனைகளில் அனுமதி கிடையாது. இதில் பெரும்பாலான மருத்துவமனைகள் இயற்கை வழியிலான குழந்தைபேறைவிட சி‍‍-செகஷ்ன் மூலமே பிரசவம் பார்க்கின்றன.


ஒரு சில மருத்துவமனைகள், வாடகைத்தாய்களை தேர்ந்தெடுப்பதில் தெளிவான வழிமுறைகளை கொண்டிருக்கின்றன.


வயது வரம்பு 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
புகைப்பிடித்தல், மது போன்ற பழக்கங்கள் இருக்கக்கூடாது
பிறக்கும் குழந்தையோடு உரிமை கொண்டாடுதல் கூடாது
எந்த மருத்துவ சிக்கல்களோ அல்லது உடல் உபாதைகளோ இல்லாமல் இருக்க வேண்டும் முதலியன.


தேர்ந்தெடுப்பதில், இவை காட்டும் அக்கறையை பின்னாளில் பிரசவத்திற்கு பிறகு அப்பெண்களுக்கு ஏற்படும் உடல் நலிவு அல்லது உபாதைகளை சீராக்கி உடல்நலத்தை பேணுவதில் காட்டுமா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில், மருத்துவமனைகளின் அக்கறை எல்லாம் தாங்கள் வெளிநாட்டினரிடம் போட்ட ஒப்பந்தத்தேதியில் குழந்தையை டெலிவரி செய்ய வேண்டுமே என்பது தவிர வாடகைத்தாயின் உடலைப் பற்றியத‌ல்லவே!வாடகைத்தாயாக ஒரு பெண்ணை கருவுற வைப்பதில் இரண்டு வழிகள் இருக்கின்றன.


ஒன்றில், வாடகைத்தாயின் கருமுட்டையைக் கொண்டு கரு உண்டாக்குவது; அடுத்ததில், ஏற்கெனவே டெஸ்ட் ட்யூப் மூலமாக (குழந்தை முழுவதுமாக டெஸ்ட் ட்யூப் மூலமாகவே உருவாகி பிறக்கும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன்) கருவை உண்டாக்கி அதனை சுமந்து பிரசவிக்க மட்டும் வாடகைத்தாயாக இருப்பது.


முதலாவதில், வாடகைத்தாய்க்கு மரபு ரீதியாக குழந்தையோடு தொடர்பு உண்டு. மேலும் , உரிமை கொண்டாடுவதில் சிக்கல்களும் வரலாம். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுத் தரும் இந்திய மருத்துவ நிர்வாகங்கள் இம்முறையை பெருமளவு ஆதரிப்பதில்லை. இரண்டாவது முறை, கருவை சுமக்கும் ஒரு பாத்திரமாக பெண்ணின் உடல் உபயோகப்படுத்திக் கொள்ளப்படுவது. எதுவும் ஒன்றிற்கொன்று குறைந்தது இல்லைதான். எதுவாக இருந்தாலும் குழந்தைக்கு உரிமை கொண்டாட இயலாதுதான்.


இரண்டு வகைகளிலும் பெண்களின் உடல் ஒரு சாதனமாகவே உபயோகப்படுத்திக் கொள்ளப்படுகிறது. வறுமை காரணமாக சிறுநீரகங்களையும், குழந்தைகளையும் பணத்துக்காக விற்கும் நாட்டில் இது பெரிய விஷயம் இல்லைதான்.


ஆனால், இது மூன்றாம் உலக நாடுகளின் மீதான மற்றுமொரு சுரண்டலாக இல்லையா?


அமெரிக்காவிலோ அல்லது மேலை நாடுகளிலோ வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள குறைந்தது 70000 டாலர்கள் செலவாகும். அதிகபட்சமாக 100,000 டாலர்கள் வரையிலும். இது தவிர காப்பீடுகளும் உண்டு. இந்த நாடுகளில் வாடகைத்தாய்கள் பெறும் பணத்தை விட, இந்தியாவின் வாடகைத்தாய்கள் மூன்றில் ஒரு பங்கே பெறுகின்றனர். அவ்வளவு ஏன், வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்குமே வாடகைத்தாயின் வருமானத்தில் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறதே?!இந்தியா முழுக்க 300‍க்கும் மேற்பட்ட குழந்தைப்பேறு மருத்துவமனைகள் இருந்தாலும், மொத்தமாக பிறந்திருக்கும் குழந்தைகளை, வாடகைத்தாய்கள் பற்றிய விவரங்களை கணக்கெடுப்பது இன்றும் இயலாத காரியமாக இருக்கிறது. இந்தியாவில் 2002 இல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டபின், இதற்காக இந்தியா வரும் அயல்நாட்டார் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இன்று, கோடிகளில் பணம் புரளும் துறையாக மாறி வருகிறது. வாடகைத்தாயாக கருவை சுமக்க நாடி வரும் அடித்தட்டு மக்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.மேலும், இந்தியாவிலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து அழைத்துச் செல்வதை விட வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது மிகவும் எளிது. ஒரு வயதே நிரம்பிய குழந்தையை தத்து எடுத்துச் செல்வதற்கு ஒரு இந்திய பெண் பட்ட பாட்டை நன்கறிவேன்.ஆனால், இதற்கென சரியான விதிமுறைகளோ அல்லது கவனிக்க சரியான துறையோ இதுவரை இல்லை. சொல்லப்போனால், இதுவும் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படல் வேண்டும். அல்லாவிடில், இதுவும் குழந்தை தொழிலாளர்கள் போன்ற சுரண்டலே.பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளின் விதிக்குட்பட்டே அனைத்து செயல்முறைகளும் இருக்கிறது. ‍ பெல்ஜியம், கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இதனை வருமானத்துக்குரிய தொழிலாக அங்கீகரித்தும் அதற்கென சட்டதிட்டங்களையும் வகுத்திருக்கின்றன.இத்தாலி போன்ற நாடுகளில் இச்செயல்முறை முற்றிலுமாக‌ தடை செய்யப்பட்டிருக்கிறது.

மனித உயிரின் மதிப்பு இந்தியாவில்தான் மிக மலிவானதாயிற்றே! இச்செயல்முறையைப் பற்றியும் வாடகைத்தாயின் உரிமைகள் பற்றியும் குழப்பமான நிலைதான் நிலவுகிறது.சென்ற வருடத்தில் நிகழ்ந்தது இது. ஜப்பானிய தம்பதியினர் குழந்தைக்காக இந்தியா வந்தனர். மருத்துவமனை மூலம் வாடகைத்தாயை ஏற்பாடு செய்தனர். இதன் நடுவில் அவர்களுக்குள் விவாகரத்து ஏற்படும் நிலை வந்தது. எந்த தம்பதியினருக்காக குழந்தையைச் சுமந்தாரோ அந்த ஜப்பானிய தம்பதியினர் விவாகரத்து செய்யும் முடிவில் இருந்ததால், தான் சுமந்த குழந்தைக்கு உரிமை கொண்டாட விரும்பினார் அந்த‌ வாடகைத்தாய். ஆனால், அத்தம்பதியில் கணவனுக்கு அக்குழந்தையை வளர்க்க விருப்பம் இருந்தது.இந்தியாவில் தனியொருவர் குழந்தையை தத்து எடுத்துச் செல்வது என்பது தடை செய்யப்பட்ட ஒன்று. ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி முடிவில் அக்குழந்தை தந்தையுடன் ஜப்பானுக்கு சென்றதும் முடிவுக்கு வந்தது. ஆனாலும், நமது சட்டதிட்டங்களோ வழிவகைகளோ இன்னமும் தெளிவான நிலைக்கு வந்தபாடில்லை.இவை தவிர, இன்னமும் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.ஒருவரது கருப்பையில் இரண்டிற்கு மேற்பட்ட கரு உட்செலுத்தப்படுகிறது. பின்னர், இரட்டைக் குழந்தைகள் தவிர தெரிந்தெடுக்கப்பட்ட மீதக் கருக்கள் மட்டும் கலைக்கப்படுகின்றன. இதனைப் பற்றி எந்த தகவலும் குறிப்பிட்ட வாடகைத்தாய்க்கு மருத்துவமனைகள் சொல்வதில்லை.ஒரு சில மருத்துவமனைகளில், பிரசவத்திற்குப் பின்னர் வாடகைத்தாய்கள் ஒருமாதம் அங்கேயே தங்க வைக்கப்படுகின்றனர். மற்றபடி, அவர்களது உடல்நிலையைப் பற்றி மனநிலையைப் பற்றி மருத்துவமனைகளுக்கு எந்தக் கவலையுமில்லை. பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் எண்ணற்ற ஹார்மோன் மாற்றங்களும், உணர்ச்சி ரீதியாக உள்ளுக்குள் ஏற்படும் போராட்டங்களுக்கும் பொறுப்பேற்பவர் யார்?

பாதியில் கருக்கலைந்தால் சொன்ன பணம் முழுவதுமாக கிடைப்பதில்லை. ஒருவேளை வாடகைத்தாய்களே கருவைக் கலைக்க விரும்பினால் மருத்துவமனைக்கு பணத்தை கட்ட வேண்டிய நிலைமையும் உள்ளது.

பிரசவத்தின் போது தாயின் உயிருக்கு/உடல்நலத்திற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. காப்பீடு திட்டங்களெதுவும் இருப்பதாக தெரியவில்லை.

வாடகைத்தாய் மூலமாக குழந்தைப் பெற்ற தம்பதியினர் பிரிந்தால் குழந்தையின் நிலை பற்றி தெளிவாக இல்லை.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகளை கண்காணிக்க/ஒழுங்குபடுத்த ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.

தான் சுமந்த குழந்தையின் மீது வாடகைத்தாய்க்கு இருக்கும் உரிமைகள் என்ன?ஒருவேளை அக்குழந்தையை பார்க்க விரும்பினாலோ அல்லது அதன் நிலையை அறிய விரும்பினாலோ அது மறுக்கப்படுதல் சரியா?

உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதற்கு பெரும் வரவேற்பு இருப்பதை போல இதைத் தொழிலாக செய்ய விரும்பும் பெண்களை சமூகம் அங்கீகரிக்குமா?

எனில், மேலை நாடுகளுக்கு குழந்தை பெற்றுத் தரும் இயந்திரங்களா மூன்றாம் உலக நாட்டின் பெண்கள்?

கால் சென்டர்கள், கஸ்டமர் சர்வீஸ் சென்டர்கள் போன்று மேலைநாடுகளின் கர்ப்பமும் இந்தியாவிற்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகின்றது. படிப்பறிவற்ற வறுமையான கீழ்த்தட்டு பெண்களின் உடல்களே மேலும் மேலும் சுரண்டப்படுகின்றன.நுகர்வு கலாச்சாரத்தில் பெண்ணின் கருப்பைக் கூட நுகர்வுப் பொருளாகவே மாறியிருக்கிறது. அந்த வகையில், இது உலகமயமாக்கலின் கோரமான மற்றொரு முகமே! இதுவும் ஒரு மறுகாலனியாதிக்கமே!

பி.கு : கடந்த வார இறுதியில் ஆம்பூருக்குச் சென்றபோது, வீட்டிலிருந்த கேரவன் பத்திரிக்கையிலும் இது குறித்து வாசிக்க நேர்ந்தது. அக்கட்டுரையை வாசித்த தாக்கமும், ஆயாவோடு பார்த்த அபத்த நாடகத்தின் ஒரு பகுதியும், இதற்குமுன் கேள்விப்பட்டிருந்த செய்திகளும் சேர்ந்ததே இவ்விடுகை.

27 comments:

Kalaivani Sankar said...

Very sensitive topic! Mullai, you have become so matured to handle such topics also smoothly.

தமிழ்குறிஞ்சி said...

தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கட்டுரை பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.

Deepa said...

இரு ஆண்டுகளுக்கு முன் என் ஆங்கிலப் பதிவில் எழுதிய இடுகை.
பேபி மாஞ்சி செய்தியால் பாதிக்கப்பட்டு எழுதியது.

http://deepajoe.blogspot.com/2007/11/paradise-rented-she-discovers-first.html

அறிவுபூர்வமாக ஆயிரம் விளக்கம் சொன்னாலும் வாடகைத் தாய் விஷயத்தை ஏற்க என் மனம் மறுக்கிறது.

உணர்வுபூர்வமாக அன்றி வேறெப்படியும் இதை அணுகமுடியவில்லை. இது என் மனக்குறையாகக்கூட இருக்கலாம்.

http://articles.cnn.com/2008-08-12/world/surrogate.baby_1_surrogate-mother-surrogate-baby-legal-mother?_s=PM:WORLD

வல்லிசிம்ஹன் said...

இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா முல்லை. அந்தத் தாய்களின் நிலைமைக்கு அவர்கள் கொடுக்கும் பணம் போதுமா. எப்பொழுதுமே வறுமாஇயில் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள முடியாத அந்தத் தாயைப் பிரசவத்துக்குப் பிறகு கவனிப்பதற்கும் ஒரு வரை முறை வேண்டுமே:( பகிர்வுக்கு நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல ஆர்டிகள் பாஸ். இவ்வளவு விசயங்கள் இருப்பது இப்போது தான் தெரிகிறது.

சின்ன அம்மிணி said...

இந்தியா, தாய்லாந்து மாதிரி நாடுகளில் இது போன்ற மெடிகல் டூரிஸம் சில சமயங்களில் பணத்துக்காகவே செய்யப்படுகிறது. வெளிநாடுகளிலும் வாடகைத்தாய்மார்கள் உண்டு. ஆனால் பணத்துக்காக என்பது பல நாடுகளில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அக்காவுக்காக தங்கை குழந்தை சுமப்பது போன்றவை நடக்கத்தான் செய்கிறது. ஆனால் பணத்துக்காக நிச்சயம் அல்ல.(உறுப்புதானமும் அப்படியே) இந்தியாவில் விதிகள் இல்லை என்பதும் பணத்துக்காக என்பதும் நினைத்தால் .....
அருமையான பதிவு

அம்பிகா said...

நிறைய சிந்திக்க வைக்கிறது முல்லை இந்த பதிவு. மகளுக்காக கருவை சுமந்த அன்னையை பற்றியும் செய்திகள் வந்தன. ஆனால் பணத்துக்காக எனும் போது, நீங்கள் கூறியபடி முறையான விதிமுறைகள் நிச்சயம் தேவை.
\\படிப்பறிவற்ற வறுமையான கீழ்த்தட்டு பெண்களின் உடல்களே மேலும் மேலும் சுரண்டப்படுகின்றன.நுகர்வு கலாச்சாரத்தில் பெண்ணின் கருப்பைக் கூட நுகர்வுப் பொருளாகவே மாறியிருக்கிறது.\\
வேதனையான உண்மை!

ஹுஸைனம்மா said...

இதற்கும் அவுட் ஸோர்ஸிங் இங்கேதான் என்பது கவலைக்குரியதுதான். வழக்கம்போல கீழ்தட்டு மக்களே இதற்கும் பலியாகிறார்கள்.

ஆனால், அம்மா சென்டிமெண்ட்டிலிருந்து (வாடகைத் தாயாகும்) இந்தியப் பெண்கள் விடுபட்டுவரும் அதே சமயம்,

குழந்தைப் பேறு சிரமமான நிலையில், தத்து எடுப்பதை விடுத்து, “தன் சொந்த ரத்தமே” வேண்டும் என்ற எண்ணம் வெளிநாட்டுப் பெண்களிடையே அதிகரித்து வருவதும் என இரண்டுமே முரணான விஷயங்கள்!!

உறுப்பு மாற்று சிகிச்சைகள் போல இதற்கும் கட்டுப் பாடுகள் கொண்டு வரவேண்டும். (அதுக்கு மட்டும் இருக்குதா என்ன?)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பதிவு

நசரேயன் said...

ஒபாமாகிட்ட சொல்லி வைக்கிறேன்

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை முல்லை.

ஹைஸைனம்மா, நீங்கள் சொல்வது சரியே. வெளிநாட்டில் தத்து எடுப்பது குறைந்து, ‘சொந்த இரத்தமே’ வேண்டுமென நினைக்க, இந்தியாவில் மனம் உவந்து தத்து எடுப்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

பேச வேண்டிய விவகாரத்தை, சரியான நேரத்தில், மிகச்சரியான கண்ணோட்டத்தில் பேசியுள்ளீர்கள்!

தொடர்ந்து பேச வாழ்த்துகள்!

Rathi said...

இது நீண்டகாலமாக நடந்து வருகிறது. Australia வின் இணையத்தள பத்திரிகைகளில் இது பற்றிப் படித்திருக்கிறேன். எழுத்தாளர் சுஜாதா கூட இதுபற்றி ஓர் கதை எழுதியதாக ஞாபகம். கூடவே, இந்தியாவில் இருப்பது ஒரேயொரு அருந்ததி ராய் என்பதும் வருத்தமளிக்கிறது.

Sriakila said...

ரொம்பவும் சென்ஸிட்டிவான விஷயம்.

இந்த உலகில் கருப்பையும் வியாபாரமாகிப் போனது வேதனையான விஷயம். நாட்டில் வறுமை தலை விரித்தாடும் போது அவர்கள் என்ன செய்வார்கள்? பாவம்!

தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்காக‌, பிள்ளைகளின் படிப்புக்காக என்று அவர்கள் இழந்தது எத்தனையோ? இதையும் விட்டு வைப்பானேன்..இதன் மூலம் அவர்களுக்கு கொஞ்சம் வருமானம் கிடைத்து, வறுமை நீங்கினால் போதும் என்ற மனோபாவம் தான் காரணம். அதில் அவர்களுக்கு உடல் நிலையைப் பற்றியெல்லாம் யோசிக்க என்ன இருக்கிறது..

இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

ரோகிணிசிவா said...

good post mullai ,
very clearly stated ,
ovum donation is a clause written in the offer letter wen some female staffs are offered job in some famous fertility centers ,
and the story behind sperm donation is still yuck ,
where are we being lead to , is a big query

அன்புடன் அருணா said...

பூங்கொத்துப் பதிவு!

தெய்வசுகந்தி said...

veethanai!

தீஷு said...

அருமையான‌ ப‌திவு முல்லை. யோசிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம். ப‌ண‌த்திற்காக‌ கிட்னி, இர‌த்த‌ம் விற்ப‌து போல் க‌ருப்பையும் விற்க‌ப்ப‌டுகிற‌து.

Prof.AV said...

please write about the young girls selling their ovum for money

மார்கண்டேயன் said...

வாழ்த்துகள் முல்லை, உங்களின் இந்தப் பதிவு இளமை விகனின் (youthful vikatan) நற்பதிவில் (good blogs) வெளிவந்துள்ளது . . . உங்கள் எண்ணங்கள் மேலும் பலரை சென்றடையட்டும்

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

முல்லை! இது அடித்தட்டுப்பெண்களின் விழிப்புணர்வற்ற நிலையையும், பேராசையையும் உணர்த்தவில்லையா? நம் பெண்களுக்கு இப்போதெல்லாம் உடல் ஆரோக்கியத்தை விட, உறவுகளை விட, சமூக மதிப்பீடுகளை விட, பணம் பெரிதாகத் தெரிகிறது. உண்மையான மதிப்பு எதில் என்பதும், எளிமையே நிம்மதி என்பதும் புரியாது விட்டில்களாய் நெருப்பில் விழுகிறார்கள். நம் போல் உணர்வுப்பூர்வமாக சிந்திப்பவர்கள் “ஐயோ, ஐயோ” என்கிறோம். ம்ச்!

சுந்தரா said...

மிகச் சிறப்பான இடுகை...பாராட்டுக்கள்!

அமர பாரதி said...

சந்தன முல்லை,

நல்ல கட்டுரை. //70000 டாலர்கள் செலவாகும்//. அமெரிக்காவில் எம்ப்ரியோ தானத்துக்கே 8000 டாலர்கள் அளிக்கப் படுகிறது.

அமர பாரதி said...

http://www.centerforhumanreprod.com/egg_donor_expect.html

tamilanbalum said...

நல்ல விளைநிலங்கள் எங்கிருந்தாலும் அதனை உபயோகித்து நல்ல பயன் பெறுதல் மனித இனத்திற்க்கு உரியது. ஏரோட்டம் மாறி இப்பொழுது அறிவியல் தேரோட்டம் கோலாகலமாக ஆனதால் இப்பொழுது மனித விதைகளுக்கும் மனித விளைநிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்க்கான வாய்ப்புக்கள் அமோகமாக இந்தியாவில் இருப்பதால் அங்கே அறுவடைக்கு அலை மோதுகிறார்கள். ஏனென்றால் இந்திய சமவெளி அவ்வளவு செழிப்புடையது. அந்தக்குழந்தைகள் இந்திய இரத்தத்தில் ஊறியதால் ஒரு நல்ல உலகக் குடிமகனாக இருக்கட்டும் என்ற நல்லெண்ணத்தின் பெயரால் ஆசீர்வதிப்போம். அறிவியல் என்றும் நிலைத்திருக்கும். உணர்வுகள் அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப மாறுபடுபவை. ஆகவே இதுவும் கடந்து போகும். எவ்வளவோ யுகங்கள் போயினவாம்.. இந்த விஷயம் ஆஃப்டரால் சில நூறு வருஷம் சம்பந்தப்பட்ட விஷயம். எல்லாம் காலம் பார்த்துக்கொள்ளும் என்ற நினைப்பில் இந்தக் காலம்(column) நிரப்புகிறேன்.

Dr.Rudhran said...

good post mullai. keep going

வழிப்போக்கன் - யோகேஷ் said...

நல்ல பதிவு..............