Showing posts with label டீவி. Show all posts
Showing posts with label டீவி. Show all posts

Monday, May 23, 2011

வைரமுத்து - நகரத்துப்பெண்கள் இழந்தது என்ன?

சென்ற வாரம் முழுக்க ஒரு வீடியோ எனது ஃபேஸ்புக் வாலில் வந்து வந்து விழுந்துக் கொண்டிருந்தது. வைரமுத்து என்பவர் நீயாநானாவில் பேசியதுதான் அது. அதி நவீன இந்திய இளைஞர்கள், அயல்நாட்டில் வாழும் தமிழர்களெல்லாம் கூட வைரமுத்துவை ரசித்து ரீஷேர் செய்திருந்தார்கள். நகரத்து பெண்களிடம் இல்லாத ஒன்று கிராமத்து பெண்களிடம் இருக்கிறது, கிராமத்து பெண்களிடம் இருக்கும் வெகுளித்தனம், வெட்கம், இன்னொசன்ஸ், வெளிப்படைத்தன்மை என்றெல்லாம் அந்த வீடியோ லேபிள் குத்தப்பட்டு வலம் வந்ததைப் பார்த்தபோது எனக்கு மயக்கம் வராத குறை!

அட, வைரமுத்துவை ரசிக்கும் தமிழ்நாட்டில் எப்படி தமன்னாவும் அனுஷ்காவும் வெற்றி பெறுகிறார்கள்?

இப்படி மண்ணின் மணத்தை ரசிப்பவர்களுக்காகவா இந்த தமிழ் சினிமா இயக்குநர்கள் கேரளாவிலிருந்தும் மும்பையிலிருந்தும் கதாநாயகிகளை இழுத்து பிடித்து வருகிறார்கள்? மக்கள் விரும்புவதைத்தான் நாங்கள் தருகிறோம் என்றுவேறு இந்த சினிமாக்காரர்கள் சொல்லிக்கொள்கிறார்களே, அப்படியெனில், சினிமாக்காரர்கள்தான் நிஜமாகவே தமிழ்மக்களைப் பற்றி புரிந்துக்கொள்ளவில்லையா இல்லை தமிழ்மக்கள்தான் சினிமாக்காரர்களை ஏமாற்றுகிறார்களா?

சரி, அதை விடுங்கள்....கிராமத்து பெண்ணின் வெகுளித்தனம், இன்னொசன்ஸ் என்று இவ்வளவு ரசிப்பவர்கள் சராசரி கிராமத்து பெண்ணை அவளது இன்னொசன்சுக்காகவே (அல்லது வெட்கம்/வெகுளி etc) திருமணம் செய்துக்கொள்வார்களா?

”பெண் கலராக இருக்கணும்” என்பதுதானே சராசரி மணமகன் வைக்கும் முதல் கண்டிஷன்?!

கருப்பு நிறம் கண்ணை மறைக்கும் அளவுக்கு சீர் செனத்தியோடு நில புலன்களோடு வந்தால்தான் சாதாரணமாகத் தோற்றம் கொண்ட ஒருவன் கிடைப்பான் என்பது இன்றும் யதார்த்தம். ”சாதாரண தோற்றம் கொண்ட ஒருவன்” என்று சொல்லிவிட்டதற்காக சண்டைக்கு வராதீர்கள். தாத்தாவானாலும் உலக அழகியோடு ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று வைராக்கியம் கொண்டவர்கள் தான் நமது ஹீரோக்கள். ஹீரோ கருப்பாக குண்டாக இருந்தாலும் பெண் ஒல்லியாக சிவப்பாக இருக்கவேண்டும் என்பதுதானே நமது தமிழ்சினிமா மரபு...கலாச்சாரம்...இலக்கணம்!!

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் முக்கியமான ingredients - இன்னொசன்ஸ், வெட்கம்! அதைத்தான் இந்த நகரத்துப் பெண்கள் தொலைத்துவிட்டார்கள் என்று ஒரே கூச்சல்! இன்னொசன்ஸ் என்பதை பொதுவாக குழந்தைகளுக்குத்தான் சொல்வோம். பெண்கள் குழந்தைகள் போல இருப்பதைத்தான் விரும்புகிறார்களா? இல்லை, பெண்கள் ”குழந்தையின் குணங்கள் - குமரியின் வளங்களோடு” இருக்கவேண்டுமென்று அல்லவா வலியுறுத்துகிறார்கள்! நம் சினிமா கதாநாயகிகளையே பாருங்களேன் - அவர்கள் லூசுப்பெண்களாக இருக்கவேண்டுமென்பது எழுதப்படாத சட்டம். (மறுப்பீர்களானால் தமிழ்சினிமாவை பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். )

வளர்ந்தபிறகும் அப்படி இருந்தால் மூளை வளர்ச்சியில் பிரச்சினை என்கிறது அறிவியல். ஒரு வளர்ந்த பெண்ணைப்பார்த்து ‘இன்னொசன்டா இரு’ என்று சொன்னால்.என்ன அர்த்தம்? அதாவது, ”ஆண்களுக்கு உலகம் தெரியும், இது ஆண்களுக்கான உலகம், இதைப் புரிந்துக்கொள்ள உனக்கு விவரம் பத்தாது” என்பதுதானே! பெண்களுக்கு அறிவுண்டு என்பதை இன்றும் ஏற்க மறுக்கும் உலகில்தான் நாம் வாழ்கிறோம். ”கவிதை எழுது போ, உனக்கெதுக்கு அரசியல்” என்றும் சொல்லும் இணையத்தில்தான் நாம் இருக்கிறோம்.

இப்படி இன்னொசன்சை ரசிப்பவர்களது நட்பு வட்டத்தில் ஒரு கிராமத்து ஆள் மாட்டினால் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அந்த கிராமத்து இன்னொசன்ஸ் ஒரு ஆணிடம் இருந்தால் எப்படி எள்ளி நகையாடுவார்கள் என்பதை நேரில் பார்த்திருக்கிறீர்களா? அப்படி எள்ளி நகையாடுபவர்கள்தான் கிராமத்து இன்னொசன்சை ரசிப்பதாக பிதற்றுகிறார்கள்.

என் சிறு வயதில் நடந்தது இது: கீழ்வீட்டு அங்கிளின் அம்மா கிராமத்திலிருந்து வந்திருந்தார். அந்த அங்கிள் கேட்டாரென்று முட்டை தோசை செய்துதந்திருக்கிறார். தோசையைப் பார்த்துவிட்டு “முட்டை எங்கேம்மா” என்றாராம் அங்கிள். “போட்டிருக்கேனே” என்ற அவர் சொன்னதும் அங்கிளுக்கு சந்தேகம் வந்து பார்த்தால் அவரது அம்மா முட்டையை மாவில் கரைத்து ஊற்றிக்கொடுத்திருக்கிறாராம். இன்றும் கூட இதை வைத்து அங்கிளை கேலிக்குள்ளாக்குவார்கள். இந்த கிராமத்து இன்னொசன்ஸ் யாருடைய ரசனைக்குரியதாக இருக்கிறது? அந்த ஆயாவுக்கா அல்லது பார்த்து சிரிப்பவர்களுக்கா? இவர்கள் ரசிக்கும் இன்னொசன்சின் லட்சணம் இதுதான்!

அடுத்தது வெட்கம் - ”இப்போ இருக்கிற பெண்களுக்கு வெட்கம்னா என்னன்னே தெரியாது” என்பதை பெண்கள் அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில் நிச்சயமாக எதிர்கொண்டிருப்போம். ஏதோ வெட்கம், வெகுளித்தனமெல்லாம் பெண்களுக்கே உரித்தானவை என்பது போல... இந்த இன்னொசன்ஸ்,வெகுளி என்பதை யெல்லாம் சிறிது நெருக்கமாக பார்த்தால் பெண்களுக்கு வெட்கம்,அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு -ஆண்களுக்கு வீரம் என்ற இலக்கணத்திலிருந்துதான் வருகிறது.

பெண்கள் முதலில் எதற்கு வெட்கப்படவேண்டும்? பெண் என்பதற்காகவா? இந்த வாதமே feudalism ஆகத் தெரியவில்லையா?

ஒருமுறை பப்பு எனது துப்பட்டாவை புடைவைபோல சுற்றிக்கொண்டதை படமெடுத்து பேஸ்புக்கில் பதிந்திருந்தேன். அதற்கு ஒருவர், அவளது முகத்தில் வெட்கம் தெரிகிறதென்றார்.ஐந்து வயதுக்குழந்தை புடைவையை சுற்றிக்கொண்டு சிரித்தால் கண்களில் வெட்கம் தெரிகிறது என்பது ஆபாசமாக இல்லையா?

ஏதோ பெண்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டியது, இது இல்லாவிட்டால் பெண்ணே இல்லை, பெண்களின் இலக்கணம் என்றெல்லாம் மியூசியத்தில் வைக்க வேண்டிய ஒன்றை மிகைப்படுத்திக் காட்டுவது ஊடகங்களும் சினிமாவும்தான். அதை நகரத்துப் பெண்களாவது தொலைத்தது நல்லதுதானே!! பொதுவாக ஏற்றுக்கொள்ள முடியாத இழிவான செயல்கள் செய்தால்மட்டும் வெட்கி நாண வேண்டுமே தவிர பெண்ணாக இருப்பதற்கு அல்ல. மற்றபடி, வெட்கத்துக்கும் ஈஸ்ட்ரோஜனுக்கும் சம்பந்தம் இருப்பதாக அறிவியல் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததாக நினைவில்லை. ஆமாம், கிராம X நகரத்து ஆண்களும்தானே மாறியிருக்கிறார்கள். அதை ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள்?

இவர்கள் சொல்லும் வெட்கம், இன்னொசன்ஸ் போன்றவைதான் பெண் தன்மை என்ற எண்ணத்தின் சீரழிவுதான் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் சிறு குழந்தைகள் கூட கதாநாயகிகளின் விரகதாபங்களை டீவி மேடைகளில் அபிநயித்துக்கொண்டிருக்கிறார்கள். மானாட மயிலாட போன்ற தெலுங்கு வெர்சன் நிகழ்ச்சி ஒன்றில் 4 வயதுடைய குழந்தையொன்று இடுப்பை வளைத்து நெளித்து முகத்தில் கையை வைத்து எடுத்து வெட்கத்தை காட்ட வேண்டி ஆடப்பாடி வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் பெண்களுக்கு இலக்கணம் என்று சொல்லும் எல்லாம் நடுத்தர வர்க்கத்துக்கு உரித்தானதாக இருக்கிறது. பெண்மையின் மென்மை எல்லாம் அடித்தட்டு மக்களிடம் செல்லாது.

வேண்டுமானால், சித்தாள் வேலை செய்யும் பெண்ணிடம் அறை வாங்கிய அனுபவம் இருப்பவர்களிடம் கேட்டுப்பார்க்கலாம். மற்றபடி, இந்த கிராமத்து இன்னொசனஸ், பெண்மை, மலரினும் மென்மை எல்லாம் கவிதைக்கு அல்லது நீயாநானாவுக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாமே தவிர சுயமரியாதையுடைய பெண்களுக்கு அல்ல!

பொதுவாக, ஆண்கள், பெண்களைப் பற்றி சொல்லுவதைக் கேட்டிருக்கிறீர்களா? பெண்கள் தாவணி போட்டு தலை நிறைய பூ வைத்து வளையல் போட்டு கொலுசணிந்து வந்தால் பிடிக்கும் என்பார்கள். அதோடு, எங்கள் விருப்பமான உடைகளை அவர்கள்தான் தூக்கிப்போட்டு விட்டார்களே என்றும் அங்கலாய்த்துக்கொள்வார்கள்! ( ஷகீலாவின் படங்களை அல்லது மல்லு ஆண்ட்டி ஃபர்ஸ்ட் நைட் என்று யூ டியூபில் தேடிக்கொண்டிருப்பார்கள். அதைக்கண்டுக்கொள்ளக்கூடாது!! ) காணாமல் போன கலாச்சாரத்தை வேட்டியில் தேடுவதுதானே! ஆனால், வசதியாக பேண்ட் சர்ட்டுக்கு மாறிவிட்டு பெண்கள் மட்டும் கலாச்சாரத்தை காப்பாற்ற தாவணி, புடவை அணிந்துக்கொள்ளவேண்டுமென்பது என்ன நியாயமென்று புரிந்தவர்கள் சொல்லுங்கள்.

சரி, வைரமுத்து சொன்னது என்ன? மாடு மேய்க்கப்பிடிக்கும், அப்புறம் கணவன் ஆபிசுக்கு செல்ல வேண்டும், கணவனைச்சார்ந்து இருப்பது என்பதெல்லாம் இதெல்லாம் ஒரு சராசரி நடுத்தர வர்க்க பெண்ணுக்கு விதிக்கப்பட்டது.

ஆண்களுக்கோ, நடைஉடை பாவனைகளில் நகரத்தவர்களாக இருக்கவேண்டும், ஆனால், மனத்தளவில் அத்தானின் காலை அமுக்கி விட்டு அல்லது ”பத்திரமா ஆபீசுக்கு போயிட்டு வாங்க அத்தான்” என்று டிபன்பாக்சை கையில் கொடுத்துவிடும் சராசரி பெண்கள்தான் வாழ்க்கைத்துணையாக வேண்டும். இதுதான் இவர்களது உள்ளார்ந்த மனோபாவம்.

இவை இரண்டும் இணையும் புள்ளிதான் இந்த வீடியோவை மடலிலும்,ரீஷேரிலும் பகிர்கிறது. அதாவது, வைரமுத்து, இவர்கள் சொல்லும் தமிழ்பண்பாடு தமிழ்கலாச்சாரம் என்று சொல்லும் விழுமியங்களை கொண்டவராக இருக்கிறார். அதை நமது ”சின்னகவுண்டர்” மனம் கொண்டாடுகிறது.

வைரமுத்து ஒரு சராசரி கிராமத்து பெண். ஒரு பெண் எப்படி நமது சமூகத்தின் விழுமியங்களோடு வளர்த்தெடுக்கப்படுகிறாள் என்பதற்கு சாட்சி. அவ்வளவே.!! அதைத்தாண்டி, வியந்தோதுவதற்கும், பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று சொல்வதற்கும் அல்லது ’நீங்கள் இழந்துவிட்டதை வைரமுத்துவைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்வதற்கும் அந்த வீடியோவில் எதுவும் இல்லை.

Sunday, October 25, 2009

டோராவை யார் கண்டுபிடிப்பது?

முன்பெல்லாம், வாங்குகிற எல்லாவற்றிலும் - பள்ளிக்கு கொண்டு செல்லும் பையிலிருந்து அணிந்துக்கொள்கிற உள்ளாடை முதல் எல்லாவற்றிலும் டோரா வேண்டும் பப்புவிற்கு. இப்போது டோரா க்ரேஸ் அவ்வளவாக இல்லை. சுட்டி டீவியில் இப்போது டோராவிற்கு பதிலாக ஹெய்டி என்ற தொடர் ஒளிபரப்பப்படுகிறது. பப்புவிற்கு அவ்வளவாக இஷ்டம் இல்லை. அதுவும் இல்லாமல் ”உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா?”, “ஒரு தடவை சொன்ன புரியாதா” என்று (அனிமேஷன்) குட்டீஸ் பேசுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே சுட்டி டீவியை தாண்டி சென்றுவிடுகிறோம். எப்படியானாலும் இது போன்றவற்றை கற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள்...ஆனால் அது தானாக நடக்கும்போது நடக்கட்டுமே..எதற்கு நாமே படம் போட்டு காட்டவேண்டும்?!!

”போடா லூசு, நீ என்ன லூசா” என்று பேசுவது போல வருவது செட்ரிக் என்று நினைக்கிறேன். பப்புவும் அதை ஓரிரு முறைகள் சொல்லி என்னிடம் நன்றாக அடி வாங்கினாள். அதிலிருந்து, அவளுகு கோபம் வந்தால் அல்லது நாங்கள் அவளை வேனுக்கு அவசரப்படுத்தினால் “லூசு சொல்லிடுவேன், சொல்லட்டா” என்று கேட்கிறாள். ஜீபூம்பா என்ற தொடரை பார்த்து “ஆக்கு பாக்கு வெத்தலை பாக்கு” கற்றுக்கொண்டு ”ஒன் பேரு கொய்யா” என்கிறாள். உண்மையில் அதில் ”ஆக்கு பாக்கு வெத்தலை பாக்கு, டைகர் செய்யப்போறான் மேஜிக்' என்று வரும். பள்ளியில் இப்படித்தான் விளையாடுவார்களாம். நாங்கள் ‘ஒன் பேரு கொய்யா” என்று திருப்பிச் சொன்னால் கோபித்துக்கொள்கிறாள். ”அவங்கவங்களே அவங்கவங்களுக்கு சொல்லிக்கணும்” என்று அழுகை வேறு!!

இவற்றையெல்லாம் பார்க்கும்போது டோராவே பரவாயில்லையென்று தோன்றுகிறது. அட்லீஸ்ட் ஹார்ம்லெஸ். புயல்மேகம், பாலம், சாக்லேட் ஏரி, ஐஸ்கிரீம் மலை, எனக்கொரு ஐடியா இருக்கு - இவையே தேவலை என்று தோன்றுகிறது!! பெஞ்சமின் தி எலிஃபெண்ட், கைப்புள்ள - பப்புவிற்கு இஷ்டம். ஆனால் ஒளிப்பரப்படும் நேரம் சாதகமாக இல்லை. பப்புவை சாப்பிடவைப்பதற்கு கதைப்புத்தகங்களே இப்போது பெரிதும் உதவுகின்றன. டோரா ஐ மிஸ் யூ!! :-)

Wednesday, April 22, 2009

எங்கே போகலாம் டோரா?!

மேடேஸ்வரனின் டோரா பதிவு - என்னையும் இழுத்து விட்டது.

ஒரு விடுமுறை நாளின் பிற்பகுதி. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க, பப்பு மட்டும் தூங்க மறுத்து விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென எழுந்து வந்து என் கையை பிடித்துக் கொண்டு நாம டோரா விளையாடலாம் வா என்றாள்.

என் கையை பிடித்துக் கொண்டு, “நாம எங்க போகலாம் டோரா?!” என்றாள்.

ஆகா, மாட்டிக் கொண்டேன் போலிருக்கிறதே!

காடு...

வீட்டின் ஹாலை சுவர் ஓரமாக சுத்திக் கொண்டு சென்றோம்.

அப்புறம் எங்கே போகலாம் டோரா?!

எனக்குத் தெரியலைப் பப்பு, நீயே சொல்லு.

நான் புஜ்ஜி. நீதான் டோரா. புஜ்ஜி சொல்லு!!

தெரியலை புஜ்ஜி!

கையை பிடித்து ஹாலின் மற்றொரு மூலை. இதோ ஆப்பிள் மரம் - பப்பு!

எனக்கு என்ன செய்வதென் புரியவில்லை. பப்பு கையை நீட்டி பறித்து பறித்து சாப்பிடும் ஆக்ஷன் செய்துக் கொண்டிருந்தாள். நீயும் சாப்பிடு. பறிச்சுக்கோ.

நானும்!

நிஜ ஆப்பிளை ஒரு நாளும் இவ்வளவு ஆர்வமாய் சாப்பிட்டதில்லை அவள்!! அவ்வ்வ்வ்!

மறுபடியும், “எங்கே போகலாம்..” ஆப்பிள் சாப்பிட்டதில் எனக்கு வந்த தெம்பில், பாலம்.
மறுபடியும் ஹாலின் எதிர் மூலை..ஒஹ்ஹொ!

மறுபடியும், “எங்கே போகலாம்...” - மலை! வீட்டுக்குள் வாக்கிங் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று அனுபவித்தேன்!




ஒரு மரச் சேரை எடுக்க கொஞ்சம் சிரமப்பட்டேன். பப்பு என்னிடம், “நான் உதவி செய்யட்டுமா?” என்றாள். இதற்கு முன்பும் அப்படிக் கேட்டிருக்கிறாள், பல சமயங்களில். நானும் வாய்ப்பை நழுவ விட்டதில்லை! அன்று அவள் கேட்டதும், வேண்டாமென்று சொல்லிவிட்டு எடுத்துக் கொண்டேன். பார்த்திக்கொண்டிருந்த பப்பு,

“நீயே உனக்கு உதவி செஞ்சுக்கிட்டியா, ஆச்சி!”!!

தன் கையே தனக்குதவி - பழமொழிதான் நினைவுக்கு வந்தது. சொல்லவில்லை!

Wednesday, August 27, 2008

நீயா? நானா?

தமிழ்பேச்சு எங்கள் மூச்சு பார்த்துக் கொண்டிருந்தோம்!

அதில் நெல்லைக் கண்ணன் தூய தமிழில் உரையாடியது, பப்புவுக்கு புரியவில்லை போல!
என்ன சொல்றாங்க...நீ சொல்லு என்று கேட்டுக்கொண்டிருந்தாள். அது சினிமாவை பற்றிய ரவுண்ட்! அதனைத் தொடர்ந்த எங்களது உரையாடல்

சினிமா, டீவி பார்க்கறது நல்லதா கெட்டது??

.....

சின்ன பசங்க டீவி பார்க்கலாமா, பார்க்கக்கூடாதா?

டீவி பார்க்கக் கூடாது!!

நீ டீவி பார்க்கலாமா, பார்க்கக்கூடாதா?

......

நீ சின்னப் பொண்ணுதானே! நீ அக்கம் பக்கம், நாக்க முக்கல்லாம் ஏன் பார்க்கற?
நீ டீவி பார்க்கலாமா பார்க்கக் கூடாதா?

என்னைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவள், டீவி பக்கம் திரும்பிக் கொண்டு,

பாப்பேன்”!!

!@#$$

Wednesday, July 23, 2008

தூர்தர்ஷனும் கேபிள் டீவியும்!!

கொஞ்சம் நாஸ்டால்ஜிக்...!!

இப்போ எத்தனையோ சானல்கள் வந்தாலும், ஒரே மாதிரி நிகழ்ச்சிகள்தான் எல்லாவற்றிலும்!!
இசையருவியில் ஒரு பாட்டு போட்டா, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில், அதே பாட்டு ஜெயாவின் ம்யூசிக் சானலில்!! ஆனா, தூர்தர்ஷன் மட்டுமே இருந்த நாட்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள்..மற்றும் வெரைட்டியான நிகழ்ச்சிகள்!! தமிழில் நிகழ்ச்சிகள் இருந்தாலும், பெரும்பாலானவை இந்தியில்தான் இருக்கும்! எங்க பாட்டி இந்தி-யை எழுத்துக் கூட்டி படிக்கற லெவல்ல இருந்தவங்க, DD பார்த்து நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா பார்த்துக்கோங்க!!

புதன் கிழமை என்ன வகுப்புன்னு ஞாபகம் இருக்காது..ஆனா சித்ரஹார் போடுவாங்கன்னு மட்டும் ஞாபகம் இருக்கும். அந்த நேரம் பார்த்து யாரவது கெஸ்ட் வந்துடக்கூடாதுன்னு வேற வேண்டிப்பேன். ஏன்னா, வீட்டுல யாராவது விருந்தினர் இருக்கும்போது டீவீ பார்க்கக்கூடாதுன்னு ஒரு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன். ஏன்னா, வந்திருக்கறவங்களை அவமதிக்கற மாதிரியாம் அது...சோ அவங்களை மதிச்சு பேசனும் அப்படி இப்படின்னு!!நானோ, அவங்களையும், கடிகாரத்தியும் மாறி மாறி பாத்துக்கிட்டிருப்பேன்! ஓக்கே..ஓக்கே..எங்கேயோ போய்ட்டேன்!!அதேமாதிரி,வெள்ளிக்கிழமைன்னா ஒளியும் ஒலியும்,கடைசி பாட்டு மட்டும் புதுப் பாட்டு போடுவாங்க!! ஞாயித்துகிழமை ரங்கோலி, மத்தியானம் பிராந்திய மொழி படங்கள்!! சாயங்காலம் நம்ம தமிழ்படம்..ஆனா படம் பார்க்க அனுமதி கிடையாது!

சீரியல்லாம் நிஜமாவே பார்க்கும்படியா இருக்கும்! ரொம்ப இன்ஃபோர்மேட்டிவாவும் சில
நிகழ்ச்சிகள் இருக்கும். சுரபின்னு ஒரு ப்ரொக்ராம்..அதை மிஸ் பண்ணியதேயில்லை!

அந்த டீம் இந்தியா முழுக்க சுத்தி, கலைகள், கலாச்சார நிகழ்வுகள், இன்னொரு கலாச்சாரத்தோட இருக்கும் தொடர்புகள், அந்தந்த இடத்தில் ஃபேமஸா இருக்கும் கைவினை பொர்ருட்கள்,அதை எப்படி செய்கிறார்கள், வரலாற்று பின்னனி எல்லாவற்றையும் கொஞ்சம் கூட போரடிக்காம சொல்லுவாங்க!!அதை விட அந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்த சித்தார்த் கக் மற்றும் ரேணுகே சஹானி.....நிகழ்ச்சி பார்ப்ப்பவர்களை தக்கவைத்துக்கொள்ளும் திறமையும், சுண்டியிருக்கக்கூடிய பேச்சுத்திறமையும் இருந்தது, நிகழ்ச்சியின் ஒரு வெற்றிக்கு காரணம்!! அதுவும் இல்லாம அதுல ஒரு குவிஸ் வரும்..யாஷ் பால் என்னும் ஒரு பேராசிரியர் விளக்கத்தோட விடையளிப்பார்!! திரும்பவும் ஒளிப்பரப்பினால் நன்றாக இருக்கும்!!


அடுத்து லிஸ்ட்ல இருக்கறது, வாக்லே கி துனியா திங்கள் இரவு ஒளிபரப்ப்பாகும்! ஒரு குடியிருப்பில வசிக்கும் மத்திய தர வர்க்கத்தினரான மிஸ்டர் & மிஸஸ் வாக்லே தமபதியினரின் வாழ்க்கையை நகைச்சுவையோடு சொல்லும் நிகழ்ச்சி!!
வாரம் ஒரு எபிஸோடு. இஅது புரிந்துக்கொள்ள தொடர்ச்சியாக பார்த்திருக்க
வேண்டுமென்ற தேவையில்லை!!


ஜஸ்பால் பட்டி-யின் நகைச்சுவை சீரியல். அதில் என்ன ஸ்பெஷல் என்றால், டைட்டில் கார்டு போடுவது ரொம்ப க்ரியேடிவாகவும் காமெடியுடனும் இருக்கும்!!



ஃபாஜி, சர்க்கஸ்- பாஜிகர் பார்ப்பத்றகு முன்பே என்னை ஷாருக்கின் விசிறியாக்கியதற்கு இவை இரண்டிற்க்கும் முக்கிய பங்குண்டு!

ஓஷின் - ஒரு ஜப்பானியசிறுமி வீட்டு வேலை செய்ய அனுப்பபடுவதும், அவளுடைய வாழ்க்கையைப் பற்றியதும்.


குவிஸ் கான்டெஸ்ட் - சித்தார்த் பாசு நடத்தியது.
இன்னொருத்தர், டெரிக் ஓ ப்ரியென். போர்ன்விட்டா குவிஸ் கான்டெஸ்ட்(ஜீ டீவிலன்னு நினைக்கிறேன்!!).அவர் கேள்வியை என்னவோ அங்கே பங்கேற்பாளர்களிடம்தான் கேட்பார், ஆனால் வீட்டில் இருப்பவர்கள் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள்..அப்போதான், பாத்ரூம் போவதும், தண்னீர் குடிப்பதும் என்று செம காமெடியா இருக்கும்!!


கின்னஸ் ரெக்கார்ட்ஸ் - கணப்பு அடுப்பு பின்னால் எரிய, ஒருவர் நாற்கலியில் அமர்ந்துகொண்டே, பேசிவார். ஆனால், அதற்குப்பின் காண்பிக்கப்ப்டும் கிளிப்பிங்ஸ் ஜாலியா இருக்கும்!!

இன்னொரு நிகழ்ச்சி...அதை பத்தி சொல்லன்னா தெய்வ குத்தம் ஆகிடும்
ஹாட் ஸ்பாட்..ன்னு பார்வதி கான்-ன்னு ஒரு பாப் சிங்கர் தொகுத்து வழங்குவாங்க.நம்ம தேசி பாப்லாம் அதுலதான் வரும்...ரெமோ மட்டும்தான் ஞாபகம் இருக்கு!இதை பார்த்தவங்க யாராவது ஞாபகமிருந்தா சொல்லுங்களேன்!

இதெல்லாம் நல்லா போய்கிட்டு இருக்கும்போதுதான், கேபிள் டீவி-ன்னு ஒண்னு வந்தது. அதாவது, விட்டில் ஆண்டெனா இல்லாமலேயே, கேபிள் கனெக்ஷன் இருந்தா DD மட்டுமல்ல..நிறையச் சேனல்கள் வரும்னு ஒரு லிஸ்ட் வேறே..ஸ்டார், பிபிசி, எம் டீவி, அப்புறம் வீ சேனல் இதெல்லாம்!! அது மட்டும் இலலாம ஊர்ல எந்த ஸ்கூல்லயாவது ஆண்டு விழா நடந்தா, அதுல கல்சுரல்சஸ் எல்லாத்தையும் ரெக்கார்ட் செஞ்சு, அப்பப்ப அதை போட்டுகாட்டுவாங்க!! செம கலாட்டாவா இருக்கும்..அந்த கேபிள் டீவிகாரர்களுக்கு தெரிந்த/உறவின பசங்களை ஏதாவது பார்க் நடுவுல பாட்டு போட்டு ஆட விட்டு, அதை ரெக்கார்ட் செஞ்சு அடிக்கடி ஒளிபரப்பி ஒரே புதுமைல்லாம் செஞ்சிக்கிட்டிருந்தாங்க எங்க ஊர்ல!!

இது மட்டும் இல்லாம, இல்லாம தினமும் மத்தியானம் ஒரு தமிழ் படம் போடுவார்கள்
டெக்-ல இருக்கற பழைய படமெல்லாம் போடுவாங்க, அப்பப்ப புதுசும். உடனே ஆபீஸ் போகிறவர்கள் சும்மா இல்லாம, பகல்லா போட்டா லேடிசஸ் மட்டும்தான் பாக்கிறாங்க,நைட்ல
போடுங்கன்னு! அப்புறம் நைட்டும் போட ஆரம்பிச்சாங்க..எங்க ஏரியால முஸ்லீம் மக்கள் அதிகம்..அவங்க உடனே , எலலம் தமிழாதான் போடறீங்க, ஒருநாளாவது இந்திபடம் வேணும், இல்லன்னா கேபிள் வேணாம்னு சொல்ல, வெள்ளிகிழமை இரவு இந்திபடம் போட ஆரம்பிச்சாங்க! ஸ்கூல்லாம் லீவு விட்டா, வீட்டில இருக்க குட்டீஸ்ல்லாம் சேர்ர்ந்து, அண்ணா, அண்ணா, காலையிலே படம் போடுங்க..மத்தியானம் வேணாம்னு சொல்ல, டெக்ல படம் போடறதுக்குனே ஒரு லோக்கல் சேனல் உருவாகி, இப்போ ஊருக்கு போனா,
அந்த சேனல்ல ஒரு பொன்னு வாயை சுத்தி லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு போன்ல பேசிகிட்டிருக்கு..”ஓக்கே..ந்ல்லாயிர்க்கிங்கலா?
என்ன பண்றீங்க..எந்த ஸ்கூல்..ஓக்கே...டெடிக்கேட் பன்றீங்களா
-ன்னு!! ம்ம்..பேக் டூ த பாயிண்ட்!!


கேபிள் கொஞ்சம் கொஞ்சமா பரிணாம வளர்ச்சி அடைஞ்சிக்கிட்டிருந்தப்போதான், திடீர்னு ஒரு சேனல்..சன் ன்னு!!ஆரம்பத்தில இ.மாலா-ன்னு ஒரு ஆண்ட்டி வருவாங்க!! அழகா இருப்பாங்க அந்த ஆண்ட்டி. இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியல!அப்புறம் வார்த்தை விளையாட்டு..கேம்ஸ் ஷோ, சினிமா குவிஸ், ரபி பெர்னார்டின் நேருக்கு நேர், பிரபலங்களின் பேட்டி என்று புதுப் புது நிகழ்ச்சிகள்!! ஆனா அப்ப பார்த்து நான் பப்ளிக் எக்ஸாம்..நிறைய மிஸ் பண்ணிட்டேன்!

இப்போ எத்தனையோ சேனல்கள்..நிறைய நிகழ்ச்சிகள்..
பார்க்க நேரமுமில்லை...பார்க்கும்படியாய் எந்த நிகழ்ச்சியுமில்லை!
விளம்பரங்கள் மட்டுமே ரசிக்கும்படியாயிருக்கிறது இப்பொழுதும் அப்போழுதும்!!


ஒரே வித்தியாசம், நாங்கள் எது பார்த்தாலும், பெற்றோரும் கூடவே இருப்பார்கள். அல்லது அவர்கள் அனுமதியோடு! (டீவிக்கு சென்சார்) அதுவும் குறிப்பிட்ட நேரம் வரைதான்.
பொதுவாக எல்லார் வீடுகளிலும் (அல்லது டீச்சர் வீடுகளில் மட்டுமோ??) கடைபிடிக்கப் பட்டு வந்தது! ஆனால் இப்போது ?

Thursday, July 03, 2008

கடல்சிங்கம் யாரு?!?

பப்பு என்னுடைய ஹேர்கிளிப்பை தனக்கு அணிவிக்குமாறு கூறினாள்.
போட்டுவிட்டதும், "நான் யாரு" என்றாள்.

யாரு..இது?

கரடி பொம்மையா?

இல்ல!!

டோராவா?

இல்ல!

புஜ்ஜியா?

----

பும்பாவா?

-----

பும்பலுவா?

----

யாரு?தெரியலியே?

கடல்சிங்கம்!! (courtesy : பும்பா @ சுட்டி டீவி!)

ஒரு கிளிப் போட்டுகொண்டதும், தன் தோற்றம் மாறிவிட்டதாகக் கருதும் குழந்தைத்தனம்!!!

x------x----------x---------x-----x

பப்புவின் இஷ்டமான டீவி நிகழ்ச்சிகள்

ஒன்றரை வயதில் : பும்பா @ சுட்டி டீவி

இரண்டு வயதில் : பும்பா, டானி & டாடி, டோரா @ சுட்டி டீவி
டகெஷிஸ் கேஸில் @ போகோ

இரண்டரை வயதில் : பும்பா, டானி & டாடி, டோரா, உலகச் சிறுகதைகள் @ சுட்டி டீவி,டகெஷிஸ் கேஸில், MAD @ போகோ, ஆனந்தம்-கோலங்கள் டைட்டில் பாடல்கள்


All time favorite : எல்லா catchy-ஆன விளம்பரங்கள்...புடவை,நகைக்கடை விளம்பரங்கள் (குறிப்பாக ஜேடி-ஜெர்ரியுடவை)!!

Wednesday, June 04, 2008

நீயா நானா @ விஜய் டீவி

விஜய் டீவியின்,"நீயா நானா" வில் கடந்தவார விவாதம் மணமகள் Vs மணமகன்.
வரன் தேடும் மணமகன்களும் மணமகள்களும்.
பேச்சு சுவராசியமானதாக இருந்தது எப்போதும்போலவே.

"நீங்கள் மணமகளி/னின் ப்ரொபைல் பார்க்கும் போது, முதலில் பார்க்கும் மூன்று முக்கிய விஷயங்கள் என்ன ?" என கோபி கேட்டபோது வேலை,சம்பளம், குடும்பம்,சாதி, ஊர் etc என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் கூறினர்.

அந்த சமயத்தில், "சாதி எவ்ளோ பேர் முக்கியமா பார்ப்பீங்க" என்ற போது, சிலர் பதில் கூறினர். இதில், ஒருவர் மட்டும், "நான் கண்டிப்பா சாதி பார்ப்பேன், ஏன்னா நான் பிராமின். வேறயா இருந்தா வெஜிடேரியனான்னு தெரியாது"என்றார். பெண்கள் பகுதியில் ஒரு பெண்ணும், "நான் பிராமின். ஆனா வேற சாதியிலதான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்றார்.

இதில், என்னை உறுத்திய விஷயம் என்னவெனில், எல்லாருக்குமே வாய்ப்பு கொடுக்கப்பட்டு, எல்லாருமே அவரது விருப்பு/வெறுப்புகளை பேசினர். ஆனால் இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் அவரவர் சாதியை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

அவர்கள் மட்டும் "நான் பிராமின்" என தம் சாதியை பொதுவான சபையில் சொல்லிக் கொள்ள வைத்தது எது அல்லது யார்?

நிகழ்ச்சியில் பேசின மற்றவர்கள் யாரும் தம் சாதியை சொல்லிக்கொள்ளவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அவர்களை தம் சாதியை சொல்லாமல் மவுனம் காக்க வைத்தது எது அல்லது யார்?

Monday, June 02, 2008

குளோரியாவின் வீடு @ சுட்டீ டீவி

பப்புவுக்கு ஏதாவது கார்ட்டூன் ஷோ வைக்கலாம் என்று சுட்டி டீவிக்கு மாறியபோது,
ஒளிபரப்பப்பட்டிருந்தது..'குளோரியாவின் வீடு"! வாவ்..பாத்திரப் படைப்புகள், நகைக்க
வைக்கும் குரல்கள் - குழந்தைகளுக்கு மட்டுமில்லை..எல்லா வயதினருக்கும்
ஏற்றதான ஒரு கார்ட்டூன் ஷோ!



முக்கிய கதாபாத்திரம் "குளோரியா". அவர்களது அண்டை வீட்டார் ஷோபி குடும்பத்தார். நகரத்தில் குடியேறும் குளொரியாவின் குடும்பத்தினர் சந்திக்கும் அன்றாட நிகழ்ச்சிகள்.குளோரியாவும், ஷோபியும் ஒரே வகுப்பு. குளோரியாவின் அக்காவுக்கு எப்போதும் ரூட் விட்டுக்கொண்டு அலையும் ஷோபியின் அண்ணன். இரு குடும்பங்களும் பழக வேண்டிய சூழல். ஷோபியின் லைஃப் ஸ்டைல்-கு நேர் மாறானது குளோரியாவின் லைஃப் ஸ்டைல்.சுவாரசியம் கூட்ட, குளோரியாவின் அப்பா ஒரு விஞ்ஞானி. அதாவது, வித்தியாசமான உபயோகப்பொருட்கள்.மீனு என்றொரு பூனை வேறு.






ஒவ்வொரு எபிசோடும் ஒரு நல்ல முடிவோடு இருக்கும். நட்சத்திரங்களுக்கு கீழ், குளோரியா மீனுவோடு,அன்று வாழ்க்கை கற்றுக்கொடுத்ததை அசை போடுவதாய் முடியும்.
இப்போது நான் குளோரியாவின் ரசிகை! முக்கியமாய் அந்த கதாபாத்திரங்களின் குரல்.

என்ன..பப்புவா..ம்ம்..அவள் எப்போதும் போல், யெஸ்யெஸ்/இசையருவி அல்லது சன் மியுசிக்கில் பொல்லாதவன் ரீ-மிக்ஸையோ, கத்தாழ கண்ணாலயோ பார்த்து கொண்டிருப்பாள்.

நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணிக்கு!