ஏன்?
"ஏன்னா..சிம்பிள், பையனுக்கு வேலை கொடுத்தா ஒரு பேமிலியே பிழைக்கும். பொண்ணுக்கு வேலை கொடுத்தா அது எக்ஸ்ட்ரா மணிதான்."
கடந்த வாரத்தில், பழைய அலுவலகத்தில் வேலை செய்த நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. ஒன்றாக ஒரே நாளில் அந்த அலுவலகத்தில் சேர்ந்தவர்கள். அந்த அலுவலகத்தை விட்டு வந்துவிட்டாலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வது வழக்கம். ஆண்களும் பெண்களுமாக ஒரு ஆறேழு பேர் இருந்தோம். மெதுவாக பேச்சு வேலை, வீடு,குடும்பம், குழந்தைகள்,சினிமா என்று சுழன்று அப்புறம் கழுதை கெட்டால் குட்டி சுவராக அலுவலகம் மற்றும் வேலையில் வந்து நின்றது. அப்போது வந்து விழுந்ததுதான், இந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் .
(இன்டர்வியூவிலே பொண்ணுங்களுக்குத்தான் எப்போவும் வேலை கொடுப்பாங்கன்னு பொருமும் கோஷ்டி இல்லையென்றாலும்) Progressive minded என்று சொல்லிக்கொள்ளும் இவன் மட்டுமில்லை... இன்னும் சிலரும் இதே கருத்தை பிரதிபலிப்பதை கண்டிருக்கிறேன். ஆபத்தான கருத்துதான் என்றாலும் கேட்டுக்கேட்டு ஷாக்கிங் எல்லாம் ஒன்றும் இல்லை. இத்தனைக்கும், அங்கிருந்த எங்கள் நண்பர்களில் சிலர்( பெண்கள்) குடும்பப் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டு தனியாக வாழ்பவர்கள்.
இந்த எண்ணம் தோன்ற என்ன அடிப்படைக் காரணம்?
திருமணமாகிவிட்டால் பெண்ணுக்கு தனது குடும்பத்தை அதாவது தனது தாய் தந்தையரை பேண வேண்டிய அவசியம் இல்லை. திருமணமான பெண் தனது கணவனைச் சார்ந்தவள். அதனால், அவளுக்கு முதல் கடமை குடும்பம்தான், கேரியர் என்பது இரண்டாம் பட்சமே என்ற எண்ணம்தான். சமூகமே ஒட்டு மொத்தமாக இப்போக்குடையதாக இருக்கையில் ஆணையோ பெண்ணையோ குறை சொல்வதில் அர்த்தமில்லை.
25 வயதுடைய ஒரு பெண்ணும் ஆணும் ஒரே நேரத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
பொதுவாகவே, ஒரு ஃப்ரெஷரையோ அல்லது இருவருடங்கள் அனுபவங்கள் இருப்பவரையோ வேலைக்கு எடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், 25 அல்லது 27 வயதுக்கு மேற்பட்ட மணமாகாத பெண்ணை (அவர் இனி ரிசோர்ஸ் எனப்படுவார்) வேலைக்கு எடுப்பதில் ஒரு தயக்கம் இருப்பதை எந்த மேனேஜருமே ஒப்புக்கொள்வார். ஏனெனில், அவரைப் பொறுத்தவரை, 'மைன்ஸ்வீப்பர் கேமில் வெடிக்கும் குண்டுபோல' அந்த ரிசோர்ஸ் எப்போது வேண்டுமானாலும் மணமாகிச் செல்லலாம். அதன்பின், அவர் அதே ஊரில் அதே கம்பெனியில் தொடர்வாரா என்பது சந்தேகமே. அதாவது திருமணமா கேரியரா என்று வரும்போது ரிசோர்ஸ்கள் பெரிதும் திருமணத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மணமகன் எந்த ஊரோ எந்த நாடோ அங்கு செல்ல வேண்டியது அவரது கடமை. ஒருவேளை அதே கம்பெனியில் நீடித்தாலும் அந்த ரிசோர்ஸை வைத்து ப்ராஜக்ட் திட்டங்களை தீட்டுமுன் இன்னொரு ரிஸ்க்கையும் 'ஃபோர்ஸீ' செய்யவேண்டும். மருத்துவரிடம் உறுதிப்படுத்திக்கொண்டபின் பெற்றோருக்கு அடுத்து செய்தியை பகிர்ந்துக் கொள்ள வேண்டியது மேனேஜரிடம் - ப்ராஜக்ட் திட்டங்கள்! பிரசவ கால விடுப்போடு, அந்த ரிசோர்ஸை குறைந்தது ஆறுமாதங்களுக்கு நம்ப முடியாது. அதனால், அவரை வைத்து பிளான் செய்வது கடினமானது. இப்போது நான் சொன்னவை எல்லாம் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் பொதுவாக அநேக கம்பெனிகளில் நடைமுறையில் உள்ளவையே. இதிலேயே இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்போது, கர்ப்பமாக இருக்கும் பெண் வேலை தேடுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி இருப்பதால், ஓரளவிற்கு பெண்களுக்கு வசதியாக இருந்தாலும் அதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. மேலும், எல்லா கம்பெனிகளிலும் சாத்தியமாக இருக்காது. அலுவலகத்திலும், வீட்டிலும். அதனை உங்கள் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன். இதற்கு நீங்கள் ஒரு மேனேஜராகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.

மெட்டர்னிட்டி லீவு (டென்மார்க்கில் ஆறு மாதங்களுக்கு மேல்!) முடிந்தபின் அவர்க்ள் வேலையில் தொடர்வதும் சந்தேகத்துக்குரியதே. குழந்தையை பார்த்துக்கொள்ள யாருமில்லையெனில் முதலில் பலியாவது பெண்களின் கேரியர்தான். பெண்ணின் அம்மா அப்பா வீட்டோடு வந்து தங்க மாட்டார்கள். அவர்களுக்கோ அது அவமானம். இல்லாவிட்டால், அதற்குள்ளாக ஏதாவது சண்டை வந்து பெண்ணின் பெற்றோர் வந்தாலும் தங்க முடியாத நிலைக்கு உள்ளாகி இருப்பார்கள். இல்லையேல், பையனின் பெற்றோரோடு பெண்ணிற்கும் உரசல்கள் வந்து சேர்ந்திருக்கும். இல்லை, இருபக்கத்து பெற்றோருக்கும் உதவ முடியாத ப்ணிச்சூழல்....எது எப்படியோ, குழந்தை வந்துவிட்டால் இந்த மாதிரி நேரத்தில் பெரிதும் பலியாவது பெண்ணின் கேரியர்தான். இதைத்தாண்டி வேலைக்கு வரும் ரிசோர்ஸ்கள் பெரும்பாலும் டெஸ்டிங்கையே தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில், இப்போது அவர்களது முக்கியம் நேரமும், வேலையில் நீடித்திருக்க வேண்டிய தேவையும்தானே தவிர கேரியர் இரண்டாம் பட்சம்தான். இதற்கு நடுவில், உடல்நலம் சரியில்லை அல்லது தடுப்பூசி போட வேண்டியது, குழந்தையை ப் பார்த்துக்கொள்ளும் ஆயாம்மா எடுக்கும் எதிர்பாரா லீவுகள்....இன்னபிறவெல்லாம் சமாளித்து டெலிவரபிள்ஸ் காட்ட வேண்டும்.
இதில், ஓடியிருக்கும் ஒருவருட சைக்கிளில் ரிசோர்ஸ்களின் மூன்று மாத பிரசவ விடுப்புகள் போக, மேலதிக லீவு ஏதேனும் எடுத்திருந்தால் அது கேரியர் வளர்ச்சியை கண்டிப்பாக பாதிக்கும். ஏனெனில், பிரமோஷன்களுக்கான தகுதியை இழந்திருப்பார்கள். ஒரு மாத ட்ரிப்கள் அல்லது கஸ்டமர் சைட் விசிட் போன்றவற்றில் டைனமிக்காக முன்பு போல இருக்க முடியாது. ஏனெனில், குடும்பச்சுமையை சுமந்தாக கட்டாயத்தில் இருக்கும் ரிசோர்ஸ்கள் 'வேலை' என்பது இருந்தால் போதும், மீதியை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருப்பார்கள். எதைக்கொடுத்தாலும் "வேல்யூ ஆடட்" என்பதைவிட, கொடுத்த வேலையைச் செய்வது என்ற நிலைக்கும் தள்ளப்பட்டிருப்பார்கள்.
இதே நிலைமை, ஆண்களுக்கு இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவு - சொல்லப்போனால் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு கூட இருக்காது. "உத்தியோகம் புருஷ லட்சணம்". மேலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் கூட்டமும் இதில் இருக்கும். இருவருமே வெளிநாடுகளில் வேலை செய்தால், அங்கு உதவிக்கு யாராவது ஒருவருடைய பெற்றோர் கண்டிப்பாக கூட இருப்பார்கள். அப்படி இல்லா விட்டால், மனைவி வீட்டிலிருப்பார். அப்படி இல்லாவிட்டாலும், வெளிநாடு சென்றபின், அங்கு வீட்டு வேலைகளை பகிர்ந்துக்கொள்வதை ஆண்கள் (விதிவிலக்குகள் இருந்தாலும்) பொருட்டாக கருதுவதில்லை. (அதே ஆண்கள் இந்தியாவிற்கு வந்துவிட்டால் நடந்துக்கொள்ளும் முறையே வேறு. )
இப்போது, அந்த ஆணிடம் வருவோம். சேர்ந்த ஆறுமாதங்களிலோ ஒரு வருடத்திலோ (தானாக வராவிட்டாலும், சண்டையிட்டாவது) லாங்டெர்ம் அசைன்மென்டாக அவர் ஆன்சைட் சென்றிருக்கலாம். அவருக்கும் இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்திருந்தாலும் எந்த பெரிய மாறுதலும் இருக்காது. திருமணமானதிற்கு ஒரு ட்ரீட் மற்றும் குழந்தை பிறந்தால் அதற்கு ஒரு ட்ரீட் என்ற அளவில் முடிந்து போயிருக்கும். பிரசவ விடுப்பாக மூன்று நாட்கள். சமயங்களில் ஊருக்கு போய்வர ஒரு வாரமாக நீடிக்கப்பட்டிருக்கலாம்.அவர் குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் கூட ஆன்சைட் செல்லலாம். நைட் கால்கள் நிமித்தம் தாமதமாக வீட்டிற்கு வரலாம். கேரியரை மாற்ற வேண்டிய, என்ன வருகிறதோ அதை எடுத்துக்கொள் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார். முக்கியமாக, No post-partum depressions! வீட்டிலும் வெளியிலுமாக சூழல்களை சமாளித்து அப்ரைசல் லெட்டர் வாங்கும்போது "முணுக்கென்று" கண்களில் தளும்பி நிற்க வேண்டிய நிலையும் இல்லை. முக்கியமாக எந்த பிரமோஷன்களையும் இழந்திருக்க மாட்டார். ரோல் மாற்றங்களில் சில படிகள் முன்னேறியும் இருக்கலாம்.
பொதுவாகவே, திருமணமாகி குழந்தைகளோடு பள்ளியில் செட்டிலாகி விட்ட பெண்கள் விரைவில் மாற்றங்களை விரும்ப மாட்டார்கள் என்ற எண்ணம் வெளியில் தெரியாவிட்டாலும் உள்ளூர உண்டு. ஏனெனில், ஒரு .5 புள்ளிகள் அப்ரைசல் குறைந்தாலே பேப்பர் போடும் ஆண்கள் உண்டு. ஆனால், (.5 என்ன 1 புள்ளி குறைந்தாலும் ) பெண்களுக்கோ, "அடுத்ததுலே பார்த்துக்கலாம்ப்பா, சென்னையிலே ஆப்சன்ஸும் கம்மி" என்றோ அல்லது "இதுதான் வீட்டுப் பக்கத்துலே இருக்கு, சாயங்காலம் சீக்கிரம் போய் தைகளை கூட்டிட்டு வரலாம்" என்பதோதான் முடிவாக இருக்கும்.
இதையெல்லாம் சமாளித்து ப்ராஜக்ட் லீடாகவோ மேனேஜராக வந்துவிடலாம். ஆக்சலரேட்டட் பிரமோஷன்கள் வாங்கி உயர்ந்தவர்களும் உண்டு. ஆனால், எத்தனை பேர் விபிகளாக ஜி எம்களாக, சீஇஓ களாக உயர்ந்திருக்கிறார்கள்? உயர முடிந்திருக்கிறது? இறக்கைகள் பறக்க எத்தனித்தாலும் கால்களில் கட்டப்பட்டிருக்கும் ஒரு இரும்பு குண்டு கீழ்நோக்கியல்லவா இழுக்கிறது?
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். ஒரே நிலையில் இருக்கும் ஆண், பெண் இருவரில் ஆணுக்குத்தான் குடும்பத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று நினைப்பது சரியானதா? ஒரு கட்டத்தில், பார்த்தபோது என்னை சுற்றியிருந்த எனது நெருக்கமான நண்பர்கள் பலர் குடும்பப் பிரச்சினைகளால் பிரிந்திருந்தனர். பெற்றோர் சம்மதமில்லாமல் காதல் திருமணம் செய்து வெளிநாட்டிற்கு சென்றுவிட்ட செல்வியும் அவளது கணவரும் வேலை செய்தேயாக வேண்டிய நிர்பந்தத்தின் நிமித்தம் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்கிறார்கள். (So near, yet, so far.) கடன் வாங்கிவிட்டு ஓடிவிட்ட அப்பாவுக்காக பர்சனல் லோன் வாங்கி தனது வருமானத்தில் அதை அடைத்து, தங்கையை படிக்க வைத்து, அம்மாவையும் கவனித்துகொண்ட லீமாவை பார்த்திருக்கிறேன். 'ஏடிஎம் கார்டை கொடுக்கவில்லையென்றால் உன் கணவனோடு உன்னை வாழவிடுகிறேனா பார்' என்று மகனை தன்னோடு கூட்டிக்கொண்டு சென்றபின், இருவருடங்கள் தனியாக வாழ்ந்த சுபா....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...
படிக்கும் அனைத்து பெண்களுமே வேலைக்கு வந்துவிடுவதில்லை. ஐடி - யால், முன்பைவிட பெண்கள் அதிகமாக வேலைக்கு வருகிறார்கள். அதுவும் கூட பெண்கள் முன்னேற வேண்டுமென்ற எண்ணத்தினால் அல்ல...ஆள் பற்றாக்குறையால்தான் என்பதை மறுக்க முடியாது! எத்தனை அலுவலகத்தில் பாதிக்குப் பாதி பெண்கள் இருக்கிறார்க்ள்? அதிகபட்சம், 35 முதல் 40 சதவீத பெண்களே இருப்பார்கள். கல்யாண செக்போஸ்ட், குழந்தை செக்போஸ்ட் தாண்டி வருபவர்கள் அவர்களிலும் குறைவுதான். (புள்ளிவிவரங்கள் கேட்காதீர்கள், எல்லாம் கண்ட, கேட்ட அனுபவம்தான்)
எனவே, வேலைக்கு வரும் பெண்கள் எல்லோரும் ஸ்பாவுக்கும், ஷாப்பிங் போவதற்கும் மட்டுமே சம்பாரிப்பவர்கள் இல்லை. ("உனக்கென்னப்பா, டபுள் இன்கம், ஹைக் வரலன்னாலும் பரவால்ல, நீ சமாளிச்சுப்ப, எங்கள மாதிரியா" - கணவனும் மனைவியும் வேலை செய்பவர்களாக இருந்தால், இந்த டயலாக் கண்டிப்பாக சொல்லப்படும், கிண்டலுக்காகவேனும்.)
கேரியர் மட்டும்தான் முக்கியம் என்றோ அல்லது வேலைக்கு செல்வது மட்டுமே பெண்களின் சுதந்திரம்/முன்னேற்றப்பாதை என்றோ நான் சொல்லவரவில்லை. வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.
இருந்தாலும்,பெற்றோரின் உடல் நலத்திற்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் சம்பாரிக்க வேண்டிய கடமை எப்படி ஆண்களுக்கிருக்கிறதோ அதே கடமை அவர்களுக்குமிருக்கிறது. சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் அவர்களுக்குமிருக்கிறது.
அடுத்த முறை இன்டர்வியூவில் ஒரே தகுதிகள் கொண்ட ஆணையும் பெண்ணையும் சந்தித்தால் மேலே உள்ள வரிகளை நினைத்துக் கொள்ளுங்கள்!
பி.கு : அமுதா,பூங்குழலி, லஷ்மி, தீபா,ஹூசைனம்மா : ஹையயோ...ஓடாதீங்க... No, you are not tagged, Juz share your thoughts - இங்கேயாவது இல்லே உங்க பதிவுலேயாவது!