Tuesday, July 22, 2008

நாங்களும் இந்திராநூயிக்களும்

வேலைக்கு செல்லும் தாயாக இருப்பது, கொஞ்சம் கடினமானதுதான்.
எனது அம்மாவும், அம்மாவின் அம்மாவுமே ”வேலைக்கு செல்லும் தாய்”
இனத்தை சேர்ந்தவர்கள்தாம்! எனது அம்மா, இன்னும் பணியிலிருக்கிறார்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்.
ஆனால், எனக்குத் தேவையான போது (அதாவது, நான் பள்ளியிலிருந்து வரும் நேரம்) வீட்டில் இருந்திருக்கிறார். ஒரு நாளும்,நான் தனித்து விடப்பட்டோ அல்லது வேறு யாருடனோ(வேலைக்கார ஆயா) இருந்ததில்லை, நான் இப்போது பப்புவை விடுவதைப் போல!! அதே போல எனது தாயும் இருந்ததில்லை, ஏனெனில், எனது பாட்டி,
பிள்ளைகள் பிறந்ததும் வேலையை விட்டுவிட்டு, அவர்கள் வளர்ந்து தன்னை தானே
கவனித்துக் கொள்ளும் வயது வரை வீட்டில் இருந்து, அதன் பின் வேலையை தொடர்ந்தார்.
அவரது காலம் அபப்டி. மேலும் வேலையும் சுலபமாய் கிடைத்தது ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால், அவரகளது வேலைப் பளு, வேலைக் களம் வேறு.
அதையும், எனது வேலைப் பளுவும் ஒப்பிட முடியாதுதான்!
ஏனெனில், அவர்களது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சென்று, வீடு திரும்புபவர்கள்.
எங்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது, மதியம் வீடு வந்து செல்லக்கூடிய வசதி அவர்களுக்கு இருந்தது! மாலை ஆறு மணியிலிருந்து எங்களுடன் செலவழிக்க அவர்களிடம் நேரம் இருந்தது. உணவு தயாரிக்கவும்,ஒன்றாக அமர்ந்து உணவருந்தவும், பொறுமை இருந்தது! ஆனால், எனக்கோ ஆபீஸ் போக குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்.
வேலைப் பளுவைப் பொறுத்து வீடு திரும்புவது 7 மணியோ 8 மணியோ ஆகலாம்!!
பப்பு தூங்குவதற்குள் வீடு வந்து சேர்வதே, என்னைப் பொறுத்த வரை மிகப் பெரியக்
காரியம்!!

ஒரு சில அதிர்ஷ்டசாலிக்களுக்கு அம்மாவோ அல்லது மாமியாரோ
கூட இருந்து பார்த்துக் கொள்ளக்கூடிய வசதி இருக்கும். அதற்கேற்றவாறு அதன் நிறை குறைகள் இருந்தாலும், பிள்ளை வேறு யாருடனோ இருப்பதற்கு, நமது உறவினரிடம் இருப்பது எவ்வளவோ பாதுகாப்பானது அல்லவா! அதற்காக எனது குழந்தையை வெளியூர்களில் இருக்கும் அம்மாவிடமோ, மாமியாரிடமோ விட முடியாது!! அப்படி விட்டு விட்டு வாழும் வாழ்க்கையில், என்னைப் பொறுத்தவரை அர்த்தமே இல்லை! குற்றவுணர்சியே என்னைக் கொன்றுவிட போதுமானது, அந்நிலையில்!!எனது குழந்தை எனது பொறுப்பில் இருப்பதுதான் சிறந்தது!! ஆனால் வேறு வழியில்லாமல், அவ்வாறு விடும் தாய்களையும் நான் அறிவேன்!!

இன்னும் ஒரு சிலரையும் நான் கடந்து வந்திருக்கிறேன்...தனது பிள்ளைக்காக தனது
கேரியரை தியாகம் செய்தத் தோழிகள்! இவர்கள், அந்த முடிவுக்குத் தள்ளப்பட்டார்கள் என்றுச் சொல்வதே சரியாக இருக்கும். ஏனெனில்,கனவுகளோடு படித்து,ஆசையாய் உருவாக்கிய கேரியர் (career)ஐ, விட்டு விட யாருமே விரும்பமாட்டார்கள். ஆனால், பெரும்பாலும், அந்த முடிவை பெரும்பாலும் பெண்கள்தான் எடுக்க வேண்டியிருக்கிறது. ஒருசில வருடங்களில் குழந்தை வளர்ந்து தன் வேலைகளை தானே பார்த்துக் கொள்ளும் பட்சத்தில், அவர்களுக்கு இதிலிருந்து சற்று ஓய்வு கிடைக்கலாம். ஆனால், அவர்களது மறுபிரவேசம், விட்ட இடத்திலிருந்து தொடர்வது எனபதுச் சற்று கடினம்தான், ஐ.டி-ஐ பொறுத்த வரை. ஒரு சில கம்பெனிகளில் வாரத்தில் சில நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை இருப்பதனால்,நல்ல உதவியாயிருக்கிறது!!


பெரும்பாலானவர்கள், என்னைப் போல, ஒரு வேலைக்கார ஆயாவிடம் குழந்தையை விட்டு, அல்லது குழந்தைகள் காப்பகத்தில் காலையில் விட்டு விட்டு, பின்னர் வீடு திரும்பும்போது அழைத்துச் செல்வது!! ஏதோ ஒரு ஆய்வில் போட்டிருந்தார்கள், ஒரு நிலைக்கு மேல் பெண்கள் நிர்வாக ஏணியில் வளர்வதில்லை, மாறாக ஆண்கள் மட்டுமே வளர்ச்சியடைகிறார்கள் என்பதாக!!திடீரென வராமல் ஏமாற்றும் வேலைக்கார பெண்கள், தான் ஆபீஸ் சென்றாலும் குழந்தை சாப்பிட்டதா என வேலைகளினூடே கவலை,எந்த ப்ராக்ஜட்டில் தூக்கிப் போட்டாலும் சலிக்காமல் பச்சோந்தியாய் கொடுத்த வேலைக்கு தன்னை புதுப்பித்துக் கொள்வது இந்த டென்ஷன்களின் மத்தியில் கொடுத்த வேலையை ஒழுங்க்காக செய்துவிட்டு நேரத்திற்கு வீட்டிற்கு சென்றாலே போதும் என்றுதான் தோன்றும். இதனாலேயே, எனக்கு மேலாண்மை நிர்வாக வேலை வேண்டாம், ஆனால் டெக்னிக்கல் சைடில் மட்டுமே இருந்தால் போதும் என்று முடிவெடுக்கிறவர்களும் இருக்கிறார்கள். என்னுடைய நிறைய சீனியர்கள் அப்படித்தான்!!ஏனெனில் இந்த மாதிரி முடிவெடுக்கும் நிலைக்கு அவர்க்ள் வரும்போது, குறைந்தது 6 வருடங்கள் எக்ஸ்பீரியன்ச் இருக்கும். அப்போதுதான், லீட் மாதிரியான பதவிகள் கொடுக்கப்படும்! (கம்பெனியைப் பொறுத்து
ரோல்கள் மாறுபடலாம்!!)


ஏனெனில், ஒரு பெரிய கப்பெனியின் ceo போஸ்டில் இருக்கிறேனென்பதைவிட, புத்திசாலியான, ஒரு நல்ல பொறுப்பான குழந்தையை வளர்த்திருக்கிறேன் என்பதே நான் மட்டும் இல்லை பெரும்பாலான பெண்கள் விரும்பும்/எடுக்கும் முடிவாக இருக்கும் ,
வேலையா குழந்தையா என வரும் போது!


மெட்டர்னிட்டி லீவ் எடுத்தால் ஒரு சில கம்பெனிகளில், உங்களில் அடுத்த பதவி உயர்வு பாதிக்கப் படக்கூடும்!! எவ்வளவு அபத்தமாக இருக்கிறது? மேலும், என் அம்மா கால்த்தில் 6 மாதங்களாக இருந்த மெட்டர்னிட்டி லீவ், இப்போதெல்லாம் 90 நாட்கள்தான், அதாவது 3 மாதங்கள்!! மேலும் நமக்கு ஈ.எல் இருந்தால் எடுத்துக் கொள்ளலாம், அதுவும் 3 மாதங்களுக்கு மிகாது. ஆனால், இந்தக் விடுப்புக்காலம் பதவியுயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது!!

இதில், யாராவது இந்திரா நூயியையோ அல்லது பத்மஸ்ரீ வாரியரையோ ஒப்பிட்டாலோ அல்லது
உதாரணம் காட்டினாலோ, எப்படி அவர்கள் அந்த உயரத்தை எட்டினார்கள் என்று கேட்பதை விட, அவர்கள் வீட்டை,குழந்தைகளை யார் மேனேஜ் செய்தார்கள் என்றே கேட்கத் தோன்றுகிறது!! ஆனால், வீட்டையும்,குழந்தையையும் தானே நிர்வகித்துக் கொண்டு, வேலையிலும் வளர்ச்சியடைந்துள்ளவர்கள் யாரேனும் இருந்தால் காட்டுங்கள், ரோல்மாடல் தேவைப்படுகிறது எனக்கு!!நீங்கள் அன்றாடம் அலுவலகத்தில் சந்திக்கும் உங்கள் பக்கத்து க்யூப் பெண்களின் புன்னகைக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கையும், பிரச்சினைகளும் இதுதான்!!

20 comments:

Amudhavalli said...

/*இதில், யாராவது இந்திரா நூயியையோ அல்லது பத்மஸ்ரீ வாரியரையோ ஒப்பிட்டாலோ அல்லது
உதாரணம் காட்டினாலோ, எப்படி அவர்கள் அந்த உயரத்தை எட்டினார்கள் என்று கேட்பதை விட, அவர்கள் வீட்டை,குழந்தைகளை யார் மேனேஜ் செய்தார்கள் என்றே கேட்கத் தோன்றுகிறது!! */

நூற்றுக்கு நூறு உண்மை.
பெண்கள் படித்து வேலைக்குச் செல்வதில் கிடைத்த பரிசுகளுள் ஒன்று, வேலை வீடு என்ற இரட்டை குதிரை சவாரி...

துளசி கோபால் said...

நியாயமான ஆதங்கம்தான்.

குழந்தையை வளர்ப்பதற்காக வேலைக்குப் போகாமல் வீட்டிலிருந்தவள் என்ற வகையில் இந்தப் பதிவு நல்லாவே புரியுது.

குழந்தை வளர்ந்தபிறகு போயிருக்கலாம்தானேன்னு கேக்கப்பிடாது. சும்மா இருந்து சுகம் கண்டுட்டேன்:-)

rapp said...

முதலில் மொழிப் பிரச்சினைன்னு சும்மா இருந்தேன், இப்போ நாம குழந்தை பெத்துக்க முடிவு பண்ணா எனக்கப்போ வேலைய விட மனசு வராதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்:):):)அதை சாக்கா வெச்சுத்தான் நான் இப்போ வேலைக்குப் போக முயற்சி பண்றதை கூட நிறுத்திட்டேன்.

கயல்விழி முத்துலெட்சுமி said...

துளசி பதிலே தான் எனக்கும்..:))

சந்தோஷ் = Santhosh said...

நியாயமான கவலை தான். முன்னாடி எல்லாம் வீட்டுல பெரியவங்க இருந்தாங்க இப்ப அதுக்கும் வழியில்லாம போயிட்டு இருக்கு.

Gayatri said...

அருமையான post.
Behind every successful man is a women என்பதை போல்
Behind every successful women there has to be a supportive family setup..

யோசித்து பார்த்தால் ஒரு பெண் as a family women செய்வதை replace செய்ய எவ்வளவு பேர் வேண்டி இருக்கிறது??!!!

மங்களூர் சிவா said...

வருத்தமான விசயம்தான்.

'நான்' என்றால் நான்.

என் குடும்பம் என்றால் கணவன் மனைவி பிள்ளைகள் என்ற மாற்ற நிலைதான் இதற்கு காரணம்.

ஆயாவிடமோ, காப்பகத்திலோ விட்டு செல்வதை விட தாத்தா , பாட்டி பார்த்துக்கொள்வதுதான் சிறந்தது.

NewBee said...

//மங்களூர் சிவா said...
தாத்தா , பாட்டி பார்த்துக்கொள்வதுதான் சிறந்தது.
//

வேலைக்காக வேறு ஊர்களில் இருப்பவர்கள், தாத்தா பாட்டிக்கு எங்கே போவது? :((

இப்பொழுது, பெரும்பாலான தாத்தா பாட்டிகள் கூட வேலைக்குச் செல்பவர்களாகத் தானே இருக்கிறார்கள்.

//எப்படி அவர்கள் அந்த உயரத்தை எட்டினார்கள் என்று கேட்பதை விட, அவர்கள் வீட்டை,குழந்தைகளை யார் மேனேஜ் செய்தார்கள் என்றே கேட்கத் தோன்றுகிறது!! //

நிதர்சனம்.

பெண்களின், படிப்பிலும் வேலைக்குச் செல்லும் வாய்ப்புகளிலும் ஏற்பட்டுள்ள விகிதாச்சாரத்தின் வேகம், அதற்குத் துணையாய் இருக்க வேண்டிய குடும்பச் சூழ்நிலையில் சற்றுக்குறைவாகவே இருக்கின்றது.அது இன்னும் வேகம் பிடிக்கும் என நம்புவோம் :))

இரண்டும் சமநிலையில் வரும் வரை, இந்தமாதிரியான மாற்றுவழிகளிலாகிய, க்ரீச், பேபி சிட்டர் போன்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

புதுகைச் சாரல் said...

. இவரது ஆண்டு சம்பளம் 153 கோடி
ரூபாய்.அதாவது ஒரு நிமிடத்துக்கு 2,911 ரூபாய்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

நீங்க எழுதி உள்ள அனைத்தும் உண்மைதான் சகோதரி!!!!

யாத்ரீகன் said...

எளிமையாய் ஆனால் சரியாய் சொல்லியிருக்கீங்க .. Right to the point .. கடைசீல நீங்க சொன்னதைத்தான் எந்த ஒரு சாதனை பெண்ணை பற்றி கேள்விப்படும்போதும் தோன்றும் .. நெருங்கிய தோழி ஒருவர் குழந்தைக்காக வேறு வழியே இன்றி தன் Caareer-ஐ விட முடிவெடுத்தபோது மிகவும் கஷ்டமாயிருந்தது .. காரணம் அந்த நேரத்தில் அவள் எங்கள் குழுவில் பலரைவிட வெகு வேகமாய் உயர வாய்பிருந்தது .. வெகு சிலருக்கே இரண்டையும் Balance செய்யும் சூழல் வைக்கின்றது ..

சரவணகுமரன் said...

நல்ல பதிவு...

//கனவுகளோடு படித்து,ஆசையாய் உருவாக்கிய கேரியர் (career)ஐ, விட்டு விட யாருமே விரும்பமாட்டார்கள். ஆனால், பெரும்பாலும், அந்த முடிவை பெரும்பாலும் பெண்கள்தான் எடுக்க வேண்டியிருக்கிறது.//

இல்லை, அவ்வாறு ஒரு ஆண் அதாவது ஒரு கணவன் முடிவெடுக்க மனைவி விருப்பப்படுவாளா? அனுமதிப்பாளா?

சந்தனமுல்லை said...

உண்மைதான் அமுதா!! சர்க்கஸ் கோமாளியின் கையில் இருக்கும் கையில் இருக்கும் பந்துகள்தான் நினைவுக்கு வருகிறது!!

சந்தனமுல்லை said...

துளசி மேடம்..

ஆதங்கமான்ன்னு தெரியல..ஆனா, எவ்வலவு சுமை வச்சாலும் சுமக்க பழகிடுவோமோன்னு தோணுது!!

நீங்க சும்மா இருக்கீங்கன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன். உங்க பதிவுகளைப் பார்த்தாலே தெரியுதே!!
:)

சந்தனமுல்லை said...

துளசி மேடம்..

ஆதங்கமான்ன்னு தெரியல..ஆனா, எவ்வலவு சுமை வச்சாலும் சுமக்க பழகிடுவோமோன்னு தோணுது!!

நீங்க சும்மா இருக்கீங்கன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன். உங்க பதிவுகளைப் பார்த்தாலே தெரியுதே!!
:)

சந்தனமுல்லை said...

ராப் : ரொம்ப தொலைநோக்குச் சிந்தனை உடையவர்தான் நீங்கள்!!! :-)

சந்தனமுல்லை said...

முத்துலெட்சுமி : துளசி பதிலேதான் உங்களுக்கும் :-) !!

சந்தனமுல்லை said...

சந்தோஷ் = Santhosh :இப்போவும் இருக்காங்க..ஆனா அவங்களும் வேலைக்குப் போரவங்களா இருக்காங்க இல்ல
பிசியா இருக்காங்க!!

புதுகைத் தென்றல் said...

தனது பிள்ளைக்காக தனது
கேரியரை தியாகம் செய்தத் தோழிகள்!


:( same blood

பிரேமாவின் செல்வி said...

அட! கணவரின் வேலை மற்றும் என் உடல் நிலை காரணமாக வேலையை விட்டு விட்டு நான் புலம்பிக் கொண்டிருக்கும் அதே வரிகள்....(நானும் அதே எம்.சி.ஏ தான்) அதுவும் கணிணி துறையில் இது மிக மிக கடினம். திருமணத்திற்கு முன்பே பணி சுமை கண் இமைக்க விடாமல் அடித்தது. அந்த நாட்களின் பரிசாக வேலையை விட்டு 3 மாதங்கள் கடந்த பின்னும் தோள் பட்டை வலி பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறது). இதற்கு யாரை என்ன குறை சொல்வது என்றே தெரியவில்லை. 8 மணி நேர வேலை என்பது கணிணி துறையிலும் சாத்தியம் ஆகும்போது இது சற்றே மாறலாம்.

உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது கூட, எப்படி வேலை பார்த்துக்கொண்டே இவ்வளவு எழுத முடிகிறது என்று எண்ணிக் கொண்டு இருந்தேன். :-)