Showing posts with label நண்பர்கள். Show all posts
Showing posts with label நண்பர்கள். Show all posts

Saturday, February 28, 2015

திகட்ட திகட்ட தண்ணீர் - தென்காசி பயணம்

இதே போன்ற, ஒரு சனிக்கிழமை காலையில்தான், பொதிகை விரைவு ரயிலில் சென்று இறங்கினோம், தென்காசிக்கு. அலுவலக நண்பரின் திருமணம். கிட்டதட்ட, இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடனே பார்த்திபன், டீமுக்கு சொல்லிவிட,  பேட்ச் பை பேட்சாக  முன்பதிவு செய்திருந்தார்கள்.  அதுவே, ஒரு தனி ப்ராஜக்ட் போன்றுதான் இருந்தது.

திருமணம் ஜனவரி 26. அதற்கு முன் இரண்டுதினங்கள்,  சரியாக வாரயிறுதி. குடும்பம்,குட்டி என்று  கிட்டதட்ட 35 பேர், எஸ் 6 பெட்டி வாசலில் குழுமியிருந்தோம். ஒருசிலருக்கு மட்டும் எஸ் 10. ஆரம்பத்தில், 'ஹாய் ஹலோ' என்று நலம் விசாரிப்புகள், பள்ளிக்கூட விபர பரிமாற்ற‌ங்கள்... 'என்ன சாப்பாடு', 'தண்ணி வாங்கணுமா' என்ற கவனிப்புகள்... ரயில் கிளம்ப, கொஞ்சம் கொஞ்சமாக பனிக்கட்டி விலக ஆரம்பித்தது. 

அடுத்தநாள் காலையில், மாப்பிள்ளையும் குடும்பமும் ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்க, தென்காசி எங்களை மொத்தமாக வாரி அள்ளிக்கொண்டது. அங்கு தங்கி யிருந்தது, மொத்தமே இரண்டு நாட்களே என்றாலும், ஏதோ பலகாலமாக அங்கேயே வாழ்ந்தது போன்ற உணர்வே ஏற்பட்டது. கல்லூரிகாலத்துக்கே சென்று மீண்டு வந்தது போல! நண்பர்களோடு செல்லும் பயணத்துக் கெல்லாம் இந்த உணர்வு வந்துவிடுவது,ஆச்சரியம்தான். இதே போன்று, இரண்டு வருடங்களுக்கு முன் சுபாஷின் திருமணத்துக்காக ராய்ச்சூர் மற்றும் ஹைதராபாத் சென்றது மனதிலேயே நிற்கிறது!

கைக்குழந்தை, குட்டிகளோடு இருந்தவர்கள், சற்று ஓய்வெடுக்க, தலை யணைக்கும், பாபநாசத்துக்கும் செல்ல ஒரு குழு கிளம்பியது. அந்த 'அடங்காத குழு'வில் நானும் பப்புவும் இருந்தோமென்று சொல்லவும் வேண்டுமா? 'சரி, எப்படின்னாலும் குளிக்கதானே போறோம், எதுக்கு ரூமிலே குளிச்சு, தண்ணியை வேற வீணாக்கிக்கிட்டு' என்று மாற்றுடையை கையில் சுருட்டிக்கொண்டோம்.

'குளிச்சுட்டு வந்தா பசிக்கும், அதனால, அதுக்கு முன்னாடி லைட்டா சாப்பிடலாம்'   என்று ஒருவருக்கு பல்பு எரிய, மொத்த குழுவுக்கும் அதே பல்பு எரிந்தது. ஓட்டுநரிடம் சொன்னதும், 'சூப்பர் ஓட்டல் ஒன்னு இருக்குங்க...போற வழியிலே, விட்டீங்கன்னு நாம போற வழியிலே வேற எங்கேயும் இல்லே' என்று ஒரு இடத்தில் நிறுத்தினார்.

பொட்டல்புதூர். வெஜ், நான் வெஜ் உணவகம். மட்டன்/சிக்கன் பிரியாணி, மட்டன் வறுவல், சுக்கா, மீன் வறுவல் ஆம்லேட், ஃபுல் மீல்ஸ், பரோட்டா,தயிர்,மோர்.....உணவு ஒரு பக்கம் என்றால், 'பரோட்டா வேணுமா, கொத்துபரோட்டா வேணுமா? இன்னொரு ஆம்லேட்? பாப்பாக்கு பிரியாணி?' என்று அவர்களது உபசரிப்பு மறுபக்கம்....ஆகா! என்ன ஒரு விருந்தோம்பல்! அங்கேயே சில ஆர்வக்கோளாறுகள் உணவை படமெடுக்க துவங்க, அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. மனமும், வயிறும் குளிர்ந்து, அவ்விடம் நீங்கி, சிலபல வாழைப்பழங்கள், புளிப்பு மிட்டாய்கள், லாலிபாப் சகிதம் வியாபாரத்தை முடித்துக்கொண்டு சென்ற இடம், தலையணை.


 
'இது அருவியல்ல, ஆறு மற்றும் அணை' என்பதை உணர்ந்துக்கொண்ட சில ஜீவன்கள், ' தண்ணின்னா கொட்டணும்...நேரா அருவிக்குத்தான்..எட்றா வண்டிய!' என்று அருவாள் பார்ட்டிகளாக மாறத்துவங்கினர். ஓட்டுநரது, 'இதுக்குமேலேல்லாம் இந்த வண்டி போகாதுங்க என்ற பருப்பெல்லாம் வேகவில்லை. அடுத்த ஸ்டாப் பாபநாசம்(அகஸ்தியர்?) அருவி. கொட்டும் தண்ணீரை பார்த்ததும், கர்ணனின் கவசகுண்டலம் போல கழுத்தில் மாட்டியிருந்த டிஎஸ்எல்ஆர் காமிராவை கழற்றி பெஞ்சின் மீது வைத்துவிட்டு, 'மச்சி டீ சொல்லேன்' ரேஞ்சின் 'மச்சி நீ பார்த்துக்கோ....தோ வந்துர்றேன்' என்று   உடமைகளை துறந்து அருவியை நோக்கி பாய்ந்தனர். நாங்கள், பெண்கள் பக்கம் ஒதுங்கினோம்.

 
 
அது எப்படிதான் அருவிகளுக்கென்று ஒரு தனி கடிகாரம்  இருக்கிறதோ தெரியவில்லை.இன்டர்ஸ்டெல்லரின் மில்லர் ப்ளானட் போல!  அருவிக்குள்  இருக்கும்போது என்னவோ, இப்போதுதான் வந்ததுபோல தோன்றுகிறது.   வெளியேறி சென்றபோதுதான், ஒன்றரைமணி நேரம் ஆடியிருக்கிறோம் என்பதே புரிகிறது.  'ஆத்திலேயும், தண்ணியிலேதானே ஆடப்போறோம்' என்று உடைமாற்ற சோம்பல்பட்டு, ஈரத்துணிகளோடு அடுத்த‌ ஸ்டாப்.... தலையணை! ஆகா...தண்ணீர்...தண்ணீர்...தண்ணீர்! திகட்ட திகட்ட தண்ணீர்!

கொட்டும் அருவியிலேயே மனமும் உடலும் குளிர்ந்து போனது.  தலையணையின் தளும்பிப்பாயும் தண்ணீரைப் பார்த்ததுமே, எல்லா கவலைகளும், பாரங்களும் கரைந்துபோயின. எருமை மாடுகள் போல, கிட்டதட்ட இரண்டரை அல்லது மூன்று மணிநேரம் ஊறிக்கிடந்தோம்.  நிமிர்ந்து பார்த்தால், பின்னால் பசுமையான மலைமுகடுகள். அதன் உச்சியில் சூரியன். மலையின் அடிவாரத்தில் அணைத்தண்ணீர்...நிரம்பிய நீர், சுவரைத்தாண்டி அருவியாக கொட்டும் நீரின் சத்தம்...கவலைகளை மறந்து சிரித்த கணங்கள்  அவை!

 

அணையின் தடுப்பை  மீறிப்பாயும் கட்டுக்கடங்காத நீரின் அழுத்தம் நம்மை அழுத்த, குதூகலத்துடன் கத்திக்கொண்டே, பிடிப்புக்காக  நீருக்குள்ளேயே  படிக்கட்டுகளை தேடிப் பிடித்துக்கொண்டு நின்றபோது....மனதின் எல்லா கசடுகளும், கவலைகளும், எதிர்கால குழப்பங்களும் காணாமலேபோனது!
அணையிலிருந்து நீர் தளும்பி வழியும் சுவரில் தலையை குப்புற வைத்து, தண்ணீர் நம் தலைவழியே கடந்து செல்லும்போது உண்டாகும் ஒலியில் மூச்சு முட்டிப்போனோம்.

தளும்பி வழியும் தண்ணீரை, எங்கள் மேலேயே அங்கியை போல் வழிய விட்டுக்கொண்டோம்.  சூரியன் மறையும் வரை அலுக்காமல் அங்கேயே ஆட்டம்.... செல்ஃபிகள்... ஃபோட்டோக்கள்...பப்புவுக்கு இனிய அனுபவம்.ஆரம்பத்தில் பயந்தாலும், பின்னர் தண்ணீரைவிட்டு வரவே இல்லை. ஜூரம் வந்து அடுத்தநாள், அத்திரி மலையேற்றம் தடைப்பட்டுவிடுமோ என்ற பயம் எனக்கு.

ஈர உடையுடன், நேராக பாபநாச சுவாமிகள் கோயில். முதன்முறையாக, கோயிலினுள் தமிழப்பாடல்கள் பாடி தீபாராதனை காட்ட, அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தோம். சாயங்காலம் ஆறு மணி பூஜையோ என்னவோ சொன்னார்கள்....ஒருவர் தலைமுதல் தோள்பட்டை வரை ஒரே ருத்ராட்சை மாலையாக போட்டுக்கொண்டு ஒவ்வொரு சன்னதியாக் அமர்ந்து தமிழில் பாடல்கள்(குனித்த புருவமும்?) பாட, தீபாராதனை நடக்கிறது.


 
இருட்டதுவங்க, மீண்டும் விடுதிக்கு பயணம். அங்கே ஒரு நொடியைக் கூட வீணாக்காமல், உடனே தயாராக, அடுத்து சென்றது, காசி விஸ்வநாதர் கோயில். கோபுரம் விண்ணை முட்டி நிற்க, உடனே செல்ஃபிக்கள்... செல்ஃபிக்கள் பின்னர் குருப்பிகளாக....

கோயிலில், பக்திமான்கள் பூஜைக்கு செல்ல, நானும் பப்புவும் சங்கீதத் தூண்களை ஆராயத்துவங்கினோம். எங்கள் ஆர்வத்தால் கவரப்பெற்ற தீபங்கள் விற்பவர், எங்களை விசாரித்தார்.  'இந்த ஊர்க்காரங்களுக்கே தெரியாது இதெல்லாம்' என்று சொன்னப்படி தூண்களிலிருந்து ஸ்வரங்களை வரவழைத்தார். இந்த கோயிலின் முகப்பிலிருக்கும், ஆளுயர சிலைகள் அற்புதம்.

புளியோதரையும், லட்டுவும், அதிரசமும் வாங்கி அங்கேயே குழுவாக அமர்ந்து சிற்றுண்டியை முடித்தோம். வெளியில் வந்து அடுத்தநாள் மலையேற்றத்துக்காக பழங்களை வாங்கினோம். ஒரு மூலையில் மறைந்திருந்த 'லாலா புராதான மிட்டாய்க்கடை'யில் அல்வாவை காக்கைகள் போல பகிர்ந்துண்டு ருசித்தோம்.  அருகிலிருந்த உணவகத்தில் நுழைந்து இட்லியும், பரோட்டாவும், பனங்கல்கண்டு போட்ட‌ மிளகுப்பாலும் அருந்தினோம்.

ஏற்கெனவே, அத்திரிக்கு இரண்டுமுறை சென்று வந்திருந்த ரகுவை இப்போது 'குரு'வாக்கியிருந்தோம். அவரும், குருவாகவே மாறி,  மலையேற வேண்டுமானால் ஆறு மணிக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கட்டளை யிட்டிருந்தார். 'தொல்லை விட்டுச்சுன்னு எங்களை விட்டுட்டு போய்டாதீங்கய்யா...அஞ்சு மணிக்கு எழுந்ததும், மிஸ்ட் கால் கொடுத்து எங்களையும் எழுப்பி விட்டுடுங்க' என்று பொறுப்பளித்துவிட்டு உறங்கினோம்.

கனவிலெல்லாம், தண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது.... மேலே மேலே வந்து அழுத்தியது! முதுகில், தோள்பட்டையிலெல்லாம் படபடவென்றும் தொப் தொப்பென்றும் விழுந்தது.உறக்கத்திலேயே அருவி மாற்றி அருவியாக காடுகளுக்குள் நாங்களும் பயணித்தோம். அணையின் கற்படிக்கட்டுகளில் , நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மூச்சடைத்துப்போய் 'ஹோ' வென கத்திக்கொண்டிருந்தோம். நீரைக் கிழித்து, மாலையாக இருதோள் களிலும் போட்டுக் கொண்டு மலையடிவாரத்தில் நின்றுக் கொண்டிருந்தோம்.

 
 
குறிப்பு: முதல்நாள் குற்றாலம், அடுத்தநாள் முஸ்தபா இல்லத்திருமணம் என்றுதான் திட்டம். பாதிவழியிலேயே,  மலையேறுவதற்கான திடீர் குழு உருவாகி, எங்களையும் இழுத்துப்போட்டுக்கொண்ட‌தில், தனியாக வர இயலவில்லை. தம்பி முஸ்தபா மன்னிக்கவும். ஆனாலும், உங்கள் பெருந்தன்மை ம்ஹூம்!! சான்சே இல்லை! வந்திருந்தால், ப்ளஸ் மக்களையும் சந்தித்திருக்கலாம்.

தங்கள் தம்பிக்கும், அவரது மனைவிக்கும் திருமண வாழ்த்துகள்! அம்பா சமுத்திரத்தின் தேவதையைக் காண இன்னொருமுறை வருகிறோம் :‍)

Saturday, April 06, 2013

ஒரு விளம்பரமும் சில நினைவுகளும்

ஒன்பதாம் வகுப்பில்தான், எங்கள் பள்ளியில் செக்ஷன் பிரித்து மாற்றுவார்கள். இரண்டு செக்சன்களே அப்போது இருந்தது. அப்படி எங்கள் 'ஏ' செக்சனில் வந்து சேர்ந்தாள் ரேணுகா. அவள் நன்றாக படிப்பாள் என்றும் எங்களுக்கெல்லாம் நல்ல போட்டி இருக்கும் என்றும் ஏதோ ஒரு ஆசிரியர் சொல்லியிருந்தார். அதிலும் அவள், இரண்டாவது ரோ‍வில்தான் அமர்ந்தாள்.சரி, இன்னொரு ஞானசௌந்தரி போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, எங்கள் அரட்டை கும்பலோடு அவளும் சேர்ந்து எல்லோரும் நல்ல நண்பர்களாகிவிட்டோம்.

ரேணுகாவின் மீது  வகுப்பிலிருந்த எல்லாருக்கும் லைட்டாக பொறாமை இருந்தது என்று நினைக்கிறேன். அவள் அணிந்திருக்கும் வளையல், தலையில் மாட்டியிருக்கும் விதவிதமான ஹேர்கிளிப்புகள் மற்றும் உடனுக்குடன் ஃபேஷனுக்கு வரும் அத்தனை விதமான மிடிகள்/பாவாடை சட்டை என்று கலர்புல்லாக வருவாள். சுடிதார் அணிய மட்டும் அவளது வீட்டில் தடை. உடைகளைவிட, அவளது வளையல், ஹேர் க்ளிப்புகளே எல்லாரையும் ஈர்த்தன.'எங்கே வாங்கினே' என்ற கேள்விக்கு 'பெரிய‌அக்கா வாங்கி தந்தாங்க' என்றோ 'நடுஅக்கா  கொடுத்தாங்க' என்றோ 'சின்ன அக்கா ஆரணிலேருந்து வாங்கிட்டு வந்தாங்க' என்றோ சொல்லுவாள். காந்திமதி ஒரு பெருமூச்சோடு, 'இருந்தா ரேணுகாவோட‌ அக்காங்க மாதிரி இருக்கணும்' என்பாள்.

கால் பரீட்சை/அரை பரீட்சை லீவு வந்தால் நண்பர்களின் வீடு வீடாக போவது வழக்கமாகியிருந்தது. ஒரு நாள் சபீனா வீடு, ஒரு நாள் எங்கள் வீடு என்று.
அப்படி, ஒரு நாள் ரேணுகா வீட்டுக்கு போனபோது அவளது அப்பா மதிய உணவுக்கு வந்திருந்தார். ரேணுகா, எங்களை சத்தம் போட்டு பேச வேண்டாமென்றும், சத்தமில்லாமல் சிரிக்கவும் கேட்டுக்கொண்டாள். ஒன்றுமில்லாமலே நாங்கள் 'கெக்கே பிக்கே' என்று சிரிப்பதாக அப்போது எல்லாரிடமும் பேர் வாங்கியிருந்தோம். சிரிக்காமலிருப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது, அப்போது. 


அவ்வப்போது, ரேணுகா, அவளது அப்பா ஸ்ட்ரிக்ட் என்று சொல்லியிருக்கிறாள்.  அது தெரிஞ்ச விசயம்தானே என்று நினைத்திருந்தேன். மேலும், எல்லார்  வீட்டிலுமே அந்த ஸ்ட்ரிக்டைதான் அனுபவித்  திருக்கிறோமே!   'இனிமே தெருவிலே விளையாடாதே!', 'நீ கடைக்கு போக வேணாம், தம்பி போகட்டும்', 'மாடிக்கு எதுக்கு அடிக்கடி போறே' என்று எல்லாருமே அனுபவிப்பதுதானே என்று!!  ரேணுகா அப்பாவின், அந்த ஸ்ட்ரிக்டின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது, அவளது பதட்டத்தையும் பயத்தையும் அப்போதுதான் நேரில் கண்டபிறகு. நாங்கள் மாடி அறையில் குசுகுசுவென்று  பேசி சிரித்துக்கொண்டிருந்தோம். ரேணுகாவோ, மாடிக்கும் கீழுக்கும் அலைந்து நாங்கள் பேசுவது கீழே கேட்கிறதா என்று டென்சனிலேயே இருந்தாள். ஒருவழியாக, அவளது அப்பா சென்றவுடன் சகஜமானாள். 'பெண்கள் சத்தமாக பேசுவதோ,சிரிப்பதோ கூடாதாம்,அவருக்கு'.

அதோடு, அவள் சொன்னதுதான் அதிர்ச்சி. அதாவது, பத்தாவதுக்குப் பிறகு அவள் படிப்பது சந்தேகம்தானாம். அவளது அக்காக்கள் எல்லோரும் ஏழாவது அல்லது எட்டாவதுதான் நின்று விடுவார்கள் என்றும், சில வருடங்கள் வீட்டிலிருந்தபின் கல்யாணம் செய்துகொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினாள். அப்புறம், வருடா வருடம் அக்காக்கள் யாரேனும் பிள்ளைபேறுக்காக வீட்டுக்கு வந்து தங்கிச் செல்வார்கள். ரேணுகா அடம்பிடித்து சாப்பிடாமல் எல்லாம் இருந்து  சண்டைபோட்டு ஒன்பதாவது வகுப்புக்கு வந்திருக்கிறாள்.  அதாவது, அவர் சர்வீசிலிருக்கும்போதே எல்லாருக்கும் கல்யாணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்பதுதான் அவர் பாலிசி.இதையெல்லாம் அவள் இவ்வளவுநாட்களாக எங்களிடம் சொன்னதேயில்லை. இதைக்கேட்டதிலிருந்து நாங்கள் ரொம்ப சோகமாகிவிட்டோம்.


 அவரோடு இருக்கும் நண்பர்கள்தான் அவரை கெடுப்பது என்று ரேணுகா அவ்வப்போது பொருமுவாள். 'வேலையிலிருக்கும்போதே கல்யாணம் செய்து கடமையை முடித்தால்தான் நமக்கு கௌரவம்' என்று அவர்கள் அவரிடம் சொல்லுவார்களாம். 'பொண்ணுங்க படிச்சு கையில ஒரு வேலையை வைச்சுக்கணும்' என்று ஆயா என்னை சொல்லி சொல்லி வளர்த்திருந்ததால் 'ஏன் இன்னும் பழங்காலத்து மாதிரி இருக்காங்க' என்று மட்டும் தோன்றியது. ஆனால், ரொம்பவெல்லாம் ஆராயவில்லை, அப்போது.

பத்தாவது முடித்ததும், எப்படியோ ரேணுகா கெஞ்சிக் கூத்தாடி அப்பாவிடம் அனுமதி பெற்று ப்ளஸ் ஒன் சேர்ந்துவிட்டாள்.அதுவே எங்களுக்கு சந்தோஷம் மற்றும் ஆச்சர்யம். ப்ளஸ் டூ முடியும்போதோ, எல்லாருக்கும் எந்த காலேஜில் சேருவோம்? என்ன படிக்கலாம்? என்ற பேச்சுவரும்போது மட்டும் நிச்சயமாக சொல்லிவிடுவாள், 'ஏதோ இது படிக்கிறதே பெரிய விஷயம்!! இதுக்கு மேலல்லாம் வீட்டுல கேக்க முடியாது!" என்று. ரிசல்ட் வந்து எல்லாரும் காலேஜில் செட்டிலானபிறகு, அந்த வருட பூஜா ஹாலிடேஜில் எல்லோரும் சந்தித்தோம். காலேஜ் கதைகளை பேசிப்பேசி, பள்ளிக்கூடம்தான் பெஸ்ட் என்றெல்லாம் பீலா விட்டுக்கொண்டிருந்தோம். ரேணுகாவுக்கு கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தோம். அவள் மகிழ்ச்சியாகவே இருந்தாள். 'இதுதான் லைஃப்' என்று தனது நிலைமையை ஏற்றுக்கொண்டதாகவே பட்டது. மாப்பிள்ளை வீட்டுக்கு அவளது  ஃபோட்டோ போயிருக்கிறதாம்.  விரைவில் அவர்கள் பார்க்க வருவார்களாம். அவளும் மாப்பிள்ளையின் போட்டோவை காட்டினாள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை மலர்ச்சியுடன் அவள் எதிர்கொள்வதாக நினைத்துக்கொண்டேன்.


சில மாதங்களில் ரேணுகாவும் திருமணமாகி வேறு ஊருக்கு போனாள். கல்லூரி விடுமுறைகளில் கல்லூரி நண்பர்கள் ஊர்களுக்குச் செல்வதும், ஊருக்கு வரும் நேரம் ரேணுகா சந்திக்க இயலாமலும் கிட்டதட்ட தொடர்பறுந்த நிலை. வெகுசமீபத்தில், பெரிம்மா கேட்டார், 'ரேணுகா உன்க்கிட்டே பேசுச்சா? ஃபோன் நம்பர் வாங்கிச்சு' என்று! ரேணுகாவின் கணவர் இறந்துவிட்டதாகவும், இரு பையன்களுடன் ஆம்பூருக்கே வந்துவிட்டதாகவும் சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். பெற்றோர்கள் இல்லாத நிலையில், தனியாக இருந்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுவதாக கூறினார். குடும்பத்துக்கான உலைக்காக அவள்தான் ஏதோ வேலைக்கு போவதாகவும், ஆனால் படிப்புக்கே பற்றவில்லையென்றும் சொன்னதை கேட்டபோது எனக்குள் இதயத்தை திருகுவதை போன்ற வலி!!

ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்திருந்தாள் ரேணுகா. ரொம்ப தூரம் அனுப்ப மனமில்லாவிட்டாலும், அரை மணித்தொலைவில் அமைந்திருந்த ஜெயின் கல்லூரிக்காவது அனுப்பியிருக்கலாம்.குறைந்தபட்சம், ஒரு டிகிரி படித்திதிருந்தாலாவது, ஏரியாவொக்கொன்றாக முளைத்திருக்கும் ஏதாவது பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக சேர்ந்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன்.  


ச்சே, நல்லா படிக்கிற பொண்ணை அவங்க அப்பா இப்படி பாழாக்கிட்டாரே என்று கோபமாகவும் வந்தது. இப்படி அவர்கள் பாதுகாத்து பாதுகாத்து என்ன பெரிதாக சாதித்துவிட்டார்கள்? உங்கள் பாதுகாப்பினால் உங்கள் மகளின் வாழ்க்கையை அல்லவா வீணாக்குகிறீர்கள்? இப்பொழுது நிலைமை கொஞ்சமாக மாறியிருக்கலாம், அதாவது பெண்ணை படிக்க வைப்பதற்கு மட்டும். ஆனால், வேலைக்கு போக வேண்டுமென்றோ,அவள் தனது காலில் நிற்க வேண்டுமென்றோ எத்தனை அப்பாக்கள் நினைக்கிறார்கள்? 

கற்பகத்தின் அப்பா, ஊருக்கு போகும்போதும் வரும்போதும் கல்லூரிக்கு வந்து அழைத்துச் செல்வார். அல்லது, துணைக்கு யாரையாவது அனுப்புவார். கணவன் தன்னை வெளிநாட்டில் அடித்து கொடுமைபடுத்துகிறான் எனும்போதுகூட அவளது பயமெல்லாம்,  டிக்கெட் புக் செய்தால் எப்படி தனியாக வருவது, பயமாக இருக்கிறது, கூட யாராவது வந்தால் பரவால்லை' என்பதுதான். 'கூடவே வந்து, கூடவே அழைத்துப் போய், கூடவே இருந்து எல்லாம் செய்து நீங்கள் வாரிக்கொண்டதுதான் என்ன? திருமணத்தை, வேறு ஒரு ஆடவனை நம்பும் நீங்கள் ஏன் உங்கள் பெண்ணை நம்ப மறுக்கிறீர்கள்?'
என்றெல்லாம் அவளது அப்பாவிடம் நறுக்கென்று கேட்க வேண்டும்போல இருந்தது. அவரிருந்தால் கேட்டிருக்கலாம்,ஒருவேளை! இப்பொழுது அவளுக்கு ஆறுதலைத்தவிர வேறு எதுவும் செய்ய இயலாதிருக்கிறது.

சிலநாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் பார்த்தேன். பேஸ்புக்கில் யாரோ பகிர்ந்திருந்தார்கள். ஆகோ ஓகோவென்று எல்லாரும் ஒரே புகழாரம். ஐசிஐசிஐ ப்ரூடென்சியலின் விளம்பரம் அது. உடையாமல் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்ப்பதில் தொடங்கி, தலையை இடித்துக்கொள்ளாமல் தான் கீழே போட்ட துண்டை எடுக்க மனைவை பாதுகாக்கும் கணவன் முதல்,  அப்பாவுக்கு அடுத்து பாதுகாக்க நான் இருக்கிறேன் என்று சொல்வதுவரை!! (இதில், ரொம்ப முரணானது, கீழே போட்ட துண்டை எடுக்கும் காட்சிதான்... அவ்வளவு அக்கறை இருந்தால் துண்டை அதற்குரிய இடத்தில் போட வேண்டியதுதானே! ;‍)) அதை பார்த்ததிலிருந்து இன்னும் உரக்க கத்த வேண்டும் போலிருக்கிறது, 'இப்படி பொத்தி பொத்தி வளர்க்கிறதை எப்பதாண்டா விடப்போறீங்க?'!!
 





இந்த விளம்பரம், மறுபக்கத்தில் எங்களை/பெண்களை கேலி செய்வது போலிருக்கிறது.பாதுகாக்க கூட ஒரு ஆண் இருந்தே ஆக வேண்டும் என்பதுபோல! ஆண் இல்லாமல் உங்களால் இந்த உலகில் தனித்து பாதுகாப்பாக வாழ இயலாது என்ற எண்ணத்தை கட்டமைக்கிறது. ஆண் துணையில்லாமல் குழந்தைகளை வளர்க்கும் பெண்களையும் சேர்த்தே இது தாக்குகிறது.அவர்களது உழைப்பை, தன்னம்பிக்கையை,வெற்றியை கணக்கில்கொள்ளாமல் ஆண் == பாதுகாப்பு என்று எல்லார் மனதிலும் விதைக்கிறது!இந்த விளம்பரத்தை, ரேணுகாவின் சார்பாக‌,கற்பகத்தின் சார்பாக‌, ஆண் துணையில்லாமல் ஆணும் பெண்ணுமாக ஐந்து பிள்ளைகளை படிக்க வைத்த ஆயாவின் சார்பாக கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

Friday, March 27, 2009

250-உம் நன்றிகளும்!!


(pappu : @ nine months old!)

என்னுடைய கடந்த இடுகை 250வது இடுகை. பதிவுகளின் எண்ணிக்கையைக் குறித்து அவ்வளவாக சிலாகித்துக் கொள்வதில்லையென்றாலும் நன்றி சொல்லவதற்காகவேனும் இதைக் பதிவு செய்வது அவசியமாகத் தோன்றுகிறது எனக்கு! நான் ஒன்று பெரிய எழுத்தாளரோ கவிஞரோ இல்லை! ஆனால் பள்ளி/கல்லூரி போட்டிகளுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், நிகழ்வுகளைக் குறித்துக் கொள்வதற்காகவும், சில சமயங்களில் பள்ளிக் கல்லூரித் தோழியருக்கு நெடுங் கடிதங்கள் என்றுதான் எழுதியிருந்திருக்கிறேன்! எதையாவது எழுதுவது என்பது என்னை எனக்கு உணர்த்தியிருக்கிறது..எழுத்து எனக்கு தஞ்சமளித்திருக்கிறது..அடுத்தவரிடம் சொல்ல முடியாதபொழுதுகளில்..அல்லது பிறர்
புரிந்துக்கொள்ள முடியாத பொழுதுகளில்! வாசிப்பு எழுத்தும் என்னை ஓருபோதும் காயப்படுத்தாதவை!

வேலை மாற்றங்கள், திருமணம், குழந்தை என்றிருக்கும்போதுதான் வலைப்பதிவு அறிமுகமானது! பப்பு ஒருவயதை நெருங்குகையில் 28 இடுகைகளைத் தொட்ட என் வலைப்பதிவு, அவளது இரண்டாம் அகவையில் 18 இடுகைகளாக குறைந்து அவள் பள்ளி செல்லவாரம்பித்தபின் 145 ஆக எகிறியிருக்கிறது! இதில் மறைந்திருக்கும் இன்னொரு் பொருள்..பப்புவிற்கும் எனக்கும் இடையேயிருக்கும் பிணைப்புக்கயிறு நாள்பட நெகிழ்ந்து, பப்பு அவளது விளையாட்டுலகத்துடன் நெருக்கமாகியிருக்கிறாள்.. நான் பதிவுகளுடன்!!

வலைப்பதிவுகளின் மூலம் பல நல்ல நண்பர்களை பெற்றிருக்கிறேன்..ஒரு சிலரை நேரில் சந்தித்துமிருக்கிறேன்! இந்தப் பதிவின்மூலம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான்....உங்கள் பின்னூட்டங்கள் ஊக்கமளித்திருக்கின்றன....மேலும் பதிவுகளிட கிரியை செய்திருக்கின்றன....பலசமயங்களில் மறுமொழிக்கு மறுமொழி இடாவிட்டாலும் தொடர்ந்து மறுமொழியிடும் உங்கள் கனிவுக்கும் பெருந்தன்மைக்கும் வந்தனங்கள்!

என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும், பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
வலைப்பதிவுகளுக்கு தளமாக இருக்கும் தமிழ்மணத்திற்கு நன்றி!!

Tuesday, November 25, 2008

Friends 4 லைப்!!

எனக்கு ஒரு தோழி இருந்தாள் கல்லூரியில், ஒரு சில பழக்கவழக்கங்கள் இருவருக்கும் ஒன்றாக! ஜீன்ஸூம், முக்கால் பேண்டும், செமஸ்டருக்கு ஒரு ஹேர்ஸ்டைலும் எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கையின் மேல் தீராக்காதலுடனும்(crazy over life?!)!
பட்டங்கள் பெற்று அவள் மனித வள நிர்வாகத்தின் பக்கமும், நான் கணினி பயன்பாட்டுவியலுமாகப் பாதைகள் பிரிந்தன! நடுவில் ஒருமுறை ஃப்ரெண்ட்ஷிப் டே கெட் டூ கெதரில் சந்தித்தப் பிறகு ஒரு பெரிய இடைவெளி. நீண்ட பிரிவிற்கு சமீபத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறோம் - கிண்டலும், கேலியும்,அவரவர்களின் எடையைப் பற்றியும், குழந்தைகளப் பற்றிய விசாரிப்புகளுமாய்! whoa! ஒன்று மட்டும் மாறவேயில்லை..attitude towards life! அவளும் நானும் அப்படியேதான் இருக்கிறோம்..வாழ்க்கையின் மீதான ரசனைகளில்..சின்னச்சின்ன ஆசைகளில்...பற்பல மாற்றங்களுக்குப்பின்னும்!

ஒருசில விஷயங்கள் மாறுவதில்லை!!