Saturday, April 06, 2013

ஒரு விளம்பரமும் சில நினைவுகளும்

ஒன்பதாம் வகுப்பில்தான், எங்கள் பள்ளியில் செக்ஷன் பிரித்து மாற்றுவார்கள். இரண்டு செக்சன்களே அப்போது இருந்தது. அப்படி எங்கள் 'ஏ' செக்சனில் வந்து சேர்ந்தாள் ரேணுகா. அவள் நன்றாக படிப்பாள் என்றும் எங்களுக்கெல்லாம் நல்ல போட்டி இருக்கும் என்றும் ஏதோ ஒரு ஆசிரியர் சொல்லியிருந்தார். அதிலும் அவள், இரண்டாவது ரோ‍வில்தான் அமர்ந்தாள்.சரி, இன்னொரு ஞானசௌந்தரி போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, எங்கள் அரட்டை கும்பலோடு அவளும் சேர்ந்து எல்லோரும் நல்ல நண்பர்களாகிவிட்டோம்.

ரேணுகாவின் மீது  வகுப்பிலிருந்த எல்லாருக்கும் லைட்டாக பொறாமை இருந்தது என்று நினைக்கிறேன். அவள் அணிந்திருக்கும் வளையல், தலையில் மாட்டியிருக்கும் விதவிதமான ஹேர்கிளிப்புகள் மற்றும் உடனுக்குடன் ஃபேஷனுக்கு வரும் அத்தனை விதமான மிடிகள்/பாவாடை சட்டை என்று கலர்புல்லாக வருவாள். சுடிதார் அணிய மட்டும் அவளது வீட்டில் தடை. உடைகளைவிட, அவளது வளையல், ஹேர் க்ளிப்புகளே எல்லாரையும் ஈர்த்தன.'எங்கே வாங்கினே' என்ற கேள்விக்கு 'பெரிய‌அக்கா வாங்கி தந்தாங்க' என்றோ 'நடுஅக்கா  கொடுத்தாங்க' என்றோ 'சின்ன அக்கா ஆரணிலேருந்து வாங்கிட்டு வந்தாங்க' என்றோ சொல்லுவாள். காந்திமதி ஒரு பெருமூச்சோடு, 'இருந்தா ரேணுகாவோட‌ அக்காங்க மாதிரி இருக்கணும்' என்பாள்.

கால் பரீட்சை/அரை பரீட்சை லீவு வந்தால் நண்பர்களின் வீடு வீடாக போவது வழக்கமாகியிருந்தது. ஒரு நாள் சபீனா வீடு, ஒரு நாள் எங்கள் வீடு என்று.
அப்படி, ஒரு நாள் ரேணுகா வீட்டுக்கு போனபோது அவளது அப்பா மதிய உணவுக்கு வந்திருந்தார். ரேணுகா, எங்களை சத்தம் போட்டு பேச வேண்டாமென்றும், சத்தமில்லாமல் சிரிக்கவும் கேட்டுக்கொண்டாள். ஒன்றுமில்லாமலே நாங்கள் 'கெக்கே பிக்கே' என்று சிரிப்பதாக அப்போது எல்லாரிடமும் பேர் வாங்கியிருந்தோம். சிரிக்காமலிருப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது, அப்போது. 


அவ்வப்போது, ரேணுகா, அவளது அப்பா ஸ்ட்ரிக்ட் என்று சொல்லியிருக்கிறாள்.  அது தெரிஞ்ச விசயம்தானே என்று நினைத்திருந்தேன். மேலும், எல்லார்  வீட்டிலுமே அந்த ஸ்ட்ரிக்டைதான் அனுபவித்  திருக்கிறோமே!   'இனிமே தெருவிலே விளையாடாதே!', 'நீ கடைக்கு போக வேணாம், தம்பி போகட்டும்', 'மாடிக்கு எதுக்கு அடிக்கடி போறே' என்று எல்லாருமே அனுபவிப்பதுதானே என்று!!  ரேணுகா அப்பாவின், அந்த ஸ்ட்ரிக்டின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது, அவளது பதட்டத்தையும் பயத்தையும் அப்போதுதான் நேரில் கண்டபிறகு. நாங்கள் மாடி அறையில் குசுகுசுவென்று  பேசி சிரித்துக்கொண்டிருந்தோம். ரேணுகாவோ, மாடிக்கும் கீழுக்கும் அலைந்து நாங்கள் பேசுவது கீழே கேட்கிறதா என்று டென்சனிலேயே இருந்தாள். ஒருவழியாக, அவளது அப்பா சென்றவுடன் சகஜமானாள். 'பெண்கள் சத்தமாக பேசுவதோ,சிரிப்பதோ கூடாதாம்,அவருக்கு'.

அதோடு, அவள் சொன்னதுதான் அதிர்ச்சி. அதாவது, பத்தாவதுக்குப் பிறகு அவள் படிப்பது சந்தேகம்தானாம். அவளது அக்காக்கள் எல்லோரும் ஏழாவது அல்லது எட்டாவதுதான் நின்று விடுவார்கள் என்றும், சில வருடங்கள் வீட்டிலிருந்தபின் கல்யாணம் செய்துகொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினாள். அப்புறம், வருடா வருடம் அக்காக்கள் யாரேனும் பிள்ளைபேறுக்காக வீட்டுக்கு வந்து தங்கிச் செல்வார்கள். ரேணுகா அடம்பிடித்து சாப்பிடாமல் எல்லாம் இருந்து  சண்டைபோட்டு ஒன்பதாவது வகுப்புக்கு வந்திருக்கிறாள்.  அதாவது, அவர் சர்வீசிலிருக்கும்போதே எல்லாருக்கும் கல்யாணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்பதுதான் அவர் பாலிசி.இதையெல்லாம் அவள் இவ்வளவுநாட்களாக எங்களிடம் சொன்னதேயில்லை. இதைக்கேட்டதிலிருந்து நாங்கள் ரொம்ப சோகமாகிவிட்டோம்.


 அவரோடு இருக்கும் நண்பர்கள்தான் அவரை கெடுப்பது என்று ரேணுகா அவ்வப்போது பொருமுவாள். 'வேலையிலிருக்கும்போதே கல்யாணம் செய்து கடமையை முடித்தால்தான் நமக்கு கௌரவம்' என்று அவர்கள் அவரிடம் சொல்லுவார்களாம். 'பொண்ணுங்க படிச்சு கையில ஒரு வேலையை வைச்சுக்கணும்' என்று ஆயா என்னை சொல்லி சொல்லி வளர்த்திருந்ததால் 'ஏன் இன்னும் பழங்காலத்து மாதிரி இருக்காங்க' என்று மட்டும் தோன்றியது. ஆனால், ரொம்பவெல்லாம் ஆராயவில்லை, அப்போது.

பத்தாவது முடித்ததும், எப்படியோ ரேணுகா கெஞ்சிக் கூத்தாடி அப்பாவிடம் அனுமதி பெற்று ப்ளஸ் ஒன் சேர்ந்துவிட்டாள்.அதுவே எங்களுக்கு சந்தோஷம் மற்றும் ஆச்சர்யம். ப்ளஸ் டூ முடியும்போதோ, எல்லாருக்கும் எந்த காலேஜில் சேருவோம்? என்ன படிக்கலாம்? என்ற பேச்சுவரும்போது மட்டும் நிச்சயமாக சொல்லிவிடுவாள், 'ஏதோ இது படிக்கிறதே பெரிய விஷயம்!! இதுக்கு மேலல்லாம் வீட்டுல கேக்க முடியாது!" என்று. ரிசல்ட் வந்து எல்லாரும் காலேஜில் செட்டிலானபிறகு, அந்த வருட பூஜா ஹாலிடேஜில் எல்லோரும் சந்தித்தோம். காலேஜ் கதைகளை பேசிப்பேசி, பள்ளிக்கூடம்தான் பெஸ்ட் என்றெல்லாம் பீலா விட்டுக்கொண்டிருந்தோம். ரேணுகாவுக்கு கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தோம். அவள் மகிழ்ச்சியாகவே இருந்தாள். 'இதுதான் லைஃப்' என்று தனது நிலைமையை ஏற்றுக்கொண்டதாகவே பட்டது. மாப்பிள்ளை வீட்டுக்கு அவளது  ஃபோட்டோ போயிருக்கிறதாம்.  விரைவில் அவர்கள் பார்க்க வருவார்களாம். அவளும் மாப்பிள்ளையின் போட்டோவை காட்டினாள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை மலர்ச்சியுடன் அவள் எதிர்கொள்வதாக நினைத்துக்கொண்டேன்.


சில மாதங்களில் ரேணுகாவும் திருமணமாகி வேறு ஊருக்கு போனாள். கல்லூரி விடுமுறைகளில் கல்லூரி நண்பர்கள் ஊர்களுக்குச் செல்வதும், ஊருக்கு வரும் நேரம் ரேணுகா சந்திக்க இயலாமலும் கிட்டதட்ட தொடர்பறுந்த நிலை. வெகுசமீபத்தில், பெரிம்மா கேட்டார், 'ரேணுகா உன்க்கிட்டே பேசுச்சா? ஃபோன் நம்பர் வாங்கிச்சு' என்று! ரேணுகாவின் கணவர் இறந்துவிட்டதாகவும், இரு பையன்களுடன் ஆம்பூருக்கே வந்துவிட்டதாகவும் சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். பெற்றோர்கள் இல்லாத நிலையில், தனியாக இருந்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுவதாக கூறினார். குடும்பத்துக்கான உலைக்காக அவள்தான் ஏதோ வேலைக்கு போவதாகவும், ஆனால் படிப்புக்கே பற்றவில்லையென்றும் சொன்னதை கேட்டபோது எனக்குள் இதயத்தை திருகுவதை போன்ற வலி!!

ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்திருந்தாள் ரேணுகா. ரொம்ப தூரம் அனுப்ப மனமில்லாவிட்டாலும், அரை மணித்தொலைவில் அமைந்திருந்த ஜெயின் கல்லூரிக்காவது அனுப்பியிருக்கலாம்.குறைந்தபட்சம், ஒரு டிகிரி படித்திதிருந்தாலாவது, ஏரியாவொக்கொன்றாக முளைத்திருக்கும் ஏதாவது பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக சேர்ந்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன்.  


ச்சே, நல்லா படிக்கிற பொண்ணை அவங்க அப்பா இப்படி பாழாக்கிட்டாரே என்று கோபமாகவும் வந்தது. இப்படி அவர்கள் பாதுகாத்து பாதுகாத்து என்ன பெரிதாக சாதித்துவிட்டார்கள்? உங்கள் பாதுகாப்பினால் உங்கள் மகளின் வாழ்க்கையை அல்லவா வீணாக்குகிறீர்கள்? இப்பொழுது நிலைமை கொஞ்சமாக மாறியிருக்கலாம், அதாவது பெண்ணை படிக்க வைப்பதற்கு மட்டும். ஆனால், வேலைக்கு போக வேண்டுமென்றோ,அவள் தனது காலில் நிற்க வேண்டுமென்றோ எத்தனை அப்பாக்கள் நினைக்கிறார்கள்? 

கற்பகத்தின் அப்பா, ஊருக்கு போகும்போதும் வரும்போதும் கல்லூரிக்கு வந்து அழைத்துச் செல்வார். அல்லது, துணைக்கு யாரையாவது அனுப்புவார். கணவன் தன்னை வெளிநாட்டில் அடித்து கொடுமைபடுத்துகிறான் எனும்போதுகூட அவளது பயமெல்லாம்,  டிக்கெட் புக் செய்தால் எப்படி தனியாக வருவது, பயமாக இருக்கிறது, கூட யாராவது வந்தால் பரவால்லை' என்பதுதான். 'கூடவே வந்து, கூடவே அழைத்துப் போய், கூடவே இருந்து எல்லாம் செய்து நீங்கள் வாரிக்கொண்டதுதான் என்ன? திருமணத்தை, வேறு ஒரு ஆடவனை நம்பும் நீங்கள் ஏன் உங்கள் பெண்ணை நம்ப மறுக்கிறீர்கள்?'
என்றெல்லாம் அவளது அப்பாவிடம் நறுக்கென்று கேட்க வேண்டும்போல இருந்தது. அவரிருந்தால் கேட்டிருக்கலாம்,ஒருவேளை! இப்பொழுது அவளுக்கு ஆறுதலைத்தவிர வேறு எதுவும் செய்ய இயலாதிருக்கிறது.

சிலநாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் பார்த்தேன். பேஸ்புக்கில் யாரோ பகிர்ந்திருந்தார்கள். ஆகோ ஓகோவென்று எல்லாரும் ஒரே புகழாரம். ஐசிஐசிஐ ப்ரூடென்சியலின் விளம்பரம் அது. உடையாமல் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்ப்பதில் தொடங்கி, தலையை இடித்துக்கொள்ளாமல் தான் கீழே போட்ட துண்டை எடுக்க மனைவை பாதுகாக்கும் கணவன் முதல்,  அப்பாவுக்கு அடுத்து பாதுகாக்க நான் இருக்கிறேன் என்று சொல்வதுவரை!! (இதில், ரொம்ப முரணானது, கீழே போட்ட துண்டை எடுக்கும் காட்சிதான்... அவ்வளவு அக்கறை இருந்தால் துண்டை அதற்குரிய இடத்தில் போட வேண்டியதுதானே! ;‍)) அதை பார்த்ததிலிருந்து இன்னும் உரக்க கத்த வேண்டும் போலிருக்கிறது, 'இப்படி பொத்தி பொத்தி வளர்க்கிறதை எப்பதாண்டா விடப்போறீங்க?'!!
 

இந்த விளம்பரம், மறுபக்கத்தில் எங்களை/பெண்களை கேலி செய்வது போலிருக்கிறது.பாதுகாக்க கூட ஒரு ஆண் இருந்தே ஆக வேண்டும் என்பதுபோல! ஆண் இல்லாமல் உங்களால் இந்த உலகில் தனித்து பாதுகாப்பாக வாழ இயலாது என்ற எண்ணத்தை கட்டமைக்கிறது. ஆண் துணையில்லாமல் குழந்தைகளை வளர்க்கும் பெண்களையும் சேர்த்தே இது தாக்குகிறது.அவர்களது உழைப்பை, தன்னம்பிக்கையை,வெற்றியை கணக்கில்கொள்ளாமல் ஆண் == பாதுகாப்பு என்று எல்லார் மனதிலும் விதைக்கிறது!இந்த விளம்பரத்தை, ரேணுகாவின் சார்பாக‌,கற்பகத்தின் சார்பாக‌, ஆண் துணையில்லாமல் ஆணும் பெண்ணுமாக ஐந்து பிள்ளைகளை படிக்க வைத்த ஆயாவின் சார்பாக கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

5 comments:

தியானா said...

இந்த விளம்பரத்தை இப்பத்தான் பார்க்கிறேன் முல்லை..நல்லா எழுதியிருக்கிறீங்கப்பா..

காரிகன் said...

முதல் முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். உங்கள் வார்த்தைகளில் இருக்கும் கோபம் பாராட்டுக்குரியது. இன்னும் கொஞ்சம் காட்டமாகவே கூட நீங்கள் நம் நாட்டில் நிலவும் ஆண் திமிரை சாடி இருக்கலாம். எனக்கு அந்த விளம்பரம் பிடித்திருந்தது.ஆனால் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது நீங்கள் சொல்வது சரிதான் என்று படுகிறது.

Anonymous said...

I accept your views on women's freedom and important of education. May be if the parents are educated then they know it. At least you should be for this generation parents.
I dont see anything negative in the ICICI commercial. Being an independent woman is good but at the same time she should have someone who really cares. The commercial brings that feeling, thats it.

The Analyst said...

கன காலம் ஆயிற்று இந்தப்பக்கம் வந்து.

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். இந்தமாதிரியான செய்திகள் பெண்களை வலுவற்றவர்களாகவும் எப்போதும் பாதுகாக்க வேண்டியவர்களாகவுமே காட்டுகிறதென ஏன் பல சமயம் பெண்களுக்குக் கூட விளங்குவதில்லை.பெண்கள் ஆண்களுக்குக் கீழானவர்கள் என்பதையே இம்மாதிரியான 'நன்றாகக் கவனித்தல்' மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. So frustrating.இந்த benevolent sexism தால் மறைமுகமாகப் பெண்கள் கீழ்மையே படுத்தபடுகிறார்கள்.

ஒரு ஆய்வில் கூட எவ்வாறு இப்படியான பட்டும் படாமலுமான, நல்ல செய்கைகளாகச் சித்தரிக்கப்படும் sexism பல நாடுகளில் ஆண் பெண் சமத்துவமின்மைக்கும் பாரம்பரியமாகக் கட்டிக் காத்துவரும் ஆண், பெண் stereotypes ஜ வலியுறுத்துவனவாகவும் உள்ளன எனக் காட்டியுள்ளனர்.


வேறொரு interesting read: The Problem When Sexism Just Sounds So Darn Friendly…

Agila said...

எனக்கு அப்படி தோணலைங்க.. இந்த விளம்பரத்தில் ஆண்கள் இல்லாம பொண்ணுங்க பாதுகாப்பில்லாம இருக்க மாதிரி காட்டலையே..
அவங்க செய்ற செயல் கூட அனிச்சை செயல் மாதிரி காட்டியிருக்காங்களே தவிர. இங்க பாரு, நீ பொண்ணு உன்னை நான் காப்பாத்துறேன் பாருன்னு சொல்லற மாதிரியில்லையே...நீங்க சொல்லலாம் இந்த மறைமுக வலியுறுத்தல் தான் ஆபத்தானதுன்னு. ஆனா எனக்கு அப்படி தோணலை..

உங்க ஆயா நீங்க போறப்போ பார்த்துட்டே இருப்பாங்க ஜன்னல் வழியான்னு எழுதியிருந்தீங்களே , அது எதுக்கு ??அது மாதிரி ஒரு அன்பும் அக்கறையுமா நீங்க ஏன் எடுத்துக்க கூடாது?

இப்போ என்னோட பெற்றோர் எங்க போனாலும் அவங்க திரும்பி வீடு வந்து சேர்றவரை எனக்கு ஒரு பதட்டம் இருந்து கிட்டே இருக்கும். அத்தனை தடவை போன் பண்ணுவேன்.நான் இல்லாம அவங்களால இருக்க முடியாதா என்ன.. அனாலும் ..
I really believe Life is made up of small things.
I know you may differ this but this is how I feel.