Tuesday, April 09, 2013

இது ரெத்த பூமி ‍ - மூன்று முறை கட்டப்பட்ட கோட்டையின் கதை


காலைச்சூரியன் மிகவும் சுறுசுறுப்பாக தன் வேலையைத் தொடங்கியிருந்தது.சென்ற இரண்டு நாட்கள்போலில்லாமல் பளிச்சென்று இருந்தது வானம்.  நாங்களும் எங்கள் பயணத்தை  ஆரம்பித்தோம். மனம் ஒருவித மரியாதை/பயபக்தி/பெருமிதம் என்று கலவையான உணர்ச்சிப்பெருக்கால் நிரம்பியிருந்தது.செல்லுமிடம் அப்படியானது.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முதன்மையானதும் முக்கியமானதும், வீரத்துக்கு அடையாளமாகவும் விளங்கும் இடம்,அது.  இந்தியாவின் வரைபடத்திலிருந்தே அகற்றிவிட வேண்டுமென்று ஆங்கிலேயர்கள்  துடித்த இடம். இன்று கால ஓட்டத்தால்  ஒதுக்கப்பட்டு, ஓரமாக மௌனசாட்சியாக இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி. வீர பாண்டிய கட்டபொம்மனின் கோட்டை. 'வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி,வட்டி' என்று அந்த வீரமகனின்   குரல் கிண்ணென்று முழங்கிய கோட்டை.

தூத்துக்குடிக்கு அருகில் எங்கு செல்லலாம் என்று பார்த்தபோது, பாஞ்சாலங்குறிச்சியும்,ஒட்டபிடாரமும் செல்ல வேண்டிய பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தன. ஒன்று, ஏகாதிபத்தியத்தைப் பற்றியும் , காலனியாக்கத்தைப் பற்றியும் ஏன் எந்த தத்துவங்களையும் பற்றி அறியாமல், ஒரு வீரன், அந்நியரை எதிர்த்து நின்ற வீரமண். இன்னொன்று, சுதந்திரம் நம் பிறப்புரிமை என்ற முழங்கிய கப்பலோட்டிய தமிழன் பிறந்த ஊர்.

பப்புவுக்கு 'ஜான்சிராணி' வரலாறு தெரியும். ஜான்சிராணியைப் பார்த்து சிலநாட்கள் கத்தியை வைத்துக்கொண்டு திரிந்தாள். அவ்வப்போது, அவள் தன்னையே ஜான்சிராணியாக பாவித்துக்கொண்டு காற்றில் கத்திச்சண்டை போடுவாள். அவளது மாமாவிடமிருந்து பெற்ற ஜான்சிராணி புத்தகத்தை பொன்போல வைத்துக்கொள்வாள். அட்டையில் இருப்பது,ஜான்சிராணியின் படமல்லவா! வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அந்த அளவுக்கு தெரியாது.  ஆனால், ஜான்சிராணிக்கு எடுத்துக்காட்டாக/முன்னோடியாக‌ இருந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று  இந்த பயணத்தில் தெரிந்துக்கொண்டாள்.  இதற்கு முன்பும் பல கோட்டைகளுக்கு அவள் சென்றிருக்கிறாளென்றாலும், ஆங்கிலேயரை எதிர்த்த தன்மானமிக்க மன்னனின்(பாளையக்காரர்) கோட்டைக்கு வருவது இதுவே முதன்முறை. இதுவே எங்கள் மனதில், ஒரு மரியாதையை/பயபக்தியை தோற்றுவித்திருந்தது.

புழுதி படிந்த மண் சாலைகளில், ஏழு வளைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நம்மை வரவேற்கின்றன. ஒவ்வொரு வளைவும், கட்டபொம்மனின் அரசில் முக்கியமான பதவி வகித்தவர்களின் பெயர் தாங்கியிருக்கிறது. கூட‌, கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கம்மாவின் பெயரிலும் ஒரு வளைவு. இந்த வளைவுகளின் வழியே சென்றால் சாலை நம்மை நேராக கோட்டை வாசலில் கொண்டு போய் சேர்க்கிறது.
காலத்தை வென்ற கோட்டை

செம்மண் வண்ணத்தில் கோட்டைச்சுவர்.  இப்போது இருப்பது, மூன்றாவது முறையாக கட்டப்பட்ட கோட்டை. நுழைவுக்கட்டணம் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். ஒரு மரத்தின் கீழே பிள்ளையார், இன்னும் சில சிற்பங்கள்.பார்க்க சற்றுப் பழமையானதாக இருக்கிறது.

பாதைக்கு இருபுறமும் மரங்களும், செடிகளுமாக சிறு தோட்டம். அதன் வழியே சென்றால், கோட்டையின் மரக்கதவுகள். கட்டபொம்மனின் குதிரை,யானை மற்றும் காலாட் படையைக் குறிக்கும் விதமாக கோட்டையின் ஒவ்வொரு பக்கத்தில் வரிசையாக உருவங்கள் வரையப் பட்டிருக்கின்றன.தோட்டத்தின் மரத்திலிருந்து கரைகிறது ஒரு காகத்தின் குரல்.அன்றைக்கு அநேகமாக நாங்கள்தான் முதல் விருந்தினர். 'இந்த பக்கம் வாங்க' என்று வலப்புறம் வரச் சொல்கிறார் ஒருவர். சுற்றும் முற்றும் பார்க்கிறோம். கோட்டைச் சுவரின் முழுமையைக் காண முடிகிறது. செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைகிறோம். ஒன்றும் பேசத்தோன்றவில்லை. அவரவர் எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறோம்.


'இந்தக்கோட்டையிலா கட்டபொம்மன் வாழ்ந்தார் 'என்ற எண்ணம்  தோன்றுவதற்குள், கைகளில் ஒரு சுட்டுக்கோலை கொண்டு பேச ஆரம்பிக்கிறார், அவர். உட்சுவர் முழுக்க  கட்டபொம்மனின் வரலாறு, படங்களாக வரையப்பட்டிருக்கிறது.தெள்ளத் தெளிவான தடங்களில்லாத தமிழில், 46 தலைமுறைகளுக்கு முந்தைய வரலாறு ஆரம்பிக்கிறது.
முதலாம் கெட்டிபொம்மு ராஜாவான வரலாற்றைத தொடர்ந்து, பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு நீள்கிறது. சாலிக்குளத்தில்,முயல் ஒன்று வேட்டைநாயை துரத்துவது குடகின் கதையை நமக்கு நினைவுபடுத்துகிறது. வேட்டைநாயை முயல் துரத்திய குறிப்பிட்ட இடத்தில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்பி, கிபி 1101 ஆம் ஆண்டு அவ்விடத்தில் கோட்டை கட்டி சிம்மாசனம் ஏறுகிறார் பொம்மு.


வரலாற்றின் சில பக்கங்கள்

கிபி 17 ஆம் நூற்றாண்டில், பாளையக்காரர்களாக தன்னாட்சி பெற்றாலும், 72 பாளையங்களை உள்ளடக்கிய பாஞ்சாலங்குறிச்சியே சிறந்து விளங்குகிறது. 47ஆவது தலைமுறையாக, தனது 30ஆவது வயதில் அரியணை ஏறுகிறார், வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது தம்பிகள், ஊமைத்துரை என்ற தளவாய் குமாரசாமி மற்றும் துரைசிங்கம். வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி  ஜக்கம்மாள்.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி உள்நுழைகிறது. அளவுக்கதிகமாக கடன் வாங்கிய நவாபுகள் நேரிடையாக வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு வழங்குகின்றனர். இதில் மற்ற பாளையக்காரர்கள் சரணாகதி ஆகிவிட, வரிதர மறுத்து எதிர்ப்பவர் கட்டபொம்மனும் பூலித்தேவரும்தான். பாஞ்சாலங் குறிச்சியைத் தேடி, மன்னனை சந்திக்க‌ நெல்லையிலிருந்து வருகிறார், ஆலன். ஆலனை எதிர்த்து தன்மானத்துடன் முழங்குகிறார், வீரபாண்டிய கட்டபொம்மன்.  பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைச்சுவர்களில் இன்னமும் எதிரொலிக்கிறது,அந்தக்குரல்!

சாமாதான பேச்சுவார்த்தைக்காக, ஆங்கிலேயர்கள் அழைக்க, ராமநாதபுரம், சேதுபதி அரண்மனையில்  ஜாக்சனை காணச் செல்கிறார், கட்டபொம்மன். அங்கும் வரி,வட்டியைப் பற்றிய பேச்சுவர ஜாக்சனை எதிர்க்கிறார் கட்டபொம்மன்.மன்னரை சிறைபிடிக்க உத்தரவிடுகிறான் ஜாக்சன்.

வீரபாண்டிய கட்டபொம்மன், வாளால் பகைவரை வீழ்த்தி பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். வந்தபின்னரே, தானாபதியை காணாமல் திகைக்கிறார், மன்னர். தானாபதி, சேதுபதி அரண்மனையிலே ஆங்கிலேயர்களிடம் மாட்டிக்கொண்டுவிடுகிறார். சிலநாட்களில், தானாபதி விடுதலை செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். ஆங்கிலேயர்கள், வரியாக சேர்த்து வைத்திருந்த நெல்களஞ்சியத்தைக் கொள்ளையிடுகிறார். இது, ஆங்கிலேயர்களை இன்னமும் கோபமூட்டியது. ஆங்கிலேயரை பழி வாங்க தானாபதி வகுத்த இந்த வஞ்சகம், கட்டபொம்மனை தலைகுனிய வைத்தது.பானர்மேன் தலைமையில், பீரங்கிப்படையுடன் ஆங்கிலேயரின் ஐவகைப்படைகள் பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி வளைக்கின்றன. இது எதிர்பாராத போர் என்றாலும், பாஞ்சாலங்குறிச்சியின் வீரர்கள், எதிரிகளின் பலத்தைக் கண்டும் அஞ்சாமல் கோட்டையின் மீது நின்று போர் புரிகின்றனர். கவண்கற்களாலும்,வேல்களாலும் போரில் வெற்றிபெறுகின்றனர். இந்தகோட்டையை, தகர்ப்பது பற்றிய பானர்மேனின் ப்ளூபிரிண்ட் இன்றும் லண்டன் ஆவண காப்பகத்தில் இருப்பதாக கூறினார்,அவர்.

வீரன் வெள்ளையத்தேவன், இந்த போரில்தான் இறந்துபோகின்றான். ஆங்கிலேயர் பக்கத்திலும்  நாசமே விளைகிறது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் பாதிப்படைகிறது. போரில் இறந்த வெள்ளைத்தளபதிகளுக்கு, ஒட்டப்பிடாரத்தில் கல்லறையும், நினைவுச்சின்னமும்  எழுப்பியுள்ளனர்.எதிரிகளுக்கு நினைவுச்சின்னம் எழுப்பிய  கட்டபொம்மனின் பண்பு! இதன்பிறகே, கட்டபொம்மனின் தலைக்கு விலை வைக்கப்படுகிறது.

கோட்டையிலிருந்து தப்பித்து விஜயரகுநாத தொண்டைமானின் அரண்மனையை அடைகிறார், கட்டபொம்மன். கோட்டையை கைப்பற்றுகின்றனர், ஆங்கிலேயர்கள். கோட்டையில் நாட்டப்பட்ட ஆங்கிலேயரின் கொடியை உடைத்து வீரச்சாவடைகிறார், சுந்தரலிங்கம் என்ற வீரர். தொண்டைமானின் அரண்மனையிலோ, கட்டபொம்மன் எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கப்படுகிறார். ஒப்புக்கு ஒரு விசாரணை வைத்து,   கயத்தாறில் நெடுஞ்சாலை பகுதியின் புளியமரத்தின் தூக்குக்கயிறை சுருக்கி, வாழ்வை முடித்துக்கொண்டார். மற்ற பாளையக்காரர்கள் எல்லாரும் வெறுமே பார்த்திருக்க, வணங்காமுடியாக உயிர்துறந்தார் கட்டபொம்மன். 

ஊமைத்துரை சூளுரைத்து இரண்டாம் முறையாக கோட்டையை கட்டுகிறார். இதைப்பற்றி, வரலாற்றில் படித்திருப்போம். முட்டையையும், வெல்லத்தையும், சுண்ணாம்பையும் கொண்டு ஆறே நாட்களில் ஏழாயிரம் எழுப்பிய கோட்டையென்று! மெக்காலே போர் தொடுத்து, கட்டபொம்மனின் சகோதர்களை,ஏராளமான பாஞ்சாலங்குறிச்சி வீரர்களையும் அழித்தொழிக்கின்றர். ஊமைத்துரை, மருது சகோதர்களுடன் சேர்ந்து விடுகின்றார்.


கயத்தாறில், கட்டபொம்மன் உயிர்நீத்த இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது. அவரை, தூக்கு மாட்டிய புளியமரம் பட்டுபோயிற்று என்று முடிக்கிறார், பராமரிப்பாளர்.கதைசொல்லியைப்போலவும், அதே சமயம் வரலாற்று நிகழ்வுகளையும் ஒருசேர சுவாரசியமாக‌, படங்களை காட்டி விவரிக்கிறார், பராமரிப்பாளர். மற்றபடங்களில், வீரதீரமாக தெரியும் கட்டபொம்மன், இறுதிகட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனாக உருமாற்றம் அடைந்து இருக்கிறார். தூக்கிலிடும்போது கூட சிவாஜியாகவே இருக்கிறார்.உட்புறச்சுவரின் படங்கள் ஒரு சுற்று முடிந்ததும் இரண்டாம் சுற்று ஆரம்பிக்கிறது. நாமும் கோட்டையை உள்ளுக்குள்ளாகவே ஒரு முறை சுற்றியிருக்கிறோம். மனம் வேறு எதைப்பற்றியும் எண்ணாமல், கட்டபொம்மனையும்,போரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறது.

இரண்டாம் முறையும், கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர் வன்மத்துடன் கோட்டையை உருத்தெரியாமல் அழிக்கின்றனர். கோட்டை இருந்த இடம் முழுவதும் ஆமணக்கையும், முட்செடிகளையும் விதைக்கின்றனர். பார்க்கும் நமக்கு நெஞ்சமே எரிகின்றது. இப்போது இருக்கும் கோட்டை, ஒரிஜினல் கோட்டையின் மாதிரி மட்டுமே. அதில், ஒரு சிறு பங்குதான் இது என்று கூறி இரண்டாம் சுற்றுக்குப் பிறகு உள்ளே நுழைகிறார்.

பின் தொடரும் நம்மை, எதிர்கொள்வது, வீரபாண்டிய கட்டபொம்மன். கோட்டையின் மையப்பகுதியில், வாளோடு மிடுக்காக வீற்றிருக்கிறார். ஊமைத்துரை,தானாபதி,சுந்தரலிங்கம் சகிதம் அவ்விடம் ஒரு சிறு அரசவையாக காட்சியளிக்கிறது. நாம் விரும்பினால், அரசரோடு சேர்த்து நம்மை புகைப்படமெடுத்துத் தருவதாக பராமரிப்பாளரே முன்வருகிறார்.

எஞ்சியிருக்கும்  சில ஞாபகங்கள்

இன்று நாம் பார்க்கும் கோட்டை, 1974ஆம் ஆண்டில் நமது அரசால், கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக எழுந்து நிற்கிறது.
 நமது வரலாற்று ஆர்வத்தை பார்த்த பராமரிப்பாளர், கோட்டைக்குள் அகழ்வாய்வில் கிடைத்த கவண்கற்களையும், பீரங்கிகுண்டுகளையும் காட்டுகிறார்.  விம்மி நெகிழ்ந்த மனத்துடன், வெளியே வந்தால் எதிரில் ஜக்கம்மாவின் கோவில். இதுவும் புதிதாக கட்டியதுதான்.

 அதை அடுத்து, தொல்லியல் துறையின் தகவல் பலகை நம்மை வரவேற்கிறது. உள்ளே செல்ல இயலாதபடி வலைபோடப்பட்டிருக்கிறது. உள்ளே, கோட்டையின் அஸ்திவாரத்தை நன்கு காணமுடியும். அரசவையும், அந்தப்புரமும், மணமண்டபமும் நமது பார்வைக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இதன் அருகில்தான், ரகசிய பாதைகள் இருக்கின்றன.இன்று அவை தூர்ந்துபோய்  இருக்கின்றன‌.பார்த்து முடிக்கும்போது, இன்னும் ஒன்றிரண்டு விருந்தினர்கள் கோட்டை வாயிலில் நுழைகின்றனர். ஒருகாலத்தில் பரபரப்பாகவும், வேல் ஈட்டிகளின் சப்தங்களாலும் நிறைந்த கோட்டை,இன்று, எப்போதாவது கேட்கும் பறவையின் குரலைத் தவிர, கோட்டை மிகுந்த அமைதி கொண்டிருக்கிறது. 


வரலாற்று பாடபுத்தகங்களைத் தவிர, பொதுவாக‌ மறக்கப்பட்ட இடமாக காட்சியளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் மறைக்கப்பட்ட புதையல்கள். நமது பிள்ளைகளை தவறாமல் அழைத்துச் சென்று காட்டப்பட‌ வேண்டிய இடங்கள். இப்படி எண்ணியபடி,கோட்டையின் கிரில்கதவுகளை திறந்துகொண்டு வெளியே வருகிறோம். கட்டபொம்மனின் கடைசி வாரிசு என்று அறிமுகத்துடன் ஒருவரை மரத்தடியில் கண்டோம்.


இன்று

கட்டபொம்மனின் உறவினர்கள் ஒரு 200 பேர் இப்பகுதியில் வசிக்கின்றனர். பெரும்பாலும், அன்றாடக்கூலிகளாக வாழ்க்கை நடத்துகின்றனர். அதில் ஒருவர்  பீமராவ் கட்டபொம்மு. கட்டபொம்முவின் கடைசி வாரிசு. தலையில் ஒரு தலைப்பாகைபோல கட்டிக்கொண்டிருந்தார்.  எங்களைக் கண்டதும், கையில் இருந்த பையைத் திறந்தார். போட்டோக்களையும், அச்சடிக்கப்பட்ட காகிதங்களையும் தந்துவிட்டு. "இதுல டேரக்ட்ன்னு போட்டிருக்கு" என்றார்.  அவர்தான் நேரடி வாரிசு என்பதற்கன அத்தாட்சிகளாம், அந்த அரசாணைகள்.  கலெக்டரிடமிருந்தும், சில அதிகாரிகளிடமிருந்தும் கையெழுத்துடனான அரசாணைகள்.ஊமைத்துரையின் மனைவி கர்ப்பிணியாக இருந்ததால் அவரை ஆங்கிலேயப்படை விட்டுவிட்டது. அதில் கடைசி வாரிசு.  'நீங்க எதுவும் படிக்கலையா?" என்றதற்கு, "வாய்ப்பு இல்லையில்ல" என்றார். கிட்டதட்ட 70 ஆண்டுகள் இவர்கள் புதுக்கோட்டைக்கு வரக்கூடாது என்று ஆணையிருந்ததாம். அதானால், நிலையில்லாத வாழ்க்கையை  வாழ்ந்தார்களாம். இப்போது, ஊரில் எந்த விழாவாக இருந்தாலும், இவருக்குத்தான் முதல்மரியாதை. அதில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை காட்டினார்.
நாங்கள், இவரிடம் பேசுவதைக் கண்டதும் எங்கிருந்தோ வந்தார் இன்னொருவர். பார்க்க ஏதோ பூசாரி போலவே இருந்தார். கூப்பிட்டு, தன்னை போட்டோ எடுக்கச் சொன்னார். எடுத்ததும், தன்னை அறிமுகப் படுத்திகொண்டார். மெய்காப்பாளர் சுந்தரலிங்கத்தின் கடைசி வாரிசாம் இவர். கோட்டையின் மீதிருந்து உயிர் துறந்த வீரன் சுந்தரலிங்கம்.

ஆனாலும், எங்கள் கவனம் கட்டபொம்மனின் கடைசி வாரிசின் மீதிருந்ததை கண்டதும், பப்புவை அழைத்தார். பப்பு சற்று அருகில் சென்றதும், பெயர் மற்றும் விபரங்களைக் கேட்டார். இதன் நடுவில் கட்டபொம்முவின் வாரிசு தொடர்ந்து,விடாமல் தன்னைப் பற்றிய விபரங்களை கூறியபடியிருந்தார். நான் பப்பு இருந்த இடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். பப்புவின் பெயரைச் சொல்லி, கோயில் இருந்த திசை நோக்கி ஒரு பாடலைப் பாடினார். தெலுங்கா தமிழா என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது, அது. பின்னர், 'நீ கண்டிப்பா டாக்டர்தான் ஆகப்போறே' என்றார் பப்புவிடம்.

கட்டபொம்முவின் வாரிசு ,இங்கு, விடாமல் பேசிக்கொண்டிருந்தார். அரசாங்கத்திடமிருந்து, மாதந்தோரும் ரூ 1000 மட்டுமே கிடைப்பதாக கூறி விட்டு, முத்தாய்ப்பாக‌ 'எங்கே, கையை காட்டுங்க' என்றார். 'அதிலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையில்லை' என்று மறுத்தோம். இதற்குள், டாக்சி டிரைவர், 'வாங்க வாங்க' என்று சைகை செய்தார். ஏறும்சமயம், சுந்தரலிங்கத்தின் வாரிசு, என் வயதையும் பெயரையும் கேட்டார். சொன்னதும், இதற்குப்பின் என்ன படிக்கப்போகிறேனென்று நினைத்தாரோ என்னவோ, கோயிலை நோக்கி பாடலைப்பாடி '35வயதில் சட்டசபைக்கு செல்வாய்' என்று  ஆசீர்வதித்தார்.

திரும்பவும் ஒவ்வொரு வாயிலாக கடந்து வந்தோம். கரிசல் பூமியிலிருந்து வீசியது காற்றின் வெம்மை. உள்ளே ஒரு மகத்தான வரலாற்றை கேட்டு வந்தால், யதார்த்தம் வெளியில் முகத்தில் அறைகிறது. 2000 பொன்கள், 100/150 கோட்டை நெல் என்று தனது ஆட்சியாளர்களுக்கு வாரி வழங்கிய கட்டபொம்மன், 'எடைக்கு எடை தங்கம் அளிக்கிறேன், நம்பி வந்தவர்களை காட்டிகொடுத்து பழக்கமில்லை' என்ற கட்டபொம்மனையும், வருபவர்களிடம் எதிர்பார்க்கும் அவனது  வாரிசு! அரசாங்கத்தின் சிக்கனத்தை, எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை.

இதற்கு நடுவில்,பப்பு வேறு அவள் பங்குக்கு!
'ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்' ஆக வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்த பப்பு, அவர் சொன்ன 'நீ டாக்டரா ஆயிடுவே' என்ற தீர்க்கதரிசனத்தைக் கேட்டு கலவரமடைந்திருந்தாள். 'அதெல்லாம் பொய்ப்பா, உனக்கே தெரியும் இல்ல, நீ என்ன ஆகணுமோ அதை நீதான் டிசைட் பண்ணனும்,அவருக்கு ஸ்பேஸ்ன்னா என்னன்னே தெரியாது, ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்ன்னு ஒன்னை கேள்வியேபட்டிருக்க மாட்டாரு,அதான்' என்று அவளுக்கு தெளிய வைக்க வேண்டியிருந்தது. அவளை திசைதிருப்ப, நுழைவாயிலில் வாங்கிய கட்டபொம்மனைப் பற்றி புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தோம்.


இடம்:

தூத்துக்குடியிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி 18 கிமீ
ஒட்டப்பிடாரம் அங்கிருந்து 2/3 கிமீ

நுழைவுக்கட்டணம் : ஒருவருக்கு 2 ரூ

புத்தகம்:

வீரம் விளைந்த மண்ணில் வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆசிரியர்: மு. முருகையா
விலை : ரூ 30

5 comments:

தியானா said...

வாவ்.. அருமையான பயணக் கட்டுரை.. கோட்டை மாதிரி மட்டும் என்பது வருத்தமளிக்கிறது முல்லை..

Bruno said...

He is a very good palmist

I know him well because he was my patient

ராமலக்ஷ்மி said...

இந்தக் கோட்டைக்கு பத்து வயதில் சென்றிருக்கிறேன். அப்போது இந்தத் தோற்றத்தில் இருந்ததா என நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. மீண்டும் சென்று பார்க்கும் எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது உங்கள் எழுத்து.

கயத்தாறில் இருக்கும் நினைவுச்சின்ன சிலையும் நடிகர் சிவாஜியின் சாயலிலே செய்யப்பட்டிருக்கும்.

நீங்க சட்டசபைக்குப் போனால் பப்பு டாக்டருக்குதான் படிப்பாள்:)! இரண்டுமே மக்களுக்கு சேவை செய்யும் துறைதான், பாருங்கள்.

Agila said...

//ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்' ஆக வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்த பப்பு, அவர் சொன்ன 'நீ டாக்டரா ஆயிடுவே' என்ற தீர்க்கதரிசனத்தைக் கேட்டு கலவரமடைந்திருந்தாள்.
//

:))))))))))

கோமதி அரசு said...

நான்காம் வகுப்பு படித்த போது பார்த்தேன் பள்ளியில் அழைத்து சென்றார்கள். தூத்துக்குடியில் இருக்கும் போது.
இரண்டு வருடங்களுக்கு முன் புதுபித்த கோட்டையைப் பார்த்தேன்.நாங்கள் போனபோது இந்த வாரிசுகளை பார்க்கவில்லை.

பப்பு ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்'ஆகட்டும் அவள் எண்ணம் போல். அந்த துறையில் டாகடர் பட்டம் வாங்குவாளாய் இருக்கும்.

முல்லை, நீங்கள் சட்டசபைக்கு செல்வீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி.