Thursday, April 04, 2013

ஆதிச்சநல்லூரில் தாழிகளைத் தேடி ஒரு பயணம்


இந்த வருட புத்தக கண்காட்சியில் ஒரு புத்தகம் வாங்கினோம். என்பிடியின் 'எலும்பு கல்லான கதை'. 

"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்தான் இது;" 

"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்பின் எலும்புதான் இது;"

 "ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்பின் எலும்பின் மீது மூடிய மண்தான் இது; "

என்று எலும்பின் மீது மூடிய மண், மண் மீது படிந்த ஆற்று மணல், மணலின் மீது ஓடும் ஆறு , அந்த ஆற்றின் நீரில் விளையாடும் சிறுமி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அடுக்கடுக்காக ,புதைந்து போன  டிரைசெரடாப்பின் படிமத்தை கண்டுபிடிப்பதாக அந்த கதை செல்லும். 

பப்புவுக்கும் அது போல தானும் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசை. அதோடு, சில அருங்காட்சியங்களில் கண்ட  தங்க,வெள்ளி நாணயங்கள், அரிக்க மேடு மணிகள்/நாணயங்கள், சாலர் ஜங்கின் விதவிதமான வாட்கள் என்று எல்லாமும் சேர்ந்து  பண்டைய காலத்தின் மீது ஒருவித ஈர்ப்பை உண்டாக்கியிருந்தன.

கடந்த வாரம் தூத்துக்குடி செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஆதிச்சநல்லூர்,சமீபத்தில் ஹெரிடேஜ் சைட்டாக அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. நிச்சயம் அங்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டோம். 

தூத்துக்குடியிலிருந்து திருவைகுண்டம் சென்றோம். அங்கிருந்து ஆதிச்ச நல்லூர் ஐந்து கி மீ தூரம்.  அந்த வழி முழுவதும் ஒரே  திருத்தலங்கள். நவதிருப்பதியாம். அங்கிருந்து ஆதிச்சநல்லூர் வந்தடைந்தோம்.  பாளையங்கோட்டை செல்லும் வழியில் ஒரு இடத்தில் இடதுபுறம் சாலை திரும்பியது. அந்த வழியில் பயணித்தால், ஒரே  தெரு.  இருபுறமும் வீடுகள். அதோடு சாலை முடிவுற்றது. இதற்குபின் எங்கு செல்வது, அல்லது அந்த அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்ட இடம் எங்கு இருக்கிறது என்ற எந்த விபரங்கும் தெரியவில்லை. ஊரிலோ ஈ காக்கை கிடையாது. 

வழியில் தென்பட்ட ஒருவர் ஓட்டுநருக்கு  வழி சொன்னார்.
நாங்கள் வந்த வழியிலேயே திரும்பி, இன்னும் சற்று முன்னால் போனால், வலது புறம் கோயில் வரும். அதற்கு எதிரில் திரும்பினால் ரயில்வே டிராக் வரும். அதுதான் இடம்.   கோயிலை பார்த்துவிட்டோம். அதற்கு எதிரில் இருந்த சாலையில் சென்றோம்.  வலதுபுறம் ஒரே மண்மேடு - முட்செடிகள். இடதுபுறம் ஏதோ பயிரிட்டிருந்தார்கள்.அருகில் ரயில்வே டிராக். ரயில்வே டிராக் தாண்டி இருபுறம் புளிய மரங்கள். 

இதற்கு மேல் எங்கு செல்வது என்று தெரியவில்லை. தாழிகள் இல்லாவிட்டாலும் ஹெரிடேஜ் சைட் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் ஒரு சிறு அறை/தகவல் பலகையையாவது எதிர்பார்த்திருந்தோம். எதுவுமில்லாமல், எந்த பக்கம் செல்வது என்றும் புரியாமல் அந்த மண்மேட்டில் நடக்கத் துவங்கினோம்.  மண்மேடு பரந்துவிரிந்தது. ஆங்காங்கே சிறு சிறு செடிகள். தொலைதூரத்தில் ஆடுகள் கூட்டமாக மேய்ந்துக் கொண்டிருந்தன. அருகில் மேய்ப்பர் முக்காடிட்டு நின்றுக்கொண்டிருந்தார்.  வெயில் ஏறிக்கொண்டிருந்தது. கண்கள் ஏதேனும் ஏ எஸ் ஐ போர்ட் தென்படுகிறதா என்று தேடின. சற்று தூரம் நடந்தோம். ஒரு சில இடங்கள் பாறைகள் புதைந்திருந்தன. தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதையும் நாங்கள் காணவில்லை. ஆதிச்சநல்லூர் கிட்டதட்ட  கி மு பத்தாயிரத்துக்கும் முன்பாக காலகட்டத்தை சொல்கிறார்கள். கற்காலத்துக்கும் நியோலித்திக் காலகட்டத்துக்கும் இடைபட்டது. தாமிரபரணியின் ஆற்றங்கரையில் வளர்ந்த நாகரீகம். 

இத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இடத்தில் மக்கள் என்ன செய்திருப்பார்கள், எப்படி  வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணியபோது  அந்த எளிமையான   மண்மேடு வெறுமையாகக் காட்சியளிக்கவில்லை.  மனித குலத்தின் வரலாறாகவே தோன்றியது.இது இறந்தவர்களை புதைக்கும் இடம் எனில், அவர்கள் எங்கு வாழ்ந்திருப்பார்கள், அவர்கள் வீடு எப்படி இருந்திருக்கும் என்று அந்த கரடு முரடான நிலத்தில் யோசித்தபடி நடந்தோம். 

அங்கு கண்டெடுக்கப்பட்ட தாழிகளில், மனித எலும்புகளும், சமையல் பாத்திரங்களும்,  உலோகங்களும் இருந்ததாக சொல்கிறார்கள். தாழிகள் இரண்டு அடுக்குகளாக , ஒன்றை மூடி வைக்க இன்னொரு தாழியாக இருந்திருக்கிறது. அந்த தாழிகளின் மீது பல டிசைன்கள் வரையப்பட்டிருப்பதாக தொல்லியல் துறையின் தளத்தில் பார்த்திருந்தேன்.  இருந்தாலும், இவற்றுள்,  கூர்மையான சிறு சிறு ஆயுதங்கள்தான் ஹைலைட். அவை மிசோலித்திக் காலத்தை சேர்ந்தவை. சென்னைக்கருகில் இருக்கும் குடியம் குகைகள் நியோலித்திக் காலத்தை சேர்ந்தவை. இவை அதற்கும் முன்பாக, எனும்போது காலத்தை தாண்டிச் செல்லும் உணர்வு ஏற்பட்டது.

எதிர்பார்த்து வந்ததை, பப்புவுக்கு  காண்பிக்க முடியவில்லை . ஏமாற்றத்துடன்  கார் நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கு வந்தோம்.  எதிரில் இருந்த வயலில் ஒரு பைப்பிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடித்தது. அருகில் இருந்த இளைஞனிடம், விசாரித்தார் ஓட்டுநர். அதற்குள், எங்கிருந்தோ ஒருவர் வந்து சேர்ந்தார்.  தாழிகளை  தான் காட்டுவதாக அழைத்துச் சென்றார். நாங்கள் நடந்த இடத்துக்கு சற்று தொலைவிலேதான்.கீழே பார்த்தால், புதையுண்ட தாழிகள். அவற்றுக்கு அருகிலேயே இன்னும் சில. அவற்றை தொல்லியல் துறையினர் இன்னும் தோண்டவில்லையாம். ஆடுகள் மேய்ந்துக்கொண்டிருந்த பகுதியில்தான் அகழ்வாராய்ச்சி நடைபெற்றதாகவும் அனைத்தையும் சென்னைக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறினார். எங்களைப்போல் தேடி வருபவர்களுக்கு இந்த தாழிகளையும் தான் காட்டுவதாகவும் கூறினார். 


"அந்த காலத்தில் இறந்து போக மாட்டாங்கல்ல, குறுகிதான் போய்டுவாங்க, அவங்களை உள்ளே வைச்சு அவங்களுக்கு புடிச்சதை வைச்சு மூடிடுவாங்க"

அதற்குள் மேலும் சிலர் வந்து  விட்டனர். இவ்வளவு நேரம் எங்கிருந்தார்களோ தெரியவில்லை.

 
இந்த படங்களில் ஒரு கோடு போல புதையுண்ட பானைகளின் விளிம்பைக் காணலாம். உள்ளே எந்த பாட்டி அல்லது தாத்தா உறங்கிக்கொண்டிருக்கிறாரோ, தெரியவில்லை."இங்கனதான் போர்டு வைச்சிருந்தாங்க, மழையில விழுந்துடுச்சு" என்றார். அவர் காட்டிய இடத்தில் மற்றுமொரு தாழியின் உடைந்த பாகம் வெளித்தெரிந்தது. கம்பி மட்டும் கீழே கிடந்தது. 

 அதே மழைதான், இந்த தாழிகளையும் வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும், ரோம் மக்களோடு வாணிபம் செய்த அரிக்கமேட்டின்  மணிகளைm மண்ணிலிருந்து வெளியே கொண்டு வருவதுபோல! மழைதான் புதைந்துபோனவற்றை எப்படி மீட்டுக் கொண்டுவருகிறது, மண்ணிலிப்பவற்றையும் , மனதிலிருப்பவற்றையும்!!  

""உள்ளேருந்து நெறைய எடுத்தாங்க. நகையெல்லாம் இருந்துச்சு. தங்கக்காசு கூட இருந்துச்சு. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க" என்றார். (மிசோலித்திக்கில் நாணங்கள் இருந்தனவா அல்லது அவை பிற்காலகட்டத்தில் சேர்ந்தவையா?)

"இங்கதான் ஒரு வாட்ச்மேன் இருப்பார். இப்ப எங்கியோ போயிருப்பார் போலுக்கு,கவர்மென்டுலேருந்து ஆள் போட்டிருக்காங்க" என்றார், மேலும். 


நாங்கள், சற்று நேரம் அங்குமிங்கும் நடந்தோம். சில பாறைக் கற்களுக்கிடையில் உடைந்த பானைத்துண்டுகள் கிடந்தன. பப்புவுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும். உடைந்த பானைத்துண்டை நெடுநேரம் கையில் வைத்துக்கொண்டிருந்தாள். வந்தவர்கள் வந்ததுபோலவே, சட்டென்று வயல்களுக்குள் மறைந்து போனார்கள். மனித வரலாற்றின் கரையிலிருந்து, பிரமிப்பு அகலாமல் திரும்பினோம்.


1 comment:

தியானா said...

பதிவ வாசிக்க வாசிக்க ஆச்சரியமா இருக்கு முல்லை...இந்த மாதிரி இடங்களுக்கு போக எனக்கு மிகவும் இஷ்டம். நல்ல பதிவு முல்லை..