Tuesday, March 24, 2015

H...A...M...P...I - வரலாற்றின் வீதிகளில் ஒரு பயணம்


'போய் இறங்கினவுடனே முதல்நாளில் அங்கே போகணும், இதை பார்க்கணும்' என்ற திட்டத்தோடுதான் போய் இறங்கினோம். ஆனால், அங்கே சென்றதும்  எங்கள் திட்டமெல்லாம் போன இடம்  தெரியவில்லை...எங்கு நோக்கினும் திரள் திரளாக குவித்து வைத்ததுபோன்ற‌ கற்பாறைகளையும், அந்த ஆற்றையும் பார்த்து பிரமித்து போனதில், முதல்நாள் திட்டமெல்லாம் காற்றில் பறந்தே போனது.


நினைவு சின்னங்களை பார்க்கவேண்டியதை விட, பார்த்து பார்த்து பருக வேண்டியது ஹம்பியின் நிலக்காட்சி என்று புரிய, ஹம்பிக்கு எங்களை ஒப்புக்கொடுத்தோம். ஹம்பியும், எங்களை தத்தெடுத்துக் கொண்டது.

திருவிழாவில் தொலைந்தவர்கள் போல முதல்நாள் முழுவதும் விருபாஷா கோவிலையும் ஆற்றையும், சூழ்ந்திருந்த மலைப்பாறைகளையும்  பார்த்து பார்த்து பிரமித்துபோனோம். 'இந்த பூமியில் என்ன நடந்திருந்தால், இந்த கற்பாறைகள் இப்படி ஆகியிருக்கும், எந்த விதியின் கீழ் இந்த பாறைகள் இப்படி ஒன்றன்மீது ஒன்று அமர்ந்திருக்கின்றன' என்று கிறுகிறுத்துபோனோம்.


தலைக்கு பத்து ரூபாய் கொடுத்து  படகில் ஆற்றைக்  கடந்து மறுபக்கம் போனோம். விருபாபூர் கட்டே (தீவு) வீதிகளில் அலைந்து திரிந்து  தெருவோர கடைகளை வேடிக்கை பார்த்தோம். இளநீர் குடித்தோம். பாறை உருண்டைகளும், ஆறும், காற்றும் பழகிய பின் மெல்ல எங்கள் இயல்புக்கு வந்தோம். அடுத்த ஆறு நாட்களும் ஏதோ ஒரு புராதன காலத்து ஊரில் அறுநூறு ஆண்டுகள் வசித்தது போல்தான் இருந்தது.

பொடிநடையாய் நடந்து மலைகளையும், கல்மண்டபங்களையும், பழங்கால சந்தைகள் நடந்த பஜார்களையும் கடந்தோம்.  ஆட்டோக்களையும், கைடுகளையும் கவனமாக தவிர்த்தோம்.

கைகளில் இருந்தவை, லாங்க்ஹர்ஸ்ட்டின் புத்தகம் ஒன்றும், நூனிஸின் 'விஜயநகரப் பேரரசு' மற்றும் தொல்லியல் துறையின் ஹம்பி கையேடு.  கேமிரா, புத்தகங்களை முதுகில் சுமந்துக்கொண்டு நாடோடிக் கூட்டத்தில் நாங்களும் சிறு புள்ளிகளானோம்.      

நதிக்கரை வழியாக நடந்தே விட்டலா கோவிலை அடைந்தோம். 'பழங்காலத்தில் குதிரைகள் வழியாக  மக்கள் இந்த வழியை கடந்திருப்பார்கள்' என்று கற்பனை செய்தபடி  பாறைகள், இடிபாடுகள் வழியாக இரண்டு கிமீ நடந்து தீர்த்தோம். 

விட்டலா கோவில், மண்டப தூண்களின் குதிரை மீதமர்ந்திருந்த வீரர்களின் முகங்களிலெல்லாம்  கிருஷ்ணதேவராயரை தேடினோம். தலையில் பெரும் கொண்டையிட்டு , கைகூப்பி நின்ற சிலைகளையெல்லாம் கிருஷ்ணதேவராக எண்ணி பூரித்தாள், பப்பு அவள் பங்குக்கு.  தெனாலிராமனை தேடியலைந்தவளுக்கு இதுதான் இலுப்பைப்பூ.

விட்டலா கோவிலின், கல்தேரின் சக்கரங்களின் அச்சை பிடித்து தேரை நகர்த்திவிட‌ கடும்முயற்சி(!) செய்தோம். இறுதியில், சுழற்றுவது போல் புகைப்படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு சக்கரத்தை விட்டுவிட்டோம். தார்வாடிலிருந்தும், பெல்லாரியிலிருந்தும், கிராமப்புற கர்நாடகப் பகுதியிலிருந்தும் வந்திருந்த மாணவர்களின் ஆசைக்கிணங்க போட்டோக்கள் எடுத்துத்தந்தோம். கொண்டு வந்திருந்த ஆரஞ்சு பழங்களை தீர்த்துவிட்டு, திரும்ப நடையை கட்டினோம்.

ஆற்றைக்கடந்து, உணவகங்களை தேடிச்சென்றோம். கவுதமி உணவகத்தில், பீட்சாவும், சிக்கன் லாஃபாவும் உண்டோம். திரும்பவும் படகு சவாரி.  கோவில் யானை லஷ்மி தண்ணீர் குடிக்க வந்திருந்தது. தண்ணீர் குடிப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு அதன்பின்னாலேயே சென்றோம்.

ஹேமகுட்டா மலைப்பகுதியின் உச்சிக்கு ஏறி, சூரியன் ஒரு சிவப்புக்கோளமாக மறைவதைக் கண்டோம். தெரியாதவர்கள்,  தெரிந்தவர்கள் என்று யாருமில்லை. ஒரு சிறு புன்னகை மட்டுமே போதுமாக இருக்கிறது. கும்பலாக அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்துவிட்டு அவரவர் வழி நடந்தோம்.

மிகவும் பிரசித்தி பெற்ற 'மேங்கோ ட்ரீ' உணவகத்தில் ஆலிவ் பீட்சாவும், கோபி மஞ்சூரியனும், சப்பாத்திக் கறியும் உண்டோம்.  தெருவோர லம்பாடிகளிடம் பேரம் பேசி கைக்கு சோழி மாலை, ஒற்றைக்காலுக்கு கொலுசு, கழுத்தணிகள் வாங்கி அணிந்துக்கொண்டோம். வீட்டுக்கு திரும்பும் வரை கழற்றாமல்,  பப்புவும் நானும்  ஒரு மினி லம்பாடி குடும்பமாகவே மாறிப்போனோம்.


காலையில் எழுந்து, சூரிய உதயத்தை பார்த்து, நேராக ஆற்றுக்கு சென்று  ஏதாவதொரு படியில் அமர்ந்துக் கொள்வோம்.  கொஞ்சம் கொஞ்சமாக ஆறு உயிர் பெறுவதை காண்பதுதான் எவ்வளவு சுவாரசியமான காட்சி!  ஹம்பி பேருந்து நிலையத்தில் இறங்கும்  பயணியின் கால்கள் எப்படித்தான் ஆற்றுக்குச் செல்லும் வழியை தாமாக அறிந்துக்கொள்கின்றனவோ! வரிசையாக வரிசையாக மாணவர்களும், சுற்றுலா பயணிகளும்  ஆற்றை நோக்கி ஒவ்வொரு நாளும் வந்தபடி இருக்கின்றனர்.

"எரடு ப்ளேட் குண்ட்பங்கலா கொட்ரீ" "எரடு பூரி,  சாய் பேக்கு" "மிர்ச்சி எரடு கொட்ரீ" என்று ஏதோ கன்னடாவையே கரைத்துகுடித்தமாதிரி தெருவோரக்கடைகளில் சுடச்சுட குழிப்பணியாரமும், டீயும், பச்சைமிளகாய் பஜ்ஜியும் வாங்கி காலை உணவை சாப்பிட்டோம். காசு கொடுக்க எத்தனிக்கும்போது, அவர்களும் கன்னடத்திலேயே விலையை சொன்னபோது திருதிருவென்று விழித்து 'இங்கிலீஷ் மே போலியே' என்று அசடு வழிந்தோம்.


ஹேமகுட்டா மலைமீதுள்ள கோவில்களில் ஏறி இறங்கி, எங்கிருந்து பார்த்தாலும், முழு ஹம்பியும் தெரிவதை பார்த்து, ஆளுக்கொரு கேமிராவில் எல்லா கோணங்களிலும் புகைப்படங்களாக எடுத்து தள்ளினோம். கோயில் கோபுரம், அன்று எங்களிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டதை அந்த விருபாஷரே அறிவார்.

மலையின் மறுபக்கத்துக்கு இறங்கி, கடுகு கணேசாவை தரிசித்து சாலைக்கு வந்தோம். காணாததை கண்டது போல, தர்பூசணி பத்தைகளை வாங்கி தெரு வோரத்திலேயே  தின்று மலைப்பயணத்தின் தாகம் தணித்தோம். அடுத்து, கிருஷ்ணா கோவிலை அடைந்து தூண்களை ஆராய்ந்தோம்.

'இது கிருஷ்ண தேவராயா கட்டினது, இங்கேதான் அவர் நடந்து வந்திருப்பாரு' என்றும் 'இது ஒரிசா வார்லே ஜெயிச்சதுக்காக கட்டினது, இதுலே இருந்த கிருஷ்ணா ஒரிசாலேருந்து கொண்டு வந்து வைச்சது' என்றும் 'அந்த பால‌கிருஷ்ணர் சிலை இப்போ  சென்னை மியூசியத்திலே இருக்கு' என்றும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்து வாசித்ததை பரிமாறிக்கொண்டோம்.

கிருஷ்ணா கோவிலிருந்து வெளியேறினோம். செடியோடிருந்த பச்சை கொண்டை கடலைகளை   வாங்கிக்கொண்டு, உரித்து சாப்பிட்டபடி லஷ்மி நரசிம்மரைக் காண கரும்புவயல் வழியே நடந்தோம். எங்கள் கால்களுக்கு  அந்தப்பக்கம், பழங்காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் துங்கபத்திராவின் கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது.


அச்சுதராயர் கோவில்,நெடிய  சூலே பஜார் மண்டபத்தில் தங்கமும், வைரமும் விற்பதாக கற்பனை செய்துக் கொண்டோம்.  ராணிகளும், இளவரசிகளும்  நகைகள் வாங்குவது போல,  ஏதோ நாங்களே வைரமும், வைடூரியமும் வாங்க வந்திருப்பதாக கருதிக்கொண்டோம்.  


அரண்மனை பகுதிகளை ஏதோ வரலாற்று ஆய்வாளர்களைப் போலவே அலசி ஆராய்ந்தோம்.  'இதோ ஆயிரங்கால் மண்டபம் இருந்த இடம்' '"அஷ்டதிக்கனா" க்களின் இடம்' 'இங்கதான் நவராத்திரி' 'வெளி நாட்டுக்காரர்கள் ராஜாவை சந்திச்ச‌து'  ' டைனிங் ஹால் இங்கே இருக்கு'  'அது சங்கமா டைனஸ்டி அரண்மனை'  என்று  நூனிஸும், பயஸும்,  நிக்கோலா காண்டியும் லாங்ஹர்ஸ்ட்டும் தடி எடுத்துக்கொண்டு ஓடிவரும் அளவுக்கு தேடித் தேடி ஆராய்ச்சி செய்தோம். இறுதியில், களைத்துப் போய், பிரமிடு போல இருந்த இடத்தில்  ராஜாக்கள் போல அமர்ந்து பாவனை செய்தோம். 


கொஞ்சம் இளைப்பாறியதும், ஒரு அஸ்திவாரத்தருகே ஓடிப்போய், 'இங்கதான் தெனாலிராமன் தொங்குனாரு' என்றாள் பப்பு. 'தொங்குனாரா' என்று நாங்கள் அதிர்ந்ததும், 'இல்லேல்ல..தூங்கனாருன்னு சொல்ல வந்தேன். அப்படியே, தங்குனாருன்னு வந்துச்சு..அதான் சேர்த்து சொல்லிட்டேன்' என்று சமாளித்தாள்.

ரகசிய அறையில் இறங்கி, இருட்டுக்குள் தட்டுத்தடவி நடந்து, படிகளை கண்டதும்'ஹப்பாடா' என்று ஓடிவந்து மேலேறினோம். 'வைரங்களும், விலைமதிப்பற்ற கற்களும் பதித்த நாற்காலி அங்கேதான் வைக்கப்பட்டிருந்தது' என்று  செட்டார் எழுதிய புத்தகத்தில் வாசித்ததை நினைவு கூர்ந்தோம். ராணிக்களின் அரண்மனைகளிலும், லோட்டஸ் மஹாலிலும் நிஜ ராணிகளைப்போலவே இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு நடைப்போட்டோம். ஹசாரே ராமா கோவிலில் ராமாயணத்தை கார்ட்டூன் போல பார்த்து கதை சொல்லிக்கொண்டோம்.

கோவிலுக்கு எதிரில் இருந்த பான் சுபாரி பஜாரில் வெற்றிலை கிடைக்குமா என்று தேடிச் செல்ல ஒரு தம்பதியினர் சண்டையிட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு  ஓசையில்லாமல் நழுவினோம். குதிரைகளும், யானைகளும் சென்று வந்த ராஜபாதையில், ஆட்டோவுக்கு காத்திருந்தோம். காத்திருந்த நேரத்தில் லெமன்  கோலிசோடா அருந்தினோம்.


மிஞ்சிய நேரங்களில், சைக்கிள் எடுத்து  ஹம்பி பஜாரை சுற்றினோம்.பப்புவுக்கு சைக்கிள் கற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்லி அவளை திகிலடைய வைத்தேன். 'சைக்கிள் சைக்கிள் எனக்கு கியர் சைக்கிள்' என்று குதித்துக்கொண்டிருந்தவளை சைக்கிள் எடுக்கலாமா என்றாலே அவள் ஓடிப்போகும் அளவுக்கு  செய்ததுதான் என் சாதனை.  

மூன்று நாட்கள் ஹம்பி, ஒருநாள் பாதாமி, பட்டடக்கல், முடிந்தால் கோவா என்று மங்கலான திட்டம் வைத்திருந்தோம். ஆனால், ஹம்பி எங்களை முற்றும் முழுதுமாக ஆக்கிரமித்துக்கொண்டது. மூன்று நாட்கள், இரண்டு நாட்கள் என்று திட்டமிட்டு பார்க்க முடியாத இடங்களில் ஹம்பியும் ஒன்று. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...ஹம்பியை அடைந்தால் போதும். பயணிக்க வேண்டிய பாதைகளை ஹம்பி பார்த்து கொள்ளும்.  ஒவ்வொருநாளும் வாசித்து வாசித்து, வாசித்த‌ இடங்களை நேரில் கண்டு உணர்ந்தது சுவையான அனுபவம்.

துங்கபத்திரா முழுவீச்சோடு  நடைபோடுவதையும், இன்னும் அதிகமாக ஹம்பியை அறிந்துக்கொள்ளவும் மீண்டுமொருமுறை, மழைக்காலத்தில் வர வேண்டுமென்று மனதை திடப்படுத்திக்கொண்டுதான் வேண்டியிருந்தது.

2 comments:

பழனி. கந்தசாமி said...

ரசித்தேன்.

skamaraj said...

முல்லை,.....படிக்க படிக்க ஹம்பிக்கு கிளம்பியே தீரணும் என்கிறவேட்கை எகிறுகிறது. படித்து முடித்ததும் எல்லாவற்றையும் பார்த்துவிட்ட திருப்தியும் வந்துவிடுகிறது.