Tuesday, February 22, 2011

சின்ன சின்ன ஆசை...

பப்புவுக்கு சமீப காலமாக ஆச்சர்யமூட்டும் விஷயங்கள், வயிறு, இதயம்,மரணம் மற்றும் சாமி.வயிற்றில் ஒரு மிக்ஸி இருப்பதாகவும் அது இடையறாது அரைப்பதாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறாள். யோகா செய்யும்போது தலைகீழாக நின்றால், மிக்ஸி இதயத்தின் அருகில் வந்து முட்டிவிட்டால் செத்துவிடுவோமே என்றெல்லாம் சந்தேகப்படுகிறாள். ஓரளவுக்குப் புரிய வைத்தப்பிறகும், வயிற்றில் இருக்கும் மிக்ஸி இன்னும் ஓடுவதை நிறுத்தவில்லை.

சில நாட்களுக்கு முன்பு, பப்புவுக்கு வந்த கனவில், வானம் கீழே, தரைக்கு வந்திருக்கிறது.வான‌ம் த‌ரைக்கு வ‌ந்த‌தும், மேக‌ங்க‌ளும் கீழே வ‌ந்துவிட்ட‌ன. மேகத்திலிருந்து சாமியும் இறங்கி த‌ரைக்கு வந்திருக்கிறார். ப‌ள்ளியில் ப்ரேய‌ர் முடிந்த‌தும் கைக‌ளைக் கூப்பி சாமி கும்பிடச் சொல்வார்கள் போல. அ‌திலிருந்து இந்த‌ க‌னவு ஆர‌ம்பித்திருக்க‌லாம்...

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மரண ஊர்வலத்தை தெருவில் பார்த்திருக்கிறாள். அதிலிருந்து பலவிதக் கேள்விகளும், குழப்பங்களும் அவளை வாட்டி எடுக்கின்றன. இதயம் துடிக்காவிட்டால், மூச்சு விடாவிட்டால் மரணம் என்பது முன்பே தெரியும் என்றாலும் எந்த வயதில், எப்படி, ஏன் என்று பல கேள்விகள்,கவலைகள். அதில் ஒன்று, அவளுக்கு முன்பே நான் செத்துவிடுவேனா என்பது... அவளை விட்டுவிட்டு நான் இறக்க மாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறேன். வயதானால்தான் இறந்துவிடுவார்கள் என்றும் சொன்னேன். ஆயா இறந்துவிடுவார்களா என்று உடனே அடுத்த கவலை வந்துவிட்டது, அவளுக்கு. (வருமுன் காப்போம்ன்றதே என்கிட்டே கிடையாது, எப்போதான் கத்துக்கப்போறேனோ!!) இல்லை, நூறு வயது வரைக்கும் இருப்பார்கள் என்றாலும் ஆயா ஒன் ஹண்ரட் அன்ட் ஒன்..... தாண்டி இருக்க வேண்டும் என்றாள். ஆயாவும் சரியென்று சொல்லியிருக்கிறார்கள்.

அன்றிரவு, இரவு ஆயா மருந்துண்ணும் வேளையில், அருகில் வந்து நின்றுக்கொண்டு 'ஆயா, நீங்க செக்க மாட்டீங்க, நான் சாமிக்கிட்டே வேண்டிக்கிட்டேன்' என்று சொல்லியிருக்கிறாள்.

இப்படியாக, சாமி பப்புவை சுற்றிவர ஆரம்பித்திருக்கிறது!

12 comments:

பா.ராஜாராம் said...

:-))

மதுரை சரவணன் said...

சில கேள்விகளுக்கு குழந்தைகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடிவதில்லை. காந்தி சொல்வதைப்போல குழந்தைகளை அதன் போக்கில் விட்டுப்பாருங்கள் நாம் அதனிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வோம்.உண்மை.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

பப்பு வளர்கிறாளே முல்லை..

Deepa said...

கண் கலங்கிவிட்டது. Pappu, you are amazing da!

நிலவு said...

ம‌ரணத்தை துரத்துகிறது குழந்தை. எனக்கும் அந்த வயதில் மட்டுமா இப்போது ஏழு கழுத வயது ஆகியும் இப்படித்தான் தோன்றுகிறது. நான் பாக்காத எங்க பாட்டிய நான் பாக்கணும் போல இருக்கு

Gold said...

Romba inteliigent girl.The way she introduces new concepts into life is amazing. Five-year-olds are creative and enthusiastic problem solvers. They offer progressively more imaginative ideas for how to do a task, make something or solve longer-term or more abstract challenges. As they participate in a variety of new experiences, five-year-olds ask more analytical questions and weigh their choices. She is doing fantastic Kudos to mom for being so patient in explaining things to her.

சி.கருணாகரசு said...

மழலையின் கேள்விகள் சிலிர்க்க வைக்கிறது....
அவர்களுக்கு பதிலளிப்பதில்தான் உள்ளது பெற்றோரின் சாமாத்தியம்.

VELU.G said...

பப்பு நம்பிக்கை ஜெயிக்கட்டும்

விஜய்கோபால்சாமி said...

இத்தனை கேள்விகளை யோசிக்கிற குழந்தை நிச்சயம் மிகச் சிறந்த ஆளுமையாகப் பரிணமிப்பாள். வாழ்த்துக்கள் பப்பு.

Sriakila said...

குழந்தையின் உண்மையான அன்புக்கு முன்னால் அத்தனையும் தூசுதான். பப்புவின் பிரார்த்தனைகள் நிறைவேற நாமும் வேண்டிக்கொள்வோம்.

FOOD said...

சிந்தனையோட்டம் சூபர்

ponraj said...

good girl