Tuesday, February 15, 2011

"க‌ம்யூனிச‌மும் குடும்ப‌மும்"

பேஸ்புக்கில், எனது சீனியரின் சுவரில் எழுதப்பட்டிருந்தது ஒரு வாசகம்...
"ஒரு பெண்ணிடம் எதைக்கொடுக்கிறீர்களோ அதையே இருமடங்காக பெறுவீர்கள்" என்பது போல.அதாவது, '‌ஒரு பெண்ணிடம் வீட்டைக் கொடுத்தால் அதை இனிய இல்லமாக்கித் தருவாள், மளிகைச்சாமான்களைக் கொடுத்தால் உணவாக்கித் தருவாள், குப்பைக்கூளத்தைக் கொடுத்தால் அதையும் இருமடங்காக உங்களுக்கே தருவாள்' என்பதாக.

"பெண் என்ப‌வ‌ள்" என்று ஆர‌ம்பிக்கும் எந்த‌ விள‌க்க‌ங்க‌ளிலும் என‌க்குப் பெரிதாக் ஆர்வ‌ம் இல்லாவிட்டாலும், இதில் ஒரு விஷ‌ய‌ம் பெரிம்மாவை,அம்மாவை, ஆயாவை, அத்தைகளை அவ‌ர்க‌ள‌து வாழ்க்கைமுறையை நினைவூட்டிய‌து. ஆயா ஒரு நிமிட‌ம் கூட‌ சும்மா இருந்து பார்த்த‌தில்லை. அவ‌ர‌து கைக‌ளிலிருந்து யாருக்காவது ஏதாவ‌தொன்று பிற‌ந்துக்கொண்டே இருக்கும், எம்ப்ராய்ட‌ரி போட்ட‌ கைக்குட்டைக‌ள், ஹெம்மிங் செய்ய்த‌ ச‌ட்டைக‌ள், பித்தான்க‌ள் சீர் செய்ய‌ப்ப‌ட்ட‌ துணிக‌ள், டெலிஃபோன்களுக்கான வூலன்விரிப்புகள், வாயில்தொங்கல்கள் என்று இந்த லிஸ்ட் நீளும்.

அதே போல, பெரிம்மாவும் அம்மாவும்...விடுமுறை நாட்களெனில் எங்களுக்கான தின்பண்டங்கள் செய்து டப்பாக்களில் அடுக்கி வைப்பது,ஊறுகாய் செய்வது, வத்தல் செய்வது, அலமாரிகளை தூசு தட்டுவது, துணிகளுக்கு கஞ்சி போட்டு(ஹா...எவ்வளவு லாங் ப்ராசஸ் அது, அந்த புடவைகளுக்கிடையே ஒளிந்து விளையாடுவது ஜாலி !!) என‌து ச‌ட்டைத்துணிக‌ளில் ஓவியங்கள் வ‌ரைவ‌து என்று அன்றாட‌ப்ப‌ணிக‌ளுக்கிடையில்தான் இந்த‌ லிஸ்ட்.


என்றைக்காவ‌து சகுந்த‌லா அம்மா வ‌ராவிட்டால் பெரிம்மாவின் கைகளோ, அம்மாவின் கைக‌ளோ ஊரிலிருந்து நீண்டு வ‌ந்து சாப்பாட்டை செய்து வைத்தாலென்ன என்று நினைத்துக் கொள்வேன். நான் மட்டும் இருக்கும்போது, ஒன்றுமே இல்லாதது போல எனக்குத் தோன்றும் வீடு, அவர்கள் வந்துவிட்டாலோ அட்சயப்பாத்திரமாகி விடும். என‌க்கும், குட்டிக்கும் எந்த‌ நுண்க‌லைக‌ளையும் க‌ற்க‌ வேண்டிய‌ தேவையும் இருக்க‌வில்லை. ஆர்வ‌மும் இல்லை. முன்பெல்லாம் ஊரிலிருந்து வந்தால் ஊறுகாய் முக்கியமான இறக்குமதி. இப்போது இருக்க‌வே இருக்கிற‌து, ம‌த‌ர்ஸ் ரெசிப்பி ஊறுகாய் வ‌கைக‌ள். தின்பண்டங்கள், சிப்ஸ் வேண்டுமா, அருகிலிருக்கிறது அடையார் ஆனந்தபவன்.

"ஆனால், முத‌லாளித்துவ‌ம் இதையெல்லாம் மாற்றிவிட்ட‌து. முன்பு எவையெல்லாம் குடும்ப‌த்தின் ம‌டியில் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌வோ, இன்று அவையெல்லாம் பெரிய‌ அளவில் ப‌ட்ட‌றைக‌ளிலும், தொழிற்கூட‌ங்க‌ளிலும் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌. பெண், இய‌ந்திர‌த்தால் புறந்த‌ள்ள‌ப்ப‌ட்டுவிட்டார்." என்று க‌ம்யூனிச‌மும் குடும்ப‌மும் என்ற க‌ட்டுரையை, 1920 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை வாசித்த‌போது தோன்றிய‌ கொசுவ‌த்திதான் மேலே இருப்ப‌து.

இது உண்மைதான் என்றாலும், குடும்ப‌த்தில் ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்லும்போது யாருக்கு இத‌ற்கெல்லாம் நேரம் இருக்கிறது?

ஒருமுறை, நாங்க‌ள் இதுவ‌ரை வாழ்க்கையில் ச‌ந்தித்த‌ டேமேஜ‌ர்க‌ளைப் ப‌ற்றியும், அவ‌ர்க‌ளிட‌மிருந்து க‌ற்றுக்கொள்ள‌ வேண்டிய‌வ‌ற்றை/ க‌ற்றுக்கொள்ள ‌கூடாத‌வ்ற்றை ப‌ற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். இர‌ண்டு குழ‌ந்தைக‌ளையும் வைத்துக்கொண்டு, வெற்றிக‌ர‌மான‌ மேனேஜராக‌வும் இருந்த‌ ஒரு பெண்தான் ரோல்மாட‌ல் என்றாள் வ‌ந்திதா. அவ‌ர் குழ‌ந்தைக‌ளை எட்டு ம‌ணிக்கு ப‌ள்ளியில் விட்டுவிட்டு, அலுவ‌ல‌க‌ வேலைக‌ளை முடித்துவிட்டு மூன்று ம‌ணிக்கு திரும்ப‌ காரில் சென்று அவ‌ர்களை வீட்டில் விட்டுவிட்டு க‌வ‌னிப்பார். ஆனால், எதிலும் ஸ்லிப் ஆன‌தில்லை. இவை ந‌டுவில் குழ‌ந்தைக‌ளுக்கான‌ கோச்சிங் கிளாஸ்க‌ள். இதை கேட்கும்போதே உங்க‌ளுக்கு த‌லை கிறுகிறுக்கிற‌தா? என‌க்கும்.
எல்லாவ‌ற்றிலும் அவ‌ர் சூப்ப‌ர்வும‌னாக‌ திக‌ழ்ந்த‌தே அவ‌ரை என‌க்குப் பிடிக்க‌க் கார‌ண‌ம்,நானும் அப்ப‌டியே இருக்க‌ விரும்புகிறேன் என்றும் கூறினாள் வ‌ந்திதா.


வ‌ந்திதாவுக்கும் இர‌ண்டு குழ‌ந்தைக‌ள். அவ‌ளும் அவ‌ர்க‌ளுக்காக‌ ச‌மைக்கிறாள். குழந்தைக‌ளை டிராப் செய்து பிக்க‌ப் செய்கிறாள். அவ‌ர்கள் வீட்டிலிருக்கும் போது அவ‌ளும் வீட்டிலிருந்து க‌வ‌னித்துக் கொள்கிறாள். நடுஇரவில் வீட்டிலிந்தபடியே மீதி வேலையை முடிக்கிறாள். க‌ண‌வ‌ர் ச‌மைய‌லில் ஏதாவ‌து உத‌வி செய்ய‌ வ‌ந்தால் என‌க்குப் பிடிக்காது என்ப‌தும் அவ‌ள‌து கூற்று.மேலாக‌ப் பார்த்தால் இதில் த‌வ‌றொன்றும் இல்லை என்றே தோன்றினாலும், முத‌லாளித்துவ‌ம் வீட்டு வேலைக‌ளைக் குறைக்காம‌ல் மேலும் மேலும் பார‌த்தைய‌ல்லவா சும‌த்துகிற‌து?

இதைச் சொன்னால், ச‌ம்பாதிப்ப‌து ஆண்க‌ளில் வேலை, குடும்ப‌த்தைப் ப‌ராம‌ரிப்ப‌து பெண்க‌ளின் வேலைதானே, நாம்தானே அதில் புகுந்து நானும் ச‌ம்பாரிக்கிறேன் என்று வ‌ருகிறோம், இதில் அவ‌ர்க‌ள‌து உத‌வியை எப்ப‌டி எதிர்பார்ப்ப‌து என்றும் சொன்னாள்.
(image courtesy: குருத்து )

ஏதோ ஒரு கால‌க‌ட்ட‌த்தில் இந்த‌ அமைப்பு உத‌வியாக‌ இருந்தாலும் இன்றும் அதுவே சரியாகுமா? அப்ப‌டியே குழந்தைக‌ளை ப‌ராம‌ரிக்க‌ க்ரெச்சோ, ச‌மைய‌லுக்கு ரெஸ்டாரெண்டுக‌ளையோ அல்ல‌து ஆள் வைத்துக்கொள்வ‌தோ என்றாலும் அனைவ‌ருக்கும் அது ஒத்துவ‌ருவ‌தில்லை. காசு இருப்ப‌வ‌ர்க‌ளால் ம‌ட்டுமே இவ‌ற்றை அனுப‌விக்க‌ முடியும்.ச‌லிப்பூட்டும் அன்றாட‌ அலுவல்க‌ளிலிருந்து விடுத‌லையும் அடைய‌ முடியும். ஆனால், பெரும்பாலான‌ பெண்க‌ள் வீட்டிலும் வேலை செய்துக்கொண்டு, வெளியிலும் வேலை செய்துக்கொண்டுதான் என‌து ந‌ண்ப‌ர் ஒருவர் சொல்வ‌து போல‌ 'இர‌ட்டைச்ச‌வாரி' செய்கின்ற‌ன‌ர். அதோடு இவ்வேலைகளுக்கு பணிமதிப்போ சம்பளமோ இல்லை. இவை எல்லாவ‌ற்றிற்கும் மேல், கொஞ்ச‌மும் ம‌ரியாதையோ ம‌திப்போ இல்லாம‌ல் மிதிய‌டி போல‌த்தான் பெண்கள் குடும்ப அமைப்புக்குள் வாழ்கின்ற‌ன‌ர்.

க‌ம்யூனிச‌ ச‌மூக‌த்தில் இப்பிர‌ச்சினைக‌ளுக்கெல்லாம் தீர்வுக‌ள் இருக்கின்ற‌ன‌. இவ்வேலைக‌ள் அனைத்தும் ச‌மூகத்தால் ப‌கிர்ந்துக்கொள்ள‌ப்ப‌டுகின்றன‌. கூட்டுச‌மைய‌லில் யார் வேண்டுமானாலும் ப‌ங்கேற்று சாப்பிட‌ முடியும். பொது ச‌ல‌வை நிலைய‌த்தில் துணிக‌ள் துவைத்து ச‌ல‌வை செய்து த‌ர‌ப்ப‌டும். உழைக்கும் பெண்ணின் மீது இவ்வேலைக‌ள் க‌ட‌மைக‌ள் என்ற‌ பெய‌ரில் சும‌த்த‌ப்ப‌ட‌ மாட்டாது. வீட்டு வேலைக‌ள் க‌ம்யூனிச‌ச‌மூக‌த்தால் ப‌கிர்ந்துக் கொள்ள‌ப்ப‌டுவ‌தால் பெண்ணுக்கு ஓய்வுநேர‌த்தை ப‌ய‌னுள்ள‌ வ‌கையில் அவ‌ர் செல‌வ‌ழிக்க‌லாம்.

முக்கிய‌மாக,‌ குழ‌ந்தை வ‌ள‌ர்ப்புக்கு, அவ‌ர்க‌ள‌து அறிவு வ‌ள‌ர்ச்சிக்கு அரசே பொறுப்பேற்கும்.இதுவும் முத‌லாளித்துவ‌ ச‌மூக‌த்தில் ஒரு குறிப்பிட்டசாரார் ம‌ட்டுமே அனுப‌விக்க‌க்கூடிய‌தாக‌ இருந்து வ‌ருகிற‌து. உழைக்கும் ம‌க்க‌ளின் குழந்தைக‌ள் புழுதியிலும் ம‌ண்ணிலும் வ‌ள‌ர‌ வேண்டியிருக்கிற‌து. பொதுக்க‌ல்வி ம‌ற்றும் சமூக‌ந‌ல‌த்துறை குடும்ப‌த்திற்கு உத‌வி செய்யும். மொத்த‌த்தில் ச‌மூக‌மே குழ‌ந்தைக்கு உண‌வ‌ளித்து வ‌ள‌ர்த்து க‌ல்வியும் அளிக்கிற‌து. அதே ச‌ம‌ய‌ம், த‌ங்க‌ள் குழ‌ந்தைக்கு க‌ற்பிப்ப‌தில் ப‌ங்கெடுத்துக்கொள்ள‌ விரும்பும் பெற்றோரருக்கும் வ‌ச‌தியுண்டு. மொத்த‌த்தில், க‌ண‌வ‌ன் இல்லாவிட்டால் உல‌க‌மே இருண்டு விட்ட‌து என்ற‌ நிலையில்லாம‌ல், பெண் த‌ன‌து தேவைக‌ளுக்கு ச‌மூக‌த்தைச் சார்ந்து , த‌ன்னால் செய்ய‌ இய‌ன்ற‌ வேலையைச் செய்து வாழ்வார்.

இதை வாசிக்கும்போதே, இது போன்ற‌ அமைப்பு ந‌ம‌க்கும் இருந்தாலென்ன‌ என்று பெருமூச்சு. ச‌மைய‌லைக் குறித்து நானும் க‌வ‌லைக் கொள்ள‌த்தேவையில்லை. அபி, ஒவ்வொரு ம‌திய‌மும் த‌ன‌து பிள்ளைக்கு சோறூட்ட‌ வீட்டிற்குச் சென்று அவசரம் அவசரமாக அலுவலகம் திரும்ப‌வேண்டிய‌தில்லை. குழந்தைகளில் பள்ளி அட்மிசனுக்காக யாரும் அலைய வேண்டியதில்லை. சலிப்பூட்டும் வீட்டுவேலைகளை லிஸ்ட் போட்டு வேண்டா வெறுப்பாக யாரும் செய்ய‌ வேண்டிய‌தில்லை. ஹ்ம்ம்.....நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், கற்பனைக்கெட்டாத கனவு போலவும் ஏன் எனக்குத் தோன்றுகிறது?

என் வாழ்நாளில் கைகெட்டாத கனவு போல தோன்றினாலும் என் மகளின் காலத்திலாவது இந்த குடும்ப அமைப்புமும்,சமூகமும் சாத்தியப்படட்டும்!

இங்கு நான் பகிர்ந்திருப்பது பகுதிதான். அலெக்ஸான்ட்ரா கொலந்தாயின் முழுக் க‌ட்டுரையின் தமிழாக்கத்தை வாசிக்க‌ :


நூல்: க‌ம்யூனிச‌மும் குடும்ப‌மும்

விலை: ரூ 20
வெளியீடு: பெண்க‌ள் விடுத‌லை முன்ன‌ணி
41, பிள்ளையார் கோயில் தெரு, ம‌துர‌வாய‌ல், சென்னை ‍ 95
போன்: 98416 58457

13 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

நானும் படித்தேன் நல்ல புத்தகம் முல்லை

அமுதா said...

நல்ல பகிர்வு முல்லை. படித்துப் பார்க்கிறேன். இது எங்காவது நடைமுறைப் படுத்தப்பட்டதா என்றும் அறிய விரும்புகிறேன்.

/*என் வாழ்நாளில் கைகெட்டாத கனவு போல தோன்றினாலும் என் மகளின் காலத்திலாவது இந்த குடும்ப அமைப்புமும்,சமூகமும் சாத்தியப்படட்டும்!
*/
ஆம். சாத்தியப்படட்டும். ஆனால், இப்பொழுதே இதற்கான அடிகல்லாக, ஆண்/பெண் இருவரும் குடும்பம், சமூகம் என்ற இரு பொறுப்புகளையும் பாலினம் பார்க்காது பொதுவாக விருப்பம்/தேவை பொறுத்து பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சந்தனமுல்லை said...

Amudha, plz check out the link. http://www.vinavu.com/2010/11/07/nov-7-3/

Sriakila said...

நல்ல பகிர்வு. இதுபோன்ற மாற்றம் வருவதை பொதுவாக எல்லாப் பெண்களும் விரும்பத்தான் செய்வார்கள், குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்கள். அதையும் மீறி உதவி செய்ய வரும் ஆண்களைக் கூட இது ஆண்கள் வேலையே இல்லை என்று சொல்லி தானே இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்யும் பெண்களும் இருக்கிறார்கள், ஆண்கள் தங்கள் தேவைகளுக்கு செய்ய வேண்டிய வேலைகளைக்கூட‌ அவர்களையே செய்ய வைத்து பழக்கப்படுத்தாமல் அதையும் தானே செய்வதை கெளரவமாக நினைக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

இதில் முட்டாள்தனமான பெண்களும், வேறு வழியில்லாமல் செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். இதில் நான் இரண்டாவது ரகம்.

என் வீட்டில் நான் தான் சமைக்கிறேன். அதை நான் விரும்பியும் செய்யவில்லை, வெறுத்தும் செய்யவில்லை. என் வயிறு நிறைவதற்காகவாவது நான் சமைத்தாக வேண்டும் எனக்கு யாரும் செய்து கொடுக்கப் போவதில்லை.

ஆனால் பெண்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு ஆண்பிள்ளையை பழக்கப்படுத்தாமல் இருப்பதும் ஒரு பெண்தான்.

The Analyst said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். Would love to read the book.

அமுதா said...

சுட்டிக்கு நன்றி முல்லை. படித்தேன். அருமையான கட்டுரை.

/*பெண்களை இழிவு படுத்தும் பத்திரிக்கைகளோ, சினிமாவோ, நாடகங்களோ எதுவும் சோவியத்தில் கிடையாது. அவ்வாறு பெண்களை இழிவுபடுத்தியோ அல்லது ஆபாசமாகவோ சித்தரித்தால் அதற்கு சட்டப்படி கடும் தண்டனை உண்டு. நமது வீட்டுப் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களையும், நாடகங்களையும் நாம் அனுமதிக்க முடியுமா ? முடியாதல்லவா ? அதே போலத் தான் சோவியத் அரசாங்கம் தனது நாட்டு பெண்கள் எந்த விதத்திலும் ஆபாசப் பொருளாகவோ, போகப் பொருளாகவோ சித்தரிக்கப்படுவதை அனுமதிப்பதில்லை. அங்கே பெண்களை இழிவுபடுத்தும் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. வறுமையையும், தற்குறித்தனத்தையும் ஒழித்துக்கட்டியதைப் போலவே விபச்சாரத்தையும் ஒழித்துக்கட்டிய ஒரே நாடு சோசலிச இரசியா மட்டும் தான்*/
இது மிகத் தேவையான ஒன்று. இப்படி ஒரு காலம் இருக்காதா என்று ஏஙக வைக்கிறது.

மேலும் படித்த அனைத்து விஷயங்களுமே அருமை.

Gold said...

First half romba nalla irunthathu, still dreaming about oorukai and murukku and everything. History repeats right....:-)

காமராஜ் said...

தோழர் தங்கச்சி,அருமையான அறிமுகம்.பொறாமையா இருக்கு.சென்னை வந்தால் வாங்கனும்.
நன்றி முல்லை.

santhanakrishnan said...

அப்படி ஒன்று நடந்தால்
நன்றத்தானிருக்கும்.
காத்திருப்போம்.

கெக்கே பிக்குணி said...

முல்லை, இது சொந்த வாழ்வில் பெண்கள் செய்து கொண்ட அல்லது செய்து கொள்ளத் தவறிய வாய்ப்பு / வழிமுறைகள் இல்லியா?

எங்க வீட்டுல இது தான் நடைமுறை: நான் சமைத்தால், கணவர் பாத்திரம் கழுவுவார்; அவர் சமைத்தால், நான் பா. க.! என் 15+ வருட திருமண வாழ்க்கையில் ஒரு முறை கூட என்னை தம் துணிகளைத் தோய்க்க / மடிக்க அவர் விட்டதில்லை (அவ்ளோ நம்பிக்கை;-))). வீட்டில் வேலைக்காரி (maid) வச்சுக்க எனக்கு விருப்பம் இல்லாததால், தூய்மை செய்யும் வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறோம். எனக்கு தெரிந்து பல பெண்கள் அப்படி இருக்காங்க. நான் நேரம் கழித்து வந்தால் அவருக்கு பிடிக்காது - இதில் அப்பப்ப கருத்து மோதல் வரும். இந்த மாதிரி சிறு சிறு பிரச்னைகள் இருக்கு. ஆனால், கம்யூனிச நாடுகள் மட்டும் இல்லாமல், எங்கு பெண்கள் தம் வாய்ப்புகளை முழுமையாக ஏற்படுத்திக் கொள்கிறார்களோ அங்கு பெண்விடுதலை இருக்கக் கூடும். நீங்க சொன்ன மாதிரி, வெகு விரைவில், இந்தியாவிலும் இந்த சமூக அமைப்பு சாத்தியம் என்றே நம்புகிறேன்.

அம்பிகா said...

\\என் வாழ்நாளில் கைகெட்டாத கனவு போல தோன்றினாலும் என் மகளின் காலத்திலாவது இந்த குடும்ப அமைப்புமும்,சமூகமும் சாத்தியப்படட்டும்!\\
அருமை. நல்ல பகிர்வு முல்லை.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு முல்லை.

//இது போன்ற‌ அமைப்பு ந‌ம‌க்கும் இருந்தாலென்ன‌//

சாத்தியப்பட வேண்டும் சொன்னாற்போல வருங்காலத்திலாவது.

tamil said...

ஆனால் ரஷ்யாவில் ஒரு பெண் கூட ஸ்டாலினோ கோர்பச்சேவோ வகித்த உயர் பதவிக்கு வர முடியவில்லையே ஏன். கிழக்கு ஐரோப்பா, சீனாவிலும் அப்படித்தானே.
ஏன் என்று கேட்டுப்பாருங்கள்.

ரஷ்யாவில் பெண்களும்,ஆண்களும் அரசினை விமர்சிக்கவாது உரிமை இருந்ததா.அன்னா அக்மத்தேவ் என்ற பெண் கவிஞ்ரைப் பற்றிப் படியுங்கள், கம்யுனிச அரசின் உண்மை முகம் தெரியும்.
பல ஐரோப்பிய நாடுகளில் அரசே க்ரெச்களை நடத்துகிறது, அடிப்படை வசதிகளை தருகிறது, கல்விக்கு வகை செய்கிறது.அடுக்ககங்களில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடிய துவைக்கும் இயந்திரங்கள் உண்டு.பிரசவ கால விடுப்பு உட்பட பலவற்றை அரசு தருகிறது. கருக்கலைக்கும் உரிமையும் உண்டு.எனவே அங்கு பெண்கள் வேலைக்குப் போவது சாதாரண்மான ஒன்று.

ரஷ்யாவில் அரசு மூலம் கட்சி உழைப்பை சுரண்டும், ரொட்டிக்கும்,
வேறு சிலவறிற்கும் உத்தரவாதம் தரும். உண்மையான பெண் சுதந்திரம் அங்கே இருந்ததில்லை,ஏனெனில் மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகள் கிடையாது. குடும்பம் என்ற அமைப்பு அங்கு வலுவாக இருந்தது. அதிக குழந்தைகள் பெறுவது ஊக்குவிக்கப்பட்டதா இல்லையா என்று காம்ராஜ்,வினவை கேளுங்கள்.இணையத்தில் தேடிப்பாருங்கள்.அபார்ஷன் செய்து கொள்ளும் உரிமையும், வசதியும் அங்கும், கி ஐரோப்பிய நாடுகளிலும் எப்படி இருந்தது என்று தெரியுமா.
ரஷ்யாவில் நடைமுறை எப்படி இருந்தது என்பதையும் பாருங்கள்.பிரச்சார நூல்களை நம்பி ஏமாறவேண்டாம்