Wednesday, September 28, 2011

வேளச்சேரி டைம்ஸ் : பார்வதி அம்மாவின் காய்கறி கடை

அய்யாவானாலும் சரி, அம்மாவானாலும் சரி, வறுமையில் வாழும் குடும்பங்களுக்காக இலவசங்களை வழங்குகிறார்கள். 79 வயதானாலும் கடமை தவறாமல் நாட்டு மக்களையும் அவர்களின் நலனையும் பற்றி சிந்தித்து சிந்தித்து - வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கியாவது- அவர்களை முன்னேற்றிவிட துடித்துக்கொண்டிருக்கிறார் பிரதமர் அவர்கள். இப்படி, நாட்டை பூந்தோட்டமாக மாற்றி மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட வேண்டும் என்று முயன்று வருகிறார்கள் நம்மை ஆள்பவர்கள்...கோடி கோடியாய் செலவிட்டு எப்படியாவது வறுமையைதுரத்திவிட வேண்டுமென்று சபதமேற்கிறார்கள். அல்லும்பகலும் அதைப்பற்றியே சிந்திக்கிறார்கள். இதையெல்லாம் செய்த பின்னாலும் நாம் காணக்கிடைக்கும் முன்னேற்றம் மிகுந்த வியப்பையே தருகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி இருந்ததோ அப்படியே கூட இல்லாமல். அதைவிட மிகவும் இழிந்த நிலையையே அடைந்துள்ளது. ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகவும்மாறியிருக்கின்றனர். இருப்பதும் பறிக்கப்பட்டு விவசாயி கிராமத்தைவிட்டு துரத்தப்பட்டநிலையில் பண்ணையார்களும், பிரசிடெண்டுகளும் காண்டிராக்டர்களாக மாறி லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். 32ரூ கொண்டு ஒரு நாளை தாராளமாக ஓட்டமுடியும் என்றும் வறுமையின் கீழ் அவர்கள் வருவதில்லையென்று அறிக்கைகள் கூறினாலும் நாட்டில் பாதிப்பேர் அந்த ஏழ்மைவாழ்க்கையைதான் வாழ்கின்றனர். பார்வதி அம்மா அந்த பாதிப்பேர்களில் ஒருவர்.
இந்த நிலைக்கெல்லாம் மேலே சொல்லப்பட்ட ஆட்சியாளர்கள்தான் காரணமென்று சொன்னால் பார்வதி அம்மா கேட்க மாட்டார். தனது இந்த நிலைக்கும் வாழ்க்கைக்கும் காரணம் பகவானே என்றுதான் நம்புவாரே தவிர ஆட்சியாளர்கள் காரணம் என்று அவருக்கு தெரியாது. பாவம், எடுத்துச் சொன்னாலும் கேட்க மாட்டார். நம்பவும் மாட்டார். அந்த அளவுக்கு ஆட்சியாளர்கள் பார்வதி அம்மாவை வைத்துள்ளார்கள் என்ற விபரம் நம்மில் பலருக்கும் தெரியாது.


இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும், எழுதிக்கொண்டிருக்கும் எனக்கும் ஒரு கூரையின் கீழ் அமர்ந்து செய்யக்கூடிய வேலை இருக்கிறது.
சென்ற வருடத்தைவிட இந்த வருடம் சம்பளம் கூடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அமர்ந்திருக்கும் சேருக்குப் பக்கத்தில் சாக்கடை ஓடாது. ஆனால், பார்வதி அம்மாவின் வேலையிடம் அப்படி அல்ல. இருபத்து நான்கு வருடங்களாக வேலை செய்தாலும் வருமானம் வருடா வருடம் கூடுவதில்லை. ஆனால், செலவுகள் மட்டும் கூடிக்கொண்டேயிருக்கின்றன. இருபது வருடங்களாக தலையில் கூடை சுமந்து காய்கறிகள் விற்றிருக்கிறார். கடந்த நான்கு வருடங்களாகத்தான் நிலையாக ஒரு இடத்தில், சாக்கடை ஓடும் பிளாட்பாரத்திற்கு அருகில் அமர்ந்து பூ,படம், காய்கறிகள் விற்கிறார். பார்வதி அம்மாவுக்கு தற்போது 68 வயது. ஒரு ரூமில்தான் குடித்தனம் - மகள் மற்றும் பேத்தியுடன்.

“காய்கறிங்க அதிகம் போவாது, பூ,பழம், கீரைதான் ஓரளவுக்கு போவும்” என்கிறார். என்னா வித்தாலும் விக்காட்டியும் பைனான்ஸ்காரங்களுக்கு ஒரு நாளைக்கு 40ரூ குடுத்துடணும். இப்போகூட குடுத்தேனே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி - இன்னைக்கு. மூணு பைசா வட்டி. ஐயாயிரம் வாங்குனா, வட்டி மூணு மாசத்துக்கு என்னா ஆச்சு? 500ஐ புடிச்சுக்கிட்டு மீதி 4500 தருவாங்க. அதுல, தெனம் 40ரூ கட்டிக்கிட்டு வரணும். கரெக்டா கட்டிக்குட்டு வரணே...என்னா இப்போ பூஜை வருது,கொஞ்சம் வியாபாரம் ஆவும், ஒரு 2 ரூ இருந்தா நல்லாருக்கு, இதை கட்டாம மேல கேட்டா தரமாட்டாங்க” என்கிற பார்வதி அம்மாவின் முன் கத்தரிக்காய், வாழைக்காய், ஒருகூடை நிறைய எலுமிச்சைபழம், ஒரு சில கீரைக்கட்டுகள், ஜாதிமல்லி, உதிரி மல்லி, சாமந்தி பூக்கள்...சூடம், அகர்பத்தி, வாழைப்பழம்..


பார்வதி அம்மா ஆந்திராவிலிருந்து வந்தவர். அவரது கணவர் சிம்சனில் வாட்ச்மேனாக வேலை செய்துவந்தார். ஏதோ மனஸ்தாபத்தில் வேலை வேண்டாமென்று எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டார். அதன்பிறகு அவர் வேலைக்குச் செல்லவில்லை. அதிலிருந்து காய்கறி விற்க கூடை தூக்கியவர்தான். பார்வதி அம்மா, கணவர் இறக்கும் வரை அதை இறக்கவேயில்லை.

”என்னா பண்றது, கட்டுனவராச்சே, அப்படியே உட்டுட முடியுமா, இப்போ பொண்ணை காப்பத்தலியா..நம்ம வயித்துல பொறந்துடுச்சுன்னு,
அது மாதிரிதான்...இப்போ நாலு வருசமாதான் இங்க கடை போட்டிருக்கேன். முன்னமாதிரி நாப்பது அம்பது கிலோ சொமந்துக்கிட்டு நடக்கமுடியலை” என்றார் நீட்டிய கால்களை நீவிவிட்டுக்கொண்டு. "பூ கட்டறது, காய்கறி வாங்கியாறதுன்னு எல்லா வேலையும் நானே செஞ்சுடறதாலே அதுதான் லாபம்னு நினைச்சுக்கணும்..இல்லன்னா அதுக்கு ஆள் வைச்சா ஒரு நாளைக்கு ரூ100 கொடுக்கனும்..அதுக்கு எங்க போக..பகவான் கை கால் நல்லா வைச்சிருக்கானே நெனைச்சிக்கறேன்"

முதியோர் இல்லத்துக்கான ஒரு விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். மனதை உருக்கும் விளம்பரம் - அதில் சொல்லப்பட்டது போலவே. ஒரு இளம்பெண் புறாக்களுக்கு உணவிட்டுக்கொண்டிருப்பார். அவர் கையில் ஒரு பொட்டலம் இருக்கும். சற்று தூரத்தில் பெஞ்சில் ஒரு முதியவர் அமர்ந்திருப்பார். அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவராக இருந்திருக்கக் கூடும். அந்த இளம்பெண்ணின் அருகில் வருவார். முதியவரின் கையில் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு புறாக்களுக்கு உணவிட்டுக்கொண்டிருப்பார் அப்பெண். கைகளில் தீனி தீர்ந்ததும் திரும்பிப்பார்ப்பார் அந்த முதியவர் தொலைவில் மறைந்திருப்பார் - பொட்டலத்தை எடுத்துக்கொண்டு. அந்த பெண் அப்படியே உறைய, அடுத்த காட்சியில் ஒரு தூணுக்கு பின் மறைந்தபடி அம்முதியவர் அந்த உணவை எடுத்து உண்பார். முதியோர் இல்லத்துக்கான வாசகத்துடனோ அல்லது முதியவர்கள் பராமரிப்புக்கான வாசகத்துடனோ அவ்விளம்பரம் முடியும்.

”ஒருத்தங்க ஃபீரியா கொடுத்தா கூட நான் வாங்க மாட்டன். என்னை மாதிரிதான அவங்களும் கஷ்டத்துல சம்பாரிச்சுருப்பாங்க. இன்னைக்கு ஒருத்தரு ரூ100 குடுக்கறாருன்னா அடுத்த நாளும் யாருனா அதுமாதிரி குடுக்க மாட்டாங்களான்னு மனோபாவம் வந்துடும் பாரு, அப்புறம், உழைக்கவே வராம சோம்பேறியா பூடுவேன்...கைகால் நல்லாருக்க வரைக்கும் ஏதோ என் பொண்ண பாக்க போறேன்...அவ புருசன் சரியில்ல...விட்டுட்டு போய்ட்டான்...என் பேத்தி காலேஜ் படிக்கிறா...அதுக்கு வருசத்துக்கு 15000 கட்டணும்...அதுக்குதான் இப்டி லோல்பட்டுனு கெடக்கறேன்... எங்களுக்கே செலவு ஒரு நாளுக்கு 100 ரூபா ஆகிடுது...நாங்க என்னா, நெய்யும் பாலுமா சாப்பிடபோறோம், காலயில், கொஞ்சம் சோத்தை எடுத்து தண்ணிவுட்டு மோர் ஊத்தி கரைச்சு குடிச்சுட்டு கோயம்பேடு போனன்னா காய் எடுத்துகிட்டு வருவேன். பஸ், லெக்கேஜ் சார்சே 40ரூபா ஆகுது.. அப்புறம்,. ராத்திரி வீட்டுக்கு போனா ரெண்டு தோசை. மத்தியானம், ஒரு டீ குடிச்சாலே 5ரூபா ஆகிடுது. அதுல என் பேத்திக்கு ஒருநாளைக்கு 20ரூபா வேணும்...இது இல்லாம பைனான்ஸ் காரங்களுக்கு தெனம் குடுத்துடணும், அப்பதான் அடுத்தவாட்டி கேட்டா தருவாங்க. பகவான் மேல பாரத்த போட்டுட்டு ஒக்கார்ந்திருக்கேன். மனோதைரியம்தான் வேணும்..இப்படி வித்துதான் ரெண்டு பொண்ணை கட்டுக்குடுத்தேன்..ஒன்ன்னு நல்லாருக்கு, இன்னொன்னுக்காகத்தான் இந்த பாடு.... அரிசி ரேஷன்ல வாங்கிக்குவோம்..காய்கறி இதோ இதுலயே நாலை எடுத்துப்போட்டு சாம்பார் வைச்சுக்கவேண்டியது. நான் வெஜ்லாம் நாங்க அதிகம் சாப்பிடறதுல்ல... இதுல என்னாத்த சேத்து வைக்கிறது...நான் செத்தா கார்ப்பரேஷன்காரந்தான் தூக்கி போடணும்”

பேத்திக்கு காலேஜ் பீஸ் கட்டதான் அவர் அலையாக அலைந்திருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரை அவரது பேத்தி ஒருமுறை தேர்வில்
தோற்றதில்லையாம். நன்றாக படிப்பாராம். பணம் கட்டமுடியாதவர்களுக்கு உதவி செய்யும் சில அமைப்புகளைப் பார்த்து நடை விரயமானதுதான் மிச்சமாம். வெறுத்து போய் விட்டுவிட்டாராம். அதோடு இந்த தொழிலில் பல பிரச்சினைகள் வேறு. கடன் தொல்லைகள். பகவான் நேர்மையாக இருப்பவர்களைத்தான் குறி வைத்து சோதிப்பாராம்.

தொழில்னா லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். நஷ்டமாயிடுச்சுன்னு ஒக்காந்துடவா முடியும்...நாம நெனைக்கிறதெல்லாமா நடந்துடுது? நாம ஒண்ணு நெனைப்போம்.அது ஒண்ணு நடக்கும். நாம நெனைக்கிறது நடக்கவே நடக்காது. பகவான் மேல பாரத்தை போட்டுட்டு இருக்கேன். நேர்மையா இருக்கிற வங்களைதான் பகவான் சோதிப்பான். இதுல கொசுவுக்கு கைகால்ல மருந்து தடவுனா இங்க ஒக்காந்திருக்கவே முடியும். காய்கறி வாங்கியாந்துட்டன்னா, அது விக்கிறவரைக்கும் மனசு இருக்காது. வித்து அதை காசாக்கினாதான்.... அதுவரைக்கும் மனசு ஒரு நெலையில இருக்காது. இல்லன்னா அடுத்த நாளைக்கு என்னா பண்ரது? ”

கற்பனைக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்காது என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், வாங்கிய காய்கறி விற்கவில்லை யென்றால் அடுத்தநாள் தனக்கானதாக இருக்காது என்ற பார்வதி அம்மாவின் பயம் உண்மை.

அந்த பயம் - வாழ்வின் மீதான பயம்.


அவரது பயம் தெளிவது எப்போது?


அனைவரையும் போல பயமின்றி மனநிம்மதியோடு பார்வதி அம்மா வாழ்வது எப்போது?

3 comments:

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

எப்பிடியாவது இன்று வாழ்ந்து விட வேண்டும் என்பதே நிறைய பேருக்கு சவாலாய் இருக்கையில் மற்ற எல்லாம் எப்பிடி இருந்தால் என்ன?

ராமன் ஆண்டாலும்
இராவணன் ஆண்டாலும்
நிறைய பார்வதி அம்மாக்கள்
கவலை கொள்ளவதில்லை..
கவலைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்,
அதை கொல்ல செய்யும் வேலைகளும் பலவிதம்..

Ramesh said...

Just now i read this article and forwarded to Agaram foundation to help this poor college girl. Hope she may get what she deserved..

Ramesh said...

Just now i read this article and forwarded to Agaram foundation to help this poor college girl. Hope she may get what she deserved..