Wednesday, October 19, 2011

பப்புவும் ஜெயலலிதாவும்

பப்புவுக்கு அவ்வப்போது “சாமி இல்லை” என்று சொல்லி ஓரளவுக்கு புரிய வைத்தாகிவிட்டது. ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. பள்ளியிலும், உறவினர்களும் பப்புவுக்கு சாமி கும்பிட சொல்லிக்கொடுப்பார்கள். உறவினர்கள் வந்தால் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள். தெரியாமல் அழைத்துச் செல்லும்போது அதனை தடுக்கமுடிவதில்லை. வீட்டிலோ, அதெல்லாம் இல்லையென்றும், நம்மிடம் இருந்து காசு வாங்கத்தான் இதெல்லாம் இருக்கு என்றும் நான் சொல்லுவேன்.

இரவு தூங்கும்போது, இது எல்லாவற்றையும் சேர்த்து வைத்து கேள்விகளாக கேட்டுத் தள்ளுவாள்.


’கோயிலுக்கு போனப்போ சாமி உன்கிட்டே பேசுச்சா?’, ’சாமியை எதனால செஞ்சிருக்காங்க?’, ‘ நம்ம வீட்டுல சாப்பாடு யார் செய்றாங்க? ’, ‘அரிசி வாங்க காசு எப்படி வருது?சாமியா குடுக்குது?’ ”உண்டியில, தட்டுல எல்லாம் காசு போடச்சொல்றாங்க இல்ல?” என்றெல்லாம் அவளை திருப்பி கேள்விகளை கேட்க, ஒரு கட்டத்தில் ’சாமிக்கு எல்லாம் தெரியும், சாமியே சமைச்சு கொடுக்கும்’ என்ற அளவுக்கு வந்துவிட்டாள். பிறகு, கொஞ்சநாட்கள் கழித்து, ”ஆமா ஆச்சி, சாமி பேசாது, அது கல்லுமண்ணுதான்(களிமண்ணு)” என்று கட்சி மாறுவாள். வெள்ளிக்கிழமைகளில், சாயிபாபா படத்தை வைத்துக்கொண்டு பக்திபாடல்கள் ஒலிக்க ஒரு வண்டி வரும். அதைப்பார்த்ததிலிருந்து, சாமின்னு சொல்லி காசு வாங்கி ஏமாத்தறாங்க என்று ஏற்றுக்கொண்டாள்.

ஆயா மீது நாங்கள் அக்கறை காண்பித்தால் பப்புவுக்கு சமயங்களில் பிடிக்காது. அப்போது, ஆயா மீது ஒரே கம்பெள்ய்ன்டுகளாக வரும். ’தனக்குக் கொடுத்த மாத்திரைகளை ஆயா சாப்பிடவில்லை, படுத்துக்கிட்டே சாப்பிடறாங்க’ என்று இஷ்டத்துக்கு... அதாவது,நாங்கள் எதையெல்லாம் ஆயாவை செய்யச் சொல்லுகிறோமோ அதையெல்லாம் அவர் செய்யாததாக கற்பனையை கலந்துகட்டி சொல்லுவாள். அதில், ஆயா, பப்புவை சாமி கும்பிடச் சொன்னதாகவும், இந்த உலகமே சாமிதான் செஞ்சுது என்றும் சொன்னதாகவும் சொல்லுவாள்.

பிறகு, அவளே “உலகத்தை யாராவது செய்யமுடியுமா? அது வெடிச்சு உலகம் வந்துச்சி...” என்று கவுண்டரும் கொடுப்பாள்.
ஆனாலும், அவளுக்குள் சாமி இருக்கா, இல்லையா என்ற கேள்விகள் ஓடிக்கொண்டுதான் இருந்தன, இருக்கின்றன என்றெண்ணுகிறேன்.

இது நடுவில், பிள்ளையார் சதுர்த்தி வந்தது. பள்ளியில், “புள்ளையார் பர்த் டே” என்று சொல்லிக்கொடுத்திருந்தார்கள். அதற்காக, பிள்ளைகளின் கையில் களிமண் உருண்டையைக்கொடுத்து பிள்ளையார் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அநேகமாக, அதுதான் பப்புவின் யுரேகா மொமெண்ட் என்று நினைக்கிறேன். அதாவது, ”சாமி கல்லுமண்ணுதான், அதை நாமதான் (மனுசங்கதான்) செய்றோம் “.

கீரை,காய்கறிகள் கொடுக்க ஒருவர் வீட்டுக்கு வருவார். பப்பு என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார். அவரிடம், “சாமி பொய்னு சொன்னேன் இல்ல, இது பாருங்க, பொம்மைதான், நீங்க கூம்பிடாதீங்க (கும்பிடுவதை பப்பு அப்படிதான் சொல்கிறாள்.)” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவரும் ”சாமி கும்பிடமாட்டேன்,பாப்பா” என்றார்.

ஆயுத பூஜையன்று அவர் வரமாட்டேனென்று சொன்னதும் மிகவும் அப்செட் ஆகிவிட்டாள். “ஆண்ட்டி, சாமி கூம்பிடக்கூடாது, அதெல்லாம் பொய்” என்று அவரிடம் திரும்பச் திரும்பச் சொல்லவும் அவரும் டென்சனாகிவிட்டார்.

” பாப்பா, நீங்க ஸ்கூல்ல பிரேயர்ல என்ன பண்ணுவீங்க?”

“ஜனகனமண.....” (இதைக்கேட்டால், இந்த பாடலை பாடுவோம் என்று மட்டும் சொல்லிவிட்டு விடாமல் முழுவதுமாக பாடுவாள். நமக்குதான், அவ்வ்வ்வ்...)

” அப்புறம்?”

”நீராரும் கடலுடுத்த நிலமடந்தை...”

”அப்புறம்?”

ஏதோ ஒரு ஆங்கிலப்பாட்டு பாடினாள்.

” அப்புறம் என்ன பண்ணுவீங்க?”

“ அயிகிரி நந்தினி....”

”பாத்தீங்களா, ஸ்கூல்ல சாமிப்பாட்டுதான பாடுறீங்க, அதுமாதிரி நானும் வீட்டுல பாட்டுபாடணும்” என்றார் அவர்.

ஆனாலும், பப்புவால் அதை ஒப்புக்கொள்ளமுடியவில்லை. அவளது க்ளோஸ் பிரண்டுகளுக்கெல்லாம் சாமியெல்லாம் கும்பிடக்கூடாது, அது வெறும் கல்லுமண்ணுதான்,தெரியாதவங்கதான் சாமி கும்பிடுவாங்க என்று சொல்லியிருப்பதாகவும், அவர்களும் கும்பிடமாட்டென்று சொல்லி யிருப்பதாகவும் ஆண்ட்டிக்கு கான்வாசிங் நடந்தது. (அநேகமாக, இதுதான் பப்புவின் கருத்துமுதல்வாதம் Vs பொருள்முதல்வாதம் விவாதமாக இருக்கக்கூடும்!)

இது நடந்து சிலநாட்கள் இருக்கும். அப்போது ஒரு கதை வாசித்திருந்தோம். ராஜா ஒருவர், சோசியத்தில் நம்பிக்கைக்கொண்டிருப்பார். ஆறு மாதங்களில் இறந்துவிடுவதாக சோசியர் சொன்னதை நினைத்து எதிலும் ஆர்வமற்றும் சோகமா இருப்பார்.இதைக் கண்டுக்கொண்ட மந்திரி சோசியரிடம், அவர் எவ்வளவு நாட்கள் உயிருடன் இருப்பார் என்று கேட்க சோசியர் 100 வருடங்கள் என்பார். உடனே அவர் தலையை வெட்டிவிட்டு, சோசியம் பொய் என்று ராஜாவுக்கு உணர்த்துவார், மந்திரி.

சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக,பப்பு , ஆண்ட்டியிடம் இந்தக்கதையை சொல்லி ஜோசியக்காரங்களை நம்பக்கூடாது என்று வகுப்பெடுத்திருக்கிறாள். அவரும் ”சரி பாப்பா” என்றிருக்கிறார்.

இன்று காலையில், பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்த பப்புவுக்கு திடீரென்று சந்தேகம்.

”ஜெயலலிதா சாமி கும்பிடமாட்டாங்க இல்ல?”

“இல்ல, அவங்க கும்பிடுவாங்க”

“பட், அவங்களுக்கு சாமி இல்லேன்னு தெரியும்?”

“இல்ல, அவங்க சாமி இருக்குன்னு நம்புவாங்க.”

“சாமி கும்பிடுவாங்க, பட், அவங்களுக்கு சாமி இல்லேன்னு தெரியும் இல்ல?”

“இல்ல பப்பு, இல்லன்றதை அவங்க நம்பமாட்டாங்க”

அவளால் ஜெயலலிதா சாமி கும்பிடுவார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உறவினர்கள், தெரிந்தவர்கள் சாமி கும்பிடுவதை ஏற்றுக் கொள்ளும் பப்புவால், நம்மை ஆளும் சீஃப் மினிஸ்டர் சாமி கும்பிடுவதை, அவளுக்கு தெரிந்த அந்த உண்மை தமிழ்நாட்டின் சீஃப் மினிஸ்டருக்கு தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. :-(

6 comments:

அ. வேல்முருகன் said...

வாழ்த்துக்கள், நானும் என் இரு குழந்தைகளிடமும் இப்படிதான் பேசிக் கொண்டிருக்கிறேன். 7 வயது மகன் ஏறக்குறைய கடவுள் இல்லை என ஒப்புக் கொண்டுவிட்டான். 10 வயது மகளுக்கு சிறிது காலம் பிடிக்கும் என நினைக்கிறேன்.

The Analyst said...

Wow! She sounds really smart and cool. Richard Dawkins new book 'the magic of reality' is aimed at 8-10 year olds apparently. This might be a good book for her to read in a year or two. It talks about all sorts of weird myths around the world.

The other one might be "Growing Up in the Universe" also by Dawkins.

There might be some interesting ones on this reading listgiven to an 8 year old.

If you have any Tamil books, could you please share it here?

Thanks.

MSV Muthu said...

Excellent! I have to start - my daughter is 3 years old. :)

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

Simulation said...

உங்கள் குழந்தைக்கு எத்தனை வயது என்று தெரியவில்லை. மழலை மொழியாடலைப் பார்க்கும் போது சின்னஞ்சிறு குழந்தை என்று எண்ணுகின்றேன். இன்று அவள் வளரும் பெரும்பானமை நாத்திகம் இல்லாத சமூகச் சூழ்நிலையில் அவள் நன்றாகக் குழம்ப வாய்ப்பிருக்கின்றது. மேலும் அவளைச் சுற்றிலும் உள்ள அனவைருமே முட்டள்கள் என்ற மனப்பான்மை என்ற எண்ணமும் இந்த சிறிய வயதிலேயெ உருவாகியிருக்கும். - சிமுலேஷன்

தருமி said...

'பயங்கரமான’ அம்மா ! ஆச்சரியமாக இருக்கு ...
நீங்க, வேல் முருகன், the analyst - ரொம்ப ப்ராக்டிலான ஆளுங்க ..