Saturday, October 02, 2010

தீர்ப்பு - ‍‍ சில அவதானிப்புகள்

சன் டிவியில் அப்துல் கலாமும், நடிகர் சிவக்குமாரும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். "அந்த காலத்துலேயும் இந்த மாதிரி மத கலவரங்கள் இருந்ததா" என்பது போன்ற சிவக்குமாரின் கேள்விக்கு மத நல்லிணக்கத்தைப் பற்றி அவரது சிறுவயதில் மனதில் பதிந்த சம்பவம் மூலமாக விளக்குகிறார் கலாம்.

கலாம் மட்டுமில்லை, லதா மங்கேஷ்கர் வரை வலிந்து வலிந்து அனைவரும் மத நல்லிணக்கத்தை சமாதானத்தைப் போதிக்கிறார்கள். அமைதி காக்குமாறும், ஒற்றுமையே பலமென்றும், வேற்றுமையில் ஒற்றுமை என்றும் பாய்‍-பாய், பஹன்- பஹன் என்றும் போதிக்கிறார்கள். தேசவிரோத சக்திகளை முறியடிப்போம் என்கிறார்கள்.

இந்துக்களுக்கு ஆதரவாக கொடுத்த இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருந்தால் சமாதானவாதிகள். இல்லையென்றால், கலகம் உண்டு பண்ணுகிறவர்கள். 'நியாயமற்ற தீர்ப்பை நியாயமற்றது' என்று சொல்பவர்கள் கலவரக்காரகள், நிம்மதியை அமைதியை குலைக்கப் பார்க்கிறார்கள் என்று முத்திரைவேறு.

இதில் ஊடகங்களையும், அவை மத உணர்வை உசுப்பி விடப்பார்ப்பதாகவும், கலவரங்கள் நடக்காததால் ஊடகங்களுக்கு பெரும் இழப்பு என்றும் பேசிக் கொள்வதைக் கேட்க நேர்ந்தது. ஊடகங்கள், மக்களின் உணர்ச்சிகளை தூண்டுவது எந்த அளவுக்கு தவறாக படுகிறதோ, அதே அளவுக்கு தீர்ப்பைப் பற்றி நியாயத்தைப் பற்றி நம்பிக்கைகளின் அடிப்படையில் கொடுத்த நீதியைப் பற்றி பேசாமல் எந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களையும் அல்லவா சாட வேண்டும்?

இந்த தீர்ப்பு மிகுந்த மனச்சோர்வை கொடுப்பதாக புலம்பிய பலரும் (சோ கால்ட் ஜர்னலிஸ்ட்கள் மற்றும் முற்போக்குவாதிகள் உட்பட) தங்களது உற்சாகத்திற்கு எந்திரனை நாடி அலசி ஆராய்ந்து விமர்சனம் அல்லவா எழுதுகின்றனர்.

இதே போல முரணாகப்பட்ட இன்னொரு விஷயம் காஞ்சன் குப்தாவின் ட்வீட்டுகள். ஒரு முக்கியமான பத்திரிக்கையாளர் என்பதைத் தாண்டி அவரிடம் பெரிய நம்பிக்கைகள் இல்லை. எனினும், அவரது ஒரு குறிப்பிட்ட ட்வீட் இதை எழுத வைக்கிறது. அயோத்தி தீர்ப்பை பற்றி பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் பலரும் விவாதித்துக்கொண்டிருந்தனர். "ஷியா மற்றும் அஹம்தியா பிரிவினரின் மசூதிகள் சன்னி முஸ்லீம்களால் இடிக்கப்படுவதைப் பற்றி நாங்கள் எந்த கருத்தும் தெரிவிப்பதில்லை. அயோத்தி விவகாரத்தை பற்றி பாகிஸ்தான் நண்பர்கள் தள்ளியிருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றும் "அயோத்தியாவைக் குறித்து வலுச்சண்டைக்கான பேச்சுகளில் பாகிஸ்தான் நண்பர்கள் ஈடுபடுவது நன்றாக இல்லை. இந்தியா தனது முஸ்லீம்களை பார்த்துக்கொள்ளும்" என்றும் ட்வீட்டினார்.

அதிர்ச்சியாக இருந்தது.

"அடிமையின் வரலாறு" என்ற புத்தகத்தில் (டக்ளஸ்) வரும் நிகழ்ச்சியே நினைவுக்கு வந்தது. பண்ணை எஜமானன் ஒருவனுக்கு அவனிடம் இருக்கும் அடிமைகளின் எண்ணிக்கையே தெரியாது. அத்தனை பண்ணைகள், அதில் வேலை செய்யும் அடிமைகள். ஒருநாள் அவன் குதிரையில் வரும் போது ஒரு அடிமையை சந்திப்பான். அவனிடம் 'நீ யாரிடம் வேலை செய்கிறாய்" என்றதும் அடிமை தனது எஜமானனின் பெயரைக் கூறுவான். "அவர் உன்னை நன்றாக கவனித்துக் கொள்கிறாரா" என்றும் "கடினமான வேலைகளா" என்றும் உணவைப் பற்றியும் கேட்பான். அடிமையும் சாதாரணமாக உண்மைகளைக் கூறிவிடுவான். அதனைப் பற்றியும் மறந்துவிடுவான். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் யாருக்கும் அடங்காதவனாக மாறிவிட்டானென்றும் வேலைக்கு உகந்தவனல்ல என்றும் விலங்கிட்டு வேறு எஜமானனுக்கு விற்றுவிடுவார்கள். அதன்பின், அடிமைகள் சுதாரித்துக்கொள்வார்கள். யார் விசாரித்தாலும் "எங்கள் எஜமானனைப் போல யாருமில்லை" என்ற அளவுக்கு பதிலளிப்பார்கள். "அடக்கமான வாய்" என்பது பற்றி ஒரு பழமொழி கூட உண்டு என்று சிறுவயதில் வாசித்த நினைவு. அதில் உச்சகட்டமாக, அடிமைகள் ஒருவருக்கொருவர் தங்களது எஜமானர்களின் நல்ல குணங்களைப் பற்றியும் சண்டையிட்டுக் கொள்வார்களாம். தங்களது மனக்குறையை மறைத்துக் கொண்டு அவரவர் நலனில் அக்கறை காட்டும்படி மாறி விடுவார்களாம்.

இதற்கும், காஞ்சன் குப்தாவின் "India can look after its Muslims" என்ற ட்வீட்க்கும் சம்பந்தமிருப்பதாகவே தோன்றியது. (இதில் யார் அடிமைகள் என்ற கேட்டு விடாதீர்கள்) இந்திய முஸ்லீம்களும் மனக்குறையை மறைத்துக்கொண்டு, மசூதியை வேறு இடத்திற்கு மாற்றி விடலாமாவென்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆம்பூர், மூஸ்லீம்கள் பெருமளவில் வாழும் ஊர். முஸ்லீம் இந்துகலப்புத் திருமணங்களும் சகஜம். ஊரில் பெரிய பள்ளிக்கூடங்கள் மூன்று. அவை முறையே, இந்து மேனிலைப் பள்ளி, மஜ்‍உர் லும் பள்ளி மற்றும் கன்கார்டியா பள்ளி. பெயரிலிருந்தே புரிந்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். மேலும் முஸ்லிம் பெண்களுக்கான பள்ளி. மதத்திற்கொரு பள்ளியாக இருந்தாலும் எங்கள் வகுப்பில் முகம்ம‌து அலி சானும் (சாக்கியின் மீதுள்ள பற்றினால் இப்படித்தான் கூறிக்கொள்வான். உண்மையானப் பெயரே மறந்து போய்விட்டது) ஜரினாவும், ஜாஹீரும் இருந்தனர். அதே போல ஆண்களுக்கான முஸ்லீம் பள்ளிக்கூடத்திலும் மற்ற மத மாணவர்களைக் காணலாம்.

பாபர் மசூதி கலவரத்திற்குப் பிறகு இதில் நிச்சயமாக மாற்றங்கள் இருந்தது. (ஆமாம், கலவரம் எனும்போது 'பாபர் மசூதிக் கலவரம்' என்றும் தீர்ப்பு வரும்போது 'அயோத்தி தீர்ப்பு' என்றும் ஏன் மாறிவிட்டது?) கலவரங்கள் எதுவும் நடக்க வில்லையானாலும் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பதட்டங்கள் இருந்தது நினைவில் பதிந்திருக்கிறது..

ரம்ஜான், பக்ரீத் நாட்களில் மெயின் ரோடுகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு இருந்தது. விநாயகர் சிலைகள் இந்துக்கள் வாழும் பகுதிகளில் பெரும் செல்வாக்கு பெற்றன. ஏதாவது 'சந்த்' ஒருவர் பெரிய லட்டுவை கண்ணாடிப் பெட்டிக்குள் உபயமாக வைத்திருப்பார். சமஸ்கிருத வார்த்தைகள் எழுதப் பட்டிக்கும் டீ சர்டுகளை அணிந்த இளைஞர்கள் மும்முரமாக சுற்றிக் கொண்டிருப்பார்கள். "இந்து என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்கள் ரத்தம் கொதிக்க வேண்டும். உணர்வு பெற வேண்டும்" என்ற் விவேகானந்தரின் பொன்மொழிகளை உருவேற்றி வைத்திருப்பார்கள்.

சிறு மெட்ரிக் பள்ளியாக இருந்த விவேகானந்தா பள்ளிக்கூடம் வெளிப்படையாக ஆர் எஸ் எஸ் கூடாரமாக மாறியது. முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்துவ பண்டிகைகள் அன்று கண்டிப்பாக பரீட்சைகள் இருக்கும். விரும்பினால் கூட லீவு போட முடியாது. டெஃப் & டம் பள்ளிக்கு அருகிலிருந்த மதரஸாவும் வளரத் தொடங்கியது. சிறிதும் பெரிதுமான குட்டீஸ் அனைவரும் வெண்ணிற முழு உடையில் குல்லாய்கள் இட்டு மதராஸுக்கு செல்ல தொடங்கினர். மேல் விஷாரம் மதரஸாக்களுக்கு விளம்பரங்கள் செய்தித்தாளிலிருந்து டீவி வரை வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கோட்ஸே க்களையும், அப்சல்களையும் உருவாக்கும் இடமாக கல்விக்கூடங்கள் மாறியது இதற்குப் பிறகுதான். இந்தியா பாகிஸ்தான் மேட்சுக்கு வகுப்பில் பாதி அட்டென்டென்ஸ் இருக்காது.பாபர் மசூதி இடிப்பு என்று சொல்லப்பட்டாலும் இவை எல்லாம் எங்கள் ஊரில் துவங்கியது ஆர் எஸ் எஸ் சேவகர்கள் மூலமாகத்தான். ‍‍ பாபர் மசூதி இடிப்புக்கு பிறகுதான்.


இந்து‍‍ முஸ்லீம் குடும்ப நண்பர்கள் சந்திக்க நேர்ந்தால், இந்து‍ ‍ முஸ்லீம் நட்புறவு, யார் உண்மையான முஸ்லீம் என்பதற்கெல்லாம் விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டிய நிலைக்கு அவர்களை ஆளாக்கியது அந்நிகழ்வுதான்.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போது பாகிஸ்தானில் ஏதாவதொரு பெண் கூட இதே போல ஒரு இடுகை எழுதிக்கொண்டிருக்கக்கூடும். அவள் முஸ்லீமாகவோ இந்துவாகவோ ஏன் கிறிஸ்தவராகவோக் கூட இருக்கலாம்.
அங்கும் 92 க்குப் பிறகு ஏதாவதொரு இந்துக் கோவில் இடிக்கப்பட்டிருக்கலாம். அவளது ஊரில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். அவளது சிறுவயதில், சைக்கிளில் நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது அச்சத்தினால் மறுக்கப் பட்டிருக்கலாம்.

"தீவிரவாதம் என்பது ஒரு மனநிலை.அவர்களுக்கு மதம் என்ற ஒன்று இல்லை. சிலநேரங்களில் அவர்கள் இஸ்லாமின் பெயரில் சில நேரங்களில் இந்துத்துவா என்ற பெயரில் சில நேரங்களில் கிறிஸ்தவம் என்ற பெயரில் செயல் படுகிறார்கள். பாபர் மசூதிகளை மட்டும் கட்டவில்லை, இந்தியாவில் பல கோவில்களை கட்டியுள்ளார். அவரது பெயரால் இந்துக் கோவிலொன்றை கட்டுவோம். எல்லைகளைத் தாண்டி இது ஒரு செய்தியை எடுத்துச் சொல்லும். 92‍இல் பாபர் மசூதியை இடித்தபோது பாகிஸ்தானில் இந்துக் கோவிலை பாகிஸ்தானியர்கள் இடித்தனர். பாபர் மசூதியை இந்திய நீதித்துறை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பிரிக்கும்போது எதிர்ப்பைக் காட்டாமல் இந்துக்கோவிலை கட்டுவோம். இப்படி செய்வது நமது பலவீனம் என்று அர்த்தமல்ல. இது நமது நல்லெண்ணத்தின் வெளிப்பாடு. பாகிஸ்தானியர்கள் மாறி வருகின்றனர் என்றும் தங்க‌ளது எண்ணங்களையும் மாற்றிக்கொள்ளபட‌ வேண்டியவே என்று உணர்வார்கள்" என்று எழுதும் பத்திரிக்கையாளர் அவளுக்கு கிடைத்திருக்கிறார்.

ஆனால், நமக்கு?

6 comments:

அஸ்மா said...

நியாயமான நல்லதொரு பதிவு! வாழ்த்துக்கள் சகோ. இதே போலவே ஒவ்வொரு இந்திய குடிமகனும் சிந்தித்தால்தான் இந்தியாவில் பல இன, மதங்களையும் தாண்டி ச‌கோதரத்துவம் ஓங்கும்! இல்லையேல் இந்தியாவின் தலைவிதி இன்றைவிட மோசமாகதான் போகும் :(

காமராஜ் said...

ஓஹோ சிவக்குமாருக்கு 17 வயது அப்துல்கலாமுக்கு 90 வயசோ.இவர் பெரும்பாலும் ஒரு பழய்ய செய்யுளை மணப்பாடம் பண்ணிச் சொல்லிக்கொண்டுதானே இருப்பார். எண்பதுகளின் இறுதியில் சிவகாசி கலை இலக்கிய இரவில் கேட்டேன் அதுக்கப்புறம் எங்கே போனலும் இப்டித்தான்.
முன்னாள் ஜனாதிபதி.ஒரு நல்ல விஞ்ஞானி.
சும்மா இலகுவாக்க சொன்னேன்.
0
இது போல மனம் திறந்த கருத்துக்கள் சந்தோஷமளிக்கிறது.
இப்படிக்குரல்கள் மத கோஷங்களினாலும்,சினிமா மோகங்களினாலும்
காணாமல் மெலிந்து போகிறது.சரி செய்யனும்.

THE PEDIATRICIAN said...

நல்ல பதிவு ! வாழ்த்துக்களும் நன்றியும் !

பாபரும் ராமரும் சாதாரண மக்களுக்காக வாழ்ந்த சாதாரண அரசர்களே . அவர்களுக்கே இதுபோலே நாம் சண்டை போட்டு கொள்வது பிடிக்காது . உண்மையான பக்தர்கள் சண்டை போடுவது இல்லை . இது முழுக்க முழுக்க மோசமான அரசியல் வாதிகளாலும் , மட்டமான ஊடக வாதிகளாலும் நடைபெறும் கேலிகூத்து . மக்கள் இதை புரிந்து கொள்ளவேண்டும்

காலம் said...

பாபர் மசூதி,பாபர் மசூதி பிரச்சனையாகி பாபர் மசூதி சர்ச்சைக்குறிய இடமாகி,சர்ச்சைக்குறிய இடம் இப்போ ராமர்கோவில்பிரச்சனயாகியாக பரிமாணமடைந்திருக்கிறது இந்த ஊடங்களின் எழுதுகோல்களுக்கு

தீர்த்தங்களை ஊற்றி தீர்ப்பும்,கோமயங்களை ஊற்றி கட்டுரைகளும் எழுதும் இந்தபேனாக்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் முல்லை

மருது said...

//"India can look after its Muslims//

இந்தியா தனது முஸ்லீம்களை பார்த்துக் கொள்ளும் என்பது இதன் பொருள் அல்ல ..

சரியாக இந்திய நிலைமைகளின் படி கூறினால் ..

இந்தியா தனது முஸ்லீம்களை ’கவனித்துக்’ ’கொல்லும்’ ..

Ambedhan said...

உங்கள் கட்டுரை படித்தேன். அருமையாக இருந்தது. 'பாபர் மசூதி இடிப்பு' 'அயோத்தி தீர்ப்பு' என்று தலைப்புகளில் கூட அரசியல் வைத்திருக்கும் பத்திரிக்கைகளை கூர்மையாக கவனித்திருக்கிறீர்கள். 'காலம்' என்பவர் அளித்திருக்கும் பின்னூட்ட வரிகள் உண்மையாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.