Monday, October 11, 2010

போபால் : ஓவியக் கண்காட்சி

ஓவியமென்றால் உங்கள் நினைவுக்கு வருவது எது?

மோனோலிசா, ரவிவர்மாவின் இந்தியப் பெண்கள் (பால்குடம் ஏந்திய பெண், அன்னத்துடன் உரையாடும் பெண்) , வான்கோவின் சூரியகாந்தி, இயேசுவின் கடைசி இரவு விருந்து, அப்புறம் ரீடர்ஸ் டைஜஸ்டில் பின்னட்டையில் (முன்பெல்லாம்) வரும் பிரபல ஓவியங்கள் மற்றும் (எனக்கு) புரியவே புரியாத மாடர்ன் ஆர்ட்டுகள் - இதுவரை நான் பார்த்திருந்த ஓவியங்கள் இவை மட்டுமே.

போபால் - மண்ணில் புதையுண்டிருக்கும் பெயர் தெரியாத அந்த குழந்தையின் முகம்தானே நினைவுக்கு வருகிறது?

பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது - தற்செயலாக நடந்த கோர விபத்தோ அல்லது எதிர்பாராத‌ இயந்திரக் கோளாறோ அல்ல. அப்பாவி மக்களின் உயிரை துச்சமாக மதித்து நடத்தப்பட்ட படுகொலை!

இந்தப்படுகொலைக்கும், வழங்கப்பட்ட அநீதிக்கும் எதிராக வண்ணங்களின் தீற்றல்களை தனது தூரிகையால் பேசவைத்திருந்தார் தோழர் முகிலன்.

தூரிகைகளின் வழியே கூர்மையான அரசியல் பார்வைகளையும், தன் பார்வையில் அரசை விமர்சித்தும் இருந்த முகிலனின் ஓவியங்கள் - 'நமக்கு புரியிற மாதிரிகூட ஓவியம் இருக்கும்' என்று என்னை உணர வைத்தன.பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிபணிந்து, குற்றவாளிகளை தப்பிக்க விட்டிருக்கிறது இந்திய அரசு. 26 ஆண்டுகளுக்குப் பின் வந்த வந்த நீதியும் நீதியாக இல்லை. மக்களின் பாதுகாப்பை பற்றி எந்த கவலையும் இல்லாமல், வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை அமெரிக்க முதலாளிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது தரகு முதலாளிகள். அந்த ரசாயனக் கழிவுகள் இன்றும் அகற்றப்படாமல் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றன. மக்களும் அதனோடே வாழ்கின்றனர் - இது ஒரு போபால்தான்.

இன்னும் சில ஸ்லோ மோஷன் போபால்கள் தூத்துக்குடியிலும், கடலூரிலும், ஸ்ரீபெரும்புதூரிலும், திருப்பூரிலும் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. அபாயங்களை நமக்கு இழைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. நாமும் போபால்களோடே வாழும் அன்றாடவாசியாகி விட்டோம்.சமூகத்தின் பால் தான் கொண்ட அன்பு, அக்கறையின் காரணமாகவே உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக தனது தூரிகையை ஆயுதமாக நீட்டியிருக்கும் முகிலன்.
இதனால் அவருக்கு தனிப்பட்ட ஆதாயம் ஒன்றுமில்லை.

வீட்டில் ஒன்றரை வயது மகள், அவள் தூங்கியதும் இரவு 10 மணிக்கு மேல் வரையத் தொடங்குவாராம். கிட்டதட்ட 30 ஓவியங்கள். கடந்த 15 நாட்களுக்குள்ளாக வரைந்திருக்கிறார்.

ஓவியங்களை விற்பனை செய்வீர்களா என்றதற்கு, "விற்பனை செய்வது இல்லை. அப்படியே விற்பனை செய்தாலும் தோழர்கள்தான் வாங்குவார்களே தவிர மற்றவர்கள் யாரும் வாங்குவதில்லை. அரசை விமர்சிப்பது போன்ற ஓவியங்களை வைத்துக்கொள்ள யார் விரும்புவார்கள்? அப்படியே வாங்கினாலும் அதற்கு விளக்கங்கள் கூற வேண்டியிருக்கும். பொதுவாக அழகான காட்சிகளைக் கொண்ட‌ ஓவியங்களைர்தானே விரும்பி வாங்குவார்கள்" என்றார்.

பெங்சூயிக்காக - ஸ்டூல் போட்டு நீரூற்றிய கிண்ணத்தில் மலர்களை மிதக்க விடும் வீட்டுவாயில்களுக்கும், அதிர்ஷ்டத்தை வீட்டுக்குள் ஈர்க்க மூலைக்கு ஒன்றாக நிற்கும் சிரிக்கும் புத்தர் சிலைகளுக்கும் இருக்கும் மவுசு அப்பாவி மக்களின் உயிருக்கு இருக்கிறதா என்ன?


வணக்கங்களும் வாழ்த்துகளும் தோழர் முகிலன்!
பகிர்ந்த வினவுக்கு நன்றி.

கண்காட்சியை விட்டு வெளியே வந்து நந்தனம் சிக்னலில் காத்திருக்கிறேன். ஆயக்கலைகள் அறுபத்து நான்கும், பழந்தமிழர் பண்பாட்டுச் சின்னங்களும், பேரெழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளும் கண்ணெதிரே இருந்த சுவர் நெடுக வியாபித்திருந்தது.

"நம் கண்முன்னே, லாபவெறியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகள் ஒரு வர்க்கமாகவும், முதலாளித்துவ லாபவெறியால் வாழ்வை இழந்து நிற்கும் உழைக்கும் மக்கள் ஒரு வர்க்கமாகவும் பிரிந்து நிற்கின்றனர். இதில் எந்த வர்க்கத்திற்கு ஆதரவாக நமது பலமான கோடுகளை வரையும் தூரிகையை ஆயுதமாக நீட்டப் போகிறோம் என்பதே நமது கேள்வி? கேள்வி மட்டுமல்ல, அதற்கான விடைகளும் நாம்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துவோம்."

கண்காட்சியில் என் கைகளை வந்தடைந்த ஃபிலையரின் வாசகங்கள் சுற்றிச் சுற்றி வந்தன!

6 comments:

ஜெயந்தி said...

//போபால் - மண்ணில் புதையுண்டிருக்கும் பெயர் தெரியாத அந்த குழந்தையின் முகம்தானே நினைவுக்கு வருகிறது?
//
இதெல்லாம் காலத்துக்கும் மறக்க முடியாத கொடுமைகள்.

தியாவின் பேனா said...

super

nallurmuzhakkam said...

மக்களை தட்டியெழுப்பும் இந்த ஓவியங்களை பதிவிட்டதற்கு நன்றி. நானும் என்னுடைய தளத்தில் பயன்படுத்திக்கொள்கிறேன்.

மருது said...

இதையெல்லாம் பார்த்த பின்னரும் நமது மக்கள் தேர்தலில் வீசப்படும் சலுகைகள் என்ற எலும்புத் துண்டிற்கும், பணம் என்ற எலும்புத்துண்டிற்கும் ஆசைப்பட்டு இந்த படுகொலைக்கு காரணமான நயவஞ்சகர்களுக்கும் ., அதனைக் கண்டும் காணத்து போல் திரியும் கூட்டுக் களவாணிகளுக்கும் அவர்களது கூட்டணிக்காரர்களுக்கும் தான் ஓட்டுப் போடுவார்கள்.

வேறு உரிமைகளை விட்டுக் கொடுத்தாலும்(ஆளும் வர்க்கம் பறித்தெடுத்தாலும்), ஓட்டுரிமையை மட்டும் விட மாட்டார்கள் . வாழ்க ஜனநாயகம்.

ஜோதிஜி said...

நன்றி.

கல்வெட்டு said...

.

http://1.bp.blogspot.com/_BYt7AQ8CYu8/TLHrOb6IIMI/AAAAAAAAEEc/1bZN4wHFYPE/s1600/p4.JPG
போபால்கள் நடக்கலாம்.
அதற்காக நாடு முன்னேறாமல் இருக்கமுடியாது
‍-மன்மோகன்

:-((((((


மக்கள் என்றால் என்ன‌
நாடு என்றால் என்ன‌
முன்னேற்றம் என்றால் என்ன
வாழ்வதற்கும் பிழைப்பதற்கும் என்ன வித்தியாசம் ...

என்றெல்லாம் என்னவென்று தெரியாத ஒரு குமாஸ்தாவின் விளக்கம்.

நெஞ்சைப்பிடுங்கி நஞ்சையல்லவோ வைத்தீர்கள்.
நாசமாப் போகட்டும் நாங்கள்
‌எந்த சுரணையிம் இல்லாமல் இருப்பதற்கு...

ஆம் நாங்கள்தான் நீங்கள் அல்ல
நீங்கள் பாக்கியவான்கள் பிழைத்திருங்கள்
வரும் சந்ததிக்கு குழி தோண்ட நீங்கள் பிழைத்திருங்கள்

.