Saturday, February 14, 2015

மறக்க முடியாத ஒரு காதல் கதை (காதலர் தின ஸ்பெஷல்)


மானப்பன், கண்ணுக்கினிய இளைஞன். பிள்ளையில்லாத பெற்றோருக்கு தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை.  தெய்வத்தின் அருளால் பெற்ற பிள்ளையென்ற பெயரும் சேர்ந்துவிட, சீருக்கும் சிறப்புக்கும் சொல்லவா வேண்டும்?

பெற்றோரின் அன்பும் அரவணைப்போடும், உற்றார் உறவினரின் பாராட்டு களோடும் கூடிய இனியதொரு வாழ்க்கை.இவ்வளவும் இருந்தாலும்,  விளையாட்டுப் பிள்ளையாக இல்லாமல் வீரனாகவும் இருந்தான் மானப்பன். வில்லும், அம்புமே அவனது இரு கைகள்.

ஆனாலும், வாழ்க்கை ஒருபோதும் ஒரே மாதிரி இருக்காதல்லவா? தந்தையோடு முரண்படும் தருணமும் வந்தது. மானப்பனின் வில்லும் அம்பும் தந்தையுன் கண்களில் பட, தந்தையின் சீற்றத்தால் முறிந்தன வில்லும் அம்பும். இதைக் கண்டு மனமொடிந்து போனான் மானப்பன்.

வீரனக்கழகு அவனது ஆயுதம். அவை பறிக்கப்பட்டு, சேதப்படுத்தப்படுவது மானக்கேடு. அதன்பின் உயிர்வாழ்வது வீணென்று தோன்ற, வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளியேறுகிறான் மானப்பன்.  நண்பர்களிடம் செல்கிறான் . நினைத்த ஆறுதல் அவனுக்கு கிட்டவில்லை.

நண்பர்கள் என நினைத்தவர்களின் நயவஞ்சக முகத்தை கண்டுக் கொள்கிறான். அவர்களை சமாளித்து, இறுதியாக‌ மானப்பன் வந்தடையும் இடம், குடகு. 

குடகில், உறவினர் வீட்டில் அடைக்கலம் தேடிக்கொள்ளும் மானப்பன், கொஞ்சம் நிலம் வாங்கி உழவும், அறுவடை செய்யவும் தலைப்படுகிறான். பெரிய வீடு, தோட்ட துரவுகளென்று அமெரிக்கையாக  வாழ்ந்த வாழ்க்கையை இழந்தாலும், விவசாயம் செய்வது, விளைவித்ததை விற்பது என்று ஒரு எளிய ஆனால் நிம்மதியான‌ வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறான்.

இதன் நடுவில், அவன் வாழ்வில் வருகிறாள் 'செம்மரத்தி'. குடகின் அழகும், தீரமும் சேர்ந்த பெண். இருவரு க்கிடையில், காதல் மலர்ந்ததென்று சொல்லவும் வேண்டுமா? தீராக்காதலோடு மணம் செய்துக் கொள்கிறார்கள் மானப்பனும்,செம்மரத்தியும்.

 திருமணத்துக்குப் பின்னும், தொடரும் காதல் நாளுக்கு நாள் வளர்கிறது. சமயங்களில் ஒருவர் மீது ஒருவர் சொந்தம் கொண்டாடுகிறது. அதன் காரணமாகவே, இருவருக்கிடையில் சிறு சிறு செல்ல சண்டைகளும் மூள்கிறது.  

செம்மரத்திக்கு, உள்ளூர ஒரு பயம். எங்கே, மானப்பனை வேறு பெண்களிடம் இழந்துவிடுவோமோ என்ற லேசான பயம் தொற்ற, மானப்பன் வீடு திரும்புவது சற்றே தாமதமானாலும் அவனிடம் வழக்கு தொடுப்பாள்.

நல்லெண்ணெய் விற்றுவிட்டு வீடு திரும்ப தாமதமாகி விடுகிறது, ஒருநாள். செம்மரத்தி புரிந்துக்கொள்ளாமல், அவனிடம் சண்டை வளர்த்தத் தொடங்க, மானப்பனோ இயன்ற மட்டும் அவளிடம் விளக்குகிறான்.

சமாதானமாகாத மனதோடு மானப்பனுக்கு உணவு பரிமாறுகிறாள், செம்மரத்தி. சாப்பிட உட்கார்ந்து ஒரு கவளம் உள்ளே செல்வதற்குள்,  மானப்பனின் காதுகளில் விழுகிறது போர்முரசு. குடகர்களுக்கும் மலையாளி களுக்குமான போர் மூண்டதற்கான அறிவிப்பு அது. சாப்பிட அமர்ந்தவன், அப்படியே எழுந்து போருக்கு புறப்படுகிறான்.

செம்மரத்திக்கு இதயமே விண்டுபோகிறது. கணவனை இயன்றமட்டும் தடுத்துப்பார்க்கிறாள். எப்படியாவது அவனை நிறுத்திவிட முயல்கிறாள். கெஞ்சுகிறாள், குரலை உயர்த்தி கதறுகிறாள்.ம்ம்ஹூம்! மானப்பனை, எதுவும் தடுத்து நிறுத்திவிடமுடியவில்லை.

வாசலை, கடந்து செல்பவன்  நிலைப்படியில் தலையை இடித்துக் கொள்கிறான். சிவப்புத் தலையுடைய பச்சோந்தி ஒன்று அவனுக்கு குறுக்கே ஓடுகிறது. சாப்பிட அமர்ந்து சாப்பிடாமல் எழுந்ததையும், இந்த சகுனங்களையும் புரிந்துக்கொள்ளும் செம்மரத்தி, மறுகுகிறாள்.

ஓடிப்போய்,முன்னைவிட வேகமாக கணவனை தடுக்கிறாள். செம்மரத்தியின் கதறலுக்கும், சாபங்களுக்கும் காது கொடுக்காமல், போர் நடக்கும் இடத்துக்கு விரைகிறான் மானப்பன்.

குடகர்களின் தலைவனை, வீழ்த்தி போரில் வெல்கிறது மலையாளிகளின் படை. வெற்றிக்களிப்பில், வீடு திரும்புகிறார்கள் மலையாளிகள். இதன் நடுவில், மானப்பன், தன் கையிலிருந்து ரத்தம் வழிந்தோடுவதை உணர்ந்து பார்க்க, அவனது சிறுவிரல் வெட்டுண்டு போயிருப்பதை காண்கிறான். ஏதோவொன்று, பளீரென்று அவனை வெட்ட, பித்து பிடித்தவன் போல் போர்க் களத்துக்கு திரும்பி ஓடுகிறான்.

விரல் போனதைப் பற்றிக்கூட கவலைப்ப‌டவில்லை. விரலிலிருந்த அவனது மோதிரமே அவனை அப்படி துரத்தியது. செம்மரத்தியின் அன்பு பரிசல்லவா, அது! மோதிரத்தை இழந்து, வீட்டுக்குச் செல்வதை அவனால் நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை. அன்பின் பரிசை இழந்தபின், செம்மரத்தியை எப்படி  எதிர்கொள்வான்?  உடனே திரும்பி, ஓட்டமெடுக்கிறான்.

போர்க்களத்துக்கு, திரும்பி ஓடும்போது இவைதான் அவனது மனதில் தோன்றினவே தவிர, தான் அபாயத்தை நோக்கி ஓடுகிறோம் என்பதோ, நண்பர்களது குறுக்கீட்டுக் குரல்களோ எச்சரிக்கைகளோ  எதுவும் அவனது  செவிகளில் விழவேயில்லை.

விடிகாலை நான்கரை மணிக்கு, அந்த காவு'வை அடைந்த போது கேட்ட 'தோட்டம்'பாடலின், ஒரு பகுதி முழுக்கவே மானப்பன் எதிரிகளிடம் சிக்கி சின்னாபின்னமாக துண்டாடப் பட்டதை துயரத்தோடு சொல்லிக் கொண்டிருந்தது. ஆம், போர்க்களத்துக்கு திரும்பி ஓடிய மானப்பன்,  தோல்வியில் வெகுண்டு போயிருந்த குடகர்களது அம்புக்கு பலியாகிப்போனான்!

பரிசினிக்கடவிலிருந்து, கிட்டதட்ட 30கிமீ தூரத்தில் இருந்த 'காவு' அது. காலை மூன்று மணிக்கு எழுந்து தயாராகி யிருந்தோம். முந்தின நாள் மாலையிலிருந்தே  மானப்பன் கதை தோட்டம் வழியாக, சொல்லப்பட்டுக் கொண்டி ருந்திருக்கிறது. கீற்றுக்கொட்டகையினுள், திரைச் சீலைக்குப் பின்கறுப்பு மீசையும், முகத்தில்  வண்ணங்களும் கொண்டு கதிவனூர் வீரன் தயாராகிக் கொண்டிருந்தார்.'காவு'க்கு நேர் எதிரில், வாழை தண்டுகளில் தீப்பந்தங்கள் தயராக இருந்தன. சற்று தள்ளி, சிறுவர்கள், தழலை ஏற்றிக்கொண்டிருந்தனர். பந்தங்களுக்கு ஒருவர் சுற்றி வந்து நெய்யூற்ற, மற்ற சிலர் பந்தங்களுக்கு நெருப்பேற்றினார்கள்.


 
 சற்று நேரத்தில், பந்தங்கள் ஜெகஜோதியாக எரிய, செண்டைகள் முழங்கத் தொடங்கின.  நெருப்பும், மேளமும் உக்கிரமடைய, கீற்றுக் கொட்டகையிலிருந்து வெளியில் வந்தார் கதிவனூர் வீரன். கைகளில் வாளும், கேடயமும்.  உக்கிர கோப‌த்தில்,அவரது கண்களும் நெருப்பை கனன்றுக் கொண்டிருப்பதாகவே பட்டது.


 
தோட்டப்பாடலோடு, சுழன்று சுழன்று கதிவனூர் வீரன் ஆடிக்கொண்டிருக்க, காவு'க்கு எதிரில் தீப் பிழம்புகள், சிதையில் குதித்து உயிரைவிட்ட‌ செம்மரத்தியின் நாக்குகளாகவே இருந்தது.  செம்மரத்தியின், மானப்பனின் காதலை,மீண்டு வாழமுடியாத வாழ்க்கையை சொல்வதாகவே தோன்றியது.


 
வாழை தண்டுகளில் செய்யப்பட்ட அந்த தீப்பந்தங்கள், கதிவனூர் வீரனின் போர்ப்படை நண்பர்களை நினைவிலிறுத்தி ஏற்றப்படுகிறதாம்.நண்பர்களோடு, சுற்றி சுழன்று போரிடும் கதிவனூர் வீரன்!தீப்பந்தங்களின் மேடையின் நடுவிலிருக்கும் குத்துவிளக்குச் சுடரில் யாரைத் தேடுகின்றன, அவனது கண்கள்? செம்மரத்தியையா?


 
அந்த இருளில், லேசான குளிரில், மனத்தில் பாரத்தோடு அமர்ந்திருக்க, பாடல்கள் நம்மை உலுக்குகின்றன.காதலும், வீரமும், பொறாமையும், நயவஞ்சகமும், கோபமும், பயமும் என்று மானிடர்களின் அத்தனை உணர்வுகளுக்கு பலியாகிப்போன மானப்பனும், செம்மரத்தியும் 'தோட்டம்' பாடல்களாக -  காதலின் தெய்யங்களாக - மக்கள் மத்தியில் வாழ்கிறார்கள். காதல் மற்றும் வீரத்தின் சிறு தெய்வங்களாக, அவர்களிருவரும் ,இன்றும்  கண்ணூரின் கிராமங்களில் நினைவு கொள்ளப்படுகிறார்கள்! 

1 comment:

துபாய் ராஜா said...

மானப்பன் - செம்மரத்தி. மனதை கனக்க வைத்த காதல் கதை...