Tuesday, February 10, 2015

மய்யழிக் கரையோரம் - எம். முகுந்தன்

   
என் பி டியில்தான் இந்த புத்தகத்தை வாங்கினேன். வேறு எங்கு ரூ48க்கு நாவல்களை விற்பார்கள்? சாகித்திய அகாதமியில் கூட ரூ 100க்கு குறைவாக இருந்த புத்தகங்கள் இந்த முறை குறைவு. சில வருடங்கள் காத்திருந்தால், 30%க்கும் 40%க்கும் கழிவு வைத்து விற்பார்கள். நாவலுக்கு வருகிறேன்...புத்தகத்தின் பின்னுரையை பார்த்து, கொஞ்சம் வறட்சியாக இருக்குமோவென்று நினைத்தேன். ஆனால், நினைத்ததற்கு நேர்மாறாக இருந்தது.

வாசித்ததும் நெடுநேரம் உறுத்திக்கொண்டிருந்த ஒரு கேள்வி, நமது மண்ணின் இந்த நாவல், ஏன் ரஷ்ய இலக்கியங்கள், பிரச்சார நூல்கள் அளவுக்கு பேசப் படவில்லை என்பதுதான்.  ரஷ்ய இலக்கியங்களுக்கு சற்றும் குறைந்த தில்லை, இந்த நாவல்.  அதற்காக, பிரச்சார நாவல் என்றும் இதனை சுருக்கிவிட முடியாது. (ஒருவேளை, நாவல் இறுதியாக தாசன் என்ற தனிமனிதனின் வாழ்க்கையை, அவனது சோகத்தை பேசுவதால் இருக்குமோ?)

மய்யழி  கேரளாவின் சின்னஞ்சிறு ஊர். கண்ணூருக்கும் தலைச்சேரிக்கும் இடைப்பட்ட ஊர். இந்தியாவில் இருந்தாலும், மய்யழி ஒரு காலத்தில் வேறு உலகத்தை சார்ந்து இயங்கியது. மய்யழி என்பது மாஹே என்று நாம் அழைக்கும் ஃபிரெஞ்சு காலனி.

அந்த பிரதேசம், விடுதலையாவதற்கு முந்தைய காலகட்டத்திலிருந்து,  இந்திய யூனியனில் சேரும் காலம் வரையிலான  மய்யழி மக்களை, தெருக்களை, சர்ச்சை, மணியோசையை, மய்யழி புழையை,அது கலக்கும் அரபிக்கடலை, கடலுக்கு அப்பாலிருக்கும் வெள்ளி யாங்கலை சுற்றி சுழல்கிறது நாவல்.

'பாட்டி, நான் எங்கிருந்து வந்தேன்' என்ற  பேரக் குழந்தைகளின் கேள்விக்கு எல்லா மய்யழியின் பாட்டிகளுக்கு பதில் தெரியும்.  தொலைவில், சமுத்திரத்தில் தெரியும் வெள்ளியாங்கலிலிருந்துதான் எல்லா மய்யழி மக்களும் வருவது. பிறப்புக்காக காத்திருக்கும் மய்யழி மக்கள் அங்கே தும்பிகளாக பறந்து திரிந்து கொண்டிருப்பார்கள். அப்படி, பிறப்புக்கும் மறுபிறப்புக்கும் காத்திருக்கும் ஆன்மாக்கள், பிறப்பு களுக்கிடையில் சிறிது ஓய்வெடுக்கும் ஆன்மாக்கள்....

அப்படி வெள்ளியாங்கலிலிருந்து, பறந்து வந்த ஆன்மாதான் தாசன். நாவலின் முக்கிய நாயகன். நன்றாக படிக்கக்கூடிய ஒருவன். அதன் காரணமாக, ஊரில் கிடைக்கும் மரியாதையும், சலுகையும், அன்புமாக வளர்ந்து வரும் தாசன், பாண்டிச்சேரியில் மேற்படிப்பை முடித்துவிட்டு ஸெக்ரத்தாரியாவிலோ அல்லது பிரான்சில் ஸ்காலர்ஷிப்புடன் படிப்பையோ தொடருவான் என்ற அனைவரது நினைப்பையும் தலைக்கீழாக்கி எடுக்கும் ஒரு முடிவும், அதனையொட்டி   மய்யழியில் ஏற்படும் மாற்றங்களுமே நாவல்.

தமிழ்நாட்டுக்கு  பாண்டிச்சேரியைப் போல், கேரளாவுக்கு மய்யழி. பிரெஞ்சு காலனிக்காக மட்டுமல்ல... சாராயத்துக்கும்தான். பாண்டிச்சேரியை போலவே, அங்கும் குடி வழிந்தோடுகிறது. ப்ரெஞ்சுக் கல்வியை கற்பிக்கும் கல்லூரிகள் இருக்கின்றன. கப்பல்கள் வழியே பட்டாளங்களும், துரைகளும் வந்திறங்குகின்றனர். துரைகளும்,அவர்களது கைகளை பிடித்துக் கொண்டு கடற்கரையில் காற்று வாங்கச் செல்லும் மிஸ்ஸிகளும், அவர்களது குதிரை வண்டிகளும், பிற்காலத்தில் கார்களுமாக மய்யழியின் தெருக்கள் ஒரு காலத்தில் நிறைந்திருக்கின்றன.

துரைகளுக்கு  விசுவாசிகளாக, கிட்டதட்ட அவர்களை தெய்வமாக பார்த்து ஆராதிப்பவர்கள்தான் மய்யழி மக்கள்.அவர்களில் ஒருத்திதான் குறம்பியம்மா. குறம்பியம்மாவின் மகன் தாமு. பத்தாவது பாஸ் பண்ணிய தாமுவுக்கு ஒரு வெள்ளைக்காரரின் உபகாரத்தால் கோர்ட்டில் ரைட்டர் வேலை கிடைக்கிறது.

குறம்பி யம்மாவுக்கும், தாமு ரைட்டரின் குடும்பத்துக்கும் வெள்ளைக்காரர்களே  கண் கண்ட தெய்வமாகின்றனர். தாசன், ரைட்டர் தாமுவின் மகன். சூட்டிகையான சிறுவன். குடும்பத்தின் நிலை உணர்ந்து படித்து, பள்ளி இறுதித் தேர்வுகளில்  தேர்ச்சி பெறும் ஒருசிலரில் ஒருவர்.

அவனுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியராக அறிமுகமாகும் குஞ்ஞனந்தன் மாஸ்டர்,பின்னர் நமக்கு ஒரு கம்யூனிஸ்ட்டாக அறிமுகமாகிறார். அவரிடமிருந்து, தாசனுக்கும்,பப்பனுக்கும், வாசூட்டிக்கும் பரவும் சுதந்திர வேட்கையும், கம்யூனிஸ்ட் சித்தாந்தமும், மக்கள் மத்தியிலும் பரவி,  1954யில் மூப்பன் துரையையும், மற்ற பிரெஞ்சு பட்டாளத்தையும் கப்பலில் ஏற்றி சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பிய வரலாற்றை  கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது, நாவல்.

அவர்களின் சுதந்திர வேட்கையும்,மக்களின் போராட்டங்களும் நாவலின் பிற்பகுதியில் வருவதுதான். ஆனால்,நாவல் முழுக்க நிரம்பியிருப்பது,  விதவிதமான  மய்யழி மக்களும், அவர்களது கதைகளும், அன்றாட வாழ்க்கையும், ஆசைகளும்  நம்பிக்கைகளுமே!  நாவலின் சுவையை கூட்டுவதும்  அவர்கள்தான்!

பாம்பாக மாறி, தன் காதலியை அடைந்த குபேரன் செட்டியார், தாய்நாட்டின் மானம் காத்து சிதையில் எறிந்த பிரான்சு நாட்டின் இடையச் சிறுமி, தன் கோயிலின் வாழைக்குலையை எடுத்தவனை நொண்டியாக்கிய குளிகன் தெய்வம் என்று சுவாரசியத்துக்கு கொஞ்சமும் குறைவில்லை.   அதோடு,  குறம்பியம்மாவின் யானை தந்த பொடி டப்பாவும், மிஸ்ஸியின் கேக்கும் வாய்பேசாத கதாபாத்திரங்களாக நாவலின் இறுதி வரை பயணிக்கின்றன‌.

நாவலில், சில இடங்களில் தமிழர்கள் வருகிறார்கள். கறுப்பானவர்களாக, முரடர்களாக,மடையர்களாக பெண் பித்து பிடித்த‌ பிரெஞ்சு போலீசுக்காரர்களாக மய்யழில் வலம் வருகிறார்கள். (நாவல் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு நற்செய்தி!என்ன, நாவல் வந்து கிட்டதட்ட 60 வருடங்கள் ஆகியிருக்கும்...ஆனால், எதிர்க்கணும்னு முடிவு செய்திட்டா நாலு வருசம் என்ன....நானூறு வருசம் என்ன?)

நாவலை வாசிக்க வாசிக்க, லேண்டர்தான் என் கண் முன் விரிந்தது. பழங்கால பிரிட்டிஷ் காலத்து வீடுகள், பிரிட்டிஷ் பெண்களின் பெயர்களை தாங்கி நிற்கும் வில்லாக்கள், கல்லறைகள், அவர்கள் விட்டுச் சென்ற நாய்களின் இன்றைய தலைமுறை....

ப்ரெஞ்சு துரைகளும்,அவர்களது பட்டாளமும் கப்பலேறி செல்லும்போது கூடவே செல்லும் மய்யழி மக்கள், கொழும்பு வழியாக சென்று பாண்டிச்சேரியில் இறக்கிவிடப்படுகிறார்கள். துரைகளோடே பிரான்சுக்கு சென்றுவிடுவோம் என்று வெள்ளைக்காரர்களை துரத்திவிட மனமற்று விசுவாசம் காட்டுகிறார்கள். இறுதியில், பஞ்சத்தில் அடிபட்டவர்களைப் போல், சொந்த ஊருக்கே  திரும்பி வந்து பழைய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.  ஆனாலும், பிரெஞ்சு துரைகள் கப்பலும், பீரங்கியும் கொண்டு வந்து மய்யழியை திரும்ப கைப்பற்றுவார்கள் என்று  காத்திருக்கிறார்கள்.

 திரும்பி வராது என்று தெரிந்த பழங்காலத்து வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுக் கொண்டே, சுதந்திர வாழ்க்கையின்  சௌகரியங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.ஆப்சன் செய்து பிரெஞ்சு குடியுரிமையை ஏற்கிறார்கள். இதில், சுதந்திர போராட்டக்காரர்களும், புரட்சிக்காரர்களும் இருப்பதுதான் யாரும் எதிர்பாராத முரண்.

தாசன், யாருக்காக தன் சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தானோ அந்த மக்கள் அனைவரும் சுதந்திரத்துக்குப் பிறகு சொந்த வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள். வாழ்க்கையின் உன்னத செல்வங்களை அடைகிறார்கள்.  தாசனுக்கும் சந்த்ரீக்கும் மிஞ்சுவதென்னவோ   வெள்ளியாங்கலில் கிடைக்கும்  ஓய்வுதான்!

உயிர் போகும்  இறுதியில் 'தான்  தோற்றதாக' ஒப்புக் கொள்ளும் தாமு ரைட்டர், பெற்ற மகனிடம் எதற்காக அவ்வளவு வைராக்கியம் பாராட்ட வேண்டும்?  வெளி நாட்டிலிருந்து சம்பாரித்த பணத்தையெல்லாம், கொட்டி, தன் மகள் சந்த்ரீக்காக பங்களா கட்டும் பரதன், மகளின் காதலன் தாசனிடம் ஏன் அவ்வளவு கடுமையாக நடந்துக்கொள்ள வேண்டும்? அந்த இரவில், தன் தங்கை கிரிஜாவை சந்திக்க தாசன் ஏன் செல்லவேண்டும்?

 கண்ணூரின் இண்டு இடுக்கில், பெயர் தெரியாத கிராமங்களில் 'தெய்யங்களுக்காக' அலைந்து திரிந்த போது,  ஒவ்வொரு மின் கம்பங்களிலும், நிழல் குடைகளிலும் சின்னஞ்சிறு இடம் விடாமல் சே குவாராவின் முகத்தை அச்சிட்டிருந்ததை பார்த்தது வியந்தோம். சே குவாரேவின் சொந்த ஊரில் கூட, அவரை இந்தளவுக்கு போற்றியிருக்க மாட்டார்களென்று பேசிக்கொண்டோம். சிறு ஊர்களில் கூட, சிவப்பு கொடிகளும், கல்வெட்டுகளும்! அதற்கான பின்னணி, இந்த நாவலின் குஞ்ஞனந்தன் மாஸ்டர் வீட்டில் மாட்டியிருக்கும் படங்களிலிருந்துதான் துவங்கி யிருக்கிறது போலும்!

மாஹே செல்ல வாய்த்தால், கடற்கரை சாலையில், சர்ச் மணியோசை கேட்டபடி நடக்க வேண்டும். மய்யழியின் பாலத்தில் நடந்து தாசன் ஒளிந்திருந்த இடத்தை தேட வேண்டும். அரபிக்கடலையும், வெள்ளியாங்கலையும் பார்த்தபடி அமர்ந்துக்கொள்ள வேண்டும். மறுபிறப்புக்கு இடையில் சிறகடித்து பறக்கும் தும்பிகளில்   குறம்பியம்மாவை, லெஸ்லீ துரையை, குஞ்ஞி மாணிக்கத்தை, பாம்பு விஷமிறக்கும் மலையனை, கள்ளுக்கடை உன்னி நாயரை, பப்பனை, லீலாவை, சந்த்ரீயை, அவளது பாதசரங்களை,நாணியை, தேவியை, அவர்களது கலப்பின குழந்தைகளை, தாசனை, சந்த்ரீயை தேட வேண்டும்!

நாவல்: மய்யழிக் கரையோரம் (எம். முகுந்தன்)
தமிழில்: என் பி டி
விலை: ரூ 48
பக்கங்கள்: 266

No comments: