Monday, February 08, 2010

கண்களுக்கு புலப்படாத புர்காக்கள்

மார்ச் - ஏப்ரல் மாதங்களில், ப்ளஸ் டூ பரீட்சைகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு பெரிம்மாவுக்கு அழைப்பு வந்துவிடும். வேலூர், திருப்பத்தூர் அல்லது சென்னைக்கு இல்லாவிட்டால் ஹோசூருக்கு போகவேண்டும். நானும் குட்டியும் அவுத்து விட்ட கழுதைகள்தான். குறைந்தது இருபது நாட்கள் - வீட்டின் அனைத்து சட்டங்களும் மீறப்படும். (டீச்சர் பசங்களுக்கு இதன் அர்த்தம் இன்னும் நன்றாக புரியும்.) டீச்சர் வீடுகளில் ஒரு சொல்லப்படாத ஒழுங்கு மறைந்திருக்கும். காலையில் டிவி பார்ப்பது என்பது பெரும்குற்றம். வீட்டுக்கு கெஸ்ட் வந்தா உடனே விளையாடக் கிளம்பக்கூடாது,ரூம்லே போய் நடிக்கணும்...சாரி படிக்கணும். ஆறு மணிக்கு மேலே தெருவிலே விளையாடக் கூடாது. (பப்ளிக் எக்சாம் வருதுன்னாதான் கரண்ட் கட் பண்ணுவாங்க) அப்படி கரண்ட் கட்டாச்சுன்னா, உடனே குதிச்சுக்கிட்டு தெருவுக்கு ஓடக்கூடாது.(அப்படியே போனாலும் திரும்ப கரண்ட் வந்ததும் ‘ஹே'ன்னு கத்தக்கூடாது) கரண்ட் வந்ததும் ஒழுங்கா வீட்டுக்கு வந்துடணும்...இன்னபிற. இவையெல்லாவற்றிற்கும் இந்த இருபது நாட்களில் விலக்கு அளிக்கப்படும். ஆயாவை, நானும் தம்பியும் கூட்டு சேர்ந்து ஏமாற்றுமளவிற்கு கொஞ்சம் வளர்ந்திருந்தோம். மேலும், 'ஒற்றுமையே பலமெ'ன்று அறிந்துமிருந்தோம்.

கைருன்னிசா ஆன்ட்டி - இதேபோன்ற ஏதோவொரு ஏப்ரல் மாத்தில்தான் எங்களுக்கு அறிமுகமானார். ப்ளஸ் டூ தேர்வுகள் நடக்கும் சமயம்,'இந்த வருஷம் எங்கே போடப்போறானோ' என்று பேசிக்கொள்வார்கள். பெரிம்மா, கைருன்னிசா ஆன்ட்டி,அன்னி - எல்லோருக்கும் விடைத்தாள் திருத்துவதற்கு ஒன்றாகவே அழைப்பு வரும். அருகிலிருக்கும் ஊர் என்றால் தினமும் அனைஅவ்ரும் ட்ரெயினிலோ அல்லது பஸ்ஸிலோ போய் வந்துவிடுவார்கள்.
கடைசி நாளில் எல்லோரும் சேர்ந்து பாட் லக் செய்வார்கள். அல்லது ஹோசூர்,சென்னை மாதிரியான ஊர்களில், பள்ளி வளாகத்திலோ அல்லது டீச்சர்ஸ் ஹோமிலோ தங்கி விடுவார்கள். ஒன்றாக ஷாப்பிங் செய்வது,, சினிமாவுக்கு போவதுமாகவும், ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிடுவதுமாக... அவர்களது கல்லூரி நாட்களை உயிர்ப்பித்துக்கொள்வார்கள். வீடெனும் கூடை மறக்கவும் முடியாமல் கழட்டவும் முடியாமல் சனி- ஞாயிறுகளில் வருவார்கள் அல்லது போன் செய்வார்கள். எனக்கும் தம்பிக்கும் உண்மையில் அப்போது ஜாலியாகத்தான் இருக்கும். ஆயாவுக்குத்தான் பெருங்கஷ்டம். ஆனால், பெரிம்மா வரும்போதும் ஜாலி. ஏனெனில், வரும்போது விளையாட்டுச் சாமான்கள்/துணிமணிகள் வாங்கி வருவார். கைருன்னிசா ஆன்ட்டியின் வீடு ஹவுசிங்போர்ட்க்கு வெளியே பி-கஸ்பா செல்லும் வழியில் இருந்தது. ஒரு பையன் மற்றும் ஒரு பெண். கைருன்னிசா ஆண்ட்டிக்கு சொந்த ஊர் ஊட்டி. எப்படியும் மாதமொரு முறை வீட்டுக்கு வந்துவிடுவார்கள், குடும்பமாக. அப்ரார் என் தம்பி வயதும், ரேஷ்மா அவனைவிட இரு வயது சிறியவளாகவும் இருந்தாள். அதனால் நாங்கள் ரூமுக்கு போய் படிக்கவேண்டிய அவசியம் இருக்க வில்லை. எங்கள் விளையாட்டு சப்தம் கேட்டதும் உமாவும் ஸ்ரீதரும் வந்துவிடுவார்கள். பின்பு மெதுவாக ஆஃப்ரினும் சேர்ந்துக்கொள்வாள். கீழே நாங்கள் விளையாடிக்கொண்டிருக்க பெரியவர்கள் பேசிக்கொண்டிருபபர்கள்.

ஆன்ட்டி வேலை செய்தது பெண்கள் மட்டும் படிக்கும் முஸ்லீம் பள்ளிக்கூடம். அங்கிளுக்கு ஆம்பூரிலேயே இருந்த ஆண்களுக்கு மட்டுமான முஸ்லீம் பள்ளியில் பணி. தலைமையாசிரியராதலால், ஊரில் அவருக்கு நல்ல மதிப்பிருந்தது.இருவருக்கும் சனிக்கிழமைகளில் பள்ளியிருந்தால் அப்ராரும், ரேஷ்மாவும் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். நாங்கள் ஒன்றாக விளையாடுவோம். சாயங்காலமானால் நானும் குட்டியும் அவர்களை கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு வருவோம். ரம்ஜானன்று ஆன்ட்டி பிரியாணி கொடுத்துவிடுவார்கள். பொங்கலன்று நாங்களும் பொங்கல், கரும்பு, வடை இத்யாதிகள். நான் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தபிறகு இதெல்லாம் குறைந்து போயிற்று. எப்போதும் மூன்று ட்யூஷன், ஸ்பெஷல் க்ளாஸ் - அப்புறம் தம்பி செஸ் காம்படிஷன் - அப்ரார் ஒன்பதாம் வகுப்பு என்று அவரவரும் தத்தமது வாழ்க்கையில் அவரவருக்கான ஏணிகளில் தொங்கிக்கொண்டிஒருந்தோம். பெரிம்மா, ‘பேப்பர் வேல்யூவேஷன் போகணும்' என்று சொல்லும்போது மட்டும் 'என்ன உங்க ப்ரெண்ஸ் கேங்க் கூட ஆரம்பிச்சுட்டீங்களா, இந்தவாட்டி என்ன சினிமா' என்று வம்பிழுப்பதோடு நின்றுவிட்டது கல்லூரி விடுதிக்குச் சென்றபின்.


ஒரு முறை லீவுக்கு வந்தபோது புத்தக அலமாரியில் புதிதாக ஏதோ துருத்திக்கொண்டிருந்தது. இழுத்துப்பார்த்தபோது ஒரு வாழ்த்தட்டை போன்று இருந்தது. “பெரிம்மா, என்னது இது? உருதுலே எழுதியிருக்கு....இது எங்கே கொடுத்தாங்க” என்ற போது பெரிம்மா, ”அங்கியே வை..கைருன்னிசா ஆன்ட்டிது ”என்றார். “அவங்களுது ஏன் இங்கே வந்திருக்கு? நல்லாசிரியர் விருதா என்ன? ஏன், அவங்ககிட்டேயிருந்து வாங்கி வச்சிருக்கீங்க..உங்களுக்கு குடுக்கமாட்டாங்கன்னு முடிவு பண்ணீட்டீங்களா” - என்று பெரிம்மாவை கேலி செய்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக, நான் வம்பிழுக்கும் சமயங்களில் சிரிக்கும் பெரிம்மா சிரிக்கவில்லை. ஆனால், சாப்பிடும்போது சொன்னார், 'அது அவங்க கல்யாணத்துக்கு யாரோ கொடுத்ததாம். அவங்க வீட்டுக்காரர் ஆண்ட்டியை டிச் பண்ணிட்டாரு..ப்ராப்ளம் நடந்து நடு ராத்திரிலே இங்கே வந்தாங்க. கேஸ் போடப்போறேன்னு என்னமோ சொன்னாங்க. மேரேஜ் ஆனதுக்கான ஆதாரம் ஒன்னுமில்லே. இது ஒண்ணுதான் மங்கை இருக்குன்னு, ஏதாவது கேஸ் போடணும்னா தேவைப்படும்னு இங்கே கொடுத்திருக்காங்க'. ஒரு வாரம் இங்கேதான் இருந்தாங்க. அப்புறம், ஊட்டிக்கு போயிட்டாங்க'. அப்போது அப்ரார் கர்நாடகாவில் டாக்டர்க்கு படித்துக்கொண்டிருந்தான்.


'ஆனா, ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க, அழறாங்க.'பாவம்,அவங்களாலே அந்த துரோகத்தைத்தான் தாங்க முடியல. எப்படி மங்கை,எனக்கு தெரியாம இந்த ஆளு..இவ்வளோ நாளா..எனக்குக் கொஞ்சம் கூட சந்தேகமே வரலையே'- ன்னு அழறாங்க. ரொம்ப கஷ்டமா இருந்தது. 'எப்படின்னே தெரியல...துத்திபேட்லே அந்த வீடு இருக்காம். அது ஒரு பெருக்கற லேடி..முஸ்லிம் லேடிதானாம். ஆனா அவங்களுக்குத்தான் அது சாதாரணம் இல்ல...அதனாலே யாராலேயும் ஒன்னும் சொல்ல முடியல...எங்க அக்கா வீட்டுக்காரங்கல்லாம் தானே இருக்காங்க...யாருமே இப்படி இல்லையே மங்கை...ன்னு அழுறாங்க. என்ன சொல்றது? அவரோட அண்ணாங்கள்ளாம் வேலூரிலேதான் இருக்காங்க. ஆனா, யாராலேயும் ஒண்ணும் கேக்க முடியலை. கேட்டாலும், குர்ரான்லேயே சொல்லியிருக்குன்னு சொல்றாங்களாம்' என்றார். ‘நான் உன்கூட வந்து இருக்கேன், மங்கைன்னு சொல்றாங்க. அப்ரார் இருக்கான், பொண்ணு ஸ்கூல் பைனல். அவங்களுக்காகவாவது நீ கூட இருக்கணும்னு சொல்லியிருக்கேன். அவனுக்கு ஒரு வருஷத்துக்கு ஆறு லட்சம் கட்டனும். இது தனியா வந்துட்டா பசங்க பாவம்', என்றார் மேலும்.

அந்த அங்கிளைக் கடைசியாக பார்த்தபோது நரைத்துபோயிருந்த அவரது தலைமுடிதான் நினைவுக்கு வந்தது. நல்ல உயரமான தோற்றம். தடிப்பான குரல்.அவரை அப்படி என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அதுவும் ஒருவரை பற்றி நாம் மரியாதையாக, ரொம்ப நல்லவிதமா மனதில் பதித்துவிட்டு அவரைப் பற்றி வேறுமாதிரி கேள்விபட்டால் நம்பமுடியாமல் ஜீரணிக்க முடியாமல் இருக்குமே...அதுபோல உறுத்திக்கொண்டிருந்தது. அதன்பிறகு வேற எதுவும் கேட்கவில்லை.ஆனால், இஸ்லாம் முறைப்படி 'தலாக்'என்று மூன்று முறை சொல்லிவிட்டால் விவாகரத்தாகிவிடுமென்று மட்டும் கேள்விப்பட்டிருக்கேன். விடுதிக்கு வந்து மசூதாவிடம் கேட்டபோது ‘அப்படி உடனே சொல்ல முடியாது, ஆனா சாட்சி வைச்சு சொல்லணும்' என்றாள்.

அதற்கு அடுத்த லீவுக்கு வந்தப்போது ஆன்ட்டியும் அங்கிளும் ஒன்றாக இருப்பதாகவும், மூன்று அடுக்கு மாடி வீட்டை விற்றுவிட்டு வேற ஒரு வாடகை வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும், மேலும் அங்கிள் விஆரெஸ் வாங்கி விட்டதாவும் தெரிய வந்தது. அதோடு ஆண்ட்டியின் நகை, வீஆரெஸ் காசு எல்லாம் அந்த பொம்பளைக்கே கொடுத்துட்டாதா ஆண்ட்டி புலம்பினாங்களாம். 'இவங்க சம்பாத்தியத்துலேதான் குடும்பம்.பசங்க படிப்பு செலவு மட்டும் அவர் கொடுப்பாராம். ஆனா பேருக்கு ஹஸ்பெண்ட்டா வீட்டுலே இருக்கார்ன்னும் சொன்னாங்க'என்றார் பெரிம்மா. 'ரேஷ்மாவுக்கும் அதே மெடிக்கல் காலேஜ்லே சீட் கிடைச்சுடுச்சு. அவதான் பெரிய சப்போர்ட்டா இருக்காளாம், அப்பாகிட்டே சண்டை போட்டு கண்டிஷன்ல்லாம் போடுதாம். அப்புறம், கைருன்னிசாகிட்டே, எனக்கு ஹாஸ்டல் போகும்போது பொட்டி தூக்கவாவது அந்தாள் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இரும்மான்னு சொல்லுது, மங்கை' என்று ஆன்ட்டி சொன்னதாகவும் சொன்னார் பெரிம்மா.


இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் புதுக்கல்லூரியின் தர்ஹாவில் அப்ராருக்கு நிக்காஹ் நடந்தது. நானும் பெரிம்மாவும் சென்றிருந்தோம். ஆண்ட்டியின் அக்காக்கள், அண்ணிகள் எல்லோரும் ஓடி வந்து பெரிம்மாவின் கையை பிடித்துக்கொண்டார்கள். ஆண்ட்டியின் அக்காக்கள் அனைவருக்கும் பெரிம்மாவை நன்றாகத் தெரிந்திருந்தது. போனில் முன்பு பேசியிருப்பதாக பெரிம்மாவும் சொல்லியிருக்கிறார். ஒரு அக்கா அடிக்கடி ஆண்ட்டியின் வீட்டிற்கு வந்து போவார். ஆண்ட்டியின் அக்காக்கள் அனைவருமே டீச்சர்கள் என்றார் பெரிம்மா.ஒரு பாட்டி எங்களை விசாரித்தபோது, 'இவங்க மங்கை டீச்சர். அக்கா ப்ராப்ளம்லே இருந்தப்போ பலம் கொடுத்தவங்க',என்று அந்த அக்காக்களிலொருவர் சொன்னது காதில் விழுந்தது.அப்புறம் எல்லாம் சாப்பிட போய்விட்டோம். ஆன்ட்டி மிகவும் பிசியாக இருந்தார். மணப்பெண் உமராபாத்தை சேர்ந்தவர். அபரார் வேலை செஞ்ச ஹாஸ்பிடல் ஓனரின் பெண்ணாம். அவரே வந்து விசாரித்துவிட்டு திருமண ஏற்பாடுகள் செய்தாராம்.

நிக்காஹ்-வின்போது பெண்கள் அனைவரும் ஒரு மண்டபத்தில் குழுமியிருப்பார்கள். மைக்கில் உருதுவில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். வருபவர்கள் அனைவரும் மணப்பெண்ணிடம் சென்று முக்காட்டை உயர்த்திவிட்டு நலம் விசாரிப்பார்கள். கழுத்தில் ஆபரணங்களை தூக்கிப் பார்ப்பார்கள். அனைவரின் உடைகளும் சூப்பராக கலர்புல்லாக இருக்கும்.சம்க்கி புடவைகள், எம்ப்ராய்ர்டரி புடவைகளென்றும், கை முழுக்க மெஹ்ந்தி வைத்தும் ஹம் ஆப்கே ஹைன் கோன் படத்தின் பாடல் காட்சி நினைவுக்கு வரும். அங்கே இருக்கும் ஒரே ஒரு ஆண், கேபிளை கையில் சுற்றியபடி சுற்றி வரும் வீடியோ கவரேஜ்காரர் மட்டும்தான். போட்டோவெல்லாம் ஒரு உறவுக்காரபெண் எடுத்துக்கொண்டிருந்தார். திருமணம் முடிந்துவிட்டதென்று மைக்கில் ஏதோ சொன்னதும் உணர்ந்துக்கொள்வார்கள். பிறகு, நேராக பிரியாணிதான்.


உணவுக்குப் பிறகு, மணமகன் உறவினர்களை சந்திக்க வருவார் போல. காத்திருந்த போது, 'எங்க உங்க மாப்பிள்ளையை காணோமெ'ன்று ஆன்ட்டியிடம் கேட்டார் ஒருவர். அங்கிளின் அண்ணாவாம். வேலூரில், கல்வித்துறையில் இருக்கிறாராம். 'நீங்கள்ளாம்தான் போய் தேடி கூப்பிட்டு வரணும், அவ்ரை எதுவும் கேக்க மாட்டேங்கறீங்க' என்று ஆதங்கத்தை கொட்டினார் ஆன்ட்டி. அப்ரார் வந்ததும் ஆண்ட்டி அவனை தழுவிக்கொண்டார்.ஆன்ட்டி, அப்ராரைக் குறித்து பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். கூடவே ரேஷ்மாவைக் குறித்தும். ரேஷ்மாதான் வயதுக்கு மீறிய பக்குவத்துடன் நடந்துக்கொள்வதாகவும், அப்பாவை உருட்டி மிரட்டி வேலை வாங்குவதாகவும், ' என்ன கேட்டாலும் அந்த ஆளுக்கு உறைக்க மாட்டேங்குதே' என்று அங்கிளைக் குறித்தும் சொல்லிவிட்டு பிசியானார். திரும்பி வரும்போது, ஆன்ட்டியின் முகத்தில் ஒரு வித வலியிருந்ததென்று பெரிம்மா சொன்னார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு ரேஷ்மாவின் நிக்காஹ்-வின் போது ஆன்ட்டியைப் பார்த்தேன். வெளியில் காரில் அங்கிள் அமர்ந்திருந்தார்,உள்ளே நடப்பதற்கும் தனக்கும் ஒன்றும் சம்பந்தமில்லை என்பது போல. பெரிம்மா பார்த்ததும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக்கொண்டார்கள். நாங்கள் செல்வதற்குள் நிக்காஹ் முடிந்திருந்தது. ரேஷ்மா கூட படித்தவனாம். ஒன்றாக ட்ரெயினில் வரப்போக காதலும் வந்திருக்கிறது. 'ஆன்ட்டி, ஆன்ட்டி' என்று கைருன்னிசா ஆன்ட்டியிடம் போனில் பேசுவானாம். பின்னர்
அவனது குடும்பத்தைச் சந்தித்து நிக்காஹ் வரை வந்திருக்கிறது. இந்தத் திருமணத்திலும் அங்கிளின் பங்களிப்பு ஒன்றும் இல்லை. அப்ரார், குழந்தை -குடும்பம் -ப்ராக்டிஸ்- ஷேர் மார்க்கெட் என்று பிசியாகி விட்டான். கல்யாணத்திற்கு பிறகு அவனது பேச்சுக் கூட மாறிவிட்டதாக சொன்னாராம் ஆன்ட்டி. 'ஒழுங்கா டாக்டர் வேலையை பார்க்காம ஏன் ஷேர் மார்க்கெட்லேலாம் போகணும் 'என்று பெரிம்மாவை வேறு பஞ்சாயத்துக்கு அழைத்திருக்கிறார்.

லிஃப்டிற்காக காத்திருந்த நேரத்தில், எதிரில் வந்த அப்ரார் தன் உடையைக் குறித்துக் ஆன்ட்டியிடம் கேட்க, ‘எவ்ளோ செஞ்சாலும் நன்றி இருக்கணும்..அது இருக்க மாட்டேங்குது' என்று முணுமுணுத்தார்.

ஆன்ட்டி வாங்கிக் கொடுத்த உடையாம் அது. வீட்டிற்கு திரும்பி வரும்போது பெரிம்மா சொன்னார், ‘அப்ரார் அவங்கப்பாக்கு சப்போர்ட் செஞ்சு பேசறானாம். அவர் செய்றது சரிதான், குர்ரான்லேயே சொல்லியிருக்கு, உனக்குத் தெரியாதா...நீதான் அக்செப்ட் பண்ணி போகணும்னு சொல்றானாம். படிக்கற வரைக்கும், 'அம்மி அம்மின்னு' சொல்லிக்கிட்டு இப்போ என்ன சொல்றான் பாரு, எனக்கே புத்தி சொல்றான்னு கைருன்னிசாக்கு ரொம்ப மனசு கஷ்டம்' .

இளந்தாடியும் குழந்தை முகம் மாறாத அப்ரார்..., என்னிடம் சைக்கிள் பழகிக்கொண்ட அப்ரார்...,
ரேஷ்மாவின் கைப்பிடித்து எங்கள் வீட்டுக்கு வரும் அப்ரார்....
துரோகமிழைக்கப்பட்டதை தாங்கிக்கொண்ட தருணத்தைவிட இதைத்தாங்கிக்கொள்ளவே ஆண்ட்டி அதிக சிரமப்பட்டிருப்பாரென்று எனக்குத் தோன்றியது. ஆனால் அப்படி இல்லை, துரோகங்களை தாங்கிக்கொள்ள அவர் பழக்கப்பட்டுவிட்டார் என்பதே உண்மை .

காந்தா அத்தைக்கும், கைருன்னிசா ஆன்ட்டிக்கும் அதிக வேறுபாடுகள் இல்லைதான்.
காந்தா அத்தையாவது தண்டனை கொடுப்பதாக எண்ணி விலக்கிவிட்டு விலகியும் இருந்தார்.
ஆனால், இருவரும் சமூக அழுத்தங்களுக்காக, அந்தஸ்துக்காக, குழந்தைகளுக்காக வாழ்ந்து தீர்த்தவர்கள்.


ஒரு நிமிடம் அவர்களிடத்தில் என்னை வைத்து யோசிக்கிறேன்.

சமூக அழுத்தங்களுக்காக...குடும்பத்துக்காக...குழந்தைக்காக...காம்ப்ரமைஸ்?


சில புர்காக்கள் கண்களுக்கு தெரிகின்றன...சில புர்காக்கள் கண்களுக்கு தெரிவதில்லை!


ஜமாலன் அவர்களின்
இந்த இடுகையை வாசித்தேன். அதனோடு நூல் பிடித்த நினைவுதான் இது! இன்னும் கதிரவன் ஆன்ட்டியும், தூக்கு மாட்டிக்கொண்ட தஸ்தகீரின் ம்னைவியும், ஜரினாவும், மசுதாவும், ஃபாத்திமாவும், தற்கொலை செய்துக்கொண்ட அர்ஷியா(வாக மாறிய வித்யா) அக்காவும் நினைவிலாடியபடி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் விரைவில் பகிர்கிறேன்.

56 comments:

Deepa said...

தலைப்புக்காகவே தலை வணங்குகிறேன்.
அற்புதமான சிந்தனை முல்லை.

//சமூக அழுத்தங்களுக்காக...குடும்பத்துக்காக...குழந்தைக்காக//
:-)
வார்த்தைகளே வரவில்லை முல்லை.

பைத்தியக்காரன் said...

நண்பர் ஜமாலனுக்கு இப்படியொரு குணம் உண்டு. அவரது இடுகைகளை வாசிப்பவர்கள் பதிலுக்கு அழுத்தமான இடுகைகளை பிரசவித்தே தீர வேண்டும்...

மனதை கணக்கச் செய்துவிட்டீர்கள்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மாதவராஜ் said...

//இளந்தாடியும் குழந்தை முகம் மாறாத அப்ரார்..., என்னிடம் சைக்கிள் பழகிக்கொண்ட அப்ரார்...,
ரேஷ்மாவின் கைப்பிடித்து எங்கள் வீட்டுக்கு வரும் அப்ரார்....// இந்த இடம் மிக முக்கியமானதாய்த் தோன்றியது.

நிறைய நிறையச் சொல்கிறது. எனக்குள்ளும் சில மனிதர்கள் வந்து நின்றார்கள்.

வாழ்வின் ஒட்டத்தில் மாறிய காட்சிகளுக்குள் இருக்கும் விசித்திரங்களை மிக இயல்பாக விவரிக்க முடிகிறது உங்களால்.

வலிமையான எழுத்து. தொடருங்கள்.

க.பாலாசி said...

நினைவிடுக்களிலிருந்து இவ்வளவு விடயங்களை கொண்டுவருவதுதான் கஷ்டம்... நமக்கெல்லாம் நேத்து நடந்ததுக்கூட மறந்திடுது... எப்டித்தான் எழுதிறீங்களோ தெரியல...நினைவுகள் சில நேரங்களில் பெருமூச்சொன்றையே விடையாகத்தரும்...

நல்ல அனுபவ இடுகை...

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
வினவு said...

முல்லை,

மத்தின் துணையோடு ஆண்கள் பெண்ணுக்கிழைக்கும் அநீதிகளை வாழ்க்கையின் மூலம் உரைக்கிறது உங்கள் பதிவு. ஆனாலும் இதை இசுலாத்தின் குறைபாடக மட்டும் குறுக்கிப்பார்க்கும் சில இந்து ஆண்கள் தங்களைத் தாங்களே ஆசிர்வதிக்கவும் செய்வார்கள் என நினைக்கிறேன்.

ஷங்கர்.. said...

சில புர்காக்கள் கண்களுக்கு தெரிகின்றன...சில புர்காக்கள் கண்களுக்கு தெரிவதில்லை!
//

என்ன ஒரு ஆழமான வரிகள்.. எதுவுமே தோணாமல் படித்து முடித்தேன்..

குடுகுடுப்பை said...

பெரிய பதிவு ஆனாலும், முழுமையாக படிக்க வைத்துவிட்டீர்கள்.

gulf-tamilan said...

/சில புர்காக்கள் கண்களுக்கு தெரிகின்றன...சில புர்காக்கள் கண்களுக்கு தெரிவதில்லை!/
உண்மை!!!
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்றவர்க
ளைப்பற்றியும் எழுதுங்கள்

கண்ணகி said...

மனதை கரைய வைக்கிறது..எல்லா இடங்களிலும் பெண்களின் வலிகள் ஒரே மாதிர்தான்..சொல்ல வேறில்லை...

அம்பிகா said...

குழந்தைகளுக்காக தன் சந்தோஷங்களை தொலைத்து கொள்ளும் பெண்கள், அந்த குழந்தைகளின் நிராகரிப்பையும் ஜீரணித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
வலிமையான எழுத்து மட்டுமல்ல. வலியை தரும் எழுத்தும் கூட.

அய்யனார் said...

/துரோகமிழைக்கப்பட்டதை தாங்கிக்கொண்ட தருணத்தைவிட இதைத்தாங்கிக்கொள்ளவே ஆண்ட்டி அதிக சிரமப்பட்டிருப்பாரென்று எனக்குத் தோன்றியது/

உண்மைதான். அப்ராரின் சித்திரம் கண் முன் வந்து போகிறது.மிகக் குரூரமான சமூக நிதர்சனத்தின் இன்னுமொரு முகம்தான் அப்ராரினுடையது.

அமைதிச்சாரல் said...

//சில புர்காக்கள் கண்களுக்கு தெரிகின்றன...சில புர்காக்கள் கண்களுக்கு தெரிவதில்லை! //

ஆமாம்ப்பா..

//சமூக அழுத்தங்களுக்காக...குடும்பத்துக்காக...குழந்தைக்காக...காம்ப்ரமைஸ்?//

வலியாய பிரச்சினையின் முடிச்சை தொட்டுட்டீங்க... அழுத்தமான எழுத்து.

ராமலக்ஷ்மி said...

மறக்க முடியாமல் இறக்கி வைத்த பகிர்வு ஏறி விட்டது எங்கள் மனதிலும் பாரமாய்.

செல்வா said...

இது போன்ற குடும்ப சிக்கல்களில் நமக்கு இரு தரப்பு விவரங்களும் முழுவதும் தெரிய வாய்ப்பில்லை. அதுவும் கணவன் மனைவி பிரச்சினைகளில் பெரிதும் அந்தரங்கமான உளவியல் மற்றும் உடலியல் கூறுகள், அவற்றின் பொருந்தா தன்மையால் வரும் குளறுபடிகள் ஆகியவற்றை ஆராய நமக்கு வசதியின்றி ஆண், பெண், மதம் என்று மேலோட்டமாக விஷயங்களை பொதுமைப் படுத்தி விடுகிறோம். குடும்பத்தை பிரதானமாக கொண்ட இந்த சமுதாய அமைப்பு தனி மனித வாழ்வில் எத்தகைய பலிகளை கேட்கும் என எவ்வளவு விவரம் தெரிந்தாலும் இதிலிருந்து விலகியிருக்கவோ, தப்பிக்கவோ பெரும்பாலோனாரால் முடிவதில்லை. குடும்பத்துக்காக தியாகம், குழந்தைகளுக்காக கஷ்டம், துணையின் துரோகம் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் அழு குரல்கள்.

// சமூக அழுத்தங்களுக்காக...குடும்பத்துக்காக...குழந்தைக்காக...காம்ப்ரமைஸ்?
சில புர்காக்கள் கண்களுக்கு தெரிகின்றன...சில புர்காக்கள் கண்களுக்கு தெரிவதில்லை! //
எல்லா புர்காக்களும் கண்களுக்குத் தெரிந்த படிதான் இருக்கின்றன. நமது வசதிக்காகவும், சுய மேட்டிமைக்காகவும் சிலவற்றை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம். ஏதோ ஒரு புள்ளியில் அது சுமையானதும் உதறித் தள்ளி புலம்புகிறோம்.
தனி மனித ஆசா பாசங்களை நிறைவு செய்து கொள்வதே யன்றி பிறிதொரு நோக்கமுமில்லா மர்மமான சதுரங்க ஆட்டம்தான் வாழ்க்கை. நமது காய் நகர்த்தகல்களில் நாமே சிக்கிக் கொள்வதும் வெட்டுப் படுவதும் வாடிக்கைதான். குழந்தை பெற்றுக் கொள்ளும் யாவரும் தங்கள் வாழ்வை முழுமையாக்கிக் கொள்ளவும், குழந்தை செல்வத்தின் அதி உன்னத மகிழ்ச்சிக்காகவும் தான் அதில் உள்ள சிரமங்களை துணிந்து ஏற்கின்றனரேயன்றி அது ஒரு சமுதாய சேவையோ அல்லது வேறு எதுவோ இல்லை.

இது பொதுவாக.... மற்றபடி இந்த பிரச்சினையில் இஸ்லாத்தின் தாக்கம் குறித்து எழுத நிறைய இருக்கிறது. நேரம்தான் இல்லை. :)

பப்புவுக்கும் உங்களுக்குமான உரையாடல்களுக்கு நான் ரசிகன். உங்களைத் தொடர்ந்து அதற்காகவே வாசிப்பவன். சில வேளைகளில் இது போன்ற எதிர்பாராத எழுத்துகளும் உங்களிடம் வெளிப்படுவது மிகவும் மகிழ்ச்சி. நிறைய எழுதுங்கள் முல்லை.மிக்க நன்றி.

வருண் said...

அப்ரார்??

எனக்குப் பரிச்சயமில்லாத இஸ்லாமியப் பெயர்.

நீங்க சொல்ல வர்றதைப்பார்த்தால் அப்ரார் என்கிற ஆண்பிள்ளை, ரேஷ்மா என்கிற பெண்பிள்ளை மாதிரி நல்லவனாக இல்லாமல் நன்றி இல்லாதவனாக தந்தை பக்கத்தை நியாயப்படுத்தி தந்தையை மன்னிக்கச்சொல்லி மதத்தைத் துணைக்கு அழைக்கிறான் என்பதுபோல் சொல்றீங்க?

I think he is just using the religion to support his dad. All he wants it, his mom to forgive him and move on. It is hard to change the past.

உங்க ஆண்ட்டிக்கு அனுபவிச்ச வலிக்கும், அவர் குழந்தைகளுக்கு இருக்கிற வலிக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு.

அப்பா, அம்மாவின் துரோகியா இருந்தாலும். பெரிய தவறே செய்து இருந்தாலும், தன் நண்பர்கள் சொந்தக்காரகளிடம், என் அப்பா பெரிய துரோகி கீழ்த்தரமானவர்னு சொல்லிக்கொண்டு திரிவதைவிட, அப்பா அம்மா சேர்ந்து ஒண்ணா வாழ்வதைத்தான் நல்லதுனு நினைக்கிறாங்க, அப்ரார் போன்ற வளர்ந்த குழந்தைங்க. "அப்பாவின் அசிங்கமான பகுதியை நண்பர்களிடம் காட்டவோ, அதை நெனச்சு நெனைச்சு அவரை வெறுக்கவோ அவர்கள் விரும்புவதில்லை.

தன் மனதளவில் இதை அப்ரார் சொன்னதாகவோ, சரி என்று நினைப்பதாகவோ நீங்கள் நினைத்தால் அது தவறுனு தோனுது. அப்பா-அம்மா சேர்ந்து வாழனும் என்பதுதான் அவர் எண்ணம். அதுக்காகத்தான் அப்பாவை மன்னிக்கச் சொல்லுகிறார். மதத்தையும் துணைக்கு அழைக்கிறார்னு நினைக்கிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

//அதுவும் ஒருவரை பற்றி நாம் மரியாதையாக, ரொம்ப நல்லவிதமா மனதில் பதித்துவிட்டு அவரைப் பற்றி வேறுமாதிரி கேள்விபட்டால் நம்பமுடியாமல் ஜீரணிக்க முடியாமல் இருக்குமே //

தவறாகப்
புரியப்படுபவர்கள் அடிப்படையில் நல்லவர்களாக இருப்பதில்லையா...அதுபோலத்தான் இதுவும்.//இஸ்லாம் முறைப்படி 'தலாக்'என்று மூன்று முறை சொல்லிவிட்டால் விவாகரத்தாகிவிடுமென்று மட்டும் கேள்விப்பட்டிருக்கேன் //

அப்படி ஒன்றும் எளிதாக அதைச் செய்துவிட முடியாது முல்லை. வேண்டுமானால் கோர்ட்டில் சட்டப்படி விவாகரத்து பெறும் நாட்களைவிட பள்ளிவாசல் மூலம் தலாக் பெறும் நாட்கள் குறைவாக இருக்கும். என் அளவில் சகதுணையை நம்பவைத்து ஊர் மேய்வதைவிட முறைப்படி விலக்குமேல்.

நசரேயன் said...

//
குடுகுடுப்பை said...
பெரிய பதிவு ஆனாலும், முழுமையாக படிக்க வைத்துவிட்டீர்கள்.
//

ஆமா.. ஆமா

பா.ராஜாராம் said...

முல்லை,

பிரமிப்பான இடுகை இது.

"போடா டேய் பைத்தாரா"

என்பது மாதிரியான விஸ்வரூபம்.

குட்டியூண்டாக உணர்கிறேன்.

சின்ன அம்மிணி said...

//சில புர்காக்கள் கண்களுக்கு தெரிகின்றன...சில புர்காக்கள் கண்களுக்கு தெரிவதில்லை!
//

என்ன ஒரு பஞ்ச் லைன் ஆச்சி.
படிக்க மனம் கனத்துப்போச்சு

நட்புடன் ஜமால் said...

நல்ல நினைவு மீட்டல்கள்.

இஸ்லாத்தை சரியாக விளங்கி நடந்து கொள்ளாத இஸ்லாமியர்கள் எனப்படுபவர்களால் - இஸ்லாம் தவறானதாகவே உளா வருகிறது அப்ராரிடம்.

சரி இதை பற்றி பேசினால் மக்கள் வேறு பக்கம் கொண்டு போய்ருவாங்க

நீங்க பார்த்ததை உணர்ந்ததை தெளிவா சொல்லியிருக்கீங்க, இப்படித்தான் இந்த இடுக்கையை பார்க்க இயலுகின்றது.

என் கருத்து படி அப்ராரின் தந்தை செய்த தவறைவிட அப்ரார் சொல்வதே மிகவும் வேதனையாக இருக்கின்றது.

காமராஜ் said...

இப்படி புதைந்து கிடக்கிறவற்றை எடுத்துச்சொல்ல இன்னும் கூடுதல் வலிமையை முல்லை பெறவேண்டும்.தெருக்களும் வீடுகளும் அலையலையாய் கொண்டுவரும் நினைவுகள் இவை.
உண்மையில் ரொம்பப் பூரிப்பாக இருக்கு. இரண்டு மூன்று முறை படிக்கவைத்துவிட்டாய்.

The Analyst said...

A very moving post!

"ஒரு நிமிடம் அவர்களிடத்தில் என்னை வைத்து யோசிக்கிறேன்.
சமூக அழுத்தங்களுக்காக...குடும்பத்துக்காக...குழந்தைக்காக...காம்ப்ரமைஸ்?"


அதுதான் எம்சமூகத்தில் பிறந்ததிலிருந்தே பெண்களைத் தயார் படுத்துகின்றார்களே இப்படி எல்லாவற்றையும் பொறுத்து, அடிபட்டு, அடிபட்டே, சுய மரியாதையை மூட்டை கட்டி வைத்து விட்டு, மனதைக் கல்லாக்கிக் கொண்டு வாழ்க்கை நடத்த.

ஆனாலும் குட்டக் குட்டக் குனிந்துகொண்டே நின்றோமாயின் யாருமே எம்மைப் பாவம் பார்த்து குட்டுவதை நிறுத்த மாட்டார்கள். நாமாகவே தடுத்து நிறுத்தினாற் தான் உண்டு.

Even though it's really hard, if we don't stand up and actively resist discrimination, the cycle of abuse can not be broken.

tamil said...

Women suffer when personal laws are not based on gender equality.We can talk,write and discuss sufferings of women who are victims of unjust personal laws and [patriarchal society without realising this or without talking about it.
'மத்தின் துணையோடு ஆண்கள் பெண்ணுக்கிழைக்கும் அநீதிகளை வாழ்க்கையின் மூலம் உரைக்கிறது உங்கள் பதிவு. ஆனாலும் இதை இசுலாத்தின் குறைபாடக மட்டும் குறுக்கிப்பார்க்கும் சில இந்து ஆண்கள் தங்களைத் தாங்களே ஆசிர்வதிக்கவும் செய்வார்கள் என நினைக்கிறேன்'

Hindu personal law is not perfect. It has undergone changes since 1950s.Today Hindu women enjoy better rights than muslim women because of this.They have better rights in matters relating to inheritance, divorce and claim over ancestral property.Bigamy was abolished by changes in Hindu law.Hindu society is not perfect, nor Hindu Law is.
But Hindu Law provides more security and rights to women than muslim or christian personal law.
Vinavu will never tell these facts.
Kamraj,Madhavraj will never accept the fact their party has compromised with muslim fundamentalists in this issue.Muslim women in Moracco enjoy better rights than muslim women in India.
Mary Roy, mother of Arundathi Roy filed a case.Google and you would know why.You would be shocked if you were to know the facts.Getting divorce is difficult for a married christian woman even today.For married Hindu woman that is easier because Hindu law is more progressive and liberal.

தமிழ் பிரியன் said...

ஆச்சி.. நல்ல பதிவு. நேத்து பூரா யோசிச்சு எழுதுறேன். நீங்கள் சொல்லும் கால அளவைப் பார்க்கும் போது, ஏதோ ஒரு கட்டத்தில் அந்த அங்கிள் தவறு செய்தது மட்டும் புலனாகின்றது. சபலத்தில் காரணமாக அல்லது வேறு ஏதோ காரமாணமாக செய்த இந்த தப்பை அவரால் மாற்றிக் கொள்ள இயலாத சூழல் உருவாகி இருக்கலாம் இல்லையா? இதே ஆன்ட்டி போல் அங்கும் ஒரு ஆன்ட்டி இருப்பார்கள் இல்லையா? அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கலாம். நம் ஆன்ட்டி வருடம் 6 லட்சம் ரூபாய் செலவு செய்து மகனைப் படிக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர். அங்கு நிலைமை வேறு மாதிரி இருக்க வாய்ப்பு இருக்கும் அல்லவா? வேலையில் இல்லாத, வறுமையில் இருக்கும் மனைவி, குழந்தைகள் இருக்கலாம் இல்லையா? அதனால் தான் அவர் அமைதியாக இருந்து இருக்கலாம். இதை சப்பைக்கட்டுக்காக சொல்லவில்லை. நம் சமூகத்திடையே இரண்டு திருமணம் என்பது சமூகக் கொடுமையாகவே பார்க்கப்படுகின்றது.. இந்த நிலை சமீபத்தில் 50 ஆண்டுகளில் உருவானது தானே.. நமது தமிழ் சமூகத்தில் பல தார மணம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து வந்தது தானே... அந்த அங்கிள் தனது தவறை உணர்ந்தவராகவே படுகின்றார். அதே போல் அப்ராரும் பெரியவனாகி விட்டான். இன்னும் அழிக்க இயலாத பழைய சம்பங்களை எண்ணி அதே நிலையில் இருப்பதை விட எதார்த்தத்தை உணர்ந்து கொள்வது நல்லது. அப்பாவும், அம்மாவும் பிரிந்து இருப்பது பிள்ளைகளுக்கு கொடுமையான விஷயம் தான். அப்பா மீண்டு வர இயலாத ஒரு சூழலில் இருக்கும் போது அதோடு ஒத்துப் போகச் சொல்வது ஒன்றும் தவறாகப்படவில்லை.

இது ஒரு சமூகப் பிரச்சினை தான்... தினசரிகளில் பார்த்தால் மத வேறுபடு இன்றி இப்பிரச்சினைகளை நீக்கமறக் காணலாம். இதற்கும் புர்காவுக்கும் என்ன சம்பந்தம்?.. ;-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

சமூக அழுத்தங்களுக்காக...குடும்பத்துக்காக...குழந்தைக்காக //

:((((

சமரசங்கள்

Rithu`s Dad said...

அருமையான பதிவு முல்லை..காலையிலேயே கண்கலங்க வைத்துவிட்டீர்கள்..

சில நேரம் கற்பனையைவிட உண்மை மிகவும் பிரம்மிக்க வைப்பதுண்டு.. உங்கள் எழுத்துக்களும் அதுபோலவே..

ஹுஸைனம்மா said...

தற்காலங்களில் விவாகரத்து செய்த குடும்பங்களில், பெரும்பாலும் பிள்ளைகள் தாயோடு இருப்பார்கள். வார இறுதியில் அப்பாவோடு சென்று வருவார்கள். அக்குழந்தைகளுக்கு வாரத்தில் 5,6 நாள் உடனிருந்து பாசத்துடன் பராமரிக்கும் அம்மாவைவிட, 1-2நாள் விளையாடும் அப்பாதான் பெரிதாகத் தெரிவார்.

மற்றபடி அந்த அங்கிள்கள், அனுமதி இருந்தாலும், இல்லையென்றாலும் அவர்கள் அடிப்படைக் குணமே வாழ்வில் பிரதிபலிக்கும்.

☀நான் ஆதவன்☀ said...

நெகிழ்வான பதிவு பாஸ். ஆழ்மனசுலயிருந்து எழுதியிருக்கீங்க போல. பெண்கள் என்று வந்துவிட்ட பிறகு மதம் என்ன ஜாதி என்ன? எல்லாம் ஒரே போல் அநீதி தான் இழைக்கின்றன :(

naathaari said...

'டீச்சர் வீடுகளில் ஒரு சொல்லப்படாத ஒழுங்கு மறைந்திருக்கும்'

'அவரவரும் தத்தமது வாழ்க்கையில் அவரவருக்கான ஏணிகளில் தொங்கிக்கொண்டிருந்தோம்'

கவிதை மொழிகள் இவை

'அவர்கள் இடத்தில் என்னை வைத்துப்பார்க்கிறேன்'-சமூக அக்கறையின் வெளிப்பாடு இவை

இன்னும் நிறைய இருக்கிறார்கள் என்று முடிக்கிறபோது இனம் தெரியாத சோகமும் நீங்கள் இன்னும் எழுதப்போகிறீர்கள் என்ற சதோசமும் கலந்த புதுவிதமான அனுபவத்தில் திளைக்க செய்தது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவர்களின் நிலைமை கஷ்டமா இருந்திருக்கும் .. எதற்காகவாது காம்ப்ரமைஸ் செய்துபோறது தான் முக்கால்வாசி பேருக்கு வாய்க்கிறது. :(

சென்ஷி said...

நல்ல பதிவு முல்லை...

ஜெயந்தி said...

மதம், மொழி கடந்து அனைத்து இந்தியப் பெண்களின் நிலையை பிரதிபலித்துள்ளீர்கள். அருமையான பதிவு.

Barari said...

i repeat tamilpiriyan.

Dr.Rudhran said...

சில புர்காக்கள் கண்களுக்கு தெரிகின்றன...சில புர்காக்கள் கண்களுக்கு தெரிவதில்லை!
keep writing.

D.R.Ashok said...

எல்லா குடும்பகளிலும் யாரோ ஒருவரின்(தாய் அல்லது தந்தை) தியாகமும் விட்டுகொடுத்தலும் இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலும் குழந்தைகளை முன் வைத்து சமரசம் செய்துகொள்கின்றனர்.

அப்புறம் வருணின் கருத்தும் நன்று.

கோமதி அரசு said...

நல்ல அழுத்தமான பதிவு,முல்லை.

தாராபுரத்தான் said...

படிக்கும் போது நாமே அந்த பாத்திரங்களில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது.

செல்வநாயகி said...

நல்ல பதிவு முல்லை...மத வேறுபடு இன்றி இப்பிரச்சினைகளை நீக்கமறக் காணலாம்.

அமுதா said...

//சில புர்காக்கள் கண்களுக்கு தெரிகின்றன...சில புர்காக்கள் கண்களுக்கு தெரிவதில்லை!
//

:-(

காமராஜ் said...

இப்போதுதான் நினைவுக்கு வருகிறது அதே ஆம்பூர் மூன்று கலூரிப்பெண்கள் பேருந்தில் ஏறி எங்கள் முன் அமர்ந்தார்கள்.
அடுத்த டவுண் எது ? ஆ காஞ்சீவரம் அப்படித்தான் நினைக்கிறேன் அதுவரை உலக லூட்டி பின்னால் உட்காந்துருக்கும் எங்களுக்கும் சேர்த்து பட்டப்பெயர்கள் வைத்தபடி சிரித்தார்கள் பேசினார்கள் பேசினார்கள். இறங்கிய பிறகு பார்த்தேன் மூன்று பேரில் ரெண்டுபேர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டார்கள். அதற்கு முன்னே சாட்சாத் அல்லாவும்,ராமரும் வந்திருந்தாலும் கூட யார்
என்ன மதம் என்று கண்டுபிடித்திருக்க முடியாது.

ஆனால் எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு எப்படித்தான் பூனூலா,டாலரா இல்லை தோழரா என்று பார்த்துக்கொண்டிருக்க முடிகிறதோ தெரியவில்லை.

முகமதியப்பெண்ணின் கண்ணீர் பச்சையாகவும்,இந்துப்பெண்ணின் கண்ணீர் காவிநிறத்திலும்,கிறித்தவப்பெண்ணின் கண்ணீர்
வெள்ளை வெளேரென்றும் தயாரிக்கப்படவில்லை.
இல்லவே இல்லை.

YUVARAJ S said...

nalla padhivu! Write more.

Find my scribbling at:

http://encounter-ekambaram-ips.blogspot.com/

keep blogging

வானமே எல்லை said...

தெளிந்த பார்வை, தீர்க்க சிந்தனைகள். வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

//போய் நடிக்கணும்...சாரி படிக்கணும்

நல்லா எழுதுறீங்க (பிரபலம்-பின்னூட்டம் பத்தி போன பதிவுல சொன்னதால பழி வாங்கப்படுகிறது :) )

கரண்ட் கட் நேரம் சொர்கம் சிறுவயதில். தெருவே, தெருவில் நிற்கும் நேரமது. எவ்வளவு விளையாட்டுக்கள். அட.. அது வாழ்க்கை.

பின்னோக்கி said...

//வீடெனும் கூடை மறக்கவும் முடியாமல் கழட்டவும் முடியாமல்

ஒரு சமயம் என் அம்மா, தன் சிறு வயது தோழியுடன் நாள் முழுவதும் பேசியது நியாபகத்திற்கு வருகிறது.

பின்னோக்கி said...

துரோகம் கடினமான விஷயம் தான். பாவம் அவர். அப்ரார் ஏன் தன் கருத்தை மாற்றிக்கொண்டான் என்று தெரியவில்லை. அவனும் ?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மனதை கணக்கச் செய்துவிட்டீர்கள்...3முறை வாசித்தேன்

அ.மு.செய்யது$ said...

நீங்க சொல்றது எனக்கு சரியா புரியலன்னு நினைக்கிறேன்.

கடைசியா பாதிக்கப்பட்ட நிறைய இஸ்லாமிய பெண்களோட பெயர் பட்டியல் கொடுத்திருக்கீங்களே..

You meant to say that islamic women alone facing this issues..??

Can you please justifiy on that ?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாசித்தேன்.. நன்று..!

எல்லா மதத்திலும் இந்தச் சிக்கல்கள் உண்டு..!

தனி மனிதர்களின் ஆசாபாசங்கள் எப்போது வேண்டுமானாலும் இடம் மாறும்..

இதற்கு ஜாதியோ, மதமோ தடையாக இருக்க வாய்ப்பில்லை.. தனி மனித சுதந்திரமே கடைசியில் வெற்றி பெறும்..

நம் நாட்டு வழக்கத்தின்படி பெண்ணின் குடும்பம் மீறிய உறவுகள் மிகப் பெரிய குற்றமாகவும், ஆணின் அத்துமீறலான உறவுகள் மிகச் சிறிய குற்றமாகவும் பார்க்கப்படுவது நமது துரதிருஷ்டம்..!

புல்லட் said...

ஹ்ம்ம்!
நல்ல பதிவு.. ஆனால் சற்று வருத்தமாக இருந்தது..

தமிழ் பிரியன் said...

\\\அ.மு.செய்யது$ said...


You meant to say that islamic women alone facing this issues..??

Can you please justifiy on that ?\\\

ஆச்சி, வளர்ந்தது எல்லாம் ஆம்பூர் பகுதியில் தானே.. அங்கு அவர்களைச் சுற்றி முஸ்லிம் குடும்பங்கள் நிறைய இருந்ததால் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களின் நாயகர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றனர். இதில் ஏதும் தவறு இல்லையே ?

இப்படிக்கு நிஜாம்.., said...

//மேரேஜ் ஆனதுக்கான ஆதாரம் ஒன்னுமில்லே. இது ஒண்ணுதான் மங்கை இருக்குன்னு, ஏதாவது கேஸ் போடணும்னா தேவைப்படும்னு இங்கே கொடுத்திருக்காங்க'. //

கள்ளத்திருமணம் செய்திருப்பார்களோ! காரணம் எல்லா ஊர்களிலும் திருமணப் பதிவு புத்தகம் இருக்கிறது. என் தாத்தா திருமண பதிவைக் கூட இப்போது எடுக்க இயலும்.

இப்படிக்கு நிஜாம்.., said...

நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு குடும்பம் பெயர் தாங்கி இஸ்லாமியர்களின் குடும்பம். இவர்களை வைத்து முழு இஸ்லாத்தையும் எடை போட்ட உங்களின் தலைப்பு " கண்ணுக்கு புலப்படதா புர்காக்கள்" என்பது உங்களின் அறைவேக்காட்டுத் தனத்தை மட்டுமே காட்டுகிறது. நேரமிருந்தால் கீழ்க்கண்ட லிக்ங்கை கிளிக் செய்து படியுங்கள்
http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/

V.Radhakrishnan said...

மனிதர்களின் வாழ்க்கை முறை மதங்களின் மூலம் பெருமளவில் பெரிதாகப் பேசப்படுகிறது. இவர்களைப் போன்றே பலர் கண்ணீருடன் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

mohamed ashik said...

இது முழுக்க முழுக்க கைருன்னிசா ஆண்டி சார்பாக எழுதப்பட்டது. ஆனாலும் சுவாரஸ்யமாக உள்ளது. மனிதர்களின் நிஜ மனதை வெளிக்கொணருகிறது.

அந்த துத்திபெட் பெருக்கற லேடியும் ஒரு பெண் என்பதை சுலபமாக மறந்து விடுகிறோம். முழு இருட்டடிப்பு என்றால் இதுதான். இதுவே இப்பதிவின் வெற்றி.

மதத்தை துணைக்கிழுத்து தன் பெற்றோர் இணைய வேண்டும் என்ற எண்ணமே அப்ராரை வில்லனாக்குகிறது.

ரேஷ்மாவும் திருமனமாகிச்சென்று விட்டவுடன் தனியாளாகும் வயதான கைருன்னிசா ஆண்டியின் மனநிலை கணவர் பக்கம் மாறினால் நிச்சயமாக அது மறைக்கப்படும் அல்லது பெண்ணடிமைத்தம் என்று எள்ளி நகையாடப்படும்.

மேலும், இதெல்லாம், பலர் திருமணவாழ்விலும் நடக்கும் அந்தரங்கம். அது கண்களுக்கு புலப்படாத தாலிகளாகவும் இருக்கும், மோதிரங்களாகவும் இருக்கும். புருக்காக்கள் மட்டுமே தங்கள் கண்ணுக்கு புலப்படுகிறது. ஆனாலும், புருக்காக்களுக்கு மற்றது போன்ற கையறுநிலை படலம் வர அதன் சொந்தங்கள் அனுமதிப்பதில்லை. அப்படியொரு செட்டப் உள்ளது இஸ்லாமிய சட்டத்தில். மாறாக, கைருன்னிசா ஆண்டியின் சொந்தக்காரர்களை ஏனோ இக்கதையில் காணவில்லை.

அ.மு.செய்யது said...

//தமிழ் பிரியன் said...
\\\அ.மு.செய்யது$ said...


You meant to say that islamic women alone facing this issues..??

Can you please justifiy on that ?\\\

ஆச்சி, வளர்ந்தது எல்லாம் ஆம்பூர் பகுதியில் தானே.. அங்கு அவர்களைச் சுற்றி முஸ்லிம் குடும்பங்கள் நிறைய இருந்ததால் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களின் நாயகர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றனர். இதில் ஏதும் தவறு இல்லையே ?
//

Got it !!

நன்றி தமிழ்பிரியன் !!! இப்போது புரிந்தது.