Wednesday, February 17, 2010

Alternative Schools 'n' Mainstream Schools

பப்புவின் பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு சென்றிருந்தோம். அருகில் அமர்ந்தவர்களிடம் 'யாருடைய பெற்றோர்' என்ற அறிமுகத்திற்குப் பிறகு சகஜமாக பேசிக்கொண்டிருந்தோம். விழா ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்தன. எங்களுக்கு பின்னாலிருந்த வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் அதே அலைவரிசையை தொடர்ந்தார்கள். அப்போது சும்மா இருந்த என் காதை அங்கே விட்டு வைத்தேன். அதிலொருவர் சொன்னார்,

"நான் அடுத்த வருஷத்து அட்மிஷன் போட்டுட்டேன்,சார். வேளச்சேரியில் இருக்கே...XYZ. அந்த ரெயில்வே ஸ்டேஷன் இருக்கு இல்லீங்களா..அதே ரோடுலேதான் இருக்கு. இப்போ ரெண்டு வருஷமாதான் ஆரம்பிச்சிருக்காங்க...ஆனா என்ன, போகட்டும்னு போட்டுட்டேன் சார். ஆறு மாசமா என் பையன் (ஏதோ சொன்னார், புரியவில்லை) அதையே தான் படிச்சிட்டிருக்கான்” என்றார். அவர் சொன்ன பள்ளிக்கு நகரெங்கும் கிளைகள் இருக்கிறது. சொல்லப்போனால், நானும் கூட அடுத்த வருடம் அங்கு போட்டுவிடலாமென்று எண்ணித்தான் பப்புவை சென்ற வருடம் ப்ரீ-கேஜி சேர்த்தேன். ஆனால், பப்புவுக்கு இந்த பள்ளி பிடித்திருக்கிறதென்பதால் - நாங்களும் பள்ளியின் பாடங்கற்பிக்கும் முறையில் - செயல்பாடுகளில் திருப்தியடைந்திருப்பதால் - தற்போதைய பள்ளியிலேயே தொடர முடிவு செய்திருக்கிறோம். மேலும் மற்ற பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதமும் கலக்கமுற செய்தது.

ஆனால், எங்களுக்குள்ளும் கேள்விகள் வராமலில்லை.பப்புவின் படிப்பு குறித்து கேட்கும் யாவரும் என்னிடம் எழுப்பும் கேள்வி இது. "இப்போ ஓக்கே,மெயின்ஸ்ட்ரீம்லே வரும்போது ஓக்கேவா? அந்த சிலபஸ்லேர்ந்து மேல்படிப்புக்கு வரும்போது இது சரியா இருக்குமா, காம்பீட் பண்ண முடியுமா?


ஏனெனில், எந்த பாடப்பிரிவில் படித்தாலும், உயர்கல்விக்கு செல்லும்போது பெரும்பாலும் ஸ்டேட்போர்ட்க்கே மாற வேண்டி உள்ளது. நாம் அரசு பள்ளிகளிலும் மாநகராட்சி பள்ளிகளிலும் படித்து வந்திருந்தாலும் எத்தனை பேர் நமது பிள்ளைகளை அங்கு சேர்ப்போம். ( கண்டிப்பாக அங்கே சேர்ப்பதில்லை என்பதில் தனிகவனம் எடுத்துக் கொள்கிறோம். ) பெரும்பாலும், தனியார் பள்ளிகளில்தானே சேர்க்கிறோம். மெட்ரிக் பள்ளிகளை விரும்புமளவு அரசு பள்ளிகளை யாரும் விரும்புவதில்லை. (அரசு பள்ளிகளில் முதலில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதே ஒரு தனி டாபிக்!)

பக்கத்துவீட்டு மோனேஷ். ஐந்து வயதாகிறது. ஐந்து வயதுக்கு அவன் எவ்வளவு விளையாடவேண்டும். என்ன ஆட்டம் போட வேண்டும். கற்பனைகளும் கிண்டல்களும் கொப்பளிக்கும் அவனிடம். எந்த கேட் அல்லது சுவராக இருந்தாலும் நொடியில் ஏறி நிற்பான். பள்ளியிலிருந்து நான்கு மணிக்கு வந்தால் படுத்து தூங்கிவிட்டு ஆறு அல்லது ஏழு மணிக்கு எழுத ஆரம்பிப்பான். எழுதுவான்...எழுதிக்கொண்டே இருப்பான். பின்னர், கதைகளை மனப்பாடம் செய்வான். சனி-ஞாயிறுகளில் இந்தி ட்யூஷன். என்றைக்காவது ஞாயிறு மாலைவேளைகளில் கால்பந்துடன் அவனை காணலாம். ஐந்து வயது சிறுவன் - என்ன எழுதுகிறானென்றே தெரியாமல், டீச்சர் திட்டுவார் அல்லது முட்டியில் அடிப்பாரென்று பயத்தில் எழுதுவது என்ன கல்விமுறை? வகுப்பில் எழுந்து சொல்ல வேண்டுமென்று கதையை ‘ஸ்டோரி டெல்லிங்” என்ற பெயரில் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது - மனப்பாடம் செய்யும் ஆற்றலை வேண்டுமானால் வளர்க்கலாம். ஆனால், யோசிக்கும் திறனை...கற்பனையை...தனித்துவத்தை வளர்த்தெடுப்பதில்? மேலும் பள்ளிகள் உருவாக்கும் மன அழுத்தங்கள்!!

மெட்ரிக்கும் ஸ்டேட் போர்டும் படித்து நீ உயரவில்லையா என்றும் கேட்கலாம். ஆனால், நாங்கள் கற்ற அந்தக் கல்வி - புதிதாக எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்ததை உபயோகிக்கக் கூடிய அறிவை மட்டுமே தந்திருக்கிறது.மனப்பாடம் செய்தோ அல்லது ஆசிரியர் குறித்து தரும் பகுதிகளை மட்டுமே படித்தோ அல்லது இந்த கேள்விகளுக்கான விடைகளை மட்டுமே படித்தால் போதுமென்ற கல்விமுறையை விட யோசிக்க வைக்க்கும் அல்லது தேடலுக்கான உத்வேகத்தை தரும் கல்விமுறை எத்தனை பேருக்கு வாய்க்கிறது? ஐம்பது பேருக்கு ஒரு ஆசிரியர் என்பதே இப்போது நடைமுறையில் இருக்கிறது. . மாணவரை புரிந்துக்கொண்டு அவருக்கேற்ற கல்வியை தரும், மாணவரை நன்கு புரிந்துக்கொண்டு மதிப்பிடும் முறை, மாணவர்-ஆசிரியர் உறவு எத்தனை பள்ளிகளில் இருக்கிறது? கீதாவால் இத்தனை மதிப்பெண் எடுக்க முடிந்தால் உன்னாலும் அதே மதிப்பெண்ணும் எடுக்க முடிய வேண்டுமே என்றுதான் சொல்லப்படுகிறதேயொழிய ஏன் அதே போல் எனக்கும் எடுக்க முடியவில்லை என்பது பற்றி எவரும் கவலை கொள்வதில்லை. கீதாவுக்கு பிடித்திருக்கும் பாடம் எனக்கும் பிடித்திருக்க வேண்டுமென்றுதானே எதிர்பார்க்கிறது நமது கல்விமுறை. இதற்கு, முதலில் சொல்லியிருக்கும் அந்த பெற்றோரின் கண்ணோட்டத்தையே எடுத்துக்காட்டாக காணலாம். விரைவில் தனது பிள்ளை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறார்.

ஸ்டேட் போர்ட் சிலபஸ் - இது மிகவும் எளிது. எல்லா அரசு பள்ளிகளும் பின்பற்றுவது.

மெட்ரிக் - ஸ்டேட் போர்டை விட கொஞ்சம் கடினம், ஆனால் CBSE படித்துவிட்டு வருபவர்களுக்கு மிக எளிது

CBSE - செண்ட்ரல் போர்ட் சிலபஸ்.மெட்ரிக்கைவிட கடினம். மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவது. (இதுலே படிச்சா, 'ஐஐடி
எண்ட்ரன்ஸ் ஈசி' என்பது வரையே எனது புரிதல்)


ICSE - இண்டர்நேஷனல் சிலபஸ். (இவை NRI -களையே மனதில் வைத்து ஆரம்பிக்கப்படுகின்றன என்பது போல தோன்றும்.)

இவை தவிர, ஹோம் ஸ்கூலிங். ஆனால் எத்தனை பேர் அதில் படிக்கிறார்களென்று தெரியவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தாலும் நேரடியாக எட்டாம் வகுப்பு எழுதிவிட்டு, மேற்படிப்புக்கு திறந்தவெளி பல்கலையில் சேரலாம். எட்டாம் வகுப்பு படித்தவர்கள் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாக +2 எழுதிவிட்டு கல்லூரிகளில்
சேரவும் வாய்ப்புள்ளது.

இவை தவிர, மாண்ட்டிசோரி பள்ளியும் அல்லது மாற்றுக்கல்வி நிறுவனங்களும் உள்ளன.

இந்த மாற்றுகல்வி நிறுவனங்கள்/மாண்ட்டிசோரி பள்ளிகள் ICSE திட்டத்தை பின்பற்றுகின்றன. மாற்றுகல்வி நிறுவனமாக சென்னையின் கிருஷ்ணமூர்த்தியின் The School- சொல்லலாம். அப்புறம் புகழ்பெற்ற ரிஷிவேலி.
பின்னர் நினைவுக்கு வருவது பில்லபாங்க்,அபாகஸ். பாண்டிச்சேரியின் ஆரோவில்லே. வேறு கல்விநிறுவனங்கள் இருந்தால் சொல்லுங்கள்.
ஆனால்,இந்த மாற்றுக்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பதும் பெருங்கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் கட்டணம் - நடுத்தர மக்களின் வசதிக்கு எட்டுவதாக இல்லை.


மாண்ட்டிசோரி/மாற்றுக்கல்வியில் அதற்கே உரித்தான நன்மைகளும் தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெரும்பாலும், இந்த பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் 1:20 என்ற விகிதத்திலேயே இருக்கிறார்கள். வகுப்பறையில் பயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படித்த நண்பர் ஒருவர் எனக்குண்டு. அவர் சொல்லுவார், எந்த மனஅழுத்தங்களுமே இருக்காது, நமக்கு எது பிடித்தமோ அதை தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ளலாம். யோகா,நீச்சல், ஸ்கீயிங்,நுண்கலைகள் முதலியன் இதில் அடங்கும். வீட்டுப்பாட டென்ஷன்கள் எனபது அறவே இல்லை. இயற்கையோடு இணைந்த சுற்றுபுற சூழல்.எல்லாவற்றுக்கும் மேல் மற்றவர்களுடன் போட்டி என்பதே இல்லை.நேற்று நான் என்ன செய்தேனோ இன்று அதைவிட நன்றாக செய்ய வேண்டும்..என்னையே நான் வென்றெடுக்க வேண்டியிருந்ததே தவிர புற அழுத்தங்கள் எதுவும் இல்லை.

அதற்காக மாற்று பள்ளிகளில் படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகளாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தார்கள் என்று சொல்லிவிடமுடியாதுதான். ஆனால், தனித்தன்மையுடனும், நல்ல ஆளுமையுடனும் வளர்கிறார்கள். ஆனால், மற்ற பாடத்திட்டத்தில் முதன்மையாக வர வேண்டும் என்ற டென்ஷனே வாழ்க்கையை ஆள்கிறது. தனக்கு எது சரியான பாதை என்பதை தேர்ந்தெடுக்க தடுமாற வேண்டியிருக்கிறது.

இவை நடுவில், தேர்வுகளை மாற்றியமைப்பது மட்டுமே தீர்வாகிவிடாது.பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதென்பதோ அல்லது நுழைவுத் தேர்வுகளை
ரத்து செய்வதென்பதோ அல்லது எல்லா கல்விதிட்டத்தினருக்கும் ஒரே நுழைவு தேர்வென்பதோ நிச்சயம் பலனளிக்காது. தேர்வுகளும் மதிப்பீடுகளும் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், தேர்வைக் குறித்து பெற்றோரும் ஆசிரியரும் புறக்காரணிகளும் கொடுக்கும் அழுத்தங்கள் தடுக்கப்பட வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வி என்பதை அளிக்காமல் எல்லோருக்குமான தேர்வுகளை எப்படி சமமாக்க முடியும்?

27 comments:

ஆயில்யன் said...

நிறைய யோசனைகளை முன்வைக்கும் வரிகள் - எத்தனை கல்விமுறைகள் விதவிதமாய் செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் ஏனோ எனக்கு மனதில் இன்னும் அரசுப்பள்ளிகளின் மீது இருக்கும் ஆர்வம் நம்பிக்கை மட்டும் குறையவில்லை!

☀நான் ஆதவன்☀ said...

The School-பற்றி இப்பொழுது தான் கேள்வி படுகிறேன். மிகவும் வித்தியாசமாக, நல்ல முறையாக தோன்றூகிறது.

☀நான் ஆதவன்☀ said...

//அந்த சில பஸ்லேர்ந்து மேல்படிப்புக்கு வரும்போது//

பாஸ் பல பஸ்லேர்ந்து ஏன் டிரையின்ல இருந்து கூட மேல் படிப்புக்கு வருவாங்க பாஸ்.

மாதவராஜ் said...

நல்ல பகிர்வு முல்லை. இந்த அமைப்பில் எல்லா பெற்றோர்களுக்கும் வருகிற சிந்தனைகள் என்றாலும், ஒரு பரந்துபட்ட பார்வை உங்கள் எழுத்துக்களில் இருக்கின்றன.
// மாற்று பள்ளிகளில் படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகளாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தார்கள் என்று சொல்லிவிடமுடியாதுதான். ஆனால், தனித்தன்மையுடனும், நல்ல ஆளுமையுடனும் வளர்கிறார்கள். ஆனால், மற்ற பாடத்திட்டத்தில் முதன்மையாக வர வேண்டும் என்ற டென்ஷனே வாழ்க்கையை ஆள்கிறது.//
உண்மைதான்!

இந்தக் கல்விமுறை, நம் குழந்தைகளை பந்தயக்குதிரைகளாக்கி விடுகின்றன...

Uma Rudhran said...

முல்லை, நல்ல பதிவு.

//இந்த கேள்விகளுக்கான விடைகளை மட்டுமே படித்தால் போதுமென்ற கல்விமுறையை விட யோசிக்க வைக்க்கும் அல்லது தேடலுக்கான உத்வேகத்தை தரும் கல்விமுறை எத்தனை பேருக்கு வாய்க்கிறது?//
மிகச்சரி. ஆனால் நான் கேள்விப்பட்ட வரையில் நம் கல்விமுறை ஜப்பான் கல்வி முறை மாதிரி உள்ளதென்றும், நம் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்கள் பொதுவாக Analytical Abilitiesஐ வளர்ப்பதாகவும் கருதப்படுகிறது. There are pros and cons perceived in different systems.
சென்னை ICSE பள்ளிகளின் affiliation status அறிய http://www.cisce.org/ பாருங்கள்.

Deepa said...

ரொம்ப ரொம்ப அவசியமான பதிவு.
மொத்தப்பதிவின் சாராம்சத்துக்கும் அதிகமாய்க் கடைசி வரி சொல்கிறது.

//மேலும் மற்ற பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதமும் கலக்கமுற செய்தது. //
இதே தான் என‌க்கும்.
நான் படித்தது ஒரு சின்ன மெட்ரிக் பள்ளி. ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 ஆகத் தான் இருந்தது. பாட‌த்திட்ட‌த்தில் மாற்ற‌ம் இல்லையென்றாலும் ஆசிரிய‌ர் மாண‌வ‌ர் உற‌வு இல‌குவாக‌ இருந்த‌து. நேஹாவுக்கும் அதே போல் அமைய‌வேண்டும் என்று விரும்புகிறேன்.

மாற்றுப் ப‌ள்ளிக‌ளின் க‌ல்வித் திட்ட‌த்தைப் ப‌ற்றி விரிவாக எழுதுங்களேன் முல்லை. என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு ரொம்பப் பயனுள்ளதாய் இருக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பதிவு முல்லை..

நீங்க செய்தது தான் சரி.
சபரிக்கு நேரடியாக ப்ரீகேஜி தில்லியில் சேர முடிந்தாலும் நாங்கள் பக்கத்து மாநிலத்தில் எல்கேஜி தான் போட்டிருக்கிறோம். அவசரமென்ன.. அழுத்தம் இல்லாத , விளையாட்டுபோக்கான பாடத்திட்டமே நல்லது.

tamil said...

செயல்முறைக் கல்வி திட்டம் KFI பள்ளிகள் உருவாக்கியதிலிருந்து சில மாற்றங்களுடன் அமுல் செய்யப்படுகிறது.மாற்றுப் பள்ளிமுறையில் நன்மை உண்டு.ஆனால் அது பலருக்கு எட்டாத வகையில் சில பள்ளிகள்,அதிக கட்டணம் என்பதாக உள்ளது.பள்ளிமுறை எப்படியாயினும் பெற்றோர் அழுத்தம் கொடுத்து குழந்தைகளை துன்புறுத்தக் கூடாது.
மேலும் போட்டி போட்டி, முதலிடம்தான் முக்கியம், கிடைத்தால் ஐஐடி இல்லையேல் வீண் என்று பயமுறுத்தி கற்றலை பெருஞ்சுமையாக மாற்றக் கூடாது.
ஸ்டேட் போர்டோ, செண்ட்ரல் போர்டோ இதெல்லாம் கல்லூரி வரைதான்.அதற்குப்பின் மாணவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள்.தெரிவுகள் வேறு.
+2விற்குப் பின் பல தெரிவுகள் உள்ளன.
இப்போது மதிப்பெண் அதிகம் அதாவது 90%+ இல்லாவிட்டாலும்
பணம் இருந்தால் போதும். மேலும் எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன.திறனை வளர்த்தல், அறிவை வளர்த்தல், பண்பை வளர்த்தல் இதில் பெற்றோர் அக்கரை காட்ட வேண்டும், சுமையாக அதை மாற்றாமல். இன்னும் 15 ஆண்டுகளில் பல மாற்றங்கள் வரும். பப்பு,னேகா அம்மாக்கள் அதனால் இப்போது நிம்மதியாக இரவில் உறங்கலாம். :)

Pattu & Kuttu said...

well written Good ..

True, myself put by kids(pre-kg/ II std) in Metric ..(elder was 10 days short for cbse).. they are doing well.. may be we need to feel free to do HW/study(by not pressuring them)
My firend kutty is studing in Hari Shree Vidyalaya (ICSE)It seems to be very good..(cost :donation of Rs50000-75000 + Rs30000 fees) They teach very well.. In-fact my friends daughter was able to read simple word in tamil after 5 -6 months of teaching .. they teach tamil by word that we use daily like eatable etc.. few months latter they teach actual basic letters.

i feel any patron (CBSE/ICSE/Metric) is fine..by mum/dad should sit with kid and make them to study on own interest..

we bought of lot of story books in english/tamil and few maz in Hindi.. and basic grammar/spelling books from
Scholastic . Hope my kutties will enjoy school days !!

Regards
VS Balajee

சின்ன அம்மிணி said...

//நிறைய யோசனைகளை முன்வைக்கும் வரிகள் - எத்தனை கல்விமுறைகள் விதவிதமாய் செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் ஏனோ எனக்கு மனதில் இன்னும் அரசுப்பள்ளிகளின் மீது இருக்கும் ஆர்வம் நம்பிக்கை மட்டும் குறையவில்லை!//

ஆயிலுக்கு ரிப்பீட்டு

கும்க்கி said...

மிக நெருக்கமான வரிகள்..

பதிவை வாசிக்க மிகுந்த சிரமமாகவிருக்கிறது...

மன்னிக்கவும்.

வானமே எல்லை said...

Our education system really has helped a lot to excel in their life. So called social pressure and the class room pressure has given our students a competitive advantage in their life to succeed wherever they go.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எல்லோருக்கும் சமமான கல்வி என்பதை அளிக்காமல் எல்லோருக்குமான தேர்வுகளை எப்படி சமமாக்க முடியும்?

நல்ல கேள்வி. நல்ல பதிவும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

யில்யன் said...
நிறைய யோசனைகளை முன்வைக்கும் வரிகள் - எத்தனை கல்விமுறைகள் விதவிதமாய் செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் ஏனோ எனக்கு மனதில் இன்னும் அரசுப்பள்ளிகளின் மீது இருக்கும் ஆர்வம் நம்பிக்கை மட்டும் குறையவில்லை!

உண்மை.
இன்னுமே பெரும்பாலனாவர்கள் பத்தாவது வரை சி.பி.எஸ்.சியோ அல்லது மெட்ரிக்கோ படித்துவிட்டு +1,+2 அரசுமுறை கல்விக்கு மாறிவிடுகிறார்கள். காரணம் அப்போதுதான் ஈஸியாக மார்க் ஸ்கோர் செய்யமுடியுமாம். இந்த மார்க் அடிப்படைதானே பின்வரும் தொழிற்கல்விக்கு ஏதுவாக இருக்கிறது.
இப்படி மாறிவிடும் பிள்ளைகள் அதே முறையை ஆரம்பகாலத்திலிருந்து பயின்றுவரும் பிள்ளைகளுக்கு சவாலாக இருக்கிறார்கள்.

"உழவன்" "Uzhavan" said...

பாராட்டத்தக்க பதிவு. வீட்டைச் சுற்றிலும் பெட்டிக்கடைகள் போல இப்போது மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. எதில் சேர்ப்பது என்ற குழப்பம் அதிகமாகவே உள்ளது.
அது எந்தப் பள்ளியாக இருந்தாலும், இந்தியா முழுக்க ஒரே செலபஸ்ஸாக இருந்தால் நல்லது என எண்ணுகிறேன்-மெயின் சப்ஜெக்ட் மட்டும்.
கல்வி/பள்ளி சம்பந்தமாக நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

நிறைய கேள்விகள்...நிறைய ப்அதில்கள்...நிறைய விளக்கங்கள்....நிதானமாக வருகிறேன் முல்லை!

அமைதிச்சாரல் said...

//மனப்பாடம் செய்தோ அல்லது ஆசிரியர் குறித்து தரும் பகுதிகளை மட்டுமே படித்தோ அல்லது இந்த கேள்விகளுக்கான விடைகளை மட்டுமே படித்தால் போதுமென்ற கல்விமுறையை விட யோசிக்க வைக்க்கும் அல்லது தேடலுக்கான உத்வேகத்தை தரும் கல்விமுறை எத்தனை பேருக்கு வாய்க்கிறது//

மிகச்சரி.சில பள்ளிகளில் பரீட்சார்த்தமாக செய்து பார்க்க நினைத்தாலும், போர்ட் எக்ஸாம் ரிசல்ட்டைப்பற்றிய பெற்றோர்களின் சந்தேகத்தால்,பின் வாங்கிவிடுகிறார்கள்.

அம்பிகா said...

\\இந்தக் கல்விமுறை, நம் குழந்தைகளை பந்தயக்குதிரைகளாக்கி விடுகின்றன...\\
உண்மைதான்.
நல்ல பகிர்வு

PPattian : புபட்டியன் said...

கொஞ்சம் மாற்று யோசனைகள்

1. வீட்டுப்பாடத்தை மோனேஷ்தான் எழுத வேண்டும் என்று இல்லை. மோனேஷின் அம்மாவோ அல்லது அப்பாவோ (சிறு பிள்ளை கையெழுத்து போல) எழுதலாம்.

2. ரேங்க் கார்டுக்கு வீட்டில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம்... ரேங்க் மட்டுமே முக்கியம் கிடையாது என்ற புரிதல் பப்புவுக்கும் மோனேஷுக்கும் இன்ன பிற குழந்தைகளுக்கும் வரும்

3. ஸ்கூல் மிஸ் குழந்தையின் படிப்பு குறித்து புகார் செய்தால் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விடலாம். இல்லை கொஞ்சமாக மோனேஷை தாஜா செய்து கொஞ்சமாக படிப்புக்கும் நேரம் ஒதுக்கலாம்.

4. பள்ளியில் கிடைக்காத செயல் முறை, பெட்டிக்கு வெளியான (Out of the Box :))) பாடங்களை வீட்டில் பப்புவின் அம்மாவோ அல்லது மோனேஷின் அப்பாவோ கொஞ்சம் விளையாட்டு தேன் கலந்து கொடுக்கலாம்.

5. இப்பொது மார்க்கெட்டில் குழந்தைகளின் அறிவு வளர்க்கும் விளையாட்டுப் பொருட்கள் ஏராளம். நம் காலம் போல் இல்லை. அவற்றை முறையாக யூஸ் பண்ணலாம்.

6. MAD, கிறுக்கல்ஸ், டோரா, ஜிம்ஜாம் அன்ட் சன்னி, செட்ரிக், அறிவோம் ஆயிரம் போன்றவையே போதும்.. மோனோஷும் பப்புவும் நிறைய கற்றுக் கொள்ளலாம். நாம் மெனெக்கடவே தேவையில்லை

7. இது எல்லாம் போக அவரவர் வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப ஒரு ஸ்கூலில் சேர்த்து விடலாம்..

இன்னும் நிறைய இருக்கும்..

ஆனாலும் சில குழந்தைகள் அடிக்டட் போல ஹோம்வர்க் செய்யும். அவர்களுக்கு அதுதான் இன்ட்ரெஸ்ட். மோனேஷ் அந்த வர்க்கமா எனத் தெரியவில்லை..

ச.செந்தில்வேலன் said...

நல்ல கட்டுரைங்க..

நீங்க சொல்றது உண்மைதான். கல்வி மனப்பாடம் செய்யும் தன்மையை மட்டுமே வளர்க்கிறது. சுயமாக ஏதாவது செய்யச் சொன்னால் முடியாது.

{ ஒவ்வொரு பள்ளியிலும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் எழுதியிருக்கலாம் :) }

நசரேயன் said...

//அப்போது சும்மா இருந்த என் காதை அங்கே விட்டு வைத்தேன். //

எடுத்து வைக்கிற அளவுக்கு எப்படி !!!!!!!!!!

நசரேயன் said...

//மெயின்ஸ்ட்ரீம்லே வரும்போது ஓக்கேவா? அந்த சிலபஸ்லேர்ந்து மேல்படிப்புக்கு வரும்போது இது சரியா இருக்குமா, காம்பீட் பண்ண முடியுமா//

ஸ்ட்ரீம் ட்ரெயினுக்கு
பெட்ரோல் பஸ்க்கு மாத்தினா போட்டி போட முடியுமா ?

நசரேயன் said...

படிப்பிலே இவ்வளவு பிரச்சனை இருக்குன்னு தான் நான் பள்ளிகுடம் போனதே இல்லை

The Analyst said...

You might be interested in this video on how schools kill creativity. -------So true specially in our communities.

http://www.ted.com/talks/lang/eng/ken_robinson_says_schools_kill_creativity.html

naathaari said...

கீதாவால் இத்தனை மதிப்பெண் எடுக்க முடிந்தால் உன்னாலும் அதே மதிப்பெண்ணும் எடுக்க முடிய வேண்டுமே என்றுதான் சொல்லப்படுகிறதேயொழிய ஏன் அதே போல் எனக்கும் எடுக்க முடியவில்லை என்பது பற்றி எவரும் கவலை கொள்வதில்லை

நல்ல பகிர்வு நிறைய இதுகுறித்து விவாதிக்கவேண்டும் ஆனால் நேரம் என் கைபிடித்து இழுக்கிறது ஆனாலும் விரைவில் பகிர்வேன்

தீஷு said...

நல்ல பதிவு முல்லை. மாண்டிசோரி முறையில் எனக்குத் தெரிந்து 3-6 yrs மற்றும் 6-9 yrs வரையுள்ளது. ஆறாம் வகுப்பிற்கு மேல் எவ்வாறு கற்றுத்தருவார்கள் என்று தெரியவில்லை. இவ்வகை கல்வி புரிந்து படிப்பதற்கு ஏற்றது. ஆனால் ஆறாம் வகுப்பில் வேறு ஸ்ட்ரிமுக்கு மாற்றும் பொழுது, கண்டிப்பாக கஷ்டமாகத்தான் இருக்கும்...

Angelin said...

http://blogintamil.blogspot.co.uk/2014/04/blog-post_29.html

உங்க பப்புவுக்கு பள்ளி தேடுதல் பற்றி வலைசரத்தில் கூறியுள்ளேன் ::)நேரம் கிடைச்சா வாங்க