Wednesday, February 10, 2010

அருவியின் குழந்தைகளுக்கான வீட்டுக்கல்வி புத்தகங்கள்

அருவி பதிப்பகத்தின் வீட்டுக்கல்வி இயக்கத்தின் கீழ் வெளியிட்டிருக்கும் நூல்களை புத்தகச் சந்தையில் வாங்கியிருந்தோம். முதல் நிலை நூல், பப்புவின் வயதுக்குக் கீழ் இருந்தது. மிக எளிதான கதைகள். முன்பு, கோலின்ஸ் சீரிசில் வாங்கியது நினைவுக்கு வரவே இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை புத்தகங்களை வாங்கினோம்.


டப்டுப்..டப்டுப்..டப்டுப்..டப்டுப்..டப்டுப்
முயல்குட்டியும் போலீசுக்காரரும் - இது இரண்டாம் நிலை புத்தகம்.

விலங்குகள் கதைகள் ஓசைக்கு முக்கியத்துவம் கொடுத்து விவரிக்கப் பட்டுள்ளன. எளிய வாக்கியங்கள் - விதவிதமான ஓசைகள் - முயல் காரட்டை சாப்பிடும்போது ஏற்படுத்தும் சப்தம் - போலிசுக்காரர் பூட்ஸு காலால் நடக்கும்போது வரும் சப்தம் - ஆடுகள் பாலத்தின் மீது நடக்கும் சப்தம் - இவை குழந்தைகளின் கவனத்தையும், கதை கேட்டு தொடர் சம்பவங்களாக நினைவு
வைத்துக்கொள்வதையும் மேம்படுத்துகிறது.


இதில் முயல்குட்டியும் போலிசுக்காரரும் என்ற கதையை வாசித்தோம். ஒரு குட்டி முயல் தோட்டத்திற்கு சென்று காரட் சாப்பிடுகிறது. அப்போது டப்டுப் லப்டுப் என்ற சப்தத்தை கேட்கிறது.போலிசுக்காரர் என்று நினைத்து ஓடி ஒளிகிறது. அது ஒளியும் ஒவ்வொரு இடத்திலும் புதிய விலங்கொன்றை சந்திக்கிறது. கடைசியில் அந்த டப்டுப் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அறிந்து மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு ஓடுகிறது.


எளிய கதை, ஆனால் பப்புவை பால் குடிக்கவும் மருந்து குடிக்கவும் வைத்தது!

புத்தகத்திற்கு பின்னட்டையில் அம்மாஅப்பாக்களுக்கும்...பாட்டிதாத்தாக்களுக்கும்... அப்புத்தகத்தை குறித்து எழுதப்பட்டுள்ளது. அதனை அருவியின் இந்த பக்கத்தில் காணலாம்.


அடுத்தது,
சுண்டெலிக் கதைகள் - இது மூன்றாம் நிலை புத்தகம்.
எல்லாக் கதைகளிலும் சுண்டெலிதான் ஹீரோ. சுண்டெலி சூப் குடிக்கிறது...சிங்கத்தைக் காப்பாற்றுகிறது..பூனையோடு உரையாடுகிறது.
...பப்புவோடு பொழுது போக்குகிறது!

இக்கதைகள் பிள்ளைகளுக்கு சொல்வதற்கானவை...வாசிப்பதற்கானவை அல்ல” என்று அட்டையில் போட்டிருந்தாலும் பப்பு நான் வாசிப்பதையே விரும்புகிறாள்! (எனது கதை சொல்லும் திறமை அப்படி!)

முதல் கதையும் , மூன்றாம் கதையின் பாதியையும் இப்போது திரும்ப திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

புலி ஒன்று சூப் வைக்கும். தேங்காய், மாங்காய் எல்லாம் போட்டு சுவையாக வைத்திருக்கும். சூப் சுவையால் கவரப்பட்ட சுண்டெலி புலியை நைச்சியமாக பேசி குளிக்க அழைத்துச் செல்லும். புலி நீந்திக் கொண்டிருக்க எலி வந்து சூப்பை குடித்து விடும். போகுமுன், மரத்தின் மேலிக்கும் குரங்குகளிடம் ஒர் பாடலை கற்றுக் கொடுக்கும்.

தேங்கா மாங்கா சூப்பு
தெகட்டாத சூப்பு
புலி வச்ச சூப்பு
குடிச்சு பாரு டாப்பு

எங்கே பாடுங்கள் பார்ப்போம்? (சும்மா கிண்டலுக்கு... :-)) )

ஒரே ஒரு விமர்சனம் : சுண்டெலிக் கதைகளில், சுண்டெலியை யானை கிண்டல் செய்யும். ‘கடலில் குதித்து செத்து போகலாம் என்று நினைத்தது' என்று ஒரு வரி வரும். கிண்டல் செய்தால் பதில் கிண்டல் அல்லது வேறு மாதிரி கொடுத்திருக்கலாம். இதை கண்டிப்பாக பப்புவுக்கு நான் வாசிக்க மாட்டேன். நான் வாசிக்காததால் பப்புவுக்கு இது தெரியாமல் போகப் போவது இல்லை. ஆனால், இந்த வயதில் (3-7 வயதினருக்கான) புத்தகத்தில் இப்படி வருவதை தவிர்த்திருக்கலாம்.

இது ஒன்றைத் தவிர, மிகவும் ரசித்து வாசிக்கூடிய குழந்தைகள் விரும்பக்கூடிய புத்தகங்கள் - மெல்ல கற்போம் நூல்கள்!

19 comments:

முகிலன் said...

யக்கா, இந்தப் புத்தகமெல்லாம் எங்க வாங்கலாம்னும் சொல்லலாம்ல?

ஜோதி said...

அறிமுகத்துக்கு நன்றிங்க

அப்படியே
அருவியின் முகவரி சொன்னிங்கன்னா
நல்லா இருக்கும்

The Analyst said...

தகவலுக்கு நன்றி. இப்புத்தகங்களை எங்கு வாங்கலாம்? இணையத்தினூடு வாங்க வசதி உண்டா?

"சுண்டெலிக் கதைகளில், சுண்டெலியை யானை கிண்டல் செய்யும். ‘கடலில் குதித்து செத்து போகலாம் என்று நினைத்தது' என்று ஒரு வரி வரும். கிண்டல் செய்தால் பதில் கிண்டல் அல்லது வேறு மாதிரி கொடுத்திருக்கலாம். இதை கண்டிப்பாக பப்புவுக்கு நான் வாசிக்க மாட்டேன்."

என் க‌ருத்தும் இதுவே. நான் என் ம‌க‌னிற்கு (இன்னும் 1 கிழமையில் 1 1/2 வயதாகிறது. :)) வாசிப்பதற்காக த‌மிழ்ப் புத்த‌க‌ங்க‌ள் சில‌ இல‌ங்கையிலிருந்து எடுப்பித்த‌னான். அதில் ஒரு நீதிக் க‌தைக‌ள் புத்த‌க‌த்தொட‌ரும் அனுப்பியிருந்த‌ன‌ர். அநேக‌மாக‌ எல்லாக் க‌தைக‌ளிலும் கொலையும் இர‌த்த‌மும் violence உம் நிறைய‌, ப‌ட‌ங்க‌ளுட‌ன் வேறு. எப்ப‌டித்தான் இவை சிறுவ‌ர்க‌ளுக்கு ந‌ல்லதென்ற‌ முடிவுக்கு வ‌ந்தார்க‌ளோ தெரிய‌வில்லை.

ஆங்கில‌த்தில் நிறைய‌ப் புத்த‌க‌ங்க‌ள் toddlers க்கு உண்டு. த‌மிழில் பெரிதாக‌த் choices இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, எங்கு கிடைக்கும் என்று சொன்னால் உதவியாக இருக்கும்.நன்றி.

அமைதிச்சாரல் said...

// பப்பு நான் வாசிப்பதையே விரும்புகிறாள்! (எனது கதை சொல்லும் திறமை அப்படி!)//

//ஆனால் பப்புவை பால் குடிக்கவும் மருந்து குடிக்கவும் வைத்தது!//

சுவாரஸ்யம்.. ஆனா, என்ன இருந்தாலும், எங்க பப்பு கதெ சொல்ற மாதிரி வருமா!!! :-)))

கோமதி அரசு said...

தேங்கா மாங்கா சூப்பு
தெகாட்டாத சூப்பு
புலிவச்ச சூப்பு
குடிச்சு பாரு டாப்பு//

முல்லை ,சொல்லிப்பார்த்தேன் இப்படி:

தேங்கா மாங்கா சூப்பு
தெகாட்டாத சூப்பு
பப்பு வச்ச சூப்பு
குடிச்சு பாரு டாப்பு

நன்றாக இருந்தது.

தமிழ் பிரியன் said...

பப்புக்கு எல்லாம் வாங்கி தருகிறீர்கள்.. எனக்கு எங்க? இப்பவும் இது போன்ற புத்தகங்கள் படிக்க எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கும்.. சீக்கிரம் ஊருக்கு போய் மகனுக்கு இதெல்லாம் வாசிச்சுக் காட்டனும்.. ;-)

☀நான் ஆதவன்☀ said...

:))

//தேங்கா மாங்கா சூப்பு
தெகாட்டாத சூப்பு
பப்பு வச்ச சூப்பு
குடிச்சு பாரு டாப்பு//

பாஸ் டீஆர் கவிதை மாதிரி இருக்கே பாஸ்? எதுக்கும் பப்புவுக்கு இதுமாதிரி சொல்லிகொடுக்கும் போது கவனம்..அவர் கவுஜயா இருக்கபோவுது :)

அம்பிகா said...

அருமையான பகிர்வு முல்லை.

\\"சுண்டெலிக் கதைகளில், சுண்டெலியை யானை கிண்டல் செய்யும். ‘கடலில் குதித்து செத்து போகலாம் என்று நினைத்தது' என்று ஒரு வரி வரும். கிண்டல் செய்தால் பதில் கிண்டல் அல்லது வேறு மாதிரி கொடுத்திருக்கலாம். இதை கண்டிப்பாக பப்புவுக்கு நான் வாசிக்க மாட்டேன்."\\
மிகச் சரி. கதைகளென்றாலும் குழந்தைகளுக்கு இவைகள் தேவையில்லையே...

அம்பிகா said...

அருமையான பகிர்வு முல்லை.

\\"சுண்டெலிக் கதைகளில், சுண்டெலியை யானை கிண்டல் செய்யும். ‘கடலில் குதித்து செத்து போகலாம் என்று நினைத்தது' என்று ஒரு வரி வரும். கிண்டல் செய்தால் பதில் கிண்டல் அல்லது வேறு மாதிரி கொடுத்திருக்கலாம். இதை கண்டிப்பாக பப்புவுக்கு நான் வாசிக்க மாட்டேன்."\\
மிகச் சரி. கதைகளென்றாலும் குழந்தைகளுக்கு இவைகள் தேவையில்லையே...

லேகா said...

சந்தனமுல்லை,

கதைகளாலும்,கற்பனைகளாலும் நிறைந்திருக்க வேண்டியது குழந்தை பருவம்!!!அவ்வகையில் உற்சாகம் அளித்தது உங்கள் கட்டுரை.அருவி குறித்தான அறிமுகம் இதற்கு முன்னர் இல்லை.பகிர்ந்தமைக்கு நன்றி.

எஸ்.ரா வின் சிறுகதை ஒன்று சமீபத்தில் படித்தது,"புர்ரா"..குழந்தைகளிடம் தனிமை தோற்றுவிற்கும் அர்த்தமற்ற ஓசைகள் குறித்தது....!!

http://www.sramakrishnan.com/view.asp?id=367&PS=1

மாதேவி said...

பப்புவின் கதைப்புத்தகங்கள் நன்றாக இருக்கின்றன.

சந்தனமுல்லை said...

நன்றி முகிலன், எனக்கும் அதே கவலைதான்...புத்தகசந்தையில் பார்த்திராவிட்டால் இந்த புத்தகங்களைக் குறித்து அறியாமல் இருந்திருப்பேன். பல கடைகளில் குழந்தைகள் பிரிவில் ‘தெனாலி ராமன் கதைகள், அக்பர்-பீர்பால்' போன்றவையே காணக்கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் கிடைக்கும் சாய்ஸ் தமிழில் இல்லை.

நன்றி ஜோதி, அருவியின் வலைப்பக்கத்திற்கு இணைப்பு தந்திருக்கிறேன். புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் முகவரி :
அருவி, 19,சந்தனம் நகர், பார்க் தெரு, மதுரை - 3.

சந்தனமுல்லை said...

நன்றி The The Analyst, அருவியின் பக்கத்தில் வாங்குவதற்கான வசதிகள் இல்லையென்று நினைக்கிறேன்.நீங்கள் சொல்வது உண்மைதான், ஆங்கிலத்தில் சிறுகுழந்தைகளுக்கு இருக்குமளவிற்கான சாய்ஸ் தமிழில் இல்லை. குறைந்தது நான்கு வயதிலிருந்தே தமிழ் புத்தகங்கள் கிடைக்கின்றன. toddlers-க்கு எண்களும், எழுத்துப் புத்தகங்களுமே. கதை புத்தகங்கள் வெகு குறைவு. அவ்விதத்தில் எனக்கும் ஆதங்கமே! தங்களது குழந்தைக்கு வாழ்த்துகள்! :-)


நன்றி பித்தனின் வாக்கு. அருவியின் முகவரி கொடுத்திருக்கிறேன். சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.

நன்றி அமைதிச் சாரல், அது சரிதான்..:-))

நன்றி கோமதி அம்மா!

நன்றி தமிழ் பிரியன் அண்ணா, தாராளமாக வாங்கி தரலாம்...நீங்கதான் லைப்ரரியை தோஹாவில் அமைக்கப் போவதாக கேள்விப்பட்டேன்! ;-)

முகிலன் said...

மதுரையா?? சூப்பரு...

மே மாச விசிட்ல அள்ளிட்டு வந்திர வேண்டியதுதான்.. :)))

Deepa said...

//தேங்கா மாங்கா சூப்பு
தெகட்டாத சூப்பு
புலி வச்ச சூப்பு
குடிச்சு பாரு டாப்பு//

:-)) பப்புக்குட்டி குரலில் மனதிற்குள் சொல்லிப் பார்த்தேன். சூப்பர்!

பப்புக்கு ஜுரம் சரியான உடனே பாடவைத்துப் பதிவிட வேண்டும். சரியா?

நட்புடன் ஜமால் said...

அதெல்லாம் சரி

அந்த பாடலை பப்பு பாடி வலையிலேற்றுங்கள் சீக்கிரம்.

பப்பு பேரவை
சிங்கை கிளை.

பா.ராஜாராம் said...

:-)

Uma Maheswaran said...

அருவியின் குழந்தைகளுக்கான வீட்டுக்கல்வி புத்தகங்களைப் பற்றிய தங்களின் விமர்சனத்திற்கு நன்றிகள்! கூரியர் அல்லது தபாலில் பெங்களூரிலிருந்து இந்த புத்தகங்களைப் பெற aruvibooks@gmail.com மின்னஞ்சல் முகவரியில் என்னைத் தொடர்பு கொள்ளலாம். எனது, பெங்களூர் முகவரி http://aruvi.org/wordpress/?page_id=19-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

-ஜெ.உமா மகேஸ்வரன்.