Friday, October 02, 2009

காந்தா அத்தையும் பிரபுதேவாவும்!!

காந்தா அத்தை எங்களுக்கு ஹவுசிங்போர்டு போனப்புறம்தான் பழக்கம். அது அப்போதான் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் என்பதால் அவ்வளவாக நிறைய பேர் வந்து குடியேறியிருக்கவில்லை. எங்களையும் சேர்த்து ஒரு பத்து பதினைந்து குடும்பங்கள். காந்தா அத்தை, பாண்டுரங்கன் சார், மணிமேகலை வீடு அப்புறம் ஏழுமலை வீடு, வெண்ணிலா வீடு என்று எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது!அப்போதெல்லாம் எனக்கு மதியம் ஒருவேளைதான் பள்ளிக்கூடம் - நான்காம் வகுப்பு. பைக்கை உயிர்ப்பிக்கும் சத்தம், கார் கிளப்பும் சத்தம், சைக்கிள் மணிகள் என்று எல்லாம் ஓய்ந்து காலை, பத்துமணிக்குமேலே நிசப்தம் ஆக்கிரமிக்கும் நேரத்தில், பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடுவார்கள். எப்போதும் ஒரே வீடாக இருக்காது...ஒருநாளைக்கு எங்கள் வீடு, அடுத்த நாள் உமா வீடு என்று மாநாடு மாறிக்கொண்டேயிருக்கும். 'என்ன சமையல்' என்று பேசியபடி, வீட்டு அழகுபொருட்களை செய்யத் துவங்குவார்கள் - தொங்கும் மீன்கள் அல்லது கிளிகள், உல்லன் நூலில் மேசைவிரிப்பு என்று அவரவர் கைவரிசையைக் காட்டியபடி வலை பின்னுவார்கள்....பின்னிக்கொள்வார்கள்!!

காந்தா அத்தைக்கு ஆந்திராவில் ஏதோ ஒரு கிராமம். ஆரம்பத்தில் அவர் பேசிய தெலுங்கு இங்கு தெலுங்கு பேசிய யாருக்குமே புரியவில்லை - அவ்வளது சுத்தமான தெலுங்கு! அத்தையுடன், அவரது தம்பி தியாகு மாமா தங்கியிருந்தார். தியாகு மாமாவிற்கு திருமாணமாகியிருக்க வில்லை. அங்கிளுக்கு வேலூரில் வேலை. காந்தா அத்தைக்கு இரண்டு பிள்ளைகள்.கவின் அண்ணாவும் நிவ்யாவும். அண்ணா அப்போது +1 படித்துக்கொண்டு இருந்தார். நிவ்யா என்னைவிட இருவயது சிறியவள். இருவருமே சென்னையில் ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருந்தார்கள். லீவுக்கு வருவார்கள். அதனால், அத்தையின் ஒரு நாளின் பெரும்பகுதி ஆயாவுடனே கழிந்தது.

காந்தா அத்தையின் வீட்டுக்கு எதிர் வீட்டில் ருக்குபாய் டீச்சர் இருந்தார். கண்டிப்பு - அவரது முகத்தைப் பார்த்தாலேத் தெரியும். அவரும் தெலுங்கு. டீச்சர் தனியாகத்தான் தங்கி இருந்தார். அவரும் பெரிம்மாவும் ஒரே பள்ளியில்தான் வேலை செய்தார்கள். டீச்சரும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார். பெரும்பாலும், வெள்ளி இரவுகளில், எங்கள் வீட்டில்தான் தூங்குவார். சாப்பிடும் போது நிறைய இறைப்பேன், தட்டைச் சுற்றி...டீச்சர் இறைக்கக் கூடாதென்று கண்டிப்புடன் சொல்லி, பேப்பர் மேல் தட்டை வைத்து சாப்பிடவும் வலியுறுத்துவார், அப்போதும் இறைப்பது வேறு கதை!! எல்லோருக்கும் டீச்சருடன் ஒரு சுமூக உறவு இருந்தது.

திடீரென்று டீச்சரிடம் எல்லோரும் பேசுவதை நிறுத்தினார்கள். காலைக்கூட்டங்களில் ஏதோ ரகசியம் பேசிக்கொள்கிறார்கள் என்று மட்டும் உணர முடிந்தததேத் தவிர முழுமையாகப் புரியவில்லை. இப்போதெல்லாம், டீச்சரும் எங்கள் வீட்டுக்கும் அவ்வளவாக வருவது இல்லை. இல்லையில்லை...வருவதேயில்லை. எப்போவாவது பெரிம்மா ஸ்கூலுக்கு லீவ் என்றால், லீவ் லெட்டரை டீச்சரிடம் கொடுத்துவிடச் சொல்லுவார். சில நாட்கள் கழித்து அதுவும் இல்லை.

காந்தா அத்தை வீட்டுக்கும், எங்கள் வீட்டுக்கும் சில சமயம் காலையுணவு பரிமாற்றம் நிகழும். ஆப்பம் அல்லது குழிப்பணியாரம் இருந்தால் அத்தைக்குக் கொடுத்துவிட்டு வரச்சொல்வார் பெரிம்மா. எனக்கு ரோடில் வேகமாக ஓடுவது மிகவும் பிடிக்கும். அதுவும் மனசுக்குள் ஒன்னு, ரெண்டு எண்ணிக்கொண்டு பத்துக்குள் அவங்க வீட்டு மாடி ஏறிவிட்டால் 'வின்' என்று எனக்கு நானே வைத்துக்கொண்ட சட்டம். அப்படித்தான் அன்றும் வேகமாக ஓடிச்சென்றேன். டீச்சர் வீடு சாத்தி இருந்தது. காந்தா அத்தை வீடு திறந்து இருந்தது. அத்தையிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த மங்கையர்மலரில் படம் பார்த்துக்கொண்டு நின்றேன். டீச்சர் கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்தார். அவரைப் பார்த்தததுமே அத்தை சத்தம் போட ஆரம்பித்தார். என்னவோ திட்டுகிறார் என்று மட்டும் எனக்குப் புரிந்தது..டீச்சர் கதவைப் பூட்டிக்கொண்டு சென்றபின்னும் அத்தையின் திட்டுகள் 'அவ' 'இவ' என்று தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஆயாவிடம் சொன்னபோது 'கண்டசெருப்பை வாங்கி காதில மாட்டிக்கோ' என்று திட்டுதான் கிடைத்தது. ஒரு வாரம் போயிருக்கும். ஹிந்தி ட்யூஷனில் (ஹிந்தி மிஸ் வீடு சப்-இன்ஸ்பெகடர் வீட்டுக்கு பின் ப்ளாக்கில் இருந்தது) மிஸ் 'என்ன சண்டைடி, உனக்குத் தெரியுமோ'னு கேட்டார் ..காந்தா அத்தையும், அங்கிளும், ருக்குபாய் டீச்சரும் சப்-இஸ்பெக்டரை பார்க்க வந்ததாகச் சொன்னார்.எனக்குத்தான் ஒன்னும் தெரியாதே...இதைச் சொன்னதும் மிஸ் உதட்டோரமாய் புன்னகைத்துக்கொண்டார்.
மாதமொருதடவை வந்துக்கொண்டிருந்த அத்தையின் கணவரும் சிறிதுநாட்களுக்குப்பின் வருவதே இல்லை. நிவ்யாவும், ப்ரவீன் அண்ணாவும் லீவுக்கு வருவார்கள். அவங்கப்பாதான் காரில் கொண்டு வந்துவிட்டு விட்டு பிறகு லீவு முடிந்ததும் அழைத்துச் செல்ல வருவார். அதுவும் தெருமுனையிலிருந்து மட்டுமே!! .

சிறிது நாட்களுக்க்ப்பிறகு டீச்சரும் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு அருகிலிருந்த அவரது தங்கை ஊருக்குச் சென்றார். அங்கிருந்து தினமும் பஸ்ஸில் பள்ளிக்கூடம் வந்துச் சென்றார். அப்படியே ரிடையர்டும் ஆகிவிட்டார். இன்று, கவின் அண்ணா வெளிநாட்டில் டாக்டராக இருக்கிறார். நிவ்யாவுக்கும் கல்யாணமாகிவிட்டது. அங்கிளின் இருதயப் பிரச்சினையில் இப்போது அத்தையும் அங்கிளும் ஒன்றாகிவிட்டார்கள். நானும் கொஞ்சம் பெரிய பெண்ணாகிவிட்டபடியால், என்ன பிரச்சினையென்றெல்லாம் புரிந்தது. ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை!

அதாவது, நடக்கும் தவறில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமபங்கு இருக்கும்போது, பெண்ணை மட்டுமே விமர்சிப்பது ஏன்? பெண்தான் அதற்குக் முழுமுக்கியக் காரணம் என்பதுபோல சித்தரிப்பது ஏன்? ஆணுக்கும் அதில் சரிபங்கு இருக்கிறதுதானே!

இந்த வார ஆவியில் நயந்தாரா-பிரபுதேவா கட்டுரையில், 'நயந்தாராதான் பிரபுதேவாவைப் பிடித்து வைத்திருக்கிறாரென்றும் அவரது உடும்புபிடியிலிருந்து பிரபுதேவாவாவை விடுதலையாக்க வேண்டுமெ'ன்கிற ரீதியில் இருந்தது.(சினிமாக்காரங்க விஷயம் தானேன்னு விட்டுடலாம்.) ஆனால், ஒரு பெண் எப்படி ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க விழைகிறார்களோ, அதேயளவு பொறுப்பையும், குடும்பக் கடமைகளையும் ஒரு ஆணிடமும் எதிர்பார்க்க வேண்டியதுதானே!!

இதில் மாதர்சங்கங்களும்(?!) களத்தில் குதித்திருப்பதாக...(அவர்களாவது பிரபுதேவாவுக்கும் புத்தி சொன்னால் தேவலை!!) பிரபுதேவாவைக் கண்டித்து ஏன் யாரும் களத்தில் இறங்கவில்லை..அவரை ஏன் யாரும் விமர்சிப்பது இல்லை..for that matter அந்த அங்கிளையும்!!

(குறிப்பு : நயந்தாரா - பிரபுதேவா பெயர்களைத் தவிர மீதிப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

21 comments:

ஜெரி ஈசானந்தா. said...

மேட்டெர் நல்லாகீது

சின்ன அம்மிணி said...

பலகீனங்களுக்கு இருபாலரும் விதிவிலக்கல்ல. பலர் அதை புரிந்து கொள்வதேயில்லை.

ஆயில்யன் said...

யோசிக்க வைக்கும் பதிவினில், என்னை மிகவும் ரசிக்க வைத்த வரிகள்

//எனக்கு ரோடில் வேகமாக ஓடுவது மிகவும் பிடிக்கும். அதுவும் மனசுக்குள் ஒன்னு, ரெண்டு எண்ணிக்கொண்டு பத்துக்குள் அவங்க வீட்டு மாடி ஏறிவிட்டால் 'வின்' //

கலக்கல் :)))

Deepa (#07420021555503028936) said...

முல்லை!

உங்கள் சிறு வயதில் பாதித்த நினைவை மீட்டெடுத்து இன்றைய நிலையும் கொஞ்சமும் மாறவில்லை என்பதை உங்கள் பாணியில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

இறுதியில் ஒரு கசப்பான கேள்வியும் வைத்திருக்கிறீர்கள். எனக்குத் தோன்றும் பதில் அதை விடக் கசக்கிறது.

வேறு வழி? ஆணோ பெண்ணோ மனமொத்து சேர்ந்து வாழ முடிவு செய்த பின் அதில் யார் சோரம் போனாலும் அவர்களைத் தூக்கி எறிவது தான் நியாயம்.

ஆனால் அது கொஞ்சமும் எளிதல்ல. சமுகத்தின் ஏச்சுப் பேச்சுகளை ஒதுக்கி விட்டாலும் குழந்தைகள் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதே.

இதையெல்லாம் விதி வசத்தால் தனியாக நின்று சமாளிக்கும் ஆயிரமாயிரம் பெண்கள் இருந்தாலும் தானாக முடிவெடுத்துக் கட்டிய கணவனைத் துறக்கும் தைரியம் நம் பெண்களுக்கு இல்லை. நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும்.

அதனால் தவறு செய்த அந்த பெண்ணை மட்டுமே, சமூகம் மட்டுமல்ல, பாதிக்கப் பட்ட மனைவியும் சேர்ந்து தூற்றுகிறாள்.

சீதைகளும் வைஷாலிகளும் இருக்கும் வரையில் ஆண்களுக்கு இராமர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

Exceptions எங்கும் எதிலும் உண்டு. ஆண்களை மொத்தமாகத் திட்டிவிட்டதாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.

பித்தனின் வாக்கு said...

நல்ல கேள்வி உங்களுடையது. இந்த ஆனாதிக்க சமுதாயத்தில் பெண்கள் மட்டும் அடங்கிப் போகவேண்டும் என்ற நேக்கத்தில் தான் குற்றத்தை அவர்கள் தலையில் சாத்துகிறார்கள். இதுக்கு பழமொழிகள் வேறு, தீ இருந்தாலும் பஞ்சு இடம் கொடுத்தாதான் பத்திக்கும் என்று. அல்லது முள்ளுல சேலை (இது அனைவருக்கும் தெரியும் என்பதால் சொல்லலை) அப்பிடினு பில்டப்பு வேற. இந்த பதிவில் டீச்சரைத் திட்டும் அத்தை தானும் ஒரு குற்றவாளி என்பதை மறந்துவிட்டார். அவர் தன் கனவரின் தேவைகளை புரிந்துணர்தலுடன் நிறைவேத்தியிருந்தால் அவர் வேலிதாண்டி இருக்க மாட்டார். அத்தையின் கனவர்தான் முதல் குற்றவாளி, டீச்சரின் பக்கம் குறைந்த பட்ச நியாயம் இருக்கின்றது. தனிமை பிளஸ் உணர்வுகளின் தேவை அவரைத் தூண்டி இருக்கின்றது. ஆனாலும் இன்னேருத்தியின் கனவரை தேர்ந்து எடுத்தது அவரின் தவறு.
பிரபுதேவா பிரச்சனையில் ஒரு நல்ல பெண்ணுடன் பதினைந்து ஆண்டுகள் குடும்பம் நடத்தி மூன்று குழந்தைகளை பெற்றும் அவன் ஒரு ஓடுகாலியாக இருக்கின்றான். பொதுவாழ்க்கையில் ஒழுக்கம் பார்க்கும் நமது சமுதாயம் பிரபலமானவர்கள் ஒழுக்கத்தை கண்டும் கானமல் இருப்பது நமது சமுதாயத்தின் பலவீனம். இப்படி பட்டவனிடம் தான் காதல் கொண்டது நயனின் தவறு. அவர் காதல் கொண்ட இருவரும் ஒழுக்கம் இல்லாதவர்கள். என்ன பண்ணுவது.

காமராஜ் said...

எது சரி எது தவறு என்பதில் நிறய்யக் குழப்பங்கள் இருப்பது போலவே,
தவறிழைப்பவர்களிலும் பேதம் காட்டப்படுகிறது. இருவர்க்கும் சரிபங்கு கிடைக்கும்
என்பது கவிதைகளில் மட்டுமே தேங்கிப் போய்விட்டது.

அடடா, ஒரு என் ஜி ஓ குடியிருப்பை வெறும் இரண்டு வார்த்தைகளில் உணர்த்தி
விட்டீர்கள். அப்புறம் சொல்லாமல் சொன்ன சின்ன வயது சந்தேகங்கள்.
இது கதைதோய்ந்த கட்டுரை. ரொம்ப நல்லாருக்கு சந்தன முல்லை.

கதிர் - ஈரோடு said...

பொதுவில் வைப்போம் என்ற தைரியம் கிடையாததுதான் காரணம்

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

யோசிக்க வைக்கும் பதிவினில், என்னை மிகவும் ரசிக்க வைத்த வரிகள்

//எனக்கு ரோடில் வேகமாக ஓடுவது மிகவும் பிடிக்கும். அதுவும் மனசுக்குள் ஒன்னு, ரெண்டு எண்ணிக்கொண்டு பத்துக்குள் அவங்க வீட்டு மாடி ஏறிவிட்டால் 'வின்' //

கலக்கல் :)))/

ரிப்பீட்டு:)

ராஜ நடராஜன் said...

தலைப்பு பார்த்து காந்தா அத்தை பிரபுதேவா கிட்ட சண்டைக்குப் போயிட்டாங்க போல இருக்குதுன்னு நினைச்சா இடுகை யோசிக்க வைத்து விட்டது.கால மாற்றமில்லாமல் தொடரும் உறவுகள்,மாற்று உறவுகள் இதற்கிடையில் அதிகரிக்கும் விவாகரத்துக்கள் என சமுதாயம் கொஞ்சம் பேலன்ஸ் செய்ய தடுமாறுகிற மாதிரிதான் தெரியுது.

ஆமா!பத்து வர்றதுக்குள்ள வீடா?எனக்கெல்லாம் ருர்...ர்..ர்....ர்.ன்னு வண்டியோட்டிகிட்டே தூக்குப்போசிய எடுத்துகிட்டு போற தூரத்துலதான் சொந்தக்காரங்க வீடுகள் இருக்கும்.

மாதவராஜ் said...

சிக்கலான பிரச்சினை ஒன்றை, சிக்கல் இல்லாமல் சொல்லியிருப்பதற்கு முதலில் பாராட்டுக்கள். அதிலும், குழந்தையின் பார்வையோடும், மிக பக்குவமான நிலையிலும் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கும் இதுபோல சில நினைவுகள் வந்து போகின்றன. அவைகளிலும் பெண்கல்தான் அவமானப்பட்டு இருக்கிறார்கள்.

தீபா சொல்வதை அப்படியே வழிமொழியத் தோன்றுகிறது.

rapp said...

வழக்கம்போல சிந்திக்க வைக்கும் பதிவை அழகா எந்தப் பூச்சுமில்லாமல் சொல்லிருக்கீங்க முல்லை.

இப்டியாப்பட்ட பதிவுல உலகப்பிரசித்தி பெற்ற திராபை வழக்குகள சுட்டாததுக்கு கன்னாபின்னாவென கண்டிக்கிறேன்:):):) பின்ன, ஊசி இடம் கொடுக்கலைன்னா, சேருல பூவைப் போட்டாலும், அப்டிங்கற ரேஞ்சுல கருத்தாழமிக்க லூசுத்தனமான டயலாக்குங்க உங்களுக்கு ஞாபகம் வராதது தப்புதான?

சூப்பரானப் பதிவு. அற்புதமா சொல்லிருக்கீங்க.

இங்கு பலர் சொல்லிருக்க மாதிரி இந்த சீரியஸ் பதிவையும் உங்க நினைவுகளோட கலந்து அவ்ளோ அழகா சொல்லிருக்கீங்க:):):) நச்சுன்னு இருக்கு:):):)

நசரேயன் said...

பதிவுக்கு வீர வணக்கம், அதற்க்காக கடைப்பக்கம் வந்த வேலைய செய்யாம இருக்க முடியலை

//நயந்தாராதான் பிரபுதேவாவைப் பிடித்து வைத்திருக்கிறாரென்றும்//

எதாவது புது படமா ?

Anonymous said...

appo antha teacher kkum mama kkum thaan connection. correct aa?

badil sollunga.. ellati mandai vedicudum..

Anonymous said...

பதிவாளரே

http://aarathanawin.blogspot.com/2009/09/blog-post_30.html


இதையும் பாருங்கோ

மங்களூர் சிவா said...

இன்னும் நாம நிறைய மாறனும்.

பின்னோக்கி said...

உங்களுக்கு பெண்ணுரிமை / பெண்ணின கொடுமை பற்றி எழுத வசமா ஒரு டாபிக் கிடைச்சுருக்கு என்சாய்.

அப்படியே அசோக்நகர்ல நடந்த 2 கொலை பத்தியும் எழுதுங்க. அந்த கொலையில் உயிரிழந்த அப்பாவி சிறுவனைப் பத்தி மாதர் சங்கங்கள் போராட்டம் நடத்த மாட்டேங்குதே ?? ஓ..இறந்து போனது பையன் இல்லை. ஒரு பொண்ணுன்னா போராடலாம்.

ஒரு வேளை அந்த மாதிரி நியூஸ் நீங்க படிக்குற பேப்பர்ல வரமாட்டேங்குதோ என்னமோ.

பிரபுதேவா மேல இந்த மேட்டர்ல எவ்வளவு தப்பு இருக்குன்னு எழுதுற பத்திரிக்கையையும் படிங்க.

அப்புறம் வருசத்துக்கு 10 லட்சம் மேல வாங்குற சாப்டுவேர் பெண்மணிகளுக்கு இன்கம்டேக்ஸ்ல கூடுதலா வரிவிலக்கு அளிக்குறாங்களே ?? ஆணும் பெண்ணும் சரிசமமா நடத்தப்படனும்னு குரல் கொடுக்குறவங்க இதப் பத்தி ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்க ? நீங்களும் அதப் பத்தி எந்த பதிவும் போட மாட்டேங்குறீங்களே ??.

நிறைய பேர் எழுதிருக்குற மாதிரி இது சூப்பர் பதிவுன்னு பாராட்டுறேன், நீங்க அந்த இன்கம் டேக்ஸ் மேட்டர பத்தி எழுதுனா ?.

இந்த பதிவுக்கும் நான் சொன்னதுக்கும் சம்மந்தமில்லைன்னு உடனே நிறைய பேர் பின்னூட்டத்துக்கு பின்னூட்டமிடப்போகிறார்கள்னு தெரியும். ஆனா..அந்த இன்கம்டேக்ஸ் பத்தி எழுத ஒருத்தனும் ரெடியா இல்லை.
தன்மானம், சுய மரியாதை பொண்ணுரிமைன்னு பேசும்போது, தேவையில்லாம, ஓட்டுக்காக அரசியல்வாதிங்க குடுத்த இந்த கேடுகெட்ட சலுகைகளையும், எங்களுக்கு வேண்டாம்னு சொல்லக் கூடிய ஒரு பெண்மணி இந்த நாட்டுல இல்லையேன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு. ஒன்னு நோட் பண்ணுங்க.. நான் சொல்றது வருசத்துக்கு 10 லட்சம் வாங்குற பெண்மணிகள் பெறக்கூடிய சலுகைகளை... வீட்டுல குடிச்சுட்டு விழுந்துகிடக்குற புருஷனை, பாவப்பட்ட குழந்தைகளை, தனியொருத்தியா நின்னு கஷ்டப்பட்டு வேலை செஞ்சு காப்பாத்துறாளே பெண் அவளுக்கு எவ்வளவு சலுகைவேணா குடுங்க..வேண்டாங்கள.

விரைவில் உங்களிடமிருந்து ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.

பெண்ணுரிமைவாதிகள், ஸ்டார்ட்த மியூசிக்...திட்டறதுன்ன இங்கயே திட்டுங்க இல்லைன்னா என்னோட மெயில் ஐடி pinnoki@gmail.com அதுக்கு மெயில் அனுப்பியும் திட்டலாம் :)

கலையரசன் said...

பாகாஉன்னாரு...!
ஆமா.. நயன்தாரான்னா யாருங்க?

பின்னோக்கி said...

நெசமாத்தான் கேட்குறேன் பிரபுதேவா பிரகாஷ்ராஜ் பற்றி திட்டி எழுதிய பத்திரிக்கைகளை உண்மையாகவே படிக்கவில்லையா ? இல்ல படிக்காத மாதிரி நடிக்குறீங்களா ? இல்ல படிச்சும் இந்த பதிவுல அத யூஸ் பண்ணமுடியாதுன்னு விட்டுட்டீங்களா ? பிரசாந்த் கிரஹலெட்சுமி மேட்டர்ல, பத்திரிக்கைங்க பிரசாந்தப் போட்டு கிழிச்சுட்டு, அப்புறம் உண்மை தெரிஞ்சதும், சத்தம் போடாம அடுத்த பெண் கொடுமைய பத்தி எழுதப் போய்ட்டாங்களே, அப்ப உங்களுக்கு நீங்க பார்த்த காந்தா அத்தை நியாபகத்துக்கு வரலையே ?

துபாய் ராஜா said...

:((

அமிர்தவர்ஷினி அம்மா said...

அதாவது, நடக்கும் தவறில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமபங்கு இருக்கும்போது,
பெண்ணை மட்டுமே விமர்சிப்பது ஏன்? பெண்தான் அதற்குக் முழுமுக்கியக் காரணம்
என்பதுபோல சித்தரிப்பது ஏன்? ஆணுக்கும் அதில் சரிபங்கு இருக்கிறதுதானே! //

:((((((((((

//
அதனால் தவறு செய்த அந்த பெண்ணை மட்டுமே, சமூகம் மட்டுமல்ல, பாதிக்கப் பட்ட மனைவியும் சேர்ந்து தூற்றுகிறாள்.

சீதைகளும் வைஷாலிகளும் இருக்கும் வரையில் ஆண்களுக்கு இராமர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.//

வழிமொழிகிறேன்

பா.ராஜாராம் said...

ஒரு பிரச்சினையை இரு வேறு கண்ணோட்டங்களில் அலசி இருக்கிற பக்குவம் நல்லா இருக்கு முல்லை.இங்கு,அந்த குழந்தைகளின் மனநிலைதான் மிக பரிதாபமான நிலையாகிறது.கேள்வி கொக்கியென சுருள செய்கிறதுதான்.பதில் இருக்கா ஆண்கடவுள்/சாத்தான்/மனசாட்சி?