Friday, October 30, 2009

கல்நாயக்!

இது ஒரு பண்டோராவின் பெட்டி போல. வல்லியம்மாவின் மங்கையராய் பிறப்பதற்கே இடுகையே என்னையும் எழுதத் தூண்டியது! ”எனக்கும் இப்படி நடந்திருக்கிறது” என்று!

அவரது இடுகையை மேலோட்டமாக புரிந்துக்கொண்டு பின்னூட்டமிட்டுவிட்டேன். ஆனால், அதன்பின் நீண்ட நேரம் இடுகையைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை அவருடைய இடத்தில் நானிருந்தால், என்னால் என்ன செய்திருக்கக்கூடுமென்று!! அல்லது என்ன செய்திருப்பேனென்று! எதுவும் தோன்றவில்லை, ஆனால், சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது! சிறுவயதிலிருந்து நான் கடந்து வந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதில் வந்து போகிறது..அதனோடு, அவை தந்த வலிகளும்!!

பள்ளிககூடத்திற்குச் செல்ல, எங்கள் குடியிருப்பைத் தாண்டி மெயின் ரோடிற்கு வரவேண்டும். அங்கே ஒரு ஆட்டோ ஸ்டேண்டை கடந்துதான் மெயின் ரோடிற்கு கடந்துவர முடியும். எட்டாவது வகுப்பு, சென்றபின்னர் எனக்கு அந்த ஆட்டோ ஸ்டேண்டை கடப்பது நைட் மேராக இருந்தது. காலையில், தலையை வாரி, பையை எடுக்கும்போதே அந்த ஆட்டோ ஸ்டேண்ட் கிலி பிடித்துக்கொள்ளும்! ஒருமாதிரி பயம் என் வயிறு முழுதும் பரவும்! எல்லாம் எதற்காக..அங்கே கிராஸ் செய்யும்போது கேட்கும் சீழ்க்கையொலிகள், கிண்டல், கேலி குரல்களுக்காக,! இதற்காகவே, கவிதாவுடன் ஒன்றாக செல்ல ஆரம்பித்தேன்- ஒரு தைரியத்துக்காக!

கிண்டல், கேலி அல்லது சினிமா பாடல்வரிகள்தன்...ஆனாலும் அந்த street harassment கொடுத்த வலி என் சிறு வயதின் மனதினில் பதிந்தது...கல்லூரி சென்றும், யாரேனும் என் பின்னால் சாதாரணமாக நடந்து வந்தால் கூட இதயம் படபடவென்று அடித்துக்குமளவிற்கு ஆனது! எல்லாமே 'நீ ஒரு பெண்..சதையாளானவள்..நாங்கள் பார்க்கவும், பார்த்து உணரவும், வார்த்தைகளால் சீண்டவும், முடிந்தால் தொட்டு சீண்டவும் நீ உண்டாக்கப்பட்டவள்' என்று சொல்லிக்கொண்டே இருப்பது போல இருந்தது!

மதுரையிலிருக்கும்போது நிகழ்ந்தது இது. நானும், சீதாவும் சிம்மக்கல் செல்லும் நகரப்பேருந்தில் சென்றோம். பேருந்து மிகுந்த கூட்டமாக இருந்தது. எங்களுக்கு எப்படியோ உட்கார இடம் கிடைத்துவிட்டது. எங்களுக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் அருகில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ள ஆரம்பித்தான். அந்த ஜனக்கூட்டத்தில் யாரும் இதைக்கண்டுக்கொண்ட மாதிரியே தெரியவில்லை. அவரவர் இறங்கும் இடம் எப்போதடா வருமென்று தவித்துக்கொண்ட மாதிரி இருந்தது. என்னருகில் அமர்ந்திருந்த சீதா கொஞ்சம் முன்நகர்ந்து அந்த ஆளின் தலையை பிடித்து இழுத்து ஆட்டினாள். அடுத்த நிமிடமே அந்த ஆள் எழுந்து அந்த கூட்டத்திலும் நகர்ந்து வாயிற்படியினருகில் நின்றுக்கொண்டான். நிறுத்தம் வருவதற்குள்ளாகவே இறங்கியும் சென்றுவிட்டான்.

இது நிகழ்ந்து நீண்ட நாட்களுக்கு அடிக்கடி நினைவில் வந்துக்கொண்டிருந்தது! என்னை நானே மிக அருவறுப்பாக உணர்ந்தேன். எனக்கு நிகழ்ந்தது போல, அதை நினைத்துக்கொண்ட போதெல்லாம் குளிக்கத் தொடங்கினேன், என் தோலையே கழட்டிவிடுவதுபோல!! அதிலிருந்து பேருந்தில் செல்வதை தவிர்க்கத் தொடங்கினேன். ரயிலில், யாராவது என்னை, எனது பெயரை, படிக்கும் கல்லூரியை பற்றி விசாரிக்கத் துவங்கினால் (நட்பாகக்கூட்!), பெயரை மாற்றிக்கூறினேன். தவறான கல்லூரியை குறிப்பிட்டேன்! அடுத்த செமஸ்டர் வந்தபின்னரே கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன்! மதுரை என்றில்லை..எந்த நகரத்திலும் ஒரு பெண்ணுக்கு நிகழக்கூடியதுதான் இது...!!

ஒரு டவுனிலிருந்து, எல்லோரையும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு சிறு ஊரிலிருந்து, வழியில் உங்கள் சைக்கிள்செயின் கழன்றால் உடனே வந்து சரிசெய்து ‘டீச்சர் பொண்ணுதானேம்மா' என்று கேட்டுவிட்டு செல்லும் நபர்கள் நிறைந்த ஊரிலிருந்து வந்த எனக்கு இந்த சம்பவம் நடுக்கத்தையே, திடுக்கிடலையே தந்தது!!

சீதாவிற்கு அந்த தைரியம் வர..அது ஒரு நீண்ட பயணமாக இருந்திருக்க வேண்டும்! பயத்தை..அதிர்ச்சியை..ஒரு உடலாக உணரப்பட்ட தருணத்தை..உதறி அந்த ஆளின் முடியைப் பிடிக்க அவள் இதையெல்லாம் கடந்து வந்திருக்கவேண்டும்! நமக்காக யாரும் குரல் உயர்த்த மாட்டார்கள், இதுபோன்ற சந்தர்ப்பங்களில்! நாம்தான் நமக்காக எழுந்து நிற்க வேண்டும்! வல்லியம்மாவின் அனுபவம் உணர்த்துவதும் அதைத்தான்!

31 comments:

rapp said...

ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க. இப்பொழுது ஈவ் டீசிங்கை மட்டும் மிரட்டலாக செய்வதோடு நிக்காமல், யாசகம் கேக்குறதையும் மிரட்டலா கேக்குறாங்க:(:(:(

ஸ்கூல்ல பெயிலாகுற பெண் பிள்ளைகளை சில ஆசிரியர்கள்(இரு பாலருமே) 'உன்னையப் படிக்க வெக்குறதே பெருசு, அதுல இந்தழகா', அப்டின்னு திட்டுறதுல ஆரம்பிச்சு, அந்தப் பெண் குழந்தைகள் அனைத்தும் அதி புத்திசாலித்தனத்தை படிப்பில் மட்டுமேக் காட்ட வேண்டும் என்று சொல்றதில் இருந்து, அவர்கள் சாதாரணமா எதையும் செய்வதையும் அனுமதிக்க முடியாத ஒரு மட்டமான மனநிலை பலரிடமும் இருப்பது வருத்தமான உண்மை. அதை எதிர்த்து வருத்தப்பட்டாலும் அதற்கும் கூட அனுமதி மறுக்கப்படுது!!!

rapp said...

பெண்கள் நகைச்சுவைக் கலந்து தங்கள் உணர்வுகளை, அனுபவங்களை வெளிப்படுத்தும் எழுத்துக்களுக்கு, chick lit அப்டின்னு பேர் வெக்குறதில் ஆரம்பிச்சு இந்த உணர்வுரீதியானத் தாக்குதல் அனைத்து இடங்களிலும் இருக்கு:(:(:(

அனைத்துக்கும் அடிப்படை நீங்க இதில் சொல்லிருக்கக் காரணம்தான்னு தோனுது.

rapp said...

உங்கள் தோழியைப் போன்ற மனநிலைக்கு அனைத்து பெண் குழந்தைகளையும் தயார் செய்வது மட்டுமே தீர்வு போலருக்கு. பலரோட 'காலியான மேல்மாடி' எப்பொழுது உருப்படியாக நிரப்பபடுதோ அப்பொழுதுதான் நிலைமை மேம்படும்:):):)

க.பாலாசி said...

//மதுரை என்றில்லை..எந்த நகரத்திலும் ஒரு பெண்ணுக்கு நிகழக்கூடியதுதான் இது...!! //

இதேபோன்றதொரு நிகழ்வு சென்றமாதம் எனது பேருந்து பயணத்திலும் நிகழ்தது. பாண்டியிலிருந்து விழுப்புரம் வரும் வழியில். அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணே எழுந்து அவனை துவம்சம் செய்துவிட்டார்.

//உதறி அந்த ஆளின் முடியைப் பிடிக்க அவள் இதையெல்லாம் கடந்து வந்திருக்கவேண்டும்//

உண்மைதான். பலர் இதுபோன்றதொரு கணங்களை கடந்துகொண்டே இருக்கிறார்கள்.

என். உலகநாதன் said...

இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு தேவை தைரியம் மட்டுமே.

தைரியமாக நடந்து பாருங்கள், உங்களை நெருங்கவே அனைவரும் பயப்படுவார்கள்.

செந்தழல் ரவி said...

மீ த ப்ர்ஸ்ட் ரீ எண்ட்ரி போல ?

ஓட்டுகளை போட்டுட்டேன்.

செந்தழல் ரவி said...

இதேபோன்றதொரு நிகழ்வு சென்றமாதம் எனது பேருந்து பயணத்திலும் நிகழ்தது. பாண்டியிலிருந்து விழுப்புரம் வரும் வழியில். அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணே எழுந்து அவனை துவம்சம் செய்துவிட்டார்.&&&&&&&&&&&&&&&

வெரிகுட். இப்படித்தான் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும்.....

செந்தழல் ரவி said...

பெண்கள் நகைச்சுவைக் கலந்து தங்கள் உணர்வுகளை, அனுபவங்களை வெளிப்படுத்தும் எழுத்துக்களுக்கு, chick lit அப்டின்னு பேர் வெக்குறதில் ஆரம்பிச்சு இந்த உணர்வுரீதியானத் தாக்குதல் அனைத்து இடங்களிலும் இருக்கு..................


சரியா சொன்னீங்க ராப்.

செந்தழல் ரவி said...

அனைத்துக்கும் அடிப்படை நீங்க இதில் சொல்லிருக்கக் காரணம்தான்னு தோனுது...............

மரபியல் ஜீன் ரீதியா யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். இந்த ஆம்பளை குரங்குங்க ஏன் இப்படி இருக்கு ??

கதிர் - ஈரோடு said...

//அவரவர் இறங்கும் இடம் எப்போதடா வருமென்று தவித்துக்கொண்ட மாதிரி இருந்தது//

இப்படி நாம் இருப்பதுவும் அருவறுப்பான ஒன்றே

ஆயில்யன் said...

< செந்தழல் ரவி said...

அனைத்துக்கும் அடிப்படை நீங்க இதில் சொல்லிருக்கக் காரணம்தான்னு தோனுது...............

மரபியல் ஜீன் ரீதியா யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். இந்த ஆம்பளை குரங்குங்க ஏன் இப்படி இருக்கு ??>

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் !

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான்கைந்து வருடங்களுக்கு முன் 25ஜி பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும் போது பின்னால்
உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு ஆள் ஏதோ சில்மிஷம் செய்ய, அடுத்து வந்த நிறுத்தத்தில் அந்தப் பெண்
இறங்கிக்கொண்டாள். இப்போ அவளுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த நாந்தான் அவருக்கு டார்கெட் ஆகிப்போனேன்
அடுத்த நிறுத்தம் கூட வரவில்லை, எழுந்து விட்ட டோஸில் மனுசன் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிட்டார்.
இத்தனைக்கும் பஸ் காலியா இருக்கு, கண்டக்டரும் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துக்கிட்டுதான் வரார்.

அதுக்கப்புறம் ஒரு தடவை (பஸ்ஸுல தான்) ஒரு வயதானவர் இடித்துக்கொண்டே வர, திரும்பி முறைத்ததுக்கு
நான் உன் தாத்தா மாதிரிம்மா என்றார், என் தாத்தா எப்பவோ செத்துட்டாரு, நீங்க என் அப்பா மாதிரி, ஆசைப்பட்டா உங்க வீட்ட்ல
இருந்து யாரயாச்சும் முன்னாடி நிக்க வெச்சுக்கோங்க, இடிக்க வாட்டமா என்றேன்.
மனுசன் நகர்ந்து முன்னாடி போனவர்தான். பின்னாடி ஏன் திரும்பறார்.

என்ன ஒன்னு, இதெல்லாம் கேட்கும் போது நம்ம காதுக்கே கேட்காத மாதிரி கேட்கக்கூடாது, சத்தம் போட்டு கேட்கனும்
நம்ம தைரியந்தான் இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு கை கொடுக்கும்.

மாதவராஜ் said...

பெண் உலகத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் தாங்கள் சொல்லியிருக்க முடியும். அதற்கே, தவித்துப் போக வேண்டியிருந்தது படித்து முடிப்பதற்குள். பெண்களை உடலாக பார்த்து, உடலாக அறியும்படி இந்த அமைப்பின் தன்மைகள் இருக்கின்றன. சீதாவைப் போன்ற கலகக்குரல்களால்தான் கொஞ்சம் கொஞ்சமாக இதை உடைக்க முடியும்.

முக்கியமான பதிவு. பழகிய இடத்தில் இருக்கும் தைரியம் பழகாத இடத்தில் இருப்பதில்லைதான்.

காமராஜ் said...

மிக அருமையான பதிவு, மிக மிகத் தேவையான பதிவு.
இது தனிபெண்களுக்கு மட்டுமல்ல கணவரோடு செல்லும்போது கூட நேரும்.
அவன் நெற்றி தொடங்கி துணிபடாத பகுதியெங்கும் விபூதி பூசியிருந்தான்
விருதுநகரில் ஏறி எங்கள் பின்னால் அமர்ந்து எதிரே தெரியும் மஞ்சள் நிறப்பொருள்கள்
எல்லாவற்றையும் தொழுதுகொண்டே வந்தான் கலகத்துக்குப்பயந்து என்மனைவி சீட்டின் நுனிக்கே போய்விட்டாள்.
தெரிந்த போது எனக்கு வேறுவழியே தெரியவில்லை அதே போல அவன்
தலை மயிரை இழுத்து அமுக்கி கைவலிக்கும் வரை அடித்தேன்.
அவமானத்தில் அடுத்த நிறுத்தத்திலே இறங்கி ஓடிவிட்டான்.

சின்ன அம்மிணி said...

கொஞ்சம் தைரியமா தட்டிக்கேக்கணும். நல்ல பதிவு முல்லை.

ஜெயந்தி said...

பல்லாயிரம் ஆண்டுகளாக பெண்கள் பேசாமடந்தைகளாக்கி பூட்டி வைத்த விளைவே, நம்மால் அதீதமான கோபம் வந்தாலும் ஒருவித பயமும் வந்து நம்மை பேசா மடந்தைகளாக்கி விடுகிறது. அதனாலேயே அவர்களுக்கு ஈவ்டீஸிங் வேலை சுலபமாக நடக்கிறது.

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...நான் திரும்பிப் பார்த்துக் கொண்டது போலிருந்தது முல்லை!பூங்கொத்து!

வல்லிசிம்ஹன் said...

முல்லை ,

இது உண்மையாவே பாண்டோராஸ்' பாக்ஸ் தான். எத்தனை நபர்கள் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள்.!!

பதி said...

தேவையும் அவசியமுமான பதிவு.
இதனை ஒரு சமூக வியாதியாகத் தான் கருத வேண்டியுள்ளது. ஏனெனில், அங்கிருந்து வருபவர்கள் இங்கும் திருந்துவதில்லை.

ஒரு சின்ன சந்தேகம், இந்த தலைப்பிற்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்???

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம்.. சரியா எழுதி இருக்கீங்க.. இதுபோல நடக்காத எதிர்கொள்ளாதவங்க இருக்கமுடியாது தான். பலவருடமா எனக்கு என் பள்ளிக்கு போக துணைக்கு ஆளே கிடையாது வீட்டுப்பக்கத்துல இருந்து. என் ஊரையே எனக்குத்தெரியாத அளவு ஒருமாதிரி நேர்பார்வைபாத்துட்டே போகவேண்டிய கட்டாயம்..வீட்டைவிட்டு இறங்கினா ஒரு மாதிரி திகிலா யோசனையோடவே சென்று சேர வேண்டிய இடத்தை அடையற கட்டாயத்தை என்னைக்காச்சும் ஆண்களால் உணரமுடியுமான்னே தெரியல..

செந்தழல் ரவி said...

அமிர்தவர்ஷினி அம்மாவுக்கு ஒரு ராயல் சல்யூட்.

inian said...

உங்கள் எழுத்துக்கள் மிக நன்றாக இருக்கிறது ஆஹா என்று சொல்லத்தோன்றுகிறது அது சரி எழுத நேரம் இருக்கிறதா உங்கள் பணியின் ஊடே ?
அம்மணி நீங்கள் கொஞ்சம் பெரியார் இயலை படிக்கவேண்டுகிறேன் . என் என்றால் பெண் ஏன் அடிமையானாள் ? என்று ஒரு புத்தகம் இருக்கிறது அது சொல்லும் உங்களுக்கான விளக்கத்தை .பெண் குழந்தையை ஆன்ன்குழந்தையை வளர்ப்பது போலவே வளர்க்க வேண்டும் என்று சொல்கிறார் .

inian said...

உங்கள் எழுத்துக்கள் மிக நன்றாக இருக்கிறது ஆஹா என்று சொல்லத்தோன்றுகிறது அது சரி எழுத நேரம் இருக்கிறதா உங்கள் பணியின் ஊடே ?
அம்மணி நீங்கள் கொஞ்சம் பெரியார் இயலை படிக்கவேண்டுகிறேன் . என் என்றால் பெண் ஏன் அடிமையானாள் ? என்று ஒரு புத்தகம் இருக்கிறது அது சொல்லும் உங்களுக்கான விளக்கத்தை .பெண் குழந்தையை ஆன்ன்குழந்தையை வளர்ப்பது போலவே வளர்க்க வேண்டும் என்று சொல்கிறார் .

அம்பிகா said...

\\என்ன ஒன்னு, இதெல்லாம் கேட்கும் போது நம்ம காதுக்கே கேட்காத மாதிரி கேட்கக்கூடாது, சத்தம் போட்டு கேட்கனும்
நம்ம தைரியந்தான் இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு கை கொடுக்கும்.//
மிகச் சரியாகச் சொன்னீங்க, அமித்து அம்மா.
இங்கே சீதாக்கள் தான் தேவை.
சரிகாக்கள் அல்ல.

நசரேயன் said...

தேவையான பதிவு

சின்ன அம்மிணி said...

எ.கொ.சந்தனமுல்லை. இந்தப்பதிவுக்குகூட - ஓட்டு

மங்களூர் சிவா said...

//மதுரை என்றில்லை..எந்த நகரத்திலும் ஒரு பெண்ணுக்கு நிகழக்கூடியதுதான் இது...!! //

அருவருப்பான உலகம் :(((

☀நான் ஆதவன்☀ said...

:(

கோமதி அரசு said...

//நமக்காக யாரும் குரல் உயர்த்த மாட்டார்கள், இது போன்ற சந்தர்ப்பங்களில்,நாம் தான் நமக்காக எழுந்து நிற்கவேண்டும்.//

இந்த பதிவை படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞ்சர் டீ.வி யில் சுள்ளான்
ஒடிக் கொண்டு இருந்தது,அதில் பஸ் நிலையத்திலிருந்து சுள்ளானின் அக்காவை ஒருவன் இடித்துக் கொண்டு இருப்பான்,பஸ்ஸிலும் தொடர்ந்து ஏறி
இடிப்பான், அவள் பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்,
இடித்தவனைப் பார்த்து மூன்று ரூபாய் டிக்கட் வாங்கி இடித்து விட்டு இறங்கி விடிவீர்கள்,இடியைபொறுக்க முடியாமல் நாங்கள்காரிலோ,
வண்டியிலோ வரலாம் ஆனால் முடியாது. எங்கள் வாழ்க்கையே இதில் தான் அடங்கி இருக்கு, என்று பஸ் பாஸை காட்டி இதில் குத்தி,குத்தி இருப்பது போல் நாங்களும் உங்களால் ரணமாய் இருக்கிறோம்,எனக்கு தாலி கட்டி மூன்று வேளை சாப்பாடு,வருஷத்திற்க்கு இரண்டு புடவை வாங்கி கொடு என்கிறாள் அவன் இறங்கி ஒடுகிறான்.
பஸ்ஸில் இருந்தவர்கள் செருப்பால்
அடித்தால் கூட புத்தி வராது என்பதுடன் முடித்துவிடுவார்கள்.

நம் கையே நமக்கு உதவி என்பது போல் நாம் தான் நமக்காக எழுந்து
நிற்க வேண்டும்.

rajasurian said...

பெண்ணை வெறும் உடலாய் மட்டுமே உருவகப்படுத்தும் திரைப்படங்களும், இன்னும் கூட பெண்ணையும் ஆணையும் விலகியே நிற்க வைத்திருக்கும் கலாச்சாரமும் கொண்ட நம் ஊரில் கல்விக்காகவும் வேலைக்காகவும் வீடு விட்டு வெளியே செல்லும் பெண்களின் நிலை மிக சிக்கலானதுதான். இது போன்ற நிகழ்வுகளில் உடனடியாய் உறுதியாய் எதிர்ப்பது மட்டுமே தீர்வாய் அமையும்.

அமிர்தவர்ஷிணி அம்மா-வின் பின்னூட்டம் அருமை. இது போன்ற அனுபவ பகிர்வே மற்றவர்களையும் தைரியமாய் கலமிரங்க வைக்கும். Hats off அமிர்தவர்ஷிணி அம்மா

(அதிக வலி தரும் sexual harassment-ல் வயதான ஆண்களே முன்னிலையில் இருப்பதாய் தோழிகள் சொல்கிறார்கள். வயதான ஆண்கலை எதிர்க்கும் பொது சற்று அதிக கவநமாய் இருக்கவும்)

பித்தனின் வாக்கு said...

மிகச் சரியான பதிவு இது. இது அண் மிருகங்களில் ஒரு சில மனவிகாரம் பிடித்தவர்களின் செயல்தான். இப்படிபட்டவர்கள் பெரும்பாலும் பயந்தாங் கொல்லிகளாக இருப்பார்கள். பாதிக்கும் பெண்கள் கொஞ்சம் தைரியமா குரல் கொடுத்தால் அல்லது அடித்தால், மற்றவர்கள் துணை வருவார்கள். பெண்கள் அமைதியாக இருந்தால், அந்த பெண்ணே சும்மா இருக்கு நமக்கு என்ன என்று விட்டு விடுவார்கள். சென்னையில் என் சித்தி பெண் இதுக்காக செயின்னில் ஒரு பெரிய பின்னூசி கேத்துஇருப்பாள், யாராது அருகில் வந்தால் முதலில் முறைப்பாள், அதுக்கு நகரவில்லை என்றால் பின் பின்னூசியை சத்தம் இல்லாமல் குத்திவிடுவாள். ஒரு முறை நாலுனாள் பின்னால் சுற்றிவந்தவன் பஸ்ஸில் அவளை இடிக்க, இருந்த வெறியில் அவள் பின்னூசியில் நாலு முறை விடாமல் குத்தி இருக்கின்றாள். அவன் வலியும் தாங்க முடியாமல், வெளியும் சொல்லமுடியாமல் அவஸ்த்தைப் பட்டதை சொல்லி சிரிப்பாள். இது போல நிறைய கதைகள் உள்ளன. தைரியமும், தன்னம்பிக்கைதான் முதலில் வேண்டும்.