Tuesday, October 06, 2009

காது குத்திய காதை!!

பப்புவின் அனுமதியின்றி, அவள் விருப்பப்பட்டாலொழிய காது குத்துவதில்லை என்று முடிவு செய்திருந்ததை இங்கே எழுதியிருந்தேன். ஊரில் உறவினர்களுக்காக, முதல் மொட்டையின்போது நெல்மணியாலே காதில் லேசாக அழுத்தி, சம்பிரதாய காது குத்தை முடித்துவிட்டோம். தற்போது 'கம்மல் குத்த போலாம்' என்ற அவளது ஆசை, நச்சரிப்பாக மாறியதைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுத்துவிட முடிவு செய்தோம். (நாங்க இப்போதைக்கு காது குத்த வேண்டாம்னுதான் நினைச்சிருந்தோம், ஆனால் வர்ஷினி அப்படி நினைக்கலையே!! - சிவாஜி ஸ்டைலில் வாசிக்கவும்!)

'ஊரைக்கூட்டி, நாலைஞ்சு ஆடை வெட்டி எதற்கு ரணகளம், இங்கே சென்னையிலேயே குத்திவிடலாமெ'ன்று முகிலும் நானும் முடிவு செய்து ('இதுக்கெல்லாம் ஒரு ஃபங்ஷனா'!)உறவினர்கள் கேட்டால் சமாளித்துக்கொள்ளலாமென்று அருகிலிருக்கும் 'நாதெள்ளா'வில் கம்மல் வாங்கி அங்கேயே குத்தியாயிற்று. ஆசாரி உள்ளேயே இருக்கிறார். முதலிலேயே சொல்லிவிட்டால் அவரும் தயாராக இருப்பார். முதல்லே டாக்டரிடம் போகலாமாவென்று நினைத்து இங்கேயே கன்ஷாட்-இல் குத்திவிடுவார்களென்றுச் சொன்னதால் ஒரு ஐந்து நிமிடம் காத்திருப்புக்குப் பின் ஆசாரி வந்ததும் குத்தியாயிற்று.

நாற்காலியில் பப்புவை உட்கார வைத்து, நாங்கள் குறித்த புள்ளியிலேயே குத்திவிட்டார். அப்படியே கம்மலையும் மாட்டிவிட்டார். பப்புவுக்கு அழுகையே வரவில்லை, ‘கம்மல் குத்திக் கொள்ள'போகும் உற்சாகத்தில்! லேசாக ஒரு ஆஆ! அவ்வளவுதான். அழுகையின்றி ரத்தமின்றி ஒரு காதுகுத்து!

வெளியே வந்ததும் கண்ணாடியில் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டாள்...பார்த்துக்கொண்டு நின்றாள்...நின்றுக்கொண்டே இருந்தாள்!! வரும்வழியில் தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டாள். இரவும் கம்மலுடனே கழிந்தது. பள்ளிக்கூடத்திற்கு தங்கம் போட்டுச் செல்லக் கூடாது. அதனால் கழட்டிவிட்டு, ஆயா சொன்னபடி தேங்காயெண்ணெய் விட்டு ('அசைவு இருக்குமாம்') துடைப்பக்குச்சியை போட்டு அனுப்பினோம். சாயங்காலம் வரும்போது பார்த்தால் வலது காதில் சிவப்பாகி வீங்கி இருந்தது. துடைப்பக்குச்சிகளை காணோம். எண்ணெய் மட்டும் விட்டோம். கம்மல் போட விடவில்லை. அழுகை. ஆர்ப்பாட்டம். ”எனக்கு கம்மல் வேணாம்”!!!

அடுத்த நாள் காலை காயம் மூடிக்கொண்டது. அதன்பின் என்ன செய்வது? தேங்காயெண்ணெய் விட்டுக்கொண்டே இருந்ததில் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்குள் துளை இருந்த இடமே தெரியவில்லை. :-).

காது குத்தும் படலத்திற்கு தன்னைக் கூப்பிடவில்லையென்று கோபித்துக்கொண்ட வடலூர் ஆயா, 'ஊர்லே போய் இன்னொருதடவை காது குத்திக்கலாமா'வென்று கேட்டால், பப்பு சொல்கிறாள்,

“கம்மல் குத்துனா வலிக்கும்...,நான் பெரிய பொண்ணாகிட்டுதான் கம்மல் குத்திப்பேன்...நீங்க பெரிய கம்மல் போட்டு இருக்கீங்க..உங்களுக்குக் காது வலிக்குதா? கழட்டிடுங்க!!”

34 comments:

ஆயில்யன் said...

காது குத்தும் படலத்திற்கு அழைப்பிதழ் கிடைக்கப்பெறாத கோபத்துடன்......


பப்பு பேரவை
தோஹா கத்தார்

ஆயில்யன் said...

//ஊரைக்கூட்டி, நாலைஞ்சு ஆடை வெட்டி எதற்கு ரணகளம், ///


ஒரு ஆடு நான் கேள்விபட்டிருக்கேன் நாலஞ்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

கலையரசன் said...

ஆனா.. ஆம்பள பசங்களுக்கு ஏங்க காதுகுத்துறாங்க?

கதிர் - ஈரோடு said...

அப்போ 'நாதெள்ளா'வில் வாங்கி கம்மலை நீங்க தான் போட்டுட்டு இருக்கீங்களா

சின்ன அம்மிணி said...

குச்சி இன்பெக்ஷன் ஆகியிருக்குமோ என்னவோ

ராமலக்ஷ்மி said...

காது குத்திய காதை இப்படியா முடிந்தது? பாவம் பப்பு:(!

r.selvakkumar said...

நகைக் கடையில் குத்திய காது மூடிக் கொண்டதாக நினைக்க வேண்டாம். குலதெய்வம் கோவிலுக்குப் போய் உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாய் இருக்க ஒரு கதவு திறந்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

அருமையான பதிவு

மாதவராஜ் said...

:-)))))

பித்தனின் வாக்கு said...

நல்லது, முறைப்படி உங்கள் குலதெய்வம் கோவிலில் ஆசாரியை வைத்து காது குத்தவும், இதுபோல் கன்சாட் காது குத்தினால் சீக்கிரம் துளை மூடிவிடும். காது குத்தி முடிந்தவுடன் கம்மல் போட்டு கழட்டி விடவும். குச்சி செருகி தேங்காய் எண்ணெய் விடவும். புண் ஆறும் வரை குச்சியைக் கழற்றாமல் எண்ணை விடவும். புண் ஆறியவுடன் நல்ல தரமான கவரிங் கம்மல் போடவும். இதை பப்புவின் பள்ளி விடுமுறைக் காலத்தில் செய்யவும்.
பப்புவிடம் கூறவும் இது ஒரு அக்குபஞ்சர் முறை இதை செய்தால் அறிவும், படிப்பும் நன்றாக வரும் என்று செல்லுங்கள். அங்கு இருக்கும் ஒரு நாடியை தூண்டுவதுதான் காது குத்துதல் ஆகவே அவளின் நீண்ட விடுமுறை காலத்தில் செய்து, அரித்தாலும் காதை தொடாமல் இருக்க செல்லவும்.
ஒரு இரண்டு நாள் பொறுத்துக் கொண்டால் ஆறிவிடும் எனக்கூறுங்கள். இது பொரியோர்கள் முடிவு செய்து செய்யவேண்டிய ஒன்று இதில் குழந்தையின் கருத்து கேப்பது அனாவசியம். சல்பாமைஸின் பவுடரை எண்ணெய்யுடன் குழைத்து இடவும். அரிக்காது.

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............இன்னுமா அடுத்த காது குத்தல் நடக்கல? வெள்ளிக்கம்மல் போட்டு விடுங்க. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

//
ஒரு ஆடு நான் கேள்விபட்டிருக்கேன் நாலஞ்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்//

இந்த விழாவில் முல்லையும் கலந்துப்பாங்கன்னு மறந்துட்டீங்களா?:):):)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்பவும் எளிமையா பப்புவுக்கு காது குத்தின முறை நன்றாகவே இருக்கிறது.

('இதுக்கெல்லாம் ஒரு ஃபங்ஷனா'!)//

நான் கூட அமித்துவுக்கு காது குத்தும் போது, இந்த மாதிரிதான் நெனச்சேன், ஆனாலும் பாருங்க
மாமா மடியில உட்கார வெச்சு, கூட தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, பெரிம்மா, பெரிப்பா ந்னு ஒரு பட்டாளமே
புடை சூழ அழாதடா செல்லம், ராஜா, கண்ணு, அம்முன்னு மொட்டை, அடிச்சு காது குத்திய பிறகு எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு.
அது அமித்துவின் அழுகையால் மட்டும் வந்ததல்ல, கூடி நின்ற உறவுகள் கொடுத்த உற்சாக நெகிழ்ச்சி.

உறவுகளாலும்/உணர்வுகளாலும் பின்னப்பட்ட சின்னஞ்சிறு உலகத்தை அமித்துவுக்கு காட்டியபின் ஐந்து நிமிட அழுகைதான், அப்புறம் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்.

ஜீவன் said...

காது குத்திய இடத்தில் வேப்பங்குச்சி அதாவது வேப்பிலையின் காம்பினை சொருகிவைக்க வேண்டும் புண்ணும் ஆறிவிடும் துளையும் மூடாது....!

ஆயிரந்தான் இருந்தாலும் ஆடு வெட்டி காதுகுத்துவதுபோல வருமா... ??

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஆஹா, சொல்லவேஇல்ல.
இருக்கட்டும்.... இருக்கட்டும்....

தம்பிக்கு செலவ மிச்சபடுத்தலாம் என்று நினசுட்டீங்களா?

ராஜா | KVR said...

காதுமடலுக்கும் கண்பார்வைக்கும் தொடர்பு உண்டுன்னு படிச்சிருக்கேன். அதனால் தான் அதிகமாய் காது குத்திக்கொள்ளும் பெண்களுக்கு கண்பார்வையில் கோளாறு வராதுன்னு படிச்சேன், எத்தனை தூரம் உண்மைன்னு தெரியலை. ஆனால் பின்னூட்டத்தில் நண்பர் ஒருவர் சொன்னது மாதிரி கடையிலே குத்தினால் ஓட்டை அடைந்துவிடும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை. காது குத்திய இடத்தில் தோடோ வேப்பங்குச்சியோ சில நாள்கள் போடாமல் இருந்தாலே ஓட்டை அடைந்துவிடும்.

உறவுகள் கூடி நிற்க காது குத்துவதெல்லாம் உறவுகளுக்கு நாம் செய்யும் மரியாதை. இதில் நான் அமித்து அம்மா கட்சி. இருந்தாலும் நாலஞ்சு ஆடெல்லாம் ரொம்ப ஓவரு, சொந்தக்காரங்க கூட்டம் அதிகமோ!!

ராஜா | KVR said...

கூடுதல் செய்தி: சவுதியில் பிறக்கும் பெண்குழந்தைகளுக்கு பெற்றோர் விருப்பப்பட்டால் மருத்துவமனையிலேயே காது குத்திவிடுகிறார்கள். ஆண் குழந்தைகளுக்கு - அது பதிவுக்கு அவசியமில்லாத செய்தி, அத்தால வுட்ருவோம்

கோமதி அரசு said...

முல்லை ,பப்புவின் பள்ளிக்கு தங்கம்
போடக்கூடாது என்றால் வெள்ளித் தோடு
போட்டு பள்ளிக்கு அனுப்பியிருக்கலாமே.
துடைப்பகுச்சி போடக்கூடாது,வேப்பங் குச்சி போடலாம்.

கடுக்காய் உரைத்துப் போட்டால் புண் ஆறி விடும்.

பழமைபேசி said...

அழப்பு வந்து சேரவே இல்ல!

மாதேவி said...

பப்புவை டொக்டரிடம் கூட்டிச்சென்று வலிஇல்லாமல் குத்திக் கொள்ளுங்கள்.

☀நான் ஆதவன்☀ said...

இதுக்கெல்லாம் ஒரு பங்ஷனான்னு கேட்டுடீங்களே பாஸ். சொந்தகாரங்க எல்லாம் புடை சூழ மாமன்காரன் மடியில உட்கார வச்சு காசு குத்துறது எம்புட்டு சந்தோஷமா இருக்கும் தெரியுமா பாஸ்....

ரைட்டு இங்க பப்பு ஆசை நிறைவேறிடுச்சுல்ல. அது போதும் :)

☀நான் ஆதவன்☀ said...

இந்த மாமன்காரனை கூப்பிடாம காது குத்திக்கொண்ட பப்புவுக்கு என் கண்டனங்கள் :(

துபாய் ராஜா said...

மறுபடியும் காது குத்தும் போது மறக்காம முன்னாடியே சொல்லிடுங்க...

நட்புடன் ஜமால் said...

ஹையா!

பப்பு ஃப்ரண்டுக்கும் குத்தியாச்சு.

விக்னேஷ்வரி said...

பாவம் பப்பு

குடுகுடுப்பை said...

ஒரு வாரம் கழட்டாமல் இருக்கவேண்டும் என இங்கே ஹரிணிக்கு காது குத்திய கடையில் சொன்னார்கள்.

ஆடு வெட்டுறத சொல்லி ஏங்க பசிய கெளப்புறீங்க

க.பாலாஜி said...

//நாற்காலியில் பப்புவை உட்கார வைத்து, நாங்கள் குறித்த புள்ளியிலேயே குத்திவிட்டார்//

ரொம்ப கஷ்டமான வேலை...குழந்தை அடம்பிடிக்கும்போது.

எனக்கும் காது குத்தினப்ப அழவேயில்ல. லேசா ஆஆஆ....ன்னதோட சரி...ஏன்னா அப்ப எனக்கு வயது 17.

ஏங்க துடைப்ப குச்சிய யாராவது போடுவாங்களா?

அதனாலதான் அந்த பாப்பா ஹெல்மெட் போட்டுகிட்டு உட்கார்ந்திருக்கா?

Deepa (#07420021555503028936) said...

//பப்புவின் அனுமதியின்றி, அவள் விருப்பப்பட்டாலொழிய காது குத்துவதில்லை என்று முடிவு செய்திருந்ததை இங்கே எழுதியிருந்தேன்.// :-) ரசித்தேன்.சிறு குழந்தைகளுக்குக் காது குத்துவது, அந்தப் புண் ஆறுவது எல்லாம் ஒரு பிரச்னையான கட்டம் தான். ஆனாலும் சின்னக் கம்மல் போட்டு அவர்கள் சிரிக்கும் அழகே தனி தானே?

நேஹாவுக்கு வலிக்காமல் மருந்து தடவி தான் காது குத்தினோம். ஆனால் ஒரு மாதம் கழித்து குளிக்கையில் கை பட்டு இரத்தம் கொட்டிய போது ரொம்ப வருத்தமாயிருந்தது.

நீங்கள் சொல்வது போல் இதற்கு அவசரப்படாமல் இருப்பதும் நல்லது தானோ என்று தோன்றுகிறது.

பீர் | Peer said...

:)))

ILA(@)இளா said...

காது குத்தும் படலத்திற்கும் அழைக்கா விட்டால் கூட பரவாயில்லை கெடா வெட்டிக்கு அழைப்பிதழ் கூட வேண்டா ஒரு தகவலை 10000வது ஆள் சொன்னாட்ட முதல் பந்திக்கு வந்திருப்பேனே..

கோபத்துடன்......


பப்பு பேரவை
கொழிஞ்சிக்காட்டூர்

நசரேயன் said...

காது குத்த கண்டிப்பா விழா எடுக்கணும்

மங்களூர் சிவா said...

பாவம் பப்பு:(!

மஞ்சூர் ராசா said...

குழந்தைகளுக்காவே குறைந்த விலையில் ப்ளாஸ்டிக் முத்து பதித்த சிறிய கம்மல்கள் கண்கவர் வண்ணங்களில் ஏராளமாக கடைகளில் கிடைக்கிறது. குழந்தைகளுக்கும் பிடிக்கும். இவற்றில் ஆபத்தும் இல்லை. முயற்சிக்கவும்.

பா.ராஜாராம் said...

விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோசம் எனக்கு.அது இங்கே: http://karuvelanizhal.blogspot.com/2009/10/blog-post.html

" உழவன் " " Uzhavan " said...

காது குத்திய இடத்தில் வேப்பங்குச்சி அதாவது வேப்பிலையின் காம்பினை சொருகிவைக்க வேண்டும் புண்ணும் ஆறிவிடும் துளையும் மூடாது....!
ஆயிரந்தான் இருந்தாலும் ஆடு வெட்டி காதுகுத்துவதுபோல வருமா... ??
எனக்கும் சேர்த்து கமெண்ட் போட்டதுக்கு நன்றி ஜீவன்ஜி :-)

தீஷு said...

திரும்பவும் குத்தனுமா? பாவம் முல்லை!!!தீஷுவிற்கு ஒரு வயதின் அவள் டாக்டரே ear piercing gun மூலமாக குத்திவிட்டார். அவளுக்கு வலி இருந்தது போல் தெரியவில்லை. இப்ப கலர் கலரா கம்மல் மாத்திற வேலையெல்லாம் நடக்குது...