Thursday, August 19, 2010

என்ன 'வலி' அழகே!

இந்த போஸ்டை யாருக்கு சமர்ப்பிக்கலாம்?
எல்லா பெண்களுக்கும்..அல்லது அனைத்து பியூட்டி பார்லர்களுக்கும்...ம்ம்..அல்லது அனைத்து ஆண்களுக்கும்....?!

சமீபத்தில் அலுவலகத்தின் ஆண்டுவிழாவிற்காக(!) ஒரு ராம்ப் வாக் இருந்தது. அதில் நானும் பங்கு பெற்றிருந்தேன். பயிற்சிகள் எல்லாம் முடிந்து நிகழ்ச்சி நடைபெறும் நாள் நெருங்கும்போது பங்கு பெற்ற அனைத்து பெண்களுக்கும் ஒரு டிப்ஸ் வழங்கப்பட்டது.

புருவத்தை ஒழுங்கு (த்ரெட்டிங்) செய்தல்,
கைகளில் தெரியும் பூனைமுடிகளை அகற்ற (வாக்ஸிங்) மற்றும்
முகப்பொலிவுக்கான ஃபேஷியல்

ஃபேஷியலை மட்டும் செய்துக்கொள்ளலாமென்று நினைத்து கடைசியில் எதுவுமே செய்துக்கொள்ளாமலே பங்கேற்றேன். அது வேறு விஷயம்.

என்னைப் பொறுத்தவரை பியூட்டி பார்லர் என்பது எனது முடியின் நீளத்தை குறைக்க மட்டுமே. தலைமுடி வெட்டிக்கொள்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. (அதற்குபின்னர் முற்றிலும் முற்றிலும் புதிய தோற்றம் கிடைப்பதால் அல்லது அப்படி நான் நம்புவதால் இருக்கலாம்.) மேலும், தலைமுடியைக் குறைப்பதால் உடலில் வலிகள் ஏதும் கிடையாது.

எனது ஒருசில நண்பர்களுக்கு, பியூட்டி பார்லர் என்பது அழகுபடுத்திக்கொள்ள - வலிகளை அனுபவித்து உடல்பாகங்களை அழகுபடுத்திக்கொள்வதற்கானது. சிலருக்கு, கால் மசாஜ் செய்து கால்விரல் நகங்களுக்கு நகப்பூச்சு (!) போடுவதற்கும். இன்னும் சிலருக்கு, தலைமுடிக்கு விதவிதமான வண்ணங்களை அடித்துக் கொள்வதும், ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதற்கும் அல்லது பாடி மசாஜ் செய்துக்கொள்வதற்கும் அல்லது விலையுயர்ந்த பேஷியல்கள் - கோல்ட் ஃபேஷியலிலிருந்து அரோமா மற்றும் ஹெர்பல் இன்னபிற.

மேற்கண்ட எதையும் நான் முயற்சி செய்திராததால் அதைப்பற்றி எதுவும் என்னால் சொல்ல இயலாது.

ஆனால், பியூட்டி பார்லர் என்பது நம்மைப் பற்றி, நமது உடலை பற்றி - நல்லபடியாக உணர்வதற்கு உதவி செய்யும் இடம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் - சிலவற்றை அறியும் வரை/உணரும் வரை.

கல்லூரி நண்பர்கள்தான் முதல்முதலில் எனது கால்கள் அழகானவை அல்ல என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. "அடர்த்தியாக முடி முளைத்த கால்கள் பெண்களுடையது அல்ல. பெண்களின் கால்கள் மொழுமொழு-வென்று முடியற்றவையாக இருத்தல் வேண்டும். அல்லாவிடில், அவை அசிங்கமானவை." பெண்களுக்கு முடி என்பது தலையில் மட்டுமே இருக்க வேண்டும்.

அடுத்த லீவுக்கு வீட்டுக்குச் சென்றபோது, கடைசாமான்கள் பட்டியலில் இடம்பெற்றது ஆனி ஃப்ரெஞ்ச். அரை மணிநேரம் அதை தடவிக் கொண்டு பாத்ரூமில் அடைந்து கிடந்தது மறக்க முடியாதது. அதைப் போலவே, முடி நீக்கிய கால்களை நானே தடவித் தடவிப் பார்த்ததும். எல்லாம் ஒரு வாரம்தான். அடுத்த பதினைந்தாவது நாளைக்குள் "என்ன முல்லை, ஆம்பளை கால் மாதிரி இருக்கு" கதைதான்!

"குளிக்கும்போது மஞ்சள் தேய்", "ப்யூமிக் ஸ்டோன் போடு" என்று நாமே கேட்காவிட்டாலும் 'ஆஸ்க் லைலா' மற்றும் 'ஆஸ்க் அகிலா'க்கள் விடவில்லை. இது எதுவுமே எனது அவசர கோலத்துக்கு உதவவில்லை. ஹாஸ்டலின் ஷானாஸ் ஹூசைன்களில் ஒருவர் "வேக்ஸிங் பண்ணாதான் க்ரோத் குறையும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதுவரை வுமன்ஸ் எராவில் அதைப்பற்றி
அறிந்திருந்ததோடு சரி, எப்படி இருக்குமென்று சுத்தமாக தெரியவில்லை.

"வீட்டுலேயே பண்ணலாம், சர்க்கரை, தேன் எல்லாம் போட்டு காய்ச்சணும், சூடா கால்லே அப்ளை பண்ணிட்டு வெள்ளைத் துணியை கால்லே ஒட்டிட்டு முடி வளர்ந்திருக்கிறதுக்கு எதிர்பக்கம் இழுக்கணும்" என்றபோது தண்டுவடம் சில்லிட்டது.

"ஏன் கால்லே முடி இருந்தா என்ன? என்னோட கால் எப்படி இருந்தா யாருக்கென்ன?" என்ற கேள்விகளுக்கு இடமுமில்லை. விடையுமில்லை. மிடிகளையும் கேப்ரிகளையும் தாண்டி நீளும் கால்களில் உரோமம் இருந்தால் அது வெட்கத்துக்குரியது. ஆண்களுக்கோ அது அழகு...கம்பீரம்!


எட்டாம் வகுப்பு படிக்கும்போது "காலேஜா" என்று என்னைப் பார்த்து கேட்கவைத்ததற்கு எனது உயர்ந்த கால்களும் ஒரு காரணம். பள்ளியின் பெருமைக்குரிய அதலெடிக்காக இருந்ததற்கு, முடி முளைத்த- ஆண்களுடையது போலிருக்கிறது என்று சொல்லப்பட்ட கால்களும் காரணம். மற்றவர்களிடமிருந்து உயரமானவளாக தனியாக என்னை தெரிய வைத்தது கருகரு முடி முளைத்த கால்களே!

"ஆச்சி என்னா ஹைட் டீச்சர்" என்பது வீட்டிற்கும் பெருமையாகவே இருந்தது - ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் எனது உயரத்தை பெரிம்மா கதவிற்கு அருகில் நிற்க வைத்து ஸ்கேலால் தலைக்கு மேல் அளந்து குறித்து முந்தைய வருடத்தைவிட அளவு பார்ப்பது - ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது - எனது கால்களில்லாமல் - முடி முளைத்த அக்கால்களில்லாமல் என்னால் என்னை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

திருமணம் நிச்சயமானபோது அலுவலகத் தோழி என்னை அழைத்துச் சென்ற இடம் - லேக்மே பியுட்டி பார்லர்.

கால்களில் கோந்தைப் போன்ற பிசுபிசுப்பான ஒன்றை சூடாக கத்தியால் தடவும் போது அது ஒன்றும் நிச்சயமாக சுகமானதொன்றாக இல்லை. உடனே ஒரு பேப்பர் கைக்குட்டையை வைத்து எதிர்ப்புறமாக டக்கென்று இழுத்தபோது தேனீ கொட்டியது போல...அல்லது 100 ஊசி முனைகளை வைத்து குத்தியது போல...அல்லது 1000 வோல்ட் ஷாக் அடித்தது போல இருந்தது.

இவ்வளவு கஷ்டப்பட்டு இதை ஏன் செய்துக்கொள்ள வேண்டுமென்றே தோன்றியது.

ஒரு அரைநாள் முழுக்க அங்கேயே - அங்கிருந்த எல்லா உபகரணங்களும் என் மேல் பயன்படுத்தப்பட்டு
தங்களது உபத்திரவத்தை கொடுத்தன. வேக்ஸிங்கைப் போல.. பத்து மடங்கு...இல்லையில்லை... ஐம்பது மடங்கு வலியைத் தரக்கூடியது புருவங்களை ஒழுங்குப்படுத்துதல். வாழ்க்கையில் இரு முறைகள் அக்கொடுமையை அனுபவித்திருக்கிறேன்.

அதுவும், ஒருவர் வாயில் நூலை வைத்து கையில் இழுத்தபடி உங்கள் நெற்றி முடிகளை பிடுங்கும் வலியை சொல்லி புரிய வைக்கமுடியாது. வெளியே வந்தபோது "இனிமே ஜென்மத்துக்கும் இதையெல்லாம் பண்ணிக்க மாட்டேம்ப்பா" என்றுதான் தோன்றியது.

இவ்வளவு வலியை அனுபவித்து எதற்காக இவர்கள் செய்துக்கொள்ள வேண்டுமென்று புரியவில்லை.

அம்மாக்களின் தொல்லையாலா அல்லது அவர்களது கணவர்களா..பாய் ஃப்ரெண்ட்களா...யாரை மகிழ்ச்சிப்படுத்த இந்த வேதனையை அனுபவிக்க வேண்டும்? ("உன் கால்லே இருக்கற முடியை எடு" என்று என்னிடம் சொல்லியிருந்தால் "உன் கால்லே இருக்கிற முடியை எடுத்துட்டு என்கிட்டே சொல்லு" என்றே சொல்லியிருப்பேன்!)

ஃபேஷியல் - இதை நினைத்தால் மசாலா தடவி கிரில் செய்யப்பட்ட கோழி உயிருடனிருந்தால் அனுபவிக்கும் வலிதான்.

மூக்கிலிருக்கும் கருந்துளைகளை எடுக்கிறேனென்று பயங்கரமான கருவியுடன், இல்லாத பிளாக் ஹெட்சை எடுக்க ஒரு பெண் மூக்கை அழுத்தியதும் உடலின் அத்தனை செல்களும் அதிர்ந்து அடங்கியதுதான் நினைவுக்கு வருகிறது.

உண்மையில் இவை அனைத்தையும் மேற்கொண்டபோது ஒருவித அவமானமே மேலோங்கி இருந்தது. இயற்கையாக நானிருப்பதை விடவா இந்த கருவிகள் அழகைக் கூட்டப்போகின்றன...அவை அழகையல்ல..இம்சையையே கூட்டுகின்றன! அதற்கு மேல்....அழகுக்கலைப் பெண்களின் கமெண்ட்களும்...

உங்கள் முகத்தில் பூனை முடிகள் நிறைய இருக்கு மேடம்...
ஒரு தடவை ஃபேஸ் ப்ளீச் பண்ணா பளிச்சுன்னு இருப்பீங்க மேடம்...
உங்க ஐ ப்ரோ த்ரெட் பண்ணா அழகா இருக்கும் மேடம்....

கடந்த முறை முடி வெட்டிக்கொள்ள சென்றிருந்தபோது ஒரு பெண்ணின் வலி மிகுந்த குரலைக் கேட்க நேர்ந்தது. நெடுநேரத்திற்கு என்னவென்றே புரிந்துக்கொள்ள முடியவில்லை. வெளியே வந்தவரிடம் விசாரித்ததற்கு 'பிகினி கரெக்ஷன்' என்றார். இவ்ளோ கஷ்டப்பட்டு வலியை அனுபவித்து ஏன் அதைச் செய்துக் கொள்ள வேண்டுமென்றதற்கு அவர் சொன்ன பதில், "இதைச்
செய்துக் கொண்டால் எனது கணவர் மகிழ்ச்சியடைகிறார். அவரை சந்தோஷப்படுத்தவே இதை அனுபவிக்கிறேன்".

ஹூம்!

தனிப்பட்ட சுகாதாரத்திற்காக சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால், அடுத்தவர் பார்வைக்கு அழகாக இருக்க வேண்டுமென்று சிலவற்றை மேற்கொள்வதை புரிந்துக்கொள்ள முடிந்ததில்லை.

இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், பெண்ணாக பிறக்கும் ஆசையிருப்பின் உடலில் முடியேயில்லாமல் பிறக்க ஆசைப்படுங்கள்.

ஒருவேளை நீங்கள் பெண்ணாக இருந்தால், உடலில் முடிகளுடன் இருக்கும் நடுத்தர வர்க்க பெண்களின் வலிகளை வெளிச்சத்துக்கொண்டு வந்ததற்கு மகிழ்ச்சியடையுங்கள்! :-)

37 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பதிவு முல்லை.. வலியுணர்ந்து என்ன அழகு .. தலைப்பே சொல்லுது..
ஆனா என்ன விலை அழகேயும் சரியான தலைப்பாய்த்தான் இருக்கும்..இத்தனையும் செய்துகொள்ள எத்தனை ஆயிரங்களை இழக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டாமா..?
ஓரிப்ளேம் போன்ற அழகுப்பொருட்கள் விற்பனை
பெண்கள் குழுக்களாக இணைந்து பிசினஸ் என்கிற முறையில் செலவழிப்பதை கேள்விபட்டு அதிர்ந்து நிற்கிறேன்.
கல்யாணத்துக்குக்கூட நான் புருவத்தை திருத்திகொள்ளவில்லை..
பௌடர் போடாத என்னை ஓரிப்ளேம் பெண்கள் பார்ட்டிக்கு வலிந்து அழைத்த தோழி கோவத்தில் இருக்கிறார். நான் பார்ட்டிக்கு போகவில்லை என்று... :)

dondu(#11168674346665545885) said...

என்ன செய்வது எல்லாமே War of the sexes-ல் அடங்குகிறது. மனித இனம் தவிர மற்ற இனங்கள் விஷயத்தில் ஆண்தான் தன்னைப் படுத்திக் கொண்டு தனது துணையைக் கவர வேண்டியிருக்கிறது.

இங்கோ எல்லாமே தலைகீழ். அது ஏன்? ஏனெனில் இப்போதுள்ள சமூக நிலையில் திருமணம் என்பது பெண்ணூக்கே அதிகத் தேவையாகிறது.

மனித நாகரிகம் வருவதற்கு முன்னால் தந்தை என்ற கான்சப்டே இருந்திராது. அதேபோல அப்போதெல்லாம் கன்னித்தாய் என்று பழிப்பவர்களும் இருந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் கல்யாணம் என்பதே நாகரிகத்தின் அறிகுறிதான். கருவானதும் குழந்தை பெற்று பேணுவது பெண்ணின் வேலையாகவே இருந்தது. அது காரியத்துக்கு ஆகாது என்பதாலேயே குடும்பம், தந்தை என்றெல்லாம் உருவாயின. பகுத்தறிவை பெற்ற மனித இனத்துக்கு மான அவமான எண்ணங்கள் உண்டாயின. தன் மனைவி, தன் பிள்ளை என்ற எண்ணங்களும் உண்டாயின. ஆணை கட்டுப்படுத்துவதற்காக பெண் பல விலைகளை தர வேண்டியதாயிற்று. அவன் தந்தை என்ற கடமையை நிறைவேற்றவேண்டுமென்றால் அவன் மனைவி அவனுக்கு மட்டும் என்ற என்ணம் வேரூன்ற வேண்டும். ஆகவே பெண்ணுக்கு பல கட்டுப்பாடுகள் வந்தன. உண்மையாய் இருந்தால் மட்டும் போதாது, உண்மையாக இருப்பது போன்ற தோற்றமும் தேவைப்பட்டது.

ஆகவேதான்"ஜாலியான பிரும்மச்சாரியாக இருப்பது எப்படி" என்றெல்லாம் புத்தகங்கள் ஆணுக்காக வந்தால் "கணவன் பெறுவதற்கான வழிகள்" என்று பெண்ணுக்கான புத்தகங்கள் வருகின்றன. பல பெண்களுடன் ஆண் உறவு வைத்தால் அவனுக்கு மச்சம் என்றெல்லாம் பேசுகின்றனர். அதே சமயம் பெண்ணுக்கு ஒன்றுக்கு மேல் ஆண் நண்பர்கள் இருந்தால் அவளுக்கு பெயர் அளிப்பதில் மற்ற பெண்களே முன்னால் நிற்கின்றனர்.

சற்றே பெரிய பதிலுக்காக மன்னிக்கவும். மேலே கூறியவையெல்லாமே நீங்கள் உங்களது இப்பதிவில் எழுதிய நிலைக்கு முக்கியக் காரணங்கள்.

ஒரு முக்கிய சந்தேகம்.

உங்கள் அலுவலகத்தில் நடத்தப்பட்ட ராம்ப் வாக் பெண் ஊழியைகளுக்கு மட்டுமா அல்லது ஆண் ஊழியர்களுக்குமா? முந்தையது என்றால் இவ்வளவு தீவிர கருத்துக்கள் இவ்விஷயத்தில் வைத்திருக்கும் நீங்கள் ஏன் பங்கு கொண்டிருக்க வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Deepa said...

சிறுவயதில் வீட்டில் வேலை செய்யவரும் அக்கா துணி துவைக்கும் போது பாவாடையைத் தூக்கிக் கட்டி இருப்பார். முடிமுளைத்த அவரது காலழகை ரசித்து, "எனக்கு எப்போ இதுமாதிரி கால்ல முடி முளைக்கும்" என்று ஏக்கத்துடன் கேட்டது ஏனோ நினைவுக்கு வருகிறது!
பிற்காலத்தில் முதன்முறையாக அண்ணனின் ரேசரைத் திருடிக் காலை மழித்ததும்!

அழகு என்பதற்கு யார் தான் என்ன அளவுகோல் நிர்ணயிப்பது!

அதிரடியான, அவசியமான‌, பல சுவையான விவாதங்களைக் கொண்டு வரப்போகும் இடுகை. :)

காத்திருந்து மீண்டும் வருகிறேன்!

பின்னோக்கி said...

ஆண்களுக்கு சமர்ப்பணம்னு படிக்கும் போதே டவுட் ஆனேன். சித்திரக்கூடத்துல ஆம்பிளைகளுக்கு வேலையே இல்லையேன்னு பார்த்தேன்.

ஆம்பிளைங்களால தான் பொண்ணுங்க ப்யூட்டி பார்லர் போறாங்கன்னு ஒத்துக்க முடியலை.

மத்தபடி எல்லாக் கருத்தும் உண்மையே.

Dr.Rudhran said...

good

அமுதா கிருஷ்ணா said...

ஆண்கள் டாஸ்மாக்கிற்கு போவதும் பெண்கள் பார்லருக்கு போவதும் பணம் வீணடிக்கும் ஒர் இடம் அவ்வளவே. சில ஆண்கள் எப்படி குடிக்க செலவு செய்கிறார்களோ அதை போல காசு இருக்கும் சில பெண்களும் பார்லருக்கு செலவு செய்கிறார்கள்.இன்றைய தேதிக்கு பெண்கள் சுய தொழிலில் அதிக லாபம் தரும் தொழில் பார்லர் நடத்துவது தான்.ஐடி கம்பெனிகள் அதிகம் வர ஆரம்பத்ததும் பார்லருக்கும் அதிக வருமானம் வர ஆரம்பித்தது எங்கள் பகுதிகளில்.அதுவும் இல்லாமல் சின்ன வேலையில் இருக்கும் பெண்கள் அட்லீஸ்ட் புருவமாவது திருத்திக் கொள்கிறார்கள்.பிரசவ வலியினை விட இது ஒன்றும் அதிகமில்லை என்று எண்ணுகிறார்களோ என்னவோ.பொதுவாக அதிகமான ஆண்கள் பார்லருக்கு போகும் பெண்களை கிண்டல் தான் செய்வார்கள்.பார்லருக்கு போக சொல்லி காசினை கரியாக்க மாட்டார்கள்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

கால்களில் முடி இவ்வளவு பெரிய பிரச்சினையா? ஆண்களுக்கும் அழகு நிலையங்கள் இருப்பதும் இதே புருவம் திருத்துவது முதல் எல்லாமே ஆண்களும் செய்கிறார்கள் என்பது சகோ டோண்டு ராகவன் அவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். ஆண்களுக்காக என்பதை விட பெண்களுக்குத் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும் போது நிறைவாய் இருக்க வேண்டுமென்பது தான் பெரிய காரணம். அழகுணர்ச்சி அதிகம் உள்ளவர்கள் பெண்கள்.விரும்பும் பெண்கள் பண்ணிக்கொள்ளட்டுமே! ஆனால் ஒன்று! எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கவேண்டும் அவ்வளவே!

பின்னோக்கி said...

இப்பெல்லாம் ஆண்களுக்கும் ப்ளீச்சு.. வெள்ளையாக்குற க்ரீம்... தலைக்கு குளிச்சுட்டு துவட்டாத மாதிரி வெட் லுக்னு பணம் நிறைய செலவு பண்றாங்க.

சின்ன அம்மிணி said...

//ஆஸ்க் அகிலா'க்கள் விடவில்லை//

நான் ப்யூட்டி பார்லர் எல்லாம் வைக்கலையே ஆச்சி :)

? said...

Dondu..

சமூகம் சாதியை கடந்து கொண்டிருக்கிறது என்பதற்காக நீங்கள் உலகத்தில் இருந்து விடைபெற்று விட்டீர்களா என்ன•.

வனதேவதை said...

//ஒரு முக்கிய சந்தேகம்.

உங்கள் அலுவலகத்தில் நடத்தப்பட்ட ராம்ப் வாக் பெண் ஊழியைகளுக்கு மட்டுமா அல்லது ஆண் ஊழியர்களுக்குமா? முந்தையது என்றால் இவ்வளவு தீவிர கருத்துக்கள் இவ்விஷயத்தில் வைத்திருக்கும் நீங்கள் ஏன் பங்கு கொண்டிருக்க வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

மிகவும் சரியான கேள்வி.

சிங்கை நாதன்/SingaiNathan said...

:)

பாடி மசாஜ் மற்றும் பேசியல் உடலுக்கும் முகத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.இதற்கு நாம் அதிக செலவு செய்யாமல் நாமாகவே செய்துகொள்ளலாம்.மற்றபடி ப்யூட்டி பார்லர்கள் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை

அன்புடன்
சிங்கை நாதன்

நசரேயன் said...

//ஒரு ராம்ப் வாக் இருந்தது//

மேடைக்கும் ஒன்னும் சேதம் இல்லையே ?

மணிகண்டன் said...

// மேடைக்கும் ஒன்னும் சேதம் இல்லையே //

:)-

ஆப்போசிட் செக்சை கவர நினைப்பது ரொம்ப இயற்கையான மனித குணம் இல்லையா ?

ராமலக்ஷ்மி said...

பார்லர்கள் எனக்கும் ஒவ்வாத ஒன்றே. பேச்சு வருகையில், ஒருமுறை கூட புருவங்களைத் திருத்திக் கொண்டதில்லை என்பதைக் கேட்டு தம் புருவங்கள் உயர்த்தியவர் பலர் உண்டு:)! தலைமுடி திருத்த மட்டுமே செல்வது என் வழக்கமும். ஃபேசியல், ஹென்னா எதுவானாலும் நானே எனக்கு செய்து கொள்வதையே விரும்புகிறேன். மற்றபடி தோற்றப் பொலிவு.. அதனால் கிடைக்கிறது புத்துணர்ச்சி.. என நேரம் பணம் செலவழித்து செய்து கொள்பவர்களை அது அவர்களது தனிப்பட்ட விருப்பெனக் கடந்து விடுகிறேன்.

அம்பிகா said...

முல்லை,

ஒரு பியூட்டிஷியனாக எனக்கு,சில மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அதை பின்னூட்டத்தில் தெளிவு படுத்த முடியாதென்றே எண்ணுகிறேன்.
விரைவில் இதைப் பற்றி ஒரு பதிவு இடுகிறேன்.

வால்பையன் said...

நான் ஒரு இயற்கை விரும்பி என்பதால் இப்பதிவை ஆதரிக்கிறேன்!

அதனால் தான் தலைக்கு டை அடிக்காமல் இப்பவே கிழட்டுப்பய மாதிரி திரியுறேன்!

but i like it!

குடுகுடுப்பை said...

ஆண்கள் இப்படியெல்லாம் செய்யச்சொல்கிறார்களா என்று எனக்குத்தெரியவில்லை.

குடுகுடுப்பை said...

இங்கேயும் வந்து கும்மி அடித்துபோகும் அண்ணன் நசரேயனின் நகைச்சுவை உணர்ச்சியை மெச்சுகிறேன்,

புன்னகை தேசம். said...

[[பெண்களுக்குத் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும் போது நிறைவாய் இருக்க வேண்டுமென்பது தான் பெரிய காரணம். அழகுணர்ச்சி அதிகம் உள்ளவர்கள் பெண்கள்.விரும்பும் பெண்கள் பண்ணிக்கொள்ளட்டுமே! ஆனால் ஒன்று! எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கவேண்டும் அவ்வளவே!]]

[[பாடி மசாஜ் மற்றும் பேசியல் உடலுக்கும் முகத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.இதற்கு நாம் அதிக செலவு செய்யாமல் நாமாகவே செய்துகொள்ளலாம்]]

நல்ல கருத்துகள்..

நான் செல்லாவிட்டாலும் , அழகான தோற்றம் கொண்டவர்களை பார்க்க பிடிக்கும்..

இங்கு அப்படி மெய்மறந்து பார்த்ததும் உண்டு..

அப்ப நடிகைகள், பேஷன் தொழில் பெண்கள் பாவம்தான்...:(

புன்னகை தேசம். said...

[[எட்டாம் வகுப்பு படிக்கும்போது "காலேஜா" என்று என்னைப் பார்த்து கேட்கவைத்ததற்கு எனது உயர்ந்த கால்களும் ஒரு காரணம். பள்ளியின் பெருமைக்குரிய அதலெடிக்காக இருந்ததற்கு, முடி முளைத்த- ஆண்களுடையது போலிருக்கிறது என்று சொல்லப்பட்ட கால்களும் காரணம். மற்றவர்களிடமிருந்து உயரமானவளாக தனியாக என்னை தெரிய வைத்தது கருகரு முடி முளைத்த கால்களே!]]


உங்க தன்னம்பிக்கை அருமை..

புன்னகை தேசம். said...

ஃபேஷியல் - இதை நினைத்தால் மசாலா தடவி கிரில் செய்யப்பட்ட கோழி உயிருடனிருந்தால் அனுபவிக்கும் வலிதான்.]]


:)))))))

புன்னகை தேசம். said...

ஒருவேளை நீங்கள் பெண்ணாக இருந்தால், உடலில் முடிகளுடன் இருக்கும் நடுத்தர வர்க்க பெண்களின் வலிகளை வெளிச்சத்துக்கொண்டு வந்ததற்கு மகிழ்ச்சியடையுங்கள்! :-)]]

:))

இங்கு இருக்கும் தமிழ்ப்பெண்கள் சிலர் உடல் மெலிய அறுவை சிகிச்சைக்கு கூட தயாராக இருக்கின்றனர்..

குண்டா இருப்பது அப்படி என்ன கொடூரமா?..

பரிதாபமாத்தான் இருக்கு..

Deepa said...

தாமாக விரும்பித் தங்களை அழகு படுத்திக் கொள்வது ஏற்கக் கூடியதே. இங்கே பிரச்னை பிறரது நேரடியான அல்லது மறைமுகமான நிர்ப்பந்தத்தால் செய்ய வேண்டி வருவது.

நான் முதன்முதலில் பார்லருக்குச் சென்றது என் உறவுக்காரப் பெண் ஒருத்தியின் திருமண அலங்காரத்துக்காக விசாரித்து வர. பேசி முடித்து வெளியே வரும்போது அந்த பார்லர் வைத்திருக்கும் பெண் சொன்னார், "You need to correct your upperlip (hair) Why don't you go for an electrolytic treatment?"

எனக்குத் துணுக்கென்றது. நான் எனக்காக அங்கு செல்லாத போது அவள் எப்படி என் தோற்றத்தை விமர்சித்து அப்படிச் சொல்லப் போச்சு என்று கோபத்துடன் கறுவிக் கொண்டிருந்தேன்.

அது ஏனோ என் மேலுதட்டின் மேலுள்ள பூனை முடியை விமர்சிப்பதில் சிலருக்கு அளவில்லாத ஆர்வமிருந்தது. நல்லெண்ணத்தினால் சிலர் சொன்னாலும், கிண்டலுக்காக‌ச் சொன்னாலும் இரண்டும் ஒரே விளைவைத் தான் ஏற்படுத்தின.

என் மீது உண்மையான‌ அன்பிருக்கும் ந‌ண்ப‌ர்களிட‌ம் கேட்ட‌ போது "அது க‌ண்ணில் புல‌ப்ப‌ட‌வே இல்லை" என்ற‌ன‌ர். சிலர் லேசாக அப்படி இருப்பது அழகாகத் தானிருக்கிறது என்றும் சொன்னார்கள்.

யாருடைய‌ தோற்ற‌த்தையும் இயல்பாக அவர்களை ஊக்கப்படுத்த‌ "இன்னிக்கு ரொம்ப‌ பொலிவா இருக்கீஙக, ச‌ந்தோஷ‌மா தெரிய‌றீங்க‌" அல்ல‌து உடல் நிலை சரியில்லாத போது அக்க‌றையினால் விம‌ர்சிப்ப‌து தவிர‌ தாண்டிச் செல்வ‌து அநாக‌ரிக‌மான‌து என்ப‌தை எத்த‌னை பேர் உண‌ர்ந்திருக்கிறார்க‌ள்?

ஆனாலும் அந்தப் பூனை முடி பேசு பொருளாய் வந்து கொண்டே இருப்பது ஒரு க‌ட்ட‌த்துக்கு மேல் எரிச்ச‌லாகி ஒரு நாள் பார்ல‌ரில் த‌ஞ்சம் புகுந்தேன்.

முல்லை சொன்ன‌து போல் தான். வ‌லி தாங்க‌ முடிய‌வில்லை. அந்த‌ முடிக‌ளை அக‌ற்றி விட்டு புருவ‌ங்க‌ளையும் திருத்த‌த் தொட‌ங்கி விட்டார்க‌ள். ச‌ரி, வ‌ந்த‌து வ‌ந்தோம்; இதையும் செஞ்சு பார்ப்போம் என்று விட்டு விட்டேன்.

ஆனால் உண்மையில் அதைச் செய்து கொண்ட‌ பின் என‌க்குக் கிடைத்த‌ புதிய‌ தோற்ற‌ம் என‌க்கு மிக‌வும் பிடித்த‌து. பார்ப்ப‌வ‌ர்களும் 'முக‌த்தை என்ன‌ ப‌ண்ணே? ந‌ல்லா இருக்கு' என்று சொன்னார்க‌ளே த‌விர‌, 'த்ரெட்டிங் ப‌ண்ணியா' என்று தொண‌தொன‌க்காத‌தால் அத‌ற்காக‌ மட்டும் அவ்வ‌ப்போது செல்ல‌த் துவ‌ங்கி விட்டேன்; முடி வெட்டிக் கொள்ள‌வும்.

ஒரு பியூட்டிஷியனாக அம்பிகா அக்கா என்ன சொல்றாங்க பார்ப்போம்; சீக்கிரம் எழுதுங்க அக்கா.

வால்பையன்!

//கிழட்டுப்பய மாதிரி திரியுறேன்!// மாதிரியா??? அப்போ நிசமா இல்லியா?

//பின்னோக்கி said...

இப்பெல்லாம் ஆண்களுக்கும் ப்ளீச்சு.. வெள்ளையாக்குற க்ரீம்... தலைக்கு குளிச்சுட்டு துவட்டாத மாதிரி வெட் லுக்னு பணம் நிறைய செலவு பண்றாங்க.
// ஆமா அது ஒரு த‌னி கொடுமைங்க‌! :))))

வால்பையன் said...

//வால்பையன்!

//கிழட்டுப்பய மாதிரி திரியுறேன்!// மாதிரியா??? அப்போ நிசமா இல்லியா?//


14/04/1978

வல்லிசிம்ஹன் said...

வலிதான். ஆனாலும் மாதமொரு முறை ஐப்ரோஸ் திருத்திக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. அது என் முகம் ஒழுங்காக இருப்பதாக உணர்கிறேன், வாக்ஸிங்.. ம்ஹூம்.:)

Arul said...
This comment has been removed by the author.
Arul said...

/*பெண்களுக்கு முடி என்பது தலையில் மட்டுமே இருக்க வேண்டும்.*/
அயல்நாட்டு நம்பிக்கை இது . அழகு சாதன பொருட்கள் விற்பதற்காக அவர்கள் இந்தியாவிலும் பரப்பி உள்ளனர் .

But having been abroad for almost 7 years now , i cant digest the fact of women having body hairs especially in the legs .

I am sorry if the comment sounded rude but that was my honest comment . You can call me as a male chauvenist or whatever for this

Sriakila said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. இப்போது தான் படிக்க நேரம் கிடைக்கிறது. தொடர்ந்து படிக்கிறேன்.

என்ன 'வலி' அழகே பதிவு நன்றாக உள்ளது. இதற்கு பதிலை என்னுடைய அடுத்தப் பதிவில் கொடுக்கிறேன். ஒரு கிராமத்துப் பெண் நகரத்துக்கு வரும்போது நடக்கும் கூத்தாக அது இருக்கும். நன்றி, மீண்டும் வருகிறேன்.

அன்புடன் அருணா said...

/மற்றபடி தோற்றப் பொலிவு.. அதனால் கிடைக்கிறது புத்துணர்ச்சி.. என நேரம் பணம் செலவழித்து செய்து கொள்பவர்களை அது அவர்களது தனிப்பட்ட விருப்பெனக் கடந்து விடுகிறேன்./
நானும்!

தோழர் மோகன் said...

அருமையான, நேர்த்தியான பதிவு!!!, ஆண்களும் பெண்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பதிவு..
// அடர்த்தியாக முடி முளைத்த கால்கள் பெண்களுடையது அல்ல. பெண்களின் கால்கள் மொழுமொழு-வென்று முடியற்றவையாக இருத்தல் வேண்டும். அல்லாவிடில், அவை அசிங்கமானவை." பெண்களுக்கு முடி என்பது தலையில் மட்டுமே இருக்க வேண்டும்// இந்த சீல் பிடித்த பொது புத்தியின் நீட்சி இன்று கிராமப் புர பெண்களையும் தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளிவிட்டது,

நான் ரசித்த, சிந்தித்த வரிகள் கீழே,
// உன் கால்லே இருக்கற முடியை எடு" என்று என்னிடம் சொல்லியிருந்தால் "உன் கால்லே இருக்கிற முடியை எடுத்துட்டு என்கிட்டே சொல்லு" என்றே சொல்லியிருப்பேன்! //

// ஃபேஷியல் - இதை நினைத்தால் மசாலா தடவி கிரில் செய்யப்பட்ட கோழி உயிருடனிருந்தால் அனுபவிக்கும் வலிதான்.//

// உண்மையில் இவை அனைத்தையும் மேற்கொண்டபோது ஒருவித அவமானமே மேலோங்கி இருந்தது. இயற்கையாக நானிருப்பதை விடவா இந்த கருவிகள் அழகைக் கூட்டப்போகின்றன...அவை அழகையல்ல..இம்சையையே கூட்டுகின்றன!//

// அடுத்தவர் பார்வைக்கு அழகாக இருக்க வேண்டுமென்று சிலவற்றை மேற்கொள்வதை புரிந்துக்கொள்ள முடிந்ததில்லை.//

// உடலில் முடிகளுடன் இருக்கும் நடுத்தர வர்க்க பெண்களின் வலிகளை வெளிச்சத்துக்கொண்டு வந்ததற்கு மகிழ்ச்சியடையுங்கள்! :-)// உண்மை முல்லை இது போல் இன்னும் நிறைய இருக்கிறது கட்டுடைக்க தொடருங்கள்....

தோழர் மோகன் said...

முல்லை,
இந்த பதிவை படித்தவுடன் இதை எழுத தோன்றியது,

நான் அழகா இல்லையா?
அல்லது
எனக்கு எது அழகு?
என்பதை நானே முடிவு செய்து கொள்கிறேன்...
நீங்கள் வேடிக்கை மட்டுமே பாருங்கள்
காரணம்;
நீங்கள் எனக்கு
போட்ட வட்டத்தில் சுற்றுவதாயின்
எனக்கு எதற்கு சிறகுகள்???

தோழமையுடன்,
மோகன்

என்னது நானு யாரா? said...

தனக்கு பிடித்திருந்தால் அழகுபடுத்தி கொள்வது தப்பில்லை. ஆனால் மற்றவர்களின் பார்வைக்கு அழகாக தெரியவேண்டும் என்று அழகுக்காக பல துன்பங்கள் படுவது அந்த நபரின் தாழ்ந்த மன்ப்பான்மையை தான் காட்டுகிறது.

உங்களின் எழுத்தில் நேர்மை இருக்கிறது.
வாழ்த்துக்கள்!!!

உங்களை எப்படி Follow செய்வது? அதற்கான வசதியே உங்களின் வலைபக்கத்தில் இல்லையே!

புதிதாக எழுத வந்திருக்கின்றேன். என் வலைபதிவுக்கு உங்களை அழைகிறேன். என் எழுத்துக்களை படித்து பார்த்து உங்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும்.

http://uravukaaran.blogspot.com

நன்றி!

ஆழியூரான். said...

குட். கட்டுரையும், தீபாவின் கமெண்ட்டும் பெண்களின் அக உலகத்தை புரிந்துகொள்ள உதவும் என நம்புகிறேன். நல்ல கட்டுரைக்கு நன்றி

Kavin Malar said...

கட்டுரை நியாயமாத்தானிருக்கு. எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் எனக்கு..ஏன் இந்த கேட் வாக், ராம்ப் வாக் மாதிரி நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்துக்கணும்? பெண்களின் அழகை முன்னிறுத்தி மார்க் போடும் ஒரு கேவலமான நிகழ்ச்சியில் எதுக்கு கலந்துக்கணும்?

Mary said...

hey aachi 'enna vali azhaghey; padichen.I laughed at it,very humourous writing di and very true.
Good on u,proud of u my dear.

Maya said...

Hi Mullai

I am a fan of yours. Mainly the Pappu times part. But I couldnt really accept your stand on women who go to parlours. I am not fond of parlours either, but I dont think all women go to the parlour only to satisfy their boy friends/husbands. I have a friend who got into a acid-burn accident earlier in her life. But she goes to the parlour regularly and she doesnt do it for anyone else other than herself. And so do I. My husband has never asked me to get something done in the parlour for myself. But I do it occasionally when i feel like. Penniyam pathi ivalo nalla thoughts irukura neenga, ella ponnungalum, aambilaingala impress panna dhaan poragannu nenaikireengalae, romba acharyama irukku. Women these days are much more smarter than that, you would agree, wont you

- Vaneetha