Sunday, August 15, 2010

உண்மையான சுதந்திர தின விழா

பளிச்சிடும் வெள்ளைச் சட்டையும், மெரூன் பாவாடையும் அணிந்து வரிசையில் நின்று "தாயின் மணிக்கொடி பாரீர்" என்று கும்பலோடு பாடி தலைமையாசிரியர் ஏற்றும் கொடியிலிருந்து பறக்கும் மலர்களை அண்ணாந்து பார்ப்பதோடு முடிந்துவிடும் சுதந்திர தினவிழாக்கள். கொஞ்சம் ரவுடியானபின்பு, பரபரப்புடன் ' நமது பேரை எப்போது அறிவிப்பார்கள்' என்று மேடைக்குப் பின்னால் காத்திருந்து காந்தியையும்,நேருவையும், சர்தார் வல்லபாய் பட்டேலையும்,கொடி காத்த குமரனையும் நினைவுக்கூர்ந்து எழுதிக்கொடுத்ததை மனப்பாடம் செய்து மைக்கில் பேசும் வைபவமே பெரிதாக இருந்தது. பள்ளிக்கூடத்தைத் தாண்டி, சுதந்திர தினமென்பது வார நாட்களில் வரவேண்டுமென்ற கவலையை கொண்டு வரும் நாளாக மட்டுமே ஆகிப்போனது.

அதைத்தாண்டி, உணர்வுப்பூர்வமாக அமைந்தது நேற்றுதான். நமக்குக் கிடைத்திருப்பது உண்மையான சுதந்திரம்‍‍தானா என்று யோசிக்கும்படியாக மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு, பெவிமு அமைப்புகள் நடத்திய முற்றுகை போராட்டத்திற்குச் சென்றதையே குறிப்பிடுகிறேன்.


பள்ளிக்காலத்தில் 'குழந்தைத் தொழிலாளர்களுக்கெதிரான" மனித சங்கிலி மற்றும் பல்கலைக்கழகத்தில் வளாகத்திற்கு இடம் கேட்டு ஒரு மறியல், அதுவும் அடையாளத்திற்காக என்பதோடு வேறு எந்த போராட்டங்களிலோ பேரணிகளிலோ கலந்துக்கொண்டிராத எனக்கு இந்த முற்றுகைக்குச் சென்றது வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உண்மையில் பிரமிப்பாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். போலீஸ் வண்டிகள் வர வர குழுமியிருந்த அமைப்புத் தோழர்கள் எந்த மறுப்பும், எதிர்ப்புமின்றி தாங்களாகவே ஏறி அமர்ந்துக் கொண்டார்கள். நாட்டை விலைபேசும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், மறுகாலனியாதிக்கத்தை எதிர்த்தும், போபால் வழக்கிற்கு நீதி கேட்டும், இனியும் வேண்டாம் இன்னுமொரு போபால் என்று பொருள்படும்படியும் முழக்கமிட்டபடி வேனில் ஏறிச் சென்றார்கள்.( படம் : வினவு இடுகை)

மற்ற எல்லோரையும்போல இவர்களும் ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்துடன் கொண்டாடி கழித்திருக்கலாம். நண்பர்களுடன் ஊர் சுற்றச் சென்றிருக்கலாம் அல்லது டாஸ்மாக் எப்போது திறக்கும் என்று காத்திருக்கலாம். சிக்கன் லெக் பீஸை கடித்தபடி கே டிவியின் படத்தை பார்த்து மழை நாளில்
உறங்கியிருக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விடுத்து வீதி வரை வந்து அவர்களை போராட வைத்தது எது?

விடாத மழையிலும் முழக்கங்களை எழுப்பியபடி நிற்க வைத்தது எது? பல்வேறு ஊர்களிலிருந்து குடும்பத்துடன் வந்து சென்னையில் தெருக்களில் போராடி கைதானாலும் கலங்காமல் இருந்தார்களே..அந்த உற்சாகத்திற்கு பின்னால் இருப்பது எது? சொந்த காரணங்களோ அல்லது ஆதாயங்களோ இல்லாமல், அடுத்த நாளைப் பற்றிய தங்களது கவலைகளை தூக்கியெறிந்துவிட்டு, பொது நன்மைக்காக மட்டுமே போராட வைத்தது எது? இவை அனைத்திற்கும் ,‍‍‍‍‍‍‍ அவர்களது சமூக அக்கறையும் மனித குலத்தின் மேல் கொண்ட அன்பு மட்டுமே காரணம் என்றால் அது மிகையல்ல.

இந்தப் போராட்டத்தை கண்டபோது ஏனோ மும்பையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த "மீட்டர்ஜாம்" போராட்டம் நினைவுக்கு வந்து போனது. ஆகஸ்ட் 12 ‍ - மும்பையில் ஆட்டோக்காரர்கள் மற்றும் டாக்ஸிக்காரர்களுக்கெதிராக, படித்த நாகரீக உயர்வர்க்க கனவான்கள் மூன்று பேரால் முன்னெடுத்து இணையத்தின் வழியாக செய்தி பகிரப்பட்டு நடைபெற்ற இந்த போராட்டம் சுத்த அபத்தமாக தோன்றியது. கூப்பிடும் இடங்களுக்கு வர மறுக்கும் மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்ததால் மீட்டருக்கு அதிகமாக கேட்கும் ஆட்டோ மற்றும் டாக்ஸிக்காரர்களை ஒரு நாள் ஒதுக்கிவைப்பது மாதிரியானது இப்போராட்டம். மும்பையைத் தொடர்ந்து கல்கத்தா, பெங்களூர் என்று மற்ற நகரங்களும் லைன் கட்டி இருப்பதாகவும் இணையச் செய்திகள் கூறுகின்றன.

ஆட்டோக்காரர்களுக்கும் டாக்ஸிக்காரர்களுக்கும் இக்குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். இதில் பலரும் அடித்தட்டு வாழ்க்கை அல்லது பிளாட்பாரத்தில் வாழ்பவர்களே. ஆட்டோக்காரர்களும் டாக்ஸிக்காரர்களும் சாமானியர்களே. சொந்த ஆட்டோவோ அல்லது டாக்ஸியோ வைத்திருப்பவர்களைவிட வாடகைக்கு எடுத்து தினக்கணக்கில் ஓட்டுபவர்களே அதிகம். உண்மையில், இதற்குக் காரணமான அமைப்பையோ அல்லது சிஸ்டத்தையோ அல்லது அரசியலையோ/ அரசியல்வாதிகளையோ எதிர்க்காமல் சாமானியர்க்ளுக்கு எதிராக ‍ ‍இத்தனைப்பேர் போராடுவது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.


பெட்ரோல் விலை உயர்ந்தபோது அல்லது உள்நாட்டு வரிகளை உயர்த்தியபோது போராடியிருந்தால் சரியாக இருந்திருக்கும். நமது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வரிகள் கச்சா எண்ணெயின் விலை மற்றும் வரிகளோடு தொடர்புடையதாகவே இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் இங்கும் விலை உயர்கிறது. "சாமனியர்களின் அரசாங்கம்" என்று கூறிக்கொள்ளும் இவ்வரசாங்கம், சர்வதேச விலையுயர்வு மற்றும் வரி உயர்வை சாமானியர்கள் மீதல்லவா சுமத்துகிறது.


சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை சமீபத்தில் உயர்ந்தபோது எந்த கேம்பெய்ன்களும் போராட்டங்களும் நடைபெறாதது ஏன்?


இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி, லிட்டருக்கு ரூ 14.75 மற்றும் ஆகவும் ரூ 4.75 ஆகவும் இருக்கிறது. ஆனால் விமானங்களுக்கான எரிபொருளின் மீது லிட்டருக்கு ரூ 3.60 மட்டுமே. டீசல் உபயோகிக்கும் விவசாயிகள், பேருந்துகளில் பிரயாணம் செய்யும் மக்களை விட விமானங்களில் பயணம் செய்பவர்களின் அல்லலே அரசின் கண்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது என்றால் நாம் போராட வேண்டியது ஆட்டோக்காரர்கள் மற்றும் டாக்ஸிக்காரர்களுக்கு எதிராகவா?

இந்த இரண்டு போராட்டங்களையும், அதனை நிகழ்த்தியவர்களையும் ஒப்பிட்டுப்பார்ப்பதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.


வீதியில் போராடி, வீர முழக்கமிட்டு கைதான அத்தனை தோழர்களுக்கும் என் வணக்கங்கள். உங்களனைவரையும் எண்ணி என் இதயம் விம்மி நிற்கிறது. இணையத்தில் செய்தியைப் பகிர்ந்த வினவுக்கு நன்றிகள்.

11 comments:

ஜோதிஜி said...

சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை சமீபத்தில் உயர்ந்தபோது எந்த கேம்பெய்ன்களும் போராட்டங்களும் நடைபெறாதது ஏன்?

மற்ற ஊரில் எப்படியோ? ஆனால் நான் பார்த்தவரைக்கும் தொழில் நகரங்களில் கூட மக்கள் எந்த எதிர்ப்பும் காட்ட விரும்பாமல் விலை உயரப் போகிறது என்றவுடன் வரிசை கட்டி இரவு வரைக்கும் நின்று முடிந்து வரைக்கும் வாங்கிக் கொண்டு செல்வது மிகுந்த ஆச்சரியம்?

எங்கே செல்லும் இந்த பாதை?

அம்பிகா said...

\\வீதியில் போராடி, வீர முழக்கமிட்டு கைதான அத்தனை தோழர்களுக்கும் என் வணக்கங்கள். உங்களனைவரையும் எண்ணி என் இதயம் விம்மி நிற்கிறது\\

வீரவணக்கங்கள்.


\\இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி, லிட்டருக்கு ரூ 14.75 மற்றும் ஆகவும் ரூ 4.75 ஆகவும் இருக்கிறது. ஆனால் விமானங்களுக்கான எரிபொருளின் மீது லிட்டருக்கு ரூ 3.60 மட்டுமே\\

அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும், தினம் தினம் விமானத்தை தானே உபயோகிக்கிறார்கள்.?

அருமையான பகிர்வு முல்லை.

Deepa said...

பகிர்வுக்கு மிக்க நன்றி. உண்மையில் பிரமிப்பாகத் தான் இருக்கிறது.

மீட்டர் ஜாம் பற்றி...//கூப்பிடும் இடங்களுக்கு வர மறுக்கும் மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்ததால் மீட்டருக்கு அதிகமாக கேட்கும் ஆட்டோ மற்றும் டாக்ஸிக்காரர்களை ஒரு நாள் ஒதுக்கிவைப்பது மாதிரியானது இப்போராட்டம்.//

மகாக் கேவலமாக இருக்கிறது. அதிகாரவர்க்கத்தை எதிர்த்துப் போரிடத் துணியாத நடுத்தரவர்க்கத்தின் கையாலாகத்தனத்தின் உச்சம்; வருத்தமளிக்கிறது.

//இந்த இரண்டு போராட்டங்களையும், அதனை நிகழ்த்தியவர்களையும் ஒப்பிட்டுப்பார்ப்பதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.
//ஹூம்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பகிர்வு

வெண்ணிற இரவுகள்....! said...

அற்புதமான அனுபவம் முல்லை ...வீர வணக்கங்கள்

☀நான் ஆதவன்☀ said...

எல்லாருக்கும் என் சல்யூட்

ஜெரி ஈசானந்தன். said...

Freedom is a Fake.

காலம் said...

அனேகமாக இது முல்லையின் முதல் சுதந்திரப்போர்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

paarattukkal mullai.

தீஷு said...

ப‌கிர்வுக்கு ந‌ன்றி முல்லை

Rajan said...

two wrongs do not make a right.
while i wholeheartedly welcome the protest against Dow chemicals, i condemn your criticism of the protest by the middle class Mumbaikars against the erring taxi/auto drivers.

chennai auto drivers are the worst in india. no one can deny that.i have lived/visit in all metros and the experience with Chennai autos are the worst.

Bangalore fuel charges are higher than that of delhi, chennai, mumbai, hyderabad but more than 80%the autos abide by the meter charges. when was the last time you have travelled in an auto with meter in chennai? the "fare'asked by the chennai autos are exorbitant.check with your friends from other metros about their experience with chennai autos .

if some one condemns this, they will become "capitalist', "middle class mentality", "inability to fight the system"??? Great. tell your communist comrades to influence their trade union brothern to adhere to "Law" for a change. then you can criticise the US imperialism.that will be a start.