Saturday, December 04, 2010

ஆழம் இது ஆழமில்ல....ஆழம் இது அய்யா…

ஏழாவது படிக்கும்போது நடந்த ஆண்டுவிழாவில் ரவி, ராதாவுடன் சேர்ந்து பரதநாட்டியம் ஆடினான். நளினமாகத்தான் வளைந்து, சுழன்று ஆடினான். அப்போதிலிருந்து, பள்ளிக்கூடம் முடிக்கும் வரைக்கும் அவனைப் பற்றி ஒரு கிண்டல் இருந்துக்கொண்டே இருந்தது. அவன் நடப்பதிலிருந்து, எழுதுவதிலிருந்து ஏன் வேதியியல் லேப்பில் கூட அவ‌னது செய்கைகள் ஒவ்வொன்றையும் குறித்ததாக - அந்த கிண்டல் இருந்தது. 'பெண்தன்மையாக இருக்கிறது' அல்லது 'பெண்ணைப் போல இருக்கிறான்' என்பதுதான் அது. பையன்கள் ரவியை விளையாட்டுகள் எதிலும் கூட்டுச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

அதேபோல, டாக்டர் ஆன்ட்டியின் புடவைகளை மாடியில் காய வைக்கும் அங்கிளை பற்றியும் பெரியவர்கள் மத்தியில் இதே தொனியிலான கிண்டல் இருந்தது.

'பிங்க்' நிறத்தில் அல்லது கொஞ்சம் பூ வேலைப்பாடுகள்/டிசைன்கள் கொண்ட சட்டை/குர்தாக்களை ஆண்கள் அணிந்திருந்தால் நண்பர்கள் மத்தியில் 'கேர்லிஷா இருக்கு' என்றோ 'என்ன, பொண்ணுங்க ட்ரெஸ் மாதிரி இருக்கு' என்று நிச்சயம் ஒரு வரி கமெண்டாவது இருக்கும். கோலம் போடும் ஆணையோ அல்லது கிரிக்கெட் விளையாடும் பெண்ணையோ/சுவர் ஏறும் பெண்ணையோ அவ்வளவு எளிதில் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

"பெண்மனசு " என்ற‌ தொடர்பதிவு இடுகைகள் சிலவற்றை தமிழ்மணத்தில் கணடதும் இதெல்லாம் ஞாபகம் வந்தது.

பெண் மனதை பெண்ணின் குரலில் வெளிப்படுத்தும் பாடல்கள் கொண்ட தொடர்பதிவு என்று சொல்லியிருந்தாலும், ஸ்டீரியோடைப் போன்றுதான் பார்த்ததும் தோன்றியது. "பெண் மனசு" என்றால் அது ஏதோ கடல், ஏரி, ஆழமான குளம்,சுரங்கம், புரிந்துக்கொள்ள முடியாதது என்பது போன்ற வசனங்கள் /ஆட்டோ வாசகங்களால் கூட இருக்கலாம். மேலும், மனம் என்பது மனிதர்கள் எல்லாருக்கும் பொதுவானதுதானே. (இந்த தொடர்பதிவை யார் ஆரம்பித்தார்கள் என்று தெரியாது. நல்ல நோக்கத்தில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். இந்த இடுகை யாரையும் புண்படுத்த அல்ல. )

பெண்களுக்கான செருப்புகளை பார்த்திருக்கிறீர்களா? செருப்பிலிருந்து ஆரம்பிக்கும் இந்த ஸ்டீரியோடைப்பிங் எல்லாவற்றிலும் இருக்கிறது. மிகவும் ஸ்லீக்காக, நெளிவுகளுடன் பூ வேலைப்பாடுகளுடன் இருக்கும் செருப்புக ளெதுவும் எனக்கு ஒத்து வந்ததில்லை. அவர்கள் செய்து வைத்திருக்கும் அளவுகளுக்குள் என் கால்கள் எப்போதும் பொருந்தியதில்லை. செருப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் எப்போதும் பெருங்குழப்பம் வந்து நேரும். அதுவும், பெண்களின் கால்கள் நெளிவாக‌ ஸ்லீக்காக இருக்கும் என்பது செருப்பு உற்பத்தியாள்ர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை போல. (என்னைப் போன்ற அகன்ற பாதமுடையவர்களைப் பற்றி அவர்கள் கொஞ்சமும் யோசிக்க மாட்டார்கள். )

அதே போல, பெண்கள் 'இப்படித்தான் இருப்பார்கள்' அல்லது பெண் மனசு 'இப்படித்தான் இருக்கவேண்டும்' என்று வரையறைகள் இருக்கிறது. அதைத்தாண்டி ஒரு பெண் அப்படி இல்லாமல் போய்விட்டால் 'பையன் மாதிரி' இல்லேன்னா 'டாம்பாய்' அதையும் தாண்டினால் இருக்கவே இருக்கிறது 'பொம்பளையா அவ". பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவார்கள். மெல்லியல்பானவர்கள். வல்னரபிள். சாட்டர்பாக்ஸ். பல்லி கரப்பான்பூச்சிக்கு பயப்படுவார்கள். அப்புறம், வலிமையானவர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். அதே மாதிரி பையனுக்கும். குழந்தையாக இருக்கும்போது மையிட்டு லிப்ஸ்டிக் போட்டு புகைப்படம் எடுத்து ரசிப்பவர்கள் அதே குழந்தை வளர்ந்த பின் அதையே செய்தால் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது தாலியை ஆண் அணிந்தால்? இப்படியிருந்தால் அவமானம் என்றுதான் எல்லோர் மனதிலும் இருக்கிறது.

தமிழ் சினிமா பாடல்களும் இதே ரகம்தான். உண்மையில் பல தமிழ் சினிமா பாடல்கள் பரிச்சயமானது கல்லூரி ஹாஸ்டலில்தான். பெரும்பாலும் 'மயங்கினேன் சொல்ல தயங்கினேன்' மாதிரி பெண்மையின் மென்மை டைப் பாடல்கள். ஓக்கே..அவற்றைப் பற்றி இன்னொரு இடுகையில். இப்போது ,இன்னொரு தொடர் இடுகை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.

இந்த ஸ்டீரியோடைப்பிங்‍க்கு மாறாக/அவற்றிற்கெதிராக‌ நாம் நடந்துக் கொண்டவை பற்றி பகிர்ந்துக்கொள்ளவது தான் அது.


1. நகைகள் மேலோ அல்லது பட்டுபுடைவைகள் மீதோ பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. சிறுவயதில் (ஆறாம்/ஏழாம் வகுப்பு?) கொஞ்சநாட்கள் மட்டும் கொலுசு அணிந்திருக்கிறேன். வளையல்கள் ஒருநாளும் அணிந்ததில்லை. இன்‍லாஸ் விருப்பத்திற்காக கொஞ்ச நாட்கள் பிரேஸ்லெட் அணிந்தேன். மேக்கப் மேல் ஆர்வம் இருந்ததில்லை. தவிர்க்க முடியாத சில நிகழ்வுகளின் போது மட்டும் மேக்கப் போட்டுக் கொண்டிருகிறேன்.மற்றபடி, பவுடர் கூட பூசுவதில்லை.தலைக்குப் பூ....நோ வே!

2. எம்ப்ராய்டரி, நடனம், நிட்டிங், க்ரோஷா,தஞ்சாவூர் பெயிண்டிங்,,கோலம் போன்ற நுண்கலைகளில் சூனியம். சமையல் செய்வதில் சுத்தமாக ஆர்வம் இல்லை. செய்ததும் இல்லை. இதுக்காக எத்தனையோ பேர்கிட்டே விதவிதமா திட்டு /அட்வைஸ் வாங்கியிருக்கேன்.

3. பிங்க் கலர் அப்படியெல்லாம் எனக்குப் பிடித்தது இல்லை. அதேபோல டெடிபேர், க்பியூட்,லேஸ், ஃபிரில்கள்....பிடித்ததும் இல்லை. சாக்லேட் பிடிக்கும். ஆனா, அது கேர்லியா? ;‍-)

4. சகோதரி என்று என்னை யாரும் அழைத்தாலொழிய யாரையும் அண்ணா என்று நானாக அழைத்தது இல்லை.

5. பெண்களுக்கென்று தனி கட் வைத்து வடிவைக் காட்டும் ஜீன்ஸை தவிர்ப்பதற்காக‌ ஆண்களுக்கான ஜீன்சை அணிந்திருக்கிறேன்.

.

.
.
.
.

இந்த இடுகைக்கு மறுமொழி எழுதும் முதல் ஐந்து பேரை இத்தொடர் பதிவுக்கு அழைக்கிறேன். :‍-)

13 comments:

வல்லிசிம்ஹன் said...

கை கொடுங்கள் முல்லை. நளினமான செருப்பெல்லாம் என்னைத் தள்ளிவிட்டுவிடும்.:)
என் அம்மா தான் எனக்கு முதல் எனிமி:)
அவங்களுக்கு எல்லாம் வரும். எனக்கு படம் வரைவது தவிர,பாட்டுப் பாடுவதுதவிர வேற ஒண்ணும் ஒட்டவில்லை. பாப்பா வோட பொண்ணு ஆண்பிள்ளையாப் பிறந்திருக்கணும்னு என் பாட்டி முணுமுணுப்பார்.:)என்னவோப்பா ;(ரொம்ப நன்றி இந்த பதிவுக்கு.

The Analyst said...

Superb post!

என்னுடைய list

1. எனக்கும் நகைகள் விருப்பமில்லை. தோடுகளைக் கூட‌ கழுவக் கழற்றிவிட்டு போட மறந்து, பல கிழமைகளின் பின் ஓட்டை தூரப் போகுது எனப் பல பேரிடம் பேச்சு வாங்கிய பின்னே திரும்பவும் காதில் ஏறும்.

2. எங்காவது வெளியில் போக வெளிக்கிட எனக்கு நேரம் பெரிதாகத் தேவையில்லை. I am almost always on/before time (even with a two year old) :)

3. எனக்கு கார் ஓட மிகவும் பிடிக்கும் + நான் தனியவே flat tyre மாற்றுவேன்.

4. தமிழ்ப் படங்களில் சொல்வது போலல்லாது எனக்கு discovery, national geographic channels பார்க்க மிகப் பிடிக்கும் + I constantly feel like strangling all the Tamil TV serial producers.

5. எனக்கும் pink colour பிடிப்பதில்லை.

Deepa said...

நோ! நோ! இந்த ஐந்து தகுதிகள் பத்தாது. நீ தம்மடிச்சிருக்கியா? தண்ணியடிச்சிருக்கியா? இல்லல்ல? அப்போ நீ ரூல்ஸை முழுசா மீறலை.

Jokes apart, நீ பெண்மைக்கு என்று சமூகம் வைத்திருக்கும் அடையாளங்களை பிடிவாதமாக மறுத்திருப்பது தெரிகிறது. குட்!

இதைப் படிக்கும் போது வேண்டுமென்றே இல்லாவிடினும் சிலவற்றை நானும் செய்திருப்பதாகத் தான் நினைக்கிறேன்.

1. அழகுணர்ச்சி (அதாவது அழகானவற்றை ரசிக்கும் ஆர்வம்) கொஞ்சம் அதிகம் என்பதால்(!) பட்டுப் புடவைகள், பூ போன்றவற்றின் மீது வெறுப்பெல்லாம் இல்லை. என்றைக்காவது என்றால் ஆசையாக வேஷம் கட்டிக் கொள்வேன்!
ஆனால் தினப்படி நகைகள், தாலி, மெட்டி, வெள்ளிக்கிழமை தலையில் பூ சுருங்கச் சொன்னல் சம்பிரதாயமாக எதையும் செய்யும் வழக்கமில்லை. மாலையில் விளக்கு ஏற்றுவது, பூஜை செய்வது, இதெல்லாம் நோ!

2. வீட்டில் அண்ணனிடம் சொல்லி அவன் செய்ய மறுத்த‌ வேலைகளை எல்லாம் நான் தான் செய்திருக்கிறேன். முப்பது குடம் தண்ணீர் (சைக்கிளில் கயிறு வைத்து இரண்டிரண்டு குடமாக) அடுத்த தெருவிலிருந்து கொண்டு வந்து நிரப்பி இருக்கிறேன். பதினொரு மணிக்கு மருந்துக் கடைக்குச் சென்று அம்மாவுக்கு மருந்து வாங்கி வருவேன்.

3. வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பதால் வீட்டில் நைட்டி அணியும் பழக்கமே கிடையாது. பிடிக்கவும் பிடிக்காது. சட்டென்று வெளியே கிளம்ப வேண்டி இருக்கும் என்பதால் குர்தா பைஜாமா தான்.

4. //அவர்கள் செய்து வைத்திருக்கும் அளவுகளுக்குள் என் கால்கள் எப்போதும் பொருந்தியதில்லை.// டிட்டோ. எனக்கும் அகன்ற பாதம் தான்.

5. அப்புறம் ஒரு சின்ன விஷயம். கல்லூரியில், காதைப் பிளக்கும் வகையில் விசில் அடிக்கத் தெரிந்த‌ ஒன்றிரண்டே பெண்களில் நானும் ஒருத்தி!

ஜெயந்தி said...

எனக்கும் நகைகளின் மீது பெரிதாக விருப்பமிருக்காது. எங்க அம்மா என்னை திட்டிக்கொண்டே இருப்பார்கள். ஆசைப்பட்டாத்தானே சேரும்னு. எனக்க என்னவோ ஆசையே தோன்றவில்லை. மற்றபடி பவுடர்போட்டு சாந்து பொட்டு வைத்துக்கொள்வேன். அதிக அலங்காரங்கள் செய்துகொள்வதில்லை. அதேபோல் செருப்பும் ஹீல்ஸ் இல்லாத செருப்புத்தான் எப்போதுமே அணிவேன். அந்தச் செருப்பு கடைகளில் கொஞ்சமாகத்தான் இருக்கும்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமை தோழி தலைப்பும் தலைப்பை மிஞ்சும் புதுமையான முயற்ச்சியும் எழுத்துக்களில் மிளிர்கிறது . தொடரட்டும் பதிவு சிறப்பாக

ஆனந்தி.. said...

முல்லை..பெண் என்பவள் பூ மாதிரி னு ஒரு icon பொதுவாய்...என்னவோ இயல்பிலேயே அப்படியே புகுத்தப்படும் சமுதாயத்தால் ஆன ஒரு செயற்கையா நாம உருவாக படுதபட்டோம்னு தெரில..வித்யாசமா இருந்தது இந்த போஸ்ட்...பட் சில விஷயங்கள் அழகு தான் முல்லை..அழகான கூந்தலில் கொஞ்சம் பூ வச்சு தான் பாருங்களேன்...நாமலே நம் அழகை இன்னும் அழகாய் உணருவோம்...சில விஷயங்கள் பெண்களுக்கு கிடைச்சிருக்கும் இயற்கையின் ஹைக்கூ களை கொஞ்சம் ரசனையா செஞ்சு பார்த்தால் அதுவும் ஒரு த்ரில்..சுவாரஸ்யம் தான்...தப்பா எதவது சொல்லி இருந்தால் மன்னிச்சுக்கோங்க முல்லை...:))

சந்தனமுல்லை said...

நன்றி வல்லியம்மா, நீங்கதான் முதல்! அதனாலே இது பத்தி ஒரு போஸ்ட் நீங்க எழுதனும்...அதுவும் இல்லாம உங்க ஸ்டைல்ல (இன்னும் ஜப்பான் போட்டோ கண்ணுலே இருக்கு..:-)) படிக்கணும்னு தோணுது..

அப்புறம் மக்கள்ஸ்... இதுலேயே எழுதிட்டா மத்தவங்களை யாரு தொடர்பதிவுக்கு கூப்பிடறதாம்...:) சோ அன்னா, தீபா, ஜெயந்தி, சங்கர், ஆனந்தி உங்க பதிவுலே இதுபத்தி எழுதணும்னு கேட்டுக்கறேன்...அப்புறம் 5 தான் எழுதணும்னு இல்ல..
குறிப்பா பார்த்து பார்த்து நான் இப்படி நடந்துக்காததாலே எதெதுலே ஸ்டீரொயோடைப்பிங்க்கு எதிரா இருக்கேன்னு பார்த்ததுலே உடனே தோணினது இது. சோ அடிச்சு ஆடுங்க...

பயணமும் எண்ணங்களும் said...

5. பெண்களுக்கென்று தனி கட் வைத்து வடிவைக் காட்டும் ஜீன்ஸை தவிர்ப்பதற்காக‌ ஆண்களுக்கான ஜீன்சை அணிந்திருக்கிறேன்.
//

:)

அப்ப மேல் சட்டை?.( கிண்டலுக்குதான் தப்பா நினைக்காதீங்க.. :) )

தப்பில்லேன்னு தோணுது முல்லை..

நாம் பெண்கள் எப்படி படைகப்பட்டமோ அப்படியே எதிர்பாலினர் ஏற்கணும்தானே?..

மற்றபடி நீங்க சொன்னதில் உடன்பாடுண்டு பலதில்.

பயணமும் எண்ணங்களும் said...

3. எனக்கு கார் ஓட மிகவும் பிடிக்கும் + நான் தனியவே flat tyre மாற்றுவேன்.//

வாவ்.. சூப்பர்..

பயணமும் எண்ணங்களும் said...

முப்பது குடம் தண்ணீர் (சைக்கிளில் கயிறு வைத்து இரண்டிரண்டு குடமாக) அடுத்த தெருவிலிருந்து கொண்டு வந்து நிரப்பி இருக்கிறேன். பதினொரு மணிக்கு மருந்துக் கடைக்குச் சென்று அம்மாவுக்கு மருந்து வாங்கி வருவேன். //

வாவ் சூப்பர்.. நானும் ..இதே செய்துள்ளேன்..

பயணமும் எண்ணங்களும் said...

டிட்டோ. எனக்கும் அகன்ற பாதம் தான். //

அதேதான்..


:(

அகன்ற மட்டுமல்ல நீளமும்.. ஆக சைஸ் கிடைப்பதேயில்லை..

கடைகடையா ஏறணும்..:(

ஹுஸைனம்மா said...

எனக்கு சகோதரர்கள் இல்லை என்பதாலும், நானே வீட்டில் மூத்தவள் என்பதாலும், அவசியத்தின் காரணமாக இப்படி உடைத்தெறிந்த ஸ்டீரியோ டைப்புகள் நிறையவே உண்டு. எனினும், பூ, கொலுசு, கம்மல் போன்றவைகளை மிக்க ஆர்வத்தோடு அணிவேன். அதுவும், பூ கிடைக்காத இந்த ஊரில்தான் ஆசை அதிகமாகீறது!!

மற்றபடி - நுண்கலைகள், சமையல், ‘அண்ணா’ - இதிலெல்லாம் ஸேம் பிஞ்ச்!! பிங்க்/ப்ளூ கலர் வித்தியாசமெல்லாம் இருக்கென்று எனக்கு இப்ப சில வருடங்களுக்கு முன்தான் தெரியவே செய்யும்!! :-(

Travis Bickle said...

I am finding a paradox in your argument,you are against stereotyping,that is great,no one has the right to judge you,except you.And i am agreeing with almost all the things you have said,but you are supporting the same argument you are against,i.e stereotyping.Who said girls/women wearing jewelleries,having interest in tanjore paintings,embroidery,and the most important thing cooking can be called stereotypes.Although all these traits were regarded as womanly things and dumped to us by generations after generations, these are just a persons likes n dislikes.I know a friend, she is the regional head for a MNC and she has a great passion for cooking,in my office there is a girl very talented DBA just may be around 23 yrs, she wears flower almost everyday to offices,she wears pinks,so according to you is she a stereotype?These are not identities when you treat them as your identities then arises the confusion.And just ignore people who do so,rather then stereotyping that today girl/women need not to wear jewellery, or rather pink and should have no interest in cooking or should wear only guys jeans to get out of the stereotyped image.