Monday, July 23, 2012

நியூஸ் ரீல்


பப்புவுக்கு சீனியர் சென்றதிலிருந்து தினமும் நியூஸ் பேப்பர் கட்டிங் எடுத்து வர வேண்டும். அன்றைய அல்லது முந்தின செய்தித்தாளிலிருந்து ஒரு செய்தியை வாசித்து, வெட்டி எடுத்துச் செல்ல வேண்டும். (ஸ்கூலில் சேர்க்கச் சென்றபோது, பிரின்சிபால் மாண்டிசோரி முறையை விளக்கிவிட்டு பள்ளியின் அருமை பெருமைகளை விவரித்தார். அப்போது, "ஐந்தரை வயதில் எங்க பிள்ளைகள் நியூஸ் பேப்பர் படிக்கும்" என்ற போது புளகாங்கிதமடைந்து விட்டேன். கடைசியில், அது எனக்கே ஆப்பாக வந்து முடியும் என்றா நினைத்தேன்?! பின்னே, நாந்தான் அவளை நியூஸ் படிக்க வைக்க பின்னால் ஓட வேண்டியிருக்கிறது?!!)சரி, அது போகட்டும்,

சமீபத்தில், 'கடவுள் துகள்' பற்றிய செய்தியை வாசித்தாள். விவரித்துச் சொன்னதும் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டாள். என்னவாம்?

 "ச்சே, இதைத்தான் நான் சயின்டிஸ்டாகி கண்டுபிடிக்கலாம்னு நினைச்சிருந்தேன். இவங்க கண்டுபிடிச்சுட்டாங்க! திருட்டுப் பசங்க!!" என்றாள்.


தூக்கிவாரிப்போட்டது!!

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, "சரிப்பா, நான் வேற கண்டுபிடிக்கறேன். அனிமல்ஸ்ல்லாம் பேசும் இல்ல, அது என்ன பேசுதுன்னு நமக்கு தெரியுமா? இல்லல்ல, அதுக்கு ஒரு மெஷின் கண்டுபிடிக்கப் போறேன். அதை காதுல மாட்டிக்கிட்டு நாம காட்டுல போனா, பேர்ட்ஸ் என்ன பேசுது,சிங்கம் என்ன பேசுதுன்னு நமக்கு தெரியும். அது எவ்ளோ தெரியுமா? அஞ்சு ரூபான்னு வைக்கப் போறேன். ஏன்னா, எல்லா மக்களும் வாங்கணும் இல்ல. உழைக்கும் மக்கள் என்ன பண்ணுவாங்க,அப்புறம்?அதுக்குத்தான்"

 பப்புவின் ஒரிஜினல் ஆசை சயின்டிஸ்டாக வேண்டும், என்றாலும் டெய்லராகவும் ஆக வேண்டும் என்றும் ஆசையாம்!



மற்றொரு நாள், நரிக்குறவ மாணவனைப் பற்றிய செய்தி. குறவர்களைப் பற்றி தோண்டி தோண்டி கேட்டுக்கொண்டிருந்தாள். ஒரு சில நாட்கள் சென்றிருக்கும். ஒருநாள் மதியம் (அதுவும் ஞாயிற்றுக்கிழமை மதிய தூக்கம்!!)தூங்க விடாமல் அருகில் வந்து விளையாடிக்கொண்டிருந்த பப்புவிடம்  "சும்மா இருக்க மாட்டியா, பப்பு" என்றேன்.

"ஹேய்,ஏன் நீ  என்னை 'மரியாதை அற்ற குறவரா' (!) பேசறே?"

கொஞ்ச நேரத்துக்குப் பிறகுதான் புரிந்தது, அது 'மரியாதைக்குறைவா'க என்று!!


1 comment:

பூங்குழலி said...

சயன்டிஸ்ட் கம் டெய்லரா ? சோ ஸ்வீட் பப்பு ..குழந்தைகள் உலகத்தில் எல்லாமே சுலபத்தில் சாத்தியமாகிறது முல்லை