Friday, December 10, 2010

வேளச்சேரி டைம்ஸ் : பத்துக்கு பத்தில் ஒரு கனவு இல்லம்

தனராஜ் தனது குடும்பத்துடன் இரு படுக்கை அறைகளைக் கொண்ட வீட்டில் வசிக்கிறார். அவரோடு, சமையலறையில் ரோசய்யாவின் குடும்பமும், மற்றொரு படுக்கை அறையில் பலராமின் குடும்பமும் வசிக்கிறார்கள். நாங்கள் சென்றபோது தனராஜின் மனைவி, ஹாலின் ஒரு பகுதியில் சமையல் செய்துக் கொண்டிருந்தார். மறுபகுதியில் பலராம் குடும்பத்தின் உலை கொதித்துக்கொண்டிருந்தது.

ஒன்றிரண்டு பைகள், அதில் துருத்திக்கொண்டிருக்கும் துணிகள்,போர்வை மற்றும் பாய், கட்டப்படாத ஜன்னல்களை மூடியிருக்கும் பிளாஸ்டிக் சாக்கு, சமைக்கும் பகுதியில் சில சாமான்கள் - இதுதான் ஒவ்வொரு குடும்பத்தின் சொத்து.

'குடும்பமா இருக்கிறதால இங்கே தங்கிக்கலாம். தனியா இருந்தா அங்கே பின்னாடி இருக்கிற குடிசையிலே தங்கிக்கணும்' என்று தனராஜ் காட்டிய திசையில் சில குடிசைகள் தென்பட்டன. எல்லாருக்கும் சேர்த்து ஒரு பொதுக்கழிப்பறை. குளியலறை. தேங்கியிருக்கும் மழைத்தண்ணீர் - ‍கத்திக்கொண்டிருக்கும் தவளைகளின் சத்தம் மற்றும் குண்டு பல்பின் ஒளி. அந்தக் குடிசைகளில் தங்கியிருப்பவர்கள் விஜயநகரத்திலிருந்து வந்திருக்கும் பெண்களும் ஒரிஸாவிலிருந்து வந்திருக்கும் ஆண்களும்.அறைச் சுவர்களையும்,தூண்களும்,மேல்தளங்களுமாக அந்த புத்தம் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவ‌ர்கள் அவர்கள். இந்த இரண்டு மாடிக்கட்டிடம் என்றில்லை, சென்னையில் பத்து மாடி, பன்னிரெண்டு மாடி கட்டிடங்களை கட்டி எழுப்புபவர்களும் அவர்கள்தான். பெண்கள் கல்லையும், மணலையும் சுமக்க ஆண்கள் கட்டுவதும், கலப்பதுமாக வேலை செய்வார்கள். அவர்களைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைகள். பலகணியோ அல்லது அடித்தளமோ, போர் போடும் வேலையோ தினமும் ஏதாவதொரு ஒரு புதிய வளர்ச்சியை/ மாற்றத்தைக் அக்கட்டிடம் கொண்டிருக்கும். இது நம் அனைவருக்குமே மிகவும் பரிச்சயமான காட்சிதான் இல்லையா?

ஏறத்தாழ எல்லாத் தெருக்களிலும் ஏதாவதொரு கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு பிரிவு மக்களும் ஏதாவதொரு ஊரிலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து கட்டிக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.மற்றொரு பிரிவு மக்களின் குடும்பங்கள் வந்து குடியேற.பெய்கின்ற மழையோ அல்ல‌து தூறலோ - எதுவும் அவர்களது வேலையை தடை செய்துவிட முடியாது. சிலமாதங்களாக உருப்பெற்று வரும் அந்த கட்டிட வேலை, கடந்த வாரத்தில் 18 மணி நேரங்களாக பெய்த மழைக்காக மட்டுமே நிறுத்தப்பட்டது.

'இங்கே வேலை முடிஞ்சா, அடுத்து மேஸ்திரி எங்கே சொல்றாரோ அங்க போணும்", என்கிறார் பலராம்‍ அவ்வீட்டின் ஆண்களுக்காக போடப்பட்டிருக்கும் மரபெஞ்சில் அமர்ந்தபடி. தரையில் அவரது மனைவி பார்வதி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்க, அவர்களின் இருவயது குழந்தை ஓடி விளையாடிக் கொண்டிருந்தது.

"ஊரில பச்சரிசிதான் சாப்பிடுவோம். இங்கே ஒரு ரூபா அரிசிய, நாலு ரூபான்னு கடையில விக்கிறதை வாங்கி சாப்பிடறோம். வேகவே மாட்டேங்குது, ஒரு அவர், ஒன்றரை அவர் ஆகுது" என்றார் பலராமின் மனைவி. சொந்த ஊர் ஆந்திராவிலிருக்கும் குண்டூர். ஊரில் விவசாயம் செய்துக்கொண்டிருந்தார். விவசாயம் கட்டுபடியாகாததால் தெரிந்த மேஸ்திரி வழியாக குடும்பத்துடன் இங்கு வந்திருக்கிறார்.

"கால்கிலோ தக்காளி பதினாறு ரூபா விக்குது. சாப்பாட்டுக்கே சரியா இருக்கு. ஒன்னும் மிஞ்சாது. ஊருக்கெல்லாம் ஒன்னும் கொண்டு போக முடியாது . தனியா இருக்கிற பசங்க கையிலியாவது நாலு ரூபா தங்கும் போலிருக்கு, எங்களுக்கு செலவுக்கே சரியா இருக்கு" என்று பலராம் கூறியபோது அவரது முகத்தில் தெரிந்தது வேதனையை எப்படி சொல்ல? பக்கத்து ப்ளாட்டில் தேங்கியிருந்த தண்ணீரிலிருந்து கொசுக்கள் படையெடுக்க ஆரம்பித்திருந்தன.

காலையில் எட்டரை அல்லது ஒன்பது மணிக்கு வேலையை ஆரம்பித்தால் மதியம் ஒரு மணிநேரம் உணவு இடைவேளை. மதியம் தொடங்கி மாலை ஐந்து அல்லது ஐந்தரை வாக்கில் வேலை முடியும். வாரக்கூலி.ஒருநாள் விடுப்பு எடுத்தாலும் சம்பளம் கட். ஆண்களுக்கு நானூறு ரூபாய் மற்றும் பெண்களுக்கு 250லிருந்து 300 ரூபாய் வரை - ஒருநாள் சம்பளம். ஞாயிறு விடுமுறை. எந்த பண்டிகை அலல்து விசேஷ தினங்களுக்கோ விடுமுறை இல்லை. 'இப்ப பொங்கலுக்கு ஊருக்கு போவோம். பத்துநாள் இருந்துட்டு வருவோம். ஒரு பொங்கலுக்கு போனா அப்புறம் மறு பொங்கலுக்குத்தான்' என்றார் பார்வதி.'மேஸ்திரி புது பொடவை, வேஷ்டி, கொடுப்பாரு. ' எனும் தனராஜ்தான் அங்கிருந்தவர்களிலேயே கொஞ்சம் பெரியவர். பல வருட அனுபவங்கள் கொண்டவர். 'நாங்க நெறைய கட்டிடம் கட்டியிருக்கோம், அம்பத்தூர், அண்ணா நகர், திருவான்மியூர்..... வீடுங்க, ஆஸ்பத்திரி, பெரிய ஆபீஸ் எல்லாம் கூட. எல்லாம் வித்து போகுது. இது கூட, எல்லா வீடும் புக் ஆயிடுச்சு. தெனம் வந்து பார்த்துட்டு போறாங்களே " எனும் தனராஜுக்கு சந்தேகம் இவ்வீடுகளை யார் வாங்குகிறார்கள், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் 'பத்துக்கு பத்து கூட நம்மால வாங்க முடியலயே' என்பதுமே. முக்கியமாக, 'எங்கேருந்து இவ்ளோ காசு வருது?"

செய்திதாள்களின் சின்ன கட்டங்களிலிருந்து எக்ஸ்குஸிவ் இதழ்கள் வரை, ப்ளக்ஸ் பேனர்கள், ஏன் பேருந்தின் பின்னால் கூட விட்டு வைக்காத அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் தனிவீடுகளுக்கான விளம்பரங்கள். ஏரியின் நடுவில் கட்டினால் கூட புக் ஆகிவிடும் வீடுகள், ப்ளாட்டுகள்.

இட்டாலியன் கிச்சன், மாடுயூலர் கிச்சன், யூரோப்பியன் டாய்லெட், ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் உருவான ஸ்ட்ராங்க் கம்பிகள் என்றும் நெடிதுயர்ந்த வீடுகள் ஒருபுறம் ஒருசாராருக்கு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் நாடோடிகளாக அலைந்து திரிந்துக்கொண்டிருக்கும் ஒரு சாரார்....

கல்லூரி முடித்ததும் குறைந்தது மூன்று அல்லது நான்கு லட்சத்திலிருந்து ஆரம்பிக்கும் சிடிசி ஒரு புறம்....ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் கூலி பெறும் கூட்டம் ஒருபுறம்...முன்னூறு ரூபாய் பிட்ஸாவை வாங்கும் கூட்டம்.....விற்கும் விலைவாசியில் ஒருநாளை ஓட்டுவதற்கு முழி பிதுங்கும் கூட்டம்...

போக்குவரத்து நெரிசலை (குறைப்பதாகச் சொல்லிக்கொண்டாலும்) அதிகரிக்கும் மேம்பாலங்களும்,மெட்ரோ ரயில்களும் போடப்படும் சென்னையில் - வேளச்சேரியில்தான் மழையிலும் குளிரிலும் அவதிப்பட்டு குடியிருக்க வீடின்றி அல்லலுறும் மக்களும் வாழ்கிறார்கள்.

ஒரு பில்லியன் டாலரில் கட்டப்பட்ட வீடு இருக்கும் நாட்டில்தான் - பத்து குடும்பங்களுகொரு கழிப்பறை இருக்கிறது.

ஆன்டிலியா மாளிகை, முகத்திலறைவதற்குப் பதில் நம்பிக்கையை, எதிர்காலத்தை பற்றிய நல்லெண்ணத்தை , தாங்களும் எட்ட முடியும் என்று வளர்ச்சிக்கான வாய்ப்பாக இருப்பதாக - இளைஞர்கள் கருதுவதாக ஒரு கட்டுரை கூறியது.

அம்பானியின் ஆன்டிலியா மாளிகைக்கும், தனராஜின் 'பத்துக்கு பத்து வீடு' கனவுக்கும் இடையில்தான் பொருளாதார வளர்ச்சியும், பிரதமரின் வளர்ச்சித் திட்டங்களும் எங்கோ மறைந்திருக்க வேண்டும். அப்படியே தனராஜின் கேள்விக்கான விடையும் கூட.

"இவ்ளோ காசு எங்கேருந்து வருது? எங்கே இருக்கு இவ்ளோ காசு? " என்ற தனராஜின் எளிய கேள்விக்கு விடையளிக்க எனக்குத் தெரியவில்லை.

தற்போது நாங்கள் குடியிருக்கும் வீடு கூட தனராஜால் கட்டப்பட்டிருக்கக் கூடும். புழுதி படிந்த அந்தக் குழந்தைகள் இங்கும் ஓடியாடி விளையாடி இருக்கக்கூடும்.

தனராஜின் இருப்பிடத்தை விட்டு வெளியேறும்போது, ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது "சென்செக்ஸ் 195xxx புள்ளி 45 புள்ளிகளுடனும், நிஃப்டி ஐந்தாயிரத்து .... புள்ளி 54 புள்ளிகளுடன்மும் முடிவடைந்தது. விப்ரோவின் பங்குகள் நான்காயிரம், இன்ஃபோசிஸின் பங்குகள் மூன்றாயிரத்து...."

10 comments:

ராம்ஜி_யாஹூ said...

தனராசும் , பலராமும் தங்கள் பால்ய, பதின்ம வயதுகளில் சரியாக படிக்காமல் இருந்து விட்டு இன்று அம்பானியையோ, ஆறு இலக்க சம்பளம் வாங்கும் ஐ ஐ டி அலுமினி மாணவரையோ பார்த்து அழுவதில் ஒரு பயனும் இல்லை.

bandhu said...

//தனராசும் , பலராமும் தங்கள் பால்ய, பதின்ம வயதுகளில் சரியாக படிக்காமல் இருந்து விட்டு இன்று அம்பானியையோ, ஆறு இலக்க சம்பளம் வாங்கும் ஐ ஐ டி அலுமினி மாணவரையோ பார்த்து அழுவதில் ஒரு பயனும் இல்லை//
தவறான கண்ணோட்டம். The difference between the haves and have nots is really huge in India. 80% of Engineering Graduates are reported to be un-employable in India. There is a very small %age of people fall under ஆறு இலக்க சம்பளம் வாங்கும் ஐ ஐ டி அலுமினி மாணவரை category. How can any one justify the huge divide?

குடுகுடுப்பை said...

ராம்ஜி_யாஹூ said...
தனராசும் , பலராமும் தங்கள் பால்ய, பதின்ம வயதுகளில் சரியாக படிக்காமல் இருந்து விட்டு இன்று அம்பானியையோ, ஆறு இலக்க சம்பளம் வாங்கும் ஐ ஐ டி அலுமினி மாணவரையோ பார்த்து அழுவதில் ஒரு பயனும் இல்லை.
//
ஏற்றத்தாழ்வுகள் சமுதாயத்தில் இருக்கும்,ஆனால் ஏற்றத்தாழ்வுகளை திட்டமிட்டே உருவாக்கி படிப்பதற்கான வாய்ப்புகளையே உருவாக்காமால் நீ ஐஐடி ல படிக்கல அதுனாலதான் குடிசைல இருக்கிற அப்படின்னு சொல்ற உங்களைப்போன்ற அறிவு ஜீவிகள் வாழும் காலத்தில் வாழ்கிறேன் என்பதில் நானும் பெருமை அடைகிறேன்.

குடுகுடுப்பை said...

இந்திய, சீனப் பொருளாதாரம் இரண்டுமே சேவை சார்ந்த பொருளாதாரம், இவைகள் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றப்பயன்படாது. நாகரீக சமுதாயத்தின் வளர்ச்சி என்பது இடம் பெயராமல் மக்களின் வாழ்க்கை உயர்த்துவதாக இருப்பதற்கான திட்டங்களை ஆட்சியாளர்கள் செய்யவேண்டும்.இந்திய முதலாளித்துவம் பெரும்பாண்மை யாக இந்திய மக்களின் சேவை சார்ந்து வடிவமைக்கப்படல் வேண்டும், அதுவே அனைத்து மக்களின் தேவையை பூர்த்தி செய்யமுடியும் அப்பவும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் ஆனால் இடைவெளி குறைந்த நிலையில்.

வடுவூர் குமார் said...

என்னங்க உள்ளூரில் இருந்துகொண்டு எங்கிருந்து பணம் வருது என்று தெரியவில்லை என்கிறீர்களே!! சோவின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்க்கவில்லையா? அதில் ஒரு காரணம் சொல்லியிருப்பார்.மற்ற எல்லா இடங்களில் வீடு விலை ஓரளவு குறையும் போது சென்னையில் மட்டும் குறையாததன் மர்மம்- கூகிளில் தேடினால் போதும் போதும் என்று சொல்லும் வரை கிடைக்குமே!!

அமர பாரதி said...

//ஊரில பச்சரிசிதான் சாப்பிடுவோம். இங்கே ஒரு ரூபா அரிசிய, நாலு ரூபான்னு கடையில விக்கிறதை வாங்கி சாப்பிடறோம். வேகவே மாட்டேங்குது, ஒரு அவர், ஒன்றரை அவர் ஆகுது//

//ஆண்களுக்கு நானூறு ரூபாய் மற்றும் பெண்களுக்கு 250லிருந்து 300 ரூபாய் வரை//


ஒரு நாளுக்கு 400 ரூபாய் என்று வாரம் ஆறு நாட்கள் வேலை செய்தாலே மாதம் 24 x 400 = 9600 ரூபாய் வருகிறதே. சென்னையில் மாதம் 10000 ரூபாய் வைத்துக் கொண்டு சமாளிக்க முடியவில்லை என்று சொல்வது சரியா?

குடுகுடுப்பை said...

அமர பாரதி said...
//ஊரில பச்சரிசிதான் சாப்பிடுவோம். இங்கே ஒரு ரூபா அரிசிய, நாலு ரூபான்னு கடையில விக்கிறதை வாங்கி சாப்பிடறோம். வேகவே மாட்டேங்குது, ஒரு அவர், ஒன்றரை அவர் ஆகுது//

//ஆண்களுக்கு நானூறு ரூபாய் மற்றும் பெண்களுக்கு 250லிருந்து 300 ரூபாய் வரை//


ஒரு நாளுக்கு 400 ரூபாய் என்று வாரம் ஆறு நாட்கள் வேலை செய்தாலே மாதம் 24 x 400 = 9600 ரூபாய் வருகிறதே. சென்னையில் மாதம் 10000 ரூபாய் வைத்துக் கொண்டு சமாளிக்க முடியவில்லை என்று சொல்வது சரியா?
//
கடைசி வரை சமாளித்துக்கொண்டுதான் இருக்கலாம் என்பதுதான் நிலைமை. ஒரு வீடு கட்டும் தொழிலாளி சொந்த/வாடகை வீட்டில் வாழ இயலாத அளவுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்கிறது அதைக்களைவது எப்படி? அதற்கான தீர்வு என்ன என்பதுதான் பதிலாக இருக்கமுடியும்.

மாதவராஜ் said...

முல்லை!

பொருளாதாரப் புலிகளின் வகை தொகைகளில் இவர்கள் ஒரு பொருட்டேயல்ல.புள்ளி விபரங்களில், தேசத்தைக் கட்டும் இந்த ம்னிதர்கள் ஒரு புள்ளியாகவேனும் வர முடியாது. தேசத்தின் பொருளாதாரத்தை பத்துக்குப் பத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள். ஆத்திரமும் எரிச்சலும் வருகிறது.

thamizhan said...

சுமார் பதினைந்து ஆண்டுகளில் தமிழ் நாடு infrastructure ல் முன்னேறியிருக்கிறது.வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு வேலை வாய்ப்பே அவர்கள் குறைந்த கூலிக்கு வருவதால்தான்.அப்போ ஏற்கனவே இந்த வேலையை செய்த கூலித்தொழிலாளிகள் என்ன ஆனார்கள்?அவர்கள் வேலையில்லாமல் அவதிப்படுகிரார்களா?இல்லை.அவர்கள் எல்லாம் மேஸ்திரி,காண்ட்ராக்டர்,ரியல் எஸ்டேட் ஓனர் என்று உயர்ந்துவிட்டார்கள்.நல்லதுதானே! இந்த பதிவர் பார்வையில் பாதிதான் தெரிந்திருக்கிறது.

தீபாதேன் said...

Actually, this reminds me of how we were in US. We lived in an apartment but had almost none of the luxury items in the house. Sofas, chairs, beds etc were all bought as second hand items from people leaving the country. We are used to whine that 1 bunch of coriander leave costs Rs.100 (or $1.50) We work 24x7 calling ourselves as support team.
Also as far as i have heard, many of these people living on the under construction buildings have their own houses in their natives. I'm not saying they shd suffer this way but i hope its the choice of these people in live in such places to save money otherwise they can very well find someplace even a single bed room flat to live in with their earnings.