Friday, December 31, 2010

பொண்ணும் பொன்னும்

ஒன்பது வயது வரைக்கும் காது குத்தாமல்தான் இருந்தேன்.அந்த வயதிலெல்லாம் எனக்கு நகை அணிவது/ அணியாதது பற்றி பெரிய தெளிவெல்லாம் இல்லை. ஆனால் அதெல்லாம் பெரியவங்க விஷயம்.... அவ்வளவுதான்.

”என் பொண்ணு உடம்புலே ஒரு பொட்டு தங்கம் பட விட மாட்டேன்’ என்று பெரிம்மாவையும் அம்மாவையும் வளர்த்தாரம் தாத்தா. ஒரு கட்டத்தில் உறவினர்களின் 'நை நை' தாங்காமல் பியூசியின் போது குத்த வேண்டியிருந்திருக்கிறது.

அதனால்தானோ என்னவோ, என்னையும் அப்படி வளர்க்க ஆசைப்பட்டார் பெரிம்மா.க‌ல்யாணி க‌வ‌ரிங் விள‌ம்ப‌ர‌ம் பார்த்து அதிலிருக்கும் டிசைன்க‌ளை வ‌ரைந்துக் கொடுத்து அது போல‌வே ந‌கை செய்துப் போட்டுக்கொள்ளூம் உற‌வின‌ அக்காக்க‌ளுக்கு ம‌த்தியில் இப்ப‌டி வ‌ள‌ர்வ‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம்தான். ஏன் காது குத்தவில்லை என்று கேட்பவரிடம் ‘இந்திரா காந்தி மாதிரி நானும் காது குத்திக்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறேன்.பெரிம்மாவின் கவசத்தால் காது குத்திக்கொள்வதிலிருந்து தப்பித்திருந்தேன். அதோடு, "ஆச்சிக்கு குட்டி காது, தாங்காது" என்றும் ஒரு சாக்கு இருந்த‌து.

மேலும் நகை மீது ஆசை எல்லாம் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஃபேன்சியான பொருட்கள் மீது பிரியம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும், கவுனில் கொலுசின் சலங்கைகளை பின் குத்தி 'சலங்‍‍ சலங்' ஓசையுடன் நடக்க ஆசைப்பட்டிருக்கிறேன்.சுஜா அக்காவுடன் சேர்ந்து ’கிரிஸ்டல் கொலுசு’ (அப்போது அது ரொம்ப ஃபேமஸ்) நாங்கள் மட்டும் கடைக்குப் போய் வாங்குவது என்றெல்லாம் திட்டம் தீட்டியிருந்தோம். அதைத்தாண்டி பெரிதான ஆசைகளெல்லாம் இல்லை. இத்தனைக்கும் எனக்கு கொலுசெல்லாம் அணிவித்ததும் இல்லை. அணிந்தது இல்லை. "எல்லோரும் காது குத்தியிருக்காங்க‌, ஏன் என‌க்கு குத்த‌லை" என்றும் வீட்டில் கேட்ட‌தில்லை.

தீபாவளி லீவுக்கு வடலூர் சென்றிருந்த போது பெரிய மாமா சண்டை போட்டு கொல்லரிடம் என்னை அழைத்துச் சென்று காது குத்தி அழைத்து வந்தார். நான் காது குத்தாமல் இருந்தால் மாமாவுக்கு இழுக்கு போல.

கல்லூரியில் என்னைத்தவிர எல்லோரும் செயின் அணிந்திருந்தனர். வாணி, முதல் செமஸ்டர் முழுதும் செயின் அணியச் சொல்லி பலவித அட்வைஸ் செய்வாள். “நாம செயின் போடலைன்னா நம்ம அம்மா அப்பாக்குதான் இழுக்கு” - "கல்யாணம் ஆனா செயின் போடாமயே மொட்டையா(!) இருக்கப் போறியா” - “செயின் போட்டாதான் ரிலேஷன்ஸ்கிட்டே நம்ம அம்மா அப்பாவுக்கு மரியாதை இருக்கும்” என்றெல்லாம். அப்போதெல்லாம் எனது பதில், ‘நானே சம்பாரிச்சு வாங்கி போட்டுக்குவேன்’. இதே வாணிதான், “நான் திடீர்ன்னு செத்துட்டா செயினை மட்டும் எப்படியாவது எடுத்துட்டு போய் எங்கம்மாக்கிட்டே சேர்த்துடுவேன்” (இப்பொது நினைத்தால் - எகொசஇ!!) என்றும் சொல்லுவாள்.

எனது முதல் சம்பளத்தில் ஒரு மெல்லிய செயினும், அதனினும் மெல்லிய பிரேஸ்லெட்டும் வாங்கி தந்தார் பெரிம்மா. ஆனால், நகை மீது பெரிய ஈர்ப்பெல்லாம் இல்லை. கல்யாணத்தின்போது அம்மா நகைகள் வாங்கிய போது அந்த காசை என்னிடம் கொடுத்து விடுமாறு நச்சரித்தேன். ஆனால், யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

இப்போ இந்த‌ பேகான் ஸ்ப்ரேவுக்கெல்லாம் என்ன‌ அவ‌சிய‌ம் என்றால்..... எல்லாம் ப‌ப்புதான் கார‌ண‌ம்.

இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாகிவிட்ட‌தென்றாலும் நான் எதிர்கொண்ட‌ அதே கேள்விக‌ளை என் ம‌க‌ளும் எதிர்கொள்கிறாள். 'அதெல்லாம் ஒரு விஷயமா' 'இதுக்கு இவ்ளோ இம்பார்டன்ஸ் இருக்குமா' என்று எண்ணி, மாறியிருக்கும் என்று பார்த்தால், காது முழுக்க‌ குத்திக்கொள்வ‌துதான் இப்போது ஃபேஷ‌னாக‌ இருக்கிற‌து. சிறு இடத்தைக் கூட‌ விட்டுவைக்காம‌ல்...இத‌ற்கும் வாஸ்து இருக்கும் போல‌!

அத‌ற்கேற்ற‌வாறு வைர‌ம் வைத்து கூட வ‌ளைய‌ங்க‌ள், க‌ம்மல்க‌ள் வ‌ருகின்ற‌ன‌.

ஏற்கென‌வே ப‌ப்புவுக்கு காது குத்திய‌ காதையை இங்கு என் அம்மா எனக்கு செய்ததில்... , காது குத்திய காதை!! எழுதியிருக்கிறேன். ச‌ற்றே பெரிய‌ க‌ம்ம‌ல்களை யாராவது அணிந்திருப்பதைப் பார்த்தால் காது வலிக்கும் என்று அவ‌ளாக‌வே சொல்லிவிடுகிறாள். ;-)

ஏன் இன்னும் காது குத்த‌லை என்று அவ‌ளை புதிதாக‌ பார்ப்ப‌வ‌ர்க‌ள் கேட்கும் போதெல்லாம் நான் சொல்லும் ப‌தில் யாருக்கும் உவ‌ப்பாக‌ இருப்ப‌தில்லை..

ப‌ப்புவை கேட்டாலோ, "காது குத்தினா என‌க்கு வ‌லிக்குது" என்று சொல்லிவிடுகிறாள். ச‌ம‌ய‌ங்க‌ளில் "ஏன் என‌க்கு காது குத்த‌ மாட்டேங்க‌றே" என்று எங்க‌ளிட‌ம் கேட்பாள். பிற‌கு ம‌ற‌ந்துவிடுவாள்.

அத‌ற்காக‌ ப‌ப்புவுக்கு இதிலெல்லாம் ஆர்வ‌ம் இல்லையென்று இல்லை. மேக்க‌ப்,நெய்ல்பாலிஷ் போடுவ‌தில், ஃபேன்சி வ‌ளைய‌ல்க‌ள், மாலைக‌ள் மாட்டிக்கொள்வ‌தில் மிக‌வும் ஆர்வ‌ம்.நானும் வாங்குவ‌தில்லை என்றாலும் இரு ப‌க்க‌த்து ஆயாக்க‌ள், மாமாக்க‌ள்,சித்த‌ப்பா அவளுக்கு வாங்கித் த‌ருவ‌தை அணிவதை த‌டுப்ப‌து இல்லை. அவ‌ளாகவே உண‌ர‌ வேண்டும் என்ப‌துதான் நினைக்கிறேன். ந‌கை ஆசை இல்லாம‌ல் வாழ‌ வேண்டுமென்ப‌துதான் நோக்க‌ம்.

இன்றைக்கு நான் பார்க்கும் ப‌ல‌ பெண்க‌ளும் கல்யாண‌த்துக்கு முன் ஃபேஷ‌னுக்காக‌ வ‌ளைய‌ல் அணிவ‌தில்லை. பிளாஸ்டிக் ஃபேன்சி காத‌ணிகளை அணிகிறார்க‌ள். ஆனால், க‌ல்யாண‌த்துக்குப் பின் முற்றிலும் த‌லைக்கீழ்.

சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு ந‌ண்ப‌ரின் வீட்டுக்குச் சென்றிருந்த‌ போது, மூன்றாவ‌து ப‌டிக்கும் அவ‌ர‌து ம‌க‌ளின் விருப்ப‌த்திற்காக‌ அவ‌ள‌து ஆசைக்காக‌ விலையுய‌ர்ந்த‌ காத‌ணிக‌ளை வாங்கியிருந்தார்க‌ள்.ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. பெண்ணை ஏன் நகை ஆசையுட‌ன் வ‌ள‌ர்க்க‌ வேண்டும் அல்லது அவ்வாறு ஆசைப்படுவதை ஏன் கண்டிக்கவில்லை என்று தோன்றிய‌து.கேட்க‌வில்லை. பொதுவாக, 'த‌ங்க‌ம் என்னைக்குன்னாலும் வேணும்' - 'க‌ல்யாண‌ம் காட்சிக்கு ஆகும்' என்ப‌துதான் சொல்லிக்கொள்ளும் ச‌மாதானம், இல்லையா?


அதுவும் ந‌கைக்க‌டைக‌ளில் மாத‌ம் இவ்வ‌ள‌வு சேமித்தால் ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து ச‌லுகைக‌ளுட‌ன் வாங்கிக் கொள்ள‌லாம் என்ப‌து இன்னொரு தூண்டில். இதை ந‌ம்பி இதிலெல்லாம் இன்வெஸ்ட் செய்வார்க‌ளா யாராவது என்றெண்ணினால் உண்மை வேறாக இருக்கிறது. ப‌ல‌ பெண்க‌ள் மாத‌ த‌வ‌ணைக‌ளில் அதில்தான் சேமிக்கிறார்க‌ள்.ந‌கைக‌ள் வாங்குகிறார்க‌ள். தி.ந‌க‌ரின் க‌டைக‌ளிலும், வேள‌ச்சேரியின் க‌டைக‌ளிலும் நேர‌டியாக‌ பார்த்திருக்கிறேன். அப்படி பணம் கட்டுபவர்கள் பெரும்பாலும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்கம்தான். ந‌டு ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ம் என்று வேண்டுமானாலும் சொல்ல‌லாம்.மாத‌ம் முழுதும் உழைத்து பெற்ற‌ தொகையில் மூச்சை இழுத்து பிடித்து 'என்றாவ‌து ஆகும்' அல்ல‌து 'எப்போதாவ‌து ஆக‌ப்போகும் ம‌க‌ளின் திரும‌ணம்' என்ற கார‌ண‌ங்க‌ளுக்காக‌.....வெற்று ஜம்பத்துக்காக.


இதில் ந‌கைக்க‌டைக‌ளுக்கும் கொள்ளை லாப‌ம். முன்கூட்டியே வரவு வைக்கப்படும் தொகை வ‌ட்டியில்லாத‌ வ‌ர‌வுதானே!

அப்ப‌டி ஏன் நமக்கு ந‌கை மீது ஆசை இருக்க‌ வேண்டும்? நுக‌ரும் ஆசையை நாமே உண்டாக்க‌ வேண்டும்? ம‌ருத்துவ‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ அல்ல‌து ந‌ர‌ம்பு தூண்ட‌லுக்காக‌ என்று நம்பினால் காது குத்துவதோடு மட்டும் விட்டு விடலாமே! ந‌ம‌து ம‌திப்பு நிச்ச‌ய‌ம் நாம் அணியும் ந‌கையில் இல்லை என்ப‌தை உண‌ர‌ வேண்டும்.

9 comments:

சண்முககுமார் said...

வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தோடுன்னா..நாங்கள்ளாம் பத்துரூபா இருபது ரூபாத்தோடுத்தான் போடறதுங்க..

செயினெல்லாம் எங்கூருல திருடங்கக்கிட்ட உண்டான மரியாதையில் போடரதே இல்லைங்க. :))

நசரேயன் said...

// ந‌ம‌து ம‌திப்பு நிச்ச‌ய‌ம் நாம் அணியும் ந‌கையில் இல்லை என்ப‌தை உண‌ர‌ வேண்டும்.//

கண்டிப்பாக

மாதேவி said...

"ம‌திப்பு நிச்ச‌ய‌ம் நாம் அணியும் ந‌கையில் இல்லை" நன்றாகச் சொன்னீர்கள் முல்லை.

குடும்பத்தினர் அனைவருக்கும் சிறப்பாக பப்புவுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Travis Bickle said...

who the hell are you to interfere in others likes n dislikes.

If she like jewels thats her wish, you dont have the right to comment on that

சின்ன அம்மிணி said...

நான் தங்கக்கம்மலோட திருகாணி தொலைச்சேன்னு காலேஜ் படிக்கும்வரை அம்மா தங்கம் வெள்ளி எதையும் காதுக்கு அருகில் கொண்டு வரவே இல்லை. மத்த மெட்டல் எல்லாம் எனக்கு அலர்ஜி.

விஜய்கோபால்சாமி said...

அவசரத்துக்கு வைக்கலாம்னா “தங்கத்தப் போயி வைக்கிறதாவது” என்று ஒரே பிலாக்கனம். இதுக்குக் கூட ஒதவாத தங்கம் வேற என்னத்துக்கு ஆகும்.

Deepa said...

//ம‌ருத்துவ‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ அல்ல‌து ந‌ர‌ம்பு தூண்ட‌லுக்காக‌ என்று நம்பினால் காது குத்துவதோடு மட்டும் விட்டு விடலாமே//

:)) apdi solrathe kaadhu kuthhal thaano?? #doubt

அன்புடன் அருணா said...

/அதுவும், கவுனில் கொலுசின் சலங்கைகளை பின் குத்தி 'சலங்‍‍ சலங்' ஓசையுடன் நடக்க ஆசைப்பட்டிருக்கிறேன்/
அட!நானும்!
நகை ஆசைக்காக என்று இல்லையென்றாலும் ஒரு முதலீடு என நினைத்து வாங்குகிறவர்களும் நிறைய உண்டு முல்லை!