Thursday, November 18, 2010

வேளச்சேரி டைம்ஸ் : இது எங்க ஏரியா, உள்ள வராதே!!

பிரபலமான கால் சென்டர்களும், பிபிஒகளும், பிரபல ஐடி கம்பெனிகளுமாக உலகத்தின் சேவைப் பணித்தளம். NRI க்களின் சொர்க்கபூமி. இந்தியாவில் மிக மலிவாகக் கிடைக்கும் மனித வளத்திற்காக/உழைப்பிற்காக ஐடி கம்பெனிகள் கோட்டைகட்டியிருக்கும் இடம்.

வேளச்சேரி.

வேளச்சேரியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வீடு தேடினால் கிடைக்கும் அனுபவங்களோ முற்றிலும் வேறு.

கடந்த சில வாரங்களாக, எனது கல்லூரித் தோழி லலிதாவிற்காக வீடு தேடி அலைந்ததே சாட்சி. ஒரு தரகர் மூலமும், விளம்பரங்களின் மூலமும் இப் பகுதியில் இருந்த வீடுகளையும், பிஜிகளையும் பார்த்தோம். (பிஜி/ ஹாஸ்டல்களைப் பற்றி பிறிதொரு சமயம்)

வீட்டு வாடகைகளும், அட்வான்ஸ்களும் சொல்லப்பட்டதைப் பார்த்தபோது ஏடிஎம்மை கடத்தாமல் போனால் வேலை நடக்காது போல தோன்றியது. ஏழாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை வாடகை சொல்லப்படும் வீடுகளுக்கு ஐம்பதாயிரத்துக்குக் குறையாமல் அட்வான்ஸ் இல்லை.வாடகையைப் பொறுத்து, ஐம்பதிற்கும் எழுபத்தைந்திற்கும் இடையில் அட்வான்ஸ் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது. ஒரே தவணையில், வீட்டை ஆக்கிரமிக்கும் முன்பே தர நேரிடலாம். அல்லது அதிகபட்சம் இரண்டு தவணைகளில் தரலாம். அது சில வீட்டு ஓனர்களைப் பொறுத்து மாறுபடும். மின்விசிறி மற்றும் விளக்குகள் எல்லாம் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டை ஆக்கிரமிப்பதற்கும் முன்னால் சுத்தம் செய்துத் தருவதற்கும் காசு கேட்டனர் ஒரு சிலர். சமையலறைகள் பலகணி அளவே இருக்கின்றன. அதில் பாதி இருக்கிறது பாத்ரூம்கள். வெளிச்சம் எட்டிக்கூடப் பார்க்காத அறைகள். ஆனால், வாடகை மட்டும் பத்தாயிரத்துக்குக் குறையாமல்.

அது ஒருபுறமிருக்க, ஒரு சில அபார்ட்மென்ட்களின் ஓனர்கள், நாம் சாப்பிடும் மெனுவிலிருந்து, வீட்டில் எத்தனை பேர் வசிக்கலாம், கெஸ்ட்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வருகை நேரம் முதற்கொண்டு சகலத்தையும் தீர்மானிக்கிறார்கள். அதுவும், நீங்கள் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், குடும்பமற்று தனியாக இருக்கும் பட்சத்தில் தர்மசங்கடமான கேள்விகளை நுணுக்கி நுணுக்கி கேட்டு தகவலறிகிறார்கள். கணவர் வேலை பார்க்கும் கம்பெனி, கணவரது ஊர், அவரது உறவினர்கள் வந்து செல்வார்களா, நீங்கள் அவர்கள் வீட்டுக்குச் செல்வீர்களா என்பதில் தொடங்கி ஆயிரம் வாலா சரவெடிகளாக நீள்கிறது கேள்விகள்.

இந்தக் கேள்விகளிலிருந்து புரிந்ததெல்லாம் ஒன்றுதான். தனியாக வாழ விரும்பும் பெண்ணுக்கென்று நம் சமூகத்தில் சில நியதிகள் இருக்கின்றன. அவற்றை அவள் கடைபிடித்துதான் ஆகவேண்டும். தாமதமாக வீடு திரும்பக் கூடாது. விருந்தினர்கள் உங்கள் தந்தையாகவோ அல்லது தமையனாகவோதான் இருக்க வேண்டும்,ஏன் தனியாக இருக்க வேண்டும், பிரச்சினைக்கு என்ன காரணம் ...இன்ன பிற..

இவ்வளவும் தெரிந்துக் கொண்டு சரி, கஷ்டத்தை புரிந்துக் கொண்டு (!) வாடகையில் ஏதாவது குறைப்பார்களா என்றால் சொல்வதெல்லாம் அமெரிக்க டாலர்களை கணக்கில் கொண்டுதான் சொல்வார்கள் போல இருக்கிறது.

ஒரு சிலர், "வீட்டுலே நீங்க கண்டிப்பா பூஜா பண்ணனும்" என்றெல்லாம் கோரிக்கை வைத்தார்கள்.

நாங்கள் பார்க்கக் கிடைத்தவற்றில் பெரும்பாலும் அபார்ட்மென்ட்டுகள்தான். அதாவது, ஒரு கட்டிடத்தில்‍ ஆறு வீடுகள் அல்லது எட்டு வீடுகள் கொண்டவை. அதில் சில போர்ஷன்கள் ஒருவருக்கே சொந்தமாக இருக்கின்றன. தாய்-தந்தையின் பெயரில் ஒன்றும், அவர்களது மகனின் பெயரில் ஒன்றுமாக.அந்த மகன்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆகியிருக்கிறார்கள். பக்கத்து போர்ஷனில் வசிக்கும் பெற்றோர், இந்த வீட்டை மெயிண்டெய்ன் செய்கிறார்கள்.

இதுபோன்ற அமைப்பில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வீடுகளைப் பார்த்தோம். வீட்டைப் பார்த்துவிட்டு, சம்பிரதாயப் பேச்சுகளின போது, ஓனர்கள் எல்லோருக்கும் ஒரே கேள்விதான், ’லலிதா ஏன் தனியாக வசிக்கப் போகிறாள், குடும்பம் இல்லையா?’

அமெரிக்காவிலிருந்து கணவனுடன் பிரச்சினை காரணமாக தனியாக வந்து விட்ட லலிதா, தற்போதுதான் கேரியரை ஆரம்பித்திருக்கிறாள். உண்மை நிலையைச் சொன்னதும் 'சாரி, ஃபேமிலிக்குத் தான் வீடு தருவோம்"' என்று வாசல் நோக்கி கை காட்டப்பட்டோம்.

படித்து பதவியில் இருந்து ரிடையர்டு ஆனவர்கள் போலத்தான் இருக்கிறார்கள். தங்களது மகன்களை படிக்க வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கு அவர்கள் லிவிங் டு கெதராகக் கூட வாழலாம். இங்கு மட்டும், நமது லலிதா தனியாக வசிக்கக் கூடாது.

லலிதாவும் அவளது குழந்தையும் குடும்பம் இல்லாமல் வேறு என்ன?
கணவன் இல்லாமல் குழந்தை மட்டும் இருந்தால் அது ஃபேமிலி இல்லையா?

வீட்டு ஓனர்கள் எல்லாம் கெட்டவர்கள், வீடு தேடிச் செல்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. அவர்கள் டெனன்ட் ‍இன் பாதுகாப்பிற்காகதான் இதெல்லாம் அறிய விரும்புகிறார்கள் என்பதெல்லாம் கூட‌ ஓக்கேதான். பாதுகாப்புக்காக சில கேள்விகளை கேட்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டால் கூட, தனிப்பட்ட தகவல்களை கேட்பது எவ்விதத்தில் நியாயம்? அநாகரிமாக இல்லையா?

தனியாக வசிக்க வீடு தேடும் ஆணுக்கும் இதே பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்கள் மீதும் சந்தேகக் கண்கள் பாயலாம்.

ஆனால், தனியாக வசிக்கும் பெண்கள் மீதான சந்தேகங்கள்,பிம்பங்கள் வேறு மாதிரியானவை.

வீட்டு ஓனர்கள் பெரும்பாலும் வயதான ஆண்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை, ஆண் துணையில்லாமல் தனியாக வசிக்கப் போகும் பெண், அதுவும் கணவனை விட்டு வந்த பெண் சரியான கேரக்டர் கொண்டவளாக இருக்க முடியாது. அல்லது அவர்களால் பெண்கள் தனியாக வசிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஏனெனில், இந்திய கலாச்சாரத்தில் இதற்கெல்லாம் இடமில்லை.

அதுவும், கணவன் இல்லாவிட்டால் பெற்றோராவது அல்லது பெற்றோரில் ஒருவராவது உடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், அவர்கள் விதவைகளாக இருக்க வேண்டும். விவாகரத்தானவர்களுக்கோ அல்லது திருமணம் செய்யாமல் தனித்து வாழ விரும்பும் பெண்களுக்கோ வீடு கொடுகக் எந்த வீட்டு ஓனரும் தயாரில்லை. எந்நிலையிலும் ஒரு பெண் தனியாக இருந்துவிடக் கூடாது.

பாதுகாப்பு (!) நிமித்தம் என்று சொல்லிக்கொண்டாலும் ஒரு பெண் தனித்து வாழ இடம் கொடாத சமூகம், அது கட்டிக்காப்பாற்றும் கலாச்சாரம்.....

இது ஏதோ எங்களுக்கு மட்டும் ஏற்பட்ட அனுபவம் மட்டுமில்லை. ஆந்திராவிலிருந்து வந்து தங்கியிருக்கும் மீனு, வீடு தேடி அலுத்து போய் கிடைக்காமல் தற்போது ஹாஸ்டலிலே தங்கியிருக்கிறார்.

அவர் சொன்னது, “வீட்டு ஓனர்கள் கேட்கும் முதல் இரண்டு முக்கியமான கேள்விகள், குடும்பத்துடனா அல்லது தனியாக வசிக்கப் போகிறீர்களா? இன்னொன்று, சைவமா அசைவமா? இவற்றைப் பொறுத்துதான் வீடு கிடைக்கும். அதிலும், தனியாக வசிப்பதாக இருந்தால் வீடு நிச்சயமாகக் கிடைக்காது.”

வீட்டு ஓனர்கள்/அபார்ட்மெண்ட் கமிட்டியிலிருப்பவர்க்ள் கலாச்சார காவலர்களாகச் செயல்படுகிறார்கள் என்பதுதான் தனியாக தங்கியிருக்கும் பெண்களின் வாதமாக இருக்கிறது. இத்தனை மணி நேரத்திற்குள் வரவேண்டும் என்று ரூல் போடுகிறார்கள். சில சமயங்களில், திடீரென்று வீட்டிற்குள் புகுந்து, வந்திருக்கும் விருந்தினர்கள் யாரென்று அறிந்துக் கொள்ள விரும்புகிறார்கள். சுத்தமாக வைத்துக்கொள்கிறார்களா என்று இன்ஸ்பெக்‌ஷன் செய்கிறார்கள். மாடிகளைப் பூட்டி வைத்துவிடுகிறார்கள். 'பிறந்தநாள் கொண்டாட்டங்கள்/ பார்ட்டிகள் போன்றவற்றிற்கு இங்கு அனுமதி இல்லை' என்றும் கூறி விடுகிறார்கள்.

குறித்த தேதியில் வாடகைப் பணம் வந்தாக வேண்டும் என்று கட்டளையிடும் ஓனர்கள் கூட உண்டு. வருடாவருடம் வாடகையை ஏற்றுவது, வாடகை வீட்டிற்கு யூனிட்டிற்கு தனியாக மின்கட்டண சார்ஜ் வசூலிப்பது, அலுவலகத்திற்கு போன் செய்து அங்குதான் வேலை செய்கிறாரா என்று உறுதிபடுத்திக் கொள்வது என்று சொல்லப்படாத இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் நுழைய விரும்பவில்லை. ஒரு பெண் தனியாக வீடெடுத்து தங்குவதற்கு வரும் தடங்கல்கள் ,தனியாக வாழ முடிவெடுத்திருக்கும் பெண் குறித்து ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பங்கள் பற்றி தான்....

நாமிருப்பது வேளச்சேரிதானா அல்லது அமெரிக்காவின் ஏதாவது அவென்யூவா என்று குழப்பம் வருமளவிற்கு மெக்டோனால்டும், கேஎஃப்சியும், டோமினோஸ் பிட்ஸாவுமாக மிரட்டும் வேளச்சேரியில், தனியாக வாழும் பெண்ணிற்கு வீடில்லை என்பது ஏற்றுக்கொள்ள கொஞ்சமல்ல, நிறையவே கஷ்டமாக இருக்கிறது.

திருமணமோ, லிவிங் டு கெதரோ...வடிவம் எதுவாக இருந்தாலும் அடிமையாக இருப்பது/பாதிக்கப்படுவது என்னவோ பெண்தான். அதிலிருந்து விடுபட்டு தனியாக வாழ நினைக்கு பெண்ணுக்கும் நமது கலாச்சாரத்தில் இடமுண்டா?

திருமணமாகாத பெண்கள் ஒன்றாகவோ அல்லது ஆண்கள் ஒன்றாகவோ தங்கிக்கொள்வதற்கு இடம் கொடுக்கும் வேளச்சேரியும், இந்த சமூகமும்
தனித்து வாழ விரும்பும் பெண்களுக்கு சொல்ல வருவதெல்லாம் இதுதான்....

இது எங்க ஏரியா, உள்ள வராதே!!

(வேளச்சேரியில் மட்டுமல்ல, சென்னையில், ஏன் பல வெளியூர்களில் கூட இதுதான் யதார்த்தமாக இருக்கக்கூடும். வேளச்சேரியில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் இது....)

16 comments:

DHANS said...

its exactly true, when we searched a house for our relative we had the same issue and she had to stay in hostel/PG.

there they charged 5000 for a very very small room with lot of restrictions.

nice post

ராம்ஜி_யாஹூ said...

இது மென்பொருள் ஏற்றுமதி/ அயல் பனி ஒப்படைப்பு காலத்திற்கு பிறகு வந்த பிரச்னை அல்ல.
பல நூறு ஆண்டுகளாக தமிழக கிராமங்களில்/ஆக்ராஹாரங்களில் இருந்த/இருக்கும் பிரச்னை. இன்றும் திருவனந்தபுரம் கிழக்கே கோட்டை சுற்று வட்டார தெருக்களில், நாகர் கோவில் ஒழுகினசேரி ஆக்ராஹாரத்தில் தனி ஆண், தனி பெண்ண, இஸ்லாமிய சமூக்க குடும்பங்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பது இல்லை.

சில கோணங்களில் பார்த்தால் இந்த கொள்கைகள் கூட சரியானதாக இருக்கலாம். லண்டனில் ஒரு தெருவில்/அவேன்யஊவில் கல்வியியல் (பேராசிரியர், ஆராய்ச்சி மாணவர்கள்) சார்ந்த குடும்பங்களே வசிக்கின்றனர். அங்கு வேறு தொழில் புர்வோர்க்கு வீடுகள் வாடகைக்கு கொடுப்பது இல்லை. ஒருமித்த சிந்தனை தடை படும் என்பது அவர்கள் வாதம்.

அமுதா கிருஷ்ணா said...

அப்ப யாருப்பா இந்த லிவிங்டூகெதர் ஆட்களுக்கு சென்னையில் வீடு தராங்க???

ஜெயந்தி said...

சென்னையில இப்படி நடக்குதா? நிறைய சாஃப்ட்வேர் பெண்கள் வந்து தங்குகிறார்களே. அவர்களுக்கும் இதே நிலைதானா? கொடுமைதான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பசங்களுக்கே இவ்ளோ பிரச்சனைகள் இருக்குங்க. பொண்ணுங்கன்ன இன்னும் கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுவாங்க.

thamizhan said...

வெடிகுண்டு தயாரிப்பவர்கள்,போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுப்பவர்கள்,விபச்சாரம் போன்ற காரணங்கள் என்றால் ஓகே.பூஜை பண்ணவேண்டும்,எத்தனை கஸ்ட் என்பதெல்லாம் ஓவர்.

வல்லிசிம்ஹன் said...

இன்னோரு புதுப் பரம்பரை...இதுதான் எனக்குப் புரிகிறது. பாவம் இந்தப் பெண்கள்.
வேளச்சேரி புது உலகமாகவே புரிபடுகிறது. இரு தோழிகளாகக் கூட வீட்டைப் பகிர்ந்து கொள்ளலாமோ. இல்லை அதிலும் தொந்தரவு வருமா.

Prasanna said...

//"வீட்டுலே நீங்க கண்டிப்பா பூஜா பண்ணனும்" என்றெல்லாம் கோரிக்கை வைத்தார்கள்.//

Ultimate :)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்ல ஒரு யதார்த்தமான பதிவு! என்ன செய்வது? காலம் மாறினாலும் நமது பிடிவாதங்கள் மாறுவதில்லை! எனக்கென்னவோ வாடகைக்கு வருபவரின் அந்தரங்கத்தில் அத்து மீறி நுழைவது அநாகரீகமாகத் தான் படுகிறது!

பித்தனின் வாக்கு said...

அட நானும் இங்க தாங்க இருக்கேன். மடிப்பாக்கம், ஏரியா .
அமா உங்க பிரண்டுக்கு நீச்சல் தெரியுமா? ஏன்னா இங்க பல வீடுக ஏரிக்குள்ளாற கட்டியிருக்காங்க.

அம்பிகா said...

முன்பு பேச்சலர்ஸ்க்கு ரூம் இல்லை என ஆண்களுக்கு சட்ட திட்டங்கள் போடுவார்கள். இப்போது பெண்களுக்கு.
ஆனால் அநேகமாக எல்லா இடங்களிலும் இந்த பிரச்சனை இருக்கிறதென நினைக்கிறேன்.
நல்ல அனுபவ பகிர்வு.

ராமுடு said...

I agree your points.. But I own a house in nanganallur. I find hard to find right tenant.. Even there is no condition and rent is very less compare to market rate, people will come and see and they will say "No".. After 2 months I came to know that my neighbourhood inform the people, (who came to see my apartment) that there are many problems. Because they rented out for more. If I rent it for less, they may get affected..

Hard to understand people...

காமராஜ் said...

நெத்தி அடி தோழரே.

pallavar said...

what the house owners in chennai say is 100% correct...Our culture is getting spoiled becoz of this software people...If you want to blame, blame the IT people who created such issues..dont blame the house owners who ask you questions...Our culture should be saved. I welcome the views of the Velachery people..........Hats off to them..........

காலம் said...

தொடர்ந்து புதிய பிரச்சனைகளை சந்திப்பவர்கள் பகிர்வதில்லை நீங்கள் சந்திப்பதும் பகிர்வதும் பதிவதுமாக மிக ஆரோக்கியமான வாழ்வியல்முறையில் பயணிக்கிறீர்கள் ஒரு ரெண்டு கிளிப்பிங்ஸ் செல்லிலேயே எடுத்துப்பாடலாமே முல்லை

தமிழ்நதி said...

தனியாக வாழும் நிலை ஏற்பட்டுவிட்ட பெண்களுக்கு மட்டுமென்றில்லை சந்தனமுல்லை... ஈழத்தைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள், சினிமாக்காரர்கள் இவ்வகையிலானவர்களுக்கும் வீடு கொடுக்கத் தயங்குகிறார்கள். மனோபாவம் மாறவேண்டும் முதலில்.

அப்புறம், பெண்களின் கற்பு யாருடைய கைகளில் இருப்பதாக நினைக்கிறீர்கள்? விடுதிக்காரர்கள் கைகளிலும்தான் முல்லை. தனியாக வரும் பெண்களுக்கு சில விடுதிகள் அதாவது ஹோட்டல்களில் தங்க இடம்கொடுப்பதில்லை. தனியாக வந்து தங்கினால்..... மிகுதியை ஊகித்துக்கொள்ளுங்கள். கெட்டுப்போனவர்கள் அன்றேல் கெடுக்க வந்திருக்கிறவர்கள்.