Monday, November 29, 2010

வேளச்சேரி டைம்ஸ் : ரமாவின் சிப்ஸ் கடை

ரமாவின் கிராமத்தில் பள்ளிக்கூட வசதியில்லாததால் அருகிலுள்ள டவுனில் இருக்கும் பள்ளிக்கூட விடுதியில் சேர்த்திருந்தனர் ரமாவின் பெற்றோர். ஒரு நாள் மாலை ஐந்தரை மணி இருக்கும். அரையாண்டுத் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறார் ரமா. அவரது அம்மாவின் உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறி ஹாஸ்டலிலிருந்து அழைத்துச் செல்கிறார் அவரது மாமா.

அம்மாவுக்கு நெஞ்சுவலி வந்திருப்பதாகவும் , ஆஸ்பத்திரியில் சேர்த்தி ருப்பதாகவும் கூறிய‌ மாமா, ரமாவை அழைத்து வந்திருந்த இடமோ ஒரு உறவினர் வீடு. அங்கு ரமாவின் அம்மாவும் இருந்தார். ஆஸ்பத்திரியில் பெட் சார்ஜ் அதிகமாக இருப்பதால் இங்கு தங்கியிருப்பதாகவும் காலையில் செல்லலாமென்று கூறுகிறார் அம்மா. சிறிது நேரத்தில் ரமாவின் அப்பாவும் வந்துவிட அதன்பிறகு நடந்தவை அனைத்தும் ஒரு நாடகம் போலவே இருந்திருக்கிறது ரமாவுக்கு.

மாமாவின் மகனை கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டுமென்று கூறுகிறார் அப்பா. பத்தாவது படித்து தேர்வு எழுதிவிட்டால், மாமாவின் படிக்காத பையனை கல்யாணம் செய்துக்கொள்ள ரமா மறுத்துவிடுவாரென்று பயப்படுகிறார்கள் ரமாவின் பெற்றோர். 'நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கோ இல்லேன்னா எங்க மானம் போய்டும்' என்று வற்புறுத்துக்கின்றனர். மன்றாடுகின்றனர். 'வாசலில் ஒரு லாரி சொந்தக்கார ஜனம் நிக்குது, அம்மா-அப்பா தல குனிஞ்சுடக் கூடாதேன்னு' தனது அம்மாவின் அண்ணன் மகனை கல்யாணம் செய்துக் கொள்கிறார் ரமா.

சொத்து போய்விடக்கூடாதென்று ரமாவின் மாமா கொடுத்த நெருக்கடியால் இந்த திருமணத்தை நடத்தினார் அவரது அம்மா.புகுந்த வீட்டு கொடுமைகள்/ அடி,உதைகள், கணவனின் உண்மை சுபாவம் எல்லாம் வெளிவ‌ர பல பஞ்சாயத்துகள் நடந்திருக்கிறது. இதற்குள் ரமாவுக்கு மூன்று பிரசவங்கள் - இரண்டு பெண்கள் ஒரு பையன். சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்துக் கொண்ட ரமாவின் கணவன், இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள 'நம்ம புள்ளைங்களை நாமதான பாக்கணும்' என்று உழைக்க வந்திருக்கிறார் சென்னை - வேளச்சேரிக்கு.

'உழைப்பு இருந்தா எங்கே வேணா பொழைச்சுக்கலாம்' எனும் ரமாவின் அன்றாட வேலைகள் - ‍சிப்ஸூக்கு சீவுவது, சமோசாவுக்கு மசாலா செய்து மடிச்சுக் கொடுப்பது, கடையில் வியாபாரத்தைக் கவனிப்பது, பாக்கெட் போடுவது, கையிருப்பு பற்றி கணக்கெடுப்புகள்/, வேலையாள் வராத நாட்களில் சிப்ஸ் போடுவது இன்னபிற. காலையில் ஒன்பதரை மணிக்கு வேலைக்கு வரும் ராமாவிற்கு இரவு பத்து மணி வரை வேலையிருக்கும். நாள்முழுதும் வேலை செய்தாலும், வரும் வருமானத்தில் ஒரு மாதத்தை ஓட்டுவதென்பது சிரமமாகவே இருக்கிறது ரமாவிற்கு ‍ - இந்தநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களைப்போலவே.

ரமாவின் ஊரில் நிறைய பேருக்கு இதுதான் வேலை. சிப்ஸ் போடுவது, கடைகளில் வேலை செய்வது....முன்பெல்லாம் விவசாயம் இருந்தது. அப்போதெல்லாம் ஊர் மிகவும் செழிப்பாக இருக்கும். இப்போது அவரது மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகிவிட்டது. விவசாயத்தில் என்ன வருகிறது? வீடும், ஒரு துண்டு நிலமும் இருக்கிறது. ஆனால் அதை வைத்து ஒன்றும் பிழைக்க முடியாது. ஊரில், கணவருடன் நடத்திய சிப்ஸ் கடையும் அதிகக் கடனால் மூடும்படியாகிவிட்டது.

மணலியில் வசிக்கும் ரமாவின் சித்தப்பா, இங்கு கடை வைக்க உதவி செய்திருக்கிறார். இதற்கு முன்பணமாக நிலத்தை அடகு வைத்து எண்பதாயிரம் கொடுத்திருக்கிறார் ரமா. ஒரு கிமீ தொலைவிலேயே அவரது சித்தப்பாவின் உறவினரின் கடை ஒன்று உள்ளது. அவரது தயவால் இங்கு கடை நடத்துகிறார் ரமா. வருவாயில் கணிசமான பங்கை இருவருக்கும் ரமா கொடுத்து விடவேண்டும். இது தவிர கடை வாடகை, ஈபி பில், வேலைக்கு வைத்திருக்கும் பையனுக்கு சம்பளம், வீட்டு வாடகை எல்லாம் போக கையில் இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் வரை நிற்கும். இதில்தான் ஊரில் ஏற்பட்ட கடன், அப்பாவின் செலவு, மகள்களின் படிப்பு, செலவு.....

ரமாவின் முதலாவது பெண் திருநெல்வேலியில் ஹாஸ்டலில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது பெண்ணை தனது தங்கையிடம் விட்டிருக்கிறார். அவர்களுக்குப் பிள்ளையில்லாததால், தங்கள் பிள்ளையைப் போல பார்த்துக் கொள்வார்கள். பெண்ணை அவர்கள் பார்த்துக்கொள்வதால் ரமா அவ்வப்போது தங்கையை கவனிக்க வேண்டும். அவர்கள் கேட்கும்போது தங்கைக்கு பணம் கொடுத்துதவ வேண்டும். 'தத்துக் கொடுத்த மாதிரிதான், அவங்க பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க' எனும் ரமா, பெண்ணை வேறு பள்ளியில் இந்த வருடம் சேர்த்தபோது தனது பெயருக்குப் பதில், அவரது தங்கை மற்றும் தங்கை கணவரின் பெயரையே பெற்றோரின் பெயராக கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

நான்காம் வகுப்பு படிக்கும் தனது மகன் மற்றும் கடையில் வேலை செய்யும் பைய‌னுடன், ரமா ஆதம்பாக்கத்தில் ஒற்றை அறை வீடொன்றில் வசிக்கின்றார். வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதோடு, அவர்களுக்கு ஆகும் செலவுகள்...பேஸ்ட்,பிரஷ் முதற்கொண்டு எல்லாமும் கடைக்காரர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். அதோடு தங்குமிடமும். தனியாக எங்கு தங்க வைப்பதென்று அவர் தங்கியிருக்கும் வீட்டிலேயே அறையைத் தடுத்து தங்க வைத்திருக்கிறார். 'எப்போ என்னா நடக்கும்னு சொல்ல முடியாது, ரெண்டுகெட்டான் வயசுலே இருந்தா யாரையும் நம்ப முடியாது. அதுவும் இல்லாம நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க.அதனாலே, தெரிஞ்ச பசங்க, சின்ன பிள்ளைங்கன்னாதான்" எனும் ரமா தெரிந்த பையன்களாக இருந்தாலும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்வதில்லை.


'படிப்பும் இல்ல, வீட்டுவேலைக்கிலாம் போனா மூணாயிரம் நாலாயிரம் கிடைக்கும், ஆனா அது வயித்துக்கே சரியா இருக்கும். இது நாள் முழுக்க வேலைன்னாலும், ரெண்டாயிரமாவது கையில நிக்குது. அதுலதான் கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைக்கணும்' எனும் ரமா ஊரிலிருக்கும் அப்பாவுக்கு மீதமிருக்கும் பணத்தை அனுப்புகிறார். கடனை அடைத்த பிறகே ஊருக்குச் செல்ல முடியும். எப்படியும் அதற்கு குறைந்தது மூன்று வருடங்களாவது ஆகும்.
'நம்மளைவிட கீழெ எவ்வளவோ பேரு இருக்காங்க, அவங்களைப் பார்த்துக்கிட்டு நாம வாழ்ந்திரலாம் ' என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறார்.‍ தனக்கு விதித்தது இதுதான் என்று சமாதானம் கொள்கிறார்.

' என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்ற கவலையிலேயே அம்மா போய் சேர்ந்துட்டாங்க. அவங்க இருக்கிற வரைக்கும் கவலையே இல்லாம வளத்தினாங்க' என்று தனது இளமைக் காலத்தை நினைவுகூரும் ரமாவுக்கு - சொந்த ஊரைவிட்டு, உறவுகளை விட்டு நாட்களை கடத்தும் ரமாவுக்கு - எந்த பண்டிகைகளும் இல்லை. விசேஷங்களும் இல்லை.


தனக்கு திருமணமான அதே வயதில் தற்போது இருக்கும் மகளை, கல்லூரி வரை படிக்க வைக்க வேண்டுமென்று நினைக்கிறார்.

கடைப்பையனை ஊருக்கு அனுப்பிவிட்டு, தனியாக சிப்ஸூம், சமோசாவும் போட்டுக்கொண்டிருந்த ரமாவை தீபாவளி அன்று கூட பார்க்க முடிந்தது.

'இங்க வேற தொல்லைங்கல்லாம் இருக்கும்னு சொன்னாங்க, இங்கே வந்து ஏழு மாசம் ஆகுது, தெரிஞ்சவங்க பக்கத்துலே இருக்கிறதால வேற எந்த தொல்லையும் இல்ல. இல்லேன்னா இவ்வளவு தைரியமா இருக்க முடியாது.' என்று கூறும் ரமா "கடவுள் என்னைக்காவது ஒருநாள் கண்ணை திறப்பார். அன்னைக்கு எல்லாத்துக்கும் வழி பிறக்கும்" என்று நம்புகிறார்.
ஞாயிற்றுக் கிழமையானால் காலையில் சர்ச்சுக்கு செல்கிறார். வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் உபவாச ஜெபம் செய்கிறார்.

************************

படிக்காத பெண் 'சிப்ஸ் கடை முதலாளி'யாகி தனியாக கடையை நடத்துகிறாரே, விடாமுயற்சியுடன் வாழ்கிறார்,அவரது தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும், இந்தியா ஒளிர்கிறது என்றெல்லாம் தோன்றுகிறதுதானே!

ரமாவின் திருமணம் முடிந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில், பாதிக்குமேல் குழந்தைத் திருமணங்கள் என்று சமீபத்தில் எடுத்த சர்வே கூறுகிறது.

குழந்தைத் திருமணங்களில், இந்தியா பதினோராவது இடத்தில் இருக்கிறது.

முப்பத்திமூன்று வயதான ரமாவின் வாழ்க்கை - குழந்தைத் திருமணம், படிப்பறிவின்மை, திருமணத்தால் பாழான வாழ்க்கை, பெற்றோர் மற்றும் உறவினர்களின் சமூகக் கடமைகள் மற்றும் சொத்து மாறிப் போய்விடக் கூடாதென்ற எண்ணம், சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள்.... என்றெல்லாம் பாதிக்கப் பட்டிருக்க, விதியென்று வெறுமனே கூறிவிட முடியுமா?
9 comments:

ராம்ஜி_யாஹூ said...

nice

ஹேமா said...

வாசிக்க மனதுக்குக் கஸ்டமான பதிவாக இருந்தாலும்,அந்தப் பெண்ணின் முயற்சிக்கும் மனத்துணிவுக்கும் வாழ்த்துகள்.
என்றாலும் இந்தப் போராட்ட வாழ்வு அவரை எவ்வளவு பாதித்திருக்கும் !

அம்பிகா said...

அருமையான பகிர்வு முல்லை. இத்தனை சோகத்துக்கு பின்னும், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் போராடும் அந்த பெண் பாராட்டுக்குரியவர். மேலும் வளர, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

ஜெயந்தி said...

இந்தியாவில் நிறைய பெண்களுக்கு வாழ வேண்டிய வயதில் வாழ்வே முடிந்துவிடுகிறது. நல்ல பதிவு.

ஜெயந்தி said...

இந்தியாவில் நிறைய பெண்களுக்கு வாழ வேண்டிய வயதில் வாழ்வே முடிந்துவிடுகிறது. நல்ல பதிவு.

அமைதிச்சாரல் said...

அந்தப்பொண்ணோட தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

தீபாதேன் said...

We should do something for bringing this kind of ignorance to an end. There is lot of false believes in most people in our country - like marrying in relation to avoid losing their property, early marriage etc. Are there any social movements that brief people on these? I would like to join, if any.

Guru said...

வருத்தமளிக்கிறது...
கல்வி கடைகோடி இந்தியனுக்கும் சேரும் வரை... இதுபோன்ற சமுதாய நெருடல்களை களைவது கடினமே...