Monday, December 22, 2014

தேவதாஸ் - சரத் சந்திர சட்டோபாத்தியாய‌


கல்கத்தா பயணத்தின்போது இரண்டு நடைபயணங்களை தேர்ந்தெடுத்திருந்தோம். ஒன்று, ஹூக்ளி நதிவழியே, கடவுள்கள் உருவாகும் இடம், ஆங்கிலேய ஆட்சியின் நினைவுத்தடங்கள், கல்கத்தாவின் மாடமாளிகைகள் மற்றும் சிறிதும் பெரிதுமான கல்கத்தாவின் பழங்கால கடைத்தெருக்கள், இஸ்லாமிய பக்கம், கல்கத்தாவின் சீனா. இதில், முதலில் சென்ற நடைபயணத்தில் கல்கத்தா பாபுக்களின்  மாடமாளிகைகளையும் கோபுரங்களையும் நேரில் கண்டோம். ஒரு சில மாளிகைகள் இன்றுவரை  நன்றாக பராமரிக்கப்பட்டிருக்க, பெரும்பாலானவை சிதிலமடைந்தும், களையிழந்தும் காணப்பட்டன‌.

 
பெரிய பெரிய தூண்கள், விக்டோரிய அமைப்பிலான முகப்புகள், தளங்களாக பிரிக்கப்பட்டு உள்ளே இன்னும் உள்ளே என செல்லும் அறைகள், பெரிய முற்றம், யானைகள் பராமரிக்க தனி இடம் என்று இந்த மாளிகைகள் ஒவ்வொன்றும் ஆடம்பரமானவை. கிட்டதட்ட, நமது காரைக்குடி வீடுகள் போல.


ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் காலூன்றிய காலம். கல்கத்தாவில் ஆங்கிலேய  ஆதிக்கம் வலுப்பெற்றபோது, அதன் வழியாக செல்வாக்கு மிக்கவர்களாக சில வங்காளிகள் உருவானார்கள்.வணிக ரீதியாக பிரிட்ஷாருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியவர்கள்.          அந்த வங்காளிகளே  கல்கத்தா பாபுக்கள் என அறியப்பட்டார்கள். கிட்டதட்ட, ஒரு ஐரோப்பிய ஜமீந்தார்களைப்போல வாழ்ந்திருக்கிறார்கள்.


கல்கத்தா பாபு என்றாலே, எனக்கு எப்போதும் நினைவுக்கு வருவது தேவதாஸ்தான். முக்கியமாக ஷாருக்கானுக்காகவும், போனாப்போகுதென்று ஐஸ்வரியாவுக்காகவும் பார்த்த படம். படம் பார்ப்பதற்கு முன்புவரை, 'தேவதாஸ்' என்றால் காதலுக்காக உருகி மருகி பைத்தியக்காரனாக ஆனவன் என்பதே மனதுக்குள் இருந்த பிம்பம். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்ததும் அதுதான்.

மனிதனாகக்கூட, மதிக்க தகுதி இல்லாத, தன்னைப்பற்றிய எந்த நினைவும் இல்லாத குடியிலே அழிந்து போன  கிறுக்கனாகத்தான் தேவதாஸ் கதாபாத்திரம் எனக்குள் இருந்தது.சோபை இழந்துபோன , அந்த பழங்கால மாளிகைகளை கண்டபோது, ஒவ்வொன்றும் எனக்கு தேவதாஸின் வீட்டையே நினைவுபடுத்தின.  தேவதாஸின் குடும்பம் ஒரு அச்சு அசலான கல்கத்தா பாபு குடும்பம்.

சமீபத்தில்தான், சரத் சந்திர சட்டோபாத்தியாய எழுதிய தேவதாஸ் ஒரிஜினல் புத்தகத்தை (தமிழில்) வாசித்தேன்.  இந்த புத்தகம், நான் பார்த்த தேவதாஸ் படத்திலிருந்து மிகவும் வேறுபட்டிருந்தது.  :‍)

பள்ளி செல்லும் சிறுவனாக அறிமுகமாகிறான்  தேவதாஸ்.  அநேகமாக பத்து வயதிருக்கும் அவனுக்கு அப்போது.பள்ளிக்கூடம் அவனை ஈர்க்கவே இல்லை. பிரம்பு வைத்திருக்கும் வாத்தியார், தண்டனைகள், மணங்கு சேர் கணக்குகள் என்று பள்ளியை வெறுக்க அவனுக்கு போதுமான காரணங்கள் இருந்தன.   பக்கத்துவீட்டு சிறுமி பார்வதி. அவன் என்ன சொன்னாலும் கேட்பவளாக, அவன் பின் தொடர்ந்து வருபவளாகவே இருக்கிறாள். ஒருநாள், கூடப்படிக்கும் சிறுவனை, தேவதாஸ் மண்ணில் தள்ளிவிட்டுவிடுகிறான். ஆசிரியருக்கும், தந்தைக்கும் பயந்து  தோப்பில் சென்று பதுங்கிக் கொள்கிறான். அது அவனுக்கான தனியான இடம். ஹூக்கா பிடிக்கவும், மரம் ஏறவுமான இடம். பார்வதி அந்த இடத்தை அறிந்தவளாக இருக்கிறாள்.

பள்ளியில் நடந்ததை, ஆசிரியர் தந்தையிடம் வந்து சொல்கிறார். பார்வதி மூலமாக, தேவதாஸ் தோப்பில் இருப்பதும், ஹூக்கா பிடிப்பதும் தந்தைக்கு தெரியவருகிறது.  வைத்து விளாசிவிடுகிறார்.   பார்வதி மீது கோபம் கொண்ட தேவதாஸ், அவளிடமும் முரட்டுத்தனத்தை காட்டுகிறான். அடி வாங்கிக் கொண்டாலும் பார்வதி, அவனிடம் நட்பாகவே இருக்கிறாள். தேவதாஸ் இல்லாத பள்ளிக்கூடத்துக்கு  செல்லவே அவளுக்கு பிடிக்கவில்லை.

ஒருமுறை, மீன் பிடிக்க செல்லும் தேவதாஸுக்கு உதவியாக செல்கிறாள். கிளையின் ஒரு முனையை அவளை பிடித்துக்கொள்ள சொல்லிவிட்டு அதன் அடுத்த முனையில் தொங்கிக்கொண்டு மீன் பிடிக்கிறான், தேவதாஸ். ஏதோ ஒரு கணத்தில், பார்வதி  விட்டுவிட, கீழே விழுந்து அடிபடுகிறான் தேவதாஸ். அதற்காக, பார்வதியின் நெற்றியில், தூண்டிலால் அடிக்க, முன்நெற்றியில் காயமேற்படுகிறது. பாட்டியும் அம்மாவும் கேட்கும்போது, ஆசிரியர் அடித்ததாக சொல்லிவிட அதிலிருந்து பார்வதி பள்ளிக்கூடத்துக்கு செல்வது தடைபடுகிறது. இப்படி பாதி புத்தகம் முழுவதும், சிறுவயது விளையாட்டும், நட்பும், சண்டையுமாக இருக்கிறது.

கல்கத்தா செல்லும் தேவதாஸ், ஆரம்பத்தில் பாருவுக்கு கடிதங்கள் எழுதுகிறான். அதன்பின், கல்கத்தாவாசியாகவே மாறிவிடுகிறான். தனிமையை உணரும் பார்வதி, மீண்டும் கல்வியை தொடரவிரும்புகிறாள்.  ஒருகட்டத்தில், பார்வதியின் திருமணத்தை நடத்திவிட அவளது குடும்பம் மணமகனை தேடுகிறது.

படத்தில் வருவதைப்போல, தேவதாஸின் தாய்க்கும், பாரூவின் தாய்க்கும் சபதமெல்லாம் நடப்பதில்லை. குத்தல் பேச்சுகளும் இல்லை. பாரூவின் குடும்பத்தை, 'சாதாரண குடும்பம், விற்று வாங்கி என்று' என்றுதான் தேவதாஸீன் குடும்பம் நினைக்கிறது. தேவதாஸுக்கு, பார்வதியை திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணம் வரும்போதும் 'பெற்றோர் என்ன நினைப்பார்கள், விற்று வாங்கி என்று' என்று நினைக்கிறான்.

ஒரு இரவில், தேவதாசை தேடி பார்வதி அவனது அறைக்கு வருகிறாள். யாருக்காவது தெரிந்தால், அதில் அவமானமடைவது அவளாகத்தான் இருக்கும் என்றாலும், தேடி வருகிறாள். தேவதாஸ், தைரியமின்றி அவளை  திருப்பி அனுப்பிவிடுகிறான். ஒருவேளை, இருவரும் எங்காவது சென்றிருந்தால், கதை வேறுமாதிரி இருந்திருக்கும். தேவதாஸ் தைரியமாக  எந்த முடிவும் எடுக்காதது, பார்வதியை பாதிக்கிறது.

எந்த சலனமும் இல்லாமல், தன்னைவிட இருமடங்கு வயதான ஒருவரை கணவனாக ஏற்கிறாள். தன் வயது ஒத்த அவரது வாரிசுகளுக்கு தாயாகிறாள். தனது கடமைகளுக்குள் மூழ்கிவிட, அதன்பிறகே தனிமையை,காதலை உணரும் தேவதாஸ் கல்கத்தாவுக்கு செல்கிறான். இடையில், தந்தை இறந்துவிட, தேவதாஸுக்கு சொத்து பிரிகிறது. தாயும், காசிக்கு செல்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கு அடிமையாகிறான், தேவதாஸ். அவன் சந்திரமுகியை சந்திப்பதும், அவள் காதல்வயப்படுவதும் ஏற்கெனவே தெரிந்ததுதான். ஆனால், படத்தில் வருவதைப் போலெல்லாம் அவர் எழுதியிருக்கவில்லை.

சந்திரமுகியின் இரண்டாம் கட்ட வாழ்வை பார்த்து, அவளுக்கு கொஞ்சம் பணத்தை தானம் செய்கிறான், தேவதாஸ். குடியால், உடல்நலம் பாதிக்கப்பட மருத்துவமனையில் சேர்கிறான். தேறினாலும்,  குடியை விடமுடியாமல் இறுதிகட்டத்தை எட்டுகிறான். முடிவை அறிந்துக்கொண்ட தேவதாஸ், பார்வதி இருக்கும் ஊருக்கு வந்து சேர்கிறான். நாவலைப்பொறுத்தவரை, மனதை உருக்கும் காட்சி அதுவே.

யாருமற்ற அனாதையாக, இறந்து போகிறான்,தேவதாஸ்.  ஒழுங்காக தகனம் கூட செய்யப்படாத, அவனது உடலை,  பறவைகள் கொத்திக்கொண்டிருக்க, 'தன் ஊரைச் சேர்ந்த ஒருவன் இங்கு வந்து இறந்திருக்கிறான், அவன் பெயர் தேவதாஸ் என்று சொல்கிறார்கள் என்ற செய்தியை  கேட்டு' பார்வதி வீட்டிலிருந்து ஓடி வருகிறாள். அவளை பிடிக்கச் சொல்லி கத்துகிறார், அவள‌து கணவன்.அதோடு முடிவடைகிறது நாவல்.  

படத்தையும், நாவலையும்  ஒப்பிட்டு பார்க்க முடியாதுதான். ஆனால், 'தேவதாஸ்' என்று நினைத்தாலே ஏற்படும் பிம்பத்துக்கும் , மூலத்துக்கும் கொஞ்சமாவது நியாயம் இருக்கவேண்டும்தானே!

 நாவலின் ஆரம்பத்திலிருந்தே இருவரும் சிறுவயது நண்பர்களாக, விளையாட்டு பிள்ளைகளாக பழகுகிறார்கள். தேவதாஸும் பார்வதியும் ரொம்பவெல்லாம் இந்த புத்தகத்தில் காதல் வயப்படவில்லை. தேவதாஸின் தந்தை மரணத்துக்கு வருகிறாள் பாரு. அங்கும் இருவரும், பழைய நண்பர்கள் போலவேதான் பேசிக்கொள்கிறார்கள். நமக்குச் சொல்லப்பட்ட தேவதாஸீன் தன்மைகளை  நாவலில் எங்குமே பார்க்கமுடியவில்லை.

வரிக்கு வரி சரிபார்க்க முடியாதுதான் என்றாலும், படம் வேறு ஒரு தேவதாஸீன் கதையைத்தான் சொல்கிறது. உண்மையான தேவதாஸின் கதை மிகவும் எளிமையாக, அருமையாக இருக்கிறது. இறுதியில் அவர் சொல்வதுதான் மிகவும் முக்கியமானது. 'தேவதாஸீன் மரணத்தைப்போல் யாருக்கும் ஏற்படக்கூடாது என்று பிரார்த்தனை செய்யுங்கள். ஒரு மனிதனின் மரணம், அன்பையும் நட்பையும்,பாசத்தையும் உணர்ந்தபடி நிகழவேண்டும். பரிவான ஒரு முகம், அவன் கண்ணுக்குமுன் தெரிய வேண்டும்' என்பதாக. (அதே வாக்கியங்களை கொடுக்க முடியவில்லை...)

 கல்கத்தாவின், அன்னை தெரசா இல்லத்த்தில், அவர் காப்பாற்றிய மக்கள் இறக்குமுன்பு சொன்னதாக எழுதிவைத்திருந்தார்கள்.  'செத்துப்போவது பற்றி பயமில்லை. ஆனால், யாருமற்ற அனாதையாக, எவருக்கும் தேவையற்று, ஒரு கேவலமான மிருகத்தைப்போல் நாங்கள் செத்துப்போவோம் என்று நினைத்தோம். இப்போதோ, எங்கள் மீது அன்பு காட்டும் பரிவான உங்கள் முகத்தை கண்டபடி செத்துப்போவது நிம்மதியாக இருக்கிறது.' என்று!

 வறுமையிலும், கடுங்குளிரிலும்,அழுக்கிலுமிருந்து அன்னை தெரசா அள்ளிக்கொண்ட மனிதர்கள் சொன்னதைதான் சரத் சந்திராவின் நாவலும் சொல்வது வியப்பாக இருந்தது!

4 comments:

கோமதி அரசு said...

கல்கத்தாவின், அன்னை தெரசா இல்லத்த்தில், அவர் காப்பாற்றிய மக்கள் இறக்குமுன்பு சொன்னதாக எழுதிவைத்திருந்தார்கள். 'செத்துப்போவது பற்றி பயமில்லை. ஆனால், யாருமற்ற அனாதையாக, எவருக்கும் தேவையற்று, ஒரு கேவலமான மிருகத்தைப்போல் நாங்கள் செத்துப்போவோம் என்று நினைத்தோம். இப்போதோ, எங்கள் மீது அன்பு காட்டும் பரிவான உங்கள் முகத்தை கண்டபடி செத்துப்போவது நிம்மதியாக இருக்கிறது.' என்று!

வறுமையிலும், கடுங்குளிரிலும்,அழுக்கிலுமிருந்து அன்னை தெரசா அள்ளிக்கொண்ட மனிதர்கள் சொன்னதைதான் சரத் சந்திராவின் நாவலும் சொல்வது வியப்பாக இருந்தது!//

உண்மை, யாருமற்ற அனாதையாக இறப்பது கொடுமை.

நாவல் விமர்சனம் அருமை.

Ezhilarasi Pazhanivel said...

முல்லை,
பழைய தமிழ்(தெலுங்கு!) தேவதாஸ்(சாவித்திரி ) சற்று நாவலை ஒத்திருக்குமென ஞாபகம். உங்கள் எழுத்து மிகவும் மனதுக்கு நெருக்கமாக உள்ளது. குறிப்பாக பயண அனுபவங்கள்.
வாழ்த்துக்கள் -எழிலரசி பழனிவேல்

Gurunatha Sundaram said...

வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
link is here click now!

கவிப்ரியன் கலிங்கநகர் said...

தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_14.html