Sunday, April 03, 2011

பாடல் அறிமுகம் - ”சோலை மலரே”

பாட்டு கேட்பேனேயொழிய பாடுவதற்கு சுத்தமாக வராது. அப்படியே பாடினாலும் ஒரிஜினல் பாடல் எது என்பதை கண்டுபிடிக்க போட்டியே வைக்கலாம்.
அம்மா நன்றாக பாடுவார்கள். திருவருட்பாவெல்லாம் பாடி போட்டியில் வென்றதாக கதையெல்லாம் கூறினாலும் பாடுவதற்கு,ஆடுவதற்கு எனக்கு ஏனோ ஆர்வமில்லை. இந்த அழகில் பப்புவுக்கு தாலாட்டெல்லாம் நோ வே! ஆனால், சில நண்பர்கள் அவர்களது குழந்தைகளுக்கு தாலாட்டெல்லாம் கற்றுக் கொண்டு பாடுவதாக சொன்னதும் என்னால் நம்பமுடியாமல் இருந்தது. எனக்குத் தெரிந்ததெல்லாம், பப்பு அழுதால் “ரே ரே ரே” என்று மட்டும் (ஏதோ ஒரு ராகத்தில்)தேஞ்சு போன ரெக்கார்டு போல சொல்லுவேன். அவ்வளவுதான்.


ஆயாதான் ஏதோ ஒரு சில தமிழ்பாடல்கள் பாடுவார். பிறகு, கே பி சுந்தராம்பாள் மற்றும் எம் எல் வசந்தகுமாரி. சீர்காழி அவர்களின் தமிழ்பாடல் சிடி இருந்தால்
வாங்கிவருமாறு\ சொன்னார். பப்புவுக்கு காலையிலும் மாலையிலும் அழும்போதும் அந்த சிடிதான். அதன்பிறகு பப்புவே பார்த்த முதல் நாளேவும், அன்பே வா முன்பே வாவும் பார்க்கவும் பாடவும் கற்றுக்கொண்டதில் அந்த சிடி காலப்போக்கில் அழிந்துபோனது. இப்போது ஒரு நல்ல பாடல் கிடைத்துள்ளது, தூங்க வைக்கவும் அதே சமயம் தூக்கத்திலிருப்பவர்களை எழுப்புவதற்கும்!


தோழர் போதெம்கின் பப்புவுக்காகக் கொடுத்த பாடல் சுட்டிதான் அது!. பாரதிதாசனின் பாடல், “சோல மலரே”. இதுதான் பப்புவின் தற்போதைய தாலாட்டுப் பாடல். ஆச்சி, பெண் குழந்தைக்கு பாடல் வைப்பா, சோல மலரே” என்று அவளே என்னிடமிருந்து பிடுங்கி அந்த பாடலை வைத்துவிடுகிறாள். கண்டிப்பாக உறங்கும்போது அந்த பாடல் அவசியம் அவளுக்கு. விளக்கை நிறுத்திவிட்டு, படுக்கையில் செட்டிலான பிறகு இந்த பாடலைக் கேட்டுக்கொண்டிருப்போம். கூடவே பாடவும் தலைப்படுவாள்.
அறிமுகப்படுத்திய தோழருக்கும் எம்பி3 ஆக அனுப்பி வைத்த தோழருக்கும் நன்றி! :-)


Solai Malarae by sandanamullai


’சாணிக்கு பொட்டிட்டு’ என்பது அவளுக்கு புரியவில்லை. விளக்கிச் சொன்னதும் அவளுக்கு நம்ப முடியவில்லை. அய்யே சாணி என்றாள். அதே சமயம், சாமிக்காக மிகவும் வழக்காடுவாள். சாமிதான் நமக்கு எல்லாம் தருது, அதுதான் அரிசி, சாம்பார் எல்லாம் தருது என்றெல்லாம் சொன்னபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.(வடலூர் ஆயா புண்ணியம்!)


அதே போல ’வேண்டாத சாதி’ என்பதும். எனக்கும் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. (நான் எதையாவது சொல்லி அவள் வேறு யாரிடமாவதுஏதாவது கேட்டு வைக்கப்போகிறாள்...)வீட்டுக்கருகில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தோம். பில் கொடுக்கும் இடத்தில் “கஸ்டமர்களிடம் பணத்தை வலதுக்கையால் கொடுக்கவும். வாங்கும்போதும் வலதுகையால் வாங்கவும்” என்று சிவப்பு மார்க்கரால் எழுதியிருந்தது. எதற்காக இப்படி தனியாக எழுதி வைக்க வேண்டுமென்று கேட்டபோது, கவுண்டரிலிருந்தவர் சொன்னார், ”அது ஒரு பெரிய பிரச்சினைங்க, ஒருத்தங்க சண்டை போட்டுட்டு பெரிய பிரச்சினையாக்கிட்டு போய்ட்டாங்க, நாங்க அவசரத்தில எந்த கையில கொடுப்போம்னு தெரியாது, பிராமின் அவங்க, ரைட் ஹாண்ட்லே கொடுத்தாத் தான் பணத்தை வாங்குவோம்னு பிரச்சினை, எங்களுக்கு ஒரே திட்டு... அதிலேருந்துதான் இந்த நோட்டீஸ்” என்றார். அவசர கதியில் வேலை செய்துக் கொண்டிருப்பவர்களிடம் சென்று இந்த கையால் கொடுத்தால்தான் வாங்குவேன் என்பதும் அதற்காகச் சண்டை போடுவதும்.... அதிர்ச்சியாக இருந்தது. வேறு நாட்டுக்குச் சென்றாலும் இதே போல்தான் சண்டை போடுவார்களா என்றும் கேள்விகள்...

ஆனால், ஒன்று மட்டும் உறுதியானது, பப்புவுக்கு சாதியைப் பற்றி நான் எதுவும் விளக்கிச் சொல்ல தேவையேயில்லாமல் புரிந்துவிடுமென்று.....

10 comments:

பாச மலர் / Paasa Malar said...

//ஆனால், ஒன்று மட்டும் உறுதியானது, பப்புவுக்கு சாதியைப் பற்றி நான் எதுவும் விளக்கிச் சொல்ல தேவையேயில்லாமல் புரிந்துவிடுமென்று.....//

உண்மை..வளர வளர தானாத் தெரியும்....

Samar said...

முல்லை, மீண்டும் சமரின் பிறந்தநாள் அன்று இந்த பாடலை நினைவு படுத்தியதற்கும், பகிர்ந்தமைக்கும் நன்றிகள் பல.

பப்புவும், சமரை போல இப்பாடலை கேட்க ஆரம்பித்து விட்டாளா.....? :-)
சமரின் இந்த இரு வருடத்தில் இந்த பாடல் தான் அவனோட ஹிட் லிஸ்ட் நம்பர் ஒன்.......
ஆனால் இந்த பாடலின் வரிகளை சமருக்கு நிச்சயம் புரிய வாய்ப்பில்லை இப்பொழுது. வளரும் பொழுது கண்டீப்பாக புரிந்துகொள்வான்.....:-)

Sriakila said...

//பப்புவுக்கு சாதியைப் பற்றி நான் எதுவும் விளக்கிச் சொல்ல தேவையேயில்லாமல் புரிந்துவிடுமென்று..... //

சரியான வார்த்தை.

//பப்பு அழுதால் “ரே ரே ரே” என்று மட்டும் (ஏதோ ஒரு ராகத்தில்)தேஞ்சு போன ரெக்கார்டு போல சொல்லுவேன். அவ்வளவுதான். //

எல்லார்க்கும் இந்த நிலைமைதான்..ஆனா இந்த தேஞ்சு போன ரெக்கார்டில் எப்படி இந்த பிள்ளைகளுக்கு தூக்கம் வருதுன்னு தான் தெரியல..:))

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கிறது இந்தப் பாடல். பகிர்விற்கு நன்றி!

//எனக்குத் தெரிந்ததெல்லாம், பப்பு அழுதால் “ரே ரே ரே” என்று மட்டும் (ஏதோ ஒரு ராகத்தில்)தேஞ்சு போன ரெக்கார்டு போல சொல்லுவேன். அவ்வளவுதான்//

புகைப் படத்தில் பப்புவை பார்க்கிற போதெல்லாம் நினைச்சுப்பேன், 'பப்புக்கு ஏதோ ஒரு சத்து குறைவுன்னு'. இப்பதான் தெரியுது, 'பப்புக்கு தூக்கக் குறைவு' ன்னு. :-)

ச.பிரேம்குமார் said...

இந்த கையால் கொடுத்தால்தான் வாங்குவேன் என்பதும் அதற்காகச் சண்டை போடுவதும்.... அதிர்ச்சியாக இருந்தது. வேறு நாட்டுக்குச் சென்றாலும் இதே போல்தான் சண்டை போடுவார்களா என்றும் கேள்விகள்//

நல்ல கேள்வி. அமெரிக்கா வந்தா சிக்கன் கூட சைவம் தான்னு சாப்டுறவங்க இதுக்கு பதில் சொல்வாங்களா?

ச.பிரேம்குமார் said...

follow up

ராமலக்ஷ்மி said...

அருமையான பாடல். நல்ல பகிர்வு முல்லை.

அன்புடன் அருணா said...

/ஆனால், ஒன்று மட்டும் உறுதியானது, பப்புவுக்கு சாதியைப் பற்றி நான் எதுவும் விளக்கிச் சொல்ல தேவையேயில்லாமல் புரிந்துவிடுமென்று...../
அட! இந்த விஷயமெல்லாம் ரொம்ப விவரமாக்க் கற்றுத் தர வெளியுலகம் தயாராயிருக்கு!

sahana said...

இப்போதிருந்தே பப்புவிற்க்கு உண்மையை கற்றுக்கொடுங்கள் அப்போது தான் தெரியும் ‘சானிக்கு பொட்டிட்டு சாமி என்பார்’ பற்றி.

மாதேவி said...

இனிய சித்திரை புதுவருட வாழ்த்துகள் பப்பு.