Wednesday, October 02, 2013

நாங்கள் 'காணி'களான கதை....


சென்ற வார இறுதியில் 'காணிகள் கதை சொல்லும் விழா'வில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மக்களை, அவர்கள் வாழ்க்கையை, வசிப்பிடத்தை, கதைகள் மூலமாக அறிந்துக்கொள்ளும் அனுபவம் என்பதே சுவாரசியமாக இருந்தது.இரண்டு நாட்களாக காணி மக்களுடன் எங்கள் வாசம்!
காணி மக்கள், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இன்றும் மலைகளில் வசித்து வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் 47 கிராமங்கலில் காணி மக்கள் வசித்து வருகிறார்கள். அதில், நாங்கள் சந்தித்தவர்கள், தச்சமலை மற்றும் வெள்ளாம்பி கிராம காணி மக்கள்.  காணி மக்களை காண வேண்டுமானால், பேச்சிப்பாறை அணையை கடந்து தச்ச‌மலை மீது ஏற வேண்டும்.

படகில் அணையை கடந்தோம். நிகழ்வில் கலந்து கொள்ள கிட்டதட்ட 18 - 20 பேர் இருந்திருப்போம், குழந்தைகளையும் சேர்த்து.  வழிநடத்த வந்த முருகன் காணியின் பின் வரிசையாக செல்ல ஆரம்பித்தோம். நல்ல வெயிலாக இருந்தாலும், அணையின் தண்ணீர், மேகங்கள் மற்றும் மரங்கள் சூழந்த மலை என்பதால் களைப்பாக இல்லை. வழியில், ரப்பர் தோட்டங்களையும் கடந்தோம். ஒரு கொட்டாங்குச்சியை கம்பியினால் மரத்தைச் சுற்றி கட்டி ரப்பர் பாலை சேகரிக்கிறார்கள். சிறிது நேரம் அதனை ஆராய்ச்சி செய்துவிட்டு தொடர்ந்து நடைபயணம்.
அவர்கள் வீடுகள் சமவெளி மக்கள் போல வரிசையாக இருப்பதில்லை. கிட்டதட்ட அரை கிமீ க்கு ஒரு வீடு போல இருக்கிறது. முதல்முதலாக ஒரு வீட்டை அடைந்தோம். மூங்கிலால் கட்டப்பட்ட எளிமையான‌ வீடு. கீழே களிமண். கூடவே நாய். சுற்றி மரங்கள். சிறிது நேரம் அங்கே கழித்துவிட்டு தொடர்ந்து பயணம்.இந்த முறை, மலையில் செங்குத்தாக ஏற வேண்டியிருந்தது. அதோடு, காலை பின்னும் செடி கொடிகள். கொஞ்சம் உயரத்தை அடைந்ததும் மரத்தின் கீழ் இளைப்பாறினோம். அங்கிருந்து நாங்கள் பயணம் செய்த ஆற்றை காண முடிந்தது.சற்று தொலைவில் பெரிய பாறைக்கருகில் ஒரு கட்டிடம் தெரிந்தது. அங்கு எங்களுக்காக பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. குடிக்க  வெந்நீரும். அது ஒரு சர்ச் என்று பிறகு கண்டுகொண்டோம். எங்களோடு, மேலும் சில காணி மக்களும் சேர்ந்துக்கொண்டனர்.

காணி மக்களின் மொழி 'காணி பாசை'. தமிழும், மலையாளமும் கலந்த ஒரு மொழி. அதுவும் மலையாளம் கொடு மலையாளமாம். மலையாளம் தெரிந்தவர்கள் கூட புரிந்துக்கொள்ள சிரமமாம். அவர்கள் பேசும்போது, ராகமாக.... கேட்கவே இனிமையாக இருக்கிறது. நாம் தமிழில் பேசினால் புரிந்துகொள்கிறார்கள்.

காணி மக்களின் உணவு பெரும்பாலும் மரவள்ளி/கப்பக் கிழங்கும், காந்தார மிளகாயும் தேங்காயும் சேர்த்து அரைக்கப்பட்ட சட்டினியும். தேனும், தினை மாவும்,வாழைப்பழங்கள், சில உண்ணக்கூடிய காளான்களும் மற்றும் கிழங்கு வகைகளும்தான்.  அன்றைய எங்கள் உணவும் காணி மக்களின்  அடுப்பில் தயாராகியிருந்தது. ஆம், அன்று எங்கள் உணவும் மரவள்ளிக்கிழங்கும், காந்தார மிளகாய் சட்டினியும்தான். சுட சுட, தேக்கு இலையில் வைக்கப்பட்டு பரிமாறப்பட்டன. 

அதை போன்ற ருசியான சாப்பாட்டை இதுவரை சாப்பிட்டதில்லை என்றே சொல்லவேண்டும். வயிற்றைக் கிள்ளும் பசியில், சுடச்சுட கிழங்கு உள்ளே போன இடம் தெரியவில்லை. 'கிழங்கெல்லாம் பத்துமா, மதிய உணவுக்கு பேச்சிப்பாறைக்கு வரவேண்டும்' என்று நினைத்துக்கொண்டிருந்த எங்களுக்கு இந்த கிழங்கும்/காரமான‌ சட்டினியும் அவ்வளவு நிறைவாக இருந்தது.

பிறகு, அவர்களில் சிலர் தாங்கள் உபயோகிக்கும் பொருட்களை எடுத்து வந்து காட்டினர். மின்சாரம் இருக்கிறது என்றாலும், மிக்சி, கிரைண்டர் பயன்படுத்துவதில்லை. உரல், கற்களால் ஆன அம்மி போன்றவையே இன்னும் தச்சமலை மக்களும் விளாம்பி மக்களும் பயன்படுத்துகிறார்கள்.
முன்பெல்லாம், கறியை நெருப்பில் சமைக்காமல், ஆற்று ஓரத்தில் இருக்கும் கற்களைக் கொண்டு சமைப்பார்களாம். அதாவது, கற்களை சூடுபடுத்திக் கொண்டு, ஒரு கல் அதன் மேல் இறைச்சி, அதன் மேல் கல், அதன் மேல் இறைச்சி என்று அடுக்கி வைத்து அது வெந்தபின் உண்பார்கள் என்று சொன்னார் ஒருவர். அவர்களுக்குத் தேவையான மருத்துவங்களையும் காட்டு மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்துவார்களாம். மூட்டுக்காணி என்பவர்தான் பொறுப்பாளர். அவரே மருத்துவரும்!

அவர்களது கல்வி மற்றும் அறிவுச் செல்வமெல்லாம் வழிவழியாக மூதாதையரிடமிருந்து கடத்தப்பட்டு வருவதுதான்! மூலிகைகளை, அறிவுரைகளை பெரும்பாலும் கதைவழியாக சிறியவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்களாம்!

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே விதவிதமான வாழைப்பழங்களைக் கொண்டு வந்தார்கள். ஒன்று இரண்டு எல்லாம் இல்லை. எல்லாமே சீப்பு சீப்பாக. இவையெல்லாம் வேதிஉரங்கள் இல்லாமல், இயற்கை உரங்கள் கொண்டு விளைவிக்கப்பட்டவை. காணி மக்கள் தங்கள் தேவைக்கு விவசாயம் செய்கிறார்கள். அதில், இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார்கள். காட்டிலிருந்து எதுவும் பறிப்பதோ, வெட்டுவதோ கிடையாதாம்.  காட்டை பழங்குடியினர் வெட்டி பாழாக்குகிறார்கள் என்று அவதூறாக அல்லவா இங்கு செய்தியை பரப்புகிறார்கள்?

அதைத் தொடர்ந்து, சில அங்கேயே தங்கிக்கொள்ள நாங்கள் இன்னும் உச்சிக்கு செல்ல தயாரானோம். பப்புவும் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தாள். அங்கேயே அவளுக்கு கமலா என்று தோழியும் கிடைத்திருந்தாள். இருவருமாக கம்புகளை எடுத்துக்கொண்டு நடக்கலானார்கள்.  மேலும் இரண்டு காணி வீடுகளை கடந்து உயரே சென்றோம்.  காட்டு கடாரங்காய்கள் பறிப்பாரற்று இருந்தன.
காணி மக்கள் யானைகளை மோப்ப சக்தியிலேயே கண்டுபிடித்து விடுவார்களாம். அதோடு, பாம்புகளை பிடிப்பதிலும் வல்லவர்களாம்.   தங்கள் வசிப்பிடத்தில் கண்டால், பிடித்து வேறு பகுதிக்கு சென்று விட்டு விடுவார்களாம். அதனை கொல்லுவதில்லை என்றும் கூறினார்கள். இயற்கையை பேணுவதில் காணி மக்கள் வல்லுநர்கள்தான்!

இவர்களுக்கு டிஎன்ஏ  டெஸ்ட் செய்திருக்கிறார்களாம். கிட்டதட்ட ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்பாக இங்கு வந்திருக்க வேண்டும் என்றும், முதன் முதலில் ஆப்ரிக்காவிலிருந்தோ/ஆஸ்திரேலியாவிலிருந்தோ நடந்தே வந்த கூட்டத்தினராக இருக்கவேண்டும் என்பதாகவும்,  கூட வந்திருந்த ஒரு பேராசிரியர் பகிர்ந்துக்கொண்ட தகவல் இது!

பின்னர், திரும்பி கீழே இறங்கி வந்தோம். பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அவ்வளவு சுலபமாக பழகிவிடுவதில்லை. கூச்ச சுபாவம் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேரே கல்லூரி வரை சென்றிருக்கிறார்கள். இதற்கு முன்பு வரை ஆண்களோ - பெண்களோ 14 வயதானாலே கல்யாணம் செய்துவிடுவார்களாம்.

வழியில் பல விதவிதமான காளான்களைக் கண்டோம். இந்தவகை காளான்கள் கேன்சருக்கான மருத்துவகுணத்தை கொண்டிருப்பதாக உடன் வந்த தாவரவியல் பேராசியர் பகிர்ந்துக்கொண்டார். இயற்கையாக, மலையேறி இறங்குவதாலேயே,காணிகள்  ஒல்லியான உடலை கொண்டிருக்கிறர்கள். வேகமாகவும் நடக்கிறார்கள். நம்மைப்போல் தொப்பையோ தொந்தியோ இல்லை!!

கீழே சர்ச்சருகில் வந்ததும், சுடச்சுட டீ. நம்மைப்போல் டீத்தூள் கொண்டதாக இல்லாமல், மூலிகைச் செடிகளுடன் வெல்லம் கலந்த பானம் அது!க்ரீன் டீ என்று நாம் குடிப்பதெல்லாம் அந்த இயற்கை பானத்துடன் போட்டி போடவே முடியாது! 

சற்று நேரம் உரையாடிவிட்டு, மீண்டும் ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தோம். படகு தயாராக இருந்தது, தச்சமலைக்கு அப்பாலிருந்து வந்திருந்த இன்னும் சில காணி பயணிகளுடன். படகு தண்ணீரின் ஆழ்ந்த அமைதியை  கலைத்து முன்னேறிக்கொண்டிருந்தது. நாங்கள் மலையை, மலை முகடை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தோம்.

காணி மக்களின் கதைகளை, மூலிகைச் செடிகளைப் பற்றி அடுத்த பதிவில்!


குறிப்பு: இந்த "காணி மக்களின் கதை சொல்லும் விழா" டாக்டர்.எரிக் மில்லரின் "கதை சொல்லும் நிலையம்" மூலமாக நடைபெற்றது. நாகர்கோயிலுக்கு செல்லும் வேலை இருந்தபடியால் நிகழ்வில் கலந்துக்கொள்ள திட்டமிட முடிந்தது. பழங்குடியினரின் வாழ்க்கையை, எழுத்து வடிவமற்ற அவர்களது மொழியை, கலாச்சாரத்தை அறிந்துக்கொள்ள குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இந்த நிகழ்வு ஒரு அரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.அதற்காக, காணி மக்களுக்கும், டாக்டர்.எரிக்‍கின் கதை சொல்லும் நிலையத்துக்கும் மிக்க நன்றி!
 


4 comments:

ராமலக்ஷ்மி said...

ஆச்சரியமளிக்கின்றன பல தகவல்கள். அடுத்த பகிர்வுக்குக் காத்திருக்கிறேன்.

Deepa said...

Way to go Mullai. Looking forward to more of your travelogues.

கிரேஸ் said...

அருமையான அனுபவம். அட உங்களைப் போல அல்லவா குழந்தை வளர்க்க வேண்டும் என்று தோன்றிவிட்டது.
எனக்கு இப்படிப் போக வேண்டும் என்று ஆசையைத் தூண்டி விட்டீர்கள்.

ezhil said...

அருமையான அனுபவம் குழந்தை வளர்ப்பில் இன்னுமொரு பரிணாமம்...மகிழ்ச்சி