Thursday, September 12, 2013

ஜலகம்பாறை அருவி பயணம்

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறை. ஆம்பூருக்குச் சென்று நெடுநாட்கள் ஆகிவிட்டதாலும், அங்கு தற்போது மழையும் தூறலுமாக சூழல் அற்புதமாக இருப்பதாக கேள்விபட்டதாலும், முக்கியமாக, பிரியாணி சாப்பிட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாலும் இந்த முறை ஆம்பூருக்குப் பயணம்.

பப்புவுக்கு ஆம்பூர் சென்றாலே அருவிக்குச் செல்லவேண்டும்!! தண்ணீர் இருக்கிறதா என்றெல்லாம் கவலை இல்லை! :-)அவளது ஆசைப்படியே மறுநாள் மதியம் அருவிக்குச் சென்றோம். கிட்டதட்ட ஒருமணி நேர பயணம். திருப்பத்தூரிலிருந்து செல்லும் வழியில் ரம்மியமான பல கிராமங்களை கடந்து  சென்றோம். வழியெங்கும் பசுமை.பல வகை பறவைகளைக் கண்டோம். பெயர்கள் சரியாகத் தெரியவில்லை.  'அருவி வந்தால் எழுப்புங்க'  என்று பப்பு, பெரிம்மா மீது சாய்ந்துவிட்டாள்.

செல்லும் வழியில், சில இடங்களில் வெல்லம் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். .வரும் போது அட்டாக் செய்யலாம் என்று பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஜலகம்பாறை.

ஒரு 50 படிகள் ஏறினால் அருவி. கூட்டமே இல்லை. ஆங்காங்கே ஒன்றிரண்டு பேர் மட்டும் இருந்தனர்.கீழே இருந்த கோவிலில் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.


தொடர்ந்து மேலே சென்றோம். அருவியிலிருந்து ஷவர் போல கொட்டிக் கொண்டிருந்தது. யாருமே இல்லையாதலால், தண்ணீரில் ஜாலியாக விளையாடினோம். சோ என்று கொட்டும் அருவி ஒருவித அனுபவம் என்றால் வீட்டு ஷவர் போல கொட்டுவதும் புது அனுபவமாக இருந்தது. முக்கியமாக, பப்பு குதித்து இஷ்டம் போல ஒரே ஆட்டம்.


சற்றுநேரத்தில், மழையும் ஆரம்பிக்க, குளியலை நிறுத்திவிட்டு திரும்பிச்செல்ல ஆயத்தமானோம். வழியில், வெல்லம் செய்யும் இடத்தில் நிறுத்தினோம். 


காய்ச்சிய கரும்பு சாறை பெரிய வாணலியிலிருந்து கீழே மாற்றிக்கொண்டிருந்தார்கள். நின்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

சூடான கரும்பு சாறோடு,கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ஏதோ சேர்த்து அதை அளைந்துக்கொண்டிருந்தார்கள். கிட்டதட்ட அரைமணிநேரம் அதனை ஆற வைத்தால் வெல்லம் ரெடி.

லேசாக ஒருவர் தண்ணீர் தெளிக்க, ஒருவர் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருந்தார்.அதனை எடுத்து சாப்பிட முடியுமா என்று கேட்டதும் சிரித்த அவர்கள், கரும்பு ஜூஸ் வேண்டுமா என்று கேட்டனர். சுவையான கரும்பு ஜூஸ்.... அவ்வளவு இனிப்பாக இருந்தது. பப்புவுக்கு ஒரு வாய்க்கு மேல் குடிக்க முடியவில்லை.வாணலியில் இருந்த காய்ச்சிய கரும்பு சாறை சுவைத்தோம். சவ்வுபோல இருந்தாலும் அருமையாக இருந்தது.

அங்கிருந்து கிளம்பினாலும், பப்புவுக்கு வாணலியிலிருந்து எடுத்து சுவைத்த கரும்புபாகு வேண்டும் என்றாள்.


வாங்கிய வெல்ல உருண்டையிலிருந்து பெரிம்மா உதிர்த்து தர வாயில் இட்டுக்கொண்டாள். அப்போதுதான் செய்திருப்பார்கள் போல, இளஞ்சூடோடு இருந்தது.நெடுநேரம் ஆகியும் புதுவெல்ல‌த்தின் சுவை நாக்கிலேயே இருந்தது... பயணத்தின் இனிமையைப் போலவே!

குறிப்பு :

ஜலகம்பாறை அருவி: திருப்பத்தூரிலிருந்து 15கிமீ தொலைவில் இருக்கிறது. அக்டோபர் முதல் ஜனவரி வரை அருவியில் தண்ணீர் கொட்டும். ஏலகிரிக்கு மிக அருகில் இருக்கிறது இந்த இடம்.

7 comments:

ராஜி said...

அருவி படம் போடவே இல்லியே!!

சந்தனமுல்லை said...

மழை பெஞ்சுக்கிட்டே இருந்ததாலே, மழையிலயும் அருவியிலேயும் மாத்தி மாத்தி நனைஞ்சுக்கிட்டிருந்தோம். எடுத்த சில படங்களும் சரியா வரலை! :-)

தியானா said...

பப்புவை பல இடங்களுக்கு அழைத்துச் செல்லுவதற்கு வாழ்த்துகள் முல்லை!! விடுமுறையை பயனுள்ள வகைகளில் கழிக்க இதை விட பெரிதாக வேறயென்ன செய்து விட முடியும்? அருவி என்பதே சுகம்.அதிலும் கூட்டம் இல்லாத அருவி.. கேட்கவே வேண்டாம்.. :‍))

கோவை நேரம் said...

வெல்லம் காய்ச்சும் பாத்திரத்தில் இருந்து பிசுபிசுப்பா எடுத்து அதை கையில் ரொம்ப நேரம் பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.மொலுக்கு வெல்லம் அப்படின்னு சொல்வாங்க எங்க கிராமத்துல..
அதில்லாம கரும்பு அரைக்கும் மிசினில் கரும்பு கூடவே லெமன், இஞ்சி வைத்து அரைத்து சொம்பில் பிடித்து குடிப்போம்..செம டேஸ்டாக இருக்கும்.

கோவை நேரம் said...

http://www.kovaineram.com/2012/01/blog-post_25.html

நானும் ஒன்னு எழுதீருக்கேன்...

லதானந்த் said...

பணி நிமித்தம் ஏறக்குறைய தமிழ்நாடு வனப்பகுதிகள் அனைத்தயும் பார்த்திருந்தபோதும் இதுவரை ஏலகிரி செல்ல வாய்ப்பிருக்கவில்லை. உங்களின் கட்டுரை அங்கே செல்லும் ஆவலைத் தூண்டி இருக்கிறது. வனம் பற்றிய வர்ணனை தத்ரூபமாக இருந்தது. வாழ்த்துக்கள்.

சீனு said...

Welcome to our ஊர்... :)