Sunday, June 02, 2013

"ஆமந்தொரக்கி போயிரிக்கியளா?"


'இப்பத்தாம் ஆமந்தொரயிலேந்து வாறம்...கட எரச்ச இன்னம் காதுல வுழுந்துக்கிட்டிரிக்கி' ;-)

ஆமந்துறை எங்கே இருக்கிறது என்று தமிழ்நாடு வரைபடத்தில் தேட வேண்டாம். அது ஜோ டி குருஸின் 'ஆழி சூழ் உலகில்' இருக்கிறது. ஒரு தென் தமிழக கடற்கரையோர மீனவ கிராமத்தை யாரும் அறியாத, பொதுவாக பலருக்கும் தெரியாத எல்லா வண்ணங்களோடும் இந்த நாவல் காட்டுகிறது.. ஆமந்துறையின் எண்ணற்ற மனித முகங்களை, அவர்களது வாழ்க்கைப் பாடுகளை, கடலை, அதன் அலைவாய்கரையை, கடலின் மணலை முப்பரிமாணத்தில் அறிமுகப்படுத்துகிறது'ஆழி சூழ் உலகு'.

ஆரம்பத்தில் நாவலில், வரும் வார்த்தைகள் தமிழாக இருந்தாலும் ஒன்றுமே புரியாதது போல இருந்தது. 'அணியம், சோழ வெலங்க, ஆழி, பருமல், மாசா, கத்து,ஓங்கல்கள்,பணிய, சம்பை,மேற்றிராசனம்' அவர்கள் பேசும் மொழியே அந்நியமாக  இருந்தது. ஒரு சில பக்கங்களுக்குப் பிறகு ரொம்ப பரிச்சயப் பட்டதாக மாறிவிட்டது. நாவலின் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்ட அருஞ்சொற் பொருள் விளக்கம்  இல்லையென்றால் கொஞ்சம் கடினம்தான்! கிட்டதட்ட நான்கு தலைமுறைகள் வழியாக காலப்போக்குகள், நிகழ்வுகள் சொல்லப் பட்டிருக்கின்றன. ஆனால்,  ஆங்காங்கே பொதியப்பட்டிருக்கும் நுணுக்கமான‌ தகவல்கள் பரதவர்களின் நூற்றாண்டுகால வரலாற்றையே பதிவு செய்ததாக இருக்கிறது.

கன்னியாகுமரியின் பெயர் காரணம் நாம் எல்லாருமே அறிந்ததுதான். சமீபத்தில், எங்கோ வாசித்திருந்தேன், கன்னியாகுமரியைத் தாண்டி இருந்த நிலப்பரப்பு கடலால் அழிந்தபோது குமரியின் முனையில் அலைவாய் க்கரையில்  தன் காதலனுக்காக‌ காத்திருந்த பெண்ணே  பிற்காலத்தில் கன்னியாக்குமரி அம்மனாக மாறினாள் என்று. அதை வாசித்ததிலிருந்து, ஒரு இளம்பெண் கடலை நோக்கி காத்திருப்பது போன்ற சித்திரமே என் மனதில் பதிந்திருந்தது.  கடலோடு கலந்த அந்த குமரிப் பெண்தான் முதல் பரத்தி என்கிறது இந்த நாவல். பரதவர், அவளைத்தான் தம் குலமகளாக் எண்ணுகின்றனர். கடலை அந்த அம்மனாகவே காண்கின்றனர். கடலின் பெரிய மீன்களும் அந்த சக்தியின் சத்தியத்துக்கு கட்டுபடுவதாகவே நம்புகின்றனர். எளிய நாட்டுப்படகுகளிலும், கட்டுமரத்திலும் சென்றாலும்  எந்த பெரிய மீன்களும், மீனவர்களை அந்த சத்தியத்துக்கு கட்டுபட்டு, எதுவும் செய்வதில்லை.

அதிலும், ஓங்கல்கள் பரதவர்களின்/மனிதர்களின் நண்பன் என்றே நம்புகிறார்கள். கடலில் தவறி விழுந்துவிட்டாலும் சுறா மீன்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவது இந்த ஓங்கல்கள்தான். அதனாலேயே, இந்த ஓங்கல்களை பிடிப்பதோ,உண்பதோ இல்லை.ஓங்கல்கள் என்றால் டால்பின்கள். பரதவர்களின் மகத்தான பெண் தெய்வ நம்பிக்கையை, கண்டுகொண்ட பாதிரிகள் கடலை அன்னை மேரியாக உருவகப்படுத்தி கிறிஸ்தவ மத நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள்.


இந்த நாவல் நிகழும் களம் ஆமந்துறை. இந்த ஊர் கற்பனையே என்று நினைக்கிறேன். நாவல்படி, இந்த ஊர் கூத்தந்துறைக்கும் கூடங்குளத்துக்கும், மணப்பாட்டுக்கும் இடையில் கடல் உள் வாங்கியபடி அமைந்திருக்கிறது. இங்கு ஆமைகள் கோடையில் முட்டையிட வரும். மேலும், கடலிலிருந்து திரும்பும் பரதவர்களுக்காக கடற்கரையில் ஆமையின் ஓடுகளில் விளக்கேற்றுவதாலும் இந்த பெயர் வந்திருக்கலாம். இந்த ஆமந்துறையில், தொம்மந்திரையின் சிறாப்பாறு பயணத்திலிருந்து ஆரம்பிக்கும் கதை, சிலுவையின் திசை மாறிய பயணம் வரை திகில்களோடு, சுவாரசியம் குன்றாமல் பயணிக்கிறது!


இந்த நாவலை வாசித்தபோது, பப்புவோடு நானும் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தேன். 4.3 அடி ஆழ தண்ணீரே எனக்கு மூச்சு மூட்டவும், நீரின் அழுத்தத்தை உணரவும் போதுமானதாக இருந்தது.  கழுத்தளவு தண்ணீரே உடலை அழுத்துவது போலவும், தலையெல்லாம் கிறுகிறுத்தது போலவும் இருந்தது. ஓரளவு நீந்த கற்றுக்கொண்டு ஒரு முழு லாப் செய்யும்போதோ தலையெல்லாம் வலித்து என்னென்னவோ செய்து வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. இத்தனைக்கும்  நினைத்தால் எட்டிபிடித்து நடந்துவிடும் தூரத்தில்தான்  தரை. ஒரு செயற்கையான தண்ணீர்தொட்டிக்கே இப்படியென்றால், பிரமாண்டமான கடலின் மீது, சுழித்துக்கொண்டு ஓடும் வாநீவாட்டுக்கும் சோவாநீவாட்டுக்கும் இடையில் , வாழ்க்கைக்கு போராடும் இந்த சின்னஞ்சிறு மனிதர்களை நினைத்தால் வியப்பும்,நெகிழ்ச்சியுமாக இருக்கிறது.  ஒவ்வொருநாளும் கடல் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. மணலும் மாறுகிறது. கிடைக்கும் மீன்கள் வித்தியாசப்படுகின்றன. அதோடு, அவர்களின் வாழ்க்கையும்!

பக்கத்து மீன்பரவ கிராமத்தினர் விரோதம், கிராமத்தில் நடக்கும் உட்பூசல்கள், கமுட்டிகளின் நியாய அநியாயங்கள், போதாததற்கு சுரண்டி பிழைக்கும் பாதிரிமார்கள், வெட்டு குத்து என்று முரட்டுத்தனங்களோடு ஆதரிக்க யாருமற்று எவர் வந்தாலும் அன்பாக அணைத்துக்கொள்ளும் போக்கு என்று ரத்தமும் சதையுமாக ஆமந்துறை மக்களின் வாழ்க்கை விரிகிறது. வாசிக்க வாசிக்க எவ்வளவு பெரிய உழைப்பை கோரியிருக்கிறது, இந்த நாவல் என்ற‌
வியப்பே மேலிடுகிறது. பிரமாண்டமான கடலைப் போலவே  பிரமாண்டமான நாவல்!பரதவர்கள், மீன்பிடித்து வரும்போது, கிராமத்தவர்கள் ஒமலிலிருந்து தங்கள் தேவைக்கு எடுத்துக்கொண்ட பிறகே விற்பனைக்கு வருகிறது. இதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. இதற்கு, கப்பலில் வேலை செய்து வசதியாக வாழ்பவர்களும் விதிவிலக்கல்ல. இந்த வழக்கத்தை நினைத்து ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.உயிரை பணயம் வைத்து பிடித்து வந்த  பொருளை சும்மா கொடுக்கும் வழக்கம் சமவெளி சமூகத்தினரிடையே இருக்கிறதா வென்று தெரியவில்லை. அதோடு, முடி எடுப்பவர்களுக்கும் அப்படி உரிமை உண்டு. அதோடு, அவர்களுக்கு பட்டும் நகையும் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
 
பரதவர்களுக்கும் நாடார்களுக்கும் இருக்கும் வியாபார ரீதியான உறவு, கொழும்பிலிருக்கும் உறவினர்களை சந்திக்க வசதியாக வரும் கச்சத்தீவு  திருவிழா,அரசாங்கத்தின் சலுகைகள் எதையும் பெற இயலாமல் செய்கின்ற
அதிகாரிகள், காகு சாமியாரின் தொலைநோக்குப் பார்வையால் சூடுபிடிக்கும் றால் ஏற்றுமதி, திராவிட கட்சிகளின் மாநாடுகள், அவற்றின் போராட்டங்கள், அரசியல்வாதிகளின் சுயநலம், தனுஷ்கோடியை சீரழித்த புயல்,காலரா ஊசி,கொழும்பில் சிங்களவர்களுடனான கலவரம் என்று அந்தந்த‌ காலஓட்டத்தின் பின்னணியில் சமூகத்தின் அத்தனை நிகழ்வுகளையும் அழகாக விவரிக்கிறார் ஜோ டி குருஸ்.

அமலோற்பவத்தில் ஆரம்பித்து, மேரி, சூசானா,எஸ்கலின், வசந்தா, சுந்தரி டீச்சர், தோக்களத்தா,அன்னம்மா,சாரா, செலின்,லூர்து,எலிசபெத், மணிமேகலை வரை ஆமந்துறையின் பெண்கள் வலம் வருகிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொருவரும் வஞ்சிக்கப்படுகிறார்கள். மற்றவர்களை வஞ்சிக்கிறார்கள். ஏமாறுகிறார்கள். அடிபட்டும், உதைபட்டும் வலியோடு ஜீவனம் நடத்துகிறார்கள். சில சமயங்களில், ஒருவருக்காக ஒருவர் பரிந்து பேசுகிறார்கள்.தாய் தந்தை இழந்த குழந்தைகளை அரவணைக்கிறார்கள். தியாகம் புரிகிறார்கள். கடலுக்குச் சென்றவர்களுக்காக பதைபதைப்புடன் காத்திருக்கிறார்கள். திரும்பாவிடில் விதவைக்கோலம் பூண்கிறார்கள். ஒரு சுனாமிக்குப் பிறகே கடலை,இயற்கையைப் பற்றி நமக்கு பயம் வருகிறது. கடலையே நம்பிய வாழ்க்கை எனில்? 

மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன், கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி, குழந்தை மீதான‌ பாலியல் துஷ்பிரயோகங்கள், ஆசிரியர்களின் கடும்தண்டனை முறைகள், அதனாலேயே கல்வியை வெறுத்து கடலுக்கு ஓடும் பரதவ இளம்தலைமுறை,கடலில் ஏற்படும் சண்டைகள், கலவரங்கள், இயற்கைச் சீற்றங்களின்போது கிராமத்தை, வீட்டை,ஏத்தனங்களை விட்டு வெளியேறும் அவலம்,சிலுவை கல்யாணம்.....விதம் விதமான மனித உணர்வுகள்!! 


நாவல் முழுவதும் நாம் உணரும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் 'கட'. எதுவும் பேசவில்லையே தவிர கடலின் பேரிரைச்சல் நம் காதுகளில் எப்பொழுதும் விழுந்தவண்ணம் இருக்கிறது. ஜஸ்டினை ஜெயிக்க வைக்கிறது. ஊமையனை மாசாவில் தடுமாறி விழ வைக்கிறது. அவனது உடலை கரையில் ஒதுக்கும் அடுத்தநாளே, ஒன்றுமறியாதது போல சாதுவாக கிடைக்கிறது. சிறுவர்கள் கொல்லம் பழங்களைப் போட்டு, சில்லி எடுத்து விளையாடும் கடலில்தான், வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையில் இந்த சிறுமனிதர்கள் போராடுகிறார்கள். கதாமாந்தார்கள் ஒவ்வொருவருடனும் கடல் பின்னி பிணைந்து இருக்கிறது. ஒரு மௌன‌சாட்சியாக எல்லா நிகழ்வுகளையும் பார்த்த வண்ணம் அவர்கள் வீட்டு வாசலில் கிடக்கிறது.

நாவலின் சுவாரசியமான இன்னொரு விஷயம் உணவு பற்றிய செய்திகள்!  குதிப்பு மீன் குழம்பு, வாளை,சாளை,மீன் முட்டை பணியாரம் என்று ஆமந்துறையின் உணவு நம்மை சப்புகொட்ட வைக்கிறது. சுறா, மஞ்சப்பொடி கருவாடு எல்லாம் வாசிக்கும்போதே சாப்பிட ஆசையாக இருக்கிறது. கடல் ஆமையின்  ரத்தத்தையும், ஆமை இறைச்சியையும் உணவாக பயன்படுவதை அறிந்தது புதிது!
கோத்ரா,சூசை, சிலுவை இந்த மூவரும் கடல் கொந்தளிப்பில் மரம் உடைந்து நடுக்கடலில் மாட்டிக்கொள்கிறார்கள்.நாட்கணக்கில் தத்தளிக்கின்றனர்.    இவர்களின் ஜீவ மரணப்போராட்டத்தில் வழியே நாவல் விரிகிறது. 'நண்பருக்காக தியாகம் செய்வதே சிறந்தது' என்று காகு சாமியார் சொன்னதை நினைவில் கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் நண்பருக்காக உயிரை தியாகம் செய்கின்றனர். நாவலும் தியாகத்தையே விதந்து போற்றுகிறது. இறுதியில் சிலுவை மட்டும் கொச்சின் துறைமுகத்தருகே உயிர் பிழைக்கிறான். இந்த மூவரை கிராமத்தவர்களும், மற்ற மீனவ கிராமத்தவர்களும் தேடும் இடம் மிகவும் அருமையானது. மீனவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பது நமக்கு ஒருவரிச் செய்தி மட்டுமே. மொத்த கடலோர கிராமங்களுக்குமே அந்த பதைபதைப்பை பகிர்ந்துக்கொள்கிறார்கள்.யாருடைய உதவிக்கும் காத்திராமல் படகுகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொருநாளும் கடலில் தேடி அலைகின்றனர்.சில சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் எதிரியாக பார்த்தாலும் ஆபத்தில் பரதவர்களுக்கு பரதவர்களேதான் உதவி செய்துகொள்ள வேண்டும்.

நாவலைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். திருச்செந்தூரிலிருந்து, திருவைகுண்டம்,வீரபாண்டியன் பட்டினம்,தூத்துக்குடி,மணப்பாடு, திசையவிளை,சோதிக்காவிளை,நாரோயில்(நாகர்கோவில்!)குலசேகரன்பட்டினம்,இடையன்குடி,கச்சத்தீவு,தீவுக்கடல், ஆழியிலிருந்து தீவுக்கடல் வரை அவர்கள் தாண்டும் கடற்பரப்புகள், கொழும்பு வரை  நாமும் நாவலுடன் பயணிக்கிறோம்.  நாவலில் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு பக்கத்தில் மரணத்தைத் தழுவுகின்றனர்.

சாவுக்குப் போய்விட்டு வந்தபின் கடலில் கால்நனைத்து வீடு திரும்புவது, பிடிமண் போடுவது,கடலில் ஓங்கல்கள் அழும் சத்தம் கேட்டு சகுனம் பார்ப்பது.....இப்படி, பரதவர்களின் தொன்மையான நம்பிக்கைகளை நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 'ஆழி சூழ் உலகை' வாசிக்கும் முன்பாக 'சிப்பியின் வயிற்றில் முத்து' நாவலை வாசித்து திகைத்து போயிருந்தேன்.

கடலை, அதன் மனிதர்களுடன் சமூக நோக்கில் விவரிக்கும் நாவல் அது. ஒரு வங்காள எழுத்தாளர் நமது தமிழக கடற்கரையோர கிராமங்களைப் பற்றி இப்படி நுணுக்கமாக பதிவு செய்திருப்பது வியப்பாக இருந்தது. அதிலும், மீன்பரவர்களைப் பற்றி நுணுக்கமாக வரலாற்று தகவல்களோடு செறிவாக எழுதப்பட்டிருந்தது. நாவலை வாசித்து முடித்ததும் தூத்துக்குடியின் தெருக்களிலும், முயல்தீவுக்கும், கடற்கரையோரங்களிலும், மணப்பாடு முதல் மன்னார் வளைகுடா வரையிலும் அலைந்து திரிய ஆசையாக இருந்தது.

'ஆழி சூழ் உலகை' வாசித்தபின்போ ஆழிக்கும், சிறாப்பாறுக்கும் கச்சத்தீவுக்கும், ஆமந்துறைக்கும் சென்று வர ஆசையாக இருக்கிறது. ஆழி சூழ் உலகின்' விலையை பார்த்து சிலசமயம் வாங்குவதா வேண்டாமாவென்று யோசனையிலேயே தவிர்த்திருக்கிறேன். இப்போதோ, 'சிப்பியின் வயிற்றில் முத்து' நாவலையும் 'ஆழி சூழ் நாவலையும் வாசித்ததற்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆசிரியரின் அடுத்த நாவல் 'கொற்கை' என்று அறிகிறேன். அடுத்து, கொற்கையை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.


விபரங்கள்:

நாவல்: ஆழி சூழ் உலகு,  தமிழினி வெளியீடு
ஆசிரியர்: ஜோ டி குருஸ்
பக்கங்கள்: 558
விலை: ரூ 430

நாவல்: சிப்பியின் வயிற்றில் முத்து, நேஷனல் புக் டிரஸ்ட்
ஆசிரியர்: போதிசத்வ மைத்ராய

No comments: